தந்திக்கு விடை கொடுக்கலாமா?!

தார்ச்சாலை, மின்சாரம் நுழையாத இடங்களில் கூட புகுந்துவிடும்…

‘கிராண்ட் மதர் எக்ஸ்பயர்டு’,  ‘ஃபாதர் சீர்யஸ்’ போன்ற துக்கச் செய்திகளைத் தாங்கி வந்து கலங்க வைக்கும்…Image

‘எங்கள் நிறுவனத்தில் அக்கவுண்ட் அசிஸ்டெண்டாக நீங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். வரும் ஜூலை 1ம் தேதி பணியில் சேரவும்’ என்கிற மகிழ்ச்சித் தகவலைச் சொல்லி தலைகால் புரியாமல் ஆட வைக்கும்…

திருமண வீட்டில் மாப்பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ அரசு முத்திரை தாங்கிய படிவத்தில் குட்டி எழுத்துக்களில் வாழ்த்துச் செய்தியாக வந்து பரவசப்பட வைக்கும்…

சில நேரங்களில், விவரமானவர்களிடம் இருந்து பிறந்தநாள், திருமண நாள் வாழ்த்து மடலாக வந்து நெகிழ வைக்கும்… அதன் பெயர் தந்தி.

160 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த தந்தி சேவை வரும் ஜூலை 15ம் தேதியிலிருந்து நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது பி.எஸ்.என்.எல். நிர்வாகம். மின்சார சிக்னல்களின் மூலமாக செய்திகளை அனுப்ப 1792ம் ஆண்டிலேயே ஆய்வுகள் தொடங்கின. ஆனால், அதற்கான சங்கேத மொழியை 1837ல் கண்டு பிடித்தவர் சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்கர். அவர் பெயராலேயே அந்த மொழி ‘மோர்ஸ் கோடு’ என்று அழைக்கப்பட்டது. எப்படி இருந்தாலும் இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் தந்திக்கு முக்கியமான பங்கு உண்டு.

‘தந்தி சேவை நிறுத்தப்படும்’ என்கிற தகவலை எப்படி எதிர்கொள்கிறார்கள், தந்தி என்றதும் நினைவுக்கு வரும்  நெகிழ்ச்சியான நிகழ்வு என்ன? சில பிரபலங்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் இங்கே…

கே.வி.ஷைலஜா – மொழிபெயர்ப்பாளர்.   

 

இளமைக் காலங்கள்ல தந்தி வருதுன்னாலே பயம் தருகிற, பதட்டத்தை ஏற்படுத்துற ஒரு விஷயமா இருந்தது. நான் கிராமத்துல இருந்ததால பெரும்பாலும் மரணச் செய்திகளைத்தான் தந்தி தாங்கி வரும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஸ்கூல், காலேஜுல படிக்கும் போதுதான் அவசரச் செய்திகளைத் தர்றதுல அதனோட முக்கியத்துவம் புரிஞ்சுது. இனிமே தந்தி இல்லைன்னு நினைக்கறதுக்கே ரொம்ப சங்கடமா இருக்கு. என்னதான் புதுமைகள் வந்துட்டாலும் எல்லாமே அதிநவீனமா மாறி விட்டாலும் நமக்கு ரொம்பப் பரிச்சயமான பழமையான ஒண்ணு இனிமே இல்லைங்கறது ரொம்பவும் வலி தருகிறது, வேதனை அளிக்கிறது. யூனிபார்ம் போட்டுகிட்டு, சைக்கிள்ல கிராமம் கிராமமா போற தந்திச் சேவகர் இனிமே வரமாட்டாருன்னு நினைக்கவே கஷ்டமா இருக்கு.

Image

திருவண்ணாமலைல பி.காம் படிச்சுகிட்டு இருந்தப்போ எனக்கு ‘நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப்’ கிடைச்சுது. மூணு வருஷ கோர்ஸுக்கு கல்லூரிக் கட்டணம் மொத்தமே 1,500 ரூபாதான். ஆனா, எனக்கு ஸ்காலர்ஷிப் வருஷத்துக்கு 720 ரூபா கிடைச்சுது. அதுக்கான செக் வர்றதுக்கு முன்னால ‘உங்களுக்கு பணம் அனுப்பியிருக்கோம்’ அப்படிங்கற தகவல் தந்தியில வரும். அந்த செக்கை கலெக்‌ஷனுக்குப் போடறதுக்காகவே பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சேன்.

இன்னிக்கும் எனக்குத் தந்தின்னாலே நினைவுக்கு வர்றது என்னோட பெரியம்மா மக பீனாதான். பாபுயோகேஸ்வரன்கிற பிரபல புகைப்படக்காரர் அடிக்கடி என்கிட்ட ‘நான் எடுத்த நல்ல புகைப்படங்கள்லயே சிறந்தது பீனாவை எடுத்த புகைப்படம்தான்’னு சொல்லுவார். அவ்வளவு அழகா இருப்பா. அவ இறந்துட்டாங்கற செய்தி தந்தியில வந்தப்போ என் உடம்பு நடுங்கிடுச்சு. வழக்கமான கல்யாணம், மண வாழ்க்கை சிக்கல், அதுல பிரச்னைன்னு அவ வாழ்க்கை முடிஞ்சு போயிடுச்சு. இப்படி தந்தி என் வாழ்க்கைல மிக மோசமான அதிர்வையும் ஏற்படுத்தியிருக்கு.

 திலகவதி ஐ.பி.எஸ். – முன்னாள் காவல்துறை இயக்குநர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

40 வயதுக்கு மேற்பட்ட யாரைக் கேட்டாலும் அவர்களுடைய நினைவுகளில் இருந்து ‘அச்சம் தருகிற ஒன்று’ என்றுதான் தந்தியை நினைவுகூர்வார்கள். ஏனென்றால், சாவுச் செய்திகளை அதிகம் தாங்கிச் சென்றது தந்திதான். ஆனால், அது போல விரைவாகத் தகவல்களைக் கொண்டு சேர்க்கிற வேறொன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் ஐ.பி.எஸ்.ஸாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அதற்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கூட எனக்குத் தந்தியில்தான் வந்தது. தந்தி சேவை நிறுத்தப்பட்டது என்கிற செய்தி எனக்கு வருத்தமளிக்கிறது.

Image

தபால்துறை ஆலமரம் போல கிளைகள் பரப்பி, விழுதுகள் ஊன்றிய பரந்து விரிந்த துறை. அதன் முக்கிய அங்கமான தந்தி சேவை நிறுத்தப்படுவது எதையோ இழந்தது போன்ற வேதனையைத் தருகிறது. வேலை நியமனச் செய்திகள், அவசர அலுவலக விவகாரங்கள் இவற்றையெல்லாம் பரிமாறிக் கொள்ள அவசியத் தேவையாக இருந்தது தந்தி. மகாத்மா வாழ்ந்த காலத்தில் தொலை தூரத் தொடர்புக்கு தந்திதான் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது. பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தது தந்திதான். அந்த சேவை நிறுத்தப்பட்டது ஒரு நல்ல நண்பனை இழந்தது போன்ற வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

 பாரததேவி – எழுத்தாளர்.

எங்க ஊர் சொக்கலிங்கபுரத்தையும் சேத்து, பெருமாள் தேவன்பட்டி, மீனாட்சிபுரம்னு மூணு ஊர்ல இருக்குறவங்கள்ல அதிகமான பேரு மிலிட்டரிலதான் வேலை பாக்குறாங்க. இந்த மூணு ஊர்லயும் யாருக்காவது பொண்ணு குடுக்கறதா இருந்தாக் கூட மிலிட்டரில வேலை பாக்குறவுங்களுக்குத்தான் குடுப்பாங்க. வாத்தியார் வேலை, கவர்மெண்ட் வேலைன்னு வேற எந்த வேலை பார்க்குறவரா இருந்தாலும் மாப்பிள்ளைக்கு இங்கே பொண்ணு கிடைக்காது. மிலிட்டரியில வேலை பார்த்தா வயசான காலத்துல பென்ஷன் வரும், புள்ளைங்களுக்கு வேலை கிடைக்கும்கற எண்ணம். பெரும்பலானவங்க எங்கேயோ தூர தேசத்துல இருக்குறதால என்ன அவசரம்னாலும் இந்த மூணு ஊருக்காரவுங்களுக்கும் தந்திதான் அவசியமா இருக்கு. இன்னும்கூட இங்கல்லாம் செல்போனை எடுத்துப் பேசத் தெரியாதவங்க நிறையபேரு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் அவசரத்துக்கு தந்திதான் உதவுது. தந்தி கொண்டு வர்றவுருதான் சம்பந்தப்பட்டவங்களுக்கு விஷயத்தைப் படிச்சுச் சொல்லுவாரு. அதே மாதிரி தந்தி அனுப்பணும்னாலும் தந்தி ஆபீஸுக்குப் போய் விவரத்தைச் சொன்னா, யாராவது எழுதிக் குடுப்பாங்க. அனுப்பிடுவாங்க.

Image

எங்க ஊர்ல பரசுராமன்னு ஒருத்தரு மிலிட்டரியில இருந்தாரு. இந்தியப் படை (Indian Peace Keeping Force) இலங்கைக்குப் போனப்போ இவரும் போயிருந்தாரு. அங்கே எங்கேயோ மறைவா வச்சிருந்த கண்ணிவெடியில காலை வச்சுட்டாரு. அவ்வளவுதான் வெடி வெடிச்சு, அவரோட இடது கையும், வலது காலும் துண்டாயிடுச்சு. இந்த செய்தி ஊருக்கு தந்தியா வந்தப்போ ஊர்ல இருந்த எல்லாரும் மாரியம்மன் கோயில்ல போய் உக்கார்ந்து அழுதோம். அவரு இங்கே வந்த பிறகு அரசாங்கம் அவருக்கு பல சலுகைகளையும் வெகுமதிகளையும் தந்து உதவிச்சு. இப்பவும் அவரு கட்டையை வச்சுகிட்டு நடக்கறதைப் பாத்தா கஷ்டமா இருக்கும். அந்த தந்திதான் நினைவுக்கு வரும்.

இன்னொருத்தர்… முத்துன்னு பேரு. அவரும் ராணுவத்துலதான் வேலை பார்த்தாரு. ஊருக்குப் போறதுக்கு முன்னால சடங்காகாத பொண்ணு ஒண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவரு போய் கொஞ்ச நாள்ல இங்கே பொண்ணு பெரிய மனுஷியாயிடுச்சு. அவருக்கு இந்த மாதிரி விஷயம்னு லெட்டர் போட்டாங்க. அவரும் பதில் கடுதாசி போட்டாரு, ‘இன்னும் ஒரு வாரத்துல வந்துடுவேன். பட்டுப்புடவைல்லாம் வாங்கி வச்சிருக்கேன்’னு அவரும் பதில் போட்டாரு. அவரு ஒரு துப்பாக்கி சுடும் வீரர் (Gunner). அப்போ பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் போர் நடந்துகிட்டு இருந்தது. பங்களாதேஷுக்கு உதவப் போன இந்தியப் படையில முத்துவும் இருந்தாரு. அவர் எழுதின கடிதம் அடுத்த நாள் வருதுன்னா, முதல் நாள் அவருடைய உடை, உடமைகள் எல்லாம் ராணுவத்துல இருந்து வருது. ஒருத்தர் இறந்து போனாத்தான் இப்படி உடைகளை அனுப்பி வைப்பாங்க. அவரு உயிரோட இருக்காரா, இல்லையான்னு இங்கே எல்லாருக்கும் ஒரே குழப்பம். அப்போ எங்களுக்கு உதவி செஞ்சது தந்திதான். தந்தி அடிச்சுத்தான் அவரு இறந்துட்டாருங்கறதை உறுதிப்படுத்தினோம்.

இப்படி எங்க மக்கள் வாழ்க்கைல தந்தி ரொம்ப முக்கியமானதா இருந்திருக்கு. இப்பவும் முக்கியமானதா இருக்கு. மத்தவங்களுக்கு எப்படியோ, எங்க ஊர் சனங்களைக் கேட்டா தந்தி சேவையைத் தடை செய்யக்கூடாதுன்னுதான் சொல்லுவோம். 

– பாலு சத்யா