தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா?

Image

(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)

பிரசவத்துக்குப் பிறகு சில தாய்மார்கள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில்லை. ‘பால் இல்லை’, ‘நான் வேலைக்குப் போகிறேன். அதனால் நேரமில்லை’ என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். சிலர் எங்கே அழகு குறைந்து போய்விடுமோ என்கிற பயத்தினாலேயே தவிர்த்து விடுவார்கள். இவர்களைப் போன்றவர்கள் தாய்ப்பாலுக்கு மாற்றாக கடைகளில் விற்கும் சில பால் பொருட்களை வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கப்படுத்துவார்கள்.

‘குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்தை எங்கள் பொருள் கொடுக்கும்’ என்று வலை விரிக்கும் சில நிறுவனங்களின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பலரும் வாங்கிவிடுகிறார்கள். ‘குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 6 மாதங்களுக்குப் பிறகு மற்ற சத்தான உணவுகளுடன் 2 வருடங்களுக்கு தாய்ப்பாலையும் கொடுக்க வேண்டும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO). கடைகளில் விற்கப்படும் பால் பொருள்களை மனத்தில் கொண்டு சில பெண்கள் மூன்று மாதங்களிலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். உண்மையில் இது போன்ற பொருட்களால் குழந்தைக்கு அதிக நன்மை இல்லை.

mother and baby 2

இது போன்ற மாற்று (Substitute) பொருட்களை விற்பதற்குப் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியிருக்கின்றன. சில சமயங்களில் வாங்குபவர்களுக்கு, ‘இது சிறந்ததா, அது சிறந்ததா?’ என்று குழப்பம் ஏற்படுகிற அளவுக்கு இந்த நிறுவனங்களின் விளம்பரங்கள் கவனம் ஈர்க்கின்றன. சர்வ சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களைப் போல ஆகிவிட்டது குழந்தைகளுக்கான பால் பொருட்கள் விற்பனை. குளிர் பானங்களில் நிறமும் சேர்க்கப்படும் ஃபிளேவரும்தான் வேறு வேறானவை. மற்றபடி எல்லா குளிர்பானங்களும் ஒன்றுதான். அது போலத்தான் குழந்தைகளுக்காக விற்கப்படும் பொருட்களும். பயன்படுத்துபவர்கள் முதலில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பது, பேறுகாலத்துக்குப் பின் ஏற்படும் ரத்தப்போக்கைக் குறைக்கும். தாய்க்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். கருப்பை சார்ந்த புற்று நோய் வராமல் தடுக்கும். தாய்ப்பால் கொடுப்பதால் மிக அதிக அளவில் உடலில் கலோரி குறையும். தாயின் உடல் படிப்படியாக பழைய நல்ல நிலைக்குத் திரும்பும். இது போன்ற எத்தனையோ நன்மைகள் தாய்ப்பால் கொடுப்பதால் உண்டு. இந்த நன்மைகள் தாய்ப்பாலுக்கு மாற்றாகக் கொடுக்கப்படும் பொருட்களில் கிடைக்காது. குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப் போக்கு, நிமோனியா காய்ச்சல் போன்றவற்றை இந்தப் பொருட்களால் சிறிதளவு கூடத் தடுக்க முடியாது. மேலும், குழந்தையின் வளர்ச்சியைக்கூட பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால்தான் உலக அளவில் பல சுகாதார நிபுணர்களும் மருத்துவர்களும் ஆணி அடித்தது போல ஒரே குரலில் சொல்கிறார்கள்… ‘தாய்ப்பாலுக்கு ஈடான மாற்று இல்லவே இல்லை’.

– பாலு சத்யா

அமுதம் – 5