தினமுமே லவர்ஸ் டே தான்!

10834995_852988401426969_8795192751527054828_o
பொண்ணு பாக்க வந்தபோது, வழக்கம் போல (இல்ல கேக்கணுமேன்னு ஒரு ஃபார்மாலிட்டி ஃபில் பண்ண) குருவோட அம்மா, “உனக்கு பாடத் தெரிமா”ன்னு கேட்டாங்க… அப்போ நா கேவலமா திருதிருன்னு முழிக்கிறதைப் பார்த்து, குரு அவசர அவசரமா “அதெல்லாம் வேண்டாம், பாடத் தெரிலன்னா பரவால்ல” என்று அபயமளித்தார் பாருங்க, அப்படியே வயித்துல பூஸ்ட் வார்த்த மாதிரி இருந்துச்சு… அப்போதான் எனக்கு அவுரு மேல லவ்வு ஸ்டார்ட்டிங் !
“இந்த ஏற்பாடுகள் எல்லாம் உன் விருப்பப்படி தானே நடக்குது… உனக்கு சம்மதம் என்றால், நிச்சயாதார்த்தம் செய்ய ‘கோ அஹெட்’ சொல்லிடவா அம்மா-அப்பாகிட்ட” – இதுதான் குரு என்னிடம் முதலில் பேசிய வார்த்தைகள்.
ஆஹா, தானே முடிவு பண்ணாமல் நம்ம கருத்தையும் கேக்குறாரே என்று அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சுட்டேன். அப்புறம் வெச்சாரு டுவிஸ்டு…
“Ok… see you soon… take care … ஹாங்… உன் பேரு என்ன … சாரி… நினைவில்ல” என்றாரே பாக்கலாம். நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்! இருந்தாலும், அவர் நேரடியா கேட்ட சின்சியாரிட்டில இம்ப்ரெஸ் ஆகிட்டேன்.
இப்படியாக, அவர் மேல ஸ்டார்ட் ஆன காதல் ஸ்டிராங்காச்சு.
அப்புறம் என்ன… மறு நாளே நிச்சயதார்த்தம்தான்!
மறு நாள் அவுங்க அண்ணன் வீட்டுல நிச்சயதார்த்தம், தடபுடலா நடந்தது. நிச்சயம் முடிஞ்ச உடனே ஒரு மணி நேரம் பேச டைம் கிடைத்தது. மொட்டை மாடி… சுற்றி நிறைய மரங்கள்… மறைந்து கொண்டிருக்கும் மாலை சூரியனின் இதமான மஞ்சள் வெயில், அழகிய இளம் ஜோடி (அவ்வ்வ்வ்வ்) அப்டின்னு ஒரே ரொமாண்டிக்கா இருந்தாலும், நாங்க என்னவோ கொஞ்சம் மொக்கயாத்தான் பேசிக்கிட்டோம்.
பேச்சுக்கு நடுவுல அவர், “நா ஒரு டீ டோட்டலர்” (அதாவது எந்த கெட்ட(?!) பழக்கமும் இல்லாதவர்) என்று சொன்னார். அதான் கொயந்த புள்ள மாதிரி இருக்குற மூஞ்சைப் பாத்தாலே தெரியுதே, என்று நினைத்துக் கொண்டு, பின்பாதியை மட்டும் கொஞ்சம் டீசன்டா சொன்னேன்… “உங்களைப் பார்த்தாலே தெரியறது” என்று. அவருக்கு ஆச்சரியம். ’’அட அப்படியா… முகத்தைப் பார்த்தே இதெல்லாம் கண்டுபிடிப்பியா, வெரிகுட்’’ என்றார்.
ஆனா, அவர் என்னை நக்கலடித்தார் என்பது பின்னாளில்தான் தெரிந்தது. அடச்சே… சாச்சுப்புட்டாக மச்சான்.
நிச்சயதார்த்தம் முடிந்த 3ம் மாசம் கல்யாணம். அவ்வளவு நாள் ஒழுங்கா போயிட்டிருந்த டைம், நிச்சயத்துக்கப்புறம் ரொம்ப மெதுவா போற மாதிரிலாம் ஒரே ஃபீலிங்கு. எங்கம்மா வேற ’சமைக்கக் கத்துக்கோ’ன்னு ஒரே நச்சரிப்பு. (ஒண்ணும் கத்துக்கல… சும்மா கிச்சனுக்குப் போய் செஞ்சு வெச்ச சாப்பாட்டை தின்னுட்டு வருவேன், அம்புட்டுதான். ஆனா, சமைக்க கத்துண்ட மாதிரி பில்ட்-அப் எல்லாம் ஓவரா கொடுத்தேன். அதான் நமக்கு கை வந்த கலையாச்சே… ஹிஹி)
ஒவ்வொரு ஞாயிறும் இவர் போன் பண்ணுவார். சண்டேன்னாலே எப்போடா போன் வரும்னு வெயிட் பண்ணுவேன். போன் பெல் அடிச்சா இவர்தான்னு தெரியும். ஓடிப்போய் எடுக்கணும்னு கை பரபரக்கும். ஆனா, எங்கப்பா எங்க எல்லாரையும் ஒரு லுக்கு விட்டுக்கிட்டே, தான் ஃபோனை எடுத்து 2 வார்த்தை பேசிட்டு, இந்தா உனக்குத்தான், மாப்பிள்ளை லைன்ல அப்டினுட்டு குடுப்பார். ’டியர் தகப்பா, உங்க அராஜகத்துக்கு எல்லையே இல்லையா, அது இவருதான்னு தெரியாதா?’ என்ற அர்த்தம் பொதிந்த லுக்க அவருக்கு விட்டுட்டு, நா பேசுவேன். வீட்டுல எல்லாரும் என்னையே பாப்பாங்க. என்ன பேசுறது… அல்ப மேட்டர்லாம் பேசிட்டு (ஒரு 2 நிமிஷம்). போனை வைப்பேன். இருந்தாலும், சந்தோஷமா இருக்கும். இனிமே அடுத்த சண்டேதான். அவ்வ்வ்வ்…
என் பர்த்டேக்கு அவர் அப்போ கிரீட்டிங் அனுப்பினார். எனக்கு அவ்ளோ குஷி. எல்லாருகிட்டயும் பெருமையா காட்டிண்டேன். I still have that 🙂
ஒரு வழியா 3 மாசம் ஓடியது. நாளைக்கு கல்யாணம். இன்னிக்கு ஈவினிங் ரிசப்ஷன். (மாப்பிள்ளை அழைப்புக்கு பதிலா) அவுங்க மண்டபத்துக்கு வந்து இறங்கிய சிறிது நேரத்தில், மணப்பெண் ரூமுக்கு (அட எனக்குத்தான் ) ஒரு மிகப்பெரிய நெருக்கமாகக் கோர்க்கப்பட்ட மதுரை மல்லி ஒரு பந்து வந்தது. என்னோட ஸ்பெஷல் அலங்காரத்துக்காக, என்னவர் வாங்கி வந்தது. எப்புடீ… சும்மாவே நா ஆடுவேன். இவரு வேற இப்படிலாம் சலங்கை கட்டி விட்டா, கேக்கணுமா? அப்படியே ஜிவ்வ்வ்னு ஒரு சந்தோஷம்.
இதுதான் என் ரிசப்ஷன் போட்டோ. அவரு எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கார் இல்ல. என் மூஞ்சிதான் சரியில்லை. போட்டோகிராபர் நல்லாவே என்ன எடுக்கல… கிர்ர்ர்ர்
10961810_852951438097332_1657014719_n
மறுநாள் பொழுது புலர்ந்தது. காத்திருந்த அந்த நாள் வந்தே விட்டது. முதல் நாள் ரிசப்ஷன் முழுவதும் ஏதேதோ ஜோக்கடித்து சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் டென்ஷன்.  நான் கூலாக நெடுநாள் பழகிய நண்பனை சந்திக்கப் போவது போல் ஜாலியாக ரெடியாகிக் கொண்டிருந்தேன்.
பொதுவாக திருமணத்தில் பல சுவையான நிகழ்வுகள் இருக்கும். மாப்பிள்ளை காசி யாத்திரை செல்வது, பெண்ணின் தகப்பனார் போய், ’என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கிறேன், நீங்கள் திரும்பி வாருங்கள்’ என்று அழைப்பார். ’ஏய் அவரை ரொம்ப தூரம் போக விட்ராதீங்கோடி, சட்டு புட்டுனு கூட்டிண்டு வந்திருங்கோ’ என்று ஜோக்கடித்துக் கொண்டிருந்தேன்.
10979464_852951584763984_1863865551_n
மாலை மாற்றுவது என்பது இன்னொரு குஷியான நிகழ்வு. மணமகன் மற்றும் மணமகளை அவரவர் தாய் மாமன் தோளுக்கு மேல் தூக்கிக் கொள்வார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் தன் கழுத்தில் இருக்கும் மாலையைக் கழற்றி, மணமகனுக்குப் போட வேண்டும். அப்போது சரியாகப் போட விடாமல் மணமகனின் மாமன் அவரை இழுத்துக் கொள்வார். இருந்தாலும் சரியாகப் போட்டு விட்டால், ஓஹோ என்று கரகோஷம்தான். அப்புறம் மாப்பிள்ளை, மணப்பெண் கழுத்தில் மாலையிட வரும்போது இதே போல கூத்து நடக்கும். செம்ம ஜாலியாக இருக்கும். நான் அவருக்கு வெரட்டி வெரட்டி மாலையைப் போட்டேனாக்கும். ’சரியா தூக்கு மாமா’ என்று என் மாமாவுக்கு வேறு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தேன். ஹிஹி…
10927972_852951561430653_933909292_n
10965880_852951568097319_1535254738_n
அப்புறம் ஊஞ்சலில் அமர வைத்து, தம்பதியினருக்கு பாலும் பழமும் கொடுப்பது, பிறகு பச்சைப் பொடி சுற்றுவது என்றெல்லாம் அழகிய சம்பிரதாயங்கள்… ஒரு தட்டு முழுவதும் மஞ்சள், சிவப்பு நிறங்களில் சாதத்தை உருண்டையாக உருட்டி, மணமக்களின் தலையச் சுற்றி, திருஷ்டி கழித்து 4 திசைகளிலும் எறிவார்கள்.
இப்படி எல்லா வைதீக சடங்குகளும் முடிந்து, முகூர்த்த நேரமும் வந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் நிஜமாகவே கூடி நின்று எங்களை ஆசிர்வதித்தது போல் எனக்கு பூரிப்பு. ஓர் அருமையான தேவ கணத்தில் அவரின் மனையாளானேன்.
10979219_852951558097320_313250869_n
திருமணம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய அத்தியாயம். அது நல்ல படியாக அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். எனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டத்தைப் பெற வழிவகை செய்த என் பெற்றோருக்கு என் மனமார்ந்த வந்தனங்கள்.
இது பெற்றோர் பார்த்து செய்வித்த திருமணம் என்றாலும், கண்ட நாள் முதல் இன்று வரை அளவற்ற  காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடும் எங்களுக்கு, தினமுமே லவர்ஸ் டே தான்!
– வித்யா குருமூர்த்தி

திருமணமா… வியாபாரமா?

Image

போர்… ஆயிரக்கணக்கானவர்களை ஊனமாக்கும். பல ஆயிரம் பேர்களின் உயிர்களைக் காவு வாங்கும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். சில நேரங்களில், அதன் விளைவுகள் பலரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிப் போட்டுவிடும். இப்போது, சிரியாவைச் சேர்ந்த பெண்களுக்கு அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

மேற்கு ஆசியாவில் இருக்கும் குட்டி நாடு சிரியா. சமீப காலமாக அங்கே உள்நாட்டுப் போர். ஒரு பக்கம் தன் அப்பாவி மக்கள் மேலேயே விஷ வாயுத் தாக்குதல் நடத்தும் அரசு. இன்னொரு பக்கம், சிரியா மீது படையெடுக்கப் போவதாக மிரட்டும் அமெரிக்கா. அமெரிக்காவுக்கும் சிரியாவுக்கும் இடையில் சமாதான முயற்சியில் இறங்கியிருக்கும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்… ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக வெளியேறியபடிதான் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களும் குழந்தைகளும்! வாழ வழியில்லை…. வயிற்றுக்குச் சோறில்லை. இவர்களில் பெண்களைக் குறி வைக்கிறது ஒரு கும்பல். வெளிப் பார்வைக்கு அவர்கள் திருமணத் தரகர்கள். உண்மையில் அவர்கள் செய்வது பெண்கள் வியாபாரம்.

‘பக்கத்து நாடுகளுக்கு இடம் பெயரும் சிரியப் பெண்கள், பணக்கார சவூதி அரேபிய ஆண்களுக்கு மனைவி என்கிற பெயரில் பாலியல் அடிமையாக அந்தக் கும்பலால் விற்கப்படுகிறார்கள்’ என்கின்றன பத்திரிகைச் செய்திகள். போரால் வறுமைக்குத் தள்ளப்பட்ட பல குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண்களை அவர்களாகவே ‘திருமணம்’ என்கிற பெயரில் விற்பதும் நடக்கிறது.

இந்த வியாபாரத்தில், வயதான சவூதி ஆண்கள்தான், சிரிய இளம் பெண்களை வாங்க போட்டி போடுகிறார்கள். அதற்காக எவ்வளவு பெரிய தொகையைத் தரவும் தயாராக இருக்கிறார்கள். ‘இப்படிப்பட்டவர்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொள்வதில்லை. பல பெண்களை பணம் கொடுத்து வாங்கி, திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்கிறது செய்திக் குறிப்பு. சில பெண்கள் பலமுறை வாங்கி, விற்கப்படுவதும் நடக்கிறது. காரணம், வயதான ஆண்கள் சிலருக்கு சில வாரங்களிலேயே அந்தப் பெண்கள் போரடித்துப் போய்விடுகிறார்களாம். சில நேரங்களில், விற்கப்பட்ட பெண், இளமையைத் தொலைத்துவிட்டு வீட்டுக்கே திரும்புவதும் நடக்கிறது. ஆனால், குறைந்த விலைக்கு மறுபடியும் குடும்பத்தினராலேயே வேறொருவருக்கு விற்கப்படுகிறாள் அந்தப் பெண்.

சிரியாவைச் சேர்ந்த ஓர் அகதி பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘‘என் மகள், தன் குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறாள். எங்கள் நாட்டில் சண்டை மட்டும் மூளாமல் இருந்திருந்தால், நான் என் பெண்ணை ஒரு சவூதி அரேபியருக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்க மாட்டேன். ஆனால், சிரியாவில் நாங்கள் எல்லோருமே ஏழைகளாக, கையில் காசு இல்லாமல் இருக்கிறோமே… நாங்கள் என்ன செய்ய?’’

அந்த சிரிய அகதியின் மகளுக்கு 17 வயது. அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை மணந்து கொண்ட சவூதி அரேபியருக்கு வயது 70. இப்படிப்பட்ட ஒரு கல்யாணச் சந்தையில் அந்தப் பெண் விலை போனது கொடுமை. அதற்கு ஒப்புக் கொண்ட அந்தப் பெண்ணின் துணிச்சல் திடுக்கிட வைத்தாலும், அந்த அளவுக்கு அவளின் குடும்பம் வறுமையில் மூழ்கியிருப்பதை நினைத்தால் வேதனை எழுகிறது. கெட்ட எண்ணமும் இளித்த முகமுமாக டாலர்களை இரைக்கத் தயாராக இருக்கும் சில தனவான்கள் இருக்கும் நிலையில் அந்தப் பெண்ணின் தந்தையும்தான் என்ன செய்வார்?

விலை… அது இன்னொரு கொடுமை. 100 டாலர்களுக்கும் குறைவான தொகைக்கு பல பெண்கள் விற்கப்படுகிறார்கள். மணப்பெண்ணாக விற்கப்படும் பெண்களின் வயது 12லிருந்து 21 வரை. அவர்களை மணம் செய்து கொள்கிற ஆண்களின் வயது 40, 50, 60, 70. ஒரு சிரியப் பெண்ணுக்கு நான்கு முறை திருமணம் நடந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் வயது 15. இந்த அவலத்துக்கெல்லாம் காரணம் சண்டை. நமக்கு ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சண்டையே உனக்கு ஒரு சாவு வராதா?

– பாலு சத்யா

திருமணம்… தடைபட்ட படிப்பு… தீர்ப்பு!

Image

திருமணம் செய்த காரணத்தால் 19 வயது மாணவியை வகுப்புகளில் அனுமதிக்காமல் தேர்வெழுத விடாமல் தடை செய்தது ஒரு தனியார் கல்லூரி. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் கிளை அந்த மாணவியைக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரிக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவைச் சேர்ந்தவர் சி.சரஸ்வதி. திருச்செந்தூரில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் (முதல் வருடம்) படித்து வந்தார். கடந்த மே மாதம் 7ம் தேதியில் இருந்து சரஸ்வதி வகுப்புகளில் அனுமதிக்கப்படவில்லை. அவருடைய தந்தை, தன் விருப்பம் இல்லாமல் சரஸ்வதி திருமணம் செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்திருந்தார். இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் தந்தை குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லை. தன் அத்தையின் உதவியால்தான் சரஸ்வதி கல்லூரியில் படித்து வந்தார். அத்தை, தன் மகன் முருகபெருமாளைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கோரிக்கை வைத்திருக்கிறார். சரஸ்வதி ஒப்புக் கொண்டார். சரஸ்வதியின் திருமணம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி உறவினர்கள் மற்றும் மூத்த குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் நடந்திருக்கிறது. திருமணம் செய்யப்பட்டது, முறையாக மே 7ம் தேதி பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் தந்தை அளித்த புகாரின் பேரில் சரஸ்வதி கல்லூரியில் அனுமதிக்கப்படவில்லை. வலுக்கட்டாயமாகக் கையெழுத்து வாங்கிக் கொண்டு ‘மாற்றுச் சான்றிதழ்’ (Transfer Certificate) கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் தன் புகாரில் தெரிவித்திருந்தார் சரஸ்வதி.

வழக்கை விசாரித்த மதுரை பெஞ்ச், ‘விண்ணப்பதாரர் மேஜர். தன் வாழ்க்கையைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது. இது தொடர்பாக கல்லூரி எடுத்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. இவரை படிப்பைத் தொடரவும், செமஸ்டர் தேர்வுகளை எழுதவும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறது.  

ஓடிப் போய் கல்யாணம்… உதவும் காவல்நிலையங்கள்!

Image

இந்தியர்களுக்குத் திருமணம் ஒரு வைபவம், கொண்டாட்டம். வாழ்க்கையில் ஒருமுறை நிகழும் அந்த நிகழ்வை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதுதான் கோடிக்கணக்கானவர்களின் ஆசையும் கூட! ஆனால், காதலில் விழுந்து, பெற்றோரின் சம்பந்தமில்லாமல் திருமணம் செய்ய விரும்புகிற இளஞ் ஜோடிகள் இறுதியாகத் தஞ்சமடையும் இடம் காவல் நிலையம்!

சாதியோ, மதமோ வேறு வேறாக இருந்தாலும்கூட காவல்நிலையங்கள் தஞ்சமடையும் காதலர்களை ஒதுக்குவதில்லை. தேவையெல்லாம் முக்கியமான ஒரே விஷயம்தான். இருவருக்கும் திருமண வயது வந்திருக்க வேண்டும். ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அவ்வளவுதான். ‘‘கொண்டா மாலையை! மாத்திக்கங்கப்பா. ம்… தாலியைக் கட்டு!’’ என்று சொல்லிவிடுவார் காவல்நிலைய அதிகாரி. பிறகு, மணமக்களின் குடும்பத்தாரை அழைப்பார்கள். திருமணம் முடிந்த விவரம் சொல்லப்படும். அதற்குப் பிறகு இருதரப்பைச் சேர்ந்த குடும்பத்தாரும் இவர்களின் மண வாழ்க்கையில் குறுக்கிட முடியாது.

கடந்த வாரம்கூட இப்படி ஒரு திருமணம் கோயம்பத்தூரில் நடந்தது. இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு இந்துப் பெண்ணை மணந்தார். இந்தத் திருமணத்தை பெண்ணின் பெற்றோர் எதிர்க்க, மணமக்கள் சூப்பரின்டென்டெண்ட் ஆஃப் போலீஸ் அலுவலகத்தில் முறையிட்டார்கள். காவல்துறை தலையிட்ட பிறகு, பிரச்னை சுமுகமாக முடிந்தது. பல காதலர்களுக்கு காவல்நிலையங்கள் தங்களுக்கு உதவும் என்கிற நம்பிக்கைகூட ஏற்பட்டிருக்கிறது.

‘கடந்த 10 வருடங்களில் காவல்நிலையத்தில் தஞ்சமடையும் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. சில தலைமைக் காவலர்கள், காவல்நிலையத்திலேயே திருமணம் செய்து வைப்பதும், அவை பத்திரிகைகளில் செய்திகளாக வெளி வந்ததும் முக்கிய காரணம்’ என்கிறார் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்.

‘காவல்நிலையம் காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பது அதிகமாக நடந்தாலும் சில இடங்களில் வில்லனாக மாறி பிரிக்கவும் செய்கிறது’ என்கிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.

கிராமப்புறங்களில் சாதி, மத எதிர்ப்புத் திருமணங்கள் நடக்கும்போது இப்படிப்பட்ட சில எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. காவல்துறை அதிகாரி, அந்த ஊரில் செல்வாக்குப் படைத்த சாதி சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார். காதலர்கள் பாதுகாப்புக் கேட்டு தஞ்சமடையும்போது, சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு தகவல் சொல்லிவிடுவார். பிறகென்ன? எந்த நியாயமும் இல்லாமல் இருவரும் பிரிக்கப்படுவார்கள். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்வுகள் மிக மிகக் குறைவு.

திருமண மண்டபங்களாகத் திகழும் சில காவல் நிலையங்கள்…

பெங்களூர்

மார்ச் 2001. ஷீலா என்கிற பெண்ணுக்குத் திருமணம் முடிவாகி, கடைசி நேரத்தில் அவருடைய அம்மா இறந்து போனதால், உறவினர்களால் நிறுத்தப்பட்டது. பெங்களூர் அசோக்நகர் காவல்நிலையத்திலிருந்த காவலர்கள் அந்தப் பெண்ணின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார்கள்.

மஹிலாபாத்

சாதிய பிரச்னை அதிகமாக இருக்கும் உத்தரபிரதேசத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது இந்தக் காவல்நிலையம். கடந்த நவம்பரில் இங்கிருக்கும் அதிகாரிகள் ஸ்டேஷன் வளாகத்துக்குள்ளேயே ஒரு பந்தலை நிறுவியிருக்கிறார்கள். எதற்கு? சாதி விட்டு சாதி திருமணம் செய்ய தஞ்சமடையும் ஜோடிகளை சேர்த்து வைப்பதற்காக!

மேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம்

மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த காவல்நிலையம் தொடங்கப்பட்டு முதல் 7 வருடங்களில் 50 திருமணங்கள் இங்கே நடந்திருக்கின்றன. 2008ம் ஆண்டில் மட்டும் இங்கே நடந்த திருமணங்கள் 150.

தொகுப்பு: பாலு

மணமகனே… மணமகளே வா! வா!

Image

பிள்ளைக்கோ, பெண்ணுக்கோ தகுந்த வரன் தேவையா? இப்போதெல்லாம் கல்யாணத் தரகரைத் தேடி ஓட வேண்டியதில்லை. ஒரு சின்ன சொடுக்கலில், ஆன்லைனில் பொருத்தமான வரன்கள் கொட்டுகின்றன. அதற்கு வழி வகுத்துக் கொடுப்பவை திருமண இணையதளங்கள். நாளிதழ்கள்… மாத இதழ்கள்… ஜாதி சங்கங்கள்… ஆன்மிக சேவையில் ஈடுபட்டிருக்கும் சில நிறுவனங்கள் எல்லாம் இந்தப் பணியில் இறங்கியிருந்தாலும், திருமணங்களுக்கான இணையதளங்களின் மூலம் பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுப்பது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. திருமண இணையதளங்கள் மற்றும் அது தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே…

* ‘ஒரு வருடத்துக்கு ஆன்லைன் மூலம் 510 கோடி ரூபாய்க்கு திருமண விளம்பரங்கள் வெளியாகின்றன. வருடத்துக்கு 30% இந்தத் தொகை உயர்கிறது’. இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது ‘இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பு.

* மாதம் 10,000 புதிய திருமண வேண்டுகோள் பதிவுகள் பதியப்பட்டாலும், அவற்றில் பத்தில் ஒன்று மட்டுமே மூன்று மாதத்தில் திருமணத்தில் முடிகிறது. இதுதான் மேலும் மேலும் பல புதிய திருமண இணையதளங்கள் உருவாகக் காரணம்.

* மாதத்துக்கு 22 லட்சம் புதிய மணமகன், மணமகள் தேவை பதிவுகள் மொத்த திருமண இணையதளங்களின் மூலம் நடக்கிறது!

* திரும்பத் திரும்ப பதிவு செய்தும் பலருக்கு எந்த முன்னேற்றமும் இருப்பதில்லை!

* இப்போது மட்டும் 3,50,00,000லிருந்து 4 கோடி திருமண வேண்டுகோள் பதிவுகள் இணையத்தில் இருக்கின்றன.

இந்த விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு 50-70 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

* இவற்றில் முதல் திருமணத்துக்கான விளம்பரங்களே அதிகம் இடம்பெறுகின்றன!

* மறு திருமணத்துக்கான கோரிக்கை விளம்பரங்கள் மூன்று சதவிகிதம் மட்டுமே!

* பாரத் மேட்ரிமேனியல் நிறுவனத்துக்கு அதனுடைய திருமண இணையதளத்தின் மூலம் 2012ல் கிடைத்த வருவாய் 200 கோடி ரூபாய். இதன் முதன்மை நிர்வாகி முருகவேல் ஜானகிராமன், இணையதளத்தில் தேடித்தான் தன் மனைவியை தேர்ந்தெடுத்தார். ‘திருமணமாகி இரண்டு வருடம் கடந்து விட்டது. மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்கிறார்.

* ‘விளம்பரங்களில் கூறப்படும் பொய்களுக்கு நாங்கள் காரணம் அல்ல. விசாரித்து திருமணம் செய்யவும்’ என வலிறுத்துகின்றன பல திருமண இணையதள நிறுவனங்கள்.

* ‘விவாகரத்தில் முடியும் வழக்குகளில் 10ல் 7, திருமண இணையதளங்களில் பொய்த் தகவல்களை தந்ததுதான் காரணம்’ என்கிறார் பெங்களூர் வழக்கறிஞர் ஒருவர்.

* சம்பளம், வீடு, வசதி வாய்ப்பு போன்றவற்றில் பொய் சகஜமாக இருக்கிறது.

*  டைம்ஸ் க்ரூப்பின் ‘சிம்பிளி மேரி டாட் காம்’மை (SimplyMarry.com) 50 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

* பாரத் மேட்ரிமேனியல், திருமணமாகும் தம்பதிகளுக்கு ‘திருமண வாழ்வை வெற்றிகரமாக நடத்த வழிமுறைகள்’ என்ற புத்தகத்தை அன்பளிப்பாக தருகிறது. இதுவரை 50,000 பிரதிகளை விநியோகித்து இருக்கிறது!

* மும்பை நிறுவனமான ‘ஷாதி டாட் காம்’ திருமணத்தை வெற்றிகரமாக தொடர சிறப்பு ஆலோசனைகளையும் கவுன்சிலிங் வகுப்புகளையும் நடத்துகிறது. ஒன்றல்ல… இரண்டல்ல… 100 இடங்களில்!

திருமணத்துக்குப் பிறகு, பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல், ஈகோவை அடியோடு மறந்து, ‘எனக்கு நீ… உனக்கு நான்’ என வாழ்ந்தால்தான் அது வெற்றிகரமான வாழ்க்கையில் முடியும். முந்தைய தலைமுறையில் பெண்களுக்கு கணவரை விட வயது குறைவாக இருக்கும். அதனால் பயந்து ஓடினார்கள். இன்றோ… வயது வித்தியாசம் 2 அல்லது 3 வருடங்கள்தான். எனவே, வாழ்க்கையிலும் சம உரிமையைப் பெண்கள் கோருவது சகஜம், நியாயம். இதனை புரிந்து கணவர்கள் புரிந்துகொண்டால் திருமண பந்தம் நிரந்தரம்!

– ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்