தி.க.சி., சுடலை மாடன் தெரு, திருநெல்வேலி: ஓர் இலக்கிய முகவரி

Image

காகவி பாரதியைத் தன் ஆதர்ச குருவாக வரித்துக் கொண்டு இலக்கிய வாழ்வைத் தொடங்கியவர் மதிப்பிற்குரிய இலக்கிய ஆளுமை தி.க.சி என்கிற தி.க.சிவசங்கரன். இதனாலும் அவர் மீது என் பிரியம் அளவு கடந்திருக்கலாம். மகாகவி பாரதி என் மானசீக குரு. இளம் வயதில் கனவுகளில் மகாகவியுடன் வாழ்ந்திருக்கிறேன். அதே கருப்புக் கோட்டுடன் காட்சியளித்திருக்கிறான்.

கையெழுத்துப் பிரதியிலேயே ‘ஆயுதம்’ என்கிற எனது கவிதைத் தொகுப்பு முதல் பரிசுக்குத் தேர்வாகியிருந்தது. கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்துகொள்ள நண்பர் ஜெயராமனுடன் எட்டயபுரம் போயிருந்தேன். மகாகவியின் கருவறை எட்டயபுரம் ஆயிற்றே! அந்த மண்ணில் முதல் விருது பெறுவதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? மகாகவியின் வீட்டில் நாங்கள் இருவரும் மண்ணில் விழுந்து புரண்டோம்.

எட்டயபுரத்துக்கு அடுத்து திருநெல்வேலிதானே!

விருதுப் பட்டயங்களைச் சுமந்தபடியே திருநெல்வேலி போனோம். திருநெல்வேலி என்றால் பலருக்கும் அல்வா. உங்களைப் போலவே எங்களுக்கும் திருநெல்வேலி என்றால் தி.க.சிவசங்கரன். நாங்கள் அனைவரும் வீட்டுக்குப் போயிருந்தோம். மேசை நிறைய புத்தகங்கள். ஒரு ஓரத்தில் தொலைபேசி என்பதாக ஞாபகம். வெள்ளை நிறம் என்று நினைக்கிறேன். எதிரில் ஒரு நாற்காலி. நாற்காலியின் மூலையில் தி.க.சி. அண்ணன் வண்ணதாசன் எங்கள் வருகையைத் தந்தைக்குச் சொல்கிறார். ஒரு குழந்தையைப் போல குதூகலமாக வரவேற்கிறார் தி.க.சி. அப்போது எனக்குத் தோன்றியது இதுதான்… இந்த இமயமலைக்குள் எத்தனைக் கூழாங்கற்கள்!

‘கல்கியிலும் வண்ணக்கதிரிலும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்… தொடர்ந்து எழுதுங்கள்’. முதுகு இல்லாதவர்களைக் கூடத் தட்டிக்கொடுக்க அவரால்தான் முடியும்!

அவரைப் பற்றிப் பேச ஆரம்பிப்போம்… அவர் நம்மைப் பற்றியும் இலக்கிய உலகத்தைப் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பார்.

அப்போது அவரது துணைவியார் உடல்நலமின்றி இருந்தார். அண்ணன் வண்ணதாசன் அம்மாவுடன் இருக்க, தி.க.சி இடையில் போய்ப் பார்த்துவிட்டு வந்து மறுபடியும் தன் மனைவியின் உடல்நிலை, இலக்கிய உலகத்தின் சுகாதாரம், நாம் பணியாற்றவேண்டிய திசைவழி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்.

வண்ணதாசன் எங்களைப்பற்றித் தன் தந்தையிடம் சொல்கிற விதம் ரொம்ப நன்றாயிருக்கும். முதலில் சொல்கிறபோது காதில் விழுந்திருக்காது… அல்லது கவனம் சிதறி இருக்கும். அடுத்துக் கொஞ்சம் சத்தம் போட்டுச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்கிற போது வண்ணதாசனின் முகபாவமும் வார்த்தைகள் வெளிவந்த பிறகு மௌனம் ஆகும் உதடுகளும் பார்க்கப் பரவசமாக இருக்கும். அப்போதும் ஒரு தீவிர அரசியல்வாதியாகவும் இலக்கியவாதியாகவும் பேசிக்கொண்டே இருப்பார் தி.க.சி.

அடுத்து, எங்கள் இலக்கு பத்தமடை தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பார்ப்பதாக இருந்தது. தி.க.சியிடம் சொன்னோம். உடனே ச.தமிழ்ச்செல்வன் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டார். அத்தோடு தமிழ்ச்செல்வன், அவர் சார்ந்திருக்கும் இலக்கிய அமைப்பு, அதன் செயல்பாடு என்று அவர் பேச்சு விரிய ஆரம்பித்துவிட்டது.
எழுத்தாளர் சங்க மாநாடுகளுக்குத் தவறாமல் வருவார் தி.க.சி. ஓரிரு நிமிடங்கள்தான் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும் என்றாலும் உணர்வு பூர்வமாகப் பேசுவார். உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை சொல்லியபடியே இருப்பார்.

ஒருமுறை தினமணிக் கதிரில் ‘இலக்கியப் பஞ்ச சீலம்’ என்கிற கருத்தாக்கம் குறித்து விரிவாகக் குறிப்பிட்டு இருந்தார். தலித்தியம், தமிழியம், பெண்ணியம், சூழலியம், மார்க்சியம் என்று குறிப்பிட்டு இலக்கியத்தின் நோக்கம் இவற்றைச் சுற்றி இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அதற்கு இலக்கியரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதினேன். சென்னையில் “இலக்கியப் பஞ்ச சீலம்” என்ற தலைப்பில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். அரங்கம் கொள்ளாதக் கூட்டம். என்னைப் பொறுத்தவரை இன்னும் அந்தக் கூட்டம் முடிந்ததாகத் தெரியவில்லை. இப்போதும் அந்த அரங்கில் தி.க.சி. பேசிக் கொண்டிருக்கிறார். அதுதான் தி.க.சி.

இத்தனை பெரிய கூட்டம் இருந்தும் வெறிச்சோடிக் கிடக்கிறது சுடலை மாடன் தெரு.

– நா.வே.அருள்
Image courtesy: nanjilnadan.com