2
கதாநாயகி… நம்பர் ஒன்!
‘தனிமையில் இருக்கும் போது என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன்’. –மர்லின் மன்றோ.
‘அனாதை இல்லம்’ கற்றுத் தரும் பாடங்கள் அனேகம். வலி நிறைந்த அனுபவப் பாடங்கள் அவை. தனிமை, கழிவிரக்கம், துயரம், துரோகம், ஏமாற்றம், எதிரிகள், நண்பர்கள்… இப்படி ‘லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்ல’த்தில் நோர்மா ஜீனுக்கு என்னென்னவோ கிடைத்தன. கூடவே ஊக்கத் தொகையும் கிடைத்தது! ஊக்கத் தொகை என்ன பெரிய ஊக்கத் தொகை! மாதத்துக்கு ஒரு நிக்கல் (அமெரிக்க பணத்தில் ஐந்து சென்ட்). அதுவும் சும்மா கிடைத்துவிடவில்லை. சமையலறை இருட்டிலும் வெப்பத்திலும் வியர்க்க விறுவிறுக்க நின்று உதவி செய்கிறேன் என்கிற பெயரில் வேலை பார்த்ததற்குக் கிடைத்த சன்மானம். அந்தப் பணத்திலும் ஒரு சிறு தொகையை வாரா வாரம் சர்ச்சுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது அந்த விடுதியின் விதிகளில் ஒன்றாக இருந்தது.
அங்கிருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்க ஆரம்பித்தாள் அந்தக் குழந்தை. அவளை அங்கிருந்து அழைத்துச் செல்லவும் வளர்க்கவும் பலர் ஆசைப்பட்டார்கள். பார்த்ததுமே யாருக்கும் பிடித்துப் போகும் ‘பளிச்’ குழந்தையல்லவா நோர்மா?! ஆனால், அது மட்டும் நடக்கவில்லை. தடையாக நின்றவர் அம்மா கிளாடிஸ். எப்பேர்பட்ட நல்ல மனிதர்கள் வந்து கேட்டாலும் நோர்மாவை அவர்களிடம் கொடுக்கத் தயங்கினார், உறுதியாக மறுத்தார். சில நேரங்களில் வந்தவர்களை திட்டி அனுப்பினார். ஒருநாள் கிரேஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்லத்துக்கு வந்தார். பரவசத்தில் துள்ளிக் குதித்தாள் நோர்மா. அன்றைக்கு கிரேஸ் வெறுமனே நோர்மாவைப் பார்க்க வரவில்லை. கையோடு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். கிரேஸின் கணவர் எர்வின் சில்லிமேன் ‘டாக்’ காட்டார்டின் மூத்த மனைவிக்கு ஒரு மகள் இருந்தாள். கிட்டத்தட்ட நோர்மாவின் வயது. அவளுக்குத் துணையாக இருக்கும்… நோர்மாவுக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது கிரேஸின் எண்ணம். ஆனால், நடந்ததோ வேறு.
அந்தச் சின்னஞ்சிறு குழந்தையை பாலியல் வடிகாலாகப் பயன்படுத்தப் பார்த்தார் ‘டாக்’. ஒருநாள் அது போன்ற ஒரு காட்சியை கண்ணெதிரே பார்த்து அதிர்ந்து போனார் கிரேஸ். உடனடியாக நோர்மாவை கலிஃபோர்னியாவில் இருக்கும் தன் பெரிய அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் பெயர் ஆலிவ் புரூனிங்ஸ். அத்தை அங்கே தனியாக இல்லை… தன் மகன்களுடன் இருந்தார். ஆக, பிரச்னைகள் தொடர்ந்தன. கலிஃபோர்னியா, காம்ப்டனில் (Compton) இருந்த ஆலிவ் புரூனிங்ஸ் வீட்டில் கொஞ்ச நாட்கள் கூட நிம்மதியாக இருக்கவில்லை நோர்மா. அத்தையின் மகன்களில் ஒருவன் ஒருநாள் கண்மூடித்தனமாக தாக்கியதில் சுருண்டு போனாள்.
அம்மாவும் சரியில்லை… போகிற இடங்களில் இருக்கும் ஆண்களும் சரியில்லை… தன் மேல் காமப் பார்வை படிவதை அறிந்தும் வெளியில் சொல்ல முடியாத வேதனை அந்த சிறு பூவுக்கு. இவையெல்லாம் பின்னாளில் மர்லின் மன்றோ அனுபவித்த மனப் பிரச்னைகளுக்கும் மன அழுத்தத்துக்கும் தூக்கமில்லாமல் தவித்த இரவுகளுக்கும் முக்கியமான காரணங்கள். மைதானத்தில் வீரர்களின் கால்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கால் பந்து போல அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட நோர்மா, 1938களின் தொடக்கத்தில் மற்றொரு அத்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.
அங்கே நோர்மா செல்வதற்கு ஏற்பாடு செய்ததும் கிரேஸ்தான். அவர் பெயர் அனா லோயர் (Ana Lower). லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த வேன் நய்ஸ் (Van Nuys) என்கிற இடத்தில் வாழ்ந்து வந்தார். திருமணம் ஆவதற்கு முன்பாக கிரேஸின் வீட்டில் எப்படிப்பட்ட நிம்மதி கிடைத்ததோ, அதே நிம்மதியை அத்தை அனா வீட்டிலும் உணர்ந்தாள் நோர்மா. ‘‘என் இளம் பருவத்தில் நான் வசித்த வெகு சில நல்ல இடங்களில் அனா அத்தையின் வீடும் ஒன்று’’ என்று பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார் மர்லின் மன்றோ. ஆனால், அங்கேயும் வெகுகாலம் நோர்மாவால் நீடித்திருக்க முடியவில்லை. காரணம், அனா வயதானவர். முதுமையோடு சேர்ந்து பல உடல் உபாதைகள் அவரை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தன. நாளுக்கு நாள் அனாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.
1942… அனா அத்தையின் வீட்டில் மேலும் தங்கியிருக்க முடியாமல் கிரேஸின் வீட்டுக்கே திரும்பினாள் நோர்மா. அந்த முதிய பெண்மணி, அனா அத்தையால், நோர்மாவுக்குக் கண்கலங்க விடை கொடுக்க மட்டுமே முடிந்தது. கிரேஸின் வீட்டில் ‘டாக்’ இருப்பார் என்று நோர்மாவுக்குத் தெரியும். ஆனால், ஆதரவற்ற அந்தப் பெண் குழந்தையால் வேறு எங்கே செல்ல முடியும்? அந்த நாட்களில் நோர்மாவின் மனதுக்குள் ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. ‘இனிமேலும் யாரையும் அண்டி வாழக் கூடாது. தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’. அனாவின் வீட்டிலிருந்து வெளியே வந்த போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது.
வேன் நய்ஸில் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது நோர்மாவுக்கு ஓர் இளைஞன் அறிமுகமாகியிருந்தான். அவன் அனாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவன். பெயர் ஜேம்ஸ் ‘ஜிம்’ டோரத்தி (James ‘Jim’ Dougherty). அன்புக்கும் பரிவுக்கும் ஏங்கும் நிலையில் இருந்த நோர்மாவுக்கு, ஜிம் அவளைப் பார்த்து உதிர்க்கும் புன்னகை ஒன்றே போதுமானதாக இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பேசினார்கள். பூமியில் உள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் பேசினார்கள். மனிதர்கள், மலைகள், ரோஜா, குருவி, அடுத்த தெருவில் இருந்த வெள்ளைச் சடை நாய்… ஒறையும் விடாமல் பேசித் தீர்த்தார்கள். தனிமையில் இருந்தபோது மனசுக்குள்ளேயே ஒருவர் மற்றவரிடம் பேசிக் கொண்டார்கள். ஜிம்மின் மேல் நோர்மாவுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு மெல்ல மெல்லக் காதலாக மாறியது. அனாவின் வீட்டை விட்டுப் போகும் போது நோர்மாவின் மனது முழுக்க ஜிம் நிறைந்து போயிருந்தான். ஆனாலும், கிரேஸின் வீட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழி நோர்மாவுக்கு இருக்கவில்லை.
சில மாதங்கள் கழிந்தன. மேற்கு வர்ஜீனியாவில் ‘டாக்’ காட்டார்டுக்கு புதிய வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம்… எதிர்காலத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் வேலை. கிரேஸும் காட்டார்டும் இடம் பெயர முடிவு செய்தார்கள். என்ன காரணமோ, இந்த முறை நோர்மாவை தங்களுடன் அழைத்துச் செல்ல கிளாடிஸ் விரும்பவில்லை. மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்களும் இதற்கான காரணத்தை சரியாகக் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பத்தினர் நோர்மாவை வளர்க்க விரும்பினார்கள். அதற்கும் மறுப்பு சொல்லிவிட்டார் கிரேஸ். நோர்மாவை கூட அழைத்துப் போகவில்லையே தவிர, கிரேஸ் ஒரு நல்ல காரியம் செய்தார். அவருக்கு நோர்மா ஜேம்ஸ் ஜிம் டோரத்தியை விரும்புவது தெரிந்திருந்தது. ஜிம்மின் வீட்டுக்குப் போய், அவன் அம்மாவிடம் பேசினார்.
நேரடியாக விஷயத்துக்கு வந்தார். நோர்மாவை ஜிம்முக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கு பக்குவமில்லாத வயது. நோர்மாவுக்கு பதினாறு வயது. இருவரும் சேர்ந்து வாழ்வதில் முகாந்திரம் இருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கை நல்லவிதமாக நடக்குமா என்கிற கவலையோடு பேசினார் ஜேம்ஸ் ஜிம் டோரத்தியின் தாய். ‘‘வேறு வழியில்லை. எங்களால் நோர்மா ஜீனை அழைத்துப் போக முடியாது. இந்தத் திருமணம் மட்டும் நடக்காவிட்டால் அவள் திரும்பவும் ஏதாவது ஆதரவற்றோர் விடுதிக்கோ, அனாதை இல்லத்துக்கோ செல்ல வேண்டியதுதான்’’. அழுத்தம் திருத்தமாக உண்மையை எடுத்துச் சொன்னார் கிரேஸ். இதைக் கேட்டதும் ஜேம்ஸ் ஜிம் டோரத்தியின் அம்மாவே கூட திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். ஆனால், ஜிம் ஒப்புக்கொள்ள மறுத்தான். வயது ஒருபக்கம் இருக்கட்டும்… குடும்பத்தை எப்படி நடத்துவது? வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லை. வருமானத்துக்கு என்ன செய்வது? இந்த யோசனைகளால் ஜிம் தயங்கினான். ‘இப்போதைக்கு திருமணம் வேண்டாமே!’ என்று திரும்பத் திரும்ப சொன்னான். கிரேஸ், நோர்மாவின் நிலைமையை எடுத்துச் சொன்னார். ‘கரைத்தார் கரைத்தால் கல்லும் கரையும்’ நிலைதான். ஜேம்ஸ் ஜிம் டோரத்தி இறங்கி வந்தான். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டான். விஷயத்தைக் கேள்விப்பட்டார் நோர்மாவுக்குப் பிரியமான அனா அத்தை. அவரே முன்னின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கும் நோர்மாவுக்கும் திருமணம் நடந்தது. நோர்மாவுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டது அந்தக் கணத்தில் இருந்துதான். அவளுக்கு ஜிம்மின் வீடு ஒரு புது உலகமாக இருந்தது. அங்கே அவளை அதிகாரம் செய்ய யாரும் இல்லை… எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை… எல்லாவற்றுக்கும் மேலாக ‘இது தன் வீடு இல்லை, இங்கே வரம்பு மீறிவிடக் கூடாது’ என்கிற எண்ணம் அடியோடு இல்லை.
புகுந்த வீட்டுக்கு வந்த கையோடு நிர்வாகத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டாள் நோர்மா. கணவனுக்கும் அவன் வீட்டாருக்கும் உற்ற துணையாக ஆகிப் போனாள். அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். 1943ல் ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘மெர்ச்சன்ட் மரைன்’ என்கிற வாணிக கப்பல்படையில் வேலை. கலிஃபோர்னியாவின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சான்டா கேட்டலினா தீவில் வேலைக்குச் சேர ஆர்டர் வந்தது. நோர்மா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். சான்டா கேட்டலினா தீவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்தது. அதனால், ஜிம்முடன் அவளும் போக முடியும். சேர்ந்து வாழ முடியும். ‘அங்கே எத்தனை நாட்களுக்கு வேலை இருக்கும் என்று தெரியவில்லை. நீ இங்கேயே இரேன்’ என்று சொல்லிப் பார்த்தான் ஜேம்ஸ் ஜிம் டோரத்தி. ‘நீங்கள் வேறு எங்காவது மாற்றலாகிப் போகும் வரை உங்களுடன்தான் இருப்பேன். என்னால் உங்களைப் பிரிந்திருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டாள் நோர்மா. இருவரும் சான்டா கேட்டலினா தீவுக்குக் கிளம்பினார்கள். அங்கே இருக்கும் ஏவலோன் (Avalon) நகரில் குடியேறினார்கள்.
சில மாதங்கள்தான்… ஆனால், நோர்மாவின் வாழ்க்கையில் அற்புதமான நாட்கள் அவை. ஜேம்ஸ் ஜிம் டோரத்தி, நோர்மாவை நன்றாக கவனித்துக் கொண்டான். இனி வாழ்க்கையில் பிரச்னையே இல்லை என்கிற நினைப்புக்கு நோர்மா வந்தபோதுதான், ஜிம்முக்கு அந்த உத்தரவு வந்தது. அவன் உடனடியாக கப்பலில் ஏறி பசிபிக் கடலில் சென்றாக வேண்டும். இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அது. நோர்மாவுக்குள் ஓர் எண்ணம் அழுத்தமாக உட்கார்ந்திருந்தது. ஜிம் பசிபிக் கடலுக்குப் போனால் உயிரோடு திரும்பி வரமாட்டான் என்கிற எண்ணம். பேசிப் பார்த்தாள், அழுது பார்த்தாள், ஆர்பாட்டம் செய்தாள். எதற்கும் மசியவில்லை ஜிம். பசிபிக் பயணத்துக்குத் தயாராகிவிட்டான்.
அடுத்த அதிரடியை ஆரம்பித்தாள் நோர்மா. ‘சரி… உங்க இஷ்டப்படியே போய் வாருங்கள். ஆனால், போவதற்கு முன்னால் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டுப் போங்கள். நீங்கள் திரும்பி வரும் வரை குழந்தையைப் பார்த்தாவது உங்கள் நினைவில் வாழ்கிறேன்’.
அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை ஜேம்ஸ் ஜிம் டோரத்தி. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதை வளர்க்கும் அளவுக்கான பக்குவம் நோர்மாவுக்கு வரவில்லை என்று நினைத்தான்.
‘கவலையே படாதே! நான் திரும்பி வந்த பிறகு கண்டிப்பாக உன்னை அம்மாவாக்கிவிடுகிறேன்’. கண் சிமிட்டிச் சொன்னான். உரிய தேதியில் கடல் பயணத்துக்குக் கிளம்பினான். நோர்மா, வேறு வழியில்லாமல் ஜேம்ஸ் டோரத்தியின் அம்மா வீட்டுக்குத் திரும்பினாள்.
(தொடரும்)
– பாலு சத்யா
Image Courtesy:
http://amirulhafiz.deviantart.com/
http://blog.everlasting-star.net/
திரைவானின் நட்சத்திரங்கள் பிற…