வாசிப்பே எழுத்தைக் கற்றுக் கொடுக்கும்!

nina 3சிறப்புப் பேட்டி – நினா மெக் கானிக்லே

ஓர் இலக்கிய நிகழ்வுக்காக சென்னை வந்திருந்தார் அமெரிக்க எழுத்தாளர் நினா மெக் கானிக்லே (Nina McConigley). இவரைப் பற்றிச் சொல்ல ஏராளமான செய்திகள்..! ‘கௌபாய்ஸ் அண்ட் ஈஸ்ட் இண்டியன்ஸ்’ என்கிற இவருடைய சிறுகதைத் தொகுப்பு 2014ம் ஆண்டுக்கான இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஒன்று, ‘2014 பென் ஓப்பன் புக் அவார்ட்.’ இன்னொன்று, ‘ஹை ப்ளெயின்ஸ் புக் அவார்ட்.’ சிங்கப்பூரில் பிறந்தவர்… அமெரிக்காவின் வ்யோமிங்கில் (Wyoming) வளர்ந்தவர். ‘கல்ஃப் கோஸ்ட்’ என்கிற பத்திரிகையில் புனைவுகளுக்கான ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘ஓவன் விஸ்டர்டு கன்சிடர்டு’ என்கிற இவருடைய நாடகமும், ‘க்யூரேட்டிங் யுவர் லைஃப்’ என்கிற சிறுகதையும் அமெரிக்காவில் மிக அதிக கவனம் பெற்றவை. ‘நியூ யார்க் டைம்ஸ்’, ‘மெமரியஸ்’ உள்ளிட்ட பல பிரபல பத்திரிகைகளில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன. பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கும் இவர் வ்யோமிங் பல்கலைக்கழகத்திலும், ‘வாரன் வில்சன் எம்.எஃப்.ஏ. ப்ரோக்ராம் ஃபார் ரைட்டர்ஸ்’ஸிலும் எழுதுவது தொடர்பான பயிற்சி அளிக்கும் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இனி நினாவுடனான பிரத்யேக பேட்டி…

* உங்களுடைய படைப்புகளில் (மற்றும் பேட்டிகளில்) எப்போதும் நீங்கள் வ்யோமிங்கில் இருப்பதையே விரும்புவதாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். கிராமப்புறத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் காதல்தான் வ்யோமிங்கை விரும்ப வைத்ததா? அல்லது தனிமையை விரும்புகிற, கூட்டத்திலிருந்து தள்ளி இருக்க பிரியப்படுகிற மனோபாவமா?

இரண்டாவது காரணம்தான் என்று நினைக்கிறேன். என்னை நான் எப்போதுமே தனிமையை விரும்புகிற துறவியாக நினைத்துக் கொண்டதில்லை… கூட்டத்திலிருந்து சற்றே விலகி இருக்க பிரியப்படுகிறவள். வ்யோமிங்குக்கு இடம் பெயர்ந்த போது நான் குழந்தை. அது மட்டும்தான் எனக்குத் தெரியும். இந்த மலைகளோடும் திறந்த வெளியோடும் எனக்கு ஆழ்ந்த உறவு இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த இயற்கைதான் என்னை வடிவமைத்தது. நகரங்களுக்குப் போவது பிடிக்கும்தான். ஆனாலும், அமைதியான பரந்த புல்வெளிப் பிரதேசத்துக்குத் திரும்புவதையே நான் எப்போதும் விரும்புகிறேன். இது, என் எழுத்துக்கு தூண்டுகோலாக இருக்கும் ஒரு நில இயலும் கூட. இங்கேதான் என்னால் நன்றாக எழுத முடிகிறது.

* முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக… மிகப் பெரிய அளவிலும் அடுத்தடுத்தும் நகரமயமாக்கல் உலகமெங்கும் அரங்கேறி வருவதை நாம் பார்க்கிறோம். இந்தியச் சூழலில், கிராமங்கள் வேகமாக மறைந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து பெரும்பாலான மக்கள் வேலை தேடி இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயம் கணிசமாகக் குறைந்து வருகிறது. இதற்கு எந்தவிதமான தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இது தொடர்பாக நான் பேச முடியும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே நான் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவளாகவே இருப்பதால், அமெரிக்காவிலுமே பல பண்ணைகளும் விளைநிலங்களும் பெரிய நிறுவனங்களால் வளைக்கப்படுவது எனக்குத் தெரியும். மேலும், இது பண்ணை உரிமையாளர்களின் வாழ்க்கையை மிகக் கடினமான காலமாக ஆக்கியிருக்கிறது. மக்கள் நகரங்களுக்கோ அல்லது எண்ணெய் நிறுவனங்களுக்கோ வேலைக்குப் போகிறார்கள். அந்த மக்களுக்கு நன்கு தெரிந்த அல்லது அவர்கள் விரும்புகிற வாழ்வாதாரம் அழிந்து வருவதாக நான் நினைப்பதால் இந்நிலையை நான் விரும்பவில்லை. ஆனால், இதை எப்படிச் சரி செய்ய முடியும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் சிறு பண்ணைகளையும் விளைநிலங்களையும் மட்டும் நேசிப்பதால் தெரியவில்லையோ என்னவோ?

* இப்போது நடந்து கொண்டிருக்கும் ‘சார்லி ஹெப்டோ’வுக்கும் (தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஃபிரெஞ்ச் பத்திரிகை) கருத்துச் சுதந்திரத்துக்குமான பிரச்னையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? படைப்பாளிகளை காயப்படுத்துவதும் கொல்வதும் மோசமானது. ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தங்களுடைய கருத்துகள் மூலமாக இந்தப் படைப்பாளிகள் மற்றவர்கள் மீது சுமத்தும் வன்முறை? மற்றவர்கள் உண்மையென்று கருதுகிற விஷயத்தை, நம்பிக்கையை, விருப்பத்தை மற்றும் அவர்களின் வாழ்க்கைமுறையை புண்படுத்த இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்கே, எப்படி நாம் இந்தக் கோட்டை வரைந்தோம்?

யார் இந்தக் கோட்டை வரைந்தார்கள் என்பதோ அல்லது யார் இந்தக் கோடு இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள் என்பதோ எனக்கு நிச்சயமாகத் தெரியாது. நான் தத்துவமேதை வோல்டேர் (Voltaire) சொன்னதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்… ‘‘நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், அதைச் சொல்வது உங்களுடைய உரிமை என்பதற்கு என் உயிருள்ளவரை பாதுகாப்பளிப்பேன்.’’ அப்படித்தான் நானும் உணர்கிறேன். ஒரு வாசகராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு கருத்தை வெளிப்படுத்துவது எழுத்தாளரின் உரிமை என்பதற்கு எப்போதும் மதிப்பளிக்கிறேன்.

nina 2

* ஆங்கிலத்தில் வெளியாகும் இந்திய எழுத்துகளை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட பிராந்திய மொழிப் படைப்புகள் உங்களுக்குப் படிக்கக் கிடைத்திருக்கிறதா? தமிழ் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளோடு உங்களுக்கு நெருக்கமுள்ளதா?

ஆங்கிலத்தில் எழுதும் பல இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்களின் எழுத்தை நான் நேசிக்கிறேன். வ்யோமிங் பல்கலைக்கழகத்தில் இந்திய இலக்கியத்தையும் கற்பித்து வருகிறேன். மேலும், மொழிபெயர்க்கப்பட்ட பல எழுத்தாளர்களின் படைப்புகளையும் கற்றுக் கொடுக்கிறேன். பிரச்னை என்னவென்றால், மொழிபெயர்க்கப்பட்ட இந்திய எழுத்தாளர்களின் பல புத்தகங்கள் அமெரிக்காவில் கிடைப்பது கடினமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களையும் தாண்டி, இந்தியப் படைப்புகளை படிக்க விரும்பும் ஒரு பெரிய வாசகர் வட்டம் இங்கே நிச்சயமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால், அந்த நூல்களைப் பெற முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக, நான் சென்னையில் இருக்கும் ‘தாரா புக்ஸ்’ஸில் ஒரு வருடம் வேலை பார்த்திருக்கிறேன். அது பல தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. அதே போல, பல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. எனவே, தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சில புத்தகங்களை படித்திருக்கிறேன். இன்னும் படிக்க வேண்டியது நிறைய!

* ஓர் எழுத்தாளர் எழுதுவதோடு, அரசியல் ஆர்வம் உள்ளவராகவும் தன்னை பாதிக்கும் விஷயங்களை வெளியே பேசுபவராகவும் இருக்க வேண்டாமா? மற்றவர்களின் பிரச்னைகளை புறக்கணித்துவிட்டு, இனிமையான சிறிய கதைகளை எழுதுவதில் மட்டும் ஈடுபடுவது நியாயமானதுதானா?

ஒவ்வொரு எழுத்தாளரும் தாங்கள் எதை எழுத வேண்டும் என விரும்புகிறார்களோ அதை எழுத வேண்டும் என எண்ணுகிறேன். நீங்கள் குடும்பக் கதைகளை எழுத விரும்பினால், அதிலிருந்துதான் உங்கள் படைப்பு வரும் என்றால், அதை நீங்கள் எழுத வேண்டும். ஓர் அமைதியான கதைக்குள்ளும் அபாரமான சக்தி உள்ளது. தனிப்பட்ட முறையில் அதை நான் அறிவேன். அரசியல் மற்றும் கடினமான பிரச்னைகள் தொடர்பான படைப்புகளை எழுத நானும் ஆசைப்படுகிறேன். இனப் பிரச்னை மற்றும் தனித்துவமான படைப்பு இரண்டிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. அவை என் படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றன. என் கலைதான் நான் செயல்படும் களம். நான் படைப்புலகில் முன் வரிசையில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த எழுத்துக்கு ஒரு சக்தி உண்டு. உங்கள் வார்த்தைகளும் நீங்கள் சொல்லும் கதையும் ஓர் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால், ஒரு படைப்பை இது போல அல்லாமல் வேறு மாதிரி வடிவமைக்க வேண்டும் என்று சொல்வது சரி என்று நான் நினைக்கவில்லை. மறுபடியும் சொல்கிறேன், ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு ஒரு வித்தியாசமான கதை இருக்கிறது.

* இன்றைய தினத்தில் எல்லாமே உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன… எழுத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. எழுத்தாளர்கள் உலக அளவில், பரந்துபட்ட வாசக கவனம் பெருவதற்காக உலகப் பொதுவான கருக்களை தங்கள் படைப்புகளில் கையாள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

என்னைப் பொறுத்த வரை, இது ஒவ்வொரு எழுத்தாளரையும் பொறுத்த தனிப்பட்ட விஷயம். உலக முழுமைக்கும் ஏற்ற பொதுவான குடும்பம், போர், காதல் பற்றிய கதைகள் ஆகியவை எங்கு வசிப்பவராக இருந்தாலும் நெகிழ வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தனிப்பட்ட முறையில், நான் எழுதும் போது, இரண்டு பேரை என் வாசகர்களாக நினைத்துக் கொள்கிறேன்… என் அம்மா, அப்பா. அவர்கள்தான் எனக்கு சிறந்த வாசகர்கள், பார்வையாளர்கள். ஒரு பெரிய வாசகர் வட்டம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, அவர்களை திருப்திப்படுத்துவதற்காக நான் எழுதினால் நான் முடங்கிப் போய்விடுவேன். என்னால் எழுத முடியாமல் போய்விடும்.

NM045C

* எழுத்தாளர்கள் மார்கெட்டிங் ஏஜென்டாகவும் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுடைய படைப்புகளை சுறுசுறுப்பாக ப்ரொமோட் செய்யும் பலரை பார்க்கவும் முடிகிறது. நூலாசிரியர் தன் படைப்புக்கு வெளியே இப்படி செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? புத்தகம் தொடர்பான மார்க்கெட்டிங்கை, மார்கெட்டிங் குழுவினரிடம் ஒப்படைத்துவிட்டு படைப்புகளைப் படைப்பதில் மட்டும் நாம் கவனம் செலுத்த முடியாதா?

ஆம். இன்றைய காலக் கட்டத்தில் புத்தகங்களை பிரசுரிப்பது என்பது கடினமாகத்தான் இருக்கிறது. பதிப்பகங்கள் வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்படுகின்றன அல்லது பெரிய நிறுவனங்களின் கீழ் செயல்பட ஆரம்பிக்கின்றன. அமெரிக்காவில், நன்கு அறிமுகமான எழுத்தாளராக இல்லாத பட்சத்தில், விளம்பரங்களுக்காகவும் புத்தகங்களை பெரிய அளவில் எடுத்து செல்வதற்காகவும் தனியாக, கணிசமாக பட்ஜெட் ஒதுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. என்னுடைய புத்தகத்துக்கு இணையதளங்களில் நிறைய விமர்சனங்களைப் பெற்றேன்… என் புத்தகத்தை ப்ரொமோட் செய்ய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினேன். புத்தகத்தை சந்தைப்படுத்த அவை முழுமையான அளவில் செயல்பட்டன, புத்தகம் குறித்து செய்தி பரப்பின. இந்த உலகில் ஒரு புத்தகத்தின் இருப்பை உணர்த்த இப்படி அழகான, எளிய வழிகளும் இருக்கின்றன. நூலாசிரியர்கள் எழுதுவதை மட்டும் செய்ய வேண்டும், அதை விளம்பரப்படுத்துபவர்களாக இருக்கக் கூடாது என்பதையே நான் விரும்புகிறேன். அது நடக்கும் என்றுதான் நினைக்கிறேன். என் புத்தகத்துக்காக பல வருடங்களுக்கு நான் எப்படி உழைத்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். என் புத்தகம் இந்த உலகத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே, எழுதுவதில் மிக அதிகமான நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், உண்மைநிலை வேறாக இருக்கிறதே!

* சமூக ஊடக வெளி ஒரு தீவிர அச்சுறுத்தலைக் காட்டுவதாகவோ, எழுத்தாளர்களுக்கு ஒரு சவாலாக இருப்பதாகவோ நீங்கள் நினைக்கிறீர்களா?

கணிசமாக நேரத்தை வீணடிப்பவை என்கிற அளவில் மட்டுமே அவை எனக்கு சவாலாக இருக்கின்றன. தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் போது, என் ஃபேஸ்புக் கணக்கை மூடிவிடுவேன். அதிகக் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதே நேரம், சமூக ஊடகங்கள் – குறிப்பாக ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் ஒரு புதிய சமூகத்தை உருவாக்கியிருக்கின்றன என்றும் நினைக்கிறேன். அற்புதமான எழுத்தாளர்களை, முக்கியமாக இந்தியாவில் இருக்கும் எழுத்தாளர்களை நான் ட்விட்டரில் சந்தித்திருக்கிறேன். நிஜ வாழ்வில் அவர்களுடைய பாதைகளை என்னால் கடந்திருக்கவே முடியாது. இது, தங்களுக்கான ஓர் இடம் இல்லையே என்று நினைக்கும் பெரும்பாலானோருக்கு ‘பண்டோராவின் மாயப் பெட்டி’யைப் (Pandora’s Box) போல திறக்கிறது என்றும் சொல்லலாம்.

* எழுதுவதை சொல்லிக் கொடுக்க முடியுமா? எழுதுவது தொடர்பான படிப்பு நீங்கள் எழுதுவதற்கு உதவியிருக்கிறதா?

பெரும்பாலான எழுத்துகள் உள்ளுணர்வு சார்ந்தவை. சிறந்த எழுத்தாளர்கள் நல்ல வாசகர்கள் என்று நான் எண்ணுகிறேன். எனவே, ஓர் எழுத்தாளருக்கு நான் எதையாவது கற்றுக் கொடுக்கிறேன் என்றால் அது படிக்கச் சொல்வதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவில் பல்கலைக்கழக அளவில் எப்படி எழுதுவது என்பதைத்தான் நான் சொல்லிக் கொடுக்கிறேன்… பாத்திரப் படைப்பு, எந்தப் பார்வையில் சொல்லப்பட வேண்டும் போன்ற படைப்பின் வடிவம் சார்ந்த சில அம்சங்களை சொல்லிக் கொடுக்கலாம் இல்லையா! கூடவே, எழுத்து தொடர்பான பயிற்சிப் பட்டறையை நடத்தினால் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெறலாம். என்னுடைய எழுத்துப் பயிற்சி திட்டம் எனக்கு கொடுத்தது உண்மையிலேயே முக்கியமானது… பல எழுத்தாளர்கள் அடங்கிய ஒரு சமூகம். சிலர் வார்த்தைகளே மிக முக்கியமானவை என்று நினைக்கிறார்கள். ஆனால், திரும்பவும் சொல்கிறேன்… எழுத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நிறைய வாசியுங்கள்.

* தென்னிந்தியாவுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு என்ன… முக்கியமாக சென்னையுடன்?

என் அம்மா சென்னையில் பிறந்து, வளர்ந்தவர். அவர் புரசைவாக்கத்துக்கு அருகே வாழ்ந்தவர். டவுட்டன் கோரியிலும், ராணி மேரி கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் படித்தவர். வ்யோமிங்கில் வளர்ந்த போதெல்லாம் நான் சென்னையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் நெருக்கமான, நன்கு அறிந்த இடமாக அதை உணர்ந்திருக்கிறேன். பின்னாளில், நான் இங்கே வந்த போது, நான் கேள்விப்பட்டதைப் போலவே நிறைய இடங்கள் எனக்கு மிகவும் பழக்கப்பட்டவை போல இருந்தன. சில வருடங்களுக்கு முன் நான் சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். பெசன்ட் நகரில் வாழ்ந்தேன். ‘தாரா புக்ஸ்’ஸில் பணியாற்றினேன்… இந்த நகரை நேசிக்க ஆரம்பித்தேன். என்னைப் பொறுத்தவரை சென்னை எனக்கு இரண்டாவது வீடு. இந்நகரத்தின் ஆன்மாவை விரும்புகிறேன். வ்யோமிங்கின் அமைதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனால், சென்னையில் ஒவ்வொன்றும் கிளர்ச்சியடையச் செய்பவை… உயிர்ப்போடு இருப்பவை.

– பாலு சத்யா

NM055