நினைவோ ஒரு பறவை…
விழியும் மொழியும் அறியா வண்ணம்
லகுவாய் இதயம் நுழைந்து
எந்த நொடியில் என்னை மறந்தேன் ?
எந்த வினாடியில் நீ என்னுள் நுழைந்தாய் ?
வீசும் சாரலில் நடுக்கத்துடன் உன் தோளில் சாய
நாளையை மறந்து இந்த வினாடிகள் நம் சொந்தமாயின …
உயிர்களின் படைப்பிலே அற்புதப் படைப்பாக அமைந்தது மானுடப் பிறவி. வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பகுத்தறியும் திறன், மனித இனத்துக்கு மட்டுமேயான ஒரு சிறப்பு! அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படுத்தும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே! மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான்.
மறதிநோய் (Dementia – என்பது ‘சிதைவடையும் மனம்’ என்ற பொருள் கொண்டதாகும்) ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். இது நிலைத்ததாகவோ, அதாவது மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது வளரக்கூடியதாகவோ இருக்கலாம். அல்லது, உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம்.
ஒன்று, பத்து, நூறு என்ற வரிசையில், ஒன்று என்ற எண்ணுக்குப் பிறகு 18 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு ‘குயின்டிலியன்’ என்று பெயர். அதுபோல் இரண்டு குயிண்டிலியன் அளவுக்கான செய்திகளை நமது மூளையில் பதிவு செய்து வைக்க முடியும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பாகும்.
‘நினைவாற்றல்’ அல்லது ‘ஞாபக சக்தி’ எனப்படுவது தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்த இயலும்.
மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப்படுத்தலுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மனதை எந்தளவுக்கு ஒருமுகப்படுத்தி ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு அது மனதிலே பதிகின்றது. வேறு விதமாக கூறுவதாயின் நாம் ஒன்றுக்கு மேலான வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும்போது. கவனம் சிதறடிக்கப்பெற்று, அவை மனதிலே சிதறல்களாக பதிவாகின்றன. அதனால் நாம் அவற்றை தேவைப்படும் போது உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடிவதில்லை.
நினைவாற்றலின் வகைகள்
- குறுகிய கால நினைவாற்றல்
நமது மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்துக்கு மட்டுமே அந்தத் தகவல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்தத் தகவல்கள் மறக்கப்பட்டுவிடுகின்றன. இது ‘குறுகிய கால நினைவாற்றல்’ எனப்படும்.
- நீண்ட கால நினைவாற்றல்
மனதை மிகவும் கவர்ந்தவை, அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை, நாம் செய்யும் தொழிலுக்கு தேவையானவை மூளையில் நீண்ட கால நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன.
மூளை பல செய்திகளையும் தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது. அவற்றுடன் புதிய தகவல்களையும் சேர்த்துப் பாதுகாக்கிறது. பல ஆண்டுகளாக அந்தத் தகவல்கள் வெளிக் கொணரப்படாமல் போனால் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன.
நீண்ட கால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலவேளை சிரமப்படுவது அதனாலேயாகும். நீண்ட காலத்தின் பின்னர் நாம் சந்திக்கும் நபரின் அல்லது சிறுவயது நண்பரின் பெயர் ஞாபகத்துக்கு வராமல் இருப்பதை (ஆனால் அவரின் பெயர் நுனி நாக்கில் இருப்பது) இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
ஆரம்பநிலை அறிகுறிகள்
- மொழித் திறனில் தடுமாற்றம்
- ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்
- நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை
- எப்போதும் செல்லும் பாதையை மறப்பது
- முடிவு எடுப்பதில் சிரமம்
- ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை
- சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்
- பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்.
இடைநிலை அறிகுறிகள்
நோய் தீவிரமடையும்போது பிரச்னைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்.
- மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்
- துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்
- தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்
- கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது
- குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்
- தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்.
இறுதிநிலை அறிகுறிகள்
இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும் உடல்நலக் குறைவும் காணப்படும்.
- தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்
- உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்
- குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்
- தானாக நடக்க இயலாது
- தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது
- புரிந்துகொண்டு செயல்பட முடியாது
- சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது
- தான் யார் என்பதே மறந்துவிடும்.
நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு தேவையான மனோநிலை
01.தன்னம்பிக்கை
நினைவாற்றல் தொடர்பில் நமக்கு தன்னம்பிக்கை அவசியமாகும். நினைவாற்றல் என்பது மூளையின் திறமையாகும். இதனை பயிற்சியாலும் முயற்சியாலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை அவசியமாகும்.
02.ஆர்வம்
ஒரு விஷயம் தொடர்பான ஆர்வமும் அவ்விஷயம் தொடர்பில் ஞாபக சக்தி ஏற்படக் காரணமாக அமையும்.
03.செயல் ஊக்கம்
தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விஷயங்கள் நன்றாக பதியும்.
04.விழிப்புணர்வு
மனம் விழிப்பு நிலையில் இருந்தால் நமது கவனமும் ஒருமைப்பாடும் மிகச் சிறந்ததாக இருக்கும். இதற்கு யோகாசனம்,தியானம், சமய வழிபாடுகள் துணை புரியும்.
05.புரிந்து கொள்ளல்
புரிந்து கொண்ட விசயங்கள் மனதில் பதியும்.
- உடல் ஆரோக்கியம்
நினைவாற்றலை அதிகரிக்க செய்ய வேண்டியவை
- மனதை ஒரு நிலைப்படுத்துதல்
யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல் போன்றவை மூலமாக ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குடியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலைப் பெற முடியும்.
- உடற்பயிற்சி
- மூளைக்கு பயிற்சி வழங்குதல்
குறுக்கெழுத்துல் போட்டி, எண்புதிர், அயல் மொழிகளை கற்றல் போன்றன சில உதாரணங்களாகும்.
- போஷாக்கான உணவு (குறிப்பாக காய்கறிகள், பழவகைகள்)
- போதியளவு உறக்கமும் ஓய்வும்
- முதிய வயதிலும் ஏதாவது பணிகளை செய்தல்
வயதாக ஆக நினைவாற்றல் குறைவடையும். பணியில் ஈடுபட்டிருப்பவர் ஓய்வு பெற்ற பின் விரைவில் நோய்களுக்கு ஆளாவது இயற்கை. தொடர்ந்து ஏதாவதொரு பணியில் ஈடுபட்டிருந்தால் மூளைக்கு வேலை கிடைக்கும். நினைவாற்றலோடு ஆரோக்கியமும் மேன்மை அடையும்.
- உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துதல் வேண்டும்.
- மருத்துவ ரீதியில் துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பது ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
- அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வருதல் வேண்டும்.
10.தூதுவளை கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்துக்கு ஒரு தடவை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும்.
- பசுமையான வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் அதிகரிக்கும்.
சாதாரணமாக விஞ்ஞானிகள் புலன் ஞாபக சக்தியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.
- நினைவுகள் ஒரு சில கணங்களுக்கு நிற்கும்.
- புலன் ஞாபகம் (Sensory Memory). ஏறத்தாழ அரை மணித்தியாலம் மட்டுமே நிற்கும் குறுகிய கால ஞாபகம் (Short Term Memory).
- நீண்ட காலமாக நிற்கும் நீண்ட கால ஞாபகம் (Long Term Memory) என மூன்றாகப் பிரிக்கிறார்கள்.
உண்மையில் இந்த மூன்று ஞாபகங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மனித உடலில் சகல புலன்களில் இருந்தும் வருகின்ற நரம்பு கணத்தாக்கங்கள் மில்லி செக்கண்டில் நினைவில் நிற்கும். அந்த நினைவில் சிறிது ஊன்றிக் கவனம் செலுத்தும் போது அவை ஏறத்தாழ 30 செக்கண்ட்ஸ் வரை நிலைத்து நிற்கும். இந்த நேரத்துக்குள் மீண்டும் ஒருமுறை அது பற்றி நினைத்தால் அது நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கும் ஞாபகத்துக்குள் சென்று பதியும்.
ஓரு நூலகத்தில் பலவிதமான புத்தகங்கள் உள்ளன. ஆனால், அந்தப்புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்கப்படவில்லை. இதனால் நமக்குத் வேண்டிய புத்தகத்தை உடனே கண்டுபிடிக்க இயலாது. தேவையான புத்தகத்தை எளிதான முறையில்கண்டறிவதற்கு ‘புத்தகப்பட்டியல் அடங்கிய குறிப்பேடும் (Catalogue) அவசியம் தேவை.’
இந்த நூலகம் போலவே நமது மூளையும் ஒரு ‘ஒழுங்கில்லாத நூலகம்’ (Dis-Organised) ஆகும். தேவையான புத்தகங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் குறிப்பேடு போல, மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் நினைவில் கொள்ள நமது மூளைக்கு நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட நேரத்தில் நினைவில் கொண்டுவரும் ‘நினைவாற்றல் கலையை’ வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதற்கு பலவழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘தொடர்பு ஏற்படுத்துதல் முறை’ (ASSOCIATION) ஆகும். பொதுவாக நமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்புப்படுத்திப் பார்க்கின்றபோதுதான் நாம் கற்ற பாடம் நினைவில் நிற்கிறது. அறிவைப் பெருக்குவதற்கு ‘தொடர்புப்படுத்துதல்’ மிகவும் உறுதுணையாக அமையும்.
மறதியும் நல்லதே! வஞ்சம், பொறாமை, கடுஞ் சொல் பேசுதல், துரோகம், பொய் இவற்றை அருகில் நெருங்க விடாமல் மறப்பதும் நல்லதே.
மறதியின் உண்மை பொய்
அறியும் உரைகல் இல்லாததால் –
மறதி மனிதக் காட்டில் மழைதான்.
சில நேரங்களில் பல துரோகங்களை மன்னிக்க வைப்பதும் மறதிதான்.
தீயவற்றை மறப்போம். நல்லதையே நினைப்போம்.
விழியும் மொழியும் அறியா வண்ணம்
லகுவாய் இதயம் நுழைந்து
எந்த நொடியில் என்னை மறந்தேன் ?
எந்த வினாடியில் நீ என்னுள் நுழைந்தாய் ?
வீசும் சாரலில் நடுக்கத்துடன் உன் தோளில் சாய
நாளையை மறந்து இந்த வினாடிகள் நம் சொந்தமாயின.
– ப்ரியா கங்காதரன்
***
ப்ரியாவின் பிற பதிவுகள்
Image courtesy: