தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க…

இந்தியாவின் பணக்காரப் பெண்மணிகள்!

Image

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள்..! சில நாட்களுக்கு முன் பட்டியலை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் பிசினஸ் பத்திரிகை ‘ஃபோர்ப்ஸ்’. 100 பேரில் 5 பேர் பெண்கள். அவர்களில் முதல் 50 இடங்களுக்குள் 2 பெண்களுக்கு மட்டுமே இடம்.  ‘ஃபோர்ப்ஸ்’ பட்டியலில் 14வது இடத்தைப் பிடித்திருப்பவர் ஜிந்தால் குரூப்பைச் சேர்ந்த சாவித்திரி ஜிந்தால். 2005ல் கணவர் ஓ.பி.ஜிந்தால் இறந்த பிறகு ஜிந்தால் குரூப்பின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர். 2012ல் இதே ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 84வது இடத்தைப் பிடித்திருந்தார். இப்போது ‘இந்தியாவின் முதல் பணக்காரப் பெண்மணி’ என்கிற புகழையும் தட்டிச் சென்றிருக்கிறார். சாவித்திரிக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருப்பவர் இந்து ஜெயின். ‘பென்னெட் கோல்மென் அண்ட் கோ’ நிறுவனத்தின் தலைவர். பட்டியலில் 29வது இடம். மூன்றாவது, ‘தெர்மெக்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தை நடத்தி வரும் அனு அகா. பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 86. ‘பயோகான்’ நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான கிரண் மஜூம்தார் ஷா 4வது இடத்தில்… ‘ஃபோர்ப்ஸ்’ வரிசைப்படி 96. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நிறுவனத்தின் ஷோபனா பார்த்தியாவுக்கு 5ம் இடம். ‘ஹெச்.டி.மீடியா’வின் தலைவர், ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தினசரியின் ஆங்கிலம் மற்றும் இந்திப் பதிப்புகளுக்கு பதிப்பாளர் இவர்.

அசத்தல் தீர்ப்பு!

Image

பெற்றவர்களை, பிள்ளைகள் கைவிட்டால் என்ன செய்வது? ‘ஏதாவது ஆற்றிலோ, குளத்திலோ விழுந்து உயிரைவிட வேண்டியதுதான்’… அது அந்தக் காலம். கோர்ட் படிகளில் ஏறி நீதியைப் பெறுவது இந்தக் காலம். அதற்கு சமீபத்திய உதாரணம், லில்லி என்கிற ரோஸ்மேரி ஏஞ்சலினா. முதுமை… உடல்நலக் குறைவு. அவருடைய மகனோ வயதான அம்மாவையும் அப்பாவையும் கண்டு கொள்ளாதவராக இருந்தார். சரியான உணவு கொடுப்பதில்லை. மருத்துவம் பார்ப்பதில்லை. கொடுமைப்படுத்துவதுகூட நடந்தது. கணவர் இறந்த பிறகு லில்லியை வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க மறுத்தார். வேறு வழியில்லாமல் நீதியின் உதவியை நாடினார் லில்லி. சென்னை குடும்பநல நீதிமன்றம், லில்லியின் குடும்பச் செலவுக்கு 4 ஆயிரமும், மருத்துவச் செலவுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. ‘என் அம்மாவுக்கு ஃபேமிலி பென்ஷன் வருகிறது. பேங்க்கில் ஒரு லட்ச ரூபாய் வரை பணம் சேமித்து வைத்திருக்கிறார்’ என்றெல்லாம் வாதாடிப் பார்த்தார் மகன். ‘இந்தக் காலத்தில் இதெல்லாம் அற்பமான தொகை. 5 ஆயிரம் ரூபாய் ரோஸ்மேரி ஏஞ்சலினாவுக்குக் கொடுத்தே ஆகவேண்-டும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். 

பிசினஸ் ராணி… நம்பர் ஒன்!

Image

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக இருப்பவர் சந்தா கோச்சார். அவரை இந்த ஆண்டும் உயர்த்திப் பிடித்திருக்கிறது ‘ஃபார்ச்சூன்’ பத்திரிகை. ‘இந்தியாவின் சக்தி வாய்ந்த பிசினஸ் பெண்மணிகளில் நம்பர் ஒன்’ பட்டத்தை அளித்து! தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சந்தா கோச்சார். ‘ஃபார்ச்சூன்’ பட்டியலிட்ட சக்தி வாய்ந்த 50 பிசினஸ் பெண்மணிகளில் ஆக்ஸிஸ் பேங்கின் ஷிகா ஷர்மா இரண்டாம் இடத்திலும், கேப்ஜெமினி இந்தியா நிறுவனத்தை நடத்தும் அருணா ஜெயந்தி மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். ‘இந்தியாவின் பிசினஸ் ராஜ்ஜியம் இப்போது பெண்கள் கையில்…’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறது ‘ஃபார்ச்சூன்’. தூள் கௌப்புங்க!

(இதன் இன்னொரு பக்கம் பற்றிய ஆய்வு இந்த மாத ‘குங்குமம் தோழி’ (நவம்பர் 16-30) இதழில்…)

முதல் பெண்கள் வங்கி!

Image

‘பாரதீய மஹிளா பேங்க்’. இந்தியாவில் பெண்களுக்காக செயல்பட இருக்கும் முதல் வங்கி. வரும் நவம்பர் 19ம் தேதி தொடங்க இருக்கிறது. மும்பையில் நடக்கும் தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதே நாளில், சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், மும்பை, லக்னோ, குவாஹத்தி ஆகிய நகரங்களில் வங்கியின் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட இருக்கின்றன. சென்னையில் ‘பாரதிய மஹிளா வங்கி’யின் கிளை அண்ணாசாலையில் திறக்கப்பட உள்ளது. டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்த வங்கி, டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கிளைகளைத் தொடங்க இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அங்கே கிளைகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. வரும் மார்ச் மாதத்துக்குள் நாடு முழுக்க 25 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு செயல்படப் போகின்றன!

அடடா அரேபியா!

Image

‘அரேபியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கு மிக சிரமமான நாடு எகிப்து’. ஆய்வு ஒன்றை நடத்தி, சமீபத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறது பிரபல ‘தாம்ஸன் ரியூட்டர்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பு. பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் பலாத்காரம் போன்றவை அரேபியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட எகிப்தில்தான் அதிகம் என்றும் இந்த அமைப்பு ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 22 நாடுகளில் கடை நிலையில் இருக்கிறது எகிப்து. அரேபியாவில், ‘காமரோஸ்’ நாடு இந்த விஷயத்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது. ஆய்வில், பெண்களை நடத்தும் விதத்தில் முதல் இடம் காமரோஸுக்கு. ‘சம உரிமை, வீட்டுக்குளேயே நல்லவிதமாக நடத்தப்படுதல், அரசியலிலும் பொருளாதாரத்திலும் பங்கு இவையெல்லாம் பெண்களுக்குக் கிடைத்தால்தான் அரேபியாவில் இந்த நிலை மாறும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் எகிப்தின் பிரபல பெண் பத்திரிகையாளர் மோனா எல்டா ஹாவி (Mona Eltahawy).

கருத்தரிப்புக்கு நீண்ட காலம்!

Image

‘ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுறுவதற்கு நீண்ட காலம் ஆகும்’ என்று சொல்லியிருக்கிறது ஒரு புதிய ஆய்வு. டென்மார்க்கை சேர்ந்த பிஸ்பெப்ஜெர்க் பல்கலைக்கழக மருத்துவமனையைச் (Bispebjerg University Hospital) சேர்ந்த குழு இந்த ஆய்வை நடத்தியது. 41 வயதுக்குட்பட்ட 15,000 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆஸ்துமா பாதிப்பு, கருத்தரிப்பு ஏற்பட்ட நேரம் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. கூடவே, ஆஸ்துமா பாதிப்பு இல்லாதவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டார்கள். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைகூட கணக்கெடுக்கப்பட்டது. சுருக்கமாக ஆய்வு முடிவில் ஆஸ்துமா நோய் குழந்தை கருத்தரிப்பு முறைக்கு எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறது இந்த ஆய்வறிக்கை.

தொகுப்பு: பாலு சத்யா