இந்தியர்களுக்கு பலவீனமடைந்து வருகிறது நுரையீரல்! – ஒரு எச்சரிக்கை

Image

தொழிற்சாலைகளைக் கடந்து போகிறோம். ‘யப்பா… என்னா புகை?என மனதுக்குள் முணுமுணுக்கிறோம்.

தெருவோரத்தில் யாரோ குப்பைகளை எரிக்கிறார்கள். கூடவே பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து எரிகின்றன. ‘இவங்கள்லாம் திருந்தவே மாட்டாங்களா?என நினைத்தபடி கடந்து போகிறோம்.

இவை இருக்கட்டும்.

நகரத்தில் வாகன நெரிசல். ஆட்டோ, லாரி, பேருந்துகளில் இருந்து கிளம்பும் புகை. ‘இதுக்கு விடிவுகாலமே கிடையாதா?என்று சலித்துக் கொள்கிறோம். அதோடு முடிந்தது. இப்படி நீங்கள் நினைத்தால் தவறு. வாகனங்கள் வெளியிடும் புகையை நாம் இனிமேல் அப்படி ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.  ‘உடனே இதில் அக்கறை காட்டி, இதற்கு சரியான தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்என்கிறார்கள் மருத்துவர்கள். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று, அதை நமக்கு எச்சரிக்கையாகவே விடுத்திருக்கிறது. ‘ஐரோப்பியர்களைவிட, 30 சதவிகிதம் இந்தியர்களின் நுரையீரல் பலவீனமடைந்திருக்கிறதுஎன்று அபாய சங்கை ஊதியிருக்கிறது அந்த ஆய்வறிக்கை.

வாகனப் புகையால், ஆபத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஏற்கனவே, இதயநோய், புற்றுநோய் என பல்வேறு காரணங்களால் படையெடுக்கும் நோய்களுடன் நுரையீரல் பாதிப்பும் இப்போது இந்தியர்களுக்கு சேர்ந்திருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது காற்று மாசு. கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிகள் காற்றில் கலப்பதால் காற்றில் மாசுபாடு உருவாகிறது. மாசு நிறைந்த காற்றால் பல நோய்களை சுமந்து கொண்டு வாழ வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஜெய்ப்பூர், பூனா, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வைச் செய்தது, பூனாவைச் சேர்ந்த ‘செஸ்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷன்(Chest Research Foundation). புகை பிடிக்கும் பழக்கமில்லாத, ஆரோக்கியமான 10 ஆயிரம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். காற்றை சுவாசிக்க வைத்து, அதற்குப் பிறகு அவர்களின் உடல்நலனை சோதித்தபோது அவர்களின் நுரையீரலில் பிரச்னை இருப்பது தெரிய வந்திருக்கிறது. ‘‘ஆரோக்கியமாக இருந்த அவர்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதற்குக் காரணம், அவர்கள் சுவாசித்த காற்றுதான். வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் நுரையீரல் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனாலும், மொத்தத்தில் ஐரோப்பியர்களை விட, 30 சதவிகிதம் இந்தியர்கள் பலவீனமான நுரையீரலுடன் இருக்கிறார்கள். முக்கியக் காரணம் அசுத்தமான சூழல், காற்று’’ என்று சொல்லியிருக்கிறார் டாக்டர். சந்தீப் சால்வி. இவர், ‘செஸ்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் இயக்குநர், இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தியவர்.  

இதேபோல் பல சர்வதேச ஆய்வு முடிவுகளும் நமக்கு பல அச்சுறுத்தல்களை அள்ளித் தந்துவிட்டுப் போயிருக்கின்றன. உலக அளவில், இந்தியா உள்பட 17 நாடுகளில் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்விலும் இந்தியர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் என்பது  உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

Image

 

‘‘இன்றைக்கு வாகனப் பெருக்கம் காற்றை மாசுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில், 1997ல் 3 கோடியே 72 லட்சமாக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை 2012ல் 10 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 1951ல் வெறும் 3 லட்சம் வாகனங்கள்தான் இருந்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான கார்களும் பேருந்துகளும் எரிவாயுவால் (CNG) இயக்கப்படுகின்றன. இவை வெளியிடும் வாயு, மனிதனின் நுரையீரலுக்குள் உடனடியாக, நேரடியாகச் செல்கிறது. அதனால் நுரையீரலுக்கு மட்டுமின்றி உடலின் பல உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வாகனப் பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்தால்தான் இதற்குத் தீர்வு கிடைக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார் ஆய்வை நடத்தியிருக்கும் சந்தீப் சால்வி.  

என்ன செய்யப் போகிறோம்? எப்படிச் செய்யப் போகிறோம்?

– எஸ்.பி.வளர்மதி