வேலையா, குழந்தையா? – அல்லாடும் பணிபுரியும் பெண்கள்!

Image

உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1-7) 

குடும்ப நிர்வாகிகளுக்கு வீட்டு வேலை என்பது பெரிய சுமை. அதே நேரம், பணிபுரியும் பெண்களுக்கு இரட்டைச் சுமை. வீட்டிலும் வேலை செய்து, அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதில் குழந்தை பிறந்துவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம். தாய்ப்பாலின் அருமையை உணர்ந்திருந்தாலும், பணிபுரியும் பெண்களால் குழந்தைக்கு பால் ஊட்டுவது பல நேரங்களில் இயலாத காரியமாகவே ஆகிவிடுகிறது.

அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் சலுகைகள் உள்ளன. ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரையின்படி ‘கர்ப்பகால விடுமுறையாக 6 மாதங்கள் எடுத்துக் கொள்ளலாம். குழந்தையை கவனித்துக் கொள்ள 2 வருடங்கள் வரைகூட விடுமுறையை நீட்டிக்கலாம்’. வருடத்துக்கு மூன்று முறை குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக குறைந்தது 15 நாள்கள் வரை, குழந்தையின் வயது 18ஐ நெருங்கும் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் என்ன செய்வார்கள்? ஒன்று வேலையை துறக்க வேண்டும். அல்லது சம்பளத்தை இழக்க வேண்டும். பல தனியார் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் இணக்கமாக இருப்பதில்லை.

சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அந்தப் பெண். கை நிறைய சம்பளம். பிரசவத்துக்காக 3 மாதங்கள் விடுமுறை எடுத்தார். ஆனால், அந்த விடுமுறை நாள்கள் அவருக்குப் போதுமானதாக இல்லை. குழந்தைக்குப் பாலூட்ட வேண்டிய கட்டாயம். எனவே, நிறுவனத்துக்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்துக் குடியேறினார்.

ஒருநாள் அவருடைய மேலாளர் அவரை அழைத்தார். ‘‘ரெண்டு மணி நேரம், மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவை சீட்ல இல்லாமப் போயிடுறீங்களே… எங்கே போறீங்க?’’

‘‘வீட்ல பச்சைக் குழந்தை இருக்கு சார். பக்கத்துலதான் வீடு. அதான் ஒரு அஞ்சு நிமிஷம் ஓடிப் போய் பால் குடுத்துட்டு வந்துடுறேன்’’.

‘‘இனிமே வேலை நேரத்துல வெளியே போகக் கூடாது. இது மத்தவங்களுக்கும் வழிகாட்டுற மாதிரி ஆயிடும்.’’

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? வேலையை விட்டுவிட்டார். இவர் மட்டுமல்ல, இது போலப் பல பெண்கள், குழந்தையை கவனித்துக் கொள்ளவும் தாய்ப்பால் கொடுக்கவும் வேலையை விட்டுவிடுகிறார்கள். சில நிறுவனங்களில் பிரசவகால விடுமுறை 3 மாதங்கள். ஆனால் அது தாய்மார்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. மேற்கொண்டு 2 மாதங்களோ, 3 மாதங்களோ விடுமுறை எடுத்தால் அந்த விடுமுறை நாட்களில் சம்பளம் கிடைக்காது. வெகு சில நிறுவனங்களே குழந்தைகள் நலத்தில் அக்கறை காட்டுகின்றன. அலுவலகத்திலேயே குழந்தைகளளைப் பராமரிக்க தனி இடங்களை (Creche) அமைத்திருக்கின்றன.

Image

பெங்களூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் அவர். அவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. இருந்தாலும், கருவுறுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் பிரசவத்துக்குப் போதுமான அளவுக்கு விடுமுறை தராததே காரணம். மேலும், நான்கைந்து வருடங்கள் ஆன பிறகும் அதே நிலைதான். இப்போது அவரால் வேலையை விட முடியாத, ஒருநாள்கூட விடுமுறை எடுக்க முடியாத நிலைமை. சில கடன்களை அவர் அடைக்க வேண்டி இருந்தது. அதற்கு அவர் தன் சம்பளத்தைத்தான் நம்பியிருந்தார்.

பணிபுரியும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதற்காகவே டாக்டர்கள் சொல்லும் சில யோசனைகள் உண்டு. ‘பம்பிங் அண்ட் மில்க் ஸ்டோரேஜ்’ (Pumping and milk storage) எனப்படும் ஒருமுறை. இந்த வகையில் தாய்ப்பாலை எடுத்து 6 மணி நேரம் வரை பாதுகாத்துப் பயன்படுத்தலாம். ஆனால், போகும் இடங்களுக்கெல்லாம் கையோடு அதற்கான பம்பையும் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இது சாத்தியமல்ல.

பணிபுரியும் பெண்கள், தாய்ப்பால் கொடுப்பதில் இருக்கும் பிரச்னைகளை நிறுவனங்கள் மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். உரிய நேரத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க போதிய வசதிகளை நிறுவன வளாகத்துக்குள் செய்து தர வேண்டும். சில நாடுகளில் கர்ப்ப கால விடுமுறையாக, ஒரு வருடம் வரை தருகிறார்கள். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், கருணை அடிப்படையில் இந்த விடுமுறையை நீட்டிக்கலாம். புதிதாக இந்த உலகத்துக்குள் அடி எடுத்து வத்திருக்கும் சிசுவுக்கு தாய்ப்பால் மிக அவசியம். இதைப் புரிந்துகொண்டு பணிபுரியும் பெண்களுக்கு உதவ நிறுவனங்களும் முன் வரவேண்டும் என்பதே நம் ஆதங்கம்.

– ஆனந்த பாரதி

அமுதம் – 2