திரைவானின் நட்சத்திரங்கள் – 15

 marilyn_monroe

2

கதாநாயகி… நம்பர் ஒன்!

‘தனிமையில் இருக்கும் போது என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன்’. –மர்லின் மன்றோ.

‘அனாதை இல்லம்’ கற்றுத் தரும் பாடங்கள் அனேகம். வலி நிறைந்த அனுபவப் பாடங்கள் அவை. தனிமை, கழிவிரக்கம், துயரம், துரோகம், ஏமாற்றம், எதிரிகள், நண்பர்கள்… இப்படி ‘லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்ல’த்தில் நோர்மா ஜீனுக்கு என்னென்னவோ கிடைத்தன. கூடவே ஊக்கத் தொகையும் கிடைத்தது! ஊக்கத் தொகை என்ன பெரிய ஊக்கத் தொகை! மாதத்துக்கு ஒரு நிக்கல் (அமெரிக்க பணத்தில் ஐந்து சென்ட்). அதுவும் சும்மா கிடைத்துவிடவில்லை. சமையலறை இருட்டிலும் வெப்பத்திலும் வியர்க்க விறுவிறுக்க நின்று உதவி செய்கிறேன் என்கிற பெயரில் வேலை பார்த்ததற்குக் கிடைத்த சன்மானம். அந்தப் பணத்திலும் ஒரு சிறு தொகையை வாரா வாரம் சர்ச்சுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது அந்த விடுதியின் விதிகளில் ஒன்றாக இருந்தது.

அங்கிருந்து விடுதலை கிடைக்காதா என ஏங்க ஆரம்பித்தாள் அந்தக் குழந்தை. அவளை அங்கிருந்து அழைத்துச் செல்லவும் வளர்க்கவும் பலர் ஆசைப்பட்டார்கள். பார்த்ததுமே யாருக்கும் பிடித்துப் போகும் ‘பளிச்’ குழந்தையல்லவா நோர்மா?! ஆனால், அது மட்டும் நடக்கவில்லை. தடையாக நின்றவர் அம்மா கிளாடிஸ். எப்பேர்பட்ட நல்ல மனிதர்கள் வந்து கேட்டாலும் நோர்மாவை அவர்களிடம் கொடுக்கத் தயங்கினார், உறுதியாக மறுத்தார். சில நேரங்களில் வந்தவர்களை திட்டி அனுப்பினார். ஒருநாள் கிரேஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்லத்துக்கு வந்தார். பரவசத்தில் துள்ளிக் குதித்தாள் நோர்மா. அன்றைக்கு கிரேஸ் வெறுமனே நோர்மாவைப் பார்க்க வரவில்லை. கையோடு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். கிரேஸின் கணவர் எர்வின் சில்லிமேன் ‘டாக்’ காட்டார்டின் மூத்த மனைவிக்கு ஒரு மகள் இருந்தாள். கிட்டத்தட்ட நோர்மாவின் வயது. அவளுக்குத் துணையாக இருக்கும்… நோர்மாவுக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது கிரேஸின் எண்ணம். ஆனால், நடந்ததோ வேறு.

கிரேஸும் காட்டார்டும்

கிரேஸும் காட்டார்டும்

அந்தச் சின்னஞ்சிறு குழந்தையை பாலியல் வடிகாலாகப் பயன்படுத்தப் பார்த்தார் ‘டாக்’. ஒருநாள் அது போன்ற ஒரு காட்சியை கண்ணெதிரே பார்த்து அதிர்ந்து போனார் கிரேஸ். உடனடியாக நோர்மாவை கலிஃபோர்னியாவில் இருக்கும் தன் பெரிய அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் பெயர் ஆலிவ் புரூனிங்ஸ். அத்தை அங்கே தனியாக இல்லை… தன் மகன்களுடன் இருந்தார். ஆக, பிரச்னைகள் தொடர்ந்தன. கலிஃபோர்னியா, காம்ப்டனில் (Compton) இருந்த ஆலிவ் புரூனிங்ஸ் வீட்டில் கொஞ்ச நாட்கள் கூட நிம்மதியாக இருக்கவில்லை நோர்மா. அத்தையின் மகன்களில் ஒருவன் ஒருநாள் கண்மூடித்தனமாக தாக்கியதில் சுருண்டு போனாள்.

அம்மாவும் சரியில்லை… போகிற இடங்களில் இருக்கும் ஆண்களும் சரியில்லை… தன் மேல் காமப் பார்வை படிவதை அறிந்தும் வெளியில் சொல்ல முடியாத வேதனை அந்த சிறு பூவுக்கு. இவையெல்லாம் பின்னாளில் மர்லின் மன்றோ அனுபவித்த மனப் பிரச்னைகளுக்கும் மன அழுத்தத்துக்கும் தூக்கமில்லாமல் தவித்த இரவுகளுக்கும் முக்கியமான காரணங்கள். மைதானத்தில் வீரர்களின் கால்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கால் பந்து போல அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட நோர்மா, 1938களின் தொடக்கத்தில் மற்றொரு அத்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.

அங்கே நோர்மா செல்வதற்கு ஏற்பாடு செய்ததும் கிரேஸ்தான். அவர் பெயர் அனா லோயர் (Ana Lower). லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்த வேன் நய்ஸ் (Van Nuys) என்கிற இடத்தில் வாழ்ந்து வந்தார். திருமணம் ஆவதற்கு முன்பாக கிரேஸின் வீட்டில் எப்படிப்பட்ட நிம்மதி கிடைத்ததோ, அதே நிம்மதியை அத்தை அனா வீட்டிலும் உணர்ந்தாள் நோர்மா. marilyn_monroe 1‘‘என் இளம் பருவத்தில் நான் வசித்த வெகு சில நல்ல இடங்களில் அனா அத்தையின் வீடும் ஒன்று’’ என்று பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார் மர்லின் மன்றோ. ஆனால், அங்கேயும் வெகுகாலம் நோர்மாவால் நீடித்திருக்க முடியவில்லை. காரணம், அனா வயதானவர். முதுமையோடு சேர்ந்து பல உடல் உபாதைகள் அவரை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தன. நாளுக்கு நாள் அனாவின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.

1942… அனா அத்தையின் வீட்டில் மேலும் தங்கியிருக்க முடியாமல் கிரேஸின் வீட்டுக்கே திரும்பினாள் நோர்மா. அந்த முதிய பெண்மணி, அனா அத்தையால், நோர்மாவுக்குக் கண்கலங்க விடை கொடுக்க மட்டுமே முடிந்தது. கிரேஸின் வீட்டில் ‘டாக்’ இருப்பார் என்று நோர்மாவுக்குத் தெரியும். ஆனால், ஆதரவற்ற அந்தப் பெண் குழந்தையால் வேறு எங்கே செல்ல முடியும்? அந்த நாட்களில் நோர்மாவின் மனதுக்குள் ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. ‘இனிமேலும் யாரையும் அண்டி வாழக் கூடாது. தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’. அனாவின் வீட்டிலிருந்து வெளியே வந்த போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது.

வேன் நய்ஸில் உயர்நிலைப் பள்ளியில் படித்த போது நோர்மாவுக்கு ஓர் இளைஞன் அறிமுகமாகியிருந்தான். அவன் அனாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவன். பெயர் ஜேம்ஸ் ‘ஜிம்’ டோரத்தி (James ‘Jim’ Dougherty). அன்புக்கும் பரிவுக்கும் ஏங்கும் நிலையில் இருந்த நோர்மாவுக்கு, ஜிம் அவளைப் பார்த்து உதிர்க்கும் புன்னகை ஒன்றே போதுமானதாக இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் பேசினார்கள். பூமியில் உள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் பேசினார்கள். மனிதர்கள், மலைகள், ரோஜா, குருவி, அடுத்த தெருவில் இருந்த வெள்ளைச் சடை நாய்… ஒறையும் விடாமல் பேசித் தீர்த்தார்கள். தனிமையில் இருந்தபோது மனசுக்குள்ளேயே ஒருவர் மற்றவரிடம் பேசிக் கொண்டார்கள். ஜிம்மின் மேல் நோர்மாவுக்கு ஏற்பட்ட ஈர்ப்பு மெல்ல மெல்லக் காதலாக மாறியது. அனாவின் வீட்டை விட்டுப் போகும் போது நோர்மாவின் மனது முழுக்க ஜிம் நிறைந்து போயிருந்தான். ஆனாலும், கிரேஸின் வீட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழி நோர்மாவுக்கு இருக்கவில்லை.

சில மாதங்கள் கழிந்தன. மேற்கு வர்ஜீனியாவில் ‘டாக்’ காட்டார்டுக்கு புதிய வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம்… எதிர்காலத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் வேலை. கிரேஸும் காட்டார்டும் இடம் பெயர முடிவு செய்தார்கள். என்ன காரணமோ, இந்த முறை நோர்மாவை தங்களுடன் அழைத்துச் செல்ல கிளாடிஸ் விரும்பவில்லை. மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்களும் இதற்கான காரணத்தை சரியாகக் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு குடும்பத்தினர் நோர்மாவை வளர்க்க விரும்பினார்கள். அதற்கும் மறுப்பு சொல்லிவிட்டார் கிரேஸ். நோர்மாவை கூட அழைத்துப் போகவில்லையே தவிர, கிரேஸ் ஒரு நல்ல காரியம் செய்தார். அவருக்கு நோர்மா ஜேம்ஸ் ஜிம் டோரத்தியை விரும்புவது தெரிந்திருந்தது. ஜிம்மின் வீட்டுக்குப் போய், அவன் அம்மாவிடம் பேசினார்.

நேரடியாக விஷயத்துக்கு வந்தார். நோர்மாவை ஜிம்முக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கு பக்குவமில்லாத வயது. நோர்மாவுக்கு பதினாறு வயது. இருவரும் சேர்ந்து வாழ்வதில் முகாந்திரம் இருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கை நல்லவிதமாக நடக்குமா என்கிற கவலையோடு பேசினார் ஜேம்ஸ் ஜிம் டோரத்தியின் தாய். ‘‘வேறு வழியில்லை. எங்களால் நோர்மா ஜீனை அழைத்துப் போக முடியாது. இந்தத் திருமணம் மட்டும் நடக்காவிட்டால் அவள் திரும்பவும் ஏதாவது ஆதரவற்றோர் விடுதிக்கோ, அனாதை இல்லத்துக்கோ செல்ல வேண்டியதுதான்’’. அழுத்தம் திருத்தமாக உண்மையை எடுத்துச் சொன்னார் கிரேஸ். இதைக் கேட்டதும் ஜேம்ஸ் ஜிம் டோரத்தியின் அம்மாவே கூட திருமணத்துக்கு ஒப்புக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார். ஆனால், ஜிம் ஒப்புக்கொள்ள மறுத்தான். வயது ஒருபக்கம் இருக்கட்டும்… குடும்பத்தை எப்படி நடத்துவது? வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லை. வருமானத்துக்கு என்ன செய்வது? இந்த யோசனைகளால் ஜிம் தயங்கினான். ‘இப்போதைக்கு திருமணம் வேண்டாமே!’ என்று திரும்பத் திரும்ப சொன்னான். கிரேஸ், நோர்மாவின் நிலைமையை எடுத்துச் சொன்னார். ‘கரைத்தார் கரைத்தால் கல்லும் கரையும்’ நிலைதான். ஜேம்ஸ் ஜிம் டோரத்தி இறங்கி வந்தான். திருமணத்துக்கு ஒப்புக் கொண்டான். wedding2விஷயத்தைக் கேள்விப்பட்டார் நோர்மாவுக்குப் பிரியமான அனா அத்தை. அவரே முன்னின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கும் நோர்மாவுக்கும் திருமணம் நடந்தது. நோர்மாவுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டது அந்தக் கணத்தில் இருந்துதான். அவளுக்கு ஜிம்மின் வீடு ஒரு புது உலகமாக இருந்தது. அங்கே அவளை அதிகாரம் செய்ய யாரும் இல்லை… எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை… எல்லாவற்றுக்கும் மேலாக ‘இது தன் வீடு இல்லை, இங்கே வரம்பு மீறிவிடக் கூடாது’ என்கிற எண்ணம் அடியோடு இல்லை.

புகுந்த வீட்டுக்கு வந்த கையோடு நிர்வாகத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டாள் நோர்மா. கணவனுக்கும் அவன் வீட்டாருக்கும் உற்ற துணையாக ஆகிப் போனாள். அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். 1943ல் ஜேம்ஸ் ஜிம் டோரத்திக்கு ஒரு வேலை கிடைத்தது. ‘மெர்ச்சன்ட் மரைன்’ என்கிற வாணிக கப்பல்படையில் வேலை. கலிஃபோர்னியாவின் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சான்டா கேட்டலினா தீவில் வேலைக்குச் சேர ஆர்டர் வந்தது. நோர்மா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். சான்டா கேட்டலினா தீவு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்தது. அதனால், ஜிம்முடன் அவளும் போக முடியும். சேர்ந்து வாழ முடியும். ‘அங்கே எத்தனை நாட்களுக்கு வேலை இருக்கும் என்று தெரியவில்லை. நீ இங்கேயே இரேன்’ என்று சொல்லிப் பார்த்தான் ஜேம்ஸ் ஜிம் டோரத்தி. ‘நீங்கள் வேறு எங்காவது மாற்றலாகிப் போகும் வரை உங்களுடன்தான் இருப்பேன். என்னால் உங்களைப் பிரிந்திருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டாள் நோர்மா. இருவரும் சான்டா கேட்டலினா தீவுக்குக் கிளம்பினார்கள். அங்கே இருக்கும் ஏவலோன் (Avalon) நகரில் குடியேறினார்கள்.

சில மாதங்கள்தான்… ஆனால், நோர்மாவின் வாழ்க்கையில் அற்புதமான நாட்கள் அவை. ஜேம்ஸ் ஜிம் டோரத்தி, நோர்மாவை நன்றாக கவனித்துக் கொண்டான். இனி வாழ்க்கையில் பிரச்னையே இல்லை என்கிற நினைப்புக்கு நோர்மா வந்தபோதுதான், ஜிம்முக்கு அந்த உத்தரவு வந்தது. அவன் உடனடியாக கப்பலில் ஏறி பசிபிக் கடலில் சென்றாக வேண்டும். இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அது. நோர்மாவுக்குள் ஓர் எண்ணம் அழுத்தமாக உட்கார்ந்திருந்தது. ஜிம் பசிபிக் கடலுக்குப் போனால் உயிரோடு திரும்பி வரமாட்டான் என்கிற எண்ணம். பேசிப் பார்த்தாள், அழுது பார்த்தாள், ஆர்பாட்டம் செய்தாள். எதற்கும் மசியவில்லை ஜிம். பசிபிக் பயணத்துக்குத் தயாராகிவிட்டான்.

அடுத்த அதிரடியை ஆரம்பித்தாள் நோர்மா. ‘சரி… உங்க இஷ்டப்படியே போய் வாருங்கள். ஆனால், போவதற்கு முன்னால் எனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்துவிட்டுப் போங்கள். நீங்கள் திரும்பி வரும் வரை குழந்தையைப் பார்த்தாவது உங்கள் நினைவில் வாழ்கிறேன்’.

அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை ஜேம்ஸ் ஜிம் டோரத்தி. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, அதை வளர்க்கும் அளவுக்கான பக்குவம் நோர்மாவுக்கு வரவில்லை என்று நினைத்தான்.

‘கவலையே படாதே! நான் திரும்பி வந்த பிறகு கண்டிப்பாக உன்னை அம்மாவாக்கிவிடுகிறேன்’. கண் சிமிட்டிச் சொன்னான். உரிய தேதியில் கடல் பயணத்துக்குக் கிளம்பினான். நோர்மா, வேறு வழியில்லாமல் ஜேம்ஸ் டோரத்தியின் அம்மா வீட்டுக்குத் திரும்பினாள்.

(தொடரும்)

– பாலு சத்யா

Image Courtesy:

http://amirulhafiz.deviantart.com/

http://blog.everlasting-star.net/

http://www.thisismarilyn.com/

http://en.wikipedia.org/

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

மர்லின் மன்றோ – 1

பேட்ரிஸியா நீல்

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

மோபெல் நார்மண்ட்

திரைவானின் நட்சத்திரங்கள் – 14

Marilyn-Monroe-Frisur1

கதாநாயகி… நம்பர் ஒன்!

திரையில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகுப் பதுமை யார்? ஒரு காலத்தில் உலகம் முழுக்க, பல லட்சம் ரசிகர்கள் யோசிக்காமல் சொன்ன பெயர் ஒன்று இருந்தது.

‘மர்லின் மன்றோ’.

இத்தனைக்கும் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் மர்லின் மன்றோ. தன் அழகு, நடிப்பு, பாடலால் பல லட்சம் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர்.

நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் வேதனை நிரம்பியதாகத்தான் இருக்கும். அவர்களின் அந்தரங்க வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவும் ஊடகங்களால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும். காலாற ரோட்டில் நடந்து போக முடியாது. ஒரு ரெஸ்டாரன்டில் தனியாக அமர்ந்து காபி சாப்பிட முடியாது. வேறு எந்த ஆணோடு பேசினாலும், அடுத்த நாளே அவரோடு இணைத்துப் பேசப்பட்டு, ஒரு ‘கிசுகிசு’ செய்தி பத்திரிகையில் வெளியாகும். கொஞ்சம் பிரபலமாகிவிட்டால், எங்கே போனாலும் ஒரு கூட்டம் பின்னாலேயே ஓடி வரும்… இப்படி அடுக்கிக் கொண்டே போக நடிகைகளுக்கான பிரச்னைகள் ஏராளம்.

இது போன்ற பிரச்னைகளை அதிகம் எதிர்கொண்டவர் மர்லின் மன்றோ. அதையும் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையில் மிக மோசமான சம்பவங்களை சந்தித்தவர். அவருடைய மரணமே கூட சர்ச்சைக்கு உரியதாகத்தான் இன்று வரை இருக்கிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அதிகமாக போதை மருந்து எடுத்துக் கொண்டதால் இறந்து போனாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு சந்தேகங்கள் உலா வருகின்றன. ஆனால், அதிகாரபூர்வமான அறிவிப்பு என்னவோ அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார் என்பதாகத்தான் இருக்கிறது.

***

1926 ஜூன் 1ம் தேதி அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிறந்தார் மர்லின் மன்றோ. பிறந்த போதே குழந்தையின் அப்பா யார் என்கிற பெரிய சர்ச்சையைச் சுமந்து கொண்டுதான் பிறந்தார். அம்மா கிளாடிஸ் பியர்ல் பேக்கர் (Gladys Pearl Baker) மர்லின் மன்றோவுக்கு வைத்த பெயர் ‘நோர்மா ஜீன் மார்டென்சன்’ (Norma Jean Mortenson). அவருடைய பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் ‘மார்ட்டின் எட்வர்ட் மார்டென்சன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மார்டென்சன் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதோ, முகவரியோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அமெரிக்காவில் குழந்தையின் பெயரோடு தந்தையின் குடும்பப் பெயரை சேர்த்து அழைப்பது வழக்கம். அந்த வகையில் நோர்மாவின் பெயர் ‘நோர்மா மார்டென்சன்’ என்று இருக்க வேண்டும். அம்மா கிளாடிஸ் ஒரு காரியம் செய்தார். நோர்மாவின் பெயருக்குப் பின்னால் ‘பேக்கர்’ என்ற தன் அப்போதைய கணவரின் குடும்பப் பெயரைச் சேர்த்தார். இதனாலேயே நோர்மாவின் உண்மையான தந்தை யார் என்கிற குழப்பம் பிற்காலத்தில் எழுந்தது.

Birth_Certificate1924ல் கிளாடிஸ், மார்ட்டின் எட்வர்ட் மார்டென்சனைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கிளாடிஸ் கருவுறுவதற்கு முன்பாகவே இருவரும் பிரிந்துவிட்டார்கள். பின் எதற்காக அவர் தன் கணவரின் பெயராக, மார்டென்சன் பெயரை மருத்துவமனையில் பதிவு செய்தார்? சட்ட விரோதமாக குழந்தை பிறந்ததாக களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கிளாடிஸ், முதலில் தன் முன்னாள் கணவரின் பெயரைப் பதிவு செய்திருக்கலாம் என்கிறார்கள் பிற்காலத்தில் மர்லின் மன்றோவின் வாழ்க்கை வரலாறை எழுதியவர்கள். 85வது வயதில் மார்ட்டின் மரணம் அடைந்த பிறகுதான் அவரும் கிளாடிஸும் திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களும் மர்லின் மன்றோவின் பிறப்புச் சான்றிதழும் கிடைத்தன. ஆனாலும், தன் வாழ்நாள் முழுக்க மார்ட்டின் தன் தந்தையல்ல என்றே சொல்லி வந்திருக்கிறார் மன்றோ.

‘‘என் அம்மா என் சிறு வயதில் ஒரு புகைப்படத்தைக் காண்பித்து, ‘இதுதான் உன் தந்தை’ என்று சொல்லியிருக்கிறார். அவர் உருவம் என் மனதில் அப்படியே பதிந்து போய்விட்டது. அவர் சார்லஸ் ஸ்டேன்லி கிளிஃபோர்டு. அவருடைய அரும்பு மீசை இன்னமும் என் நினைவில் இருக்கிறது. பார்ப்பதற்கு கிளார்க் கேபிளைப் (Clark Gable) போலவே இருப்பார். அதனால் கிளார்க் கேபிள்தான் என் தந்தை என்று வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன்’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மர்லின் மன்றோ. (கிளார்க் கேபிள் அப்போது பிரபலமாக இருந்த அமெரிக்க நடிகர்).

***

Marilyn_Monroe‘புயலிலே ஒரு தோணி’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், அவஸ்தை தோணிக்கும் அதில் பயணம் செய்பவர்களுக்கும்தான் தெரியும். அப்படி ஓர் அவஸ்தையை குழந்தை நோர்மா அனுபவித்தாள். வீட்டில் வறுமை… ஆண் துணை இல்லை… குழந்தைக்குக் கொடுக்க சத்தான ஆகாரங்கள் இல்லை. இவற்றை எல்லாம்விட அம்மா கிளாடிஸ் மனநிலை பிறழ்ந்தவர். ஒரு குழந்தைக்கு இதைவிடப் பெரிய இன்னல் வேறு என்ன வேண்டும்?

அவரால் குழந்தை நோர்மாவை சரியாகப் பார்த்துக் கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில், கலிபோர்னியாவுக்கு குழந்தையை அனுப்பி வைத்தார் கிளாடிஸ். அங்கே ஆல்பர்ட்-இடா போலெண்டர் தம்பதி நோர்மாவின் வளர்ப்புப் பெற்றோர் ஆனார்கள். அவர்களின் அன்பான அரவணைப்பில் ஏழு வயது வரை அவர்களுடனேயே வாழ்ந்தாள் நோர்மா. நல்ல உணவு, உடைகள்… கொஞ்சம் நிம்மதியான வாழ்க்கை. அந்த நிம்மதியைக் குலைக்க அம்மா கிளாடிஸின் உருவில் வந்தது விதி.

ஒருநாள் திடுதிப்பென்று வீட்டுக்குள் நுழைந்தார் கிளாடிஸ். இடா அவரை வரவேற்றார். குழந்தை நோர்மாவை வாரி எடுத்துக் கொஞ்சினார் கிளாடிஸ். வழக்கமான உபசரிப்புகள் நடந்து முடிந்தன. அதுவரை அமைதியாக இருந்த கிளாடிஸ் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் நோர்மாவை கூட்டிட்டுப் போறேன்.’’

‘‘எங்கே?’’

‘‘என் வீட்டுக்கு.’’

‘‘ஏன்? அவ இங்கே நல்லாத்தானே இருக்கா?’’

‘‘இல்லை. எனக்கு அவ வேணும்…’’

உரையாடல் நீண்டுகொண்டே போனது. வார்த்தைகள் தடித்தன. காரசாரமான விவாதம். குழந்தை தனக்கே உரித்தான ஒரு பொருள் என்பது போல கிளாடிஸ் பேச, மனநலம் குன்றியவருடன் குழந்தை வாழ்வது சரியல்ல என்பதை உணர்ந்த இடா குழந்தையை அனுப்ப மறுக்க… சண்டை வலுத்தது. அப்போதுதான் அது நடந்தது. எதிர்பாராத கணத்தில் இடாவைப் பிடித்து முற்றத்தில் தள்ளினார் கிளாடிஸ். சட்டென்று வீட்டுக்குள் ஓடி, கதவை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டார்.

பதறிப்போன இடா, கதவை பலமாகத் தட்டிப் பார்த்தார்… கூச்சல் போட்டார்… ‘யாராவது வந்து என் குழந்தையைக் காப்பாத்துங்களேன்!’ என்று உதவிக்கு ஆட்களை அழைத்தார். அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அவருடைய உதவிக்கு வர கணவர் ஆல்பர்ட்டும் அப்போது வீட்டில் இல்லை. கதவைத் தட்டித் தட்டி சோர்ந்து போனவராக இடா அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தார். சில நிமிடங்கள் கழிந்தன. என்ன செய்வது என்பது தெரியாமல் அழுது கொண்டிருந்தார் இடா.

கதவு திறந்தது. கிளாடிஸ் வெளியே வந்தார். அவர் கையில் ஒரு பெரிய பேக். அது ராணுவத்தினர் பயன்படுத்தும் வகையைச் சேர்ந்தது. அதன் ஜிப் மூடியிருந்தது. அதற்குள்ளேயிருந்து குழந்தை நோர்மாவின் குரல்…

‘‘அம்மா… அம்மா! என்னை வெளிய விட்டுடுங்கம்மா… ப்ளீஸ்மா..!’’

அவ்வளவுதான். கொஞ்சமும் தாமதிக்கவில்லை இடா. கிளாடிஸை வழிமறித்தார். அவர் கையில் இருந்த பேக்கை பறிக்க முயற்சி செய்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளினார்கள். இந்த தள்ளுமுள்ளுவில் கிளாடிஸின் கையில் இருந்த பேக் கீழே விழுந்தது. எப்படியோ ஜிப்பைத் திறந்து கொண்டு குழந்தை நோர்மா வெளியே வந்தாள். சத்தம் போட்டு அழுதாள். அதைத் தாங்க முடியாத இடா, நோர்மாவை வாரி அணைத்து எடுத்து, வீட்டுக்குள் தள்ளி கதவைச் சாத்தினார். அன்றைக்கு வீட்டைவிட்டு வெறுங்கையோடு திரும்பினார் கிளாடிஸ். ஆனால், பிரச்னை அத்துடன் தீர்ந்துவிடவில்லை.

1933. கிளாடிஸ் புதிதாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கியிருந்தார். உதவிக்கு சில ஆட்களை அழைத்துக் கொண்டார். நேராக ஆல்பர்ட் வீட்டுக்கு வந்தார். இந்த முறை இடாவுக்கு, நோர்மாவை அனுப்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ‘குழந்தையைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ என்று வாக்குக் கொடுத்துவிட்டுத்தான் கிளாடிஸ் அழைத்துப் போனார். உண்மையில் அது நடக்கவில்லை.

மனநலம் பிறழ்ந்த தாய்… அவரிடம் வளரும் குழந்தை. சினிமாவுக்கு ஒன்லைன் தருவது போல சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால், குழந்தைக்கு அது நரக வேதனை. வலி மிகுந்த நாட்கள் அவை. அந்த வேதனை காலம் முழுக்க அந்தக் குழந்தையை துரத்திக் கொண்டே இருந்தது. தன் குழந்தையையே படாதபாடு படுத்தியிருந்தார் அந்தத் தாய். அது நோர்மாவின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல விபரீதங்கள் ஏற்படக் காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கிளாடிஸின் நிலைமை மிகவும் மோசமாகிவிட அவரை ஒரு மனநல மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். பின்னாளில் மர்லின் மன்றோ தன் சுயசரிதையில் தன் தாயைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘எப்போதும் அளவுக்கு அதிகமாக சிரிக்கும் முகம் அல்லது எல்லை மீறிய அலறல் குரல்… இதுதான் என் தாயை நினைத்தால் என் நினைவுக்கு வருவது’’.

***

marilyn_monroe_3அமெரிக்காவில் ‘வார்டு ஆஃப் தி ஸ்டேட்’ (Ward of the State) என்று ஒரு நடைமுறை உண்டு. ஆதரவற்றவர்கள், தனியாக வாழும் முதியோர், பெற்றோர் துணை இல்லாத குழந்தைகளை நீதிமன்றம் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும். இவர்களுக்காக பொருத்தமான காப்பாளர் (Guardian) ஒருவரை நியமித்து அவர் பொறுப்பில் இவர்களைக் கொடுத்து பராமரிக்கச் சொல்லும். அப்படிப் பொறுப்பில் நியமிக்கப்படும் நபர் கிட்டத்தட்ட வளர்ப்புப் பெற்றோராகவே கருதப்படுவார்கள்.

நோர்மாவுக்கு அப்படி கார்டியனாக நியமிக்கப்பட்டவர் கிரேஸ் மெக்கி (Grace Mckee)… கிளாடிஸின் நெருங்கிய தோழி. நோர்மாவின் மனக் காயங்களுக்கு மருந்திடுவதாக இருந்தது கிரேஸின் துணை. சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்… ஆலோசனை சொல்வார்… எதைச் செய்வதற்கும் ஊக்கம் கொடுப்பார். எதிர்காலம் குறித்த கனவுகளையும் விதைப்பார். கிரேஸ், நோர்மாவிடம் அடிக்கடி ஒன்று சொல்வார்… ‘‘பார்த்துகிட்டே இரேன்… நீ ஒருநாள் ஹாலிவுட்ல பெரிய ஸ்டாரா ஆகப் போறே…’’

கிரேஸ் மெக்கியுடன் வாழ்ந்த போதுதான் ஜீன் ஹார்லோவின் அறிமுகம் கிடைத்தது நோர்மாவுக்கு. ஜீன் ஹார்லோ நடிகை… 1930களில் அமெரிக்க சினிமா உலகில் லட்சக்கணக்கான ரசிகர்களின் தேவதையாக வலம் வந்தவர். ஜீன் ஹார்லோவுக்கு நோர்மாவைப் பார்த்த முதல் கணத்திலேயே பிடித்துப் போய்விட்டது. பரிதாபமான முகத்தோடு அதுவரை வலம் வந்த அந்தக் குழந்தையின் அழகை மெருகூட்டக் கற்றுக் கொடுத்தார். சில நாட்களிலேயே தானாகவே மேக்கப் போடும் அளவுக்கு முன்னேறிவிட்டாள் நோர்மா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை வெளியே அழைத்துப் போவார் ஜீன் ஹார்லோ. சிகையலங்காரக் கடைக்கு அழைத்துப் போய் சுருள் சுருளான அவள் முடியை அழகுபடுத்துவார்.

நெருக்கம் அதிகமானது. இருவரும் சேர்ந்து சினிமாவுக்குப் போக ஆரம்பித்தார்கள். திரைப்படங்களின் மீதும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் மீதும் நோர்மாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபாடு வர ஆரம்பித்தது. ஆர்வமாக நோர்மா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வார் ஜீன் ஹார்லோ. ஹாலிவுட்டும் சினிமாவும் அழுத்தமாக நோர்மாவின் மனதில் பதிய ஆரம்பித்தன.

1935. அப்போது நோர்மா ஜீனுக்கு 9 வயது… மர்மக் கதைகளில் வரும் திடீர் திருப்பம் போல, கிரேஸ், எர்வின் சில்லிமேன் காட்டார்டு (Ervin Silliman ‘Doc’ Goddard) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அந்தச் சின்னஞ்சிறு வயதில் அங்கும் இங்குமாக பந்தாடப்பட்ட அந்தக் குழந்தை ‘லாஸ் ஏஞ்சல்ஸ் அனாதை இல்ல’த்துக்கு (பிறகு ‘ஹோலிகுரோவ்’ என்றழைக்கப்பட்டது) அனுப்பி வைக்கப்பட்டது.

(தொடரும்)

பாலு சத்யா

Image courtesy:

http://dshenai.files.wordpress.com/

http://upload.wikimedia.org/

http://www.schwarzkopf.co.uk/

Monroe

BornNorma Jeane Mortenson
June 1, 1926
Los Angeles, California, U.S.DiedAugust 5, 1962 (aged 36)
Brentwood, Los Angeles, California, U.S.

Cause of death

Barbiturate overdose

Resting place

Westwood Village Memorial Park CemeteryWestwood, Los AngelesOther names

  • Norma Jeane Baker
  • Norma Jeane Dougherty
  • Norma Jeane DiMaggio
  • Marilyn Monroe Miller

OccupationActress, model, singer, film producerYears active1945–62Notable work(s)NiagaraGentlemen Prefer BlondesRiver of No Return,The Seven Year ItchSome Like It HotThe MisfitsReligion

Spouse(s)

Golden Globe Awards

AFI AwardsAFI’s 100 Years…100 Stars
1999Signature

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

பேட்ரிஸியா நீல்

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

மோபெல் நார்மண்ட்

தோழி நியூஸ் ரூம்

வாசிக்க… யோசிக்க…

21ம் நூற்றாண்டு? 

Image

மேற்கு வங்கத்திலுள்ள பிர்பும் மாவட்டம் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கிருக்கும் காப் கிராமத்தில் 20 வயது இளம் பெண்ணுக்கு நடந்திருக்கும் கொடூரம் உலகையே உலுக்கி எடுத்திருக்கிறது. அந்தப் பெண் செய்த மாபெரும் தவறு(!) காதலித்ததே. அதுவும் வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனை. இருவரையும் ஒருசேர பார்த்த சிலர் ஊர் மத்தியில் கட்டிப் போட்டார்கள். விசாரித்தார்கள். பெண்ணின் குடும்பத்தினருக்கு அபராதம் விதித்தார்கள்… 25 ஆயிரம் ரூபாய்! ‘அவ்வளவு பணம் எங்க கிட்ட இல்லை சாமி’ என்று கதறி அழுதிருக்கிறார்கள் குடும்பத்தினர். ‘அப்படியா? அவளை அந்தக் குடிசைக்கு தூக்கிட்டுப் போங்கடா!’ என்று கட்டளையிட்டிருக்கிறது பஞ்சாயத்து. ‘யார் வேண்டுமானாலும் அவளுடன் வல்லுறவு கொள்ளலாம்’ என்றும் பஞ்சாயத்துத் தலைவரால் சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஆண்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள். விடிய விடிய நடந்தது இந்தக் கொடுமை. இறுதியில், ‘வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என எச்சரிக்கப்பட்டு, விரட்டப்பட்டார் அந்தப் பெண். எப்படியோ தப்பித்து அவர்கள் காவல்துறையில் புகார் செய்ய, 13 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை. பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் கண்ணீர் மல்க சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறார்… ‘‘அவர்களில் சிலருக்கு என் தந்தையின் வயது…’’

சட்டம்… உயிர்… குழந்தை! 

Image

ந்தப் பெண்ணின் பெயர் மார்லைஸ் முனோஸ். அமெரிக்காவைச் சேர்ந்தவர். 33 வயது. 2013 நவம்பரில் மூளையில் ரத்தம் உறைந்து போனதன் காரணமாக கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். மூளை செயல்பாடு முற்றிலும் இல்லாமல் போனது. இச்சூழலில் நோயாளி இறந்துவிட்டதாகவே கருதப்படுவார். அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவரின் உயிரைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவும் மாட்டார்கள். டெக்சாஸ் ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனை முனோஸுக்கோ தொடர்ந்து சிகிச்சை அளித்தது. காரணம், 14 வார கருவை சுமந்து கொண்டிருந்தார் முனோஸ். கருவைக் காப்பாற்றுவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. முனோஸின் கணவர் எரிக், ‘சிகிச்சை தேவையில்லை… எங்கள் குடும்பத்தினர் யாரும் இதை விரும்பவில்லை’ என்றார். மருத்துவமனையோ ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குத் தொடர்ந்தார் எரிக். டெக்சாஸ் நீதிமன்றம் முனோஸுக்கு வழங்கப்படும் சிகிச்சையை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஜெர்மன் டாக்டர்கள் ஒரு படி மேலே போய், பழைய கேஸ் ஃபைல்களை புரட்டிப் போட்டிருக்கிறார்கள். இது போல 30 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், அதில் காப்பாற்றப்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் வரை உயிரோடு இருந்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

சூப்பர் 50! 

Image

‘நடுத்தர வயதைக் கடந்த பெண்மணிகள் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார்கள்’ என்கிறது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். அதற்கு உதாரணங்களும் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. லிஸ் டிமார்க்கோ வீன்மேன், நியூ யார்க்கை சேர்ந்தவர். 2001 செப்டம்பர் 11 அன்று, இரு விமானங்கள் வர்த்தக மையக் கட்டிடத்தில் மோதிய சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர். 2007ல், தன் 55வது வயதில் சுயதொழில் தொடங்க முடிவெடுத்தார், பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து கற்றுக் கொண்டார். இன்றைக்கு லிஸ் வெற்றிகரமான தொழில்முனைவோர். அமெரிக்காவில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களில் 55-64 வயதுக்குட்பட்டவர்கள் 23.4 சதவிகிதமாம். அவர்களிலும் பெண்களே அதிகமாம்… அப்படிப் போடுங்க!

கொஞ்சம் ‘கவனிங்க’ பாஸ்! 

Image

மெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று நம் தலைநகர் டெல்லிக்கு முதல் இடம் கொடுத்திருக்கிறது. ஆனால், அது பெருமைப்படும்படியான செய்தி அல்ல! ‘உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் மாசு நிலவும் நகரம் டெல்லி’ என்கிறது அந்த ஆய்வு. சீனாவின் பீஜிங் நகரத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், இங்கே நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை அரசு நிறுவனங்கள் கண்டு கொள்வதே இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.

பசுமைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 178 நாடுகளில் இந்தியா இருப்பது 155வது இடத்தில். டெல்லியின் காற்று மாசு, பீஜிங்கை விட இருமடங்கு அதிகம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு காற்று மாசு 44 சதவிகிதம் அதிகமாம். இப்படி அதிகமாவதற்குக் காரணம், வாகனங்களும் தொழிற்சாலைகளும் வெளியேற்றும் புகை. இந்த லட்சணத்தில், டெல்லி சாலைகளில் பவனி வரும் வாகனங்களோடு ஒவ்வொரு நாளும் 1,400 வாகனங்கள் புதிதாகச் சேருகின்றன. சுற்றுப்புறச் சூழல் தூய்மை சீர்கெடுவது என்பது ஆரோக்கியத்தையும் கெடுக்கும். டெல்லியில், 5க்கு 2 பேர் சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறார்களாம்.

மலாலாவின் மனம்! 

Image

‘நான் மலாலா’. பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதிய புத்தகம். கடந்த 28ம் தேதி, பெஷாவர் பல்கலைக்கழகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. என்ன காரணமோ, ‘எங்களால் போதுமான பாதுகாப்புக் கொடுக்க முடியாது’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஏற்கனவே, நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் இரண்டு அமைச்சர்கள் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். காவல்துறை தொடங்கி பல அரசு அதிகாரிகள் வரை நூல் வெளியீட்டை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். அதையும் மீறி நிகழ்ச்சி நடத்த முயன்றபோதுதான் காவல்துறை, பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்று கை விரித்திருக்கிறது. தலிபான்கள், புத்தக வெளியீடு நடக்கும் பகுதியில் இருக்கும் கடைக்காரர்களிடம் மலாலாவின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்களாம். ‘நான் மலாலா’ புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது பாகிஸ்தானில் சமூக ஊடகங்களில் பலத்த சர்ச்சையும் விமர்சனமும் கிளம்பியுள்ளன.

கண் என்ப வாழும் உயிர்க்கு! 

Image

‘உலகில் உள்ள அத்தனை சிறார்களும் ஆரம்பக் கல்வி பெற வேண்டுமா? 70 வருசம் பொறுங்கப்பா!’ என்று ஒரு போடு போட்டிருக்கிறது யுனெஸ்கோ… ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பு. ‘உலக அளவில் 5 கோடியே 70 லட்சம் சிறார்கள் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறார்கள்’ என்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை. ‘ஆசிரியர்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தால், குறைந்தது 25 கோடி சிறார்களுக்கு அடிப்படை வாசிப்பு, கணக்குப் போடுதல் திறன் இல்லை. உலகில், மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் இருக்கும் ஆசிரியர்களில், கால் பங்குக்கும் மேலானவர்களுக்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. பாகிஸ்தானில், மூன்றில் ஒரு குழந்தைக்குத்தான் எழுத்துக்கூட்டிப் படிக்கவும், அடிப்படைக் கணக்குகளைப் போடவும் தெரிந்திருக்கிறது. இந்தியா, வியட்நாம், எத்தியோப்பியா, தான்சேனியா போன்ற நாடுகளில் கல்வி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சஹாராவுக்கு தெற்கே உள்ள நாடுகளும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும்தான் குழந்தைக் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன. வறிய நாடுகளில் கால்வாசிக் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதே இல்லை’ என்று பல புள்ளிவிவரங்களை தெளித்திருக்கிறது யுனெஸ்கோவின் அறிக்கை.

 தொகுப்பு: பாலு சத்யா

தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க..!

குளிர்… அம்மாடி! 

Image

ற்கனவே குளிர் வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நேரத்தில் உலகிலேயே அதிகக் குளிரான பகுதியை அடையாளம் காட்டி மேலும் உடம்பை உதற வைத்திருக்கிறது ஒரு செய்தி! அமெரிக்காவின் நாசாவைச் சேர்ந்த சாட்டிலைட், கிழக்கு அண்டார்ட்டிகாவில் இருக்கும் ஒரு இடத்தைப் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. பனிக்கட்டிகளால் உறைந்து கிடக்கும் அந்தப் பிரதேசத்தின் சீதோஷ்ண நிலை மைனஸ் 93.2 டிகிரி செல்சியஸ். இதற்கு முன் அதே அண்டார்ட்டிகாவில் குளிர் தொடர்பாக ஓர் ஆய்வை செய்தது ரஷ்யாவின் ‘வோஸ்டாக் ரிசர்ச் ஸ்டேஷன்’. ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, ‘இதுதாம்ப்பா உலகத்துலயே ரொம்ப குளிரான இடம்’ என்றது. அங்கே நிலவிய வெப்பநிலை 89.2 டிகிரி செல்சியஸ். இது நடந்தது 1983ம் வருடத்தில். இப்போது 93.2 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியிருக்கிறது. குலை நடுங்கும் குளிர்… நம்பித்தான் ஆகவேண்டும்! 

அடங்காதா அமில மழை? 

Image

லூதியானாவில் மீண்டும் ஒரு தாக்குதல்… பெண் மீது ஆசிட் வீச்சு. அதுவும் மணப்பெண் மீது! அவர் பர்னாலாவைச் சேர்ந்தவர். திருமணக் கனவுகளுடன் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக லூதியானா, சாராபா நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்குச் சென்றிருக்கிறார். தன் சகாக்களுடன் உள்ளே நுழைந்த ஓர் இளைஞன் அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசிவிட்டு, ஓடிப் போயிருக்கிறான். போனவன், ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றிருக்கிறான். அதில் அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் உறவு இருப்பதாக எழுதியிருந்தது. போலீஸ் விசாரணையில் அது பொய் என்பது தெரிய வந்திருக்கிறது. வழக்கை திசை திருப்புவதற்காக அந்தக் கடிதம். உண்மையில், ஆசிட் வீசியவன் கூலிக்காக இந்தப் பாதகத்தைச் செய்தவன். மாப்பிள்ளையின் குடும்பத்தின் மேல் கோபம் கொண்ட மற்றொரு உறவினரின் குடும்பம்தான் இந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞன் உட்பட ஆறு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. மிக ஆபத்தான நிலையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அந்தப் பெண். ஆசிட் விற்பனைக்குக் கெடுபிடி… பல புதிய விதிமுறைகள்… அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பெண்கள் மீதான இது போன்ற கொடூர தாக்குதல் இன்னும் குறைந்தபாடாக இல்லை. என்ன செய்யப் போகிறோம்?

விலையில்லா உயிர்கள்! 

Image

திர்ஷ்டவசமாக… இந்தச் சம்பவத்தை அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் காவல்துறையால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். குண்டஸ் மாவட்டம்… டாஷ்ட்-ஐ-ஆர்ச்சி பகுதி… தலிபான்களின் ஆட்சி நடக்கும் பிராந்தியம். ஒரு பெண்ணின் மீது கணவனுக்கு எரிச்சல்… கோபம்… ஆத்திரம். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தலிபான்களிடம் மனைவி மீது புகார் தருகிறான். ‘என்னை ஏமாற்றிவிட்டாள்’. அவ்வளவுதான்… பெண்ணுக்கு தண்டனை கொடுக்கத் தயாராகிறது தலிபான் படை. என்ன தண்டனை? உயிரோடு கல்வீசித் தாக்கிக் கொல்லும் மரண தண்டனை. இரக்கமுள்ள அந்தப் பெண்ணின் உறவினர்கள் யாரோ காவல்துறைக்குத் தகவல் தர, அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கிறாள். காவல்துறை வந்ததும் தலைமறைவான தலிபான்களுடன் கணவனும் ஓடிப் போயிருக்கிறான். அந்தப் பெண் இப்போது காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார். இந்தக் கற்கால கொடுமைகளை நிறுத்தவே முடியாதா?

உடற்பயிற்சி… உறுதி! 

Image

டிமென்ஷியா (Dementia). முதுமைக் காலத்தில் வரும் மறதிக் குறைபாடு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக் குறைபாடு வராது என்று நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. டிமென்ஷியாவை தடுக்கும் முக்கியமான ஐந்து விஷயங்கள்… உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமல் இருப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடல் எடையைக் குறைவாக வைத்திருப்பது, மதுப்பழக்கத்தைத் தவிர்ப்பது! இந்தப் பழக்கங்களில் நான்கு அல்லது ஐந்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடும் டிமென்ஷியாவும் 60 சதவிகிதம் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு. அதே நேரத்தில் இதையெல்லாம் கடைப்பிடிக்காதவர்களுக்கு நீரிழிவு பிரச்னை, இருதயக் கோளாறுகள், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 70 சதவிகிதம் இருக்கிறதாம். ‘‘ஆரோக்கியமான வாழ்வியல் முறை பல நன்மைகளை உடலுக்குத் தருகிறது. மருத்துவ சிகிச்சை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட உடற்பயிற்சி மிக நல்லது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒரு தனி மனிதனின் பொறுப்பு. ஆனால், பலபேர் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்பதுதான் வருத்தப்படக்கூடிய விஷயம். அதுவும் எங்கள் ஆய்வில் தெரிந்திருக்கிறது.’’ என்று சொல்கிறார் இந்த ஆய்வைத் தலைமை ஏற்று நடத்திய அமெரிக்கர் பீட்டர் எல்வுட்.

பேய்கள் உலாவும் பள்ளிகள்! 

Image

பாகிஸ்தானில் இருக்கும் பள்ளிக்கூடங்களை ‘பேய்ப் பள்ளிகள்’ (Ghost Schools) என்றுதான் வர்ணிக்கின்றன பல பத்திரிகைகள். சுண்ணாம்பு அடிக்கப்பட்டு பளிச்செனத் தெரியும் பள்ளிகளில் பலவற்றில்கூட பாடம் நடத்தப்படுவதில்லை. இருப்பதிலேயே வயதில் மூத்த சிறுமியோ, சிறுவனோ மற்ற குழந்தைகளை அதட்டி, மிரட்டிக் கட்டுப்படுத்தும் காட்சிதான் தினமும் அரங்கேறுகிறது. முக்கிய காரணம், ஆசிரியர்கள் இல்லை. தெற்கு பாகிஸ்தானில் உள்ள ‘சான்சர் ரெத்தார்’ கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்… ‘எங்கள் குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. அவர்களுடைய பெயரை எழுதத் தெரியவில்லை. அதற்கான அர்த்தமும் தெரியவில்லை. ஆரம்பக் கல்விக்கான அடிப்படை எழுத்தைக் கூட அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை’. அரசும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க எந்த ஆர்வமும் காட்டவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அரசு, பள்ளிகளுக்கு ஒதுக்கும் பணம் செலவிடப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டாலும் அதிகாரிகளின் கைகளுக்குத்தான் போய்ச் சேர்கின்றன என்கிறார்கள் பொது மக்கள். சில பள்ளிகளில் வேறொரு கொடுமை… பெயருக்குத்தான் கல்வி நிறுவனங்களே தவிர மாணவர்கள் யாரும் சேர்க்கப்படுவதில்லை. அந்தப் பள்ளிகளில் வேலை(!) பார்க்கும் ஆசிரியர்களுக்கு வீட்டுக்கே சம்பளப் பணம் போய்ச் சேர்ந்துவிடுகிறதாம். ‘பாகிஸ்தானில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்விக்குக் கூட அனுப்பப்படுவதில்லை’ என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ஒன்று. கடந்த ஆண்டு, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பள்ளிகள் என்ற பெயரில் இயங்கும் கல்வி நிறுவனங்களை சோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த நவம்பரில் பள்ளிகளை ஆய்வு செய்த  முடிவுகளும் அறிக்கையாக வெளி வந்தது. அதில்தான் ‘பெயரளவு கல்வி நிறுவனங்கள்’ என்கிற அதிர்ச்சிகரமான உண்மை வெளி வந்திருக்கிறது. ‘எத்தனை மலாலாக்கள் தோன்றினாலும், அரசும் அதிகாரிகளும் மனது வைக்கவில்லை என்றால், கல்வி முன்னேற்றம் என்பது பாகிஸ்தானில் ஏற்பட வாய்ப்பே இல்லை’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பாகிஸ்தான் பள்ளிகளில், வராத ஆசிரியர்களுக்காக காத்திருக்கிறார்கள் பிள்ளைகள்.

தேவை பாதுகாப்பு! 

Image

‘இந்தியாவில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்திருக்கிறது’. இதைச் சொன்னது பத்திரிகையோ, சமூக ஆர்வலரோ அல்ல… மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத். பாராளுமன்றத்தில், எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 3 வருடங்களில், இது தொடர்பாக பெண்கள், மகளிர் ஆணையத்துக்கு அளித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேசிய மகளிர் ஆணையம், ‘ஒவ்வொரு துறையிலும் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறது. இதையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதியளித்திருக்கிறார் மத்திய அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

தொகுப்பு: பாலு சத்யா

சப்த விடங்கம்!

Image

தாமரை விரிகிறது… வண்டுகள் கிறீச்சிட்டுப் பறக்கின்றன… கோழி தலையை அசைத்து அசைத்து நடந்து போகிறது… ஒரு பல்லக்கில் பவனி வருகிறார் உற்சவர்… இந்தக் காட்சிகளை நேரில் பார்க்கலாம், கற்பனையும் செய்யலாம். மேடையில்? அதையும் சாத்தியமாக்கியிருக்கிறது நடனக் கலைஞர் லட்சுமி இராமசுவாமியின் ‘சப்த விடங்கம்’ நாட்டிய நாடகம். அவரும் அவர் குழுவினரும் வெறும் உடல் மொழியாலும் தேர்ந்த நாட்டிய அசைவுகளாலும் தத்ரூபமாக இந்தக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்து மிரட்டியிருக்கிறார்கள்.

Image

‘விடங்கம்’ என்றால் உளி தொடாத சிலை. தமிழகத்தில் ஏழு (சப்த) இடங்களில், சிற்பிகள் செதுக்காத வடிவில், இயற்கையாக அமைந்த லிங்கமாகக் காட்சி தருகிறார் ஈஸ்வரன். அதனாலேயே ஈஸ்வரனுக்கு ‘விடங்கர்’ என்று பெயர். அந்தத் திருவிடங்கர் தலங்களுக்கு நம்மைக் கையைப்பிடித்து அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வைத்திருக்கிறார் லட்சுமி இராமசுவாமி… ‘சப்த விடங்கம்’ மூலமாக!

Image

ஏழு விடங்கர் தலங்களுக்கும் புராணப் பின்னணி உண்டு. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை. ஒரு கட்டத்தில், அசுரர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் தேவர்கள். அந்த நேரத்தில் தேவர் தலைவன் இந்திரனுக்கு ஒரு யோசனை சொல்கிறார் நாரதர். பூலோகத்தில் இருக்கும் சோழச் சக்கரவர்த்தி முசுகுந்தன் வந்தால் போர் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்கிறார். இந்திரன் அழைக்க, முசுகுந்தனும் வருகிறார்… போரில் இந்திரன் வெற்றி பெற உதவுகிறார். அசுரர் படை தோற்று ஓடுகிறது.

Image

மகிழ்ந்து போன இந்திரன், ‘‘முசுகுந்தா! உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்!’’ என்கிறார். இந்திரனிடம் ஒரு அற்புதமான, யாருக்கும் கிடைக்கப் பெறாத லிங்கம் ஒன்று இருப்பது முசுகுந்த சக்கரவர்த்திக்குத் தெரியும். அது, மஹாவிஷ்ணுவால் இந்திரனுக்கு வழங்கப்பட்டது. அதைத் தனக்குப் பரிசாகக் கொடுக்கும்படி கேட்கிறார். இந்திரன் இதை எதிர்பார்க்கவில்லை. மிகுந்த ஈடுபாட்டோடும் பக்தியோடும் தினமும் பூஜிக்கும் லிங்கம். அந்த லிங்கம் இல்லாத பூஜையை அவனால் கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை. அதை முசுகுந்தன் கேட்கிறார்… வாக்கும் கொடுத்தாகிவிட்டது. என்ன செய்வது? ‘‘அதற்கென்ன முசுகுந்தரே… நாளைக் காலை வாருங்கள். பூஜை முடிந்ததும் கொடுத்து விடுகிறேன்’’ என்கிறான். யாருக்கும் கிடைக்காத அபூர்வமான லிங்கம் தனக்குக் கிடைக்கப் போகிறது என்கிற மகிழ்ச்சியோடு செல்கிறார் முசுகுந்தன்.

Image

இரவோடு இரவாக மகாவிஷ்ணு அளித்த லிங்கத்தைப் போலவே, அச்சு அசலாக 6 லிங்கங்களை உருவாக்குகிறான் இந்திரன். அடுத்த நாள் முசுகுந்தன் வந்ததும், ‘‘இந்த ஏழு லிங்கங்களில் மகாவிஷ்ணு எனக்களித்த லிங்கம் எதுவோ அதை சரியாகக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்கிறான். அந்த நேரத்தில், சரியான லிங்கத்தை அடையாளம் காண, முசுகுந்தனுக்கு மறைமுகமாக உதவுகிறார் விநாயகர். அதன்படியே லிங்கத்தை சுட்டிக் காட்டுகிறார் முசுகுந்தன். அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் அந்த லிங்கத்தைப் பரிசாகக் கொடுக்கிறான் இந்திரன். கூடவே, அவன் உருவாக்கிய மற்ற 6 லிங்கங்களையும் கொடுக்கிறான்.

Image

இந்திரனிடம் பெற்ற ஏழு லிங்கங்களை பூமிக்குக் கொண்டு வந்து, ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்கிறார் முசுகுந்தன். திருவாரூர், திருக்கோளிலி, திருகாறாயில், திருமறைக்காடு, திருநாகை, திருவாய்மூர், திருநள்ளாறு ஆகிய ஊர்கள் அவை. இந்த ஏழு இடங்களும் சிவபெருமான் தாண்டவமாடியத் தலங்கள் என்கிறது புராணம். ஒவ்வோர் ஊருக்கும் ஒரு நடனம். ‘அஜபா நடனம்’, ‘பிருங்க நடனம்’, ‘குக்குட நடனம்’, ‘ஹம்ஸ நடனம்’, ‘அலபா/வீசி நடனம்’, ‘உன்மத்த நடனம்’ எனப்படும் ஏழு நடனங்களையும் வடிவமைத்து, மேடையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் லட்சுமி இராமசுவாமி.

Image

7 பெண்கள் நாட்டியமாட, தொடங்குகிறது நிகழ்வு. புராணக் காட்சிகள், போர் என எல்லாமே நடன அசைவுகளால் காட்சிப்படுத்தப்படுகின்றன. பிறகு, சப்த விடங்கத்தலங்கள்… திருவாரூரில் தொடங்கி திருநள்ளாறு வரையான ஊர்களில் சிவபெருமானின் விடங்கத் தாண்டவங்கள் நிகழ்த்தப்படுகின்றன. நான்கு பெண்கள் பல்லக்குத் தூக்கிகளைப் போல அசைந்து நடனமாடி வர, நடுவில் உற்சவராக ஒரு பெண் அந்த அசைவுகளுக்கு ஏற்ப ஆடி வருகிறார். இந்த அஜபா நடனத்தில் தொடங்கி ‘விறுவிறு’வென காட்சிகள் நகர்கின்றன. திருக்கோளிலியில் ஆட வேண்டிய பிருங்க (வண்டு) நடனத்துக்கு வண்டாகவே மாறி நடனமாடுகிறார்கள். குக்குட நடனமா? கோழியைப் போலவே அசைவுகள். கமல நடனத்துக்கு தாமரைப் பூவாக அசைந்து, குவிந்து, மலர்ந்து விரிகிறார்கள்!

Image

இந்த நாட்டிய நாடகத்தில் பாடப்பட்ட எல்லாமே தமிழ்ப்பாடல்கள்… குறிப்பாக அருகிப் போன தேவாரப் பாடல்கள்! பொருத்தமான, தமிழ்ப்பண்களை மேடைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். லட்சுமி இராமசுவாமியின் இந்த நடன நிகழ்வு  சமீபத்தில் சென்னையில் அரங்கேறியது. தயாரிப்புக்கு மானியம் தந்து உதவியிருக்கிறது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம். இந்த நடன நிகழ்வுக்கான ஆராய்ச்சியை செய்து, பாடல்களைத் தேர்ந்தெடுத்திருப்பவர் முனைவர் இரகுராமன். தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைத்து பாடியும் இருக்கிறார் முனைவர் வானதி இரகுராமன்.

Image

உறுத்தாத ஒளியமைப்பு, பொருத்தமான ஒப்பனை, மனம் கவரும் தமிழ் இசை, தேர்ந்த கலைஞர்களின் நடனம்… என எல்லாமே கனகச்சிதம். லட்சுமி இராமசுவாமி, பெண் நடனக் கலைஞர்களோடு களமிறங்கி ஒரு புதிய நிகழ்வைத் தந்திருக்கிறார். அது மறக்க முடியாத, தவிர்க்கக்கூடாத அனுபவம்!

– பாலு சத்யா

படங்கள்: மாதவன்   

தோழி நியூஸ் ரூம் – வாசிக்க… யோசிக்க…

Image

பரிசுக் கவலை தேவையா?

ஜும்பா லாஹிரி… இலக்கிய உலகில் பரபரப்பாகப் பேசப்படும் பெண்மணி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எழுத்தாளர். 2000ம் ஆண்டு புலிட்சர் பரிசு பெற்றதிலிருந்தே பிரபலமாகிவிட்டார். இந்த ஆண்டு ‘மேன் புக்கர் பரிசு’ அறிவிக்கப்பட இருந்த தருணம்… பட்டியலில் இருந்த புத்தகங்களில் ஜும்பா லாஹிரியின் ‘தி லோலேண்ட்’ நாவலும் இடம் பெற்றிருந்தது. அவருக்குத்தான் பரிசு என்று பல பத்திரிகைகள் செய்தியே வெளியிட ஆரம்பித்துவிட்டன. இலேனா கேட்டன் என்ற நியூசிலாந்து பெண் எழுத்தாளர் அந்தப் பரிசை தட்டிச் சென்றார். அந்த அலை ஓய்வதற்கு முன்பாகவே இன்னொரு பரிசு… புனைவுகளுக்காக அமெரிக்கா வழங்கும் ‘தேசிய புத்தக விருது’ ஜும்பா லாஹிரிக்குத்தான் என்கிற பேச்சு எழுந்தது. கடைசியில், ஜேம்ஸ் மெக்பிரைடு என்கிற அமெரிக்க எழுத்தாளருக்குப் பரிசு யோகம். இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை ஜும்பா லாஹிரிக்கு… தன் அடுத்த புத்தகத்துக்கான வேலையில் மேடம் பிஸி!

***

Image

வீடா… சிறையா?

‘அடிமைகள் இல்லை’ – சொல்வதற்கு நன்றாக இருக்கலாம். நிஜம் சுட்டெரிப்பதாக இருக்கிறது. தெற்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள். ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல… 30 வருடங்கள். மூவரில் ஒருவர், ‘ஃப்ரீடம் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனத்துக்குக் கடிதம் எழுதிப் போட்டிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே அவர்களை மீட்பதற்கான வேலையில் இறங்கிய ஃப்ரீடம் நிறுவனம், காவல்துறை உதவியுடன் சமீபத்தில் காப்பாற்றியிருக்கிறது. மூவரில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவர், இரண்டாமவர் அயர்லாந்துக்காரர், மூன்றாவது பெண் இங்கிலாந்துக்காரர். இவர்களில் அயர்லாந்துப் பெண்மணிக்கு 57 வயது. மலேசியப் பெண்ணுக்கு 69 வயது!

***

Image

பொறுப்புகளுக்குப் பொருத்தமானவர்!

‘சுந்தரம் க்ளேட்டன்’ (Sundaram Clayton), தமிழகத்தின் டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த பெரிய நிறுவனம். சமீபத்தில் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, லட்சுமி வேணுவுக்குக் கூடுதல் பொறுப்புகளைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. லட்சுமி வேணு, இந்நிறுவனத்தின் ‘தொழில்நுணுக்க இயக்குனர்’ (Director – Starategy) பதவியில் இருக்கிறார். இந்தப் பதவி நிர்வாக இயக்குனர் பதவிக்கு ஈடானது. ‘உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும், தொழிலை விரிவுபடுத்தவும் லட்சுமிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கம்பெனியின் செலவைக் குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் நிதி மற்றும் பட்ஜெட் நடவடிக்கைகளை உடனிருந்து கண்காணிப்பார் அவர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது இயக்குனர்கள் குழு.  கூடுதல் பொறுப்புகளைச் செய்ய வேண்டி இருப்பதால், லட்சுமி வேணுவின் ஊதியமும் உயர்கிறது. ஆண்டுதோறும் நடக்கும் நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர்களின் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு புதிய ஊதியம் லட்சுமிக்கு வழங்கப்பட இருக்கிறது. மாதத்துக்கு 7.50 லட்ச ரூபாய்!

***

Image

மனதைக் கவரும் மாய(ம்) பாடல்கள்!

மாயம் மஹ்மூத் (Mayam Mahmoud). இதுதான் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்ணின் பெயர். ராப் இசைப் பாடகி. ‘அராப்ஸ் காட் டேலன்ட்’ என்ற டி.வி. நிகழ்ச்சியில் நடந்த ராப் பாடல் போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதிச் சுற்று வரை முன்னேறிவிட்டார். இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. பத்து வயதிலிருந்து பாடல்களைப் பாடி வருகிறார் மஹ்மூத். எல்லாமே எகிப்தில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட பாடல்கள்! மஹ்மூதின் தந்தை, ‘வழக்கமாக எல்லாரும் பாடுவதைப் போல் பாடாமல், புதிதாக எதையாவது முயற்சி செய்’ என்று ஒருமுறை சொன்னாராம். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது இந்த இசைப் புயல். எகிப்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக் கையிலெடுத்தார். பாடலில் அதைக் கொண்டு வந்தார். இன்றைக்கு, ‘எகிப்தில் முக்காடு (Hijab) அணிந்து ராப் இசை பாடும் முதல் பெண்’ என்ற பட்டத்தையும் தட்டிக் கொண்டு போயிருக்கிறார்.

***

Image

உடலினை உறுதி செய்!

‘பெரியோர்களே… தாய்மார்களே! தயவு செய்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உடல் உறுதியில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்!…’ கெஞ்சாத குறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ‘எஜுஸ்போர்ட்ஸ்’ (EduSports) நிறுவனம். இது ஒரு உடற்கல்வி நிறுவனம். இந்நிறுவனம் நடத்திய, பள்ளிகளுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலுறுதி ஆய்வில் பள்ளிக்குச் செல்லும் பல குழந்தைகள் உடல் உறுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. 17 மாநிலங்கள்… 68 நகரங்கள்… 176 பள்ளிகள்… 7லிருந்து 17 வயதுக்குட்பட்ட 77,669 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிலைக் குறையீட்டு எண்ணில் மட்டும்தான் பெண் பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். பையன்கள் 59 சதவிகிதம், பெண் பிள்ளைகள் 66 சதவிகிதம். மற்ற எல்லா உடல் உறுதியிலும் பெண் பிள்ளைகள் பின் தங்கியே இருக்கிறார்களாம். ஒரே இடத்தில் எப்போதும் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மிகக் குறைவாக விளையாடுவது அல்லது விளையாட்டுப் பக்கம் திரும்பாமலே இருப்பது இவையெல்லாம்தான் காரணம் என்று ஒரு பட்டியலை வாசித்திருக்கிறது எஜுஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் அறிக்கை. பெரிய நகரங்களில் (Metro Cities) வசிக்கும் மாணவர்களைவிட, நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் உடல் உறுதியில் கொஞ்சம் பரவாயில்லை ரகமாம். அதாவது, அவர்களுக்கு விளையாட அவகாசம் கிடைத்திருக்கிறது, கொஞ்சமாவது ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுகிறார்கள் என்று அர்த்தம். மொத்தத்தில், பள்ளி செல்லும் பிள்ளைகளின் உடல் உறுதியில் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்த ஆய்வு.  

***

Image Courtesy: http://www.topnews.in

http://media.mlive.com

http://news.bbcimg.co.uk

தொகுப்பு: பாலு சத்யா

குறும்பர் வாழ்வு… பேசும் ஓவியங்கள்!

Image

வெளிப் பார்வைக்கு சாதாரண ஓவியங்களாகத்தான் தெரிகின்றன. உற்றுப் பார்த்து, இது என்ன, எப்படி, ஏன் என்பதைக் கேட்டறிந்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் பின்னால் குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை, பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள்…

சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் சி.பி.ஆர்ட் சென்டரில் அந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மிகப் பெரிய கேன்வாஸில் இரண்டு பேர் மும்முரமாக ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை அழைத்துப் பேசினோம். அவர் பெயர் பாலசுப்ரமணி.

பாலசுப்ரமணிக்கு சொந்த ஊர் பாவியூர். ‘பாவி’ என்றால் கிணறு என்று ஓர் அர்த்தம் இருக்கிறதாம். ஊட்டி, கோத்தகிரியில், சோளூர் மட்டத்துக்கு அருகே இருக்கிறது பாவியூர். மலை கிராமம். மொத்தம் 130 ஆதிவாசிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசு புண்ணியத்தில் மின்சாரம் இருக்கிறது. வெளியுலகத் தொடர்பு கொள்ள ஒரே ஒரு பேருந்து வந்து செல்கிறது. அதுவும் நேரடியாக ஊருக்கு வருவதில்லை. ‘காபி ஸ்டோர்’ என்கிற அத்தியூர் மட்டத்துக்கு அருகே இருக்கும் இடத்தில் இறக்கிவிட்டுப் போய்விடும். அங்கிருந்து பிரியும் மண்சாலையில் நடந்தால் பாவியூருக்குப் போய்விடலாம்.  பிள்ளைகள் படிக்க ஐந்தாவது வரையான ஆரம்பப்பள்ளி இருக்கிறது. மேற்கொண்டு படிக்க, கீழ் கோத்தகிரிக்கோ, மேல் கோத்தகிரிக்கோதான் போக வேண்டும். இப்படிப்பட்ட உள்ளடங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்கள் இந்த ஓவியர்கள். Image

‘‘இந்த ஓவியங்களை எல்லாம் நாங்க வரைவோம்னு நினைக்கவே இல்லை. ஆதிவாசிகளுக்கு ஓவியங்கள் வரையும் பழக்கம் இருக்கு. குகைகள்ல, மலைப் பாறைகள்ல வரைவாங்க. அந்தப் பழக்கம் தொடர்ந்துகிட்டே இருந்துச்சு. கோயில் திருவிழா, பண்டிகைன்னா வீட்ல இருக்குற சுவத்துல சித்திரங்கள் வரைவாங்க. வீடுன்னா நீங்க நினைக்கிற மாதிரி காரை வீடு இல்லை. மண் சுவரால எழுப்பின வீடு. எங்க தலைமுறையில ஓவியம் தெரிஞ்ச ஒரே ஆளு இந்தா இருக்காரே… கிருஷ்ணன்… அவரோட தாத்தா மாதன்தான்’’. என்று பக்கத்தில் நின்றிருக்கும் கிருஷ்ணனைக் காட்டிவிட்டு மேலே தொடர்கிறார் பாலசுப்ரமணி.

‘‘கிருஷ்ணன், எனக்கு சித்தப்பா மகன். ஒரு நாள் சி.பி.ராமசாமி ஐயர்  ஃபவுண்டேஷன்லருந்து அதன் இயக்குநர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா எங்க ஊருக்கு வந்திருந்தாங்க. ‘வெள்ளரிக்கொம்பை’, ‘தாழைமொக்கை’ போன்ற இடங்கள்ல இருக்குற பாறை ஓவியங்களைப் பாத்தாங்க. அழியப் போற நிலைல இருந்துச்சு ஆதிவாசிகளோட ஓவியக்கலை. ‘இதை இப்படியே விடக்கூடாது. யாராவது கத்துக்க வாங்க’ன்னு எங்களை ஊக்குவிச்சாங்க. தாத்தா சொல்லிக் கொடுத்த பழக்கத்துல கிருஷ்ணன் கொஞ்சம் வரைவாரு. ஆனா, முறையா தெரியாது. இங்கே சென்னைக்கு வந்தோம். சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் எங்களுக்கு ஓவியர் வெங்கடேசனை அறிமுகம் செஞ்சு வச்சுது. அவருதான் எங்களுக்கு பிரஷ் பிடிச்சு எப்படி வரையறதுன்னு சொல்லிக் கொடுத்தாரு. மெல்ல மெல்ல வரைய ஆரம்பிச்சோம். இப்போ நான், கிருஷ்ணன், என் மகள் கல்பனா மூணு பேரும் சேந்து வரைஞ்ச ஓவியங்கள்தான் இங்கே இருக்கறதெல்லாம்…’’.

ஒவ்வொரு ஓவியமும் ஒரு தனி உலகம். குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியலைப் பேசுபவை. ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னார் பாலசுப்ரமணி. இங்கே சில மாதிரி ஓவியங்களும் அதற்கான விளக்கமும்…

கொவைக்கல் 

Image

திணை, சாமை, ராகி என எந்த தானியமுமாக இருக்கட்டும்… காட்டில் விளைந்த பிறகு அப்படியே எடுத்துப் பயன்படுத்திவிட மாட்டார்கள் குறும்பர் இன மக்கள். அதைக் கொண்டு போய் கொவைக்கல் என்கிற இடத்தில் மொத்தமாக வைத்துப் படைப்பார்கள். சாமி கும்பிட்ட பிறகுதான் தானியங்கள் வீட்டுக்குப் போகும்.

கும்பதேவா

Image

‘கும்ப’ என்றால் குடம். வருடம் ஒரு மண் பானையை எடுத்துப் போய் மலை மேல் இருக்கும் தெய்வத்துக்கு வைத்துவிட்டு வருவார்கள். சில இடங்களில் மூன்று குடங்கள் வைக்கப்படும். சில இடங்களில் 7 குடங்கள் இருக்கும். 7 விதமான தானியங்கள் நன்றாக தங்கள் மண்ணில் விளைய வேண்டும் என்பதற்கு இந்த வழிபாடு. 7 நாள் காட்டுக்குள் இருந்து கடும் விரதம் இருப்பார்கள். ஆடைகள் எதுவும் அணியாமல், சுள்ளி இலைகளை மட்டும் கட்டிக் கொண்டு விரதம் நடக்கும். ‘மொதலி’ எனப்படுபவர் கிட்டத்தட்ட பூசாரி மாதிரி. புதிதாக பயிர் வைப்பதென்றாலும், களை எடுப்பது என்றாலும், அவர்தான் தொடங்கி வைப்பார்.  தங்களைக் காக்கும் தெய்வமான ‘கும்பதேவா’வின் பெயரை உரக்கச் சொல்லி, காரியங்களுக்கு துணையிருக்க வேண்டுவார் மொதலி.

தேன் எடுத்தல்

Image

‘தேன்’. நினைத்தாலே தித்திக்கும். ஆனால், அதை எடுப்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதிலும் மலைத்தேன் எடுப்பது என்பது சூரத்தனமான வேலை. எப்பேர்ப்பட்ட மலையாக இருந்தாலும், எந்தப் பாறை இடுக்கில் இருந்தாலும் தேனை எடுத்துவிடுவார்கள் குறும்பர் இன மக்கள். ஆனால், அது ஒரு கூட்டு முயற்சி. அது போன்ற தேனெடுக்கும் ஒரு நிகழ்வுதான் இந்த ஓவியம். மலை உச்சியில் ஒரு மரம். அதில் பிணைக்கப்பட்ட கயிற்றேணியை இருவர் பாதுகாப்புக்காக பிடித்துக் கொள்கிறார்கள். கயிறு, மலைப் பாறையில் இறங்க, உச்சியில் ஒருவர் மற்றொரு கயிறை விடுகிறார். கயிற்றில் கூடை. அதில் தேனீக்களை விரட்ட புகை மூட்டம். நூலேணியில் இருவர் தேனெடுக்க ஏறுகிறார்கள்.

திருமணம் 

Image

குறும்பர் பழங்குடியினர் வாழ்வில் சுவாரஸ்யமான வைபவம் திருமணம். மாப்பிள்ளை வீட்டிலிருந்து 7 பேர் கிளம்பிப் போய் பெண் கேட்பதில் களை கட்ட ஆரம்பிக்கும் திருமண விழா. வரதட்சணை என்கிற பேச்சுக்கு குறும்பர் இன மக்கள் வாழ்வில் இடமில்லை. ஆனால், சீர் உண்டு. அதிலும் ஓர் ஆச்சரியம். இரண்டு சீர். ஒன்று திருமணத்துக்கு… மற்றொன்று மரண நிகழ்வுக்கு! மண மக்களின் மரணத்துக்கும் சேர்த்து திருமணத்தின் போதே சீர் செய்து விடுகிறார்கள். மண மக்களை மேடைக்கு அழைத்து வரும் போது அவர்கள் பாதங்களைத் தரையில் பட விடுவதில்லை. விரிப்புகளை விரித்து அதன் மேல் நடந்து வரச் செய்கிறார்கள். காட்டில் விளையும் ‘பால மரம்’ மேடையில் நடப்படுகிறது. மணமக்கள் அமர ஒரு பிரத்தியேக திண்ணை தயாராகிறது. (அதற்கு அவர்கள் மொழியில் ‘அக்க திண்ணெ மதுவெ’ என்று பெயர்). மண்ணில் குழைத்துச் செய்யப்பட்ட திண்ணை. அதில் மணமக்கள் அமர, திருமணம் நடக்கிறது. மாங்கல்யமாக கருகமணி கோர்த்த காசுமாலை மணமகளுக்கு அணிவிக்கப்படுகிறது.

கொவை மனை 

Image

காட்டில் வெள்ளாமை விளைந்த பிறகு தானியங்கள் பங்கு போடும் இடம் இது. இந்த இடத்தில், இந்த மனையின் முன்புதான் தானியங்கள் பிரிக்கப்படும். முக்கியமாக மூன்று பங்காகப் பிரிக்கப்படும். முதல் பங்கு ‘மொதலி பங்கு’. ஊர்ப் பெரிய கட்டுக்கு, எல்லா காரியங்களையும் முன் நின்று நடத்துபவர்களுக்கு என்றும் வைத்துக் கொள்ளலாம். அடுத்தது மண்ணுக்காரனுக்கு. தானியம் விளைந்த மண்ணுக்குச் சொந்தக்காரனுக்கான பங்கு. அடுத்தது ‘சாதிக்காரன் பங்கு’. தானியம் விளைய உதவிய உழைப்பாளர்களுக்கானது.

கெதேவா 

Image

காட்டு தெய்வத்திடம் வேண்டுதல் நடக்கிறது. ‘பயிர்களை எலி, பூச்சியிடம் இருந்து காப்பாற்று தெய்வமே! விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு உதவு சாமி!’ என்ற கோரிக்கையோடு தெய்வத்தை வழிபடுகிறார்கள். ஒரு மரத்தைச் சுற்றிச் சிறு குழி வெட்டியிருக்க, அதன் நடுவே இருக்கும் தெய்வத்துக்கு 7 குடம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அந்தத் தண்ணீரிலேயே குழி நிரம்பி வழிந்துவிட்டால் அந்த வருடம் விளைச்சல் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமோகமாக இருக்கும் என்று அர்த்தமாம்.

திருவிழா 

Image

ஊர்த் திருவிழாவை அமர்க்களமாகக் கொண்டாடுவது குறும்பர் இன மக்களின் வழக்கம். ஆட்டம், பாட்டு எல்லாம் தூள் பறக்கும். பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, கூட்டாகச் சேர்ந்து நடனமாடுவார்கள்.

‘‘கிட்டத்தட்ட அழிஞ்சுபோற நிலைமல இருந்த எங்களோட ஓவியக்கலையை மீட்டெடுக்க சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் உதவியிருக்கு. அதோட எங்களோட பழக்க வழக்கம், பண்பாடு எல்லாத்தையும் இதன் மூலமா எங்க அடுத்த தலைமுறையும் தெரிஞ்சிக்கவும் வழி பிறந்திருக்கு. இந்த ஓவியங்கள் மூலமா எங்களுக்கு வருமானம் கிடைக்கவும் செய்யுது’’ என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார் கிருஷ்ணன்.

வருமானம் என்று அவர் சொன்னாலும், மிகப் பெரிய ஓவியங்களைத் தவிர மற்ற எல்லாமுமே 200லிருந்து 900 ரூபாய்க்குள்தான் விலை. எங்கோ மலை கிராமத்திலிருந்து வந்து தங்கள் பாரம்பரியத்தை ஓவியங்களாக வடிக்கும் அந்த மூன்று பேரையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

ஓவியங்களில் உயிர்ப்போடு திகழ்வது மரங்களும் செடி, கொடிகளும். சின்னச் சின்ன கோடுகளில் அற்புதமாக இயற்கையை வரைந்து வைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விஷயமும் உண்டு. இவற்றில் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் முகங்கள் இல்லை. பழமையையும் இயற்கையையும் போற்றி, இன்று வரை பாதுகாத்து வரும் எத்தனையோ மலைவாழ் மக்களைப் போலவே!

– பாலு சத்யா

படங்கள்: ஆர்.கோபால்

குறிப்பு: இந்த ஓவியக் கண்காட்சி, சென்னை, ஆழ்வார் பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் வளாகத்தில், Vennirul Art Galleryயில் செப்டம்பர் 21 வரை நடை பெறுகிறது.

தொடர்புக்கு… ஓவியர் பாலசுப்ரமணி – 8489001673.

திரைவானின் நட்சத்திரங்கள் – 13

நகைச்சுவை நாயகி!

Image

மேபெல் நார்மண்ட் (Mabel Normand). இந்தப் பெயர் இன்றைக்கு ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் பலபேருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. திரைத்துறையில் ஒவ்வொரு நாளும் அரங்கேறும் மாற்றம் என்கிற வெள்ளத்தில், புதுமை அலையில் அவர் பெயரும் அடித்துப் போகப்பட்டதில் ஆச்சரியமும் இல்லை. ஹாலிவுட்டில், பேசாப் படங்கள் காலத்தில் ‘நம்பர் ஒன்’ நாயகி அவர். திரைத்துறையில், திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு பணியாற்றிய ஆரம்பகாலப் பெண்களில் அவரும் ஒருவர்.

கறை, துணிகளுக்கு ஆகாது. களங்கம், மனிதனுக்கு ஆகாது. அதிலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், பிரபலமானவர்கள் வாழ்க்கையில் சின்னக் கரும்புள்ளி விழுந்தால்கூட, அது மெல்ல மெல்லப் பெரியதாகி, அவர்களை இருளில் மூழ்கடித்து, அட்ரஸ் இல்லாமல் செய்துவிடும். மேபெல்லுக்கு அதுதான் நடந்தது.

1892, நவம்பர் 9ம் தேதி நியூ யார்க்குக்கு அருகே இருக்கும் நியூ பிரைட்டோனில் பிறந்தார் மேபெல். அப்படி ஒன்றும் வசதியான குடும்பமும் அல்ல. அம்மா, ஐரிஷ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அப்பா, கிளாட் நார்மண்ட் (Claud Normand) பிரெஞ்ச் கனடியன். சாதாரண தச்சுத் தொழிலாளி. சின்னச் சின்ன கேபினெட்டுகள் செய்வது, மேடை அலங்காரப் பணிகளைச் செய்வதுதான் வேலை. அவ்வப்போது, துறைமுகத்தில் கப்பல்களில் வேலை பார்ப்பதும் உண்டு.

மேபெல் நார்மண்ட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த போது அவருக்கு வயது 16. அதற்குக் காரணமாக இருந்தவர் மேக் சென்னட் (Mack Sennet) என்கிற பிரபல இயக்குநர். அவர், மேபெல்லை மற்ற நடிகைகளைப் போலத்தான் பார்த்தார். தன் முதல் படத்தில்கூட ஓர் அழகுப் பதுமையாகத்தான் சித்தரித்தார். ஆனால், ஒரு படைப்பாளியான அவருக்கு மேபெல்லிடம் இயல்பாகவே இருந்த துறுதுறுப்பும் நகைச்சுவை உணர்வும் யோசிக்க வைத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களுக்கு இந்தப் பெண் பொருத்தமானவள் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது. பின்னாளில், ‘கீ ஸ்டோன் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்த போது தன்னுடனேயே மேபெல்லை அழைத்துக் கொண்டார் மேக்.

ஹாலிவுட்டில் பேசாப் படங்கள் வெளி வந்த காலத்தில் பிரபலமாக இருந்த சார்லி சாப்ளின், ரோஸ்கோ ‘ஃபேட்டி’ ஆர்பக்கிள் (Roscoe ‘Fatty’ Arbuckle) போன்ற பிரபல நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு மேபெல்லுக்குக் கிடைத்தது. எல்லாமே குறும்படங்கள். ஆனால், பெரிய அளவுக்கு மேபெல்லை மக்களிடம் அடையாளப்படுத்தின. சார்லி சாப்ளின் தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அவருடன் நிறைய படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார் மேபெல். கூடவே, திரைக்கதை எழுதுவார், இணை இயக்குநராகப் பணியாற்றுவார், டைரக்‌ஷனும் செய்வார். பல சமயங்களில் இவர் செய்யும் இந்தக் காரியங்கள் சாப்ளினுக்கு தொந்தரவாக இருந்தன. அவருடைய நடிப்பாற்றலை வெளிக்காட்ட முடியாமல், நினைத்ததைச் செய்ய முடியாமல் தடை போட்டன என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

Image

1914ல் சார்லி சாப்ளினின் முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான ‘டில்லி’ஸ் பங்ச்சர்டு ரொமான்ஸ்’ (Tillie’s Puctured Romance) வெளியானது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேபெல். 1918ல் மேக் சென்னெட்டுக்கும் அவருக்கும் இருந்த உறவு முடிவுக்கு வந்தது. சாமுவேல் கோல்ட்வின் என்பவருடன் புதிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவருடன் பணியாற்றக் கிளம்பிவிட்டார் மேபெல். அப்போது, அவருடைய சம்பளம் வாரத்துக்கு 3,500 டாலர்.

***

வாழ்க்கை ஏற்ற, இறக்கத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது. பல புதிய நடிகைகள் களமிறங்க, மேபெல்லுக்கு மவுசு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் அவருக்கு அறிமுகமானார் வில்லியம் டெஸ்மாண்ட் டெய்லர். நடிகர், இயக்குநர். ஹாலிவுட்டில் மிக முக்கியமான இயக்குநர். 59 பேசாப்படங்களை இயக்கியவர். புத்தகப் பரிமாற்றத்தில் ஆரம்பித்தது இருவருக்குமான நட்பு. டெய்லரிடம் பல அரிய புத்தகங்கள் இருந்தன. புத்தகத்தை இரவல் வாங்குவது, படித்துவிட்டுத் திருப்பிக் கொடுப்பது என்று தொடர்ந்தது இருவருக்குமான நட்பு. அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் கிரோக்ஸ் (Robert Giroux), ‘‘டெய்லர், மேபெல் நார்மண்டை உயிருக்கு உயிராக நேசித்தார். உண்மையில், மேபெல் ‘கோக்கெய்ன்’ என்ற போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். அதிலிருந்து தன்னை விடுவிக்க ஏதாவது செய்யும்படி டெய்லரை அணுகியிருந்தார் மேபெல்’’ என்று தன் நூல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

Image

நடிகைகளின் மன அழுத்தத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதிர்ஷ்டக் காற்று வீசும்போது, உயரத்தில் பறப்பார்கள். திடீரென்று திரும்பிப் பார்க்க யாரும் இல்லாமல், காய்ந்த சருகாக தெருவில் விழுந்து கிடப்பார்கள். பல வருத்தங்களையும் துயரங்களையும் மென்று விழுங்க, அவர்களுக்கு ஏதாவது தேவைப்படத்தான் செய்கிறது. அந்தக் காரணத்துக்காகக் கூட மேபெல்லுக்கு கோகெய்ன் எடுத்துக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அந்தப் பழக்கம் மிகப் பெரிய அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

***

பிப்ரவரி 1, 1922. இரவு 7:45 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ். ஆல்வரேடோ வீதியில் இருக்கும் டெய்லரின் பங்களா. டெய்லர் கொடுத்திருந்த ஒரு நல்ல புத்தகத்துடன், மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார் மேபெல். இருவரும் முத்தங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். மேபெல்லை காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தார் டெய்லர். டெய்லரை உயிரோடு கடைசியாகப் பார்த்தது தான்தான் என்பது அப்போது மேபெல்லுக்குத் தெரியாது.

அடுத்த நாள் காலை. மணி 7:30. டெய்லரின் பக்கத்து வீட்டுக்காரர், ஏதோ காரியமாக வந்தவர் டெய்லர் கீழே கிடப்பதைப் பார்த்தார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுத்தார். டெய்லரை சோதித்துப் பார்த்த ஒரு டாக்டர், அவர் வயிற்றில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உயிரிழந்துவிட்டதாகச் சொன்னார். நேற்று வரை நன்றாக இருந்த மனிதர், திடீரென்று இறந்தார் என்றால் எப்படி? பலபேரின் சந்தேகம், டெய்லரின் உடலை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தது. சோதித்த, தடய அறிவியல் நிபுணர்கள், டெய்லரை யாரோ துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள், அது மிகச் சிறிய காலிபர் பிஸ்டலாக இருக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், அவர் இருந்த பங்களாவிலோ, சுற்றுப்புறத்திலோ அந்த பிஸ்டல் கிடைக்கவில்லை.

டெய்லரின் இறுதிச் சடங்கில் கட்டுப்படுத்த முடியாத துயரத்தோடு, சடங்கு முடியும் வரை விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார் மேபெல். டெய்லரின் மரணம், வேறொரு பிரச்னையை மேபெல்லுக்குக் கொண்டு வந்தது. ஏற்கனவே சினிமா வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. புகழ் என்கிற வெளிச்சம் இருந்த இடம் தெரியாமல் மங்கிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையிலும் ஆதரவாக இருந்தவர் டெய்லர் ஒருவர்தான். ஆனால், அவருடைய மரணமே மேபெல்லின் மேல் தீராத பழியைக் கொண்டு வந்து போட்டுவிட்டது. ஏனென்றால், டெய்லரை கடைசியாக உயிரோடு பார்த்திருந்தவர் மேபெல் ஒருவர்தான்.

லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் டிபார்ட்மென்ட், மேபெல்லை குடைந்து எடுத்தது. பல கேள்விகளைக் கேட்டது. வெடித்துக் கிளம்பும் அழுகையுடன் திரும்பத் திரும்ப தனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வதைத் தவிர மேபெல்லுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆதாரங்கள், சாட்சிகள் எதுவும் இல்லாமல் பழி மட்டும் போட்டால் எப்படி? மேபெல்லை விடுவித்தது காவல்துறை.

டெய்லர், இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னால் மத்திய குற்றவியல் தடுப்புப் பிரிவை அணுகியிருந்தார். மேபெல்லுக்கு கோகெய்ன் சப்ளை செய்யும் சிலரை அடையாளம் காட்டி, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட கோகெய்ன் வியாபாரிகள், கூலிப்படையினரை அனுப்பி, டெய்லரின் கதையை முடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றுவரை டெய்லரின் மரணத்துக்கான காரணம் தெளிவாகவில்லை. கொலையாளி என ஒருவரையும் குற்றம் சாட்டவும் முடியவில்லை. அந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவே இல்லை.

***

Image

‘பட்ட காலிலே படும்’. பழைய பழமொழி. ஆனால், அது உண்மை என்பதை நிரூபிப்பதைப் போலத்தான் மேபெல்லின் வாழ்க்கை அமைந்தது. டெய்லரின் இழப்பு, பல சந்தேகங்களை மேபெல்லின் மேல் விதைத்துவிட்டுப் போயிருந்தது. அதோடு, சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து பின்னடைவு. ஆனால், வாழ வேண்டுமே! பற்றிக் கொண்டு மேலேற அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை சினிமாதானே! சில வாய்ப்புகள் வருவது, சில கிடைக்காமல் போவது. கிடைத்தாலும் திறமையை வெளிப்படுத்தும்படியான கேரக்டர் அமைவதில்லை. இந்தப் போராட்டத்துக்கிடையில்தான் அது நடந்தது.

1924. மேபெல்லின் காரோட்டி ஜோ கெல்லி (Joe Kelly), ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சுடப்பட்டவர் கோர்ட்லாண்ட் எஸ். டைன்ஸ் என்கிற மிகப் பெரிய புள்ளி. கோடீஸ்வரர், எண்ணெய்த் தரகர், பொழுதுபோக்குக்காக கோல்ஃப் விளையாடுபவர். இதில் சிக்கல் என்னவென்றால் டைன்ஸ் சுடப்பட்டது மேபெல்லின் துப்பாக்கியால். இது மட்டும் பிரச்னை இல்லை. டைன்ஸுக்கும் எட்னா புர்வியான்ஸ் (Edna Purviance) என்ற நடிகைக்கும் பழக்கம் இருந்தது. எட்னா, மேபெல்லின் தோழி. மேபெல்லைப் போலவே சார்லி சாப்ளினுடன் பல படங்களில் நடித்திருப்பவர். முக்கியமாக, இறந்து போன டெய்லரின் பக்கத்துவீட்டுக்காரர். போதாதா? மறுபடியும் புரளி கிளம்பியது. டைன்ஸ் மரணத்தோடு மேபெல்லைத் தொடர்புபடுத்திப் பேசினார்கள். அவர் மனதைக் காகிதம் போலக் கசக்கி, கிழித்துப் போட்டார்கள். இந்த நிகழ்வுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதால், அவதூறுகளை இடது கையால் ஒதுக்கித் தள்ளிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தார் மேபெல்.

அப்போது ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த ‘ஹால் ரோச் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். இயக்குநர் எஃப்.ரிச்சர்ட் ஜோன்ஸ் இயக்கிய ‘ரேஜடி ரோஸ்’ (Raggedy Rose) படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் நான்கு படங்களில் நடித்தார்.

1926ல் லியூ கோடி (Lew Cody) என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டார். லியூ ஏற்கனவே மேபெல்லுக்கு அறிமுகமானவர்தான். 1918ல் வெளியான ‘மிக்கி’ என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். அது என்னவோ மண வாழ்க்கை ருசிக்கவில்லை. கொஞ்ச நாள்தான் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். பிறகு, பீவர்லி ஹில்ஸில் அருகருகே இருந்த தனித்தனி வீடுகளில் வசித்தார்கள்.

60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் மேபெல். பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவரின் வாழ்க்கை, சில அவதூறுகளாலும், வீண் பழியாலும் தடைபட்டது. உதவ ஆள் இல்லை. ஏற்றிவிட ஏணி இல்லை. ஆதரவாக இருக்க, பேச உண்மையான துணை இல்லை. உடலும் அவருக்கு ஒத்துழைக்க மறுத்தது. காசநோய் வாட்டி வதைத்தது. கலிபோர்னியாவில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல், 1930, பிப்ரவரி 23ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது வெறும் 37.

இலக்கியமாகட்டும்… திரைப்படமாகட்டும்… நகைச்சுவைதான் மிகக் கடினமான களம். அதை மௌனப்படக் காலத்திலேயே சாத்தியமாக்கியவர் மேபெல் நார்மண்ட். சொல்லப் போனால், இன்றைய நடிகைகளுக்கு ஓர் முன் மாதிரி. சார்லி சாப்ளின் என்ற மிகப் பெரிய மேதையுடன் இணைந்து நடித்த மேபெல், தன் இறுதி நாள் வரை நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர். ஆனால், அவருடைய நிஜ வாழ்க்கையில் நகைச்சுவைக்கு இடமே இல்லை என்பதுதான் குரூரமான உண்மை.

– பாலு சத்யா

***

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

பேட்ரிஸியா நீல்

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

Mabel Normand

Born Mabel Ethelreid Normand
November 9, 1892
New Brighton, Staten Island, U.S.
Died February 23, 1930 (aged 37)
Monrovia, California, U.S.
Cause of death Tuberculosis
Resting place Calvary Cemetery
Nationality American
Other names Mabel Normand-Cody
Occupation Actress, director, screenwriter, producer
Years active 1910–1927
Spouse(s) Lew Cody (m. 1926–1930)

திரைவானின் நட்சத்திரங்கள் – 12

வாழ்ந்து பார்க்கலாம்…

Image

* நான் ஒரு அடங்காப்பிடாரி, அவ்வளவுதான். 

முன்பொரு காலத்தில் தமிழ் நடிகைகளுக்கு சில அடையாளங்கள் இருந்தன. ‘‘அய்யய்யோ… அந்தம்மா நடிச்ச படமா? ஒரே அழுவாச்சியா இருக்கும்பா. ஆள வுடு… நான் வர்ல’’ என்று பழைய வண்ணாரப்பேட்டை பக்கம்கூட சர்வ சாதாரணமாக சில நடிகைகளின் பெயர்களைச் சொல்லிப் பேசிக் கொள்வார்கள். அது திரையில்தானே தவிர, நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்த நடிகைகள் அவர்கள். உண்மையில், திரைக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் தங்கள் வாழ்நாள் முழுக்க துயரத்தை மட்டுமே அனுபவித்த நடிகைகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பேட்ரிஸியா நீல் (Patricia Neal). திரைக்குப் பின்னால் அவர் அனுபவித்த துயரம்… அம்மம்மா… வெற்று வார்த்தைகளில் விவரித்துவிடக் கூடிய காரியம் இல்லை அது! இத்தனைக்கும் அவர் ஒன்றும் சாதாரண மனுஷி கிடையாது. உலகம் முழுக்க எத்தனையோ நடிகைகள் தங்களுடைய லட்சியம் என்று கருதியிருக்கும் ஒரு விருதை அனாயசமாகப் பெற்றிருப்பவர். அது, ஆஸ்கர் விருது!

ஜனவரி 20, 1920. அமெரிக்காவிலுள்ள கென்டகி மாகாணத்தில் இருக்கும் பேக்கார்ட் என்கிற சின்னஞ்சிறு ஊரில் பிறந்தார் பேட்ரிஸியா நீல். அப்போது அவருக்கு பெற்றோரால் வைக்கப்பட்ட பெயர் ‘பேட்ஸி’. அப்பாவுக்கு நிலக்கரிச் சுரங்கமொன்றில் வேலை. அம்மா மருத்துவர். டென்னஸியில் இருக்கும் நாக்ஸ்வில்லியில் (Knoxville) வளர்ந்தார் பேட்ரிஸியா. கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் உள்ள குடும்பம். அது, கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். பேட்ரிஸியாவுக்கு பத்து வயது. குழந்தைகள், கிறிஸ்துமஸ் பரிசாக எது கேட்டாலும் கிடைக்கும். கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) கொண்டு வந்து கொடுத்துவிடுவார். இந்த நம்பிக்கை கிறிஸ்தவ குழந்தைகளுக்கு ஆழமாக உண்டு. பேட்ரிஸியாவுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பேட்ரிஸியா, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்… ‘‘ஐயா வணக்கம். இந்த வருடம் கிறிஸ்துமஸுக்கு எனக்கு கவர்ந்திழுக்கும் பொம்மைப் பொருட்களோ, வாயும் மனதும் நிறையும் அளவுக்கு சாக்லெட்டுகளோ, கேக்குகளோ வேண்டாம். நான் நாடகம் பயில வேண்டும். இது கிடைத்தால் போதும். இந்த வருடத்திய கிறிஸ்துமஸ் எனக்கு மகிழ்ச்சியாகக் கழியும்’’.

ஒரு சின்னஞ்சிறுமியின் எளிய கோரிக்கை. கிறிஸ்துமஸ் தாத்தா மனது வைத்தாரோ என்னவோ… நாடகத்தைப் படிக்கும் பிரிவில் சேரும் வாய்ப்புக் கிடைத்தது. அது மட்டுமல்ல… அந்த வருடம் டென்னஸி மாகாண அளவில், பள்ளிகளுக்கு இடையே நடந்த நாடகம் வாசிப்பதற்கான பிரிவில் முதல் பரிசை வென்றார் பேட்ரிஸியா. நார்த் வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில் இரண்டு வருடங்கள் நாடகப் பயிற்சி பெற்ற பிறகு, நியூ யார்க்குக்குப் போனார். பிரபல ‘பிராட்வே’ தயாரிப்பில் பயில முதல் வாய்ப்பு. ‘தி வாய்ஸ் ஆப்ஃ தி டர்ட்டில்’ என்கிற அந்த நாடகத்தில் அவர் நடித்தபோது அவருடைய பெயரும் மாறியது. என்ன காரணமோ, கம்பெனிக்காரர்கள் அவர் பெயரை ‘பேட்ஸி’ என்பதில் இருந்து ‘பேட்ரிஸியா’ என்று மாற்றினார்கள். அதற்கு அடுத்து அவர் நடித்தது ‘அனதர் பார்ட் ஆஃப் தி ஃபாரஸ்ட்’ என்ற நாடகத்தில். அதற்கு மிகச் சிறந்த நடிகைக்கான ‘டோனி’ விருது கிடைத்தது. மெல்ல மெல்ல ஒரு நடிகையாக அறியப்பட ஆரம்பித்தார்.

‘இந்தப் பெண் யார்? இவளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே!’ என்கிற எண்ணம் ஒரு நிறுவனத்துக்கு வந்தது. அது சாதாரண நிறுவனம் இல்லை. ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘வார்னர் பிரதர்ஸ்’. ஆளனுப்பினார்கள். அழைத்தார்கள். ஏழு வருடங்களுக்கு தங்கள் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார்கள். அட்வான்ஸ் கொடுத்தார்கள். பிறகு கொஞ்சம் பிசியாகிவிட்டார் பேட்ரிஸியா. வரிசையாகப் படங்கள். 1949ல் அவர் நடித்த ‘தி ஹேஸ்டி ஹார்ட்’ அதில் முக்கியமான ஒன்று. அதில் நடித்தவர் ரொனால்ட் ரீகன். பின்னாளில் அமெரிக்காவின் அதிபராகப் பதவி ஏற்றவர். அதே ஆண்டு, அதற்கு அடுத்து நடித்த படம்தான் அவர் வாழ்க்கையை மாற்றிப் போட்டது. ‘தி ஃபவுண்டெய்ன் ஹெட்’.

—-

Patricia Neal Hud

* கேரி கூப்பர் மிக வசீகரமான மனிதர்.

சிலருக்கு சில நேரங்களில் சிலரைப் பிடித்துப் போகும், அதுவும் பார்த்த கணத்தில். ஜென்ம ஜென்மாந்திரமாக ஒரு பந்தம் இருவருக்கும் இருந்தது போல ஓர் உணர்வை ஏற்படுத்திவிடும். அந்த உணர்வு, அந்தப் படத்தில் நடித்த கேரி கூப்பரை (Gary Cooper) பார்த்தபோது பேட்ரிஸியாவுக்கு ஏற்பட்டது. அப்போது அவருக்கு வயது 21. கூப்பருக்கு வயது 46. திருமணம் ஆகியிருந்தது. அவருக்காக எதையும் செய்ய சித்தமாக இருந்தார் பேட்ரிஸியா. நட்பு, காதலாக மாறியது. ஒருவருடம், இரண்டு வருடம் அல்ல… 3 வருடம் துரத்தித் துரத்திக் காதலித்தார்.

விதி, பேட்ரிஸியாவின் வாழ்க்கையில் முதன் முறையாக மூக்கை நுழைத்தது. ‘இதோ பார்… நான் இருக்கேன். நீ நினைச்சதெல்லாம் நடந்துட்டா, அப்புறம் நான் என்னத்துக்கு?’ கொக்கரித்துச் சிரித்தது விதி. பிஸியாக, ஒரு ஷூட்டிங்கில் இருந்தபோது கூப்பருக்கு ஒரு தந்தி வந்தது. அனுப்பியிருந்தவர் அவர் மனைவி வெரோனிகா. ‘என்ன செய்யப் போறீங்க? நான் வேணுமா, அவ வேணுமா? முடிவு உங்க கையில’. அவ்வளவுதான். கூப்பரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பேட்ரிஸியாவை அழைத்தார். விவரத்தைச் சொன்னார்.

‘ஏங்க… உங்களுக்குத் தெரியாதா? நான் உங்க கருவை சுமந்துகிட்டு இருக்கேன்’.

கூப்பர் ரொம்ப கூலாக சொன்னார்… ‘கலைச்சிடு’.

இது பேட்ரிஸியாவின் வாழ்க்கையில் விழுந்த முதல் அடி. சாதாரணப் பெண்கள் எழுந்து நிற்கவே முடியாத அடி. அதிலிருந்தும் மீண்டு எழ முயற்சித்தார். வாழ்க்கை அவரை பயமுறுத்திப் பார்த்தது. ‘ட்வென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்’ தயாரிப்பில் வெளியான ஒரு படத்தில் நடித்தார். ‘தி டே தி எர்த் ஸ்டுட் ஸ்டில்’ என்ற படம். வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தால் அவருக்குத் தடை போட முடியவில்லை. ஆனால், அவர் மேல் வேறொரு பிம்பம் சினிமா துறையில் அழுத்தமாக விழுந்தது. வார்னர் பிரதர்ஸின் ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே அவர் மற்றொரு கம்பெனியில் நடித்ததாலோ என்னவோ, அவருடைய சினிமா வாழ்க்கை தேங்கிப் போனது. கைவசம் படங்கள் எதுவும் இல்லை. ஆனால், வாழ்க்கை நீண்டு, பெருத்து ‘வா… வா!’ என்று சிரித்து அழைத்தது. நடிகை. சினிமாவாக இருந்தால் என்ன… நாடகமாக இருந்தால் என்ன…? நாடகத்தில் நடிக்கப் போனார் பேட்ரிஸியா. அப்போது நாடக உலகில் பிரபலமாக இருந்த ‘ஹெல்மேன்’ என்பவரின் படைப்பு. ‘தி சில்ட்ரன்ஸ் ஹவர்’ என்ற அந்த நாடகம் பரவலான வரவேற்பைப் பெற்றது. 1953ல் ரோல்ட் டால் (Roald Dahl) என்ற எழுத்தாளரைச் சந்தித்தார். பேசி, முடிவெடுக்கக் கூட அவகாசம் இல்லை என்பது போல இருவரின் திருமணமும் நடந்தது.

‘நான் விரும்பவே இல்லை என்றாலும்கூட அவரைத் திருமணம் செய்து கொண்டேன்’ என்று தன் சுயசரிதைக் குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார் பேட்ரிஸியா. 30 வருட இல்வாழ்க்கையில் அவர்களுக்கு 5 குழந்தைகள்.

—-

Image

* அடிக்கடி என் வாழ்க்கையிலும் கிரேக்கக் கதைகளில் வருவது போல துயரச் சம்பவங்கள். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை எனக்குள் இருக்கும் நடிகை ஏற்க மறுக்கிறாள்.

சினிமா, நாடகம் இரண்டிலும் மாறி மாறி நடித்தார் பேட்ரிஸியா. எதில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தாலும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். 1961ல் அவர் நடித்த ‘பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃபானிஸ்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினார்கள். அதற்கடுத்து அவர் நடித்த படம் ‘ஹட்’. அவருக்கு இணையாக நடித்தவர் ஹாலிவுட்டின் அப்போதைய பிரபல ஹீரோ பால் நியூமேன். வசூலில் சக்கை போடு போட்ட அந்தப் படம் ‘சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை’ அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

இதற்கிடையில் 1960ல் அது நடந்தது. கணவர் டால் நான்கு வயது மகன் தியோவோடு ரோட்டில் நடந்து போனபோது ஒரு டாக்ஸி அவர்கள் மேல் மோதியது. அதில் குழந்தை தியோவுக்கு மூளை குழம்பிப் போனது. இது நடந்து இரண்டு வருடத்தில் மற்றொரு இடி பேட்ரிஸியாவுக்கு. மூத்த மகள் ஒலிவியா என்கிற அழகு மகள், அம்மை நோய் வந்து இறந்து போனாள். அப்போது அவளுக்கு 7 வயது.

இன்னல்கள் தொடர்ந்து வந்தாலும் அவரின் நடிப்பு வாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தது. துயரம் என்கிற பழிகாரனும் அவளை விடுவதாக இல்லை. பின் தொடர்ந்தது. 1965. கருவுற்றிருந்தார் பேட்ரிஸியா. அவருக்கு திடீரென்று பக்கவாத நோய். அப்போது பீவர்லி ஹில்ஸில் இருந்த வீட்டில் இருந்தார். மனைவியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார் டால். டாக்டர்கள் 14 மணி நேரம் விடாமல் சிகிச்சை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 3 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். மீண்டு வந்தபோது பேச முடியவில்லை. வார்த்தைகள் குழறின. நடக்க முடியவில்லை. சேர்ந்தாற்போல் ஐந்து நிமிடங்கள் நிற்க முடியவில்லை. அந்த நோய் வந்ததாலேயே அவருக்கு வந்த சினிமா வாய்ப்புகள் நழுவிப் போயின. அவற்றில் ஒன்று, ‘தி கிராஜுவேட்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பு. இவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலும் சுகப்பிரசவம். லூஸி என்கிற மகளைப் பெற்றெடுத்தார். ஆனால், பக்கவாதத்திலிருந்து மீண்டெழுவது அத்தனை சுலபமானதாக இல்லை.

வீட்டுக்கு வந்துவிட்டாலும் டால், பேட்ரிஸியாவைப் பாடாகப் படுத்தினார். ‘பேச்சு சிகிச்சை எடு!’, ‘உடற்பயிற்சி செய்!’, ‘நீ சுயமாக உன் காலில் நிற்கப் பழகு!’ என்றெல்லாம் சொல்லி பல பயிற்சிகளுக்குக் கட்டாயப்படுத்தினார். அதற்கு வேண்டியதையும் செய்தார். பயிற்சி… பயிற்சி… பயிற்சி… இடைவிடாத பயிற்சி.  படிப்படியாக, நடக்கவும் பேசவும் ஆரம்பித்தார் பேட்ரிஸியா.

Image

1967ல் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாலை விருந்தில் கலந்து கொண்டார். ‘ஒரு கட்டத்தில் நான் என் கணவர் ரோல்ட் டாலை திட்டித் தீர்த்தேன். எந்தப் பாடாவதி தண்ணீரில் இருந்து எழுந்து வந்தேனோ, அதிலேயே என்னை இவர் மூழ்கடிக்கப் பார்க்கிறாரே என்று வாயில் வந்ததையெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் திட்டி அழுதேன்’’ என்று அங்கே பேசியபோது குறிப்பிட்டிருக்கிறார்.

மறுபடியும் திரைப்படத்தில் பிரமாதமாகக் கோலோச்ச முடியவில்லை. என்றாலும் அவ்வப்போது வந்த வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். 1968ல் ‘தி சப்ஜெக்ட் வாஸ் ரோசஸ்’ என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் நடிப்பைப் பார்த்தவர்கள் அசந்து போனார்கள். ஆஸ்கர் விருதுக்கு அவர் பெயர் இரண்டாவது முறையாக நாமினேஷன் செய்யப்பட்டது. விருது கிடைக்கவில்லை என்றாலும், அந்தப் படத்தில் அவர் நடித்ததற்காக இன்றளவும் நினைவுகூரப்படுகிறார்.

மறுபடியும் சொந்த வாழ்க்கையில் பிரச்னை. 30 வருட மண வாழ்க்கையில் முறிவு. அது 1983ம் வருடம். கணவர் டாலுக்கு தன் சினேகிதி ஃபெலிசிட்டி க்ராஸ்லேண்டோடு நெருக்கம் என்று அறிந்தார். கலங்கினார். கதறி அழுதார். இப்படிக் கூட நடக்குமா என்று கடவுளைக் கேள்வி கேட்டார். கணவரைப் பிரிந்தார். அதே வருடம் டால், க்ராஸ்லேண்டை திருமணம் செய்து கொண்டார். மனம் சஞ்சலப்பட்டவராக கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினார் பேட்ரிஸியா.

வாழ்க்கை விரட்டுகிறதே… தொடர்ந்து சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்தார். எல்லாமே சின்னச் சின்ன ரோல்கள். சின்னதோ, பெரியதோ… எந்தப் பாத்திரமாக இருந்தாலும் முழுவீச்சோடு, முழுத் திறமையை வெளிப்படுத்தி நடித்தார். தன் செலவு போக கிடைக்கும் வருமானத்தில் சேமிக்க ஆரம்பித்தார். அதைக் கொண்டு ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பித்தார். அதற்குப் பெயர், ‘பேட்ரிஸியா நீல் ரீஹேபிலிட்டேஷன் சென்டர்’. அங்கே சிகிச்சை பெற்றவர்கள் இளைஞர்கள், குழந்தைகள். எல்லோருமே மூளையில் காயம்பட்டவர்கள், பாதிப்படைந்தவர்கள்… அவரைப் போலவே! தன்னைப் போலவே அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார் பேட்ரிஸியா. அதற்காக என்ன செய்யவும் சித்தமாக இருந்தார். அவர் ஆசைப்பட்டபடியே அவருடைய மறுவாழ்வு மையத்திலிருந்து மீண்டெழுந்து வந்தவர்கள் பலர்.

தனது 84வது வயதில், 2010, ஆகஸ்ட் 8ம் தேதி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவர் இறந்த போது சொன்ன கடைசி வாக்கியம்… ‘எனக்கு அற்புதமான வாழ்க்கை வாய்த்திருந்தது’.

– பாலு சத்யா

* பேட்ரிஸியா நீல் சொன்னவை.

திரைவானின் நட்சத்திரங்கள் பிற…

கோஸி ஆன்வுரா

ஆண்ட்ரியா ஆர்னால்ட்

சோஃபியா ஜாமா

ஷர்மீன் ஓபெய்ட் சினாய்

மெரில் ஸ்ட்ரீப்

சாபா சாஹர்

பெக் என்ட்விஸ்லே

மார்த்தா மெஸ்ஸாரோஸ்

ஹைஃபா அல்-மன்சூர்

தமீனே மிலானி

சமீரா மேக்மல்பாஃப்

Patricia Neal

Born Patsy Louise Neal
January 20, 1926
Packard, Kentucky, U.S.
Died August 8, 2010 (aged 84)[1]
Edgartown, Massachusetts, U.S.
Cause of death Lung Cancer
Resting place Abbey of Regina Laudis
Residence Edgartown, Massachusetts
Nationality American
Education Knoxville High School
Alma mater Northwestern University
Occupation Actress
Years active 1949–2009
Home town Knoxville, Tennessee
Spouse(s) Roald Dahl (1953–1983; divorced)
Partner(s) Gary Cooper
Children Olivia Twenty (1955–1962)
Chantal Tessa Sophia (b. 1957)
Theo Matthew (b. 1960)
Ophelia Magdalena (b. 1964)
Lucy Neal (b. 1965)

திரைவானின் நட்சத்திரங்கள் – 11

Image

ஒரு கதைசொல்லியின் கதை!

உலக வரைபடத்தை விரித்துப் பார்த்தால், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் ஒரு ஆமையை குறுக்கு வாட்டில் படுக்கப் போட்டது போல ஒரு நாடு இருக்கும். அது நைஜீரியா! ஆப்பிரிக்காவை கருப்பின மக்கள் ஒரு பெண்ணாகத்தான் பாவித்து வந்திருக்கிறார்கள். வரைபடத்தில் தெரிவதோ ஆரோக்கியமான பெண்மணி. எல்லா வளங்களும் இருந்தும் இன்று வரை ‘ஆப்பிரிக்கா’ என்கிற அந்த திடகாத்திரமான பெண்மணியால் மற்ற நாடுகளோடு போட்டி போட்டு மேலே ஏறி, மீடேற முடியவில்லை. வரலாற்று ஆய்வாளர்களும் பொருளாதார வல்லுனர்களும் ‘உள்நாட்டுப் பிரச்னை, இன மோதல்கள், படிப்பறிவின்மை’ என்று எத்தனையோ காரணங்களைச் சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. காலனியாதிக்கம்… கோடிக்கணக்கான கருப்பின மக்கள் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட இன்னொரு சரித்திரம்தான் இன்றைய நிலைக்குக் காரணம் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அந்த சரித்திர நிகழ்வுகளுக்குள் நாம் இப்போது போகப் போவதில்லை. ஆனால், ‘கோஸி ஆன்வுரா’வைப் (Ngozi Onwurah) பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்தப் பின்னணி அவசியம் என்று தோன்றுகிறது.

‘கோஸி ஆன்வுரா’ நைஜீரியாவில் பிறந்தவர். பத்திரிகையாளர்களும் சினிமா விமர்சகர்களும் ஓர் இயக்குநர் என்பதையும் தாண்டி, அவரை ‘சிறந்த கதைசொல்லி’ என்றுதான் வர்ணிக்கிறார்கள். இத்தனைக்கும் பாதாள உலகம், ஒற்றைக்கண்ணுடனும் ஒன்பது தலையுடனும் உலகை மிரட்டும் அரக்கன், விண்வெளியில் பெயர் தெரியாத கிரகத்தில் வாழும் விந்தை மனிதர்கள் பற்றியெல்லாம் அவர் தன் படைப்புகளில் சொல்லவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் அனுபவித்த இன்னல்களை தெளிவாகப் பதிவு செய்தார். அதன் காரணமாகவே கொண்டாடப்பட்டார். கொண்டாடப்பட்டு வருகிறார்.

‘பிறப்பதற்கு ஒரு பூமி, பிழைப்பதற்கு ஒரு தேசம்’ என்கிற கொடுமையான வரம் வாங்கி வந்த கோடானு கோடிப் பேர்களில் கோஸி ஆன்வுராவும் ஒருவர். 1966ல் நைஜீரிய கருப்பினத் தந்தைக்கும் ஸ்காட்லாந்திய வெள்ளையின அம்மாவுக்கும் பிறந்தார் கோஸி ஆன்வுரா. ஏற்கனவே பிரச்னை பூமி. உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. சரித்திரத்தில் வர்ணிக்கப்படும் ‘பயாஃப்ரா போர்’ (Biafra War). இனிமேலும் அங்கே வாழ முடியாது என்கிற சூழ்நிலையில் கோஸி ஆன்வுராவின் தாய் மேட்ஜே, இடம் பெயரலாமா என யோசித்தார். தந்தை வர மறுத்தார். தந்தைக்கு போரில் கொஞ்சம்… அல்ல… தீவிர ஈடுபாடு.

மேட்ஜே, வேறொரு நாட்டில் போய்க் குடியேறுவதில் தீவிரமாக இருந்தார். அவருக்குக் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமாகப் பட்டது. எப்போதும் மனிதர்களின் வாழ்க்கை, தங்களோடு முடிந்து போய்விடுவதில்லையே! எந்த நாட்டுக்குப் போவது? அது, உலகம் முழுக்க இங்கிலாந்தின் மேல் ஈர்ப்புக் கொண்டிருந்த நேரம். அதுதான் சரி என்றும் மேட்ஜேவுக்குப் பட்டது. இங்கிலாந்துக்குக் குடியேற முடிவு செய்தார்.

கோஸியையும் அவர் சகோதரன் சைமனையும் அழைத்துக் கொண்டு இங்கிலாந்துக்குப் போனார். மேட்ஜே எதிர்பார்த்தது போல இங்கிலாந்து பூங்கொத்துக் கொடுத்து அவர் குடும்பத்தை வரவேற்கவில்லை. அங்கே பிரச்னை காத்திருந்தது. அவர்கள் எதிர்பார்க்காத புதுப் பிரச்னை. பின்னாளில் ஜெர்மன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடந்த ஒரு தருணத்தில் கோஸி ஆன்வுரா ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில் இப்படிக் குறிப்பிட்டார்… ‘‘போர்ச்சூழல் என்பதற்காகத்தான் நாங்கள் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே இன்னொரு சண்டை காத்திருந்தது. அது, எங்களுக்காக மட்டுமே காத்திருந்த பிரத்தியேகச் சண்டை’’.

அப்படி என்ன பிரச்னை? நிறப் பிரச்னை. கோஸியும் சைமனும் கருப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் இருந்தார்கள். அம்மா மேட்ஜே, வெள்ளை வெளேரென்று இருந்தார். அவர்கள் குடியேறியது ‘நியூ கேஸ்டில்’ என்கிற சின்னஞ்சிறு நகரத்தில் இருந்த ஒரு குடியிருப்புப் பகுதியில். அங்கே இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், அதற்கு முன்பு கருப்பின மக்களை சந்தித்தது கிடையாது. அப்படி சந்தித்திருந்தவர்கள், கருப்பின மக்களோடு வாழ்ந்ததில்லை. அதுதான் பிரச்னை. இந்த இனப் பிரச்னை பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் அதிகம் பாதித்தது. கோஸி ஆன்வுராவின் சகோதரர் சைமன் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

‘டேய் கருப்பு நாயே… வெளியே வாடா!’ என்று வாசலில் குரல் கேட்கும். வெளியே வந்து பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்கள். எந்தக் காரணமும் இல்லாமல் சாத்தியிருக்கும் கதவின் மீதும் ஜன்னல்களின் மீதும் கற்கள் எறியப்படும். தெருவில் இறங்கி நடந்தால் பின்னால் கேலி, கிண்டல்களும், அசிங்கமான சொற்களும் காற்றில் பறந்து வரும்.

இதற்கு முடிவு கட்ட முடியாமல் பிள்ளைகள் திணறினார்கள். அம்மா மேட்ஜே, மௌனமாக கண்ணீர் வடித்தார். அவரால் அதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதல்லவா?! கருப்பினர்கள் வாழும் நாடு என்றால் அவர்களுக்குள்ளேயே பிரச்னை. அதற்கு பயந்து வெளியே வந்தால் வேறொரு பிரச்னை. நாம் கருப்பாக இருப்பதால்தானே இப்படியெல்லாம் நடக்கிறது? கோஸியும் சைமனும் ஒரு முடிவெடுத்தார்கள். தங்கள் நிறத்தை எப்படியாவது வெள்ளையாக மாற்றுவதென்று! மிக உசத்தியான சோப்பை குளிப்பதற்கு உபயோகித்தார்கள். உடல் முழுக்க ப்ளீச்சிங் செய்து பார்த்தார்கள். ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை. அவர்கள் இயற்கை நிறத்தை மாற்ற எந்த ரசாயனமும் உதவவில்லை. பின்னாளில், தன்னுடைய ‘காஃபி கலர்டு சில்ட்ரன்’ படத்தில் இதை ஒரு காட்சியாகவே வைத்திருந்தார் கோஸி ஆன்வுரா.

Image

வன்முறையாளர்களுடன் பழகிப் பழகி கோஸிக்குள்ளும் ஒரு வன்மம் குடி கொள்ள ஆரம்பித்தது. கோபம் என்கிற குணத்தையும் தாண்டிய வன்மம். நிறத்தால் பட்ட அவமானம், அவருக்குள் மெல்ல மெல்ல கொழுந்து விட்டு எரியத் தொடங்கி வன்மமாக, அதுவே படைப்பாக கருக் கொண்டது.

கோஸி வளர்ந்தாலும் நிறப் பிரச்னை அவரை விட்டு விலகுவதாக இல்லை. அந்தப் பகுதியை விட்டே போய்விடலாமா என்றுகூட யோசிக்க ஆரம்பித்தார் மேட்ஜே. இந்தப் பிரச்னையில் சிக்கி, சோர்ந்து போயிருந்த கோஸிக்கு பதினைந்தாவது வயதில் ஒரு வாய்ப்பு! அப்போது அவர் ஒரு ரயிலில் லண்டனுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். யாரோ ஒரு மனிதர், கோஸியையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். வெகு நேரம் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கோஸியின் அருகே வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

‘வணக்கம். நான் ஒரு மாடலிங் ஏஜென்ட். நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். உங்கள் அழகு என்னை மிகவும் பாதித்துவிட்டது. என்னுடன் பணியாற்ற உங்களுக்கு விருப்பமா?’’

கோஸி, ஒரு கணம்தான் யோசித்தார். ஒப்புக் கொண்டார். அப்போதைக்கு அதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. மாடலிங் பெண்ணாக மாறினார் கோஸி.

Image

கோஸி, வெற்றிகரமான மாடலாக இருந்தாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அது, அவர் உடல் பருமன். அவருக்கு சாதாரணமான உடல்வாகு கிடையாது. மற்றவர்களைவிட இரு மடங்கு. மாடலிங்குக்கு அந்த உடல் ஒத்து வராது. உடல் பருமனைக் குறைக்க கொஞ்சமாகச் சாப்பிட வேண்டியிருந்தது. பெரும்பாலும் பட்டினி! அவருக்கு சினிமாவில் ஈர்ப்பு அதிகமிருந்தது. மாடலிங் செய்யும் நேரம் போக, மீதி நேரத்தில் அதற்காகவே படித்தார். லண்டனில் இருந்த ‘செயின்ட் மார்ட்டின் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்’டிலும் ‘தி நேஷனல் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஸ்கூல்’லிலும் சேர்ந்தார். படிப்பை முடித்தார். எத்தனை நாட்கள்தான் உடலை வறுத்தி, மாடலிங் செய்வது? சினிமாவில் இறங்கலாம் என முடிவெடுத்தார்.

1988ல் அவருடைய முதல் குறும்படம் ‘காஃபி கலர்டு சில்ட்ரன்’ வெளியானது. பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றியும் பெற்றது. கூடுதலாக விருதுகள்! பி.பி.சி.யின் சிறந்த குறும்படத்துக்கான முதல் பரிசு, சான்ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் ‘கோல்டன் கேட் விருது’, ‘நேஷனல் பிளாக் ப்ரோக்ராமிங் கன்சார்டியமின் ப்ரைஸ்டு பீஸஸ் விருது’ என்று அள்ளிக் குவித்தது அந்தக் குறும்படம். மொத்தம் பதினைந்தே நிமிடங்கள் ஓடும் அந்தக் குறும்படத்தில் தானும் சகோதரன் சைமனும் அனுபவித்த கொடுமையைத்தான் பதிவு செய்திருந்தார் கோஸி. ‘‘நான் பள்ளிக்கூடத்தில் அனுபவித்த கொடுமைகளையும் இன்னல்களையும் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறேன். இப்படிச் செய்தால் எனக்குக் கிடைப்பது ஒன்று சிறையாக இருக்கும் அல்லது நான் ஒரு திரைப்பட இயக்குநராக இருக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவே வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. நான் இயக்குநராகிவிட்டேன். என் கோபத்தை என் திரைப்படத்தில் வெளிப்படுத்தினேன்’’.

அதிர்ஷ்டம் கோஸி ஆன்வுராவின் பக்கம் இருந்தது. தொடர்ந்து குறும்படங்கள் இயக்கினார். எல்லாமே அவர் அனுபவித்த, கோடிக்கணக்கான கருப்பின மக்கள் அனுபவிக்கும் பிரச்னைகளைப் பேசும் படங்கள். 1991ல் அவர் இயக்கிய ‘தி பாடி பியூட்டிஃபுல்’ அவருக்கும் அவர் அம்மாவுக்குமான உறவுமுறை பற்றியது. ‘‘என் அம்மா அவர். என்னைப் பெற்றெடுத்தவள். ஆனால், எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர் வெள்ளை நிறம். நான் பழுப்பும் கருப்பும் கலந்த நிறம். இதில் இருக்கும் பல பிரச்னைகளை நான் பதிவு செய்ய வேண்டியிருந்தது’’ என்று ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருக்கிறார் கோஸி. அந்தப் படத்துக்கு மெல்போர்ன் மற்றும் மாண்ட்ரியலில் நடந்த திரைப்படவிழாவில் பரிசுகள் கிடைத்தன. அது மட்டுமல்ல, உலக அளவில் இருக்கும் பல பல்கலைக்கழகங்களில் திரைப்படப் பிரிவில் பாடமாகவும் வைக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், நியூ யார்க் பல்கலைக்கழகம், மிட்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகம் இவற்றிலெல்லாம் கோஸி, விரிவுரை ஆற்றவும் இந்தப் படம் ஒரு காரணமாக அமைந்தது.

Image

1994ல் கோஸி ஆன்வுரா தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கினார். ‘வெல்கம் II தி டெரர்டோம்’ என்பது படத்தின் பெயர். அது மிக அதிகமாக கவனம் பெற்றது. அதற்குக் காரணமும் உண்டு. இங்கிலாந்தில் முதன் முதலில் ஒரு கருப்பினப் பெண்ணால் இயக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் அது. அதிலும் இனப்பாகுபாட்டை மையப்படுத்தியிருந்தார் கோஸி. ஒரு பத்திரிகை விமர்சனம் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘முகத்தில் அடித்தது மாதிரி இருந்தது’ என்று விமர்சனம் எழுதியிருந்தது. அது 1652ல் தெற்கு கலிபோர்னியா கடற்கரையில் கருப்பின மக்களுக்கு நடந்த ஓர் நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். கருப்பின மக்களுக்கும் வெள்ளையினத்தவருக்கும் இடையே நிகழும் இன வேறுபாட்டை வெகு சாமர்த்தியமாக, அதே சமயம் நுட்பமாக பதிவு செய்திருந்தது அந்தத் திரைப்படம்.

மொத்தம் ஒரு டஜன் படங்களை இயக்கியிருந்தாலும் கோஸிக்கு படம் எடுப்பது அவ்வளவு சுலபமான காரியமாக இல்லை. கருப்பினப் பெண் என்கிற ஒரே காரணத்துக்காகவே தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த தொகையைக் கொடுத்தார்கள். அவ்வளவு போதும் என்பது அவர்களின் மனப்பான்மை. தொலைக்காட்சிகளில் கூட கருப்பினம் சார்ந்த படைப்புகளுக்கு ப்ரைம் டைமில் ஸ்லாட் கிடைப்பதில்லை என்பதையும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் கோஸி. அதற்கெல்லாம் குறைந்த பார்வையாளர்கள்தான் இருப்பார்கள் என்பது தொலைக்காட்சி நடத்துபவர்களின் எண்ணமாக இருந்தது. ‘கருப்பின மக்கள் படம் எடுத்தால் அது அவர்களைப் பற்றிய படமாகத்தான் இருக்க வேண்டும் என்பது என்ன மோசமான மனநிலை?’ என்று வருத்தத்தோடு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் கோஸி.

Image

ஆல்வின் கச்லர் (Alwin Kuchler) என்ற ஒளிப்பதிவாளரைத் திருமணம் செய்து கொண்டார். அவரோடும் ஒரே மகளோடும் லண்டனில் வசிக்கிறார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் டாம் ட்ராட்மேன், ‘இந்த உலகத்தைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லக்கூடியவர் இந்த சிறந்த கதைசொல்லி. அவை எல்லாமே வலியையும் வேதனையும் தரக்கூடிய கதைகள்’ என்று கோஸியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘சிறந்த கதைசொல்லி’ என்று தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் கோஸி மெதுவான குரலில் சொல்வதெல்லாம் ஒன்றுதான்… ‘‘ஆப்பிரிக்கர்கள் மிகச் சிறந்த கதைசொல்லிகள். இப்போது நான் நைஜீரியாவுக்குத் திரும்பிப் போனால், என் அன்புக்குரிய வயதான உறவினர் யாராவது வருவார். என் அருகே அமர்வார். கதை சொல்ல ஆரம்பிப்பார். அது 400 வருடங்களுக்கு முன்பு நாங்கள் எங்கே இருந்தோம் என்கிற அற்புதமான கதையாக இருக்கும். ஆப்பிரிக்கர்கள் மிகச் சிறந்த கதைசொல்லிகள்…’’.

– பாலு சத்யா

 

Ngozi Onwurah
Born Nigeria, West Africa.
Education Film -St. Martin’s School of Art, The National Film (UK), The Television School (UK)
Occupation Director, Producer, Model, Lecturer
Spouse(s) Alwin Kutchler
Children 1 daughter