பிளாக் பிரின்ட்டிங்கில் பிசி!

Image

‘காட்டனோ, காஞ்சிபுரம் பட்டோ… நாம் கட்டினா நாலு பேராவது நல்லாயிருக்கேனு பாராட்டணும். எங்க வாங்கினீங்கன்னு விசாரிக்கணும்…’ – புது உடை உடுத்தும் எல்லா பெண்களின் ஆசையும் இப்படித்தானே இருக்கும்? டிசைனர் சேலையும் சுடிதாரும் இருக்குதான். ஆனால், பட்ஜெட்தான் பயமுறுத்துகிறதே!

உங்கள் உடை, கூட்டத்தில் உங்களைத் தனித்துக் காட்ட வேண்டுமா? பிளாக் பிரின்ட்டிங் செய்த உடைகளை உடுத்தின அனுபவமுண்டா உங்களுக்கு?

பலருக்கும் பிளாக் பிரின்ட்டிங் என்றால் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் சிலரோ, அதெல்லாம் பணக்காரர்களுக்கானது என்ற நினைப்பில் இருப்பார்கள். சில  நூறு ரூபாய் மதிப்புள்ள சாதாரண காட்டன் சேலை, பிளாக் பிரின்ட்டிங் செய்த பிறகு ஏதேனும் ஒரு பொட்டிக்கில் சில ஆயிரம் ரூபாய் விலை அட்டையுடன் அழகாகத் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதுதான் பிளாக் பிரின்ட்டிங்கின் மவுசு! 

Image

Image

ந்திராவைச் சேர்ந்த அருணா விஜயகுமாரை, இன்று சென்னையில் முன்னணி பிசினஸ் உமனாக அடையாளம் காட்டியிருப்பது பிளாக் பிரின்ட்டிங்தான். இந்தத் துறையில் இவருக்கு 10 வருட அனுபவம்!

”ராஜஸ்தான், ஜெய்ப்பூர், ஹைதராபாத்ல பிளாக் பிரின்ட்டிங் ரொம்பப் பிரபலம். நான் ஹைதராபாத்ல கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு சென்னைக்கு வந்து, வீட்டுக்குள்ளயே சின்ன அளவுல பண்ணிட்டிருந்தேன். இதுக்கான வரவேற்பைப் பார்த்துட்டு, இப்ப தனியா யூனிட் ஆரம்பிச்சுப் பண்ணிட்டிருக்கேன். படிப்புமில்லை, பொரிய வசதியுமில்லை, எப்படித்தான் பிழைக்கிறதுனு நினைக்கிறவங்களுக்கு, இது அருமையான பிசினஸ். வேலையில்லாதவங்க மட்டுமில்லாம, பேங்க், ஐ.டி., ஸ்கூல்ல வேலை பார்க்கிறவங்க கூட இதை பொழுதுபோக்கா கத்துக்கிட்டு, சொந்த உபயோகத்துக்கு செய்துக்கறாங்க…” என்கிற அருணாவின் பயிற்சியில், இதுவரை 25க்கும் அதிகமானோர் வெற்றிகரமாக பிசினஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

Image

”ஒரு காலத்துல இது ஆம்பிளைங்க மட்டுமே பண்ற பிசினஸா இருந்தது. மரத்துலேருந்து எடுக்கிற பிசினை வச்சுத்தான் பண்ணுவோம். இன்னிக்கு இருக்கிற அளவு இத்தனை கலர்கள் கிடையாது. வெயில் காலத்துல மட்டும்தான் பண்ண முடியும். மழை நாள்னா, கலர் பரவிடும். பிரின்ட் செய்த துணியை இட்லி அவிக்கிற மாதிரி வேக வச்சு, அதுக்கு மேல சல்ஃப்யூரிக் ஆசிட் போட்டாத்தான் கலரும் பிரின்ட்டும் நிற்கும். அப்படியெல்லாம் செய்தாலும், நினைக்கிற கலர் அப்படியே வராது. கிட்டத்தட்டதான் கிடைக்கும். ஒரு மெட்டீரியலை முடிக்க குறைஞ்சது 1 வாரம் பிடிக்கும். ரெடிமேட் பெயின்ட், விரும்பின கலர், சிரமமில்லாத வேலைன்னு இன்னிக்கு எல்லாமே சிம்பிளாயிடுச்சு. ஒரு மணி நேரத்துல் ஒரு சேலை பிரின்ட் பண்ணி, உடுத்திட்டே போயிடலாம்! ஆண்கள் மட்டுமே பண்ணிட்டிருந்த இந்த பிசினஸ்ல இப்போ பெண்கள்தான் அதிகமிருக்காங்க. எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும், யாருமே சோடை போகாத ஒரே பிசினஸ் இது” என்கிறார் பிளாக் பிரின்ட்டிங்கில் 47 வருட அனுபவம் கொண்ட கே.பழனி.

 

இது இப்படித்தான்! 

Image

Image

மூலப் பொருள்கள்

ஆபீஸ் டேபிள், மர ஃபிரேமும் லெதர் கவரிங்கும் செய்த ட்ரே, உட்டன் பிளாக்குகள், பிக்மென்ட் கலர்கள், உட்டன் ஸ்க்வீசர், இது தவிர பிரின்ட் செய்ய சேலையோ, சல்வாரோ, துப்பட்டாவோ இப்படி ஏதோ ஒரு மெட்டீரியல். சிந்தெடிக் மட்டும் கூடாது. பியூர் காட்டன், பியூர் பட்டு, பியூர் ஷிஃபான், பியூர் கோட்டா மெட்டீரியல்களில் மட்டும்தான் பிரின்ட் செய்ய முடியும்.

எங்கே வாங்கலாம்?

உட்டன் பிளாக்குகளை சாதாரண கார்பென்டர்களிடம் கொடுத்துச் செய்ய முடியாது. தேக்குமரத்தில், நுணுக்கமாகச் செய்ய வேண்டிய வேலை ஆதலால், கலை தெரிந்தவர்களிடம் செய்து வாங்க வேண்டும். ஹைதராபாத் மற்றும் மசூலிப்பட்டினத்திலிருந்து வரவழைக்கப்படுகிற பிளாக்குகள் சிறப்பாக இருக்கும்.

முதலீடு

வீட்டிலுள்ள பழைய டேபிளே போதும். உட்டன் பிளாக்குகள் குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை கிடைக்கும். பிக்மென்ட் கலர் கிடைக்கும். பிக்மென்ட் கலர் அரை கிலோ 200 ரூபாய். அதில் 4 சேலைகளுக்குப் போடலாம். உட்டன் ஸ்க்வீசர் 50 ரூபாய். மெட்டீரியல் செலவு உள்பட மொத்தத்துக்கும் 10 முதல் 25 ஆயிரம் ரூபாய்.

இட வசதி?

டேபிள் போடும் அளவுக்குகான இடம் போதுமானது. பிரின்ட் செய்த துணிகளை 1 மணி நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும் என்பதால், உலர்த்தத் தோதாக சிறிது இடம் தேவை. சுற்றுப்புறம் மாசடையுமோ என்கிற பயமும் தேவையில்லை.

எதில் எல்லாம் செய்யலாம்?

சேலை, சுடிதார், டி ஷர்ட், குர்தா டாப்ஸ், துப்பட்டா, திரைச் சீலை, டேபிள் மேட், படுக்கை விரிப்பு, சணல் பைகள், பேப்பர் பைகள்…

மாத வருமானம்?

ஒரு சேலைக்கு அடக்க விலை 100 என்றால், 300 ரூபாய் வாங்கலாம். டிசைன் மற்றும் நுணுக்கத்தைப் பொறுத்து இது கூடும். இது வெறும் பிளாக் பிரின்ட்டிங் மட்டும் செய்து கொடுப்பதற்கான கூலி. ஒரு நாளைக்கு 2 முதல் 4 சேலைகளுக்கு செய்யலாம். செலவெல்லாம் போக மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் பார்க்கலாம்.

மார்க்கெட்டிங்?

பெரிய ஜவுளிக்கடைகளில் பிளாக் பிரின்ட்டிங் வேலைக்கு ஆர்டர் இருக்கிறது. தூக்கிப் போட மனசின்றி பழசானாலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிற புடவைகளுக்கு பிளாக் பிரின்ட்டிங் செய்வதன் மூலம் புதிய பொலிவைத் தர முடியும். அனேகமாக எல்லா பெண்களிடமும் இப்படி சென்டிமென்ட் சேலைகள் இருக்கும் என்பதால் அவர்களே உங்களுக்குப் பிரதான வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.

பயிற்சி?

பிக்மென்ட், கடி, மெட்டாலிக் என இதில் 3 வகையான பிரின்ட்டிங் உண்டு. முதல் வகை டார்க் கலர்கள் பற்றியது. கடி என்பது லைட் கலர்களுக்கானது. கோல்ட், சில்வர், காப்பர் கலர்கள் எல்லாம் மெட்டாலிக் வகையறா. மூன்றுக்கும் ஒரே நாள் பயிற்சி. மார்க்கெட்டிங் டிப்ஸ், பொருள்கள் வாங்க ஆலோசனை என எல்லாவற்றுக்கும் சேர்த்து ரூ.700 கட்டணம்.

–  ஆர்.வைதேகி

படங்கள்: ஆர்.சந்திரசேகர்

அருணா விஜயகுமார் தொலைபேசி எண்: 9003124632