நூல் அறிமுகம் – 4

கெடை காடு

 Kedai_Kaadu_Wrapper_very_Final (1)

  • ‘கெடை காடு’… வெளியான சூட்டோடு எழுத்தாளர் ஜெயந்தனின் நினைவாக வழங்கப்படும் சிறந்த நாவலுக்கான ‘செந்தமிழ் அறக்கட்டளை’ விருதை பெற்றிருக்கும் நாவல்.
  • ‘இந்த நாவலின் கதைக் களம் தமிழுக்கு மிகவும் புதியது’ என்று புகழ்ந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
  • ‘காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், மேய்ச்சல், காதல், காமம் என மேய்ச்சல் காடுகளின் கசப்பும் இனிப்புமான தனித்துவமான இனத்தின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதன்மையான புதினங்களில் ‘கெடை காடு’க்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது…’ என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சுந்தர புத்தன்.

இந்த நூல் குறித்த அறிமுகத்துக்கு இவையெல்லாம் அவசியமாக இருக்கின்றன. எழுத்தில் கொங்கு வட்டார வழக்கை முன்னிறுத்திய ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி கரிசல் பூமி வட்டார வழக்கை வெகு லாவகமாகக் கையாண்ட கி.ராஜநாராயணன் வரை தமிழகத்தின் கிராமங்களும் மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையும் எத்தனையோ படைப்புகளில் மிளிர்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘கெடை காடு’ நாவலுக்கு மிக முக்கியமான, அதே நேரத்தில் தனித்துவமான இடமுண்டு. வழக்கம் போல ஒரு கிராமம், அதில் ஏதோ ஓர் ஆண் அல்லது பெண்ணை மையப்படுத்தி, ஏதோ ஒரு பிரச்னையை முன்னிலைப்படுத்தியபடி நகரும் நாவலாக ‘கெடை காடு’ இல்லை. ஒவ்வொரு மலருக்கும் ஓர் வடிவம், மணம் என்று தனித்தன்மை இருப்பது போல இந்நாவலில் காட்சிப்படுத்தப்படும் மனிதர்களும் அவரவர்களுக்கான இயல்புகளுடனும் குணங்களுடனும் வலம் வருகிறார்கள்.

கணவன், இன்னொருத்தியின் வீட்டில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாலும், அவன் வெளியே வரும் வரை காத்திருந்து, ‘‘ஆம்பள யோக்கியம் தெரியாண்டாமா? அதான். இன்னையோட முடிஞ்சாச்சு. இனி ஒட்டும் இல்ல. உறவும் இல்ல’’ என்று உதறிவிட்டுப் போகிற புண்ணியத்தாயி…

‘‘இவங்க நினைச்சா சேர்க்கதுக்கும் நீக்கதுக்கும் நான் என்ன இவ்வோ வீட்டு மாடா, ஆடா? எனக்கு சங்கமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்’’ என படபடக்கிற தனித்து வாழும் கல்யாணி…

எதிர்ப்பாலினத்தின் மேல் எழும் வேட்கையும் பார்க்கிற பெண்ணின் மேலேல்லாம் காதல் வயப்படத் தூண்டுகிற பருவத்திலிருக்கும் உச்சிமகாளி என நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் நேரில் சந்தித்துப் பேசும் எத்தனையோபேரின் சாயலைக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரப் படைப்புகளின் யதார்த்த தன்மை நாவலின் போக்குக்கு பெரும் பலம்.

குள்ராட்டிக்கு மேய்ச்சலுக்குப் போன இடத்தில் அட்டளையில் தொங்கும் பாம்புச் சட்டைகள்… அநாமதேயமாக நடு வழியில் நிற்கும் பட்றையன் கோயில்… அமைதி சூழ் மலைப் பகுதியில் அவ்வப்போது கேட்கும் ஓநாய்களின் இரைச்சல்… இவற்றுக்கு மத்தியில் மாடுகளையும் காபந்து பண்ணி, தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மேய்ச்சலுக்கு வந்த மனிதர்களின் வாழ்க்கை… என இந்த நாவல் பதிவு செய்யும் விஷயங்கள் ஏராளம். மனித வாழ்வின் வசீகரத்தையும் அவலத்தையும் வலிந்து திணிக்காமல், போகிற போக்கில் யதார்த்தமாக கோடிட்டுக் காட்டுகிறது ஏக்நாத்தின் எழுத்து நடை. கால்நடை மேய்த்தல் தொடர்பாக தமிழில் பூமணியின் ‘ரீதி’ சிறுகதை போல வெகு சில படைப்புகளே வெளியாகியுள்ளன. அதையே முக்கியக் களமாகக் கொண்டு வெளியான முதல் நாவல் ‘கெடை காடு’ என்று தோன்றுகிறது. தங்கு தடை இல்லாத எழுத்து நடை, திடீர் திருப்பங்கள் என்று சலிப்பூட்டாத இயல்பான நிகழ்வுகள், இது வரை பார்த்தும் கேட்டும் அறியாத புதிய அனுபவத்தை தரும் கதைக் களம் என விரிகிற இந்நாவல் ஒரு வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கிறது. அது ஒவ்வொருவரும் படித்து, அனுபவிக்க வேண்டிய வாழ்வியல்!

கெடை காடு

ஆசிரியர்: ஏக்நாத்

விலை: 170

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,

முகவரி: எண் 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முதல்தளம்,

முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,

சென்னை – 600078.

(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்).

போன்: 04465157525. செல்: 9940446650.