சிறுகதை

காவிரிக்கரை பெண்ணே…

புவனா ஸ்ரீதர்

ilayaraja

வருடம் 1990.  ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.  தெய்வ நாயகி மிஸ் எங்க வகுப்பிற்கு வந்ததும் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார். நீங்க ரெண்டு பேரும் எந்திருங்க, போன வருசம் போலவே நீ கிளாஸ் லீடர், தேவி அஸிஸ்டெண்ட் லீடர் சரியா?

போச்சுடா மனசுக்குள் சொல்லிட்டு சரி மிஸ் என்றேன். வேற வழி!

காரணம் மிஸ் ஸ்கூலுக்கு வரவே மாட்டாங்க பாதி நாள் நாங்களே தான் படிச்சுக்குவோம். இப்போ நாங்க 10 வது வேற, என்ன பண்ண போறாங்களோ தெரில…

கிளாஸ் முடிஞ்சதும் நீ மட்டும் என்ன வந்து பாரு.

சரி மிஸ்.

என்னவா இருக்கும்டி தேவி மெதுவா கேட்டா. தெரிலடி. வகுப்பு முடிந்ததும் போனேன்.

மிஸ்…

ம்…..வா. என் பையன் இப்போ 12 வது போறான் அவன் கூட நான் இருக்கனும். நான் அப்பப்போ வருவேன் நீ தான் கிளாஸ் சத்தம் வராம பாத்துக்கனும். சரியா?

ம்..சரி மிஸ்.

அரசு பெண்கள் பள்ளியில் இவரும், பக்கத்து காம்பவுண்ட்ல ஆண்கள் பள்ளியில் அவர் கணவரும் ஆசிரியர்கள். யாரும் ஒன்றும் பண்ண முடியாது.

எங்க வகுப்பில் நான்கு குரூப்கள். அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.

எங்க குரூப்ல நானு, முத்துலட்சுமி, ரமா, தேவி, ரஷிதாபேகம். அஞ்சு பேரும் ஒண்ணாவே சுத்துவோம். தேவிக்கு சிம்ம குரல் கணீர்னு பாடுவா. எல்லாரும் உக்காந்து மணிக்கணக்குல அவ பாடறத கேப்போம்.

போர் அடிக்குது பாடுடி…

“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே”….

துளி சத்தம் இல்லாம அமைதியா கேப்போம்.

முத்துலட்சுமி மட்டும் கமல் பாட்டுதான் கேப்பா. கமல் பைத்தியம். பானு ரஜினி ரசிகை. முத்துவ வம்பிழுப்பதே பானுக்கு வேலை.

எதாவது கேட்டா கூட கமல் பாட்டு வரிகள்ல இருந்தே தான் பதில் சொல்லுவா. அவ எப்பவும் கிளாஸ்க்கு லேட்தான். 3 கிமீ நடந்து வருவா.

ஏன் லேட் வெளிய நில்லு.

‘பொன் மானே கோபம் ஏனோ?’

பாடாம வெளியவே நில்லு. எப்ப பாரு கமல் பாட்டா பாடிட்டு.

‘காவல் காப்பவன் கைதியா நிற்கிறேன் வா… பொன் மானே…’

சரி உள்ள வந்து தொல.

‘மங்கை உன் மனதினை கவருது, மாறன் கணை வந்து மார்ப்பினில் பாயுது, இதழில் கதை எழுதும் நேரமிது…”

சரி போய் உக்காரு.

ஏ அவ கமல் பொண்டாட்டிடி.. பானு வம்பிழுப்பா.

அவளுக்கு என்னடி நதியா மாதிரி அழகா தானே இருக்கா, நான் மட்டும் பையனா இருந்தா இவள கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன் … தேவி எப்பவும் முத்துக்குதான் சப்போர்ட் பண்ணுவா.

பானுக்கு முத்து மேல லேசா பொறாமை கூட உண்டு.

எப்படியோ படிச்சு ஒரு வழியா 10வது முடிச்சோம். ரிசல்ட் வந்தது. ரமாவும் நானும் மட்டும் 400 மதிப்பெண் மேல. மத்தவங்க பாஸ்.

நான்  பாலிடெக்னிக் சேர போறேன்டி. முத்து நீயும் வரியா?

எங்க வீட்ல படிக்க வைக்க மாட்டாங்கடி எனக்கு ஸ்ரீரங்கம் ஸ்கூல் தான் கடைசி வரை.

நீ நல்லா படி.

ம் சரிடி.

அவ இன்ஜினியரம்மாடி… பானு சத்தமா கத்த எல்லாரும் சிரிக்க, பிரிய மனமின்றி பிரிந்தோம்.

———————————————————————–

நானும் புது பிரண்ட்ஸ், புது இடம் பிசியாகிட்டேன். செமஸ்டர் லீவ்ல ஸ்கூல் போய் எல்லார் கூடவும் பேசிட்டு, முத்துவோட கமல் பாட்டு கேட்டுட்டு வருவேன்.

அடுத்த செம் லீவ்ல ஸ்கூல் போக முடியல. அவளுங்களும் 11 வது முடிந்து 12 வது வந்துடாங்க. 6 மாதம் கழித்து ஸ்கூலுக்கு போனேன். முத்து மட்டும் சோகமா இருந்தா.

என்னாச்சுடி?

ஒன்னுமில்ல… சொல்லும் போதே அழுதா.

பானுதான் சொன்னா, தினமும் ஸ்கூல் போகும் போது யாரோ ஒருத்தன் இவள பார்த்து இருக்கான். போன வாரம் ஒரு கர்சீப்ல, ‘காவிரி கரை பெண்ணே’னு ஆரம்பிச்சு லவ் லெட்டர் எழுதி முத்துக்கு கொடுத்துருக்கான். அத அவ சித்தப்பா பாத்துட்டார். கர்சீப்பை தீ வச்சு எரிச்சுட்டார். வீட்ல ஒரே பிரச்னை. அதான் அழறாடி.

இதில் இவ தப்பு ஒன்னும் இல்லயே பின்ன எதுக்கு பிரச்சனை பண்றாங்க – நான் கேட்கவும், முத்து பேச ஆரம்பிச்சா…

அதான் எனக்கும் புரியல. எப்பவும் வீட்ல ஒரே திட்டு. உறவுக்காரப் பையனுக்கே என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா பேசிக்கறாங்க. இனி ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு தோனுது… – சொல்லிட்டு திரும்ப அழுதாள்.

உனக்கு 17 வயசு தானே ஆகுது. அதுக்குள்ள கல்யாணமா, நீ ஒத்துக்காதடி.

என்னை யாரும் மதிக்கறதே இல்லடி அவங்க இஷ்டப்படி கல்யாண ஏற்பாடு நடக்குது. இன்னும் 2 மாசத்துல கல்யாணம்னு சொல்றாங்க.12வது கூட படிக்க மாட்டேன் போல. என் விதி அவ்ளோதான்…

தேம்பி தேம்பி அழுதவளை பரிதாபமா எல்லோரும் பார்த்தோம்.

————————————————————————–

கொஞ்ச நாள் கழித்து பானு தான் சொன்னா, முத்துக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. யாரையும் கல்யாணத்துக்கு கூப்டலடி. பாவம் எப்படி இருக்கான்னு தெரிலடி.

அவ சொல்லவும்…

யார் யாருக்கு என்ன வேஷமோ னு எங்கயோ பாட்டு சத்தம் கேட்டுச்சு.

தேர்வு, படிப்புன்னு நாள் ஓட ஆரம்பிச்சுது. 12 வது முடிச்சு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் SRC காலேஜ் சேர்ந்தாங்க. நானும் அப்பப்போ போய் எல்லாரையும் பார்த்துட்டு வருவேன். முத்து என்ன ஆனான்னு மட்டும் தெரியவே இல்ல.

நாட்கள் வருடங்களா வேகமாக ஓடிடுச்சு. கல்லூரி முடித்ததும் ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆச்சு. யார் கூடவும் தொடர்பு இல்லாம போச்சு.

குடும்பம், குழந்தைகள் னு தனி உலகத்துல வாழ பழகியாச்சு. அப்பப்ப முத்து நினைவு வரும்.

————————————————————————

20 வருடம் ஓடியாச்சு. ஒரு நாள் போன் வந்தது.

நான் முத்து பேசறேன்டி.ஸ்ரீரங்கம் கோயில் வரீயா உன்ட பேசனும்.

நிஜமா கனவா?

ம்.. வரேன்டி எப்படி என் நம்பர் கிடச்சுது?

எல்லாம் நேர்ல பேசலாம் வா.

ஸ்ரீரங்கம் பெருமாள் ஒய்யாரமா படுத்துகிட்டுகூட்டத்தில் முண்டியடிச்சு வரும் பக்தர்களை பார்த்து அருள்பாலித்து கொண்டிருந்தார்.

முத்துவும் அவள மாதிரியே ஒரு பொண்ணும்…

பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். என்னென்னவோ பேசனும் நினச்சு ஒண்ணும் பேசாம ஒரு பெரிய மௌனம்.

எங்கடி போன? என்ன ஆன? எவ்ளோ நாள் உன்ன பத்தி கவல பட்டோம் தெரியுமா?

ம்… கல்யாணம் முடிந்ததும்  அவர் கூட மைசூர் போய்ட்டேன். கூட்டுக் குடும்பம். சமைக்க, மகள கவனிக்க, உறவுகாரங்கட்ட நல்ல பேர் எடுக்க போராடியே என் வாழ்க்கை ஓடிடுச்சுடி.

ம்… மேற்கொண்டு எதுவும் படிக்கலயா?

இல்லடி. இப்பவும் ஆரம்பிச்ச இடத்துலதான் நிக்கறேன். சரி விடு… இவதான் என் ஒரே பொண்ணு.

ஹலோ ஆன்ட்டி நான் சிந்து. அம்மா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்காங்க.

அழகாகச் சிரித்தாள்.

ஹாய் சிந்து உன் அம்மா மாதிரியே இருக்கயே. என்ன படிக்கற?

அவ தோள் மேல கை போட்டேன்.

நான் அம்மா மாதிரிதான். ஆனா ரொம்ப போல்ட் ஆன்ட்டி. சிஏ முடிக்கப் போறேன். அடுத்து ஆபிஸ் போடனும்.

படபடன்னு பேசினா.

ஓ… சூப்பர்மா. கலக்கு. அட்வான்ஸ் விஷ்ஷஸ்!

பெருமை பொங்க முத்து பார்த்தாள்…

இவள நல்லா படிக்க வச்சுட்டேன். இவ மனசுக்குப் பிடிச்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிட்டா என் வேல முடிந்ததுடி.

முத்து சொல்ல சொல்ல சிந்து வேற எங்கயோ வேடிக்கை பார்த்தா.

அதான் உன் அம்மா சொல்லிடாளே உன் மனசுக்கு பிடிச்ச பையன் யாராவது இருக்கானா?

இருக்கு, ஆனா இல்ல!

புரியலயே தெளிவா சொல்லும்மா.

ஆன்ட்டி நான் ஒரு பையன லவ் பண்ணே. அவனும் நல்லவன்தான். ஆனா, இங்க நிக்காத, இத பண்ணாத, அங்க போகாதன்னு ஒரே டார்ச்சர். எனக்கான ஸ்பேஸ் கொடுக்காதவன் கூட எப்படி ஆயுசு முழுசும் வாழ முடியும்? அதான் பிரேக்கப் பண்ணிட்டேன் ஆன்ட்டி.

எதுவும் பேசாம முத்துவும் நானும் நின்னோம்.

ஏனோ தெரியல காவிரிகரை பெண்ணேனு எழுதுன கர்சீப்பும், தேம்பி தேம்பி அழுத அந்த 17 வயசு முத்து முகமும் நினைவில் வந்து போனது.

Painting Credit: Artist Ilayaraja

Bhuvana

ஸ்டார் தோழி – 20

11185755_942133792487388_13225070_n

புவனா ஸ்ரீதர் – ஒரு தோழி பல முகம்

நான்

Trichyட்

பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சியில். பொறியியலில் டிப்ளமோ, சைக்காலஜியில் டிகிரி. அப்பா குடும்பத்தில் முதல் பேத்தி, பெற்றோரின் தலைமகள், கணவரின் அன்பான மனைவி, என் மகள் மற்றும் மகனின் பொறுப்பான தாய், புகுந்த வீட்டின் கடைசி மருமகள்… இப்படி எல்லா நிலைகளிலும் நல்லவர்கள் என்னைச் சுற்றி இருப்பதே வரம்.
பள்ளி

ஐந்தாம் வகுப்பு வரை மேட்டூரிலும், பின்பு ஸ்ரீரங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன். ‘படிப்பில் கெட்டி பள்ளியில் சுட்டி’ என்று பெயர் எடுத்ததால் கிளாஸ் லீடர் ஆகவும் பொறுப்பேற்ேறன். எந்த நெருக்கடியும் இல்லாத பட்டாம்பூச்சி வாழ்க்கையாக என் நட்புகளுடன் அமைந்தது என் பள்ளி வாழ்க்கை. இன்றும் என் பள்ளிக் கல்லூரி தோழமைகளுடன் நட்பு தொடர்கிறது.
குடும்பம்

கணவர் ஸ்ரீதர் வங்கியில் தலைமை மேலாளர். மகள் கல்லூரியில் நுழைகிறாள். மகன் 11ம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறான். என் குழந்தைகள் இருவரையும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் மனிதநேயத்துடனும் வளர்த்து வருகிறேன்.
ஊரும் பேரும்

திருமணத்துக்குப் பிறகு கணவரின் பணி இடமாற்றம் காரணமாக முதலில் மும்பை, பிறகு கள்ளக்குறிச்சியில் கூட்டுக்குடும்பம், பின் கோயம்புத்தூர், பாலக்காடு, கிருஷ்ணகிரி, இப்பொழுது செங்கல்பட்டில்… ஒவ்வோர் ஊரிலும் புதுப்புது வீடு, அனுபவம், மனிதர்கள் என்று வாழ்க்கை சுவாரஸ்யமாகிறது.
பொழுதுபோக்கு

பலவகை ஓவியங்கள், Soft toys, க்வில்லிங் காதணிகள், செயற்கை ஆபரணம் செய்தல், மணப்பெண்களுக்காக டிசைனர் பிளவுஸ் செய்தல் ஆகிய கலைகளை கற்றுள்ளேன். ஃபேஸ்புக்கில் ‘ஸ்ரீவிஜா ஆரி டிசைனர்ஸ்’ பேஜ் நடத்தி வருகிறேன். ஆன்லைன் டிேரடிங்கும் செய்வதுண்டு.
ஃபேஸ்புக் கற்றதும் பெற்றதும்

பள்ளி, கல்லூரி நட்புகள், மறந்தே போன குடும்ப உறவுகள் அனைவரையும் கண்டுபிடிக்கவும் அவர்களுடன் தொடர்பு நீடிக்கவும் ஃபேஸ்புக்கே காரணம். பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் இதில் நிறைய விஷயங்களை கற்றும் கொள்ளலாம்.
வீடு

ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு விதமான வீட்டில் வசித்துள்ளோம். சொந்த வீட்டில் வசிக்க முடியவில்லையே என்ற எண்ணமே வராத அளவுக்கு ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு. விதவிதமான மனிதர்கள், கலாசாரம், சமையல் என்று குழந்தைகளும் நானும் புதுப்புது அனுபவங்களைப் பெற்று வருகிறோம்.
மனிதர்கள்

அப்பா, அம்மா, நான், தங்கை என்று சிறிய குடும்பத்தில் பிறந்தேன். படிப்பு, நட்பு என்று பட்டாம்பூச்சியாக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. திருமணத்துக்குப் பிறகுதான் மனிதர்களைப் புரிய ஆரம்பித்தது. பொறாமைக்காரர், நம்பிக்கை துரோகிகள், புறம் பேசுபவர்களைக் கண்டால் இன்றும் அலர்ஜிதான்…  ஒதுங்கிவிடுகிறேன்.
புத்தகம் 

vedathiri maharishi

பள்ளிக் காலத்திகல் இருந்தே ஒரு புத்தகமும் விடாமல் படிப்பேன். ‘அம்புலி மாமா’ முதல் சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகள் வரை ஆர்வமுண்டு. இறையன்பு, சுகிசிவம், வேதாத்ரி மகரிஷி போன்றவர்களின் ஆன்மிக நூல்களை விரும்பிப் படிப்பேன். சைக்காலஜி படித்ததால் டாக்டர் ஷாலினியின் மருத்துவக் கட்டுரைகள், வலைத்தளங்களும் வாசிப்பதுண்டு.
வாழ்க்கை

வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்வதே மன நிம்மதியைத் தரும். எந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தைத் தரும். ஒவ்வொரு நிமிடமும் வரமே. மனதுக்குப் பிடித்தவற்றைச் செய்து ஒவ்வொரு நொடியையும் வாழ வேண்டும்.
பிடித்தப் பெண்கள்

நான் சந்தித்த எல்லாப் பெண்களுமே எனக்குப் பிடித்தவர்களே. குடும்பத்துக்காக படிப்பைத் துறந்த பெண்கள், கணவன் சரியில்லாமல் தைரியமாக குடும்பத்தைச் சுமக்கும் பெண்கள் என்று தன்னம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொரு பெண்ணுமே பிடித்த பெண்தான். என் அப்பா வெளிநாட்டில் வாழ்ந்தபோதும் தனியாளாக இரண்டு பெண்களை வளர்த்த என் அம்மாவே நான் வணங்கும் தலைமைப் பெண்.
இசை 

m-s-subbulakshmi1

காலை நடைப்பயிற்சியில் ஆரம்பித்து இரவு தூங்கும்வரை இசையுடனே வாழ்வது நிம்மதி தரும். இசை இன்றி அமையாது இவளுலகு. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் ‘குறையொன்றும் இல்லை’ பாடலைக் கேட்டாலே மனம் அமைதி கொள்ளும்.

உடலும் மனமும் 

yoga

அளவான உணவு, நடைப்பயிற்சி, நிறைய தண்ணீர், மனதை சந்தோஷ நிலையில் வைத்துக் கொண்டாலே போதும்… யோகா செலய்வதும் உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக்கும். வெறும் அரிசி உணவை மட்டும் உண்ணாமல் சிறுதானிய உணவுகளையும், நிறைய பழம் மற்றும் காய்களையும் உண்டு வந்தாலே உடல் எடை குறைந்து இளமையாகக் காட்சியளிக்கலாம்.
சமையல் 

meen_fish_kuzhambu

nandu gravy

திருமணத்துக்குப் பிறகுதான் கற்றுக் கொண்டேன். கோயம்புத்தூரின் அரிசிம் பருப்பு சாதம், பச்சைப் பயறு கூட்டு, மும்பையின் பாவ் பாஜி, கிருஷ்ணகிரியின் சிறுகீரைத் தொக்கு என ஒவ்வோர் ஊரிலும் பலவித சமையலைக் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் மீன் குழம்பு, நண்டு கிரேவி என் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். கேழ்வரகு உருண்டையுடன் மீன் குழம்பு எனக்குப் பிடித்த உணவு.
இயற்கை

பள்ளி விடுமுறைக் காலத்தில் கிராமத்திலுள்ள தாத்தா வீட்டுக்குச் சென்று விடுவோம். தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, ரோஜாப்பூ தோட்டம், மல்லிகைத் தோட்டம், என்றுமே வற்றாத ஆறு என்று சித்தி, மாமா பசங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாட்டம்தான். கிராமத்தின் அத்தனை குறும்புகளும் விளையாட்டுகளும் கலந்த அழகிய நாட்கள் எங்கள் குழந்தைப் பருவம். கணவரும் குழந்தைகளும் விடுமுறையில் எங்கள் விவசாய நிலத்துக்குச் சென்று பலவகை மரக்கன்றுகள் நடுவது, உரமிடுவது என ஆர்வத்தோடு இறங்கி விடுவார்கள். என் அப்பாவுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஜீவாமிர்தம், அமிர்த கடைசல் என்று அவரே தயார் செய்து செடிகளுக்கும் மரங்களுக்கும் இடுவார். இயற்கையை ரசிக்கும் போது மனதுக்கு அமைதி கிடைக்கும். விடுமுறையில் குடும்பத்துடன் மலைப்பிரதேசங்களுக்கும் சென்று வருவோம்.
மரம் வளர்த்தல், மரங்களை அழியாமல் காத்தல், பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் மண்வளத்தை காப்பாற்றுவது போன்றவற்றை நாமும், நம் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுத்தும் வாழ்வோம். இயற்கையையும் சுற்றுசூழலையும் காப்பதும் நம் கடமை என்று உணர்வோம்.
தண்ணீர் 

Water-Saving

பிறந்து வளர்ந்தது காவிரிக் கரையோரம் என்பதால் தண்ணீர் பிரச்னை என்றால் என்ன என்று கூட்த் தெரியாமல் வளர்ந்தேன். ஊர் மாறும் போதுதான் நீரின் அருமை புரிந்தது. தண்ணீர் கஷ்டம் இல்லாத வீடாக அமைய வேண்டும் என்று வேண்டுதலே வைக்கிறேன். தண்ணீரின் அவசியம், தண்ணீர் சிக்கனம் போன்றவற்றை இளைய தலைமுறைக்கும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டியது நம் கடமை. பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைத்தாலே ஆறு, ஏரி, குளம் போன்றவை மாசுபடாமல் காத்து, அவற்றில் மழைக்காலத்தில் தண்ணீரை சுத்தமாக சேமித்து வைக்கலாம். துணிப்பைகளை உபயோகிப்பதால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை விட்டொழிக்க முடியும். நாம் ஒவ்ெவாருவரும் செய்யும் இந்த முயற்சிகூட கணிசமாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் குறைக்கும். நம்மால் இயன்ற வரை வீட்டுத் தோட்டங்கள் அமைக்கலாம். மரங்களை நடலாம். மழை பெறலாம். நீரின்றி அமையாது உலகு.
புகைப்படக்கலை

சிறுவயதில் இருந்தே புகைப்பட கலையில் ஆர்வம் அதிகம். கோயில்கள், குளங்கள், மலைப்பிரதேசம், பூக்கள், சூரியன், பறவைகள், விலங்குகள் என்று நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளேன். அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தும் வருகிறேன்.
அழகென்பது

அழகென்பது தன்னம்பிக்கை, நேர்மை, மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டாலே அழகு தானே கூடிவிடும்.

நேர நிர்வாகம்… 

சரியான திட்டமிடல் இருந்தாலே போதும்… நிச்சயமாக நிறைய நேரத்தை மிச்சபடுத்தலாம். ‘நான் ரொம்ப பிஸி… நேரமே இல்லை’ என்று புலம்பவே வேண்டாம். முதல் நாள் இரவில், தூங்கப் போவதற்கு முன்பே மறுநாள் வேலை என்னென்ன… எப்படிச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாலே போதும்… மறுநாள் காலை முதல் டென்ஷன் இல்லாமல், நிதானமாக வேலைகளைச் செய்து முடிக்கலாம்.

பிடித்த ஆளுமைகள் 

diana

இந்திரா காந்தி, மதர் தெரசா, டயானா. மூன்று தலைமுறைகளையும் தன் கட்டுபாட்டில் வைத்து இருக்கும் மனோரமா ஆச்சியும் எனக்குப் பிடித்த ஆளுமையே.

சினிமா 

Jyothika_Sadanah_Wallpaperjpg_qllbl_Indya101(dot)com (1)

ரஜினி படத்தை மட்டும்தான் தியேட்டருக்குச் சென்று பார்ப்போம். இப்போது சூர்யா பசங்களின் சாய்ஸ். எல்லா நல்ல படங்களையும் தியேட்டருக்குச் சென்று பார்க்கிறோம். ஜோதிகா மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. அவர் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்.

கடந்தது வந்த பாதை

புது அனுபவங்களையும் பக்குவத்தையும் படிப்பினையும் தந்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய இருக்கிறது. கற்ற ஒவ்வொரு பாடத்தையும் படிக்கட்டுகளாக எண்ணி பயணம் செய்கிறேன்.

பிடித்தவை

இயற்கையை ரசிக்கவும் இசை கேட்கவும் பிடிக்கும். தொலைதூர பயணம்… அதில் மெலடி பாட்டுகள், தோழிகளுடன் மணிகணக்கில் அரட்டை மிகவும் பிடித்தவை.

வாழ்க்கை

நட்புகள், உறவுகள் மனநிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கிறது. வருவதை அப்படியே ஏற்று நதி போல ஓடிக்கொண்டே இருப்போம். இந்த நிமிடம் அழகு என்று ஒவ்வொரு நிமிடமும் ரசித்து வாழ்வோம். வாழ்க்கை வாழத்தானே!

11028968_862442367154003_2615257940376410732_o

***

Image courtesy:

http://www.trichypress.com

http://raviyolimathi.blogspot.in/

rlalitha.files.wordpress.com

http://www.landofyoga.com

http://cdn.awesomecuisine.com

http://ennsamaiyal.blogspot.in

http://www.sparkenergy-blog.co.uk

http://media-1.web.britannica.com

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

ஸ்டார் தோழி – 10

ஸ்டார் தோழி – 11

ஸ்டார் தோழி – 12

ஸ்டார் தோழி – 13

ஸ்டார் தோழி – 14

ஸ்டார் தோழி – 15

ஸ்டார் தோழி – 16

ஸ்டார் தோழி – 17

ஸ்டார் தோழி – 18

ஸ்டார் தோழி – 19