ப்ரியங்களுடன் ப்ரியா-26

காதல்னா என்னங்க ?

woman1

காதல்னா என்னங்க ? ரெண்டு உசுரு ஒரு உசுரா மாறுவது தானே ??

அதிலே ஒரு உசுரை துடிக்க துடிக்க கொன்னுட்டு போறப்ப அதில் எங்கே காதல் என்ற வார்த்தை வருது ?

எங்கே செல்லும் இந்த பாதை …
யாரோ யாரோ அறிவார் …

கண்டிப்பா நாம அறியலாம் தோழிகளே…

எல்லாத் துறைகளிலும் பெண்கள் இப்போது எவ்வளவோ முன்னேறி விட்டனர். ஆணுக்கு பெண் சரிநிகர் சமம் என்பது இப்போதைய உலகில் உறுதி செய்யப்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது . ஆனால், இன்னமும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதையே, அடிக்கடி நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டுகின்றன.

woman2

தயவுசெய்து இனி அதை  காதல் என்று சொல்லாதீங்க யாரும்…

தனக்கு இல்லாத ஒன்று  யாருக்கும் இல்லை என்ற மனநிலையில் இருப்பவன் மனதில் எப்படி காதல் என்ற ஒன்று இருக்கும் ?

ஒரு வேளை அந்த  சைக்கோக்களை அந்த பெண்கள் காதலித்தால் / திருமணம் செய்தால் தினம் தினம் செத்துதான் பொழைக்கணும்…

இதில் யாருடைய தவறு் என்று ஆராய ஆரம்பித்தால், ஒவ்வொரு நிகழ்விலும் செயலிலும் தவறுகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

என்றைக்கு தவறான பாதையில் செல்லும் ஹீரோக்களை பொண்ணுங்க  காதலிச்சு திருத்துவதை விசில் அடிச்சு ரசிக்க ஆரம்பிச்சோமோ, அன்றைக்கே நமக்கு கேடுகாலம் ஆரம்பித்து விட்டது.

சினிமாவை சினிமாவாக பார்க்காமல் அதை வாழ்வியல் தத்துவம் போல உணர ஆரம்பித்த காலமே இந்த ஒருதலை காதல், தறுதலை காதல், கன்றாவி காதல் எல்லாமே…

செய்கிற அவ்வளவு அயோக்கியத்தனத்துக்கும் பின்னால் காதல் என்ற ஒற்றை வார்த்தையை அடைமொழியாக்கி விட்டால் நியாயம் ஆகிவிடுமா ?

இருக்கும் பஞ்சாயத்தில் இப்போ கொஞ்ச வருஷமா புதுசா ஒண்ணு…

சோசியல் மீடியா…

இருங்க இருங்க… உடனே கோபப்படாதிங்க… தத்தளித்த சென்னையை தமிழக அரசே சீர் செய்ய காலதாமதம் ஆன நிலையில், ஒற்றை போனும் 1 gb டேட்டாவும் வச்சு சரி செஞ்சதை இந்த உலகமே மறக்காது. அதுதான் சோசியல் மீடியா வின் பலம்… அதை சரியான பாதையில் பயன்படுத்துகையில் எல்லாமே சரியா இருக்கும்.

நான் எல்லோரையும் போல இங்கே உபதேசம் செய்யவில்லை… ‘கவனமா பயன்படுத்துங்க… சாட் செய்யாதீங்க… நம்பர் கொடுக்காதீங்க… போட்டோ போடாதீங்க… இரவு ரொம்ப நேரம் இருக்காதீங்க’ என்றெல்லாம்…

இணையம் பயன்படுத்துவது எப்படி உங்கள் உரிமையையோ, அதை விட முக்கிய கடமை உங்கள் குடும்பத்தை பாதுகாப்பது.

woman

ஒரு சிறிய தவறு நடந்தாலும் கூட இப்போது இருக்கிற தகவல் தொழில்நுட்ப உதவியில் 5 நிமிடத்தில் காவல்துறை உங்கள் இல்லம் வந்து கதவை தட்டும் வாய்ப்புகள் இருக்கிறது.

நம் சிறுசிறு விளையாட்டுகள், தவறுகள் எல்லாம் நம்மை மீறி நமது குடும்பத்தை தொடும்போது அங்கே அதன்பிறகு  நமக்கு கிடைக்கும் மரியாதை எப்படி இருக்கும் ?

நண்பர்கள் தேர்வு என்பது இனிமேல் வரப்போகிற மெடிக்கல் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் விட கடினமா இருக்கணும்.

இது பொதுவெளி… இது ஒரு நடைபாதை… எதிர் வர்றவங்க பிடிக்கலை என்றால் நாமே வழிவிட்டு இறங்கி விடுவோம்… தப்பே இல்லை.

எனக்கும் இங்கே நல்ல உறவுகள் நட்புகள் உண்டு. என்னோட 600 நண்பர் வட்டத்தில் ஒரு 10 இல் இருந்து 15 பேர் மட்டும்தான் வீடு வரை உள்ள நட்பாக இருக்காங்க.

அவங்க குடும்பத்தில் இருப்பவங்க எங்க வீட்டோடும்  நாங்க அவங்க வீட்டோடும் இணைந்து இருக்கோம்… அதான் நம்பிக்கை . அந்த நம்பிக்கையைப் பெறும் நட்புகள் கிடைப்பதும் வரமே.

அதற்காக மற்றவர்கள் யாரும் நட்பில்லை என்று அர்த்தம் அல்ல. எனக்காக, என் குடும்பத்துக்காக சற்று விலகி இருக்கேன் என்று மட்டுமே அர்த்தம்.

ஓர் அவசரத்துக்கு இரவு 12 மணிக்கு மேல் கூட, என் நண்பனின் மனைவிக்கு போன் செய்து, ‘அவனை எழுப்பி விடுமா’ என்று சொல்லி இருக்கிறேன்.

அதான் நட்பு… அந்த நட்பை இங்கே தேர்வு செய்வதில்தான் சில தடுமாற்றங்கள் எல்லோருக்கும்.

ஒருவருக்கு நல்லவராக இருக்கும் ஒருவர் மற்றவருக்கு கெட்டவராக இருக்கும் அபாயம் மிக அதிகம் உள்ள உலகம் இது… இணைய உலகில் அடிக்கடி நடப்பதும் இதுதான்…

ஒரு சிலரோட பதிவுகளில் அவர்களின் தவறான எண்ணங்களும் எழுத்தாக வரும்… அதைக் கடப்பதும் தவிர்ப்பதும் நாமே.

என் இப்படி எழுதுறீங்க என்று கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கே சில பேர் அப்படி எழுதுவாங்க. அவர்களைத் திருத்துவது நம் வேலை இல்லை.

நம்மையே மறந்து இங்கே நாம் இருக்கும் போதும்  நம்மை எப்போதும் உயிர்ப்புடன் வைக்கும் ஒரே சக்தி நம் குடும்பம் மட்டும்தான்…  அதை நினைத்தாலே  போதும்… பல பிரச்னைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.

இப்போதெல்லாம் ஒரு சிறுகுற்றம் நடந்தாலே காவல்துறை உடனே கையில் எடுப்பது சம்பந்தப்பட்டவர்களின் சோசியல் மீடியா பதிவுகள் / இன்பாக்ஸ் / வாட்சப் / பரிமாற்றம் மட்டுமே.

எவனோ / எவளோ செய்த குற்றங்களுக்கு நாம் / நம்ம குடும்பம் என் அலைய வேணும்?

சரிங்க … போனதை பற்றி விவாதம் செய்ய வேணாம்… இனி அழ தெம்பு கூட இல்லை… நடப்பவற்றைக் காணும் பொழுது …

நம் எல்லோருக்குமே தோளுக்கு மேல வளர்ந்த பசங்க இருக்காங்க. நம்மைத்தான் நம்பி இருக்காங்க. நாம்தான் அவர்களுக்கு வலி இல்லாத உலகிற்கு வழி காட்டணும்.

24 மணிநேரமும் அவர்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்க்க வேணாம்.

கிடைக்கும் நேரத்தில் அவர்களுக்கு அவர்களின் விஷயங்களை நம்மோடு பகிர நேரம் ஒதுக்கினாலே போதும்… வேண்டாத விஷயம் எது…சரியான விஷயம் எது என்று அவர்கள் புரிந்துகொள்ள…

கலி காலம் என்று கவலைப்பட்டு கொண்டு இருந்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா ?

நாம்தான் சரி செய்யணும்… செய்வோம்!

நல்லதே நடக்கும்… நடக்கணும்!

woman4

  • ப்ரியா கங்காதரன்

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் பலாத்காரம்… கலங்க வைக்கும் புள்ளிவிவரம்!

Image

டெல்லி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு! குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிற்து டெல்லி நீதிமன்றம். அதே சமயம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் பட்டியலை நினைத்தால் நெஞ்சு பதைபதைக்கிறது. தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. ஆதாரபூர்வமாக, அழுத்தம் திருத்தமாக அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘மாநில குற்றப் பதிவு செயலகம்’ (State Crime Records Bureau – SCRB) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம்.

கடந்த 2012ம் வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை மாதம் வரை பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளைவிட, 50% அதிகமாக 2013ல் பதிவாகியிருக்கின்றன. அதாவது, அதே ஜனவரி – ஜூலைக்கு இடைப்பட்ட காலத்தில். 2013ல், ஏழு மாத காலத்தில், காவல்துறையில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 436. 2012ல் பதிவானவை 291. அதிலும் சென்னையில்தான் அதிகம். 42 வழக்குகள். கணவர் மற்றும் உறவினர்களால் குரூரமாகத் தாக்கப்பட்ட வழக்குகளிலும் சென்னைக்கே முதலிடம். மொத்தம் 1,130 வழக்குகள். அவற்றில் 118 வழக்குகள் சென்னையில்.

மாநில குற்றப் பதிவு செயலகத்தின் அறிக்கைப்படி…

ஜனவரி – ஜூலை காலத்தில் பதிவானவை

                                            2012                   2013

பாலியல் பலாத்காரம்      291                    436

பாலியல் தொந்தரவு        708                     585

கடத்தல்                              756                     698

கணவரால் தாக்குதல்      860                  1,130   

 

அதிக அபாயமுள்ள பகுதிகள்…

                    பலாத்காரம்       சீண்டல்     கடத்தல்            கணவரால் தாக்கப்படுதல்

சென்னை       42                        33                  24                                   118

விழுப்புரம்      32                        47                 73                                      33

கோவை          11                          5                    2                                     22

மதுரை              9                        13                  18                                      51

திருச்சி              7                        13                    6                                      18

தமிழகத்தில் பாலியல் சீண்டல், கடத்தல் ஆகியவை எண்ணிக்கையில் சற்றுக் குறைந்திருந்தாலும் பெண்களின் மேல் கணவர் மற்றும் உறவினர்களின் தாக்குதல் அதிகமாகியிருக்கிறது. இது கிட்டத்தட்ட 32 சதவிகிதம் அதிகம். வழக்குப் பதியாமல், சம்பவம் நடந்ததையே மறைத்துவிடாமல் காவல்துறையும் நம்பகத்தன்மையுடன் நடந்து கொண்டிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. அதே நேரம், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகிவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் காவல்துறைக்கு இருக்கிறது.

பரவலாகிவரும் குடிப்பழக்கமும் போதைப் பொருள் பழக்கமும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவதற்கு ஒரு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ‘இப்போதெல்லாம் பெண்களுக்கும் தங்களுக்கு பாலியல் தொந்தரவோ, வன்முறையோ நிகழ்ந்தால் அதை காவல்துறை வசம் புகாராகத் தெரிவிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட ஒரு காரணம்’ என்று குறிப்பிடுகிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கொடுப்பதும் கணிசமாக இதே காலத்தில் உயர்ந்திருக்கிறது. ஜனவரி-ஜூலை 2013 காலக்கட்டத்தில் சென்னையில் 23 வழக்குகளில் 12 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

கிராமப்புறங்களில் இன்னமும் கூட பல பாலியல் பலாத்கார சம்பவங்களும், சீண்டல் சம்பவங்களும் பதியப்படாமல் வருவது குறிப்பிடத்தக்கது. பஞ்சாயத்து மூலமாகவோ, உறவினர்களைக் கொண்டோ, பயமுறுத்தியோ பல சம்பவங்கள் தீர்த்து வைக்கப்படுகின்றன. சில இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை, திருமணம் செய்து, சமாதானப்படுத்துவதும் நடக்கிறது.

எந்தக் காரணம் சொல்லப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகி வருவது கலக்கத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

– மேகலா பாலசுப்ரமணியன்