ப்ரியங்களுடன் ப்ரியா–25

th6

தைராய்டு

World Thyroid Day / May 25, 2016

உலக தைராய்டு தினம் / மே 25, 2016

th2

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல..

நான் ரொம்ப குறைவா டையட் உணவு தான் சாப்பிடறேன்.. ஆனாலும் உடம்பு வெயிட் போட்டுடுது.. யோகா வாக்கிங் எல்லாம் போறேன் ஆனாலும், உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.. அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்போ பார்த்தாலும் எதையாவது சாப்டுட்டே இருக்கா ஆனால் பாரு எவ்வளவு சாப்பிடாலும் உடம்பு வரவே இல்ல ரொம்ப ஒல்லியா வீக்கா இருக்கான்னு  சொல்லுவாங்க..

th7

இதுக்கெல்லாம் என்னங்க காரணம் ??

தைராய்டு தான் ..

தைராய்டு என்றால் என்னங்க ?? அதை எப்படி  பிரியா தெரிஞ்சுக்கலாம்னு  நீங்க கேட்பது புரியுதுங்க … கொஞ்சம் கவனமா படிங்க இதை .

30 வயதை தாண்டும் நமது நாட்டு பெண்களுக்கு  30 முதல் 45 சதவிதம் வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது ..

th4

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..நம் அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது..

நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.

th3

ஆரம்ப அறிகுறிகள் :

மோசமான தசை தொனி (தசைத் தளர்ச்சி)

களைப்பு

குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்

உளச்சோர்வு

தசைப்பிடிப்புக்கள் மற்றும் மூட்டு வலி

மணிக்கட்டு குகை நோய்

முன்கழுத்துக் கழலை

மெலிதல், விரல்நகங்கள் நொறுங்குதல்

மெலிதல், முடி நொறுங்குதல்

வெளிரிய தன்மை

குறைவான வியர்வை

உலர்ந்த, அரிக்கும் தோல்

எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம்

குறை இதயத் துடிப்பு (குறைவான இதயத்துடிப்பு வீதம் – நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்)

மலச்சிக்கல்

வெகுநாளான அறிகுறிகள் :

மெதுவான பேச்சு மற்றும் தொண்டை கட்டி, குரல் உடைதல் – மெல்லிய குரலையும் கேட்க முடிதல்

வறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்

கண் புருவங்களின் வெளிப்பகுதி மெல்லியதாதல் (சைன் ஆப் ஹெர்டோக்ஹி)

இயல்பற்ற சூதகச் சுழல்கள்

குறைவான உடல் அடிப்பகுதி வெப்பநிலை

குறைந்த பொதுவான அறிகுறிகள் :

பழுதடைந்த நினைவுத்திறன்

பழுதடைந்த புலனுணர்வு செயல்பாடு (தெளிவற்ற மூளை) மற்றும் கவனமின்மை

குறைந்த மின்னழுத்த சமிக்ஞைகளிலும் ECG மாற்றங்களுடன் குறைந்த இதயத்துடிப்பு வீதம். குறைவான இதய வெளியீடு மற்றும் குறைந்த சுருங்கு திறன்.

இரத்தசை சர்க்கரைக் குறைவு எதிர்ப்பு(அல்லது இரவு உணவு)

மந்தமான அனிச்சைகள்

முடியுதிர்தல்

அனீமியா ஏற்படுத்தும் பழுதான ஹீமோகுளோபின் தொகுப்பு (குறைந்த EPO அளவுகள்), பழுதான குடல்சார்ந்த இரும்புத்தாது மற்றும் பொலிக்கமில உறிஞ்சும் தன்மை அல்லது பித்தபாண்டுலிருந்து வரும் B12 குறைபாடு

விழுங்குவதில் சிரமம்

ஆழமில்லாத மற்றும் மெதுவான சுவாச அமைப்புடன் மூச்சுவிடுதலில் சிரமம்

தூக்கம் நேரம் அதிகரிப்பு

உறுத்தும் தன்மை மற்றும் மனநிலை நிலைத்தன்மையின்மை

பீட்டா-கரோட்டின்[15] விட்டமின் A ஆக மாற்றப்படும் மோசமான செயலால் தோல் மஞ்சளாதல்

குறைவான GFR உடன் மந்தமான சிறுநீரகச் செயல்பாடு.

அதிகரித்த வடிநீர் கொழுப்பு

கடுமையான உளப்பிணி (மிக்ஸெடிமா மேட்னெஸ்) என்பது தைராய்டு சுரப்புக் குறைக்கு ஒரு அரிதான அறிகுறியாகும்.

சுவை மற்றும் மணம் உணர்திறன் குறைவு (அனோஸ்மியா)

Th1

தைராய்டு பிரச்சனையை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.. அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்சேர் அளவுக்கு வந்து இருக்கிறது. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது. T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம்..

ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்..

T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..

th9

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்..

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது நல்லது..

th8

ஹைப்போ தைராய்டு

இரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.. இது பொதுவாக

வயது பெண்களையும் பாதிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால்,  அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

th5

ஹைப்பர் தைராய்டு

இரத்தத்த்இல் தைராக்சின் அதிக அளவில் சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு ஏற்படுகிறது.. பசி அதிகமாக இருக்கும், அடிக்கடி சாப்பிட்டாலும் உடல் மெலிந்து கொண்டே போகும், கை-கால்களில் நடுக்கம் இருக்கும்,சில சமயங்களில் உடல் முழுவதும் நடுங்கும்,காரணம் எதுவுமின்றி கோபம் வரும், அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும்,

தூக்கமின்மை,நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும்,மாதவிலக்குப் பிரச்னைகள்,கால் வீக்கம், மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் ஈடுபாடற்ற தன்மை தோன்றும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களால் முதலில் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு, அதில் அழற்சி ஏற்பட்டு, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மாவுப் பொருட்கள் போன்றவற்றை தங்களின் உணவில் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும், உங்களுக்கு உணவில் இனிப்புச்சுவை வேண்டுமானால், தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவைத் தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

கழுத்தில் கட்டி ஏற்பட்டால்…:

கழுத்தில் தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிய அளவில் கட்டி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலையில் வீக்கமும் விஷக் கட்டியும் ஏற்படும். இது நச்சுக் கழலை ஆகும்.

ஆரம்ப நிலையில் வலி இருக்காது. திடீரென கட்டி பெதாக வலிக்கத் தொடங்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பறி போகவும் வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், உணவில் இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து வர, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி வாக்கிங் மேற்கொள்வது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

ஒவ்வொருவரும் தினமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், நல்ல பாட்டுக்களை கேட்பது, நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பது என்று ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

நாம எவ்வளவு தான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் இழந்த உடல் நலனை மட்டும் எப்போவுமே திரும்ப பெற முடியாது ,,

அதனால சரியான உணவு முறை,  உடற்பயிற்சி முறை என நம் உடம்பையும் மனசையும் நாம சரியாய் வைத்து கொண்டால் வருமுன் காத்து நம்மை நாமே பேணலாமே…

வாழ்க வளமுடன் !

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151106-WA0049

 

ப்ரியங்களுடன் ப்ரியா–16

சேமிப்பும் செல்லங்களும்!

sav5

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

sav3

இனிமையான இல்லறத் தலைவியின் பண்பாக அறியப்படும்

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசார்ந்த
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’

என்ற வள்ளுவனின் வரியை இன்றைய கால சூழலில் இவ்வாறுதான் கையாள வேண்டும் ,

தனது சொத்துகளையும் பாதுகாத்து தனது கணவனின் சொத்துகளையும் வளர்த்து , குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்கு வேண்டிய பாதுகாப்பை சோர்வில்லாமல் செயல் செய்பவளே நல்ல குடும்ப தலைவி.

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ என்று பள்ளியில் படிக்கிற காலத்தில் ,மண்டையில் இடித்து, இடித்து சொல்லிக் கொடுத்துவிட்டு, படிப்பு முடிந்தபிறகு “ கடன் வாங்காத குடும்பம் கரையிலேயே நிற்கிற கப்பல்” என்று வாழ்க்கைக்கு தலைகீழ் பாடம் நடத்துவது யாருடைய தவறு? வரவுக்குள்ளாக செலவு செய்கிறபொழுது வாழ்க்கை கடினமாக இருக்குமே தவிர , கஷ்டமா மாறாது ; வரவை மீறி , கடன் வாங்கியாவது செலவு செய்வது , வழக்கத்தில் நமக்கு கஷ்டம்  மட்டுமல்ல…  பெரும்பாலும் நஷ்டமே ..

இதை தடுக்க தவிர்க்க நமக்கு ஒரே வழி சேமிப்புதான்.

sav1

சேமிப்பை முதலில் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் தான்!

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட நம்ம குழந்தைகளின்  சிறு சிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். ஏதோ ஒரு ரூபாய்தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் நம்ம குழந்தைகளின் மனம், சிறு சேமிப்பு பெட்டி நிரம்பியவுடன் ஆச்சரியமாகிறது. காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை நமது செல்லங்களுக்கு உணர்த்தும்…

sav7

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். நாம் உண்ணும் உணவு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து  தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்றுதான் சேமிப்பும். சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு  உதவுகிறது. கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும் நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.

ஏனெனில், நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது. நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு சேமிப்பு எனும் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்வோம்.

சேமிப்பின் முதல் படி. ஒரு எளிய வழியைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அன்றாடம் வரவு -செலவு கணக்கு எழுதுவது. இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, நம் வீட்டில் உள்ள அனைவரும் இதில் ஈடுபடுவதால், குடும்பப் பொருளாதாரம் எல்லாருக்கும் தெரிய வரும். அதனால், அவரவரின் செலவுகள் ஒழுங்குபடுத்தப்படும். பொதுவாக குழந்தைகளுக்கு குடும்பப் பொருளாதார நிலை தெரிந்தால் அவர்களது பொருளாதார அறிவு வளரும். மாறும் சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுக்க அவர்கள் தயாராவார்கள். இரண்டாவது, பல நேரங்களில் பயனற்ற செலவுகளை கண்டறிந்து நீக்க இது உதவும்.

sav2

‘சிக்கனமும் சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன‘ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 31ம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது.

இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர் பின்வருமாறு விளக்குகின்றார். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” (குறள் 247). அதாவது இவ்வுலகில் வாழ பணம் முக்கியமானது.

பணமில்லாவிட்டால் இவ்வுலகம் இன்பம் பயக்காது. எனவே, இந்நிலையைக் கருத்திற்கொண்டு வள்ளுவர் மேலும் குறிப்பிடுகின்றார். “செய்க பொருளை” என்று (குறள் 759).

sav7

செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.

(1) கஞ்சத்தனம்

(2) சிக்கனம்

(3) ஆடம்பரம்

(4) ஊதாரித்தனம்.

கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது  மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம்.

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மழையின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும், சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும்.

ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம்.

ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.ஒருமுறை அமெரிக்க ஃபோர்டு கார் நிறுவன அதிபர் ஹென்றிபோர்டு, மாநாடு ஒன்றுக்காகச் சென்றிருந்த இடத்தில், ஹோட்டலில் இரண்டாம் தரமான அறையை எடுத்தார். ஹோட்டல் பணிப்பெண் கேட்டார், ‘சற்று நேரத்துக்கு முன்னால் வந்த தங்கள் மகன், முதல் தர அறையை எடுத்திருக்கிறார், தாங்கள் ஏன்?‘’

உடனே ஹென்றிபோர்டு சொன்ன பதில் இதுதான். “”அவனுக்குப் பணக்கார அப்பா இருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே!

”சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாக அவற்றை இழந்துவிட நேரும்.

sav6

உலக மகாகவி ஷேக்ஸ்பியர் இது பற்றி அழகாகக் கூறியுள்ளார்…

Neither a borrower nor a lender be;
For loan oft loses both itself and friend,
And borrowing dulls the edge of husbandry.

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே. ஏனெனில், பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அதோடு  வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன..

எதிர்கால செலவுகளை திட்டமிடுவது சேமிப்பைத் தூண்டும் மற்றொரு வழி. உங்களது எதிர்கால செலவுகள் என்ன என்பதை எழுதிப் பாருங்கள். குழந்தைகளின் கல்வி, வீடு கட்டுதல், ஓய்வுகால செலவுக்கு பணம் என பல இருக்கின்றன. இவற்றைத் தோராயமாக அளவிட்டுப் பார்த்தால், வருங்கால செலவின் தொகை மிகப்பெரிதாக இருக்கும். மிரளாதீர்கள்! உங்கள் வருவா யைக் கூட்டவேண்டிய கட்டாயத்தை இது உணர்த்தும். வழி பிறக்கும்.

sav4

மீண்டும் யோசித்துப் பார்த்தால், சேமிப்பு என்பதே வருவாயைக் கூட்டும் இன்னொரு வழிதானே. சேமித்த பணத்தை சரியாக முதலீடு செய்யும்போது அதுவே உங்களுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தரும்…

பல நேரங்களில் எது அவசியமான செலவு என்பதில் குழப்பம் இருக்கும். புலன்களின் பேச்சைக் கேட்காமல், கற்பனையான சமுதாய நிலையைப் பார்க்காமல், அறிவு சொல்லும் தீர்ப்பே இதில் சரியாக இருக்கும்…

சேமிப்பு என்பது இப்போதைய காலத்தில் பணம் தவிர … மழை நீர், குடிநீர், மின்சாரம் , எரிசக்தி , என எல்லாவற்றிலும் அவசியம் ஆகி விட்டது.

சேமிப்பை உணர்ந்தால் மட்டுமே எதிர்கால வாழ்வில் சிறப்படைய முடியும் என்பது நிதர்சனம்!

முதலில் அணிந்த சட்டை
முதலாவதாக போட்ட ஊசி
முதன் முதல் வெட்டிய நகங்கள்
முதலில் விளையாடிய கிலுகிலுப்பை
என்று உனது
எல்லா ‘முதல்’களையும்
சேமித்து  வைத்திருக்கிறேன்
முதன் முதலாக
‘அம்மா’ என்று என்னை
நீ மழலையாக அழைத்ததை
எப்படி சேமிப்பேன்  என அறியாமல்!
மூச்சுக் காற்று மட்டும் 
உரிமை கோரும் 
ஏகாந்தமான இரவொன்றில் 
உன் நினைவு சேமிப்பை 
கொஞ்சம் செலவு செய்து கொள்கிறேன்  
என் செல்லத் தோழியே!

  • ப்ரியா கங்காதரன்

20150414_093124

பயணங்கள் மறப்பதில்லை !

ப்ரியங்களுடன் ப்ரியா–15

செப்டம்பர் 27

உலக சுற்றுலா தினம்

tour101

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு .. .

எடுத்துவை  பகிர்ந்து கொள்வோம்…
சிறகுகள் விரித்துப் பறக்க
அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம்…
பாதையில் தெளித்துச் செல்ல
அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு…

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 

நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …
உன்முகம் துடைக்க 
அதோ அந்த
புல்லின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம்..
பயணங்கள்
மறப்பதில்லை…
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
tour7

நம்மோட  மனசு  ஒரு ஓயாத பயணி. தான் சென்று வந்த இடங்களை மட்டுமல்ல… செல்லாத இடங்களுக்குக் கூட பயணிக்கும் வல்லமை கொண்டது. பார்த்த இடங்களைக் குறித்து நாலு பேரிடம் சொன்ன பிறகே சிலரது மனசு அமைதியாகும். இன்னும் சிலருக்கு அதைப் பத்தி எதாவது குறித்து வைத்தால்தான் தூக்கமே வரும்!

நானும் அப்படிதான்… பார்த்ததை பகிர்வதில் உள்ள பரவசம் மிக மிக இனிமையானது…

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் ஓய்வாக மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள்.சுற்றுலாவின் அடிப்படையே ‘பயணங்கள்’தான்.

tour10

1814ல் தாமஸ் குக் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் ‘சுற்றுலாவின் தந்தை’ என்றும் ‘உலகின் முதல் பயண முகவர்’ என்றும் கருதப்படுகிறார்.
இப்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டிராத சுவிட்சர்லாந்தின் (ராணுவமே இல்லாத நாடும் கூட!) முதன்மை வருவாயே சுற்றுலாதான்.
tour4
சுற்றுலா…
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான ‘ரீ சார்ஜ்’ செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.
மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களைக் காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவேதான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, ‘ஆணையிடும் மனிதர்’ இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
tour1
அன்றாட நிகழ்வுகளில் கரைந்துபோகும் வாழ்வை ஒருசில கணங்களே உயிர்ப்பிக்கின்றன. மழலையின் சிரிப்பு, மகிழ்வூட்டும் திருவிழா, பிடித்த புத்தகம், மலைக்க வைக்கும் மலைகள், கலையின் உச்சமான சிலைகள், உற்சாகமூட்டும் வீதிகள் என இப்படிப் பல விஷயங்கள் நம் வாழ்வைப் புதுப்பிக்கின்றன. மனம் ஓரிடத்தில் நில்லாமல் கவலைகளில் உழன்று, இன்பங்களில் திளைத்து தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கிறது. அதனூடாகத்தான் இந்த பயணங்களும் பயணம் சார்ந்த  வாசிப்பும்.
tour8
இன்னைக்கு எவ்வளவோ சுற்றுலா  பயணங்கள் சென்றாலும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது ஐந்தாவது படிக்கும் போது பள்ளியில் போன   என் முதல் சுற்றுலா பயணம்தான்.

மருதமலை… சின்ன வயதிலே வீட்டில் எல்லோருடன் பல முறை சென்று இருந்தாலும் முதல் முதலாக தனியாக சென்றது…

‘பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதணும்‘ என்று டீச்சர் சொன்னதும் பார்க்கும் இடத்தை எல்லாம் வார்த்தையாக வருடி வந்தது…

அதிகாலையிலேயே  எழுந்து அம்மா எங்க எல்லோருக்கும் மதியம் சாப்பிட புளி சாதமும், பருப்பு சட்னியும்  அம்மா கட்டி தந்தது…

25 பேருடன் போன என்னை வழியனுப்ப எங்கள் வீட்டில் இருந்து வந்த 35 பேர் … இன்னும் மனசை விட்டு மறையாத நினைவுகள்!

தொடர்ந்து எத்தனையோ நாடுகள், மாநிலங்கள், ஊர்கள் சென்றாலும் முதல் பயணம் என்னால் என்றுமே மறக்க முடியாது.

நான் ஈடுபட்டுள்ள விற்பனை துறையில் சிறந்த முறையில் செயல்பட்டதால் இரண்டு முறை மலேசியா சுற்றுலா.

என்னை நானே புரிந்துகொள்ள  வருடம் இருமுறை திருப்பதி…

இயற்கையுடன் பேச வருடம் இரு முறை கொடைக்கானல், ஊட்டி,

கடவுளின் தேசமும் எனக்கு சொந்த தேசம் ஆனதால் மனது வலிக்கும் போதெல்லாம் கேரளா பாட்டி வீடு…

இப்படி தமிழகத்தின் தென்கோடி முதல் வடக்கு வரை பயணம் செஞ்சாச்சு.

ஆனாலும் இன்னும் தேடல் குறையவில்லை … மனசு இன்னும் தேடுது. எதையுமே தொலைக்காமல் தேடுவதும் சுகம்தான்!

விமானம்… ரயில்… பஸ் என ஒவ்வொன்றிலும் வித விதமான ஆசான்கள் சக பயணியாக…

tour3

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்… ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு நமது இந்தியா. ‘உலக புவியியலாளர்களின் சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டிடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும் நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் நமது நாட்டில் உண்டு. நாம் நமது நாட்டிலே ரசிக்க உணர நெறைய இருக்கு…

tour2

ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் கண்ட காட்சிகள் வாழ்வியலை அழகாக ரசிக்க வைத்தது ..

ஒரு புறம் வாழ்வை தேடி அயல்நாடு பயணிக்கும் சகோதர்களின் கண்ணீர்… ஒரு புறம் வாழ்வை வென்று தாயகம் திரும்பும் சகோதர்களின் சிரிப்பு…

இப்படி இரண்டு துருவங்களை சந்தித்தாலும் அந்த இரு துருவங்களும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சந்தித்து கண்ணீர் சிரிப்பாகவும், சிரிப்பு கண்ணீராகவும் மாறும் என்ற நிலையை உணரும் போது பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்பது கண் முன்னே வந்து போனது…

tour6

என் ஒவ்வொரு சுற்றுலாவும் எனக்கு வாழ்வியல் பாடங்கள்தான்…

கலாசாரம், உணவு முறைகள்,  உழைக்கும் முறைகள், அப்பப்பா .. எல்லாமே பாடம்தான் …

‘பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை’ என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவேதான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப்புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். ‘அறிவை விரிவு செய்… அகண்டமாக்கு…’ என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!
tour5

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். அப்படித்தான் பயணங்களை பார்க்க வேண்டும்.

எதிர்பாராத கணங்களில் ஒளிந்திருக்கும் அழகை தரிசிக்கத் தொடங்கும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது.

ஏதோ  ஒரு வகையில் பயணங்கள்  ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா? இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடையதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத் தொட்டுத் தொட்டு நாம் பயண பட்டுத்தான்   போகிறோம்?

tourm
மலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றிவிடும்.

மலைமுகட்டில் நின்று நீங்களே பேசி பாருங்களேன்… நம் மனதில் தோன்றும் எல்லா வினாக்களுக்கும் கடவுளே பதில் சொல்வது போல இருக்கும்.

அதான் நிஜமும் கூட … ஒருவனை உருவாக்குவதில் இயற்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

மனித வாழ்க்கையே ஒரே ஒரு வினாடிதான் என்ற புத்தர், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார், ‘வாழ்வு ஒரே ஒரு நொடி என்று அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்; ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும்’ என்பதுதான் அது.

இனி, இதுமாதிரியான அனுபவத்திற்காகவாவது, சின்ன சின்ன சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வோம்!

tour9

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு . . 

எடுத்துவை , பகிர்ந்து கொள்வோம் …

சிறகுகள் விரித்துப் பறக்க

அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம் …

பாதையில் தெளித்துச் செல்ல

அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு …

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 
நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …

உன்முகம் துடைக்க 

அதோ அந்த
புல்களின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு  …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம் ..
பயணங்கள்
மறப்பதில்லை …
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
– ப்ரியா கங்காதரன்
IMG_20150721_070238

ஏய் வாசகா !!! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

ப்ரியங்களுடன் ப்ரியா–14

book1

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாகக்கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும்…
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன…
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்…

 book2

ஏய் வாசகா !!!  உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்!!!

என்று நகுலனின் ஒரு கவிதை…

இந்த வரி ஒன்றே போதும் , வாசிப்பவனும் , வாசிப்பதுவும் எவ்வளவு பெரிய வரம் என்பதற்க்கு.. எப்போதெல்லம் நாம்  தொலைந்து போனோமோ அப்போதெல்லாம் நம்மை மீட்டு கொடுப்பதும் ,எதையெல்லாமோ நாம்  தொலைத்தோமோ அதையெல்லாம் இப்போதும் தேடித்தருவதும் புத்தகங்கள்தான் .அப்படி இருந்தும் ஏன் வாசிக்கும் பழக்கம் தொடர மாட்டேன் என்று பிடிவாதம் பண்ணுகிறதே இந்த மனம் எனும்போது மனசின் மேல் அறிவு கொஞ்சம் கோபம் கூட படுகிறது

புத்தகம் படிப்பது என்பது  நுட்பமான கலை. என்ன படிப்பது. எப்படி படிப்பது. ஏன் சில புத்தகங்கள் உடனே புரிந்துவிடுகின்றன. சில புரிவதேயில்லை. ஒரே புத்தகம் எப்படி வெவ்வேறு வாசகர்களால் வேறு விதமாகப் படிக்க படுகிறது. சில புத்தகங்கள் ஏன் பல நூறு வருசமாக யாவருக்கும் பிடித்திருக்கிறது. படிப்பதனால் என்ன பயனிருக்கிறது. இப்படி புத்தகங்கள் குறித்து  ஆயிரம் கேள்விகளுக்கும் மேலாகயிருக்கின்றன…

 book

எனது வாசிப்பு …

உயிர்ப்பாக எழுத்தை நான் சுவாசிக்க ஆரம்பித்தது கடவுளின் தேசத்தில் தான்.. ஆம்… நான் வாசிப்பை தொடங்கியது கேரளாவில்தான்!

நான்காம் வகுப்பு வரை மழலை தமிழை மலைமுகட்டில் வாசிக்க ஆரம்பித்தேன் ..

அம்மா அப்பாவின் வருகை அவர்களின் அருகாமை அன்பை விட அவர்கள் எனக்கு கொண்டுவரும் சிறுவர்மலர் .. பூந்தளிர் ..எதிர்நோக்கியே இருந்தது …

காமிக்ஸ் கதைகள் .. அம்புலிமாமாவில் தொடங்கிய எனது வாசிப்பு இன்றுவரை தடையற்ற வெள்ளமாக பல்கி பெருகிக் கொண்டுதான் இருக்கிறது.

கொங்குவாசியான நான் எங்க ஊர் எழுத்தாளார் ராஜேஷ் குமார் அவர்களின் தீவிர வாசகியாகி ஒரு கால கட்டத்தில் க்ரைம் நாவலும் நானுமாகி போனதும் நிஜமே.

அதனை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் குடும்ப நாவல் பக்கம் திரும்பிய பொழுது கல்கியில் தொடராக வெளியான லக்ஷ்மி அம்மாவின்  எதற்காக என்ற நாவல் வாசிப்பின் மறுபக்கத்தை எனக்கு அழகாகக் காட்டியது.

இதுவரை படிக்கணும் என்று ஆசைப்பட்டு வாங்கியும் இதுவரை படிக்கச் முடியாத நாவல் ** கங்கை கொண்ட சோழபுரம் ** 2 ,3 , 4 பகுதிகள் மட்டுமே.

அதை போல பலமுறை படித்த நாவல்கள் என்றுபார்த்தால் ரமணிச்சந்திரன் அம்மா அவர்களின் நாவல்கள் ** காதெலெனும் சோலையிலே , மாலை மயங்குகிற நேரம், வளையோசை, விடியலை தேடும் பூபாளம் , மானே மானே ,,, புதுவைரம் நான் உனக்கு ** இதுவரை எத்தனை முறை வாசிச்சு இருப்பேன் என்று தெரியலை ,, எத்தனை முறை வாசிக்க போறேன் என்றும் தெரியலை …

ஆதர்ச எழுத்தாளர் வரிசையில் நான் நெறைய பேரை சந்தித்து இருந்தாலும் இதுவரை நிறைவேறாத விரைவில் நிறைவேற வேண்டிய ஆசை என்று ஒன்று இருந்தால் அது ரமணிச்சந்திரன் அம்மா அவர்களை சந்திக்கணும்… சந்திச்சே ஆகணும்…

எல்லோருக்கும் வாசிப்பின் மேல காதல் வர எதாவது ஒரு காரணம் இருக்கும். எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா குமுதம்,விகடன் என்று படிக்கப் படிக்க எனக்கும் வாசிப்பின் மீதான காதல் வளர ஆரம்பித்தது …

சிறுவயசில் மளிகை கடையில் பொட்டலம் கட்டி தரும் தாளை வீட்டில் வந்து பிரிச்சு படிக்கக் கூட பொறுமை இல்லாமல் இடப்புறம் வலப்புறம் என்று அந்த பொட்டலத்தை தலைகீழாக வாசித்துதான் வீடு வந்து சேர்வேன் ..
 book5

வாசிக்கும் சமுகமே வளரும் சமுகம் என்ற வார்த்தையை மனதார பின்பற்றுவள் நான். இந்த நாகரிக கணினி உலகில் என் மகளையும் வாசிக்க வைக்கணும் என்று சிறுவயதிலே நீதிக்கதைகளில் ஆரம்பித்து இப்போ போன மாதம் கல்பனா சாவ்லா பற்றிய புத்தகம் வாங்கி கொடுத்தேன்.

வாசித்தலில் வருடியவர்கள்.. ( இதை முன்னமே நமது ஸ்டார் தோழி பகுதியில் எழுதி இருந்தேன். இருந்தாலும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஆகச்சிறந்த படைப்புகள் நீங்களும் இதை வாசிக்கணும் என்று)

சில நேசிக்கும் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லி விளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும்… கதகதப்பான சாம்பலில் கண்திறக்க மனமின்றி எழுகின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துகளின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும்… அப்படி என்னை மடியில் கிடத்தி தலை கோதி வருடிய சிலரின் வரிகள்…

1. எஸ் ரா ..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி.

s-ramakrishnan
வரிகளை வாசிக்கும் பொழுதே உடன் பயணித்த அனுபவம் .. ஒவ்வொரு பக்கமும் ஒவொரு தேசமாய் ஒவ்வொரு மனிதராய் சந்தித்த போது பயணத்தின் சுகானுபவம். படிக்கும் பொழுதே பலரை சந்திக்கும் அனுபவம்.

இவரின் விழி வழியே வரிகளை கடக்கையில் அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என மனசு கேக்காமல் இருபதில்லை . , தேசாந்திரி புத்தகத்தின் சில தேன் துளிகளை சொல்கிறேன் ..தித்திப்பை நீங்களும் ரசியுங்கள் ..

சாரநாத்தில் ஒரு நாள்…. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது..

நிலமெங்கும் பூக்கள்…

பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்…. எத்தனைவிதமான மலர்கள்…! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் ..

உறங்கும் கடல்…

தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன….

2. எழுத்துச் சித்தரின் வரிகளை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை .. பாலா ஐயாவின் வரிகளை புத்தகங்களை வரிசை செய்து வகை செய்யும் அளவிற்கு எனக்கு பக்குவம் இல்லை என்றாலும் ஐயாவின் வரிகளில் வாழ்க்கையை உணரலாம்.

 balakumaran

மனசோ உடம்போ சோர்வாவும் பொழுது ஐயாவின் புத்தகம் போன்ற மருத்துவன் வேறு யாரும் இல்லை ..

ஐயாவின் வரிகளில் எனது அடி நாதம் வென்றவை …

மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.

உலகத்தில் எந்த உயரினமும் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததே இல்லை. சகலமும் ஒரே விஷயம். உண்ணும் உணவால், வடிவத்தால் இயற்கை சூழ்நிலையால் உருவங்கள் மாறலாமே ஒழிய இலையில் இருக்கும் புழுவும், மனிதனும் ஒன்றே. இதில் கர்வப்பட ஒன்றுமில்லை. — குன்றிமணி

விவேகம் என்பது திமிர் அல்ல. விவேகம் என்பது அடக்கமும் அல்ல, சூழ்நிலையின் உண்மையை தனது வலிமையை பற்றித் தெளிவாக யோசிப்பதே விவேகம்.

ஒரு மகனுக்கு நல்ல தந்தையே குரு. நல்ல தந்தையே தோழன். அவனே தெய்வம் போன்றவன்.தந்தை என்பது மந்திர ரூபம். மந்திரம் என்பது வாழ்வதற்கான விதிமுறைகளின் சுருக்கம். ஒருவனுக்கு நல்ல தந்தை கிடைத்தால் நல்ல வாழ்க்கை கிடைத்துவிட்டதென்று அர்த்தம்.- சுழற்காற்று

நல்லவனாகவும் வல்லவனாகவும் ஒரு ஆண் இருந்துவிட்டால் அதை விடப் பெரிய நிம்மதி ஒரு பெண்ணுக்கு எதுவுமில்லை. -உத்தமன்….

பெண்கள் எங்கெல்லாம் போற்றப்படுகிறார்களோ, எந்த இடத்தில் அன்பும், மரியாதையுமாய் நடத்தப்படுகிறார்களோ, அங்கு எல்லா செல்வங்களும் சிறந்து விளங்கும்.–என் கண்மணித்தாமரை

3. குடும்ப உறுப்பினர்களின் மூலம் அறிமுகமானவர். ரமணிசந்திரன் என்ற பெயர் மனதில் பதியவும், சந்தர்ப்பம் வாய்த்தபோது தேடிப்பிடித்து படிக்கவும் தொடங்கினேன்..

 ramanichandran

இவர் கதைகளில் கதாநாயகிகளை அத்தனை கண்ணியமாக காட்டி, அவருடைய எண்ண ஓட்டங்களை சொல்லும் போது படிக்கும் பலருக்கும் புத்தி சொல்லும் விதமாக, எது நல்லது, எது கெட்டது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது, எது தப்பு, எது சரி, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்மைக்கு உதாரணம் தருவது அருமை.

சில நேரங்களில் அந்த கதாநாயகிகள் ஆகவே கற்பனை செய்து பார்ப்பதும் உண்டு … படிக்கும் போதே நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மில் இருக்குமோ என்றே எண்ண வைக்கும் எழுத்து இவருடையது….

4. விகடனில் தொடராக வந்து படித்ததுதான் என்றாலும் மீண்டும் புத்தகமாக வாங்கி படிக்க ஆரம்பித்தேன்… இன்று வரை மீள இயலவில்லை!

 vairamuthgu

திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நான் நினைத்தது உண்டு. அது சினிமாவில் மட்டுமே சத்தியம் என்று நினைததுவுண்டு. ஆனால் இந்த கருவாச்சி காவியம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

வைரமுத்து ஐயாவின் வைர வரிகளில் என் கண்களை குளமாக்கிய கருவாச்சி காவியம் பற்றித்தான் சொல்கிறேன் ..

ஒத்தையில கருவாச்சி புள்ள பெத்தது. படிக்கும் போதே உசிரு ஒடுங்கி ஒரு நடுக்கம் வருவது தடுக்க முடியாது

கருவாச்சி, அவ ஆத்தா பெரியமூக்கி, கொண்ணவாயன், கட்டையன், அவனப்பன் சடையதேவர், கருவாச்சி மகன் அழகுசிங்கம், கெடா பூலித்தேவன், வைத்தியச்சி, கனகம், பவளம். இவங்க எல்லார் கூடவும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடிச்ச அனுபவம் இருக்கும் இத படிச்சி முடிச்ச உடனே.

நல்லா காவியம் படிச்ச சந்தோஷமா?.. கதைல உள்ள சோகமா?.. எது விஞ்சி நிக்குது-னு தெரியாது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் பொழுதே எனக்கு கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த என் எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

5. நிலவையும் தாளில் கொண்டு வந்த வித்தகக் கவி பா.விஜய். கி.பி, கி.மு நடந்த நிஜங்களை காதல் சோகங்களை கவிதைகளாக கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் கவிஞர் பா.விஜய் . சரித்திர கால காதல் நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட காதல்களை கவிதைகளாகத் தொகுத்து நெய்யப்பட்டது இந்த உடைந்த நிலாக்கள்.

 pavijay
பா.விஜயோட “உடைந்த நிலாக்கள்” ஆகச் சிறந்த கவிதை தொகுப்பு. இதை படிச்சவங்களுக்கு நல்லா தெரியும் பெண்களால எத்தனை ராஜ்ஜியம் எழுந்திருக்கு… எத்தனை ராஜ்ஜியம் வீழ்ந்திருக்குனு…

ஷாஜகான், அலெக்ஸாண்டர், நெப்போலியன், கஜினி முகம்மது, ஆபிரஹாம் லிங்கன், திப்பு சுல்தான், ஒத்தெல்லோ, பிருத்விராஜன்… இப்படி நீண்டுட்டே போகும். இவங்க வாழ்க்கைல நடந்த பெரும் மாற்றங்களுக்கு பின்னாடி பெண் மட்டும்தான் முக்கிய காரணம்.

“பெண் என்னும் பிஞ்சு பிராவகமே! கனவாக நீயிருந்தால் கண்விழித்தா நான் இருப்பேன்? நிலமாக நீயிருந்தால் நடக்க மாட்டேன். தவழ்ந்திருப்பேன் முள்ளாக நீயிருந்தால் குத்திக் கொண்டு குதூகலிப்பேன் தீயாக நீயிருந்தால் தினந்தோறும் தீக்குளிப்பேன் தூசாக நீயிருந்தால் கண் திறந்து காத்திருப்பேன் மழையாக நீயிருந்தால் கரையும் வரை நனைந்து நிற்பேன்”

எது நல்ல புத்தகம் என்று நமது வாசிப்பு அனுபவத்தை வேண்டுமானால் பரிந்துரை செய்யலாம். மற்றபடி இப்படிப் படி. இப்படி படித்தால் மட்டுமே புரியும் என்ற அறிவுரைகள் பெரும்பாலும் பொருந்தக்கூடியதில்லை.

ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரும்போது அதை தொடர்ந்து அந்த புத்தகத்தின் ஆரம்பம் ஒருவிசயத்தில் தொடங்கி மெல்ல தன் வசப்படுத்துகிறது ,பிறகு ஒரு இடத்தில் நம்மை யோசிக்க வைத்து விட்டு ஏதோ ஒரு முடிவை சொல்லியதுபோல தந்து விட்டு குழந்தைகளின் யோசிக்கும் திறனை தொடங்கிவிடுகிறது என்பதோடு  சூசன் கிரின்பீல்ட் நிறுத்திவிடவில்லை.அதை படித்து காட்டும் பக்குவத்தையும்  பொறுளையும் நாம் சொல்ல சொல்லும்போது மூளை செல்கள் ஊக்கம் பெற்று படிப்பில் அவர்களுக்கு ஒரு தொடர்ப்பை ( Continuity ) நினைவுறுத்த பயிற்சி தருகிறது என்கிறார்.அது மட்டுமல்ல இது கம்யூட்டரில் செலுத்தும் கவனத்தை விட பல மடங்கு பலன் தருகிறது என்கிறார் .

 book3

மனிதரில் நாம் தரம் பிரிப்பதை போல புத்தகமும் அவ்வளவு சுலபமாக எடை போடுவது தவறான பார்வை .ஒவ்வொரு புத்தகமும் ஒரு புதிர்தான் .அந்த புதிரை அவிழ்க்க பலருக்கும் பொருமை இருந்தாலும் ஏன் இவன் இப்படி எழுதுகிறான் என்று எழுதியவன் தளத்தில் நின்று பார்க்கும் பக்குவம் வரவேண்டும் என்பது ஆரோக்கியமான சிந்தனை .

சமுதாய வளர்ச்சியில் தனிமனித பங்காக வாசிப்பை சொல்வேன் நான் ..

வாசிப்பவன் என்றுமே பிறரை நேசிப்பான் ..

பிறரை நேசிப்பவன் என்றுமே தவறு செய்ய மாட்டான் …

வாசிப்போம் …வளம் பெறுவோம் …

 book4

விரல்களற்றவன் கையில் கிடைத்த 
வீணை போலவீணாய் கழியும்.
கைகளில் புத்தகம் 
இல்லாத மாலைகள்…
எழுத்தை இனித்து 
புசிக்கும் வேளைதனில் 
வயிற்றுப் பசி
எட்டி நின்றுவிடும் …
நானே என்னை தொலைக்கவும் 
நானே என்னை கண்டெடுக்கவும் 
புத்தகம் மட்டுமே
துணை  வருகின்றன.
விதைந்த வரிகளில்
கவிதையாக கருவாகி 
பக்கங்களில் உயிர்த்து 
சுவாசம் செய்யும் பொழுது 
விடிந்தது மனமும் வானமும்.

  • ப்ரியா கங்காதரன்

book6

ப்ரியங்களுடன் ப்ரியா – 12

என் வீட்டுத் தோட்டத்தில்…
garden8 garden7 garden6 garden5 garden4 garden3 garden1 garden
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி என்னை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார் ..
இயற்கை… நம்ம எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம் .. நாகரிக வாழ்கையில் நவீன கோமாளியாக நாம் மாற ஆரம்பித்த பின்னர் இயற்கை மீதான காதல் நம்ம எல்லோருக்கும் ரொம்ப குறைஞ்சு இருக்கு… ஒரு வினாடி நின்றால் கூட நம்மை 100 பேர் வென்றுவிடுவார்கள் என்று காலத்தின் பின்னே நாம் ஓடினாலும் நமக்கு என்று நம்மை சற்று இளைப்பாற நமது தினசரி வாழ்வில் ஒரு அங்கம் எல்லோருக்கும் வேண்டும். அது நம் மனதில் மகிழ்ச்சி விதைப்பதாக  இருக்க வேண்டும் என்பதே எனது இந்த பதிவின் நோக்கம்…
தோட்டம்… இன்றைய வேதியியல் கலந்த வேளாண் உலகில் எந்த கலப்பும் இல்லாமல் நாமளே உற்பத்தி செஞ்சு சாப்பிடுவதும் ஒரு வரம்தானே ? தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே…ஆர்வம் இல்லையென்றாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம்.. ‘மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய திட்டம்  நமக்கு சரி வராது’னு சொல்றவங்க முதலில் இதை  படிங்க…ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே…. நமக்காகவே ..
நம்ம   எல்லோர் வீட்டிலும்  எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா ‘டென்ஷன்’ இருக்குது .  யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை…காரணம் இன்றைய பரபரப்பான சூழல்…!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிட்டே இருந்தா நம்மளை  யார் கவனிக்கிறது…உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்…காய்கறிகள், பூக்களை பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்…!!
ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை…நன்கு கழுவி சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயம் இல்லாம சாப்பிட முடியுமா ?
நீங்க  சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லையே  என சாமார்த்தியமா தப்பிக்க முடியாது …தூங்க, சமைக்க, FB  பார்க்க, வாட்ஸ் அப் அரட்டை அடிக்க எல்லாம் நேரமும் இடமும்  இருக்குதுல அது மாதிரி இதுக்கும்  ஒரு இடத்தை ஒதுக்குவோம் …மொட்டை மாடி, பால்கனி ,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே..
வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்…அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்…! நீங்க மனசு வச்சு வேலைய ஆரம்பிங்க , அப்புறம் பாருங்க இவ்வளவு  இடம் நம்ம வீட்ல தானா என்று ஆச்சரியமா இருக்கும்…
அப்பாடி..   ஒருவழியா இடத்தை தயார்  செஞ்சுவிடலாம் தானே ? அப்புறம்…  விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை…நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க… கலக்கிடலாம்..
வீட்டிலேயே காய்கறி உற்பத்தி செய்வதை பாப்போம் ..
ஆரம்பத்துல தோட்ட கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்…ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்தி பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில் இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க… உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல…
தேவையான பொருள்கள்…
* மண் அல்லது சிமென்ட் தொட்டி
* பிளாஸ்டிக் அரிசி சாக்
* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)
20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்)
ஓகே!  இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது…)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க.
செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கல், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால்  கலந்து  வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.
காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணை போட்டு நிரப்புங்கள்…இலைகள்  மக்கி உரமாகி விடும்…அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்…வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !
தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும்  தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.
புதினா, கீரை
புதினா இலைகளை பறித்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்…வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.
தினமும் தேவையான எளிய முறையில் பயிர் செய்யும் காய்கறிகள் …
கொத்தமல்லி
கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் வெட்டி  சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்…மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்…
சின்ன வெங்காயம்
வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்…மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது…வளர வளர பார்க்க அழகாக இருக்கும்…வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்..
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்கலாம் ..
இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால்  வீட்டில் வளர்த்து பயன் பெறலாம் ..
தக்காளி, மிளகாய், கத்தரி
நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும்….விதைகள் தனியே பிரியும்…பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்…
நன்கு முற்றிய கத்தரி வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
விதைக்கும் முறை
விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்…காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்…செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்றாக நட்டு விட வேண்டும்.
தக்காளி காய்க்க தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.
பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும்.
பந்தல் அமைத்தல்
தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கை பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி ஒரு ஆறு  அடி  விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்…கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 16  இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டி கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்…இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், .
கயிறுக்குப்  பதிலாக  கம்பிகளையும் உபயோகபடுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம்.
மற்றொரு முறையிலும்  பந்தல் அமைக்கலாம்
சிமென்ட் பையில்  மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்…இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்…மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.
நம்ம தோட்டத்துக்கு நாமே உருவாக்கும் உரங்கள்…
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம்.
வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.
இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும்.இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும்.
இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.
பிற  கழிவுகள்…
மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும்.
அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.
ஆக்சிஜன் அவசியம்
கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும்.
எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது… இவை மட்டுமே மிக சிறந்த இயற்கை உரங்கள்.
நீர் பற்றாக்குறையை சமாளிக்க சில முறைகள்…
நாம் பயன்படுத்திய கழிவு நீரையே சுத்தம் செய்து செடிகளுக்கு விடலாம் ,
கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் இருக்கும் …இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல… எனவே இதை  சுத்திகரிக்கலாம்…
சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்…விரைவில் வளர்ந்து  விடும்…கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்…நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்… கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்…சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்…
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி மேலே கூறிய அதே மெத்தட்தான். கருங்கல் ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.
தோட்டம் நன்கு உருவாக சில சிறப்பு முறைகளை காண்போம் ..
தரையில் கனமான  பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் உருவாக்கலாம் … தரையில் நீர் இறங்கி  விடும் என்ற பயம் இல்லை , ஒன்றும் ஆகாது…இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சியும்  கிடைக்கும் ..
* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் நம்மை போல ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்…
* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்…சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லைஎன்றால் சாதாரண தண்ணீர் போதும்.
* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறலாம்
நம் மீது அக்கறையும் கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்து  நாமே  பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில சங்கடங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும்.
இயற்கையோடு இணைந்து புதுயுகம் படைப்போம். நம்மை நாமே செதுக்கி கொள்ள நமக்கு கிடைத்த வாய்ப்பாக தோட்டம் கருதுவோம் …
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி எனை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார்!
– ப்ரியா கங்காதரன்
p4

ப்ரியங்களுடன் ப்ரியா – 10

புடவை… ரொம்ப பெரிய தலைப்பு …
அழகாக மடித்து கொடுத்தால்
அருமையாக படிக்கலாம்!
 

IMG_7101
பால் நிலவு
பருத்தியை நூலாக்கி …
விண்ணில்  
தறி செய்து…
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க …
நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!
Sundari Silk_Day 2 -09
புடவை ,நம்ம எல்லோருக்கும் ரொம்பபிடிச்ச விஷயம்… பிடிச்ச விஷயத்தை பிடிச்ச மாதிரி நாம எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறோம்?

அதனால சேலை பற்றி கொஞ்சம் பேசுவோமே…

கடலில் இருக்கும் மீனை கூட எண்ணிவிடலாம்… பெண்கள் நம் மனதில் இருக்கும் புடவை பற்றிய ஆசைகளை மட்டும் எண்ணி விடவே முடியாது!

ஆதிகால  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பதில் ஒரு வரி வருகிறது ..

*பாத்து இல் புடைவை உடை இன்னா*

பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம்.

அப்போவே பாருங்க… நம்ம முன்னோரே சொல்லி இருக்காங்க.. சரியான முறையில் இல்லாத புடவை உடுத்துவது துன்பம் என்று.

அப்போவே அப்படி என்றால் இப்போ நாம எப்படி இருக்கணும்?

நாம்  கட்டுகின்ற தைக்கப்படாத உடையான புடவை  பல்லாயிரம்   ஆண்டுகளுக்கு முன்பே  பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் ஏதும்  இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி, உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் புடவைகள்  இருந்திருக்கின்றன.

Sundari Silk_Day 2 -03

புடவைகளின் வகைகள்

பட்டு, கைத்தறி ,சிபான், பனாரஸ், போச்சம் பள்ளி, காட்டன் ,டிசைனர் எம்ப்ராய்டரி,  டிசைனர் பார்ட்வேர் ,  டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா , ஹாஃப் ஆம்ப்,  ஹாஃப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட், டெனிம்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைகின்றன ..

img_02_black copy

புடவைகள் தேர்வு செய்யும் முறை

பொதுவாக நாம் கடைக்குள் நுழையும் வரை இருக்கும் மனப்பான்மை  விற்பனையாளர் சேலையை எடுக்கும் வரைதான் இருக்கும். அவர் ஒன்னு ஒண்ணா எடுக்க எடுக்க நம்ம மனசுல  வரும் பாருங்க ஒரு சுனாமி பேரலை… இதை எடுப்போமா அதை எடுப்போமா என்று!

அங்கேதான் நாம கவனமா இருக்கணும்…. வெறும் கண்ணைப் பறிக்கும் அழகில் மயங்காம, நாம குடுக்கும் பணத்திற்கு வொர்த் இருக்கா? இதை நாம கட்டிய பின்னாடி நல்லா இருக்குமா ? துணியின் தரம் என்ன? இதையெல்லாம் நிதானமா யோசிச்சு தான் தேர்வு செய்யணும்.

எங்கே ப்ரியா. அதையெல்லாம் பார்க்க முடியுது ?? சுத்தி 10 கண்ணாடி வச்சு சேலையை தோளில் வச்சு நம்மை வாங்க வச்சு விடுறாங்களே என்று மட்டும் சொல்லாதிங்க… நம்ம பணம் நாமதான் பொறுமையா தேர்வு செய்யணும்!

தரம் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே தேர்வு செய்யும் புடவையும், எந்த விஷேசத்துக்குக் கட்டப் போகிறோம் என்பதை மனதில் கொண்டு தேர்வு செய்தலும் நலம்..

அதைப் போலவே நம்ம உடல்வாகு, நிறம்பொருத்தும் தேர்வு செய்யணும்.

ஒரு  புடவையை தேர்வு செய்த உடன், ‘இந்த புடவை நன்றாக உள்ளது… எனக்கு பொருத்தமாக இருக்கும்’ என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் ..

‘இந்த நினைவு மாறாது, யார் என்ன சொன்னாலும் , இதற்காக  நான் மன வருத்தப்பட மாட்டேன். இந்தப் புடவையை வாங்கி விட்டேன்…’ என்று, கடையிலேயே, உங்கள் மனசஞ்சலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். பின், வீட்டில் வந்து பார்த்தாலும், யார் எதைச் சொன்னாலும், கவலைப்படாமல் இருக்கலாம்!

img_01 copy
புடவை  கட்டும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை

பெண்கள் அணியும் புடவையின் அமைப்பே அவர்களின் தோற்றத்தையே மாற்றியமைக்கக்கூடிய தன்மையுடன் திகழ்கிறது. புடவையில் உள்ள டிசைன் வெறும் அழகிற்காக மட்டுமே அமைந்திருப்பதாகக் கருதிவிடக்கூடாது. திட்டமிட்டு புடவையைத் தேர்ந்தெடுத்து உடுத்தினால் பெண்களின உருவ அமைப்பே புரட்சிகரமாக மாற்றிவிடக்கூடும்.

சில புடவைகளில்  உள்பக்கம் வெளிப்பக்கம் என இரு பக்கங்களிலும் வித்தியாசம் இருக்கும். அதாவது வெளிப்பக்கம் இருக்க வேண்டிய பக்கம் பகட்டாக இருக்கும். மற்ற பக்கம் மங்கலாக இருக்கும். இதனை கவனித்து கொள்ளவும்.

புடைவையின்  ஒரு முனையில் முந்தானையும் மறுமுனையில் சில சேலைகளில்  தைப்பதற்கான ப்ளவுஸ் துணியும் இருக்கும். ப்ளவுஸ் தைப்பதற்கான துணி இருந்தால் அதனை வெட்டி எடுத்து விடவும். இல்லையேல் நீளம் அதிகமாக இருக்கும். கட்டுவதற்க்கும் கனமாக இருக்கும்..

புதுப் புடவை  கட்டுவதற்கு முன் அதனை மிதமான சூட்டில் தேய்த்து   கொள்ளுங்கள். இது மடிப்பை சரியாக பிளீட் செய்ய  உதவி செய்யும் ..

_DSC4555
சற்று உயரமானவர்களுக்கான புடவை  முறைகள்

பருமனாக இருந்தால் டார்க் கலர்ஸ் பொருந்தும்.
மாநிறம், கருப்பு நிறத்தவர்களுக்கு டார்க் கலர் வேண்டாம். அழுத்தமான காம்பினேஷன் (கருப்பு-வெள்ளை, பச்சை-மஞ்சள்). பெரிய டிசைன் பூக்கள், குறுக்கு கோடுகள் தைரியமாக செலக்ட் பண்ணலாம்.

அகலமான கரை வைத்த புடவைகள், முப்போகம் (சேலையின் மொத்த உயரத்தை மூன்றாகப் பிரித்து 2 அல்லது 3 கலரில் வரும்) புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை.

கொஞ்சம் பருமனானவர்களுக்கு  மெல்லிய ஆடைகளே வேண்டாம். உருவமும் உடல்பாகங்களும் மேலும் பெரிதாகத் தோற்றம் தரும்..

பட்டு, கஞ்சி போட்ட காட்டன், ஆர்கன்டி, ஆர்கன்ஸா, டஸ்ஸர் சில்க் போன்றவை ஒல்லியாக இருப்பவர்களை ஓரளவு பூசினாற்போல காட்டும். நீளத் தலைப்பு வைத்துக் கொள்ளுங்கள். ஒல்லி என்பதால் நிச்சயமாக 6 முதல் 8 ப்ளீட்ஸ் வரும். குஜராத்தி ஸ்டைலில் கலக்கலாம். உயரத்தைக் குறைத்து, அகலமாகக் காட்டும். அகலமான பார்டர், நல்ல கான்ட்ராஸ்ட் கலர் புடவையை செலக்ட் செய்யுங்கள்.

பிரின்டட் புடவைகளை அணியும்போது அதற்கு கான்ட்ராஸ்டான பிளவுஸ் போடுங்கள். அகல பார்டர் புடவை நல்லது. உயரத்துக்கு அழகான தோற்றம் தரும்.பெரிய உருவங்கள் அச்சிடப்பட்ட புடவை கட்டுங்கள்.

உயரம் குறைவான தோழிளுக்கு  புடவை முறைகள்

கம்பீரத்தையும் கண்ணியத்தையும் கலந்துகட்டி வெளிப்படுத்துவது புடவை மட்டுமே.

டார்க் கலர்களைவிட வெளிர் நிறங்களே அழகு. தலைப்பின் நீளம் குறைவாக இருப்பது நல்லது. காட்டன், பேப்பர் சில்க், ஆர்கண்டி, டஸ்ஸர் சில்க் புடவைகளைத் தவிர்க்கவும்.

கையளவு பார்டர் உள்ள புடவை அணியுங்கள். நேர் கோடுகள் உள்ள உடைகளை அணிவதாலும் உயரத்தை அதிகமாக்கிக் காட்டலாம்.
சாய்வான கோடுகள் உள்ள ஊடை அணியவேண்டாம். இன்னும் குட்டையாகக் காட்டும்.

இயன்றவரை பிளெய்ன் புடவை, சிறிய பூக்கள் உள்ள புடவை கட்டுங்கள். பேபி பிங்க், லைட் வயலட், வெளிர் நீலத்தில் பூக்கள் இதெல்லாம் ஓகே.

ஷிபான், ஜார்ஜெட், மைசூர் சில்க், பின்னி சில்க், பிரின்டட் சில்க் டிசைன் புடவைகள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட ரகங்கள். இதில் ஜரிகை ரகங்களை விழாக்களுக்கு அணியலாம். இது காஞ்சிப் பட்டுக்கு ஈடுகொடுக்கும்.

சின்னச் சின்ன பூக்கள், டிசைன்கள் உள்ளதை எடுங்கள். பெரிய பூக்கள், பெரிய டிசைன் வேண்டாம். சின்ன பார்டர் போதும், அதிக டிசைன் தேவையில்லை.

குண்டாக இருப்பவர்கள் குஜராத்தி டைப்பில் புடவை உடுத்த வேண்டாம். மேலும் குண்டாகக் காட்டும். ஒரு பக்க கரை போட்ட புடவை அழகு. இரண்டு பக்க ஜரிகை போட்ட புடவை கட்ட ஆசையாக இருந்தால் சிறிய பார்டர் ஓகே. குள்ளம், பருமனை குறைத்துக் காட்டும். டார்க் நிற உடைகளை அணியுங்கள். ஒல்லியான தோற்றத்தைக் கொடுக்கும்…

_DSC4454l

புடவைகளை எப்படி பாதுகாப்பது?

ஜரிகை மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்…

விலை உயர்ந்த புடவையோ, வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும். இதனால் புடவையின் ஓரங்கள் பாதுகாக்கப்படும். அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

விலை உயர்ந்த உடைகளை வைக்கும் வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது வார்ட்ரோபின் வாசனையை தரும். ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது. பர்ஃப்யூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போகவும் வாய்ப்புண்டு.

டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.

ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை வெளளை காட்டன் துணியில் சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் உருண்டகளைப் பயன்படுத்த வேண்டாம்.

உடையின் மேல் வாசனை திரவியங்களையும் தெளிக்கக் கூடாது. அது புடவையில்  கறை உண்டாக்கும்.

காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும்.
அதே போல நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக்  கூடாது.

ஷிபான் புடவைகளை ஹாங்கரில்தான் மாட்ட வேண்டும்.

நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசி காய வைக்கலாம்.

சில நேரம் ஜாக்கெட்டின் உட்புறத்தில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து  குறிப்பிட்டப் பகுதியில் துடைத்தால் கறை மறையும்.

புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்து கொள்ளலாம்.
பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.

இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்..

பால் நிலவு   
பருத்தியை நூலாக்கி…
விண்ணில்  
தறி செய்து ..
வானவில்லின் 
வண்ணம் கொண்டு…
ஆதவன்  சாயம் 
தோய்க்க…
முப்பது முக்கோடி தேவர்களும் 
நெய்தெடுக்க…

நட்சத்திரமாக ஜொலிக்கிறது 
எனது சேலை!

 

– ப்ரியா கங்காதரன்

v1படங்கள்: சுந்தரி சில்க்ஸ்

ப்ரியங்களுடன் ப்ரியா – 9

முதுகு வலி… ஏன்? எப்படி? தீர்வுகள்..! 

back pain 2

பறவைகள் எல்லாம்  பறந்து போக 

பாட்டி வைத்த மரத்தில் முதுகு சாய்த்து 

ஓய்வாக மிதக்கும் ஒற்றை மேகத்தை வெறிக்க 

இன்னும் வலிக்குதாம்மா என்ற 

அன்னையின் குரலில் 

வலுக்கட்டாயமாய் என் சிறகுகளைப் 

பிடுங்கி ஆரவாரம் செய்த முதுகுவலி 

புறமுதுகிட்டுச் சிதறுகிறது 

மெல்ல மெல்ல… 

லாரம் வைத்து  பரபர சமையல், ஸ்கூல், ஆபீஸ் வழியனுப்பல்கள் முடிந்து வாகனப் பயணம். அலுவலகத்தில் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்ததில் இருந்து ஷட்-டவுன் பண்ணும் வரை  சேரில் சுழன்றபடி வேலை. ‘சும்மா இருக்கேன்’ என்ற வார்த்தையை இப்போது மைக்ரோ ஒலி வாங்கி வைத்துக் கேட்டாலும் கிடைக்காது. எல்லோரும் எப்பொழுதும் பிஸி. உடல் என்ற மெஷினில் எங்காவது வலிக்கும் வரை அப்படி ஒரு மெஷினைப் பயன்படுத்துகிறோம் என்ற உணர்வுகூட மிஸ்ஸிங். வீட்டுப் பொறுப்புகள் முடித்து அக்கடா என்று ரிமோட்டைத் தட்டி வீட்டு சோபாவில் அமரும் இரவு 11 மணிக்கு முதுகு வலி பின்னியெடுக்க, சரியாக தூக்கம் பிடிக்காமல் விடிகிறது அடுத்த காலை. நம்மைப் போன்ற பெண்களுக்கும்  முதுகு வலிக்கும் அவ்வளவு நெருக்கம்!

ஏன் வருகிறது முதுகு வலி ?

நம் உடல் இயக்கத்தில் எலும்பு, நரம்பு, ஜவ்வு ஆகிய மூன்றுக்கும் முக்கியப் பங்கு உண்டு. இந்த சிஸ்டத்தில் பிரச்னை வருவதுதான் உடல் நோயாகிறது. ஜவ்வு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் பேக் பெயினை உருவாக்கும். அளவுக்கு அதிகமான எடையைக் குனிந்து தம் கட்டித் தூக்குவதால் வரலாம். தொப்பை பெரிதாகிக் கொண்டே போகும் போது அதை தாங்கிக் கொண்டிருக்கும் முதுகு எலும்பு வளைகிறது. இதனாலும் பேக் பெயின் வரும். 30 வயதைத் தாண்டிய பலரும் பேக் பெயின் பேஷன்ட்தான். கூன் போட்டு உட்கார்ந்தபடி பலமணி நேரம் இருப்பதும் இப்பிரச்னையை உருவாக்கும். பின்புறம் குறைந்த அளவு சாய்வு மற்றும் சாய்வே இல்லாத சேர்களை பயன்படுத்துவதும் பேக் பெயினை உருவாக்கும்.

முதுகு வலியின் முதல் அறிகுறிக்கு அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, செயலற்றுப் போகும் போதோ, சிறுநீர், மலம் வெளியேறுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தியும், வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொடக்க நிலையில் எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்னை உள்ளதென்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும். பெரும்பாலான முதுகுவலிகள், சில நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல்வதை விட, சில நாட்கள் பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம்.

back pain 3

முதுகு வலிக்கும் நமக்கும்  அப்படி என்ன நெருங்கிய உறவு?

பொதுவாக முதுகு வலி  பெண்களுக்குத்தான்  அதிகம் வருகிறது. பூப்பு எய்திய பின்னர் பீரியட்ஸ் டைமில் எலும்புகளில் வலி பின்னியெடுக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்காக அந்தக் காலத்தில் உளுந்துக் கஞ்சி, உளுந்தங்களி உணவில் சேர்க்கப்பட்டது. ஆனால், இப்போது இருக்கிற டீன்ஏஜ்கள் உளுந்துக் கஞ்சி என்றால் ‘உவ்வே’ சொல்கிறார்கள்.  இதையெல்லாம் சேர்க்காவிட்டால் இளம் வயதிலேயே பேக் பெயின் இலவசமாகக் கிடைக்கும் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. குழந்தைப் பேற்றின் போது இடுப்பு எலும்புகள் விலகிக் கொடுத்து,  பின்னர் பழைய நிலைமைக்குத் திரும்பும். அந்த சமயத்திலும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்க உளுந்து சார்ந்த உணவுகள் அவசியம். 35 வயதுக்கு மேல் எலும்பு தேய்மானம் ஆரம்பமாகும். அப்போது கால்சியம் மற்றும் புரதச்சத்துள்ள உணவுகள் மூலமாக எலும்புக்கு வலு சேர்க்கலாம். நாற்பது வயதுக்கு மேல் உணவில் கேழ்வரகு, பாசிப் பருப்பு, வெந்தயக்கீரை, சோயா பீன்ஸ் ஆகியவற்றை கட்டாயம் சேர்க்க வேண்டும்.

காரணங்கள் 

முதுகெலும்புக் கோளாறுகள் இடுப்புப் பிடிப்பைத் தூண்டிவிடும். முதுகெலும்பின் வட்ட வில்லைகள் தேய்ந்து போய், ஹெர்னியாவால் பாதிக்கப்படும். அப்போது வட்ட வில்லைகள் ஸியாடிகா நரம்புகளை அழுத்தும். இதனால் ஸியாடிகா (Sciatica) ஏற்படும். இதர முதுகெலும்புக் கோளாறுகளும் இதற்கு முக்கியக் காரணங்கள். அதிக எடை தூக்கி நடப்பது, ஓடுவது, மாடிப் படிகள் ஏறுவது ஆகியவை வலியை அதிகமாக்கும்.

ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸால் எலும்புகளில் பிதுக்கம் ஏற்படும். இந்த ஏறு மாறான பிதுக்கங்கள் இடுப்புப் பிடிப்பை உண்டாக்கலாம். சுளுக்கால் ஏற்படும் தசைநார்கள் வீக்கமும் காரணமாகலாம். சர்க்கரை வியாதியில் ஏற்படும் நரம்பு சேதத்தாலும் ஸியாடிகா ஏற்படும். ரத்த கட்டிகள், வீக்கங்கள், அதிக உடல் பருமன், அழற்சி இவற்றையும் காரணங்களாகச் சொல்லலாம்.

எலும்புக்கு பிடித்த டயட்

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். சில குழந்தைகள் பால் குடிப்பதைத் தவிர்க்கும். பால் பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மற்றும் ஐஸ்க்ரீமாக கொடுக்கலாம். பால் மற்றும் பால் பொருட்கள் சார்ந்த உணவுகளை குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும்… நாமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் எலும்பு உறுதிக்கும் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்துடன் வைட்டமின் டி சேர்க்கவும். உணவில் கிடைக்கும் கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் கிடைக்கிறது. குட்டிக் குட்டி மீன் முட்களில் கால்சியம் இருக்கிறது. அதை அப்படியே மென்று சாப்பிடும் போது உடலுக்கு கால்சியம் கிடைக்கும். வெஜிடபிள் ஆயிலில் வைட்டமின் டி உள்ளது. சோயா பீன்ஸ் ஆயிலையும் பயன்படுத்தலாம்.

milkfish

தீர்வு என்ன?

உங்கள் வேலை நேரம், வேலையின் தன்மை ஆகியவற்றைக் கண்காணித்து பேக் பெயின் வருவதற்கான தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளவும். கொஞ்ச நேரம் நடப்பது, சிறிய ஓய்வு என வழக்கத்தை மாற்றிக் கொள்ளவும். உங்கள் டயட் சார்ட்டை செக் பண்ணவும்.  எலும்புகள் வலுப்படுவதற்கான உணவுகளைச் சேர்க்கவும். வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் உள்ள அத்தனை பொறுப்புகளையும் தங்களது தோள்களில் சுமப்பதற்கு பதிலாக கணவர், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் ஓய்வு கிடைப்பதுடன் பேக் பெயின் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். தொப்பை விழாத அளவுக்கு வெயிட்டை மெயின்டெய்ன் செய்வது ரொம்ப முக்கியம்.

சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை வீட்டில் செய்யலாம்.

உதாரணம்: நன்றாக நிமிர்ந்து படுக்கவும். படுத்த நிலையில் முட்டியை மடக்காமல் உடலை மேலே தூக்கவும். படுத்த நிலையில் நிலத்தில் இரண்டு கால்களையும் மடக்கி இடுப்பை மட்டும் மேலே தூக்கவும். இதே போல் குப்புறப் படுத்த நிலையில் தலையை மேலே தூக்குவது, இடுப்பையும் வயிற்றையும் மேலே தூக்குவது ஆகிய பயிற்சிகள் ஒவ்வொன்றையும் ஐந்து முறை செய்வதன் மூலம் பேக் பெயினால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

heels

முடிந்த வரை ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். பேக் பெயின் உள்ளவர்கள் குப்புறப் படுத்து உறங்குவதைத் தவிர்க்கலாம். மல்லாந்துபடுப்பதை விட ஒருக்களித்துப்படுப்பதே நல்லது. உடல் என்னும் இயந்திரம் ஒழுங்காக வேலை செய்தால்தான் சந்தோஷச் சிகரங்களில் சறுக்கி விளையாட முடியும். உடலை கவனித்தால் உற்சாகமாக வலம் வரலாம்.

வீட்டு வைத்தியம்

  • விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட காலின் பாதங்களில் தடவலாம். இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.
  • 5 பூண்டு பற்களை எடுத்து 50 மி.லி. நல்லெண்ணெயில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட, வலியுள்ள இடங்களில் தடவலாம்.
  • புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரிக்கவும். இந்த களிம்பை தடவலாம்.
  • சூடான நல்லெண்ணை + உப்பு சேர்த்து மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாகச் செய்யவும்.
  • விளக்கெண்ணெய் ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணை 1 டீஸ்பூன் + உலர்ந்த இஞ்சிப் பொடி 1/4 டீஸ்பூன் – இவற்றை 1/2 கப் சூடான நீரில் கலந்து தினமும் இரவில் சாப்பிடவும்.
  • ‘வெண்நொச்சி’ மூலிகை, இடுப்புப் பிடிப்பை குணப்படுத்தும். இதன் இலைகளால் செய்யப்படும் கஷாயத்தை, தினம் 3 லிருந்து 4 டீஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளவும்.

ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தீர்வுகள்…

  • முதுகு வலி வந்தால், கூடவே இடுப்புப் பிடிப்பும் வரும் என்பது ஆயுர்வேத மருத்துவர்கள் அறிந்த அனுபவம். அதனால் முதுகு வலி சிகிச்சையுடன் இடுப்புப் பிடிப்புக்கான மருந்துகளும் சேர்த்தே கொடுக்கப்படுகின்றன.
  • இடுப்பு வலிக்கு, ஆமணக்கு வேரிலான கந்தர்வஹஸ்தாதி கஷாயம், கருங்குறிஞ்சி வேர், தேவதாரு, சுக்கு இவற்றால் செய்யப்பட்ட சஹசராதி கஷாயம் போன்றவை நல்ல பலனை தருகின்றன.
  • முன்னால் சொல்லப்பட்ட ஆயுர்வேத மருந்துகளும் நல்ல நிவாரணம் தருபவை.
  • மருந்துகளுடன் ‘வஸ்தி’ எனப்படும் எனிமா சிகிச்சை இடுப்பு வலியை இல்லாமல் செய்யக்கூடியது.
  • ஒரு நாள் எண்ணெயை உபயோகித்தும் மறுநாள் கஷாயத்துடனும் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பிறகு பிழிச்சல், கடி வஸ்தி சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முதுகில் வலி இருக்கும் இடத்தில் உளுந்து மாவினால் வட்டமாக அமைத்து அதில் மூலிகை எண்ணெய் ஊற்றி செய்யும் சிகிச்சைதான் கடிவஸ்தி.
  • உணவு கட்டுப்பாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த-வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள் 

  • முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.
  • குப்புற படுக்கக் கூடாது.
  • நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்துக்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.
  • நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இருக்காமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள். உங்கள் பணியின் காரணமாக நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுகளையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.
  • இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
  • ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.
  • ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயற்சி செய்யுங்கள்.
  • படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஓரத்துக்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
  • நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

walking

  • பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.
  • தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.
  • தரையிலுள்ள பொருட்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பிறகு தூக்குங்கள்.
  • கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். தவறினால் அது முதுகு வலியில் போய் முடியலாம்.
  • உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.
  • பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • முதுகு வலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வரக் காரணம் மலச்சிக்கல். இதைத் தவிர்க்கவும்.

உணவு முறை

குளிர் உணவு / பானங்களைத் தவிர்க்கவும். ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை தவிர்க்கவும். பழைய உணவுகளை தவிர்க்கவும். கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் ஆகியவற்றைத் தவிர்க்கவும். எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும். இரண்டு டீஸ்பூன் சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலைப் பருகவும். இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியைக் குறைக்கும். இஞ்சியும் மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்…

உணவு முறைகளிலே முதுகு வலியை நாம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

வைஷு என்னிடம் ‘‘ஏம்மா உன் பாட்டிக்கு 80 வயசு வரை முதுகு வலி இல்லை. என் பாட்டிக்கு 55 வயசு வரை முதுகு வலி இல்லை. உனக்கு இப்போவே வந்திரிச்சு. எனக்கும் சீக்கிரம் வந்துடுமா?’’ என்று கேட்டாள். அந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் யோசித்தால் புரியும்… என் பாட்டி, அம்மா காலத்து உணவு முறைகள் இப்போது இருக்கின்றனவா? இல்லை. அதுதான் காரணம். சரியான உணவு முறைகளை நாமும் பின்பற்றி நம் செல்லங்களுக்கும் கற்றுக் கொடுத்து முதுகு வலியைப் புறமுதுகிடச் செய்வோம்!

பறவைகள் எல்லாம்  பறந்து போக 

பாட்டி வைத்த மரத்தில் முதுகு சாய்த்து 

ஓய்வாக மிதக்கும்  ஒற்றை மேகத்தை வெறிக்க 

இன்னும் வலிக்குதாம்மா என்ற 

அன்னையின் குரலில் 

வலுக்கட்டாயமாய் என் சிறகுகளைப் 

பிடுங்கி ஆரவாரம் செய்த முதுகுவலி 

புறமுதுகிட்டு சிதறுகிறது 

மெல்ல மெல்ல…

– ப்ரியா கங்காதரன் 

p2

***

ப்ரியாவின்பிறபதிவுகள்

ப்ரியங்களுடன்ப்ரியா – 1

ப்ரியங்களுடன்ப்ரியா – 2

ப்ரியங்களுடன்ப்ரியா – 3

ப்ரியங்களுடன்ப்ரியா – 4

ப்ரியங்களுடன்ப்ரியா – 5

ப்ரியங்களுடன்ப்ரியா – 6

ப்ரியங்களுடன் ப்ரியா – 7

ப்ரியங்களுடன் ப்ரியா – 8

Image courtesy:

http://medflicks.com

http://cdn.womensunitedonline.com

http://www.mineravita.com

http://www.captureimagery.co.uk

http://grigoletti.blogspot.in/

http://www.barkhamofficefurniture.co.uk

http://www.active.com

ப்ரியங்களுடன் ப்ரியா – 8

ஆடி மாதம்… ஆனந்தம் அருளும் மாதம்! 

Lalithambal-500x500

டி மாதம்… அம்மனை வணங்கி ஆராதனை செய்யும் மாதம்.

இந்த  மாத அம்மன் வழிபாடு என்பது நமது கலாசாரத்தில்  இணைந்த ஒன்று.  வருடம் முழுதும் கோவிலுக்கு சென்று அம்மனை  வழிபடலாம்.  என்றாலும் என்றாலும் சாஸ்திர உருவாக்கப்படி  12 மாதங்களை  இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்பெறும். சூரியன், ஆடி மாதத் தொடக்கத்தில், தனது பாதையை தெற்கு நோக்கித் திருப்பிச் (தக்ஷ்ணம் அல்லது தட்சிணம்) செல்லும் (அயனம்) காலம். ஆகவே, இது ‘தட்சிணாயன புண்ணியகாலம்’  என்றழைக்கப்படுகின்றது. (தை மாதம் சூரியன் வடக்கு (உத்தரம்) நோக்கிச் செல்வதால் ‘உத்தராயண புண்ணிய காலம்’ ஆகும்). உத்தராயணம் தேவர்களின் பகல் காலமாகவும். தட்சிணாயனம் இரவுக் காலமாகவும் அமைகின்றது. அதாவது, பூலோகத்தில் ஒரு வருட காலம் என்பது தேவலோகத்தில் ஒரு நாளாகும். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

surya god

தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படுகின்றன. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்திரீகம் ஆகியவற்றுக்கு ஆடி மாதம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  பிராண வாயு அதிகமாகக் கிடைப்பதும் ஆடி மாதத்தில்தான். இது ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் கருதப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான நம் மக்களின் மனநிலை என்ன தெரியுமா ? ‘ஆடிமாதம்… எந்த நல்ல காரியத்துக்கும் சரிப்பட்டு வராத மாதம்’ என்கிற நம்பிக்கை, இங்கே பல காலமாக ஊறிக் கிடக்கிறது. திருமணம், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா என்று எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளையும் இந்த மாதத்தில் புறக்கணிப்பது இங்கே தொடர்கிறது. அதே நேரத்தில், கோயில், தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம்தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது. குறிப்பாக, அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது, செடல் உற்சவம், பூச்சொரிவது, காவடி எடுப்பது, கூழ் ஊற்றுவது, கஞ்சி ஊற்றுவது என்று ஆடி வெள்ளிகளில் தெருவுக்குத் தெரு திருவிழாதான். ஆனால், ‘ஏன் ஆடியில் மட்டும் அம்மனுக்குச் சிறப்பு? ஏன் இத்தனை திருவிழாக்கள்..?’ என்று ஆராயப் போனால், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமையும், மனிதநேயமும், மருத்துவ விளக்கமும் நமக்குப் புரிய வரும்.

karumariamman

பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள், விவசாயம் செய்யும் மக்கள், அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது. அந்தக் காலத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் வந்து, கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பலி வாங்கும். அது எப்படி வருகிறது, எப்படிப் பரவுகிறது என்று அறியாமலேயே  அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தார்கள் அன்றைய மக்கள். அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாகத் தோன்றியதுதான் அம்மன் வழிபாடு. ‘அம்மை நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன்தான்’ என்றும், ‘காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது காளியம்மன்தான்’ என்றும் முடிவு செய்து, அதற்கான உருவை அமைத்து, வழிபாடு செய்து வேண்டிக் கொண்டார்கள். அதில் அர்த்தமும் இருந்தது.

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று. வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக்கொண்டார்கள்.

கொற்றவை வழிபாடு நம் தொன்மைக் காலத்தில் இருந்தே இருக்கிறது. எதிரியை அழிக்கப் புறப்படும் போது கொற்றவையை வழிபட்டுவிட்டுத்தான் கிளம்பினார்கள் பழந்தமிழர்கள். கொற்றவைதான் பிற்காலத்தில் காளியாகவும் துர்க்கையாகவும் மாறினாள். இப்படி அனைத்துப் பலன்களும் கொண்ட ஆடி, கடந்த வெள்ளி அன்று பிறந்தது. ஆடி முதல் நாளே வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டதும் தனிச் சிறப்பு.

***

ஆடி வெள்ளியன்று குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைக்கும் போதெல்லாம், உடம்பு ஆட்டம் கண்டு போய்விடும். பெரிய வேலை ஒன்றும் இல்லைதான். ஆனால், அந்த அடுப்பு இருக்கிறதே… அதுதான் பெரிய பிரச்னை.

எங்கள் வீட்டில் மூத்த மருமகள் நான். வருடா வருடம் ஆடிப் பெருக்கு முடிந்து குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அங்கு  கோயிலையும், மக்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, சின்ன வேலை ஏதாவது இருந்தால் செய்து விட்டு, அக்கா, தங்கை குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டு இருந்தேன். எல்லோருக்கும் நான் ரொம்ப செல்லமாக  இருந்ததால் அவர்களும் என்னை எதுவும் செய்ய விட்டதில்லை. அதனாலேயே பொங்கல் வைப்பது, மாவிளக்கு செய்வது போன்றவற்றை தனியாக செய்ய வேண்டிய சூழ்நிலை வராமலே போய்விட்டது. கற்றுக் கொள்ளவும் இல்லை.

இப்போதெல்லாம் அவரவருக்கு அவரவர் வேலை பெரியதாகிவிட்டது, முன்பு போல் எல்லோரையும் அழைத்துச் செய்வதில்லை. நாமும் அப்படியே விட்டு விடலாம் என்று நினைத்தால் தெய்வக் குற்றம் ஆகி விடுமோ என்கிற பயம் சேர்ந்து கொள்ள, சென்ற வருடம் நானே ஆடி வெள்ளி பொங்கல் வைத்தேன்.

எனக்குத் தெரிந்தது குக்கர் பொங்கல். ஆனால், கோயிலுக்குப் போனால் அடுப்பு மூட்டி, அங்கிருக்கும் குச்சிகளை எடுத்து எரிய வைத்து பொங்கல் செய்து முடிப்பதற்குள் ஆட்டம் கண்டு விடுகிறது. எனக்கு மட்டும்தான் இந்த அடுப்பு இப்படி புகைந்து கஷ்டம் கொடுக்கிறதா? இல்லை எல்லோரும் அப்படியா என்று சுற்றும் முற்றும் பார்த்தால்… மற்றவர்கள் ரொம்ப சுலபமாக அடுப்பு எரிப்பதாகவே எனக்குத் தோன்றியது.

‘நிறைய வருஷம் மற்றவர்களை ஏமாற்றியே பழகிவிட்டதால் சாமி நம் அடுப்பை மட்டும் புகைய வைக்கிறது போல…‘ என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, நடுவே நடுவே, புகைச்சலில் கண்கள் சிவந்து, கண்ணீர் மல்கி, பொங்கல் இடுவதைப்  பார்த்து சிரிப்பது மட்டும் இல்லாமல் சுற்றி சுற்றி எல்லா போஸ்களிலும் போட்டோ எடுக்கும் என் கணவர் ஒரு பக்கம் என்னை டென்ஷன் படுத்தினார். இருந்தாலும் புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று, டென்ஷனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ‘ஹி ஹி ஹி…‘ என்று சிரித்து நானும் போஸ் கொடுத்தேன்.

sakkaraipongal

எப்படியோ ஒவ்வொரு வருடமும் கூட்டாகவே செய்து, சென்ற வருடம் தனியாக  பொங்கல் வைத்தது  பெரிய உற்சாகம் தந்தது.  பூஜை முடிந்து பொங்கலை விநியோகம்  செய்துவிட்டு வந்த  என் கணவர், ‘நீ செய்தால் நல்லா இருக்கு ப்ரியா… பாரு! எல்லாம் தீர்ந்து போச்சு, வீட்டுக்கு எடுத்து வச்சிருக்கியா இல்லையா ?‘ என்று கேட்ட போது, அவரு கிண்டல் செய்கிறாரா இல்லையா என்று தெரியாமலேயே , ரொம்பவே சந்தோஷத்தோடு ‘ம்… எனக்கு முன்னமே தெரியுமே… அம்மனுக்கு முழு மனசோட செய்யும் எந்த ஒரு விஷயமும் அம்மனுக்கு ரொம்பப் பிடிக்கும், நான் சந்தோஷமா செஞ்சேன்… நல்லா  வந்திருக்கு‘ என்று சந்தோஷமாக வீடு வந்து சேர்ந்தோம்.

ஆடி மாதத்தின் சிறப்புகள்… 

ஆடியை ‘கற்கடக மாதம்’ என்றும் அழைக்கலாம்.

‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி. செவ்வாய்க்கிழமை எண்ணெய் தேய்த்து, தலை குளித்து, அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

amavasai

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கமும் உண்டு. ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  இந் நாட்களில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அன்று தாலி மாற்றி புதுத்தாலி அணிவார்கள். இம்மாதம் விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.  ‘ஆடிப்பட்டம் தேடிவிதை’ என்று நம் முன்னோர் காரணமில்லாமல் சொல்லவில்லை. அடுத்த போகத்துக்குத் தேவையான தானியங்களை விதைப்பதும் ஆடிமாதத்தில்தான்.

ஆடி வெள்ளியின்  சிறப்புகள், பூஜை முறைகள்…

இந்த வருடம், ஆடிப் பிறப்பே வெள்ளிக்கிழமையில் அமைந்து இருப்பது தனிச்சிறப்பு. ஆடி வெள்ளி அன்று வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, நிவேதனமாக பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து, அம்மன் பாடல்களைப் பாடி, பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும். அன்று சிறு பெண் குழந்தைக்கு ரவிக்கை, தாம்பூலம், சீப்பு, சிமிழ், கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும். அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்க வேண்டும்.

SAMSUNG DIGIMAX A503

ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடத்துக்கு முன் கோலமிட்டு, மாடத்துக்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டு பூஜிக்க வேண்டும்.  குளித்த பின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.

ஆடி வெள்ளியில்  மாலை நேரத்தில் மகாலட்சுமி வழிபாடு, அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சிவனின் சக்தியைவிட அம்மனின்  சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது வழமை . இம்மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி, ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடலாம் . பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து அம்மனை வழிபட வேண்டும்.

‘அருளோடு வரும் பொருள் தான் சிறப்பு‘ என்பது ஐதீகம். அந்தப் பொருள் வளம் தரும்  லட்சுமியை, ‘திருமகள்‘ என்றும் சொல்கிறோம். எட்டுவகை லட்சுமியின அருள் இருந்தால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது உண்மை. அந்த  வரம் தரும்  லட்சுமியை ‘வரலட்சுமி‘ என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையாகும்.

ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்  அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். ஆயிரக்கணக்கான கண்ணாடி வளையல்களைக் கோர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்வர். 3 நாட்கள் கழித்து கண்ணாடி வளையல்களை சுமங்கலிகளுக்குப் பிரசாதமாக வழங்குவர். சுமங்கலிகள் குடும்பத்தில் நீடூழி சுகமாக வாழ்வர். வளையல்களைப் பிரசாதமாகப் பெறும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை வரம் கிடைக்கும். ஆடி வளர்பிறை துவாதசியில் மகாவிஷ்ணுவை எண்ணி விரதமிருந்தால் செல்வ வளம் பெருகும்.

ஆடி வளர்பிறை தசமியில் திக்வேதா விரதம் ஏற்க வேண்டும் . திக்தேவதைகளை அந்தத்தத் திசைகளில் வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்.ஆடி வளர்பிறை ஏகாதசி அன்று அன்னதானம் செய்தால், பசித்த வேளைக்கு உணவு தேடிவரும். பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினால் தீவினைகள் நீங்கும் என்பர்.

ஆடி அற்புதங்கள் நிறைந்த மாதம் மட்டும் அல்ல;
அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு நினைத்த அற்புதங்களை
அள்ளித்தரும் மாதமும் கூட!

  • ப்ரியா கங்காதரன் 

priya gangadharan

ப்ரியாவின்பிறபதிவுகள்

ப்ரியங்களுடன்ப்ரியா – 1

ப்ரியங்களுடன்ப்ரியா – 2

ப்ரியங்களுடன்ப்ரியா – 3

ப்ரியங்களுடன்ப்ரியா – 4

ப்ரியங்களுடன்ப்ரியா – 5

ப்ரியங்களுடன்ப்ரியா – 6

ப்ரியங்களுடன் ப்ரியா – 7

Image courtesy:

http://www.chayatanjore.com/

http://assets.astroved.com

http://www.harekrsna.de

http://www.tulsimadam10.in

http://4.bp.blogspot.com

ப்ரியங்களுடன் ப்ரியா – 7

Chocolate 1

சாக்லேட் 

இலக்கியம் இல்லா இன்னிசையாய் 

இலக்கணமற்ற தேன்மழையாய்

அறுந்தறுந்து விழும் அழகிய கவிதையாய் 

காற்றோடு சிறு நடனமாடி 

காணும் விழியை வருட செய்து 

ம்மா… சாக்லேட்… ம்மா… என அபிநயம் செய்கையில் 

சாக்லேட் ஆகவே மாறிவிடுகிறாள் வைஷு… 

தேவதைகளின் தேவதை

சாக்லேட் தேவதையாய்…

சாக்லேட்… இந்த வார்த்தையைக் கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள்  வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இதயத்தை புத்துணர்வு ஆக்கும். எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.

gift-sets

உலகளவில் ‘சாக்லேட் தினம்’, வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் செப்டம்பர் 4ம் தேதி ‘உலக சாக்லேட் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. சாக்லேட் ‘கோகோ’ மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் உள்ளிட்டவற்றில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும், சாக்லேட், பல்வேறு இடுபொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது பக்கவாதத்தைத் தடுக்க உதவுகிறது, இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  (அதே நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்).

chocolate

கொலம்பியாவுக்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்லேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு வந்தது. பண்ட மாற்றுக்குக் கூட சாக்லேட் பயன்படுத்தப்பட்டதில் இருந்து அதன் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. சாக்லேட், சோளக்கூழ் மற்றும் தேனுடன் சேர்த்து பானமாக பருகப்பட்ட வழக்கமும் பண்டைய காலத்தில் இருந்து வந்ததே. நாம் இப்போது அதிகம் விரும்பி உண்ணும் கன செவ்வக வடிவ சாக்லேட்டுகளுக்கு முன்னோடி ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர். இவர்தான் முதன் முதலில் 1847ம் ஆண்டு கன செவ்வக வடிவிலான சாக்லேட்டுகளை வார்த்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. ‘சாக்லேட், இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்’ என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் தெரிவித்துள்ளது. இந்த இனிப்பான ஆய்வு முடிவை வெளியிட்டவர்கள் ‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக’ ஆராய்ச்சியாளர்கள். தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சாக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சாக்லேட் அளிக்கப்பட்டு வந்தது. தினசரி ஒன்று என்ற அளவில் சாக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவிகிதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவிகிதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பைத் தடுப்பதில் சாக்லேட்டுக்கு பங்கில்லை என்பதும் தெரிந்தது. முதல்கட்ட 6 ஆய்வுகளில் சாக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சாக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெஸர்ட் என பால் அதிகமுள்ள சாக்லேட், சாக்கோ அதிமுள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. எனினும், ‘சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை’ என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன. அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயாபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ‘கலோரி குறைந்த தரமான சாக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயைத் தடுக்க உதவும்’ என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் காதலர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் இதயத்தை பாதுகாக்க சாக்லேட்டை பரிசாக அளிக்கின்றனரோ என்னவோ? நீங்களும் தினசரி ஒரு சாக்லேட் சாப்பிடுங்களேன். இதயம் பலமாகும்.

Chocolate-City

தயாரிக்கும் முறை:

கோகோ (Cocoa) மரத்தின் கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவை, சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கோகோ தூள் என பல வகைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

சாக்லேட் என்பது கோகோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் சொல். இது, கோகோ கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவையுடன் சர்க்கரை, பால் மற்றும் பிற பொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் என்ற சொல் மத்திய மெக்ஸிகோவில் வாழ்ந்த சிவப்பிந்தியர்களிடமிருந்து தோன்றியது.

பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் மற்றும் குக்கீஸ்களிலும் மூலப்பொருளாக சாக்லேட் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட்டுகள் பெரும்பாலும் அவற்றின் சுவை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகின்றன. அவற்றில், இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், கூர்வெர்சர், பால் சாக்லேட் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இனிப்பு மட்டுமல்ல… கசப்பு சுவை கொண்ட சாக்லேட்டுகளும் சந்தையில் கிடைக்கின்றன. சாக்லேட்டின் சுவையை மேலும் மெருகூட்ட அவற்றில் ஆரஞ்சு, புதினா, ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன.

Portfolio : http://fr.fotolia.com/p/201433930

இதோ நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்ஸ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…

* ஒரு பவுண்டு (450 கிராம்) சாக்லேட் தயாரிக்க சுமார் 400 கிராம் கோகோ அவரைகள் தேவைபடுகின்றன.

* அமெரிக்காவின் மாபெரும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான ‘ஹெர்ஷே சாக்லேட் நிறுவனம்’ ஒரு நாளைக்கு 80 மில்லியன் சாக்லேட்டுகளை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் நிறுவனரான Milton Hershey என்பவரின் சுவாரஸ்யமான தகவல் இது. இன்று வரை பேசப்படும் பெரிய விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணமாக இருந்தவர் இவர். ஆனால், கடைசி நிமிடத்தில் பணி நிமித்தமாக அப்பயணத்தை ரத்து செய்தாராம்.

20ம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் அமெரிக்க போர் வீரர்களின் ஒரு பிரதான உணவுப் பங்கீடாக கருதப்படுகிறது.

* ஒரு தனி சாக்லேட் சிப் உங்களுக்கு 150 அடி தூரம் நடப்பதற்கான ஆற்றலைத் தருகிறது.

* சாக்லேட்டுகள் கோகோ பழங்களின் உள்ளே இருக்கும் நெற்றுக்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது முதன்மையாக மத்திய, தென் அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் வெப்ப மண்டலங்களில் வளருகின்றன.

*சாக்லேட்டில் உள்ள ஒருவகை பாக்டீரியாக்களை அழிக்கும் பண்பு பற்சிதைவை தடுக்க உதவுகிறது.

*ஐவரி கோஸ்ட் மற்றும் கானா நாடுகளில் உள்ள கோகோ பண்ணைகளில் 5-17 வயதுடைய சுமார் 1.8 மில்லியன் சிறார்கள்

கட்டாயப் பணிகளில் அமர்த்தப்பட்டனர் என 2010ம் ஆண்டு அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால், சிவப்பு வர்த்தக சான்றளிக்கப்பட்ட சாக்லேட் கட்டாய குழந்தை தொழிளார்களிடமிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.

* டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், சாக்லேட் உண்பது உடலுக்கு உகந்தது எனக் கூறுவது இந்த கரும் சாக்லேட்டுக்களைதான். ஏனென்றால் இதில் பால் மற்றும் வெள்ளை வகைகளை விட கோகோவின் அளவு கூடுவதுடன் குறைவான சக்கரையும் பயன்படுத்தப்படுகிறது.

* கி.மு 1900க்கு முன் சாக்லேட் : அஸ்டெக்குகள் கோகோ அவரைகள் கடவுள் அளித்த வரம் என நம்பப்பட்டு அவற்றை ஒரு நாணய வடிவத்திலும் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. மேலும் முதலில் மசாலா வகைகள், மது அல்லது சோளக் கூழ் போன்றவற்றுடன் கோகோ சேர்க்கப்பட்டு ஒரு கசப்பான பானமாகவே தயாரிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட பதினாறாம் நூற்றாண்டில்தான் ஸ்பானியர்கள் கோகோவுடன் சர்க்கரை சேர்ப்பதை அறிமுகபடுத்தினார்கள்.

* பெரும்பாலான மக்களால் சாக்லேட் விரும்பப்படுவதற்கான காரணம் சாப்பிட்ட பின் சாக்லேட்டின் நறுமணம் மூளையின் ஒருவித திறன் அலைகளை அதிகரிக்கச்செய்வதுடன் ஓய்வுணர்வையும் அளிப்பதே…

நம்ம வீட்டு செல்லங்களுக்காக ஓர் எளிய ஹோம் மேட் சாக்லேட் முறையை பார்ப்போமா? 

home made chocolate

என்னென்ன தேவை? 

டார்க் சாக்லேட் பார் – 1, பிரவுன் சாக்லேட் பார் – 1, முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது? 

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் இரண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் டிரை ஃப்ரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* அடுப்பை ஒரே சூட்டில் வைத்திருக்கவும். அப்போதுதான் சூடு, மேலே இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரேயை எடுத்து அதனுள் உருகிய சாக்லேட்டை ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் டிரை ஃப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்றவும்.

* இந்த ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மென்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு: கீழே வைக்கும் பாத்திரத்தை விட, மேலே வைத்திருக்கும் பாத்திரம் பெரியதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக எளிதாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் கீழே உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் குறைந்தால் மறுபடியும் ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ஃப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரேவை உபயோகப்படுத்தலாம். ஹோம் மேட் சாக்லேட் குறைந்த செலவில், வீட்டிலேயே பண்ணலாம். டிரை ஃப்ரூட்ஸ்க்கு பதிலாக, நம் விருப்பத்துக்கு எதை வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ஃப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேஃபர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ஃப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கெட், போலோ.

– ப்ரியா கங்காதரன் 

20150403_090654

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

ப்ரியங்களுடன் ப்ரியா – 4

ப்ரியங்களுடன் ப்ரியா – 5

ப்ரியங்களுடன் ப்ரியா – 6

Image courtesy:

http://www.lulas.com

http://blogs.mcgill.ca

http://www.iloveportlandmaine.com

http://www.jorvik.co.uk

http://www.abc.es

http://cdn.instructables.com

ப்ரியங்களுடன் ப்ரியா – 6

காலத்தை காதலிப்போம்! 

time management

24 மணி நேரம்
போதவில்லை…

என் அவசர ஓட்டங்கள்
சிறு நடையாக 
நிறம் மாறி இருக்கும்…

என் சிந்தனைகள்
கொஞ்சம் இளைப்பாறி இருக்கும்…

என் வாசிப்புகள்,
மூச்சிரைக்காமல் முடிந்திருக்கும்…

இன்றைய மிச்சங்களை
நாளைக்காக
பொறுக்கி வைப்பதும்,
நாளைய கனவுகளை
இன்னோரிடத்தில்
நறுக்கி வைப்பதும்
இல்லாமல் இருந்திருக்கும்…

என்  மெல்லிய காலைத்
தூக்கம்  தொடர்ந்திருக்கும்…

என் பின் மாலைப்
பொழுதின் ஏக்கம்
இரவைத் தொட்டு முடிந்திருக்கும்…

என்
வீட்டு  ரோஜா
இதழ்களின் இளமை
இன்னும்
கொஞ்சம் நீண்டிருக்கும்…

என்னை விடவும்
ஏராளமாய்,
அந்த
ஈசல் பூச்சி மகிழ்ந்திருக்கும்…

‘என்ன எழுதலாம்?’ என்று எண்ணும்போதே எடிட்டோரியலிலிருந்து ஒரு எஸ்.எம்.எஸ்… ‘எண்ணியது எதுவாகினும் எழுதலாமே!’ என்று. இந்த எழுத்துத் சுதந்திரமே வினை  ஊக்கியாக எழுதத் தூண்டுகிறது. நேரமின்மையைக் காரணப்படுத்த எத்தனித்த போது, ஏன் ‘காலக் கையாளல்’ (அதாங்க… டைம் மேனஜ்மென்ட்) பற்றி கொஞ்சம் எழுதலாமே என்று தோன்றியது.

நம் அனைவருக்குமே  ஒரு நாள் என்பது 24 மணிநேரமாக  ஒதுக்கப்பட்ட ஒன்று. (பகல் இரவின் நேரம் பருவகாலம் தொட்டு மாறுப்பட்டாலும்,புவியமைப்பின் தன்மையால் சூரிய நேரம் மாறுப்பட்டாலும், ஒரு நாள் என்பது பூமியில் 24 மணிநேரம் மட்டுமே).

இந்த வரையறுக்கப்பட்ட மணித்துளிகளுக்குள் சிலர் மட்டும் வெற்றியாளராக வலம் வருவதற்கு, காலத்தை அவர்கள் கைக்குள் வைத்திருப்பதே காரணம்.

Good time management requires an important shift in focus from activities to results: being busy isn’t the same as being effective. (Ironically, the opposite is often closer to the truth.)

எவ்வளவு உண்மையான வார்த்தைகள். ‘A Good Start is Half Done’  என்று சொல்லுவார்கள் . ‘திட்டமிடப்பட்டு தொடங்கும் யாவும் வெற்றியை நோக்கியே பயணம் செய்யும்’ என்பது பிரபஞ்ச உண்மை .

time management 1

உலகப் புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிக்கை டைம்  மேனஜ்மென்ட்டுக்கு 10 டிப்ஸ் தந்திருக்கிறது. ‘வெற்றிபெற்ற மனிதர்கள் இதை மட்டுமே விரட்டிச் சென்றனர்’ என்று கூடவே குறிப்பும் சொல்லப்பட்டு இருக்கிறது.

  1. We often talk about not having enough time. Rather than focusing on that, and complaining to yourself or others about not enough time, think about what you do have enough time for. Start talking or thinking about that instead.
  1. Start within five minutes of sitting down at your desk and switching on your computer. Half an hour or an hour wasted here on procrastination or distractions is costly.
  1. Value your time and other people will do the same.
  1. When things get really pressurised and you’re tight for time, ignore email completely.
  1. We’re all equal when it comes to time.
  1. Get into the habit of switching off email whenever you can, even if this is only for 15 minutes or 30 minutes at a time.
  1. Use your time for the things that are worth it.
  1. Sleep.

நேரமில்லை என்று யார் வேண்டுமானாலும் அலுத்துக் கொள்ளட்டும். ஆனால், விவசாயி ,தொழில்புரிவோர் ,கல்வியாளர் (mentor), மருத்துவர் (doctor) இவர்களின் நேரமின்மை என்பது உடனே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாகும். ஏனெனில், இவர்களது நேரமின்மை என்பது எதிர்காலச் செயல்பாடுகளை முடக்கிவிடும். இதனால் பாதிக்கப்படுவது நாட்டின் வளர்ச்சிதான். ஆகவே, இதைக் களைவது முக்கியம்.

time-management-3

ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் இரண்டு. ஒன்று, வழக்கமான செயல்பாடுகள் (Routine Activities). மற்றொன்று, மேம்பாட்டு செயல்பாடுகள் (Business Development Activities).

பொதுவாக ஒரு நிறுவனம் வழக்கமான செயல்பாடுகளுக்கு 60 சதவிகித நேரத்தையும், மேம்பாட்டு செயல்பாடுகளுக்கு 40 சதவிகித நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? தவறான நேர ஒதுக்கீட்டுத் திட்டமிடல் காரணமாக, 100 சதவிகித நேரத்தையும் வழக்கமான செயல்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டி இருக்கிறது. சில நிறுவனத் தலைவர்களுக்கு அதுவும் போதவில்லை. பிறகு எப்படி வளர்ச்சியைப் பற்றி தலைவர்கள் யோசிப்பது, திட்டமிடுவது, செயல்படுவது?

நேர ஒதுக்கீட்டை, இரண்டாகப் பிரிக்கலாம். செயல்பாடுகள் சார்ந்தது மற்றும் நபர்களைச் சார்ந்தது. முதலில் செயல்பாடுளை அடிப்படையாகக் கொண்ட நேர ஒதுக்கீட்டைக் காண்போம். உங்களது அனைத்துச் செயல்பாடுகளையும் வரிசையாக எண்கள் போட்டு எழுதுங்கள். இருபதானாலும் சரி, இருநூறானாலும் சரி. எழுதிவிட்டீர்களா? இப்போது அதை, கீழே உள்ளபடி வகைப்படுத்துங்கள்.

time management 2

  1. உடனே செய்ய வேண்டியது.
  2. பிறகு செய்துகொள்ளலாம்.
  3. எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
  4. முற்றிலும் நிராகரித்து விடலாம்.

இதன்படி வகைப்படுத்தி விட்டீர்களெனில், உடனே செய்ய வேண்டிய செயல்பாடுகள் அதாவது Aன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் கண்டுகொள்ளலாம். முற்றிலும் நிராகரித்து விடக்கூடிய பணிகள் நிறைய இருப்பதையும் நீங்கள் உணரலாம். எதை, எப்போது செய்வது, எந்த C செயல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, எந்த செயல்களுக்கு முழுக் கவனம் செலுத்துவது என்ற திட்டமிடல் மட்டுமே நமக்கு நன்மை தரும்.

Corporate உலகில் யாரும் கடின உழைப்புக்கு மதிப்பளிப்பது இல்லை  என்பதே உண்மை. அதற்கான தேவையும் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. எல்லாம் எதிர்பார்ப்பது ஸ்மார்ட வொர்க். கொடுக்கப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக முடித்து கொடு, பின் உன்னைப் பற்றிக் கவலை இல்லை என்பதே அனைவரும் எதிர்பார்ப்பது.

எல்லோருக்கும் ஒரே மாதிரியாக 24 மணி நேரத்தைத்தான் கொடுத்திருக்கிறார் கடவுள். சிலர் அந்த நேரத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தி நிறைய விஷயங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். சிலரோ எல்லா வேலைகளையும் டென்ஷனோடு ஆரம்பித்து, சரியாக முடிக்கவும் முடியாமல் சொதப்பி விடுவார்கள். ஒரு சிலரால் முடிந்த விஷயம் ஏன் பெரும்பாலானவர்களால் முடியவில்லை என்று பார்த்தால், அவர்களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் சூட்சுமங்கள் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

சரி எங்கிருந்து இந்த டைம் மேனஜ்மென்ட்  பழக்கத்தைத் தொடங்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன? குழ்ந்தையில் இருந்தே தொடங்குதல் நலம். பெரும்பாலும் பெற்றோர் வளைப்பதாக நினைத்து உடைத்து அல்லவா விடுகிறோம், பல நேரங்களில். அதிகக் கட்டுபாடுகளுடன் வளர்த்தெடுக்கும் பிள்ளைகள் பிற்காலத்தில் ஒன்று அதி நல்லவனாகவோ அல்லது கட்டுப்பாடு அற்ற கயவர்கள் போல   மட்டுமே மாறுவதாக மனநல மருத்துவர்களின் கணிப்பு சொல்கிறது.

சின்னச் சின்ன அன்பாலும், பாராட்டுகளாலும் சொல்லப்படும் யாவும் குழ்ந்தைகளின் மனதில் பசுமரத்தாணி போல் பதியம் இட்டு வளரும். இவ்வளவு நேரம் படிப்புக்கும் விளையாட்டுகும் நேரம் ஒதுக்குதல் நலம் என்று சொல்லி புரியவைப்பதோடு, தேர்வு  முடிவுகள் வரும் போது அதை அவர்களுக்கு பாராட்டாகச் சொல்லுதல் நல்ல பலனைத் தரும்.

எந்தெந்த நேரங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?

காலை நேரத்துப் பரபரப்பு (குழந்தைகளை பள்ளிக்கு, கணவரை வேலைக்கு அனுப்பும் சமயத்தில் தலை கிறுகிறுத்துப் போகும்).

ஒர்க்கிங் வுமனாக இருந்தால் கணவர், குழந்தைகளை ஆபீசுக்கு அனுப்பிவிட்டு, தானும் ரெடியாகி அரக்கப் பரக்க பஸ் பிடிக்க ஓடும் நேரங்கள். இந்த இரண்டு பிரச்னைகளையும் அநேகமாக எல்லாப் பெண்களும் சந்தித்து வருகிறார்கள்.

time management 4

காலை நேரத்துப் பரபரப்பை எப்படி சமாளிப்பது?

திட்டமிடுங்கள். அதுதான் உங்கள் டென்ஷனை குறைக்க முதல் வழி. யூ.கே.ஜி. படிக்கும் பையன்,  பிஸினஸ் செய்யும் கணவர் இருவரையும் காலை ஒன்பதரை மணிக்குள் கிளப்ப வேண்டும். டி.வி. பார்த்துக் கொண்டே மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து விடுங்கள்.

சமைக்கும்போது குழப்பம் வரவே கூடாது. உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார் வைக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாறக் கூடாது. ஏனென்றால் காலை நேரப் பரபரப்பை குழப்பங்கள் ரொம்பவே அதிகப்படுத்திவிடும்.

அதேபோல் முதல் நாளே குக்கர் வைக்கத் தேவையான அரிசி, பருப்பைக்கூட தனித் தனியாக எடுத்து வைத்து விட்டால் சமையல் சுலபமாகிவிடும்.

கடாயில் கடுகை வெடிக்க விட்டு விட்டு கறிவேப்பிலை எடுக்க, கொத்தமல்லி எடுக்க என்று ஒவ்வொன்றுக்காகவும் ஃப்ரிட்ஜை நோக்கி ஓடி வருவதைத் தவிர்த்து விடுங்கள். நேர விரயத்தோடு கால்வலியும் வரும். அதனால் சமைக்கத் தேவையான அத்தனை பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு சமையுங்கள்.

வாட்டர் பாட்டில், ஷூ, சாக்ஸ், டிபன் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ் முதலியவற்றை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல், தாங்களே எடுத்துக் கொள்ளும்படி உங்கள் குழந்தைகளைப் பழக்குங்கள். ஏனென்றால் இது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள்தான் காலை நேரத்து டென்ஷனை அதிகப்படுத்தும்.

ஒவ்வொரு பொருளும் அதற்குரிய இடத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை எடுத்துப் பயன்படுத்திய பிறகும் மீண்டும் எடுத்த இடத்தில் அந்தப் பொருளை வைக்க வேண்டும்.

இந்த சூட்சுமத்தை சரியாகக் கையாண்டால் இல்லத்தரசிகள் கையில் எக்கச்சக்கமான மணித் துளிகள் தவழும்.

இதை திட்டமிடல் மூலம் லகுவாக சரி செய்யலாம்.

Business clock

Business clock

கிடைக்கும் நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு நாமே ஒரு திட்டமிடலை உருவாக்க வேண்டும்.

* என்னென்ன வேலைகளுக்காக எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோம்?

* தேவையில்லாமல் பொழுதை போக்கும் நேரங்கள்.

* தேவைக்கும் குறைவாக இருக்கும் நேரங்கள்.

* வருங்காலத் தேவைகள்.

* வருங்காலத்துக்காக தயாராக என்ன செய்யலாம்?

* தன்னிடம் குறைவாக இருக்கும் திறனை, கிடைக்கும் நேரத்தைக் கொண்டு எப்படி மேம்படுத்துவது?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய்ந்தால், நேர திட்டமிடல் குறித்த ஒரு தெளிவான வரையறைக்குள் வர முடியும். திட்டமிடல் குறித்த இந்த வரையறை எதிர்காலத்துக்கான முடிவுகளை எடுக்கும்போது மிகவும் துணை புரியும்.

ஏனெனில் உங்கள் மூளைக்குள் எப்பொழுதும் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் நீங்கள் முடிவுகளை எடுக்கும்பொழுது அது உங்களை வேகமாக இயங்க கட்டாயப்படுத்துகிறது.

நேர மேலாண்மையே சுறுசுறுப்பையும் செயல் திறனையும் அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. கிடைக்கும் சுறுசுறுப்பும், தெளிவான திட்டமிட்ட செயல் வேகமும் நம்மை முன்னேற்றத்துக்கான வழியில் அழைத்துச் செல்லும்.

‘நேரத்தை வீணாக்குவது என்பது வேண்டாத செயலை செய்வது மட்டுமல்ல, வேண்டிய செயலை செய்யாமல் இருப்பதும்தான்.’

நேர மேலாண்மைப்பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால், இப்போதைக்கு நேரம் அவ்வளவுதான்.

காலத்தை காதலிப்போம்!

– ப்ரியா கங்காதரன் 

Priya

***

ப்ரியாவின் பிற பதிவுகள்

ப்ரியங்களுடன் ப்ரியா – 1

ப்ரியங்களுடன் ப்ரியா – 2

ப்ரியங்களுடன் ப்ரியா – 3

ப்ரியங்களுடன் ப்ரியா – 4

ப்ரியங்களுடன் ப்ரியா – 5

Image courtesy:

http://www.hercampus.com

http://bitesizebio.s3.amazonaws.com

http://www.timelm.com

https://www.toppr.com

http://www.earlytorise.com/