விலாமிச்சை வேரும் மருத்துவ குணங்களும்!

water-pot

வெயில் நாட்களில் மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அந்த மாதிரி  குடிக்கும்போது இன்னொன்றையும் செய்தால் பலன் அதிகம். ‘விலாமிச்சை வேர்’ என்றொரு வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி சுத்தப்படுத்தி, லேசாக நசுக்கி, நல்ல காட்டன் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி அதைத் தண்ணீர் பானையில் போட்டு வைத்து விடவேண்டும். இதனால் தண்ணீர் நறுமணத்துடனும், குளிர்ச்சியாகவும், நல்ல மருத்துவகுணம் நிறைந்ததாகவும் இருக்கும்.

vilamichai verr

இதன் மருத்துவ குணத்தை ‘அற்புத சிந்தாமணி’ என்ற நூலில் உள்ள பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. அது குளிச்சியையும் நறுமணத்தையும் தருவதோடு மட்டுமல்லாமல் என்னென்ன வியாதிகளையெல்லாம் குணப்படுத்துகிறது என்று பட்டியலே போட்டிருக்கிறது.

‘‘மேகம் விழியெரிச்சல் வீறிரப் பித்தமொடி

தாகமத மூர்ச்சை பித்தஞ்சார் மயக்கம் –- சேகஞ்

சிரநேரமிழவயேகுஞ் செய்ய விலாமிச்சக்

கெரி கிரமு மின்றென்றிசை.’’

– அற்புத சிந்தாமணி.

இதனால் மேகநீர் கண் எரிவு, உதிரபித்தம், தாகம், மூர்ச்சை, பித்தம், அதனால் ஏற்படும் மயக்கம், கோபம், தலைவலி, தீச்சுரம் போகுமாம்.

வெயில் காலங்களில் மண்பானை வாங்கி தண்ணீர் வைத்து பயன்படுத்துபவர்கள் சிலர் அதன்மீது பெயின்ட்டையும் வேறு சில பல வண்ணக்கலவைகளையும் அலங்காரம் என்ற பெயரில் அடித்து விடுவார்கள். இதன் மூலம் மண்பானையில் தண்ணீரை எதற்காக வைத்துப் பயன்படுத்துகிறோம் என்ற தத்துவத்தையே மாற்றிவிடுகிறார்கள்.

மண் பானையின் மேல் உள்ள நுண்துளைகள் அடைபடக்கூடாது. இதன்மூலம் உட்செல்லும் காற்று ஆவியாக மாறும்போது தண்ணீரில் உள்ள வெப்பம் தணிந்து தண்ணீர் குளிர்விக்கப்படுகிறது. இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி நம் பண்டைய தமிழர்கள், இரண்டடுக்குக் கொண்ட மண்ணால் செய்யப்பட்ட பானைகளில் தண்ணீரை ஊற்றி வைத்து, குளிர்சாதனப் பெட்டி போல் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது போன்ற மண்பானைகள், கெடிலம் ஆற்றங்கரையில் அகழ்வராய்ச்சியின் போது கிடைத்துள்ளது. நம் பண்டைய நாகரிகம் ஆரோக்கியம் குறித்தான முன்னோரின் அக்கறைக்குச் சான்று.

– ‘மாங்குடி’ மும்தாஜ்.

Image courtesy:

http://www.maligairaja.com

https://fieldpoppy.files.wordpress.com