ப்ரியங்களுடன் ப்ரியா!

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = ? 

றந்து திரிந்த பள்ளிக்காலம் முடிந்து வாழ்வின் வாசலான கல்லூரி நோக்கிப் பயணம் செய்யும் செல்ல சிட்டுகளுக்கு…

ஒவ்வொருவரும் தான் பெற்ற மதிப்பெண்ணை வைத்து மதிப்பீடு செய்வதை மறந்துவிட்டு, வாழ்வின் அடுத்த நிலையை நோக்கிச் செல்லும் பருவம் இது.

மதிப்பெண்தான் ஒருவரை நிர்ணயம் செய்யும் என்றால்… அப்படி நல்ல மார்க் எடுத்துத்தான் ஒருவர்  முன்னேற முடியும் என்றால் வருடத்துக்கு  இரண்டு பேர், ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்டேட் செகண்ட் கணக்கு வைத்து இப்போது வரைக்கும் 60 வருடக் கல்வித் திட்டப்படி 120 பேர்கள் மட்டுமே நன்றாக வந்திருக்க முடியும்.

college students

அப்படி என்றால் நாட்டில் நன்றாக வாழும் எல்லோரும் மனிதர்கள் இல்லையா? அதனால் அதைத் தொலைவில் வைத்து விட்டு, அருகில் இருக்கும் வாழ்கையை ரசிக்க வேண்டும்… படித்து ரசிக்க வேண்டும், ஜெயித்து ரசிக்க வேண்டும்.

எந்தப் படிப்பை படித்தால் வாழ்கையில் வெல்லலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும் எந்தப் படிப்பை படித்தால் வாழ்க்கையை வாழலாம் என்று தீர்மானம் செய்ய வேண்டிய காலக்கட்டம் இது. கல்லூரி என்றதும் நிறைய பேருக்கு சினிமாவில் பார்ப்பது போலத்தான் கல்லூரி காலங்கள் கனவில் நிழலாடும். இஷ்டப்படி போகலாம்… வரலாம்… என்பது போல உருவகம் செய்த சினிமாக் காட்சிகள் கண்முன்னே வந்து போகலாம். நிழல் வேறு… நிஜம் வேறு.

கல்வி (Education) என்றால் என்ன? நீங்கள் இப்போது இருக்கிற நிலையில் இருந்து புதிய அறிவும் (Knowledge) செயலாற்றலும் (Skill) மனோபாவத்தில் (Attitude) மாற்றமும் பெற்றால் அதையே கல்வி என்கிறோம். (Change in the behaviour is education).

college students 2

கல்விக் கூடம் சென்று கற்பது மட்டும்தான் கல்வி என்பதன்று. ஒருவன் எந்தக் காரியத்தில், தொழிலில், பதவியில் அல்லது வணிகத்தில் வெற்றி பெற எண்ணுகிறானோ அதில் வெற்றிபெறத்தக்க அளவுக்கு சிறப்பாக அந்தத் துறை தொடர்பான அறிவையும் செயலாற்றலையும், (Skill and experience) உரிய மனோபாவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் எந்த மாதிரிச் சூழலில் கல்லூரிக்குப் போகிறோம் என்பதை! இந்த 3 அல்லது 4  ஆண்டுகளே நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும்… நம்மைப் பெற்றவர்களையும் தலை நிமிரச் செய்யும்.  ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே‘ என்று புறநானூறும்,

“தந்தை மகற்காற்று நன்றி யவையத்து

முந்தி இருப்பச் செயல்” என்று வள்ளுவரும் கூறியுள்ளனர். இதன் பொருள்… கற்றவர் கூடிய அவையில் எல்லோருக்கும் முன்னவனாக இருக்கத்தக்க வகையில் தம் மக்களை  கல்வியில் மேம்பட்டவனாக்குவதே தந்தை தன் மகனுக்குச் செய்யும் உதவியாகும்.

நம் கல்லூரி காலக்கட்டம் சிக்கலுக்குரியதாக உள்ளது. பழமையும் புதுமையும் சங்கமமாகிறது. இந்தியக் கல்வியும் , மேலைநாட்டுப் பாரம்பரியமும் நம் கல்லூரி வாழ்வில்  ஊடுருவத்  தயராக இருக்கின்றன. தகவல் தொடர்பின் வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது. உலகம் ஓர் கிராமம் ஆகிவிட்டது. எல்லாக் கலாசாரங்களும் எல்லா இடங்களிலும் விரவி நிற்கின்றன. இது ஒருபுறம்.

போட்டிகள் எல்லாத் துறைகளிலும் பெருகி வருகின்றன. குறிப்பாக கல்வி துறையில்…  (Struggle for existence – The fittest will survive). ‘வாழ்வுக்கானப் போராட்டம் – வலுவுள்ளது வாழும்’ என்ற காலக்கட்டம் இன்னொருபுறம்.

கல்வியிலும்  மாபெரும் வளர்ச்சி  விரைந்து வந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஈடு கொடுக்க மாணவச் செல்வங்கள் தயாராக வேண்டும்.

மாணவர்களை  சீர்குலைக்கச் செய்பவை இரண்டு. ஒன்று கோபம். மற்றொன்று பயம். ‘கோபம் உண்டான மனதில் குழப்பம் உண்டாகும்; குழப்பம் உண்டானால் சிந்தனை தடுமாறும்; சிந்தனை தடுமாறும்போது தவறான முடிவுகளே உருவாகும்; தவறான முடிவுகளால் தவறான செயல்கள் உண்டாகும்; தவறான செயல்களினால் அழிவு ஏற்படும்’ என்கிறது பகவத்கீதை.

பயம் நம்மை நெருங்குவது, நாய் துரத்துவதைப் போன்றது. பயந்து ஓடிக்கொண்டேயிருந்தால் நம்மை மேலும் துரத்திக் கொண்டேயிருக்கும். தைரியத்துடன் எதிர்கொண்டால், திரும்பி ஓடிவிடும்.

கோபத்தின் போது சில நடைமுறைகளைக் கையாளலாம்…

  • பிறரிடம் பேசுவதைத் தவிர்த்தல்.
  • எந்த முடிவையும் செய்யாமை.
  • அவசியமாகச் செய்ய வேண்டியதாக ஏதாவது இருந்தால், அதை மறக்காமல் முடித்து விடுதல்.
  • நல்ல நண்பர்கள் அல்லது ஆலோசகர்களை கலந்தாலோசித்தல்.
  • தற்காலிகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுதல்.
  • தனியறை கிடைத்தால் படுத்து, ஆழ்ந்து மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுதல். அமர்ந்தபடியேயும் மூச்சை இழுத்து வெளிவிடலாம்.

உடலில் கோபத்தின்போது அதிகமான அளவில் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் சுரப்பதால், அதன் பாதிப்பைத் தவிர்க்க எளிய உடற்பயிற்சிகளை (நேராக நின்று, பின் குனிந்து தரையைத் தொடுதல்) சுமார் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

இவை இரண்டிலும் இருந்து விடுபட்டாலே போதும்… வாழ்வை வென்றுவிடலாம். தினமும் புதிய சிந்தனைகள்… மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது. மனதில் மாற்றம் நிகழும் போது சிந்தனையில் மாற்றம் மலர்கிறது. சிந்தனை மாறும்போது செயலும் வாழ்க்கை முறையும் மாறுதல்களைச் சந்திக்கிறது. இத்தகைய மாற்றமே முன்னேற்றத்தின் முகாந்திரமாக அமைந்து விடுகிறது. மேலும், மாற்றத்தைத் தோற்றுவிக்கும் ஆக்க சிந்தனையின் உறைவிடமாக உங்கள் மனம் திகழும்போது எந்தப் பிரச்சனையையும் சந்தித்துத் தீர்க்கும் ஆற்றல் உங்களுக்கு வருகிறது.

கனவு காணுங்கள்… கைக்கெட்டிய தூரம் வரை எனது உலகம் என்று! வெறும் கல்லூரிப் படிப்பு மட்டுமே நம்மை வெல்லத் தயார் செய்யாமல் விழித்திருக்கும் போது கற்பனை செய்ய வேண்டிய கனவு. விழிப்புணர்வுடன் உங்கள் எதிர்காலம் பற்றி கற்பனை செய்ய வேண்டிய கனவு. உங்கள் பெற்றோருக்காக கற்பனை செய்ய வேண்டிய கனவு. வெற்றி பெற்ற அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை  என்ன தெரியுமா? அவர்கள் அனைவருமே இந்த வெற்றியைப் பற்றிக் கனவு கண்டவர்கள் என்பதுதான்.

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = நிச்சயமான வெற்றி!

கனவு மெய்ப்படும்…

உன் சிறகை விரிக்கும் வரை

நீ எட்டும் உயரம் யாரறிவார்?

பற… இன்னும் பற… வானமே எல்லை…

கல்லூரி செல்ல இருக்கும் அனைத்து தேன் சிட்டுகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!  வாழ்க வளமுடன் !

ப்ரியா கங்காதரன் 

15

***

பெற்றோரின் கனிவான கவனத்துக்கு…

இந்த நிலையில் பெற்றோரான நமக்கும் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

நமது குழந்தைகளை எந்த ஒரு நிலையிலும் பிற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான திறமை எங்காவது ஒளிந்து இருக்குமே தவிர திறமை இல்லாதக் குழந்தைகள் இல்லவே இல்லை. தேடி எடுக்க வேண்டியது நமது கடமை. நாம்தான் தேடி எடுத்து, செப்பனிட்டு, புடம் போட்ட தங்கமாக உருவாக்க வேண்டும்.

பள்ளிக் கல்வி வரை ஒரே சீருடை… ஒரே வாகனம்… ஒன்றாக இருந்து கற்ற நமது பிள்ளைகள்… கல்லூரிக்குச் செல்லும் போது உணரும் சூழல் வேறு. ஏழை-பணக்காரன்… விதவிதமான உடைகள்… கார், பைக், பாக்கெட் மணி என அனைத்திலுமே வேறுபாடுகளைக் காணும் பருவம்! இந்த நிலையில் நமது வழிகாட்டல் மட்டுமே இந்த ஏற்ற தாழ்வுகளைக் கடந்து நமது பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர உதவும். அதற்கு அவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். வெல்லும் தொலைவை வரையறை செய்து ஓட வைக்க வேண்டும். வென்றால்தானே வாழ்க்கை! அதைப் புரிய வைக்க வேண்டும். மனதை அலைபாய விடாமல் அன்பால் கட்டிப் போட வேண்டும். இதெல்லாம் பெற்றோரான நம்மால் மட்டுமே முடியும்.

நமது  குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக உருவாக்குவோம். தன்னம்பிக்கை கொண்டவர்கள் வெற்றிக்கு வழி தேடுவார்கள்… வெற்றியை நேசிப்பார்கள்… வெற்றி பற்றிக் கனவு காண்பார்கள்.

Image courtesy:

http://www.blacknet.co.uk/

http://www.eplindia.org