தமிழைக் காக்க ஒரு மாநாடு!

Image

கோவை பேரூரில் இருப்பது ‘தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி’. இந்தக் கல்லூரியின் மும்பெரும் விழாவும், ‘வளர்தமிழ் இயக்கம்’ நடத்தும் தமிழ்ப் பயிற்றுமொழி – வழிபாட்டு மொழி மாநில மாநாடும் செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து கோவையில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 8ம் தேதி வரை தொடர இருக்கிறது.

கல்வியை தமிழில் பயிற்றுவிக்க வேண்டும், வழிபாட்டு மொழியாகவும் தமிழ் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த மாநாடு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. திருக்கோவையார் நூலில் ‘உயர்மதிற் கூடலில் ஆய்ந்த ஓந்தீந்தமிழ்’ என்றும், ‘தமிழெனும் இனிய தீஞ்சொல்’ என்று மணிமேகலையிலும், ‘மொழிகளில் மிகத் திருத்தம் பெற்ற மொழி தமிழ்’ என்று கால்டுவெல்லும் குறிப்பிட்ட சிறந்த மொழி தமிழ்மொழி. அதைப் போற்றவும் காப்பாற்றவும் வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஏன் இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்கிற காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள் விழாக்குழுவினர். அவற்றில் சில…

  • மொழி அடையாளத்தை இழந்த இனங்கள் ‘பண்பாட்டு அனாதைகள்’ என்னும் பட்டியலில் இடம் பெறுவதைத் தடுக்க.
  • மொழி முகவரியை இழந்த மனித மந்தையாகத் தமிழினம் ஆகாமல் காப்பதற்காக.
  • மொழியில் தங்கள் அடையாளத்தைக் காக்கும் இனமே காலத்தால் காப்பாற்றப்படும் என்பதை நிலை நாட்ட.
  • தமிழைப் பள்ளிக்கல்வி அளவிலாவது பயிற்று மொழியாக்குவதே உரிமை வாழ்வின் அடையாளம் என்பதற்காக.
  • தமிழருக்கும், தமிழ்நெறி வழிபாட்டிற்கும் இருந்துவரும் தடைகள் நீங்க.

 என நீள்கிறது காரணப் பட்டியல்.

Image

விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சந்திரயான் திட்டக்குழுத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, பொன்னம்பல அடிகளார், எழுத்தாளர் கோவை ஞானி, க.ப.அறவாணன் மற்றும் பல தமிழறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்ச் சான்றோர் கருத்தரங்கம், மாநாட்டின் சிறப்பு அமர்வுகள் என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ்’ என்கிற முழக்கத்தோடு தமிழுக்காக விழாவும் மாநாடும் நடக்கின்றன. சிறக்கட்டும்!