தொல்லியல் துறையில் அம்மா!

Image

மார்கழி மகோத்சவங்கள்

மனம் நிறைக்கும் கச்சேரிகள்…

மறப்பதில்லை எப்போதும்.

 

அம்மாவின் தள்ளாமை…

நாமும் போகமுடியாமல் போனாலும்

ராகமழைதான் வீட்டில்.

 

முதிர்ச்சியின் ஆலாபனையுடன்

மழலைக்கு மாறியதால்

மிளிறும் மொழியெல்லாம்

மோகனம்தான்.

 

குளறும் வார்த்தைகளுடன்

கொட்டித்தீர்க்கும் அன்புதான்

கல்யாணி.

 

அந்தக்கால கதைகளை     

ஆசையுடன் ஆரம்பிப்பது

ஆனந்தபைரவிதான்.

 

நடுங்கும் விரல்களுடன்

நமக்கு திலகமிட்டு

நெகிழும் நேரம்

நன்றாய் கேட்கும் நீலாம்பரி

.

தொண்ணூறு என்பது

வயோதிகமாய் தோன்றவில்லை

தொல்லியல் கச்சேரி ஒன்றை

தொடங்கி இருக்கிறாள்

அம்மா.                           

– ரஜினி பெத்துராஜா

Image courtesy: http://nutrivize.com/