ரஞ்சனி நாராயணன்
உலகச் சுற்றுச்சூழல் தினம்
‘உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக’
என்ன அருமையாகக் கவிஞர் மனிதனுக்கே பூமியின் வளங்கள் எல்லாம் என்று சொல்லுகிறார்! மனிதன் ஆண்டு அனுபவிக்க என்று இறைவன் படைத்ததையெல்லாம் மனிதன் தனது பேராசையினால் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விழைந்ததன் விளைவே இப்போது உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு தினத்தை ஒதுக்கி எல்லோருக்கும் நமது சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி அதைச் சரிப்படுத்துவதும் நம் கடமையே என்று நமக்கு நினைவு மூட்டும் அளவிற்கு வந்து நிற்கிறது!
‘ஒரே ஒரு பூமி’ என்ற கோஷத்துடன் 1973 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஆரம்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. நம்மைச் சுற்றி ஆரோக்கியமான பசுமையான சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வரும் கேடுகள் பற்றியும் உலக மக்களிடையே இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்தக் கொண்டாட்டம். சுற்றுச்சூழலை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. யாரோ காப்பாற்றுவார்கள் அல்லது அரசு பார்த்துக்கொள்ளும் என்று நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது, அதை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கான வழிகளை பற்றிப் பேசுவதும் கூட இந்த நாளை நாம் அனுசரிப்பதன் முக்கிய நோக்கம். ஐக்கிய நாடுகள் சபையால் மிகப்பெரிய அளவில் அனுசரிக்கப்படும் இந்த உலகச்சுற்றுச்சூழல் தினம் உலகில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள், அரசு மற்றும் ஆரோக்கிய அமைப்புகள் சுற்றுச்சூழலைக் காக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நாள்.
அப்படி என்ன நம் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது?
மனிதன் எப்போதெல்லாம் பேராசை கொண்டு இயற்கைக்கு ஊறு விளைவிக்கிறானோ அப்போதெல்லாம் இயற்கை சீறுகிறது. மனிதா நீ உன் எல்லையை மீறுகிறாய் என்று எச்சரிக்கை செய்கிறது. ஆனால் நாம் தொடர்ந்து இயற்கையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திக் கொண்டே வருகிறோம். விளைவு திடீர் மழை, தொடர்ந்து வரும் வெள்ளம். விவசாய நிலங்களிலும் நீர் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகிறது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் புகுந்து மனித உயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்துகிறது.
மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்யாமல் போவதால் ஏற்படும் வறட்சியால் உணவுப் பயிர்கள் பாதிக்கப்படுவது, உணவுப் பொருட்கள் வீணாவது, உலக வெப்பமயமாதல், அழிந்து போகும் அல்லது மனிதனின் பேராசையினால் அழிக்கப்படும் காடுகள்; காடுகள் அருகி வருவதால் விலங்குகள் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இதன் காரணமாக மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் மோதல்கள், உயிரிழப்புகள் இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒவ்வொரு வருடமும் இந்த உலகச் சுற்றுச்சூழல் தினம் ஒரு மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த வருட மையக்கருத்து ‘GO WILD FOR LIFE’ – வனவிலங்குகளை, வனங்களைப் பாதுகாப்பது, வனவளத்தை அநியாயமாக திருடி வர்த்தகம் செய்வதை எதிர்ப்பது
வனவளம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
நம்மைப் போலவே இந்த பூமியில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு நம்முடன் இயைந்து வாழப் பிறந்தவை வனவிலங்குகளும், செடி கொடி, மரங்களும். அவற்றை வாழ வைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆனால் இங்கு நடப்பதென்ன?
சட்டவிரோதமாக வனவிலங்குகள் அவற்றின் இறைச்சி, தோல், உரோமம், மற்றும் தந்தம் போன்றவற்றிற்காக வேட்டையாடப்பட்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. சில விலங்குகள் அவற்றின் இரத்தத்திற்காகவும், மருந்துகளுக்காகவும் கொல்லப்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகமாகும் இந்த வியாபாரத்தால் நமது பூமியின் பல்லுயிர்கள் அழிந்துகொண்டு வருகின்றன. இயற்கை வளங்கள் திருடப்படுகின்றன. பல விலங்கினங்கள் முற்றிலும் அழிந்தே போய்விடும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான விலங்குகள் சின்னச்சின்ன பூச்சிகள் அழிந்தே விட்டன. காட்டுவிலங்குகள் திருட்டுத்தனமாக கொல்லப்பட்டு, கடத்தப்படுவதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன் நமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. திட்டமிட்டக் குற்றங்கள், லஞ்ச லாவண்யங்களுக்கும் இவை வழிவகுக்கின்றன. இதனால் உலகம் முழுவதும் ஒரு பாதுகாப்பின்மை உணரப்படுகிறது.
வனக்குற்றங்கள் பெருகுவதால், நாடுகளின் தனித்த அடையாளங்களான யானை, காண்டாமிருகம், புலி, கொரில்லா கடல் ஆமைகள் ஆகிய உயிரினங்கள் அருகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. காண்டமிருங்கங்களில் ஒருவகையான ஜாவன் ரைனோ இனம் 2011 ஆம் வருடம் வியட்நாமில் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதே வருடம் கேமரூனில் கருப்பு காண்டாமிருகங்கள் அழிந்துவிட்டன. காம்பியா, பர்கினோ ஃபாஸோ, பெனின் டோகோ முதலிய நாடுகளிலிருந்து ஏப் எனப்படும் பெரிய மனிதக் குரங்குகள் மறைந்துவிட்டன. கூடிய சீக்கிரமே மற்ற நாடுகளிலிருந்தும் இந்த விலங்கினம் மறையக்கூடும். வெறும் விலங்கினங்கள் மட்டுமல்ல, மூங்கில் மற்றும் பூக்கள் கூட வன உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. ஆர்சிட் பூக்கள், ரோஸ்வுட் எனப்படும் மரங்களும் மறைந்து வருகின்றன. அதிகம் அறியப்படாத பல பறவையினங்களும் இதில் அடங்கும். கடல் ஆமைகள் அவற்றின் இறைச்சிக்காகவும் அவற்றின் மேல் கூடுகள் செயற்கை நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் செய்வதற்காகவும் வேட்டையாடப்படுகின்றன.
இந்தவகைக் குற்றங்களைத் தடுக்க மிகக்கடுமையான கொள்கைகளை அரசு அமல்படுத்தியிருக்கிறது. இது தவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், சமுதாய பாதுகாப்பிற்கான முதலீடுகள், சட்ட அமலாக்கம் என்று பலவிதங்களிலும் நடவடிக்கை எடுத்ததில் சில சில வெற்றிகள் கிடைத்திருக்கின்றன என்பது உண்மை. ஆனாலும் பல உயிரினங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் காட்டு விலங்கினங்களை காப்பதை நம் தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். நமது தொடர்ந்த முயற்சிகள் பல உயரினங்களை வாழவைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
செய்யவேண்டியவை:
தந்தத்தினாலும், விலங்குகளின் உரோமம் மற்றும் தோல் இவைகளினால் செய்த பொருட்களை வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இவைகளுக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வரவேற்பைக் கண்டு இதற்காக காட்டு விலங்குகளை நெஞ்சில் இரக்கமின்றிக் கொல்லும் கயவர் கூட்டம் இருக்கிறது. நமது தேவை குறையும்போது விலங்குகளும் அநியாயமாகக் கொல்லப்பட மாட்டா.
காடுகளை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைப்பதை தடுக்க வேண்டும்.
வீடுகளை அழகுபடுத்தவும் காகிதங்களுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. நகரத்தின் விரிவாக்கத்திற்காக சாலைகள் அமைக்கப்படும்போது அங்கு பல வருடங்களாக வளர்ந்து கிளை பரப்பி, நிழல் கொடுக்கும் பழைய, பெரிய மரம் தான் முதல் பலி ஆகிறது. புதிதாக அமைக்கப்படும் சாலைகளிலும் நிழல் தரும் மரங்களை அமைக்கவேண்டும். அரசு இயந்திரமே எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல், தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவ முன்வர வேண்டும்.
இலவசமாக நமக்கு கிடைக்கும் சூரியசக்தியை வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மாசுபடாத நதி நீர், சுத்தமான கடற்கரைகள், பனிமூடிய மலைகள், இயற்கை வளம் நிறைந்த காடுகள் இவை நமது அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கும்படி செய்வது நம் கடமை.
பூமி கீதம் – இந்தியக் கவிஞர் திரு அபய் குமார் இந்த பூமி கீதத்தை இயற்றியிருக்கிறார். இந்தப் பாடல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளான அரபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஹிந்தி மற்றும் நேபாளி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பாடப்பட்டிருக்கிறது.
Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the continents and the oceans of the world
united we stand as flora and fauna
united we stand as species of one earth
black, brown, white, different colours
we are humans, the earth is our home.
Our cosmic oasis, cosmic blue pearl
the most beautiful planet in the universe
all the people and the nations of the world
all for one and one for all
united we unfurl the blue marble flag
black, brown, white, different colours
we are humans, the earth is our home.
ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு இந்த நாளை முன்னிலையில் நின்று தனிச்சிறப்புடன் கொண்டாடுகிறது. இந்த நாடு தனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சிறப்பு முயற்சிகளை எடுக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் அங்கோலா நாடு இந்த விழாவை முன்னெடுத்துக் கொண்டாடுகிறது. இந்த நாட்டின் காடுகளில் வாழ்ந்து வரும் ஜயன்ட் சாபெல் ஆண்டிலோப் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது. இந்த மானினத்தையும் மற்ற காடு வாழ் பிராணிகளையும் காக்க அங்கோலா அரசு கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
அரசு எத்தனைதான் சட்டதிட்டம் போட்டாலும், அவற்றில் உள்ள ஓட்டைகளை சாதகமாக எடுத்துக் கொண்டு மனிதம் குற்றம் புரிகிறான். மனிதனின் இந்த குணம் மாற வேண்டும். மனிதனும், விலங்குகளும் இணைந்து, இயைந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. இத்தனை வருடங்கள் இதை மறந்து இயற்கையின் கோபத்திற்கு ஆளாகி வருகிறோம். இனியாவது நமது பேராசைக்கு சற்று ஓய்வு கொடுத்து நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ எல்லாவகையிலும் தகுதி உள்ள உயிரினங்களை வாழ விடுவோம்.
இந்த உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என்ற உறுதி மொழியை நாம் எல்லோரும் எடுப்போம்.
http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com