வண்ணம் படிந்த கவிதைகள்

Image

ஒரு சுழலும் மின்விசிறியின் கீழ்…

 வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சியை 

எப்படி வரவேற்பது என்று புரியாமல் விழித்தேன்.

இயல்பான பறத்தல் மறந்த அதன் படபடப்பை மறக்கடிக்க 

நான் என்னதான் செய்யவேண்டும்?

அதன் மொழியில் வார்த்தைகள் கற்காத நான் 

எனது வரவேற்பை எப்படிப் புரியவைப்பேன்?

அதன் மொழியைப் புரிந்து கொள்ள 

நான் இயற்கையின் எந்தப் பாடத்தைப் படிக்கவேண்டும்?

அறையெங்கும் அதன் பயந்த சுவாசம் நிறைந்திட 

என் மார்புக் கூட்டுக்குள் 

காற்றுப் போன பலூன்கள் 

பாறைகளைப்போல அசைகின்றன.

வண்ணத்துப்பூச்சியை வரவேற்பது இருக்கட்டும் 

எப்படி அதை வெளியேற்றுவது 

என்பதுதான் இப்போதைய எனது பிரச்னை! 

வேகமெடுத்த வாகனத்தின் முன் 

திட்டவட்டமாக விபத்தை எதிர்நோக்கிய 

ஒரு  தடுமாறும் நெடுஞ்சாலைப் பயணியைப் போல

சுழலும் மின்விசிறி நோக்கி 

ஏறி இறங்கிப் பறந்துகொண்டிருக்கும் 

வண்ணத்துப்பூச்சியை 

எப்படி அறையை விட்டு வெளியேற்றுவது என்று புரியாமல் விழிக்கிறேன்!

Image
                                             

 காற்றில் பறக்கும் வண்ணங்கள் 

வண்ணத்துப்பூச்சியை 

விழிகளால் நோக்கிடும் துணிச்சலில்லை 

விழிகளில் ஒட்டிக்கொண்ட வண்ணங்களை 

துடைத்தெடுக்க 

மின்பஞ்சு விரல்கள் வாய்க்கவில்லை எனக்கு.

Image 

வண்ணத்துக் கிளி 

வண்ணத்துப்பூச்சியை 

இனி யாரும் பூச்சி என்று சொல்ல வேண்டாம் 

என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் எல்லோரையும்…

பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது என்று 

நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள்…

அதன் பறத்தல் பறவைக்கும் வாய்க்காது என்று 

பரவசப்படுகிறீர்கள்…

அதற்கு சிறகுகள் இருப்பதாக 

நீங்கள்தான் சிலாகிக்கிறீர்கள்…

ஒரு மலரே பறவையானதைப் போல 

வண்ணங்கள் நிறைந்த அதன் பெயரை 

இனி நீங்களும் நானும் சேர்ந்து 

இப்படி மாற்றி வைக்கலாமா..?

” வண்ணத்துக் கிளி” 

– நா.வே.அருள்

Image courtesy:

http://www.pageresource.com

http://img.wallpapergang.com

http://www.mrwallpaper.com/

http://timskellett.com

Image