வல்லாரை, தேங்காய் மற்றும் பாட்டி வைத்தியம்!

vallarai

வல்லாரை சில குறிப்புகள்…

* வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரைக் கீரை’ என்று பெயர் பெற்றது. கல்வி அறிவு, ஞாபக சக்திக்கு உதவி செய்வதால் ‘சரசுவதி கீரை’ என்று அழைக்கப்படுகிறது.

* வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, தாது உப்புக்கள் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சரிவிகித உணவு என்பதற்கு சரியான உதாரணம் இது.

* வல்லாரைக்கீரையை பறித்த சில மணிநேரங்களுக்குள் பச்சையாக சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டு, நினைவு நரம்புகள் தூண்டப்படும்.

* ஒரு கைப்பிடி அளவு வல்லாரைக்கீரையை பச்சையாக மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

* வல்லாரையை நன்கு காய வைத்து பொடி செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சாதத்தில் நெய் கலந்து தரலாம்.

* தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு என பல நோய்களுக்கு வல்லாரை ஒரு சிறந்த தீர்வு. எந்த வகையிலாவது உணவில் சேர்த்து கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.

* காலை வேளையில் வல்லாரைக்கீரையுடன், மிளகு சேர்த்து உண்டால் உடல் சூடு தணியும்.

* வல்லாரைக்கீரையைக் கொண்டு பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்கும்.

* வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும். குடல் வயிற்றுப்புண்களை ஆற்றும்.

* வல்லாரையுடன், தூதுவளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து, ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர, இருமல், சளி ஓடி போகும்.

* வல்லாரை செரடோனின் என்ற சத்தை நிரம்ப கொண்டது. பள்ளிக் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. குழந்தைகளின் மூளை நன்கு வேலை செய்ய வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்றலைப் பெருக்கும் தன்மை கொண்டது.

தேங்காய்…

தேங்காயிலுள்ள ஆரோக்கிய குணத்தை பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும்.

ஞாபக சக்திக்கு…

புத்திசாலியாக இருக்க ஞாபக சக்தி அவசியம். ஞாபக சக்திக்கு மாங்கனீஸ் சத்து அவசியம். அதை அதிகரிக்க தேங்காய்ப் பருப்பு, வேர்க்கடலையை அவ்வப்போது சாப்பிட்டால் போதும்.

மூலப் பிரச்னைக்கு…

தேங்காய்ப் பாலில் சிறிது எலுமிச்சை ஜூஸ் கலந்து குடித்தால் உடல் உஷ்ணம், கண் எரிச்சல், மூலச்சூடு பிரச்சனைகள் நீங்கும்.

வாய்ப்புண் குணமாக…

காலையில் சாப்பாட்டுக்கு முன் தேங்காய்ப் பால் சிறிது பருகி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

நரம்புத் தளர்ச்சிக்கு…

ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி கொண்டது. எலும்பு வளர்ச்சியைத் தூண்டும். நரம்புத் தளர்ச்சி பாதிப்புகளை நீக்கும்.

கொழுப்பு… கவனம்!

தேங்காயை அப்படியே சாப்பிடுவது நல்லது. கொழுப்பு குறையும். தேங்காயை சட்னியாக அரைத்து அல்லது வேறு வகையில் சமையலில் சேர்க்கும் போது அதில் கொழுப்பு அதிகரிக்கும்.

***

பாட்டி வைத்தியம்

சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு வீட்டில் நாமே செய்து கொள்ள சில கை வைத்தியங்கள்…

வயிற்றுப் பொருமலுக்கு…

வசம்பை எடுத்துச் சுட்டு, கரியாக்கி, அதனுடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

அஜீரணத்துக்கு…

ஒரு கப் சாதம் வடித்த நீரில், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி, 4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி பசி ஏற்படும். ஓமம், கருப்பட்டி இட்டு கஷாயம் செய்து பருகினால் அஜீரணம் சரியாகும்.

இடுப்பு வலிக்கு…

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆற வைத்து ஒரு டீஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து கொடுத்தால் இடுப்பு வலி நீங்கும்.

வியர்வை நாற்றத்துக்கு…

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

உடம்பு வலிக்கு…

சாம்பிராணி மஞ்சள், சர்க்கரை போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்துப் பருகினால் தீரும்.

ஆறாத புண்ணுக்கு…

விரலி மஞ்சளை சுட்டு, பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் குணமாகி விடும்.

இருமல் நீங்க…

அதிமதுரம், கடுக்காய் தோல், மிளகு ஆகியவற்றை 25 கிராம் எடுத்து தனித்தனியே வறுத்து பொடியாக்கவும். இதில் தினமும் காலை, மாலை 1 கிராம் அளவில் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் சூட்டு இருமல் நீங்கும்.

ஆர்.சம்யுக்தா