தினமுமே லவர்ஸ் டே தான்!

10834995_852988401426969_8795192751527054828_o
பொண்ணு பாக்க வந்தபோது, வழக்கம் போல (இல்ல கேக்கணுமேன்னு ஒரு ஃபார்மாலிட்டி ஃபில் பண்ண) குருவோட அம்மா, “உனக்கு பாடத் தெரிமா”ன்னு கேட்டாங்க… அப்போ நா கேவலமா திருதிருன்னு முழிக்கிறதைப் பார்த்து, குரு அவசர அவசரமா “அதெல்லாம் வேண்டாம், பாடத் தெரிலன்னா பரவால்ல” என்று அபயமளித்தார் பாருங்க, அப்படியே வயித்துல பூஸ்ட் வார்த்த மாதிரி இருந்துச்சு… அப்போதான் எனக்கு அவுரு மேல லவ்வு ஸ்டார்ட்டிங் !
“இந்த ஏற்பாடுகள் எல்லாம் உன் விருப்பப்படி தானே நடக்குது… உனக்கு சம்மதம் என்றால், நிச்சயாதார்த்தம் செய்ய ‘கோ அஹெட்’ சொல்லிடவா அம்மா-அப்பாகிட்ட” – இதுதான் குரு என்னிடம் முதலில் பேசிய வார்த்தைகள்.
ஆஹா, தானே முடிவு பண்ணாமல் நம்ம கருத்தையும் கேக்குறாரே என்று அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சுட்டேன். அப்புறம் வெச்சாரு டுவிஸ்டு…
“Ok… see you soon… take care … ஹாங்… உன் பேரு என்ன … சாரி… நினைவில்ல” என்றாரே பாக்கலாம். நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்! இருந்தாலும், அவர் நேரடியா கேட்ட சின்சியாரிட்டில இம்ப்ரெஸ் ஆகிட்டேன்.
இப்படியாக, அவர் மேல ஸ்டார்ட் ஆன காதல் ஸ்டிராங்காச்சு.
அப்புறம் என்ன… மறு நாளே நிச்சயதார்த்தம்தான்!
மறு நாள் அவுங்க அண்ணன் வீட்டுல நிச்சயதார்த்தம், தடபுடலா நடந்தது. நிச்சயம் முடிஞ்ச உடனே ஒரு மணி நேரம் பேச டைம் கிடைத்தது. மொட்டை மாடி… சுற்றி நிறைய மரங்கள்… மறைந்து கொண்டிருக்கும் மாலை சூரியனின் இதமான மஞ்சள் வெயில், அழகிய இளம் ஜோடி (அவ்வ்வ்வ்வ்) அப்டின்னு ஒரே ரொமாண்டிக்கா இருந்தாலும், நாங்க என்னவோ கொஞ்சம் மொக்கயாத்தான் பேசிக்கிட்டோம்.
பேச்சுக்கு நடுவுல அவர், “நா ஒரு டீ டோட்டலர்” (அதாவது எந்த கெட்ட(?!) பழக்கமும் இல்லாதவர்) என்று சொன்னார். அதான் கொயந்த புள்ள மாதிரி இருக்குற மூஞ்சைப் பாத்தாலே தெரியுதே, என்று நினைத்துக் கொண்டு, பின்பாதியை மட்டும் கொஞ்சம் டீசன்டா சொன்னேன்… “உங்களைப் பார்த்தாலே தெரியறது” என்று. அவருக்கு ஆச்சரியம். ’’அட அப்படியா… முகத்தைப் பார்த்தே இதெல்லாம் கண்டுபிடிப்பியா, வெரிகுட்’’ என்றார்.
ஆனா, அவர் என்னை நக்கலடித்தார் என்பது பின்னாளில்தான் தெரிந்தது. அடச்சே… சாச்சுப்புட்டாக மச்சான்.
நிச்சயதார்த்தம் முடிந்த 3ம் மாசம் கல்யாணம். அவ்வளவு நாள் ஒழுங்கா போயிட்டிருந்த டைம், நிச்சயத்துக்கப்புறம் ரொம்ப மெதுவா போற மாதிரிலாம் ஒரே ஃபீலிங்கு. எங்கம்மா வேற ’சமைக்கக் கத்துக்கோ’ன்னு ஒரே நச்சரிப்பு. (ஒண்ணும் கத்துக்கல… சும்மா கிச்சனுக்குப் போய் செஞ்சு வெச்ச சாப்பாட்டை தின்னுட்டு வருவேன், அம்புட்டுதான். ஆனா, சமைக்க கத்துண்ட மாதிரி பில்ட்-அப் எல்லாம் ஓவரா கொடுத்தேன். அதான் நமக்கு கை வந்த கலையாச்சே… ஹிஹி)
ஒவ்வொரு ஞாயிறும் இவர் போன் பண்ணுவார். சண்டேன்னாலே எப்போடா போன் வரும்னு வெயிட் பண்ணுவேன். போன் பெல் அடிச்சா இவர்தான்னு தெரியும். ஓடிப்போய் எடுக்கணும்னு கை பரபரக்கும். ஆனா, எங்கப்பா எங்க எல்லாரையும் ஒரு லுக்கு விட்டுக்கிட்டே, தான் ஃபோனை எடுத்து 2 வார்த்தை பேசிட்டு, இந்தா உனக்குத்தான், மாப்பிள்ளை லைன்ல அப்டினுட்டு குடுப்பார். ’டியர் தகப்பா, உங்க அராஜகத்துக்கு எல்லையே இல்லையா, அது இவருதான்னு தெரியாதா?’ என்ற அர்த்தம் பொதிந்த லுக்க அவருக்கு விட்டுட்டு, நா பேசுவேன். வீட்டுல எல்லாரும் என்னையே பாப்பாங்க. என்ன பேசுறது… அல்ப மேட்டர்லாம் பேசிட்டு (ஒரு 2 நிமிஷம்). போனை வைப்பேன். இருந்தாலும், சந்தோஷமா இருக்கும். இனிமே அடுத்த சண்டேதான். அவ்வ்வ்வ்…
என் பர்த்டேக்கு அவர் அப்போ கிரீட்டிங் அனுப்பினார். எனக்கு அவ்ளோ குஷி. எல்லாருகிட்டயும் பெருமையா காட்டிண்டேன். I still have that 🙂
ஒரு வழியா 3 மாசம் ஓடியது. நாளைக்கு கல்யாணம். இன்னிக்கு ஈவினிங் ரிசப்ஷன். (மாப்பிள்ளை அழைப்புக்கு பதிலா) அவுங்க மண்டபத்துக்கு வந்து இறங்கிய சிறிது நேரத்தில், மணப்பெண் ரூமுக்கு (அட எனக்குத்தான் ) ஒரு மிகப்பெரிய நெருக்கமாகக் கோர்க்கப்பட்ட மதுரை மல்லி ஒரு பந்து வந்தது. என்னோட ஸ்பெஷல் அலங்காரத்துக்காக, என்னவர் வாங்கி வந்தது. எப்புடீ… சும்மாவே நா ஆடுவேன். இவரு வேற இப்படிலாம் சலங்கை கட்டி விட்டா, கேக்கணுமா? அப்படியே ஜிவ்வ்வ்னு ஒரு சந்தோஷம்.
இதுதான் என் ரிசப்ஷன் போட்டோ. அவரு எவ்ளோ ஸ்மார்ட்டா இருக்கார் இல்ல. என் மூஞ்சிதான் சரியில்லை. போட்டோகிராபர் நல்லாவே என்ன எடுக்கல… கிர்ர்ர்ர்
10961810_852951438097332_1657014719_n
மறுநாள் பொழுது புலர்ந்தது. காத்திருந்த அந்த நாள் வந்தே விட்டது. முதல் நாள் ரிசப்ஷன் முழுவதும் ஏதேதோ ஜோக்கடித்து சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் டென்ஷன்.  நான் கூலாக நெடுநாள் பழகிய நண்பனை சந்திக்கப் போவது போல் ஜாலியாக ரெடியாகிக் கொண்டிருந்தேன்.
பொதுவாக திருமணத்தில் பல சுவையான நிகழ்வுகள் இருக்கும். மாப்பிள்ளை காசி யாத்திரை செல்வது, பெண்ணின் தகப்பனார் போய், ’என் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கிறேன், நீங்கள் திரும்பி வாருங்கள்’ என்று அழைப்பார். ’ஏய் அவரை ரொம்ப தூரம் போக விட்ராதீங்கோடி, சட்டு புட்டுனு கூட்டிண்டு வந்திருங்கோ’ என்று ஜோக்கடித்துக் கொண்டிருந்தேன்.
10979464_852951584763984_1863865551_n
மாலை மாற்றுவது என்பது இன்னொரு குஷியான நிகழ்வு. மணமகன் மற்றும் மணமகளை அவரவர் தாய் மாமன் தோளுக்கு மேல் தூக்கிக் கொள்வார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் தன் கழுத்தில் இருக்கும் மாலையைக் கழற்றி, மணமகனுக்குப் போட வேண்டும். அப்போது சரியாகப் போட விடாமல் மணமகனின் மாமன் அவரை இழுத்துக் கொள்வார். இருந்தாலும் சரியாகப் போட்டு விட்டால், ஓஹோ என்று கரகோஷம்தான். அப்புறம் மாப்பிள்ளை, மணப்பெண் கழுத்தில் மாலையிட வரும்போது இதே போல கூத்து நடக்கும். செம்ம ஜாலியாக இருக்கும். நான் அவருக்கு வெரட்டி வெரட்டி மாலையைப் போட்டேனாக்கும். ’சரியா தூக்கு மாமா’ என்று என் மாமாவுக்கு வேறு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்தேன். ஹிஹி…
10927972_852951561430653_933909292_n
10965880_852951568097319_1535254738_n
அப்புறம் ஊஞ்சலில் அமர வைத்து, தம்பதியினருக்கு பாலும் பழமும் கொடுப்பது, பிறகு பச்சைப் பொடி சுற்றுவது என்றெல்லாம் அழகிய சம்பிரதாயங்கள்… ஒரு தட்டு முழுவதும் மஞ்சள், சிவப்பு நிறங்களில் சாதத்தை உருண்டையாக உருட்டி, மணமக்களின் தலையச் சுற்றி, திருஷ்டி கழித்து 4 திசைகளிலும் எறிவார்கள்.
இப்படி எல்லா வைதீக சடங்குகளும் முடிந்து, முகூர்த்த நேரமும் வந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் நிஜமாகவே கூடி நின்று எங்களை ஆசிர்வதித்தது போல் எனக்கு பூரிப்பு. ஓர் அருமையான தேவ கணத்தில் அவரின் மனையாளானேன்.
10979219_852951558097320_313250869_n
திருமணம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய அத்தியாயம். அது நல்ல படியாக அமையப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். எனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டத்தைப் பெற வழிவகை செய்த என் பெற்றோருக்கு என் மனமார்ந்த வந்தனங்கள்.
இது பெற்றோர் பார்த்து செய்வித்த திருமணம் என்றாலும், கண்ட நாள் முதல் இன்று வரை அளவற்ற  காதலுடன் வாழ்க்கையைக் கொண்டாடும் எங்களுக்கு, தினமுமே லவர்ஸ் டே தான்!
– வித்யா குருமூர்த்தி

நம்பிக்கை மனுஷிகள்! – ஒரு பகிர்வு!

ld1937

மீபத்தில் ‘நம்பிக்கை மனுஷிகள்’ என்ற ஒரு குறும்படம் பார்க்க நேர்ந்தது. தசைநார் தேய்வு (Mascular Dystrophy) என்று ஆங்கிலத்தில் பெயர்) எனும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி மற்றும் இயல் இசை வல்லபி என்ற 2 சகோதரிகளைப் பற்றிய இந்த படம், என் மனதில் ஒரு மாறாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

தசைநார் தேய்வு – இந்த நோய், உடம்பின் தசை நார்களைத் தாக்கி தசைகளின் இயக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து, தசைகளின் கூட்டு இயக்கம் (Musculoskeletal system) மற்றும் தசை அணுக்களை (Muscular Tissues) முற்றிலும் அழித்துவிடும் ஒரு கொடிய நோய். இது மனித உடலின் x குரோமசோமில் ஏற்படும் ஒரு மரபணுக் குறைபாடு காரணமாக உருவாகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், அவரது இயல்பான செயல்பாடுகள் முற்றிலும் இழந்து படுத்த படுக்கையாக, தனது ஒவ்வொரு தேவைக்கும் பிறரை சார்ந்தே வாழும்படி இருக்கும்.

நம்மில் பலர், வாழ்க்கையின் சதாரண தோல்விக்கே மனம் உடைந்து போவது, சிற்சில பிரச்சனைகளுக்கும் பெரியதாகக் கவலைப்பட்டு புலம்புவது என்று இருக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட தீர்க்கவே முடியாத நோய் வந்த இந்த 2 பெண்களும், தங்கள் வாழ்நாளை எவ்வளவு அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டு, ஒரு முன் உதாரணமாகத் திகழ்கிறார்கள் என்பதைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்தது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவு. உலகின் எந்த மூலையிலும் மருந்து கிடையாது. ஒவ்வொரு நாள் விடியலும் இறைவனின் கருணைதான். எனினும் இவர்கள் ‘வாழ்க்கையே சூனியமாகப் போச்சே’ என்று அழுது அரற்றவில்லை; ‘இனிமே எப்படி வாழப் போறோம்’  என்று மலைத்து நிற்கவும் இல்லை. மாறாக ‘ஆதவ்’ எனும் தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தங்களைப் போலவே தசைநார் தேய்வு நோயால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வில் ஒளியேற்றும் ஒரு புனித காரியத்தைத் தொடங்கியுள்ளனர்.

‘எங்ககிட்ட வெச்சுக்காதே’ என்று நோய்க்கு சவால் விடும் இவர்கள், இந்த டிரஸ்டு மூலம் MD நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிசியோதெரபி, அக்கு பிரஷர் போன்ற சிகிச்சைகளின் மூலம் வலியின் கடுமையை சற்று குறைப்பது, அவர்களின் மனச் சோர்வு அகலும் வகையில் கவுன்சலிங் கொடுத்து நம்பிக்கை ஊட்டுவது என்று ஒவ்வொரு நிமிடத்தையும் அற்புதமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தேவதைகள்.

‘நமக்கு இப்படி ஒரு நோய் வந்திருக்கு, சரி, இதையே பாசிடிவாக எடுத்துக் கொண்டு, வேற வழியைத் தேர்ந்து எடுத்து, என்னைப் போல் பாதிக்கப்பட்டவருக்கு நான் ஏன் உதவக் கூடாது’ என்ற எண்ணமே இந்த டிரஸ்டு உருவாகக் காரணம் என்று பகிர்கின்றனர் இந்தச் சகோதரிகள்.

‘எங்களின் லட்சியம் என்னவென்றால் ஆதவ் டிரஸ்டின் சார்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒருங்கிணைந்த ஹோம், ஹாஸ்பிடல், பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும்’ என்று நம்பிக்கை மிளிரக் கூறும் இந்த சகோதரிகளுக்கு எனது ராயல் ஸல்யூட்.

– வித்யா குருமூர்த்தி

குறும்படத்தை இங்கே காணலாம்…

https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4

ஆண்களுக்கு ஒரு தினம் – ஏன்?

nature-looking-sea-man-wallpapers-105243இன்று  ‘சர்வதேச ஆண்கள் தினம்’ (நவம்பர் 19).  எதற்கு ஆண்களுக்கு  என்று ஒரு தினம்? இந்த தினத்தின்முக்கியத்துவம் என்ன?

‘சர்வதேச பெண்கள் தினம்’ (மார்ச் 8) பிரபலம் அடைந்த அளவுக்கு, ஆண்கள் தினம் அவ்வளவு பிரபலமாகவில்லை. சமீப காலமாகத்தான் இதற்கான கொண்டாட்டங்கள், வருடா வருடம் அதிகரித்து வருகின்றன.

இதைப் பற்றிய ஒரு பார்வை…

IMD (International men’s Day) உலகம் முழுவதும், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தினமாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்மையில் 1960களிலேயே  ‘ஆண்கள் தினம்’  தேவை என்ற அறை கூவல்கள் தொடங்கிவிட்டன. 1992ல் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், தாமஸ் ஆஸ்டர் என்பவரால் முதன் முதலில் இதற்கான விதை விதைக்கப்பட்டது.  எனினும், சட்ட பூர்வமாக, Dr Teelucksingh என்பவரால் 1999ம்ஆண்டு, Trindad – Tobagoவில்  கொண்டாடப்பட்டது.

இந்தியாவில், முதன் முதலில் 2007ம் வருடம்  ‘ஆண்கள் உரிமைகள் கழகம்’ என்ற அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாடியது. 2009ம் வருடம் முதல், ஆண்களின் பிரத்யேக ஆடைத் தயாரிப்பு நிறுவனமான  ‘Allen Solly’ உடன் இணைந்து, கொண்டாட்டங்கள் சூடு பிடித்துவருகின்றன.

Happy-International-Mens-Day-Wallpaper

இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் யாதெனில் –

 • சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சிறந்த ஆண்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் கௌரவப்படுத்துவது.
 • சமூகத்தில் அதிகரித்து வரும் ஆண்களின் தற்கொலை விகிதம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, தந்தை – மகன் உறவு சிக்கல்கள், சமூகத்தில் ஆண்கள்  எதிர்கொள்ளும் பாலினரீயிலான பிரச்னைகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, விவாதித்து, தகுந்த உதவிகள் மூலம் இவற்றை தீர்க்க  விழையும் முயற்சி ஆகும்.

இப்படிப்பட்ட தினங்களை கடைப்பிடிப்பது ,

 • இனப் பாகுபாடுகளை கடந்து,
 • பாலின உறவுகளை மேம்படுத்தி,
 • ஆண்-பெண் சமத்துவத்தை ஊக்குவித்து
 • பெண்கள் மற்றும் சக மனிதர்களை பரஸ்பரம் மதித்து பல முன் மாதிரியான ஆண்களை உருவாக்க ஏதுவாகும்.

இந்த கட்டுரையைப் படிக்கும் ஆண்கள் மற்றும் இணையம் தாண்டியும் வாழும் ஆண் குலத்துக்கும் ‘குங்குமம் தோழி’யின் இனிய ‘ஆண்கள் தின வாழ்த்துகள்.’ மேம்பட்ட மனித உறவுகளால் அமைந்த ஒரு சிறந்த சமுதாயமே நம் வருங்கால சந்த்தியினருக்கு நாம் அளிக்கும் கொடை. மனிதம் வளர்ப்போம்!

– வித்யா குருமூர்த்தி

IMHD-Flyer-front

Image courtesy:

http://wallpaper.krishoonetwork.com/

http://www.desktopwallpaperhd.net

http://happyimages.org/

முகநூலில் பெண்கள் கடைப்பிடிக்க சில சேஃப்டி டிப்ஸ்!

facebook 2

ன்றைய கால கட்டத்தில் சமூக வலைத் தளங்களை உபயோகிக்காதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எல்லா கண்டுபிடிப்பிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். அது போலத்தான் முகநூலும். முன்பின் அறிமுகம் இல்லாத பலரை நட்பு என்ற குடையின் கீழ் ஒன்று சேர்க்கும் முகநூலில், விரும்பத் தகாத அம்சங்களும் நிறைய உள்ளன. சிறு சிறு உபாயங்களைக் கையாண்டாலே போதும்… நம் முகநூல் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.

laptob

 1. உங்கள் முகநூல் கணக்கின் கடவுச் சொல்லை (password) யூகிக்க கடினமானதாக வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது சரியான கால இடைவெளியில் அதை மாற்றிக் கொண்டே இருக்கவும்
 2. நட்பில் இணைய அழைப்புகள் (friend requests) வரும்போது, மியூச்சுவல் நண்பர்களை மட்டும் பார்த்து, அக்செப்ட் செய்ய வேண்டாம். சம்பந்தப்பட்ட நபரின் முகநூல் பக்கத்துக்குச் சென்று, அவரின் சமீபத்திய பதிவுகளைப் பார்க்கவும். ஓர் அடிப்படையான ஐடியா கிடைக்கும். அதன் பிறகு முடிவு செய்யவும்.
 3. உங்கள் ப்ரொஃபைல் போட்டோ மாற்றும் பொழுது, எப்பொழுதுமே ‘நண்பர்களுக்கு மட்டும்’ என்று செட்டிங் செய்யவும்.
 4. புதிய நண்பர்கள் அல்லது அவ்வளவாகப் பழக்கம் இல்லாதவர்களிடம், இன்பாக்ஸில் பேச்சை ஊக்குவிக்க வேண்டாம். மிகவும் நன்றாகத் தெரிந்த நபருடன், அவசியமான விஷயத்துக்கு மட்டும் இன்பாக்ஸ்ஐ உபயோகிக்கவும். ஏனெனில், சிலர் வழக்கமாக ஹாய், ஹலோ, காலை வணக்கம், என்ன பண்றீங்க என்று ஆரம்பிப்பார்கள். இதற்கு பதில் சொல்லத் தொடங்கினால், பேச்சு வளரும்.
 1. முகநூல் மெஸஞ்சரில் உங்கள் மொபைல் எண் சரி பார்க்கும் ஆப்ஷன் (மொபைல் நம்பர் வெரிஃபிகேஷன்) ஒன்று உள்ளது. அதை நீங்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே தவிர்த்து விடவும்.
 2. அரசியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் இடும்போது கவனமாக இருக்கவும். (நீங்கள் ஏதேனும் கட்சி சம்பந்தப்பட்ட ஆளாக இருந்தாலும் / ஏதேனும் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதாக இருந்தாலும்) அரசியல் பதிவுகள் போன்ற சென்சிடிவ் விஷயங்களில், கூடுதல் கவனம் நல்லது.
 3. ஒருவரை நட்பு வட்டத்தில் வைக்கலாம் என்றாலும், உங்களுக்கு அவர் பேரில் சந்தேகம் இருந்தால், ‘ரெஸ்ட்ரிக்டட்’ மோட்-ல் வைக்கவும். (இவ்வாறு வைப்பதால், அவர் பெயர் உங்கள் நட்பு பட்டியலில் காண்பிக்கும். ஆனால், உங்கள் பதிவுகள், புகைப்படம் எதையும் அவரால் பார்க்க இயலாது), பின்பு, நம்பிக்கை வந்தால், நட்புப் பட்டியலில் இணைக்கவும்
 4. என்னதான் பாதுகாப்பு முறைகளைக் கையாண்டாலும், வம்பு வளர்ப்பதற்கு என்றே சிலர் முகநூலுக்கு வருகின்றனர். அப்படி உங்கள் நட்புப் பட்டியலில் இருக்கும் நபரால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், முதலில் அவரை ‘பிளாக்’ செய்து விடவும். இதனால் உங்கள் பதிவு எதையும் அவரால் பார்க்க முடியாது. உங்களை மெசேஜ் வழியாக தொடர்பு கொள்ளவும் முடியாது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், உங்களுக்கும் அவர் சம்பந்தப்பட்ட பதிவுகள் தெரியாது.

இவை எல்லாம் நடைமுறைக்கு ஏற்ற, சில டிப்ஸ். இவற்றைப் பின்பற்றி, உங்கள் முகநூல் நேரத்தை இனிமையானதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

 • வித்யா குருமூர்த்தி

Image courtesy: http://www.pecsma.hu

உடல் உறுப்பு தானம் – ஒரு விழிப்புணர்வுப் பார்வை

O 2

உறுப்பு தானம் என்பது: நாம் உடல் உறுப்புகளை (இறந்த அல்லது உயிருடன் இருக்கும் நபரின் உடலில் இருந்து) அறுவை சிகிச்சை மூலம், தேவைப்படும் நபருக்கு பொருத்தி, அவர் இயல்பான வாழ்க்கை வாழ உதவும் ஓர் உயர்ந்த முயற்சி. தானம் செய்பவர் ‘டோனர்’ என்றும் தேவைப்படுபவர், ‘ரெசிப்பியன்ட்’ என்றும் குறிக்கப் படுவார்கள்.

எந்த உறுப்புகளை தானம் செய்யலாம்?

கண், சிறுநீரகம், தோல், எலும்புகள் / எலும்பு மஜ்ஜை, இதயம் போன்றவை அதிக அளவு தேவைப்படும் உறுப்புகள். இவற்றில் சிறுநீரகம் மற்றும் உடல் திசுக்கள் போன்றவற்றை டோனர் உயிருடன் இருக்கும்போதே தானம் செய்யலாம்.

யாரெல்லாம் தானம் செய்யலாம்?

நாம் அனைவரும், வயது ஜாதி மத பேதமின்றி உறுப்பு தானம் செய்யலாம். (எனினும் புற்று நோய், HIV +ve போன்ற பாதிப்பு உள்ளவர்கள், உறுப்பு தானம் செய்ய இயலாது)

தேவை
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், ஆயிரக் கணக்கான மக்கள், பொருத்தமான உடல் உறுப்பு கிடைக்கப் பெறாமல், இறக்கின்றனர்.

புள்ளி விவரம்…

1,50,000 பேர் சிறுநீரகம் வேண்டி பதிவு செய்துள்ளனர், ஆனால், வெறும் 5,000 பேர் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளனர்.

1,00,000 பேர் கண்/கருவிழி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எனினும், அதற்கேற்ற டோனர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

50,000 பேர் இதய நோயினாலும், 2,00,000 பேர் கல்லீரல் மற்றும் குடல் நோயினாலும் இறக்கின்றனர்.

இயற்கையான மற்றும் விபத்தின் மூலம் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், உறுப்பு தானம் வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

மறுவாழ்வு மலருமா?

உறுப்பு தானம் தேவைப்படுபவருக்கு, இது கிட்டத் தட்ட மறு வாழ்வு போன்றது.  பொருத்தமான உடல் உறுப்பு கிடைக்கப் பெற்றவர், இதன் மூலம் பிறரைப் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.

எதிர்பாராத விபத்து போன்ற அசம்பாவிதத்தில், தம் அன்புக்குரியவரை இழந்தாலும், அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம், பலர் உயிர் வாழ்கின்றனர் என்பது, டோனர் குடும்பத்துக்கு ஓர் ஆத்மார்த்தமான திருப்தியை அளிக்கிறது. மேலும், தானம் பெற்ற குடும்பத்தினரும் இதன் அருமையை உணர்ந்து இருப்பதால், தாங்களாகவே முன் வந்து உறுப்பு தானத்துக்கு பதிவு செய்கின்றனர்.

எவ்வாறு தானம் செய்வது?

 • டோனர்-ஆக முதல் படி, உறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்து கொள்வது. அதன் விபரங்களை உங்களின் சுற்றம், நட்பு மற்றும் உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.
 • இப்படிப் பதிவு செய்து கொள்வது, டோனருக்கு, இதைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலையும், அவருடைய அர்ப்பணிப்பையும் மேம்படுத்துகிறது.
 • பதிவு செய்து கொள்வதால், மருத்துவர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேவையான நேரத்தில் தொடர்பு கொள்வது எளிதாகிறது. இது நேர விரயத்தைத் தவிர்க்கிறது.
 • எங்கு சென்றாலும், தங்களின் டோனர் கார்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். தங்கள் சட்டைப் பையில் / பர்ஸில் இந்த கார்டு எப்போதும் இருப்பது அவசியம்.
 • தங்களின் குடும்பத்தினருக்கு உங்கள் விருப்பத்தைத் தெரியப் படுத்துங்கள். நெருங்கிய உறவினரின் அனுமதி இல்லையேல், உறுப்பு தானத்தை செயல்படுத்த இயலாது.

டோனர்-ஆகப் பதிவு செய்து கொள்ள கீழ்க்கண்ட சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அணுகலாம்.
Mohan Foundation (www.mohanfoundation.org)

Shatayu- A Gift of Life (shatayu.org.in/)

Gift your organ Foundation (www.giftyourorgan.org/)

Gift a Life (giftalife.org/)

டோனர்-ஆக இன்றே பதிவு செய்வோம்.. இறந்தும் பலர் வாழ்வில் புத்தொளி கூட்டுவோம்!

– வித்யா குருமூர்த்தி

o 1

Image courtesy:

http://c1.thejournal.ie/

ஸ்டார் தோழி – 10

ஒரு தோழி பல முகம் 

10261661_772702299455580_718217909_nவித்யா குருமூர்த்தி

ஃப்ரீலான்சர் மாடல்

நான்

வித்யா… நெருங்கியவர்களுக்கு ‘விதூ’. பேச்சு வெல்லக் கட்டி… வேலைல சமத்துக் குட்டி… மனசு பாலாடைக் கட்டி. எதைச் செய்தாலும் அதுல ஒரு ‘வித்யா’சம் காண்பிக்கணும், நேர்த்தியா முடிக்கணும் என்ற முனைப்பு ரொம்பவே உண்டு. ‘லைஃப் இஸ் ஷார்ட், மேக் இட் ஸ்வீட்’ என்பது என் ஃபேவரைட் கோட். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சி மிக்கதாக மாற்றும் எதையும் செய்யும் பேராவல் கொண்டவள்.

வசிப்பது

bangalore

அவனவன் வெயிலில் புழுங்கி தவிக்கும்போது, மெனக்கெட்டு எஸ்.டி.டி. கால் போட்டு, ‘கார்த்தால 8 மணிக்கி கூட என்னா குளிரு. .. போர்வையை விட்டு வெளியே வரவே மூட் இல்லை போ’ என்று பீற்றிக் கொள்ளும் அற்புதப் பருவநிலை கொண்டபெங்களூரு. கன்னட மக்களின் ‘ஏந்ரீ சென்னாகிதீரா’ என்ற ஒரு விசாரிப்பு போதும்… உங்கள் முகத்தில் ஓர் உடனடி புன்னகையை வருவிக்க. பெங்களூரின் எவர் கிரீன் ஸ்பெஷல்: ராகி முத்தே (கேப்பையில் செய்த உணவு), சிரோட்டி, அக்கி ரொட்டி போன்ற சத்தான மற்றும் சுவையான உணவு வகைகள் , எப்போதும் மேனியைத் தாலாட்டும் இதமான தென்றல் காற்று, வருடம் முழுவதும் கிடைக்கும் வண்ணமயமான ரோஜாப் பூக்கள்… சான்ஸே இல்லை… நம்ம பெங்களூரு ராக்ஸ் .

படிப்பு

கடைசி பெஞ்ச்ல உக்காந்து கொண்டு, ‘நாங்கள்லாம் நினைச்சா ஃபர்ஸ்ட் பெஞ்ச்சுக்கு ஈஸியா வரலாம். ஆனால், நீங்கள் எல்லாம் நினைச்சால் கூட இங்க வர முடியாது’ என்று   உதார் விட்டே, முதல் வரிசை மாணவிகளை கலாய்க்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தி. எப்படியோ   பள்ளி இறுதி தாண்டினேன். டிகிரி, வணிக மேலாண்மை இளங்கலை – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்வியில். பயிற்சி வகுப்பு திருச்சியில் . பாதி நாட்கள் வகுப்பை கட் அடித்து விட்டு தோழியுடன் முக்கொம்பு, ஸ்ரீரங்கம் , சின்னக் கடைத் தெரு என்று சுற்றியதே அதிகம். பின்ன, இப்போ சுத்தாம வேற எப்போ சுத்தி பார்ப்பதாம்? வாழ்க்கை வாழ்வதற்கே!! நான் அரியர் இல்லாமல் டிகிரி பாஸ் செய்தது 8வது அதிசயம். திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பிறகு இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தின் தொலைக் கல்வியில் மார்க்கெட்டிங் முதுநிலை பட்டம்… கணவரின் சப்போர்ட் இல்லாமல் சாத்தியமாகி  இருக்காது.

குடும்பம்

என்னவர் என்னை கரம் பிடித்த தருணம், அனைத்து தேவதைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. 12 வருட மண வாழ்க்கை. நாளுக்கு நாள் இறுகும் பந்தம். பெருகும் காதல். கண் நிறைந்த கணவர். (அட நிஜமாத்தான்பா… எங்க ஆளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள்) ‘ போண்டா கண்ணா’ என்று ரொமான்ட்டிக்காகவும், சில நேரத்தில் கோவத்திலும் வம்பு இழுப்பது என் வாடிக்கை. கண்ணின் கரு மணியாய் 2 குழந்தைகள். பெரியவன் விஷ்வா. சின்னவன் விமர்ஷ். கவிதையாக ஒரு குடும்பம். ‘ஹேப்பிலி மேரிட்’ என்ற சொற்றொடர் எனக்காகவே உருவானதோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

பொழுதுபோக்கு

கோலம், சமையல், புத்தகம், முகநூல், ஏரோபிக்ஸ், நண்பர்களுடன் அவுட்டிங். ஒன்றா இரண்டா… என் பொழுதுபோக்கு லிஸ்ட் ரொம்ப பெரிசு. எனினும் நான் நாள் தவறாமல் கடைப்பிடிக்கும் சில…

கோலம்: பொழுது புலராத அதிகாலையில் கணக்காக புள்ளி வைத்து, பாங்காக இழைகளை இணைத்து பொருத்தமாக நிறங்களை நிரப்பி, கோலத்தை முடித்து தூரத்தில் நின்று ஒரு முறை நான் போட்ட கோலத்தை ரசிக்கையில் மனதில் பூக்கும் அந்த சந்தோஷம்… அழகிய உணர்வு அது.

ஏரோபிக்ஸ்: இது என் பேரார்வத்தில் ஒன்று. சீரான தாள கதியில் நடன அசைவுகளுடன் கூடிய உடற்பயிற்சி. அழகிய உடல் – உயர்ந்த உள்ளம் இவை இரண்டுமே ஆரோக்கிய வாழ்க்கையின் அடித்தளம் என்று நினைப்பவள் நான். 4 வருடமாகச் செய்யும் ஏரோபிக்ஸ் என் உடலை கட்டு கோப்பாக, அளவாக, அழகாக வைத்திருக்க உதவுகிறது. ஹை பிட்ச் மியூஸிக், உயர்த்தி போட்ட போனி, கால்களில் ஷூ , தாளம் தவறாத சீரான ஆட்டம்… என் ஹெவன்லி தருணங்களில் ஏரோபிக்ஸ் முக்கியமானது.

சமையல்: ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு… ‘Way to win a Man’s heart is through his stomach’ அதாவது ஒருவரின் மனதை வெல்ல, அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைச்சு போட்டு, வயிற்றை நிரப்புனு அர்த்தம். நன்றாக சமைக்க தெரியும் என்பது பெருமைக்குரிய விஷயமே! அது ஆண் ஆனாலும் சரி… பெண் ஆனாலும் சரி.

திருமணமான புதிதில் எனக்கு எதுவும் சமைக்க தெரியாது. ஜஸ்ட் ஜீரோ. முதல் 6-7 மாசத்துக்கு தடுக்கி விழுந்தா எங்க வீட்டுல நூடுல்ஸ் மேலத்தான் விழணும். இல்லை ஒரு சாதம் வடிப்பேன். அவ்ளோதான். (ஆனாலும் எங்க வீட்டுக்காரர் ரொம்ப பொறுமைசாலிப்பா). பிறகு கொஞ்சம் கொஞ்சமா என் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். புத்தகங்கள், டி.வி. ஷோ மூலம் புதிதாக கற்றுக் கொண்டதை வைத்து நானே எக்ஸ்‌ட்ராவாக சில விஷயங்களை கூட்டி குறைத்துப் போட்டு வித்யாசமாக சுவையாக செய்து பார்ப்பேன். இப்போதெல்லாம் சமையல் சம்பந்தமான வலைப் பூ பார்த்து புதுப் புது ரெசிபி சமைக்கிறேன். நாங்களும் அப்கிரேட் ஆயிட்டோம்ல!

ven pongal

இன்று ‘சரவண பவன் கூட நீ செய்யும் வெண் பொங்கல் முன்னாடி தோத்து போயிடும்’ என்று கணவர் சொல்லும்போதும், ‘கடையை விட நீ வீட்டுல செய்யுற ஃபுல்காதான்மா பெஸ்ட்’ என்று பையன் சொல்லும்போதும், குக்கரி குவீன் விருது பெற்ற பெருமைதான் போங்க!

என்னை கவர்ந்த பெண்கள்:

அம்மா: எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையிலும் தன்னை பற்றி சிறிதும் நினைக்காது எங்கள் நால்வரையும் மிக நல்ல முறையில் வளர்த்து வாழ்க்கை அமைத்து தந்த எங்கள் அம்மா. உடல் நலமில்லாத தந்தையை இன்முகத்துடன் அயராமல் பார்த்து பார்த்து அவர் தேவைகளை நிறைவேற்றியவர். என் பெரிய அக்கா (இப்போது தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் ) +2 எழுதும்போது, என் அம்மாவும்அவளோடு சேர்ந்து பள்ளி இறுதி எழுதி பாஸ் செய்தார். சிறந்த தையல் ஆசிரியையாக தனக்கென ஒரு கேரியரை அமைத்துகொண்டார். எவ்வளவோ பெண்களை அரசு தேர்வுக்கு அனுப்பி வேலை கிடைக்க காரணமாகி இருந்திருக்கிறார், இந்த உதாரண மனுஷி.

terasa

அன்னை தெரெஸா: அல்பேனியாவில் பிறந்தவர். ‘மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி’ என்று இந்தியாவில் ஓர் அமைப்பை நிறுவி, இங்குள்ள ஏழை எளிய மற்றும் நோய் வாய்ப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு என தன்னை அர்ப்ணித்து கொண்ட தாயுள்ளம். அவரின் பொன் மொழிகளில் எனக்கு பிடித்தது மற்றும் நான் கடைப்பிடிப்பது ‘கஷ்டத்தில் இருப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட, உதவிடும் கைகள் உயர்ந்தவை.’

முகநூல் அலப்பறை

‘எனக்கு முகநூல் ஐடி இல்லை’ என்று யாராவது சொன்னால், நிச்சயம் அவரை வேற்றுக் கிரகவாசி போல பார்க்கும் காலம் இது. முகநூலை நாம் எந்த அளவு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது. நான் ஏதோ இருக்கட்டும் என்று ஆரம்பித்த முகநூல், இன்று என்னுடைய முக்கியமான பொழுதுபோக்குகளில் ஒன்று. நண்பர்களோ, உறவினர்களோ உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களை விரல் நுனியின் அருகில் சேர்த்து வைக்கும், உறவுப் பாலத்தை உறுதி ஆக்கும் முக நூலுக்கு ஒரு ஜே! நம்முடைய சந்தோஷ தருணங்களை புகைப்படங்களாக முகநூலில் பகிர்வது, மனதில் தோன்றும் எண்ணக் குவியல்களை பதிவிடும் சுதந்திரம், ஒத்த எண்ணங்களுடைய நண்பர்களின் கமென்ட்ஸ் மற்றும் ஜாலி கலாய்ப்புகள், நெடுநாள் தொடர்பு அற்றுப் போன பால்ய தோழியின் திடீர் சர்ப்ரைஸ் மெஸேஜ் இவை எல்லாம் முக நூலில் கிடைக்கும் சந்தோஷங்கள்.

நேர நிர்வாகம்

clock

என்னுடைய நாள் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும். கோலம், உடற்பயிற்சி வகுப்பு, சமையல், லஞ்ச் பேக், குழந்தையை கிளப்பி காப்பகத்தில் விட்டு விட்டு பிறகு ஆபீஸ் போவது என்று 9:30 மணி வரை சுற்றி சுழன்று வேலையை முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும்.

காலை வேளை அவசர டென்ஷன் தவிர்க்க முதல் நாள் இரவே சில விஷயங்களை ஒரு ரஃப் ப்ளான் போட்டு விடுவேன்.

அழகு மயக்கம்

‘அழகென்பது பார்ப்பவர் கண்களை (மனசை) பொறுத்தது’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. (Beauty is in the eyes of beholder). இயற்கையின் படைப்பில் எல்லாமே அழகுதான். விடியல் சூரியன், குழந்தையின்   மழலை, யானைக்குட்டி, இளம் தளிரின்   பசுமை, தீப ஆராதனையில் ஜொலிக்கும் இறைவனின் முகம், பால்கனியில் இருந்து பார்க்கும்போது சற்று தூரத்தில் அந்தரத்தில் போவது போல தோற்றம் அளிக்கும் மெட்ரோ ரயில், நெருக்கமாக கட்டப்பட்ட ரோஜாச் செண்டு – நான் ரசிக்கும் ஒவ்வொரு விஷயமும் அழகு.

ஜாதி மல்லி மணம், வைரமுத்து கவிதை, சுதா ரகுநாதனின் குரலில் ‘கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி…’, என் குட்டிக் குழந்தையின் ‘வித்தாம்மா’ என்ற அழைப்பு – இவை எல்லாமே என் மயக்கக் காரணிகள்.

புத்தகங்கள்

kurai1

நம்பொழுதுகளை உயிர்ப்புடன் ஆக்க வல்லவை… நம்மை யாரென நமக்கு உணர்த்தும் கையடக்க போதி மரங்கள். சுஜாதா, கல்கி, சேத்தன் பகத் , கண்ணதாசன், கோபிநாத், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மசாரியார், தபூ ஷங்கர் என எல்லா தரப்பு எழுத்துகளும் என் லைப்ரரியில் உண்டு. எனினும் எழுத்து சித்தர் பாலகுமாரனின் படைப்புகளுக்கு நான் தீவிர ரசிகை. என் புத்தக அலமாரியில் அதிகம் இருப்பதும் அவர் படைப்புகளே. மனித மனத்தில் தோன்றும் உணர்வுகளின் பரிமாணங்களை புட்டு புட்டு வைக்கும் வலிமையான எழுத்துகளின் சொந்தக்காரர் அவர். பாலகுமாரன் படைப்புகளில்   மிகவும் பிடித்தவை… ‘புருஷ வதம்’, ‘என் கண்மணி தாமரை’, ‘அப்பம் வடை தயிர் சாதம்’, ‘இதய கோவில்’, ‘தங்கக்கை’. ‘உடையார்’ எழுதியது அவரது வாழ்நாள் சாதனை எனில் அது படிக்கக் கிடைத்தது நாம் பெற்ற வாழ்நாள் பேறு.

குட்டி குட்டி சந்தோஷங்கள்

 • பால்கனி தோட்டத்தில் மலரும் அடுக்கு மல்லி.
 • அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாகி சோர்வாக வீட்டுக்கு வரும்போது, கணவரின் கை வண்ணத்தில் தயாராகி சூடாக டேபிளில் காத்திருக்கும் டிபன்.
 • நான் சொல்லாமலே தானாகவே வீட்டுப் பாடம் செய்யும் என் மகன்
 • எதிர்பாராத வேளையில் கிடைக்கும் மாமியாரின் பாராட்டு (ஹி ஹி… இது கொஞ்சம் இல்லை ரொம்பவே ரேர் தான்! ).
 • திடீரென ஒரு மூடு வந்து மாற்றிக்கொள்ளும் புது ஹேர் ஸ்டைல், என் முகத்துக்கு கச்சிதமாக அமைந்து போவது…
 • அவ்வப்போது கிறுக்குத்தனமான போஸ்களில் நான் எடுக்கும் ஸெல்ஃபி.

படிக்க…

ஸ்டார் தோழி – 1

ஸ்டார் தோழி – 2

ஸ்டார் தோழி – 3

ஸ்டார் தோழி – 4

ஸ்டார் தோழி – 5

ஸ்டார் தோழி – 6

ஸ்டார் தோழி – 7

ஸ்டார் தோழி – 8

ஸ்டார் தோழி – 9

Image courtesy:

http://www.bangalorecaterers.com

http://hotoffthestove.files.wordpress.com

http://i1.tribune.com.pk

http://www.wallpapermania.eu