நூல் அறிமுகம் – 2

வேண்டுவன நல்கும் விரத பூஜைகள் 

 book490 துன்பம் வரும் போது துவண்டு போகும் மனிதர்கள் சரணாகதி அடையும் இடம் இறைவன் சன்னிதானம். இன்னலில் சிக்கியிருக்கும் தருணங்களில் யார் என்ன சொன்னாலும் அதைச் செய்து பரிகாரம் தேட முயற்சிப்பார்கள். கடற்கரையோரக் கோயில், மலை மேல் அமைந்திருக்கும் முருகன் சன்னதி, நவக்கிரகத் தலங்கள் என்று எதையாவது சொல்லி, எந்தத் திசையில் கை காட்டினாலும் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவார்கள்… மனமுருகப் பிரார்த்திப்பார்கள்… பூஜைகள் செய்வார்கள்… விரதமிருப்பார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை துன்பம் அகல வேண்டும், இன்பம் சூழ வேண்டும்! அந்த வகையில் இந்துமத மரபில் விரத பூஜைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. முறையாக விரதமிருந்து, பூஜை செய்தால் அதற்கேற்ற உன்னத பலனும் உண்டு. இந்நூலில் ஐந்து விரத பூஜைகள், அவற்றுக்கான அடிப்படை, செய்யும் முறை அனைத்தையும் தொகுத்து விரிவாக விளக்கியிருக்கிறார் எழுத்தாளர் அனுராதா ரமணன்.

‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’, ‘கேதார கௌரி விரதம்’, ‘அகண்ட தீப பூஜை’, ‘ஆஞ்சநேய பூஜை’, ‘சந்தோஷி மாதா பூஜை’ என ஐந்து முக்கிய பூஜைகள் இந்நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ‘தடைகள் விலக, கல்வி சிறக்க, செல்வம் பெருக, மணப்பேறு வாய்க்க, மகப்பேறு கைகூட, தம்பதியர் ஒற்றுமை ஓங்க, பகைவர் நண்பராக எனக் கவலைகள் அனைத்துக்கும் உரிய பரிகாரங்களை உற்ற தெய்வத்துக்குச் செய்து பூஜித்தால் நிச்சயம் பலன் கிட்டும்’ என்று நூலின் முன்னுரையில் சொல்கிறார் இதன் ஆசிரியர்.

ஒவ்வொரு விரதத்துக்கும் அடிப்படையான ஒரு பின்னணி உண்டு. ‘கேதார கௌரி விரதம்’ அன்னை உமா மகேஸ்வரிக்கு கௌதம முனிவரால் உபதேசம் செய்யப்பட்டதாம். இது போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இந்நூலில் இடம் பிடித்திருக்கின்றன. எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் பூஜைகளும், அவற்றுக்கான விளக்கங்களும், முக்கியத்துவமும், பலன்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. விரத பூஜைகளைக் கடைப்பிடித்து வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவோம்.

***

வேண்டுவன நல்கும் விரத பூஜைகள்

தொகுத்தவர்: அனுராதா ரமணன்

வெளியீடு: தங்கத்தாமரை பதிப்பகம்.

விலை: ரூ.25/-

முகவரி: 37, கால்வாய்க்கரைச் சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை – 600 020.

தொடர்புக்கு: +91 73057 76099 / 044-2441 4441.

மின்னஞ்சல்: mail2ttp@gmai.com