எச்சில் ஊறும்

Onions 

காய்கறி மார்கெட்டுக்குள் கால் வைக்கும் போதெல்லாம் 

மனச்சிதைவுக்கு ஆளாக நேர்கிற பயம் தொற்றிக்கொள்கிறது 

 

கிலோவுக்கு விலைசொன்ன காலம்போய் 

கால்கிலோவுக்குச் சொல்வதைக் 

கற்றுக்கொடுக்கிறது காலம் 

கருணையுள்ள கடைக்காரர்களுக்கு. 

 

கடைக்காரர்களின் விடாய்ப்பையும் சடாய்ப்பையும் மீறி 

விரலழுத்திக் காய்கறிப் பொறுக்க ஒப்பவில்லை மனம். 

“காய் பார்த்துப் பொறுக்க தெரவிசிருக்கா”வென 

ஹேமாவதி எத்தனை முறை கடிந்துகொண்டாலும் 

எதிர்க்கட்சியில் இருக்கும்போது எதிர்க்கவும் 

ஆளுங்கட்சியாகிறபோது மேலும் உயர்த்தவும் 

அதே மனிதர்களின் குணாம்சத்தை 

வெவ்வேறு விதமாய் வசீகரித்துவிடுகிறது 

“விசித்திர நெட்டையன்” விலைவாசி!

 

காலாகாலத்துக்கும் நடக்குமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தைக் 

காணமுடியாமல் கட்டப்பட்டிருக்கும் 

கடவுளின் கண்கள்!

 

ஏழாவது நாளாக இன்றைக்கும் 

வாங்காமலேயே வந்துவிட்டேன் 

உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல்போகும் வெங்காயத்தையும் 

விரல் பட்டால் நசுங்கிவிடும் தக்காளியையும்.

 

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் 

தோ… இந்தா… என்று தள்ளித் தள்ளிப் போடுவதோ 

ஆசையாய் அப்பி அறைந்து சாப்பிட்டத் தக்காளிச் சட்டினியை!

– நா.வே.அருள் 

 Tomatoes

Image courtesy: .wikimedia.org/wikipedia/commons