ப்ரியங்களுடன் ப்ரியா – 12

என் வீட்டுத் தோட்டத்தில்…
garden8 garden7 garden6 garden5 garden4 garden3 garden1 garden
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி என்னை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார் ..
இயற்கை… நம்ம எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம் .. நாகரிக வாழ்கையில் நவீன கோமாளியாக நாம் மாற ஆரம்பித்த பின்னர் இயற்கை மீதான காதல் நம்ம எல்லோருக்கும் ரொம்ப குறைஞ்சு இருக்கு… ஒரு வினாடி நின்றால் கூட நம்மை 100 பேர் வென்றுவிடுவார்கள் என்று காலத்தின் பின்னே நாம் ஓடினாலும் நமக்கு என்று நம்மை சற்று இளைப்பாற நமது தினசரி வாழ்வில் ஒரு அங்கம் எல்லோருக்கும் வேண்டும். அது நம் மனதில் மகிழ்ச்சி விதைப்பதாக  இருக்க வேண்டும் என்பதே எனது இந்த பதிவின் நோக்கம்…
தோட்டம்… இன்றைய வேதியியல் கலந்த வேளாண் உலகில் எந்த கலப்பும் இல்லாமல் நாமளே உற்பத்தி செஞ்சு சாப்பிடுவதும் ஒரு வரம்தானே ? தோட்டம் போடுவதில் ஆர்வம் இல்லாதவர்களும் இனி கொஞ்சம் நேரம் ஒதுக்கலாமே…ஆர்வம் இல்லையென்றாலும் எல்லோருக்கும் இது அவசியம் என்பது காலத்தின் கட்டாயம்.. ‘மண்ணுல கை வச்சிட்டு, தினம் தண்ணி ஊத்திட்டு இது பெரிய திட்டம்  நமக்கு சரி வராது’னு சொல்றவங்க முதலில் இதை  படிங்க…ஏன்னா முக்கியமா இது உங்களுக்காகவே…. நமக்காகவே ..
நம்ம   எல்லோர் வீட்டிலும்  எது இருக்கோ இல்லையோ கண்டிப்பா ‘டென்ஷன்’ இருக்குது .  யார்கிட்ட பேசினாலும் இந்த டென்ஷன் என்ற வார்த்தை சொல்லாத ஆள் இல்லை…காரணம் இன்றைய பரபரப்பான சூழல்…!! இப்படி எல்லோருமே எதையோ நோக்கி ஓடிட்டே இருந்தா நம்மளை  யார் கவனிக்கிறது…உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாக படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா அது தோட்டம் போடுவதுதான்…காய்கறிகள், பூக்களை பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம் மனதை சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்…!!
ரசாயன உரங்கள் போட்டு வளர்க்கப்படும் காய்கறிகளில் சுவையும் இல்லை சத்தும் இல்லை…நன்கு கழுவி சமைங்க அப்டின்னு சொல்றபோதே இதுல ஏதும் விஷத்தன்மை இருக்குமோனு பயம் இல்லாம சாப்பிட முடியுமா ?
நீங்க  சொல்றது எல்லாம் சரிதான்,ஆனா எங்க வீட்ல இடம் இல்லையே  என சாமார்த்தியமா தப்பிக்க முடியாது …தூங்க, சமைக்க, FB  பார்க்க, வாட்ஸ் அப் அரட்டை அடிக்க எல்லாம் நேரமும் இடமும்  இருக்குதுல அது மாதிரி இதுக்கும்  ஒரு இடத்தை ஒதுக்குவோம் …மொட்டை மாடி, பால்கனி ,தாழ்வாரம், திண்ணை, வெயில்படுற ஜன்னல் திண்டு இப்படி எவ்வளவோ இடம் இருக்கே..
வெயில் படுற மாதிரி எந்த இடம் இருந்தாலும் தோட்டம் போடலாம்…அங்கேயும் இடபற்றாக்குறை இருந்தாலும் கவலை இல்லை, அடுக்கு முறைல செடி வளர்க்கலாம்…! நீங்க மனசு வச்சு வேலைய ஆரம்பிங்க , அப்புறம் பாருங்க இவ்வளவு  இடம் நம்ம வீட்ல தானா என்று ஆச்சரியமா இருக்கும்…
அப்பாடி..   ஒருவழியா இடத்தை தயார்  செஞ்சுவிடலாம் தானே ? அப்புறம்…  விதை, எங்க வாங்க, மண், உரம், இதுக்கு என்ன பண்ணனு ஒரு தயக்கம் வருதா? தயக்கம் ஏதும் தேவையில்லை…நம்ம உடல் ஆரோக்கியம் பத்திய விசயத்துல இனியும் தயக்கம் காட்டலாமா?! ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சமாளிக்காம தைரியமா காரியத்தில் இறங்குங்க… கலக்கிடலாம்..
வீட்டிலேயே காய்கறி உற்பத்தி செய்வதை பாப்போம் ..
ஆரம்பத்துல தோட்ட கலைல நமக்கு அனுபவம் வர்ற வரை வீட்ல கிடைக்கிற விதைகளை வைத்தே பயிரிடலாம்…ஓரளவு நம்மாலும் பெரிய அளவில் காய்கறி உற்பத்தி பண்ண முடியும்னு நம்பிக்கை வந்த பிறகு வெளி கடைகளில் விதைகள் வாங்கி கொள்ளலாம். நம் சமையல் அறையில் இருப்பதை வைத்து முதலில் வேலையை ஆரம்பிங்க… உங்க வீட்டை பசுமை வீடா மாத்தாம உங்களை விடுறதா இல்ல…
தேவையான பொருள்கள்…
* மண் அல்லது சிமென்ட் தொட்டி
* பிளாஸ்டிக் அரிசி சாக்
* பழைய பிளாஸ்டிக் வாளி (அடியில் சிறுதுளை போடவும்)
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் (பாதிக்கு மேல் கட் பண்ணியது)
20 லிட்டர் பழைய மினரல் வாட்டர் கேன் பழையபொருட்கள் கடையில் குறைந்த விலைக்கு கிடைக்கும், கிடைத்தால் அதையும் யூஸ் பண்ணிக்கலாம். (HORIZONTAL OR VERTICAL ஆக எப்படியும் கட் பண்ணிக்கலாம் உங்க விருப்பம்)
ஓகே!  இதில் எவையெல்லாம் கை வசம் இருக்கிறதோ அவற்றை எடுத்து கொள்ளுங்கள். (எந்த பொருளையும் காய்கறி பயிரிட ஏற்றதாக மாற்றுவது உங்க கிரியேட்டிவிட்டியை பொறுத்தது…)வாங்கி வந்த மண் தொட்டியை ஒருநாள் முழுவதும் நீர் தெளித்து ஊற வையுங்கள். பிளாஸ்டிக் அரிசி சாக்கை வெளிப்புறமாக சுருட்டி அல்லது பாதி அளவாக மடித்து கொள்ளுங்க.
செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைக்காது. அதனால இருக்கிற மண்ணை வளப்படுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கல், குச்சிகளை எடுத்து போட்டுவிட்டு அதனுடன் காய்ந்த சாணம் கிடைத்தால்  கலந்து  வைத்து கொள்ளுங்கள்.(இல்லை என்றாலும் பரவாயில்லை), மணல் ஒரு பங்கு சேர்த்து கொள்ளுங்கள்.
காய்ந்த அல்லது பச்சை இலைகள் (வேப்பமர இலைகள் என்றால் மிகவும் நல்லது) சேகரித்து சாக்/தொட்டியின் பாதி அளவு வரை நிரப்பி பிறகு மண்ணை போட்டு நிரப்புங்கள்…இலைகள்  மக்கி உரமாகி விடும்…அதிகபடியான நீர் வெளியேற, அடிப்புறம் சிறுதுளை இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்…வேப்பங்காய்கள், கொட்டைகள் கிடைத்தால் அதை தூள் செய்து போடலாம். மிக சிறந்த உரம் இது. பூச்சி கொல்லியும் கூட !
தக்காளி, சின்ன வெங்காயம் , கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , உருளைகிழங்கு ,சேப்பங்கிழங்கு இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும்  தேடிபோக வேண்டாம் என்பது ஒரு வசதி.
புதினா, கீரை
புதினா இலைகளை பறித்த பின் இருக்கும் தண்டுகள், கீரைகளில் பொன்னாங்கண்ணி தண்டுகளை சேகரித்து தொட்டி மண்ணில் சிறிது இடைவெளி விட்டு ஆழ ஊன்றி விடுங்கள் (2 இஞ்ச் மண்ணின் உள்ளே போனா போதும்), பின் தண்ணீர் தெளித்து விடுங்கள்…வெயில் அதிகம் இருந்தால் துளிர் வரும் வரை ஒரு நாளுக்கு இரண்டு முறை நீர் தெளிக்க வேண்டும். பின் ஒருவேளை ஊற்றினால் போதும்.
தினமும் தேவையான எளிய முறையில் பயிர் செய்யும் காய்கறிகள் …
கொத்தமல்லி
கடையில் வாங்கும் போது வேருடன் இருந்தால் வெட்டி  சமையலுக்கு எடுத்தது போக வேர் பகுதியை மண்ணில் அப்படியே புதைத்து விடலாம். தண்டுக்கீரை(முளைக்கீரை) பொதுவாக வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் வளர்க்கலாம். முழு மல்லி(தனியா) விதையை இரண்டாக பிரித்து தான் விதைக்கணும்…மண்ணில் தூவி மண்ணோடு நன்கு கலந்து விடவேண்டும்…
சின்ன வெங்காயம்
வெங்காயத்தை தனி தனியாக பிரித்து மண்ணில் தலை கீழாக ஊன்ற வேண்டும்…மண்ணிற்கு  மேல் தெரிய கூடாது…வளர வளர பார்க்க அழகாக இருக்கும்…வெங்காய தாள் பழுத்து வாடுவதை வைத்து வெங்காயம் விளைந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம். (அதுக்காக சரியா தண்ணீர் ஊத்தாம வாடி போனதை வச்சு வெங்காயம் விளைஞ்சிடுச்சுனு முடிவு பண்ணிக்க படாது) சில வெங்காய செடிகளை பாதி விளைச்சலின் போதே வேரோடு பிடுங்கி நன்கு அலசி சுத்தபடுத்தி தாளோட(spring onion) பொடியாக அரிஞ்சி பொரியல் செய்து சாப்பிடலாம்..
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்கலாம் ..
இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து  சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால்  வீட்டில் வளர்த்து பயன் பெறலாம் ..
தக்காளி, மிளகாய், கத்தரி
நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும்….விதைகள் தனியே பிரியும்…பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்…
நன்கு முற்றிய கத்தரி வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
விதைக்கும் முறை
விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்…காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்…செடி முளைத்து அரை அடி உயரம்  வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்றாக நட்டு விட வேண்டும்.
தக்காளி காய்க்க தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.
பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும்.
பந்தல் அமைத்தல்
தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கை பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி ஒரு ஆறு  அடி  விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்…கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 16  இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டி கொண்டே வர வேண்டும்.  பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்…இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், .
கயிறுக்குப்  பதிலாக  கம்பிகளையும் உபயோகபடுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம்.
மற்றொரு முறையிலும்  பந்தல் அமைக்கலாம்
சிமென்ட் பையில்  மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை  ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்…இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும்  கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்…மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும்  இருக்கும்.
நம்ம தோட்டத்துக்கு நாமே உருவாக்கும் உரங்கள்…
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம்.
வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.
இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.
இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும்.இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும்.
இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும்.
பிற  கழிவுகள்…
மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும்.
அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.
எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.
ஆக்சிஜன் அவசியம்
கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும்.
எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது… இவை மட்டுமே மிக சிறந்த இயற்கை உரங்கள்.
நீர் பற்றாக்குறையை சமாளிக்க சில முறைகள்…
நாம் பயன்படுத்திய கழிவு நீரையே சுத்தம் செய்து செடிகளுக்கு விடலாம் ,
கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் இருக்கும் …இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல… எனவே இதை  சுத்திகரிக்கலாம்…
சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி நீள அகலத்துக்கு ஒரு  தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்…விரைவில் வளர்ந்து  விடும்…கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்…நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்… கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்…சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்…
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி மேலே கூறிய அதே மெத்தட்தான். கருங்கல் ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும்.  சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.
தோட்டம் நன்கு உருவாக சில சிறப்பு முறைகளை காண்போம் ..
தரையில் கனமான  பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் உருவாக்கலாம் … தரையில் நீர் இறங்கி  விடும் என்ற பயம் இல்லை , ஒன்றும் ஆகாது…இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சியும்  கிடைக்கும் ..
* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் நம்மை போல ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்…
* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்…சாணி  கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லைஎன்றால் சாதாரண தண்ணீர் போதும்.
* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறலாம்
நம் மீது அக்கறையும் கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்து  நாமே  பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில சங்கடங்கள் சமாளித்து தான் ஆக வேண்டும்.
இயற்கையோடு இணைந்து புதுயுகம் படைப்போம். நம்மை நாமே செதுக்கி கொள்ள நமக்கு கிடைத்த வாய்ப்பாக தோட்டம் கருதுவோம் …
இளங்காற்றில் 
அசைந்தாடும் தென்னை …
இறகு சிமிட்டி எனை அழைக்கும் 
வண்ணத்து பூச்சி …
பனித்துளியை ஈன்ற 
ரோஜா …
என் புன்னகையை 
புகைப்படமாக்கும் 
மின்மினி பூச்சிகள்…
வண்டுகளின் களைப்பு நீங்க
தேன் குவளையேந்தும் மொட்டுக்கள் …
கிளைகளின்  இடையில் 
நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்…
இசைத்த  பறவைகளுக்கு
பாராட்டி கிளைத்தட்டும் மரங்கள்…
இவை போல இன்னும் பல 
வர்ணம் குழைத்துப் பூசுமெனது
வாழ்விற்கு …
என் வீட்டு தோட்டத்தில் 
இவையெல்லாம் கேட்டு பார்!
– ப்ரியா கங்காதரன்
p4

கீர… கீர… கீரேய்!

ஹோம் கார்டன்!

“காய்கறிகள் வாங்கச் செல்லும் நம்மை முதலில் கவர்ந்து இழுப்பது பச்சைப்பசேல் கீரைகள்தான். கீரை வளர்ப்பது மிக எளிது. மிகக்குறுகிய காலத்தில் அறுவடை செய்து விற்பனை செய்துவிடலாம். இதில் ஓர் அதிர்ச்சிச் செய்தியும் உண்டு. தமிழகத்தின் பல புறநகர் பகுதிகளில், கழிவுநீரில் சுகாதாரமே இல்லாமல் கீரை வளர்த்து, விற்பனை செய்து காசு பார்க்கிறார்கள். இதனால், நன்மை செய்ய வேண்டிய கீரையே பல நேரங்களில் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற பாதகங்களை ஏற்படுத்தி விடுகின்றன.

இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில், கீரைகளை நம் வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். தானியக்கீரை போன்றவற்றை பெரிய பைகள் அல்லது தொட்டிகளிலும், அரைக்கீரை போன்றவற்றை கீரை படுகைகளிலும், பாலக் கீரையை உயரமான பைகளிலும் வளர்க்கலாம். கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சிறிய பைகளில் வளர்க்கலாம். கீரை விதைகளை நர்சரியில் வாங்கி விதைக்கலாம். அதிகபட்சம் 15 தினங்களில் கூட அறுவடை செய்யும் கீரை வகைகள் உள்ளன’’ என்று ஆர்வமூட்டுகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.

vincent

உயிர்ச் சத்தான வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், இவை தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கின்றன. அதனால் கீரை ‘பாதுகாக்கும் உணவு’ (Protective Food) என்றழைக்கப்படுகிறது.

தானியக்கீரை

இது மிக வேகமாக வளரக்கூடிய தானிய வகையைச் சார்ந்தது. இலைகள் கறியாகவும், விதைகள் தானியமாகவும் நேரடியாகப் பயன்படும். தனியாக பயிர் செய்தால் 4.5 டன்/ஹெக்டர் அளவுக்கு கீரை மகசூலும், 12 டன்/ஹெக்டர் அளவுக்கு தானிய மகசூலும் பெறலாம். ஆன்டீஸ் மலைத் தொடரில் வாழ்ந்த பண்டைய மக்கள் இதனை ‘புனித தானியம்’ எனவும், வட இந்திய மக்கள் ‘ராம்தானா’ அல்லது ‘கடவுளின் தானியம்’ என்றும் அழைக்கின்றனர். வெப்பத்தை தாங்கி, பல்வேறு மண் வகைகளிலும் நன்கு வளரும். விதைப்பு, அறுவடை மற்றும் உர நிர்வாகம் கிட்டத்தட்ட சோளத்துடன் ஒத்துள்ளது. 2 அடி முதல் 8 அடி உயரம் வரை வளரக்கூடிய இக்கீரை, மிகக்குறுகிய வளர்ச்சி பருவம் (80 நாட்கள்) கொண்டது.

dhaniya keerai

  • ஊட்டச்சத்து நிறைந்த இத்தானியக்கீரை ரொட்டி, பிஸ்கெட், ஐஸ்க்ரீம், பேக்கரி தயாரிப்புகளில் பயன்படுகிறது. வட இந்தியாவில் தானியக் கீரையிலிருந்து செய்யப்பட்ட ‘லட்டு’ மிகப்பிரபலம்.
  • 63% கார்போஹைட்ரேட் மற்றும் 6-17.6% புரோட்டீன் நிறைந்த தானியக்கீரை வேறு பல தானியங்களையும் விட சிறந்தது.
  • நார்ச்சத்து, கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற கீரைகளை விடவும் சிறப்பானது.
  • குறைந்து வரும் மழையளவு, வெப்பத்தைத் தாங்கி வளரும் திறன், எல்லா மண் வகைகளிலும் வளரும் திறன் என பயிர் செய்வதற்கு ஏற்ற சூழலை தருவதோடு சத்துமிக்க கீரை / தானியமாகவும் உள்ளது. சந்தை வாய்ப்பும் அதிகம் இருப்பதால் தமிழகத்தில் இதனை பயிர் செய்ய முயற்சி மேற்கொள்ளலாம்.
  • பெரிய வகை கீரைகளை பெரிய பைகளிலும் சிறிய கீரைகளை சிறிய தொட்டி அல்லது கீரைப்படுகையிலும் வளர்க்கலாம்.

முருங்கைக்கீரை

நமது நாட்டின் தாவரச் செல்வங்களை நாம் சிறப்பாகக் கருதாவிட்டாலும், மற்ற நாடுகள் அதன் மகத்துவம் அறிந்து பயன்படுத்துகின்றனர். முருங்கையின் தாயகம் இந்தியாதான் என்றாலும், இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு அதிகம். அங்கு முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாகவே கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்களுக்கும் குழந்தைகளுக்கும் தேவையான சத்துகளை குறைந்த செலவில் எளிதாக அளிக்க முருங்கைக்கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். இக்கீரை 300 வித நோய்களை குணப்படுத்துவதாகவும், நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்துவதாகவும் கண்டறிந்துள்ளனர். உடலை உறுதி செய்வதில் முருங்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

drumstick leaves banner

100 கிராம் முருங்கை இலையில்…

  • ஆரஞ்சில் இருப்பதைவிட 7 மடங்கு வைட்டமின் சி உள்ளது.
  • கேரட்டில் இருப்பதைவிட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது.
  • பாலில் இருப்பதைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது.
  • பாலில் இருப்பதைவிட 2 மடங்கு புரோட்டீன் உள்ளது.
  • வாழைப்பழத்தில் இருப்பதைவிட 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது.
  • பசலைக்கீரையில் இருப்பதைவிட 2 மடங்கு இரும்புச்சத்து உள்ளது.

இவ்வளவு பயனுள்ள முருங்கையை கீரைக்காகவே மாடியில் வளர்க்கலாம். வறட்சியையும் தாங்கி வளரும். செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேர்ப் பகுதியில் நீர் செல்லுமாறு சிறுகுழாய் அமைத்தால் நீரின் தேவையை வெகுவாகக் குறைக்கலாம். கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும், அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதலில் காப்பது சற்று கடினம்… காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும். 15 அல்லது 20 நாட்களுக்கு ஒருமுறை கீரை எடுக்கலாம். சில மண்புழுக்களையும் ‘இலைமக்’கும் உபயோகித்தால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

கீரை மகத்துவம்

அரைக்கீரை: தாது விருத்தி செய்யும். ரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத நோய் தணிக்கும்.

அகத்திக்கீரை: பித்தம் குணமாகும். ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். மலத்தை இளக்கி வெளியேற்றும். வைட்டமின் ஏ மற்றும் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண் பார்வை தெளிவையும், எலும்பு பலமும் கொடுக்கும்.

தவசு முருங்கை: மூக்கு நீர்பாய்தல், இரைப்பு, இருமல் நீங்கும். கோழை அகற்றும் குணமுடையது.

லஜ்ஜை கெட்ட கீரை: சித்தர்கள் இக்கீரையை ‘வாத மடக்கி‘ என்று கூறுகிறார்கள். மூட்டுவலியும் மூட்டுவீக்கமும் நீங்கும். வாயுத் தொந்தரவுகள் குறையும்.

ஆரைக்கீரை: அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தக் கோளாறுகளையும் போக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை (பச்சை): மேனி பிரகாசிக்கும். தினசரி இக்கீரையை சூப் வைத்து அருந்தினால் உடல் வலு பெறும்.

மணத்தக்காளி கீரை: குடல்புண், வாய்ப்புண் ஆற்றும் சக்தி உள்ளது. சிறிய வெங்காயத்துடன் சமைத்து சாப்பிட்டால் புண்கள் விரைவில் ஆறும்.

முளைக்கீரை: அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுடி நரைக்காமல் இருக்கும்.

கறிவேப்பிலை: நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் இளமைத்தோற்றம் நிலைத்து நிற்கும்.

பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு): பூண்டு சேர்த்து வதக்கி உணவுடன் உண்டால் மூலநோய், வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

புதினா: இரும்புச்சத்து இருப்பதால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, புதிய ரத்தத்தையும் உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும். எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கிப் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.

Image courtesy:

http://www.astroulagam.co

வீட்டில், மாடியில் தோட்டம் வளர்க்க சிறப்பு பயிற்சி முகாம்!

யற்கை முறையில் வீட்டில் தோட்டம் அமைக்க வேண்டும் என்பது எத்தனையோ பேரின் தீராக் கனவு. வீட்டில் அதற்கு வசதி இல்லாதவர்கள், மொட்டை மாடியில் கூட தோட்டம் அமைக்கலாம். இது குறித்துக் கேள்விப்பட்டிருந்தாலும், பார்த்திருந்தாலும்கூட அதற்கான வழிமுறை பலருக்கும் தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு உதவுவதற்காகவே கோவையில் நடக்கிறது ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்! ‘குங்குமம் தோழி’ இதழின் ‘ஹோம் கார்டன்’ பகுதியில், ஆலோசனைகளை வழங்கி வரும் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட் பல அரிய தகவல்களையும் பயிற்சிகளையும் வழங்க இருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

விவரங்கள்… 

Image