ஆட்டமும் நானே… பாட்டும் நானே!

Image

‘தோல் பாவைக் கூத்து’ என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? ‘தசாவதாரம்’ படத்தில் ‘முகுந்தா… முகுந்தா…’ பாடலில் அசின், ஒரு சின்ன திரைக்குப் பின்னாலிருந்து பொம்மைகளை ஆட்டிப்பாடுவாரே… அதேதான் இது. பார்ப்பதற்கு சுவாரசியமாகத் தெரிந்தாலும் மகா சிரமமான கலை இது. கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட தோல்பாவைக்கூத்துக் கலையில் 50 வருடங்களாக தனியொரு பெண்ணாக சாதித்துக் கொண்டிருப்பவர் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜெயா செல்லப்பன். ஆண்களே தொடத் தயங்கும் மிகக் கடினமான, சவாலான கலையான தோல்பாவைக் கூத்தை 7வது வயதிலிருந்து இவர் செய்து வருகிறார். முற்றிலும் அழிவதற்கு முன்பாக இந்தக் கலையைக் காப்பாற்றி விட வேண்டும் என்கிற வேகம் இவரது பேச்சில் தெரிகிறது.

Image

“எங்கப்பா தோல் பொம்மைக் கலைஞர், திடீர்னு அவருக்கு தொண்டை கெட்டுப் போய், சுத்தமா பாடவே முடியலை. வேற தொழிலும் தெரியாது. வயித்துப் பிழைப்புக்கும் வழியில்லை. அப்படியும் ஒரு முறை துணிஞ்சு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணிட்டாரு. கூட்டம் கூடிருச்சு. பாட முடியலை. ஓடி விளையாடிக்கிட்டிருந்த என்னைக் கூப்பிட்டு, மடியில உட்கார வச்சுப் பாட வச்சாரு. அன்னிக்கு ஆரம்பிச்சதுதான் இந்தப் பித்து. அப்பாவுக்கு முந்தி, பாட்டனார், முப்பாட்டனார்னு எல்லாரும் இதே கலைல இருந்தவங்கதான். நான் களமிறங்கின பிறகு தோல் பொம்மையில சொல்லாத கதையே இல்லை. ராமாயணம், மகாபாரதம், நல்லதங்காள், அரிச்சந்திரன் மயான காண்டம், நளதமயந்தி கல்யாணம்னு நிறைய பண்ணிருக்கேன், தோல் பொம்மை ஆட்டிக்கிட்டிருந்த நான், பிறகு தெருக்கூத்துலயும் வேஷம் கட்ட ஆரம்பிச்சேன்.

காலம் மாற, மாற, தோல் பொம்மையாட்ட மோகம் குறைஞ்சு, ஜனங்க கூத்து பார்க்கத்தான் ஆசைப்பட்டாங்க. கூத்து கட்டறதுல வேலை சுலபம். ஆனா, தோல் பொம்மை ஆட்டறது ஆம்பளைங்களாலயே தாக்குப் பிடிக்க முடியாத கலை. பத்து பேர் கஷ்டத்தையும் ஒரே ஆள் சமாளிக்கணும். கதையில் வர்ற அத்தனை கதாபாத்திரத்துக்கும் ஒரே ஆளா நானேதான் குரலையும் மாத்தி, பொம்மையும் ஆட்டணும். நாலு பக்கமும் திரை போட்ட ஒரு மறைவான பகுதிக்குள்ள காலை மடிச்சு குத்துக்கால் போட்டு உட்கார்ந்து, ஒரு கைல கட்டையும், இன்னொரு கைல பொம்மையும் பிடிச்சுக்கிட்டு, கதாபாத்திரத்துக்கேத்தபடி சரியா குரலை மாத்திப் பேசிப் பாடவும் செய்யணும். உடம்பு ரொம்பவும் பலகீனமாகிப் போகும். மூல நோய் வரும். இத்தனையையும் சகிச்சுக்கிட்டு ராப்பகலா பாடுபட்டாலும், கூரையைப் பிச்சுக்கிட்டு காசு கொட்டாது. ஏதோ வயித்து ஈரம் காயாமப் பார்த்துக்கிற அளவுக்குத்தான் வரும்படி.

Image

எனக்கு 7 பொம்பளைப்புள்ளைங்க, ரெண்டு பசங்க.. பொண்ணுங்களை கட்டிக் கொடுத்தாச்சு. எனக்குப் பிறகு ஒருத்திகூட இந்தக் கலையை எடுக்க விரும்பலை. ஒரு மகனுக்கு ஆர்வம் இருக்கு. என் கணவரோட தம்பி, விருப்பப்பட்டு இந்தக் கலையைக் கத்துக்கிட்டு செய்திட்டிருக்காரு. நகரங்கள்லதான் தோல் பொம்மையாட்டம்னா என்னனே தெரியலையே தவிர, சில கிராமங்கள்ல இன்னும் அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. தோல் பொம்மையாட்டம்தான் வேணும்னு கேட்டு வர்றவங்களும் இருக்காங்க” என்று சொல்லும் ஜெயாவுக்கும் சமீப காலமாக உடல்நலம் சரியில்லை. பக்கவாதம் வந்த காரணத்தினால் கலையைத் தொடர முடியாத சோகம்.

Image

“அரசாங்கம் எங்களை மாதிரிக் கலைஞர்களுக்கு பென்ஷன், உதவித்தொகை, நலத்திட்டமெல்லாம் தர்றதா கேள்விப்பட்டு, அஞ்சு வருஷமா எழுதிப்போடறோம். எந்த நல்லதும் நடக்கலை. இந்தக் கலை என் உசிருக்கும் மேல. என்னோட இது மறைஞ்சிடக் கூடாதுங்கிறதுதான் என் விருப்பம். தெருக்கூத்து பயிற்சிப் பட்டறைல, விருப்பமுள்ளவங்களுக்கு இலவசமா இந்தக் கலைகளை சொல்லித் தர்றதா வாக்களிச்சிருக்காரு ஹரி கிருஷ்ணன்னு ஒரு கலைஞர். என்னால இப்ப நிகழ்ச்சிகள்தான் பண்ண முடியாதே தவிர பயிற்சிக்கு வர்றவங்களுக்கு பாடவும் அடவுகளும் சொல்லித் தர முடியும்”  – நெகிழ வைக்கிறார் ஜெயா.

– ஆர். வைதேகி