ரசனை போதும்!

Image

உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது தாஜ் மகால். ‘டிரிப் அட்வைசர்ஸ்’ என்ற சர்வதேச நிறுவனம் 2013ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க விரும்பும் முக்கியமான 25 இடங்களை ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டிருக்கிறது. முதல் இடம் பெரு நாட்டில் இருக்கும் மச்சு பிச்சுவுக்கும், இரண்டாம் இடம் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயிலுக்கும் கிடைத்திருக்கிறது. உலக அதிசயங்களில் ஒன்று, பழமையானது, அழகு மிளிர்வது, காதல் சின்னம் என பெருமைகளுக்கு உரிய தாஜ் மகாலுக்கு கிடைத்த மற்றொரு கௌரவம் இது!

அந்த சரித்திரச் சின்னத்துக்குப் போய் வந்த இருவர், தாஜ் மகால் குறித்த தங்கள் பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்…

கீதா பிரேம்குமார் – இயக்குநர், வெக்டர் இண்டோஜானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்.

Image

ஒரு நல்ல கலைப் படைப்பை இப்படி தர நிர்ணயம் பண்றதை என்னால ஏத்துக்க முடியலை. அதுவும் உலக அளவில் எனும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு. படிச்சவங்கள்ல இருந்து பாமரர்கள் வரைக்கும் ஒவ்வொருத்தரும் ரசிக்கிற கலைப் படைப்பு தாஜ் மகால். ரசிப்புத் தன்மைக்கு அளவு கோல் கிடையாது. இப்படி ‘இதுக்கு முதல் இடம்… இதுக்கு மூணாவது இடம்’னு ஆய்வு செஞ்சு லிஸ்ட் போடுறது கூட ஒரு வகையில பரபரப்பை ஏற்படுத்துற வியாபார தந்திரம்தான். ராஜராஜசோழன் கட்டிய கல்லணையையோ, திருக்குறளின் பெருமையையோ மார்க் போடுறதுக்கு நாம யாரு? என்னைப் பொறுத்த வரைக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்குங்கறதுக்காக யாரு வேணாலும் சொல்றதை ஏத்துக்க முடியாது. நான் தாஜ் மகாலுக்குப் போயிருக்கேன். அது கலை நயத்தோட இருக்குற ஓர் அற்புதம்தான். ஆனா, அந்தக் கட்டடம் கட்ட எத்தனை பேரோட உழைப்பு தேவைப்பட்டிருக்கு? 22 ஆயிரம் பேருக்கு மேலன்னு சொல்றாங்க. தாஜ் மகால் கட்டி முடிக்கப்பட்டதும் அதைக் கட்டின முக்கியமான தொழிலாளிகளின் கண்ணைக் குருடாக்கி, கைகளை வெட்டினதா எல்லாம் சொல்றாங்க. ஏன்னா, திரும்ப அதே மாதிரி ஒரு கட்டடம் கட்ட அவங்க உதவி செஞ்சுடக் கூடாதுங்கறதுக்காக. ஒவ்வொரு இடத்திலும் ஒரு எனர்ஜி லெவல் இருக்கும்னு சொல்லுவாங்க. எனக்கென்னவோ தாஜ் மகாலுக்குப் போன போது நெகட்டிவ் எனர்ஜிதான் கிடைச்சுது. ஒரு சமாதிக்குப் போன உணர்வுதான் ஏற்பட்டது.

*****************************

பத்ரி சேஷாத்ரி – எழுத்தாளர், பதிப்பாளர்

Image

நான் மூன்று முறை தாஜ் மகாலைச் சென்று பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை எண்ணி வியந்துபோவது வழக்கம்.
தாஜ் மகாலைப் படமாக, பொம்மையாகப் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு அது நிஜத்தில் எவ்வளவு பெரிய ஒரு கட்டடம் என்பது வியப்பைத் தரும். அதன்முன் நாம் ஒரு சிறு துரும்புபோலக் காட்சி அளிப்போம்.
உலகின் சுற்றுலாத் தளங்கள் பற்றிய ஒரு இணையக் கருத்துக் கணிப்பில் தாஜ் மகால் மூன்றாவது இடத்தில் வந்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மாச்சு பிச்சு, கம்போடியா நாட்டின் அங்கோர் வாட் ஆலயம் ஆகிய இரண்டுக்கும் பிறகு அடுத்த நிலையில் உள்ளது முகலாயப் பேரரசர் ஷா ஜஹான் கட்டிய தாஜ் மகால்.
தாஜ் மகாலை அவன் தன் காதல் மனைவி மும்தாஜுக்காகக் கட்டினான் என்றுதான் நாம் புத்தகத்தில் படித்திருப்போம். ஃபேஸ்புக்கில் பலர் அப்படியொன்றும் காதலும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை, அவன் என்று ஒரு பெரிய பட்டியலைக் காண்பிப்பர். ஷா ஜஹான் தன் மனைவியை எப்படி நடத்தினான், அவள் மூலம் எத்தனை பிள்ளைகளைப் பெற்றான், அவனுக்கு வேறு எத்தனை மனைவிகள் இருந்தனர் என்பது பற்றி எனக்கு அவ்வளவாகக் கவலை இல்லை. ஆனால், அவன் கட்டுவித்த தாஜ் மகால் இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. அதில் நாம் தெரிந்துகொள்ளப் பல விஷயங்கள் உள்ளன.

Image
முகலாயர்களின் கட்டடக் கலையை தில்லி முதல் லாகூர் வரையுள்ள விரிந்த முகலாய சாம்ராஜ்யத்தில் பல இடங்களில் காணலாம். இவை அக்பர், ஜஹாங்கீர், ஷா ஜஹான், ஔரங்கசீப் ஆகிய முகலாயப் பேரரசர்களால் கட்டப்பட்டன. அக்பர் கட்டிய புலந்த் தர்வாஸா, பஞ்ச் மகால் ஆகியவற்றை தாஜ் மகாலுக்கு வெகு சமீபத்திலேயே காணலாம். லாகூர் சென்றிருந்தபோது ஜஹாங்கீர் எழுப்பிய கட்டடங்களைப் பார்த்தேன்.

ImageImage
இவை அனைத்தையும்விட ஷா ஜஹான் காலத்தில்தான் மிக அதிகமான கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. அவை பெரும்பாலும் இன்றும் நிலைத்திருக்கின்றன. இவற்றில் மிக மிக வித்தியாசமானது தாஜ் மகால்.
முற்றிலும் வெண் சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தின் பல்வேறு நுணுக்கங்களை கட்டடக் கலை அறிவற்ற என்னால் விளக்க இயலாது. முகலாயக் கட்டடங்களுக்கே உரித்த ஜாலி வேலைப்பாடுகள், சலவைக் கல்மீது செதுக்கப்பட்ட நுண்ணிய புடைப்புச் சிற்பங்கள், அரபிச் சித்திர எழுத்துகளில் மெல்லிய கருப்பில் எழுதப்பட்டு வெள்ளைக் கல்லில் இழைக்கப்பட்ட குர் ஆன் வசனங்கள், பாரசீகக் கவிதைகள், உயரமான வளைவு வாயில்கள், மாபெரும் மினாரத்துகள், மிக நன்கு அறியப்பட்ட நடுவில் உள்ள கும்பம் என்று தாஜ் மகாலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
உலகக் கட்டடக் கலையில் தாஜ் மகால் ஓர் உச்சம். ஆனால், அது இருக்கும் இடத்தைப் பராமரிப்பது என்பது விரும்பிய அளவு இல்லை. தில்லியிலிருந்து ஆக்ரா செல்லும் பாதை நான் சென்றபோதெல்லாம் நெரிசல் மிகுந்ததாக இருந்தது. இப்போது பாதையை அகலப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் ஆக்ரா நகருக்குள் நுழைந்து தாஜ் மகால் இருக்கும் இடத்துக்கு வருவதற்கே வெகு நேரம் பிடிக்கிறது. தாஜ் மகால் இருக்கும் காம்ப்லெக்ஸ் மிகப் பெரிய ஓரிடம். முழுவதுமாகச் சுற்றிப் பார்க்க அல்லது நடந்து செல்லக் கால்கள் கெஞ்சும். உங்களை அழைத்து வந்திருக்கும் வண்டி எங்கோ வெகு தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். முழு சக்தியுடன் இருந்தாலொழிய ஓர் ஓரத்தில் உட்கார்ந்துவிடுவீர்கள்.
இவ்வளவு ஆடம்பரமான ஷா ஜஹானின் கட்டடத்துக்கு முற்றிலும் மாற்றாக தாஜ் மகால் பாணியில் ஆனால் சற்றே சிறியதாகக் கட்டப்பட்ட ஒரு கட்டடம் மகாராஷ்டிரத்தில் ஔரங்காபாத் என்ற நகரில் உள்ளது. ஔரங்கசீப் தன் மனைவி தில்ரஸ் பானு பேகத்துக்காகக் கட்டிய பிபி கா மக்பாரா என்ற கட்டடம்தான் அது. புத்த ஓவியங்கள் நிறைந்துள்ள அஜந்தா குகைகளுக்குச் செல்ல நீங்கள் ஔரங்காபாத் வழியாகத்தான் செல்லவேண்டும். அப்போது கூட்டமே இல்லாத பிபி கா மக்பாராவை நீங்கள் பார்வையிடலாம்.
முகலாயக் கட்டடங்களைப் பார்க்க நீங்கள் விரும்பினால் தில்லியைப் போல உங்களுக்கு வேறு இடம் கிடைக்காது. தில்லி, அதன்பின் ஃபதேபூர் சிக்ரி, ஆக்ரா, பாகிஸ்தான் செல்ல முடிந்தால் லாகூர் என்று சென்று பார்வையிடுங்கள்.

Image
இந்த நேரத்தில் நானும் சில நண்பர்களும் பாகிஸ்தானில், லாகூரில் ஜஹாங்கீர் கட்டிய ஒரு பெரிய தோட்ட அரண்மனையைப் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. இந்தியர்கள் நாங்கள் மூவர், எங்கள் பாகிஸ்தானி நண்பர் ஒருவர் என்று அந்தப் பெரிய அரண்மனையிலேயே மொத்தம் நாங்கள் நான்கு பேர்தான் சுற்றிக்கொண்டிருந்தோம். அங்கே வேலை செய்யும் ஓரிரு உள்ளூர்க்காரர்கள் இருந்தனர். அவ்வளவுதான். அப்படி தாஜ் மகாலை நம்மால் என்றுமே கற்பனை செய்ய முடியாது. அவ்வளவு கூட்டம்.
இனி… கூட்டம் இன்னும் அதிகமாகத்தான் போகிறது.

************************************

தாஜ்மகால் சில தகவல்கள்…

 • உலக அதிசயங்களில் ஒன்று. முகலாயப் பேரரசர் ஷா ஜகான், தன் மூன்றாவது மனைவி மும்தாஜ் மகாலின் நினைவாகக் கட்டியது. 1631, ஜூன் 17ம் தேதி மும்தாஜ், தன்னுடைய 14வது குழந்தையை பிரசவிக்கும் போது இறந்து போனார்.
 • இது மொகலாயர்களின் கட்டிடக்கலை அழகுக்கும், திறமைக்கும் அழியாத சான்றாக விளங்குகிறது. இஸ்லாமிய, பாரசீக, துருக்கிய, இந்திய கட்டிடக்கலை நுட்பங்கள் எல்லாம் கலந்த கலவை.
 • 1983ம் ஆண்டு, யுனெஸ்கோவால் ‘உலக பாரம்பரிய சின்னம்’ என அறிவிக்கப்பட்டது.
 • 1632ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டிட வேலை, 1653ல்தான் முடிந்தது.
 • அப்துல் கரீம் மம்முத்கான், மக்ரமத்கான், உஸ்தாத் அஹமது லஹாவ்ரி (Ustad Ahmad Lahauri) என மூன்று கட்டிடக்கலை வல்லுநர்களின் மேற்பார்வையில் தாஜ்மகால் எழுப்பப்பட்டது. இருந்தாலும் லஹாவ்ரிதான் தலைமை வடிவமைப்பாளராக கருதப்படுகிறார்.
 • இதற்கு முன்பு மொகலாயர்களால் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் செந்நிறத்தில் செங்கற்கலால் கட்டப்பட்டவை. ஷாஜகான்தான் முதன் முதலாக இதைக் கட்டுவதற்கு வெண்ணிற பளிக்குக் கற்களை அறிமுகப்படுத்தினார்.
 • தாஜ் மகாலைப் பற்றி ஷா ஜகான் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதன் ஆங்கில வடிவம் இங்கே…
 • Should guilty seek asylum here,
  Like one pardoned, he becomes free from sin.
  Should a sinner make his way to this mansion,
  All his past sins are to be washed away.
  The sight of this mansion creates sorrowing sighs;
  And the sun and the moon shed tears from their eyes.
  In this world this edifice has been made;
  To display thereby the creator’s glory.
 • இதைப் பார்வையிட ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்கள். தாஜ் மகால் 360 ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்குக் காரணம் அது யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளதுதான். யமுனை நதி நாளுக்கு நாள் வற்றிப் போய், சாக்கடை போல மாறி வருவதும், காடுகள் அழிவதும், தொழிற்சாலைப் பெருக்கமும் தாஜ் மகாலை அழித்துவிடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
 • தொகுப்பு: பாலு சத்யா