கடந்த 42 ஆண்டுகளில் அருணா ஷன்பாக் என்ற பெயர் இந்திய ஊடகங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்திய பெயர். அருணாவுக்குப் பார்வை கிடையாது. பேச முடியாது. நடக்க இயலாது. எதையும் புரிந்துகொள்ள முடியாது. ஆனாலும், மருத்துவமனையின் சின்னஞ்சிறு அறைக்குள் இருந்து கொண்டு இந்தியப் பெண்களின் நிலையையும் இந்திய நீதியின் ஓட்டைகளையும் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு, மனசாட்சியை உலுக்கிக்கொண்டே இருந்தார். அருணாவின் போராட்டத்துக்கு நியாயம் கிடைத்ததா?
கர்நாடகாவில் உள்ள ஹால்டிபூர் கிராமத்தில் பிறந்தவர் அருணா. ஏராளமான சகோதர, சகோதரிகள் கொண்ட ஏழ்மையான பெரிய குடும்பம். அருணாவுக்குப் படிப்பு மீது ஆர்வம் அதிகம். அந்தக் காலத்தில் பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே படிக்க வந்தனர். பள்ளி இறுதி முடித்தபோது அவர் வயதுப் பெண்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அருணா மருத்துவம் படிக்க நினைத்தார். ஏழ்மை காரணமாக மருத்துவம் படிக்க வைக்க இயலாது என்று கூறிவிட்டார் அவரது சகோதரர். மருத்துவர் எண்ணத்தைக் கைவிட்டு செவிலியர் படிப்பில் சேர விரும்பினார். ஆனால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு பெண் வெளியில் சென்று படிப்பதில் விருப்பம் இல்லை. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி படிக்கச் சென்றார் அருணா.
பள்ளியிலும் கல்லூரியிலும் தன்னுடைய ஏழ்மையை நினைத்து அவர் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. எப்பொழுதும் கலகலப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பார். பெண் என்ற காரணத்தாலோ, ஏழ்மை என்ற காரணத்தாலோ தன்னுடைய திறமை முடங்கிப் போய்விடக்கூடாது என்று நினைத்தார். எளிய ஆடைகளில் அத்தனை வசீகரமாக இருப்பார் அருணா.
மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் செவிலியர் வேலை கிடைத்தது. எந்த விஷயத்தையும் வேகமாகக் கற்றுக்கொள்வார் அருணா. நாய்களை வைத்து மருத்துவ ஆராய்ச்சி செய்யும் துறைக்கான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு அந்தத் துறை பிடிக்காவிட்டாலும் வேறு துறையைக் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லை. வேலையில் மிகவும் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் செயல்படுவார். கெம் மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் ஒருவர் அருணாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். சாதி வேற்றுமையைக் காரணம் காட்டி, அவரது குடும்பத்தினர் மறுத்தனர். ஆனாலும் தன்னுடைய திருமணத்தில் உறுதியாக இருந்தார் அருணா.
அருணாவின் கண்காணிப்பில் இருந்த துறையில் சோஹன்லால் பர்தா வால்மிகி என்பவன் வார்டு பாயாக வேலை செய்து வந்தான். வேலையில் காட்டிய அசிரத்தை, திருடு போன்ற காரணங்களுக்காக அருணாவால் கண்டிக்கப்பட்டான். இறுதியில் அவன் செய்த ஒரு குற்றத்துக்காக அருணா மெமோ வழங்கினார். அவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. ஒருநாள் இரவு உடை மாற்றும் அறையில் அருணாவை நாய்ச் சங்கிலியால் கழுத்தை நெரித்தான். பிறகு பாலியல் பலாத்காரம் செய்தான். மோதிரம், தோடு போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அருணா சுயநினைவிழந்தார். மறுநாள் காலைதான் அருணாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
அருணாவின் திருமணம், எதிர்காலம் குறித்த அச்சம் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் கொலை முயற்சி, திருடு போன்ற குற்றங்களை மட்டும் சோஹன்லால் மீது சுமத்தியது. இயல்பான முறையில் உடல் உறவு கொள்ளாததால் அவன் மீது பலாத்கார குற்றத்தை மருத்துவர்கள் சுமத்தவில்லை. இறுதியில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவனுக்குக் கிடைத்தது. தண்டனை காலம் முடிந்து டெல்லி சென்றவனைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அருணாவின் திருமணம் நின்று போனது. மருத்துவர் வேறு திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் அருணா பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதை ஒருபோதும் குறிப்பிட்டுச் சொன்னதில்லை. காலப்போக்கில் குடும்பத்தினரால் கைவிடப்பட்டார் அருணா.
அருணாவுக்குப் பார்வை பறிபோயிருந்தது. பேசும் சக்தியை இழந்திருந்தார். நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை. வலி என்ற ஓர் உணர்ச்சியை மட்டுமே அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. யாரையும் சார்ந்து வாழாமல், தன்னுடைய முயற்சியால் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்று கனவு கண்டு, லட்சியத்தை நிறைவேற்றி, பலனை அனுபவிக்க இருந்த வேளையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் பிறரின் உதவியை நாடும் பெண்ணாக மாறிப் போயிருந்தார் அருணா. உடலில் உயிர் இருந்ததே தவிர, அவர் உயிருள்ள ஒரு பெண்ணாக இருக்கவில்லை.
அடிக்கடி வலிப்பு வரும். பிற உபாதைகள் வாட்டும். முனகலும் கண்ணீரும் அவர் வலியால் துடிப்பதை வெளிப்படுத்தும். அருணாவின் கொடுமையான வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார் பிங்கி விரானி. அருணாவுக்குக் கட்டாயமாக உணவு கொடுப்பதை எதிர்த்து, கருணைக்கொலைக்கு அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2011ம் ஆண்டு கருணைக்கொலைக்கு அனுமதி மறுத்தது நீதிமன்றம்.
அன்றைய அருணாவிலிருந்து இன்றைய நிர்பயா வரை பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள், நம் சமூகத்தில் நிலவும் பெண்களைப் பற்றிய பிற்போக்கான எண்ணங்களுக்கே பலியாகியிருக்கின்றனர். ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்யும் ஆண், தன்னுடைய தவறைக் கண்டிக்கும்போது ஆண் என்ற ஈகோவை உரசிப் பார்ப்பதாக நினைத்துக்கொள்கிறான். அருணா செய்ததை ஓர் ஆண் செய்திருந்தால் அதிகப்பட்சம் மனத்துக்குள் திட்டியிருப்பான். இல்லை என்றால் வேலையை விட்டு ஓடியிருப்பான். வழி இல்லை என்றால் மன்னிப்புக் கேட்டிருப்பான். ஆணுக்குக் கீழ் பெண் என்று காலம் காலமாகச் சொல்லிலும் செயலிலும் பின்பற்றி வந்த ஒரு சமூகத்தில் சோஹன்லால் போன்றவர்கள் அலுவலக விஷயத்துக்குத் தனிப்பட்ட முறையில் பழிவாங்கத் துடிக்கின்றனர். திருமணம் நடக்க இருக்கும் ஒரு பெண்ணுக்கு பலாத்காரம் என்பது வாழ்நாள் தண்டனையாக இருக்கும் என்று எண்ணி வெறிச் செயலில் ஈடுபட்டிருக்கிறான். எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத, ஒரு பெண் அவள் நண்பனுடன் பேருந்தில் பயணம் செய்ததையே ஏற்றுக்கொள்ள இந்திய ஆண்களின் மனம் ஒப்புக்கொள்ளாதபோது, 42 வருடங்களுக்கு முன் சோஹன்லால் தனிப்பட்ட வெறுப்பைக் காட்டியதில் வியப்பில்லை.
ஏழ்மை நிலையில் தன் சொந்தத் திறமையால் முன்னேறத் துடித்த ஒரு புத்திசாலிப் பெண், முட்டாள்தனமான இந்திய ஆண்களின் வக்கிர எண்ணத்துக்கு அநியாயமாகப் பலியாகிவிட்டார். சோஹன்லாலால் தண்டிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, நீதிமன்றத்தாலும் புறக்கணிக்கப்பட்டு, தன் வாழ்நாள் முழுவதும் வலியால் துடித்து துடித்து உயிர் துறந்த அருணா செய்த தவறுதான் என்ன?
– சஹானா
***
Image courtesy: