ஓர் ஏரியின் தேடல்
தண்ணீரால் தளும்பி வழியும்
தாகம் தணிக்கும் ஜீவன் நான்.
தாவர உரோமங்கள் என் தசைகளில்…
வானம் தருகிற மழை முத்தம் என் மடியில்.
என்னுள்
சிலிர்த்துயிர்க்கும் ஜீவராசிகள்!
தலைப்பிரட்டை, மீன், தவளை
நண்டு, நத்தை, பாம்பு
அட்டை, ஆமை, உள்ளான் என
அத்தனை ஜீவராசிகளும்
அடைக்கலம் என் கர்ப்பத்தில்!
புல், பூண்டு, பச்சிலை
ஆம்பல்,கருங்குவளை, தாமரை
நான் அணியும் இயற்கை ஆபரணங்கள் !
தினமும் வானம் முகம் பார்க்கும்
வசீகரக் கண்ணாடியாய் என் தேகம்!
பறவை, எலி, அணில், முள்ளம் பன்றி, மூஞ்சூறு
சிக்குளுக்காம் மூட்டிச் சேட்டை செய்யும்
என் மேனியெல்லாம்!
ஆல், அரசு, வேங்கை,
தென்னை, தேக்கு, கோங்கிலவம்…
நிழல்களின் ராஜ்ஜியம் என் கரையெல்லாம்!
உழவராய், மள்ளராய், வேடராய்
மாடுகள் குளிப்பாட்டிய மனுசனே…..
உயிர்களுக்கெல்லாம் உறைவிடமாகி
பயிர்ப் பச்சிலுக்குப் பாசனமாக
நீ
எப்போது திறந்தாலும்
என் மதகிலிருந்து மதநீர் பாய்ந்ததே!…..
இன்றென்ன ஆச்சு?…
ஏனிந்தப் பேராசை?
மாடிகள் இடிந்து மரண ஓலம்
சுவர்க் கோழிகள் ரீங்கரித்த என் செவியோரம்
உயிர்பிழியும்
கடவுளின் தற்கொலை ஓசைகள்!
ஜீரணிக்க முடியவில்லை…
செவிகிழியும் மரண கீதங்கள்!
அடைந்துபோன என் ஆதி மதகுகளில்
அணை உடைத்துப் போகும்
கருணையைத் தேடி என் கண்ணீர் வெள்ளம்!
மனிதர்களை நம்பமுடியவில்லை…
கடவுளை காணவில்லை….
– நா.வே.அருள்