முகவரியற்ற மரணங்களும் மரணங்களற்ற சில முகவரிகளும் !

IMG_8006

திடீரென இடிந்து நொறுங்கி

சிதிலமாகி

சிதைத்துப் போட்ட கான்க்ரீட் வனமென

காட்சியளிக்கும்

மவுலிவாக்கத்தில்

கண்டுபிடிப்புகளை மீறி நாறும்

முகவரியற்ற மரணங்கள்!

 

கால்குத்திக் கிழிக்கும் கான்க்ரீட் கம்பிகள்

நவீன சாம்பல் நிற சதுர கற்கள்

தகர்ந்து கிடக்கும் சிமெண்டுச் சுவர்கள்

சக்கரங்களில் சிக்கியக் கருப்பஞ் சக்கைகளாய்க்

காட்சியளிக்கும்

முறிந்து கிடக்கும்

கட்டிடத்தின் கணுத் தொடைத் தூண்கள் !

 

பாதாளத்தில்

சுவர்க் குகைகளுக்குள்

மரணத்திலிருந்து தப்பிக்க

வெடித்துக் கிளம்பும் மனிதர்களின் கடைசிக் கேவல்கள்

பூமி கேட்க விரும்பிய

மரணத்தின் நெடுந்துயரப் பாடல்களாக

இருக்க முடியாது…

 

பேராசைகளின் ஜீவநதியாய்ப்

பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில்

சில மனிதர்களில் பணரங்கச் சுழற்சியில்

பாவம்… இந்த

பதினொரு மாடி வளாகம்!

 

இதயத் துடிப்பறியும் நவீன கருவியும்

தெர்மல் கேப்சரிங் கேமராவும்

கண்டுபிடிக்க முடியாமல் திணறும்

துரோகங்களின் மீது கட்டப்பட்ட

“நம்பிக்கை” என்னும் வாசகம் பொறித்த வளாகத்தின்

இடிபாடுகளுக்கு அடியில்

கண்ணாமூச்சியாடும்

முகவரியற்ற மரணங்களும்

மரணங்களற்ற சில முகவரிகளும்!

– நா.வே.அருள்