ப்ரியங்களுடன் ப்ரியா – 13

ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக!

நிலவு ஊடுருவ 
முற்றத்தில் 
பாட்டி கதை சொல்ல 
அம்மா சோறு ஊ ட்ட 
அப்பா தலை கோத
தங்கை விரல் நீவ
குடும்பம் ஒரு கதம்பமாக 
அழகான ரோஜா கூட்டம் நடுவில் 
ஆசிர்வதிக்கப்பட்ட 
தேவதையாக நான்!

ஒரு கூட்டு கிளியாக… ஒரு தோப்பு குயிலாக… குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றி , இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும் சிட்டுக்குருவிகள் போல . சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு நமது கூட்டு குடும்பம்.  அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம் நமது குடும்ப முறைகள் . இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழும் நிலை காலத்தின் கட்டாயமாக…

p1

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமத்திலும், நகரத்திலும்கூட கட்டுப்பாடான வாழ்க்கை முறை, பெற்றோருக்கு அடங்கிய பிள்ளைகள், கூட்டுக் குடும்ப வாழ்க்கை என நன்றாகவே இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக இவை அனைத்துமே புறந்தள்ளப்பட்டு நேர்மாறாகி விட்டன.

மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் மெல்ல மெல்ல நம்மையும் மாற்றிவிட்டது.

தமிழ்ச்சமுகம் மற்ற சமுகத்தை போல் சீரழியாமல் இருந்ததற்க்கு காரணம். கூட்டு குடும்ப வாழ்க்கையும் அங்கு உருவான அன்பும் தான்;. கூட்டு குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் ஒடி வந்து உதவும், ஆதரவு தரும் அன்பும், நேசமும் அங்கிருந்தது. குடும்பத்தில் வேலைகள் பங்கிட்டு செய்யும் ஒற்றுமையிருந்தது. மாமியார் கொடுமைகள் கூட்டு குடும்பத்தில் அவ்வளாக இருந்ததில்லை. பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற திட்டமிடல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் ஆண்கள் போதை, பேதைகளுக்கு அடிமையாக பயந்தனர். பெண்கள் குடும்பத்திற்க்கு தெரியாமல் எதையும் செய்ய தயங்கினர். உற்றார் உறவினர்களுடன் நெருக்கம் வளர்ந்தது. நல்ல நண்பர்கள் யார் என்பதற்க்கான அடையாள படுத்தல் இருந்தது. கூட்டு குடும்பத்தில் வளரும் இளம் வயது இளைஞன் இளைஞிகள் தவறு செய்ய தயங்கினர்.

இப்போதைய நிலைகள் என்ன ?? சிதைவை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது நமது குடும்ப அமைப்பு முறைகள் ..

பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம். அப்படி உறவுகளைப் போற்றும் சந்தோஷ குடும்பங்களின் அனுபவங்களை, பகிர்ந்து கொள்வோம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து குடித்தனம் செய்வது தான் கூட்டுக் குடும்பம். என்னைப் பொறுத்தவரை கூட்டுக் குடும்பத்தில் நிறைய கற்றுக் கொள்ளலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள,ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க, நம்முடைய முன்னோர்களிடமிருந்து நம்முடைய பழக்க வழக்கங்களையும்..நடை முறைகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

வைசு ஸ்கூல்ல மிஸ் எல்லா குழந்தைங்க கிட்டயும் அவங்க குடும்பம் பத்தி கேட்டிருக்காங்க. வைசு சொல்லி இருக்கா எங்க வீட்டுல 7 பேரு இருக்கோம்.. தாத்தா,பாட்டி, சித்தி,சித்தப்பா, நான், அப்பா,அம்மா எல்லாரும் கூட்டுக்குடும்பமா இருக்கோம்னு சொல்லி இருக்கா, கிளாஸ்ல 37 குழந்தைங்க இருக்காங்க நீ மட்டும் தான் கூட்டுக் குடும்பத்தில் இருந்து வர கேட்கவே சந்தோசமா இருக்குனு சொல்லிருக்காங்க…  7 பேர் இருக்க குடும்பத்துக்கே மிஸ் இவவளவு சொல்லி இருக்காங்க.. அப்போ என் சின்ன வயசுல இங்க எப்படி இருந்தாங்கனு தெரிஞ்சா இன்னும் என்ன சொல்லி இருப்பங்கனு தோணுச்சு.. அப்போ யோசிச்சேன் கூட்டு(க்) நம்ம குடும்பம் பத்தி எழுதாமேனு..

சின்ன வயசுல ஸ்கூல் லீவுக்கு ஒவ்வொரு முறையும் பல்லடம் வருவதற்க்கு ரொம்ப புடிக்கும்.. சின்ன பாட்டிகள் இருவருக்கும் ஒரே குடும்பத்தில் திருமணம் அண்ணன், தம்பி என.. ஒவ்வொருக்கும் சுமார் 8 குழந்தைகள், இது போக வீட்டிற்க்கு வரும் விருந்தினர்கள், அம்மா, பெரியம்மா, சித்தி, என லீவுக்கு வரும் குழந்தகள் வேறு… இந்த காலத்தில் ஒரு குழந்தையை வளர்க்கவே ரொம்ப கஷ்டம் அந்த காலத்துல எப்படி தான் இந்தனை குழந்தைகளை வளர்தாங்களோனு நினைச்சா இப்போ கொஞ்சம் பிரமிப்பா தான் இருக்கு..

பாட்டிங்க கிட்ட அந்த காலத்து கதை எல்லாம் கேட்கும் போது ரொம்ப சுவாரஸ்யமா தான் இருக்கும்.. சமையல்ல எல்லாம் இப்போ ஆட்ட,அரைக்கனு எல்லா வசதியும் வந்திடுச்சு அந்தக் காலத்துல இவ்வளவு பேருக்கும் எப்படி சமைச்சிருப்பாங்க..? அந்த பெரிய ஆட்டாங்கல்ல இப்போ ஒரு சுத்து சுத்தரருக்கே இவ்வளவு சோர்வாகி விடுது…

அத்தைங்க சமையலும் அப்படிதான்.. பாட்டிங்க தான் ஒரே வீட்டிலிருந்து வந்தவங்க..  ஆனா அத்தைங்க எல்லாம் அப்படி இல்லையே வேற வீட்டிலிருந்து வந்தாலும் அவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்க.. எல்லா மாமாங்களுக்கும் திருமணம், அவர்கள் குழந்தைகள்ன்னு இன்னும் அதே ஓற்றுமைதான் அனைவருக்குள்ளும். இன்றும் எங்க வீட்டில் விசேஷம் என்றால் ஒரு நேரத்திற்கு 80 பேருக்கு சமைக்கனும், ஒரு அத்தை அடுப்பு பார்த்து பார்த்துப்பாங்க, இன்னொரு அத்தை காய்கறி எல்லாம் வெட்டி பண்னுவாங்க, நல்ல வேளை எனக்கு எல்லாம் பரிமாறும் வேலை மட்டும் தான்( மருமக அடுப்படியில கஷ்ட படக்கூடாது நினைச்சிருப்பங்க போல ).. சின்ன வயதிலிருந்து பார்ததினாலோ என்னவோ திருமணத்திற்க்கு பின்னும் இயல்பாய் அவர்களுடன் இருக்க முடிந்தது என் வரம்..

இன்றும் வீட்டின் மூத்த மருமகள் இப்படிதான் இருக்கனும்.. பார்த்துக்க எப்படி செய்யறோம் நீயும் நாளைக்கு இப்படி தான் இருக்கனும்னு சொல்லுவாங்க.. தாத்தா, பாட்டிக்கு வயதானாலும் இன்றும் மரியாதையாய்,அன்பாய், பாசமாய் அவர்களுக்கு வேண்டியதை செய்கிறார்கள்… ஊரிலும் எங்க குடும்பத்திற்க்கு இருக்கும் மரியாதையே தனிதான்..

கூட்டு குடும்பம் ஒன்றில் தானே அன்பும் நெஞ்சம் அதிகம் இருக்கும் ..
வீட்டு வேலை குவியும் போதும் ஆளுக்கொன்றாய் செய்தே முடிக்கும்..
மனந்தனை சுமக்கும் அணுக்கள் போலவே..
சின்ன சின்ன வேலைக்கே பிள்ளை உண்டு வீட்டிலே..
தாகம் வந்த நேரத்தில் தண்ணீர் கொண்டு தருவாளே..
தடம் மாறி போகும் போது வழி காட்ட பெரியோர் உண்டு..
பசி என்று சொல்லும் முன்னே பரிமாறும் கைகள் உண்டு..
ஒரு மரக்கூட்டிலே பறவைகள் போலவே வாழ்வதும் ஆனந்தம்.. என்று சொல்வதும் சரிதான்…

கூட்டுக் குடும்பத்தின் நன்மைகள்

என்னைப் பொறுத்த வரையில் நிறைய நன்மையே கிடைத்தது எனலாம். இன்றும் எவ்வளவு வேலை இருந்தாலும், முகம் சுளிக்காமல் , என்னால் வேலை செய்ய முடிகிறது. அடுத்தது, சகிப்புத் தன்மை, இவங்க  இப்படிதான் இவர்களைக் ஏன் குறை சொல்லனும் . ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கத் தான் செய்யும் என்று ,  என்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள முயற்சிப்பேன், முடியவில்லை என்றால் விட்டு விடுவேன்.. எல்லோருடனும் பேசிக் கொண்டு வேலை செய்வது  வேலை பளுவைக் குறைக்கிறது,

பண்டிகை நாட்களில் பலாரங்கள் செய்ய, பாத்திரங்கள் தேய்ப்பது, வேலைக்காரி இல்லாவிட்டால், தன் கையே தனக்கு உதவி என்றிருப்பது, அவசரத்திற்கு புடவை, நகைகளை, மாறிக்கொள்வது,  வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வது, தாராள குணம், பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பது, உறவினர்களுக்கு நல்ல விருந்தோம்பல் செய்வது என இவை எல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

புதிதாக எந்த ஒரு வேலை செய்ய துவங்கும் போதும் நமக்கு பக்க பலம் இருக்கிறது என்பதே நம்மை ஊக்குவிக்கும்.. எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் பெரியவர்களை கலந்து பேசி முடிவெடுக்கலாம். அவர்களுடைய அனுபவம் நமக்கு நல் வழிக் காட்டும். ஒருத்தருடைய பலம் , பலவீனம் அறிந்து வேலைகளை செய்யலாம்.முக்கியத்துவம் கொடுப்பதால் , சீக்கிரத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது. அன்பும்,பண்பும் பரிமாறி , உதவும் வழக்கம் இருப்பதால் சகிப்புத் தன்மை வருகிறது..பெரியவர்கள் எப்படி சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துகிறார்கள் என்று அனுபவத்திலே தெரிந்து கொளவதால், அதை அடுத்து ,அடுத்து வரும் சந்ததியும் அந்த வழி முறைகளைக் கடைப் பிடிக்க முடிகிறது.

ஒரு கலர் ப்பென்சில் பாக்ஸில் எவ்வளவு விதமான கலர்கள்..எல்லாம் தனித்து இருந்தாலும் அவற்றை வைத்து ஒரு படம் வரையும் பொழுது, எல்லா கலருமே தனித்தனியாக பிரதிபலிப்பதைப் போல தான் கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களும்.. தனித்து இருந்தாலும் குடும்பம் ஒன்றாக சேரும் போது ஒப்பற்ற ஓவியமாக திகழும்..

போன வருஷ கோடை கொண்டாட்ட நினைவுகள் :

பள்ளியின் கோடை விடுமுறை ஆரம்பிக்கும் முன்னரே, என் மகள் ஆரம்பித்து விட்டாள். லீவுல போர் அடிக்கும்… நான் என்ன செய்யுறது..?

போன விடுமுறைகளில் காலை 8 மணிக்கு எழுந்து 8.05க்கே ‘ரொம்ப போர் அடிக்குது’ என்று அவள் புலம்பிய ஞாபகங்கள் என் வயிற்றில் புளியைக் கரைத்தன…

போன தலைமுறைப் பிள்ளைகளின் அகராதியில் ‘போர்’ என்ற சொல் இருந்ததேயில்லை.. பரீட்சை முடிந்த நாளே எல்லோரும் கிளம்பி பாட்டி வீட்டுக்கு ஓடிவிடுவோம். எல்லா பேரன் பேத்திகளையும், உட்கார வைத்து, கல் சட்டியில் சுண்ட வைத்த குழம்பில் சோற்றைப் பிசைந்து, உருட்டி, குட்டிக் குட்டியாய் மலர்ந்திருக்கும் உள்ளங்கைகளில் பாட்டி வைக்க, சோற்று உருண்டைகளை விழுங்கும் குழந்தைகளைப் பார்த்தால், புத்துணர்வு முகாமுக்குப் போன யானைகள் கூட வெட்கப்படும்….

வீட்டின் கூடத்தில் தலையணைகளையும் பாய்களையும் பற்றிக் கொண்டு, அனைவரும் படுத்திருப்போம்… பாட்டி வந்ததுமே கதை செஷன் ஆரம்பம்…

’சண்டையில் ஜெயிச்சப்புறம், அனுமார் வந்து சீதையைப் பாத்தாராம்.. இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தின அரக்கிகளுக்கு ஓங்கி ரெண்டு அடி வைக்கட்டுமா..? ந்னு கேட்டாராம்.. பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ‘நாந்தான் அனுமார்… இவதான் அரக்கி ! ந்னு பக்கத்திலிருக்கும் தங்கையை ஒரு ‘பஞ்ச்’ விட முயற்சித்த அக்காவை செல்லமாக மிரட்டி, நீ அரக்கி இல்லடி… அழகின்னு சமாதானம் சொல்லும் பாட்டியின் மடியில் தலை வைத்து உறங்கி.. வெயிலில் பாழாகாமல் விளையாடி, வயிறு வாடாமல் எதையும் தின்று, கதை கேட்டுக் கண்ணயர்ந்த காலங்களில் போராவது… ஒன்றாவது….

மீண்டும் பாட்டி வீட்டில் சிறு பிள்ளையாக மனம் தவழ நானும் மழலை ஆனேன்.

கூட்டுக் குடும்பத்தில் தியாகம்   விட்டுக்கொடுக்கும் தன்மை பகிர்ந்து உண்ணுதல்  ..மரியாதை, கருணை ,,தலைமை வகிக்கும்  திறன் குழந்தைகளின்  சிறந்த  வளர்ப்பு… இப்படி  எத்தனையோ  நன்மை!

கூட்டு குடும்பம்

எல்லையில்லா  ஆனந்தம் ,
உறவினர்களின் சுற்றம்
உறவை வளர்க்கும்  ஏற்றம்
கூட்டுக் குடும்பம் ,
மனம் கொண்டாட்டம்
இணைந்து செய்யும் செயலே தனிதான்
அதில் இருக்கும் பெருமையும் தனிதான்
தியாக மனப்பான்மை தன்னால் வளர ,
விட்டுக்கொடுக்கும் தனமைப் பெருக ,
பெரியவர்கள் ஆசிகள் தினமும்  சூழ
அன்பு மழையில்  ஓயாமல் நனைய
கூட்டுக் குடுமபம் திரும்ப வரணும்
இன்ப ஊற்று மீண்டும் பெருகணும் ..

வாழ்க்கையும்  ஒரு கொடுக்கல் வாங்கல் போலதான், இந்தக் கையால் கொடுத்தால் அடுத்தக் கையால் பெறலாம் அன்பைகூடி வாழ்ந்தால் கோடி நன்மை…
IMG_20150821_160058

நிலவு ஊடுருவ 
முற்றத்தில் 
பாட்டி கதை சொல்ல 
அம்மா சோறு ஊ ட்ட 
அப்பா தலை கோத
தங்கை விரல் நீவ
குடும்பம் ஒரு கதம்பமாக 
அழகான ரோஜா கூட்டம் நடுவில் 
ஆசிர்வதிக்கப்பட்ட 
தேவதையாக நான்!

  • ப்ரியா கங்காதரன்