இறைவி

iraivi2ஒரு பொக்கே!

நல்லவர்களைப் பார்ப்பது ஓட்டல் சாம்பாரில் காயைத் தேடுவதுபோல கஷ்டமான வேலையாகிவிட்டது. இப்படி ஒரு காலத்திலும் யாராவது நல்லது செய்தால் அவர்களைத் தேடிப் பிடித்தாவது பாராட்டுவதுதான் அவர்களுக்கு இன்னும் ஊக்கமாகவும், மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கும்.

பீப் ஸாங் போன்ற விஷயங்களைக் கேள்விப்படும்போது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தப் பெரும்பாலானோர் தவறுவதில்லை. ஆனால்… நல்லது நடக்கும்போது மட்டும் பாராட்ட மறந்துவிடுகிறோம்… அல்லது அதை ரசித்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம்.

ஆமாம்…
‘இறைவி’ கார்த்திக் சுப்புராஜ் பற்றிக் கொஞ்சம் பேசுவோம்..

iraivi3

படத்தின் நிறைகுறைகளை விமர்சிப்பதற்கெல்லாம் பல சினிமா நிபுணர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அவருக்கு ரெட் கார்ட் போட்டது பற்றி ஆராயவும் பலர் இருக்கிறார்கள் என்பதால் நாம் அதைப் பேச வேண்டியதில்லை.

இதில், நாம் குறிப்பிட விரும்பும் விஷயம்… சமீபகாலத்தில் பெண்களை அவமானப்படுத்தாத, அசிங்கப்படுத்தாத படம் எதுவும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலானவை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ வகையறாவாக இருப்பதாகத்தான் ஞாபகம். இதற்காக வரலாறை எல்லாம் புரட்ட வேண்டியது இல்லை. ‘இறைவி’யுடன் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் கூட பெண்களைத் திட்டி ஒரு பாடல்… பல டபுள் மீனிங் வசனங்கள்… இன்னும் ஓர் ஆபாச பாடல்.. ‘புஷ்பா புருஷன்’ என்று அருவருப்பான கேரக்டர் என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது.

ஒரு படத்தை ஆரம்பிக்குபோதே, ‘ஒரு டாஸ்மாக் ஸாங் சார்… அதுல பொம்பளைங்களத் திட்டுறோம்… கானா பாலாகிட்ட வேணா கேட்டுப் பார்க்கலாம்’ என்றுதான் டிஸ்கஷனே நடத்துவார்கள் போல. அந்த அளவுக்கு சமீபகாலத்தில் பெண்களை அசிங்கப்படுத்தாத பாடலோ படமோ இல்லை என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்து சத்தியம் செய்யலாம்.

iraivi1

இந்த மாதிரி ஒரு ஆபாச சூழலில், பெண்களைத் திட்டாத படம் என்பதற்காகவே ‘இறைவி’க்கு பொக்கே தரலாம். நம்முடைய அம்மா, சகோதரி, தோழி என தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிற பெண்களின் துயரங்களைப் பேசியிருப்பது இதுவரை தமிழ்சினிமாவில் நாம் பார்த்திராத ஓர் அதிசயம். அதிலும் பெண்களின் உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வெகுஜனப் படம் என்பது எல்லா இறைவிகளும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இத்தனைக்கும் அவர் டாக்குமெண்ட்ரி சினிமா எடுக்கிற ஆள் இல்லை. ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என இரண்டு ப்ளாக்பஸ்டர்கள் கொடுத்த ஒரு வெகுஜன இயக்குநர். மூன்றாவது படமான ‘இறைவி’யில் மிகவும் எதிர்பார்க்க வைத்த இயக்குநர். தன்னுடைய சினிமா மார்க்கெட் ஸ்டிராங்காக இருந்தும் இதுபோல பெண்களை கண்ணியப்படுத்தும் விதத்தில் ஒரு படம் எடுத்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய பொக்கேவே தரலாம்.

iraivi4

கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் அதிதீவிர ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். வாட்ஸ் அப் ப்ரொஃபைலிலேயே தன்னுடைய போட்டோவுக்குப் பதிலாக ரஜினி போட்டோவை வைத்திருக்கும் தீவிரவாதி அவர்.

அதனால், ‘கபாலி’ ஸ்டைலிலேயே கடைசியாக ஒரு வார்த்தை…
மகிழ்ச்சி!

  • ஜி.ஸ்ரீவித்யா

iraivi5

திரைவானின் நட்சத்திரங்கள் – 6

விஸ்வரூபம்!

Image

‘‘இன்று என்னை எப்படியும் கொன்றுவிடுவார்கள். இன்றைக்கு நான் வீடு திரும்பப் போவதில்லை. இப்படி நினைத்தபடிதான் ஒவ்வொரு நாளும் நான் வீட்டைவிட்டு வெளியே வருகிறேன’’ ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சாபா சாஹர் (Saba Sahar). ஆப்கானிஸ்தானின் முதல் பெண் திரைப்பட இயக்குநர்.

இது கலவரப்படுத்தும் விஷயம்தான். ஆனால் ஆச்சரியப்படும்படியான மற்றொரு செய்தியும் உண்டு. கதை எழுதி, இயக்கி, சொந்தமாகத் தயாரித்து, இவரே நடித்து வெளியான திரைப்படங்கள் எல்லாம் நம்ம ஊர் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ ரக படங்கள். போலீஸ் அதிகாரியாக அவரே நடித்திருப்பார். நீதிக்காகப் போராடும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் நேர்மையான கதாபாத்திரம். வில்லன்களாக வருபவர்கள் தலிபான்கள், போதை மருந்து கடத்துபவர்கள், ரௌடிகள். படங்களில் அவர்தான் சூப்பர் ஹீரோ. ஆப்கானிஸ்தானில் பெண்கள் அணியும் பாரம்பரிய உடையை அணிந்து குங்பூ சண்டை போடுவார். வில்லன்களிடம் இருந்து காப்பாற்ற அடிபட்டுக் கிடப்பவர்களைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவார். இரண்டு கைகளை விட்டுவிட்டு பைக்கில் பறப்பார்! சினிமா வேலை இல்லாத நாட்களில் காவல் நிலையத்துக்குப் போவார். ஆம்… அவர் உண்மையிலேயே ஒரு போலீஸ் அதிகாரி!

1975, ஆகஸ்ட் 28ம் தேதி காபூலில் பிறந்தார் சாஹர். 14 வயதில் காவல்துறையில் சேர்ந்தார். 1990ல் போலீஸ் அதிகாரியாகத் தகுதி பெற்றார். சினிமா சாகசம் அவருக்கு நிரம்பப் பிடிக்கும். அதனாலேயே ஆப்கன் அமைச்சகத்தில் இருந்த திரைப்பட மற்றும் நாடகத்துறை (Department of Cinema and Theater) அவரை ஈர்த்தது. அதில் சேர்ந்தார். காவல்துறை வேலையையும் விடவில்லை. அந்தப் பணியையும் செய்தபடியே காபூல் பல்கலைக்கழகத்தில் இருந்த ஃபிலிம் அகாடமியில் சேர்ந்து, சினிமாவை இயக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டார். இயக்குநரானார்.

இந்த வெற்றி சாதாரணமாக அவருக்குக் கைகூடிவிடவில்லை. ஆப்கன், தலிபான்களின் பிடியில் இருந்த நாடு. வீட்டில் இருப்பவர்கள் ஜன்னலைக்கூட மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். பெண்களை வெளியே பார்க்கவே முடியாது. நாட்டில் இருக்கும் மொத்தப் பெண்களில் 12 சதவிகிதம் பேர்தான் படிக்கத் தெரிந்தவர்கள். அவர்களிலும் வேலைக்குச் செல்பவர்கள் வெகு சில பெண்கள்தான். அப்படிப்பட்ட ஒரு தேசத்தில்தான் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநராக, நடிகையாக, தயாரிப்பாளராக, திரைக்கதை ஆசிரியராக வளர்ந்திருக்கிறார் சாஹர். ஆப்கானிஸ்தான் காவல்துறை தொடர்பாக ‘கமிஷனர் அமானுல்லா’ என்ற பெயரில் இவர் தயாரித்த 24 எபிசோட்களைக் கொண்ட தொடருக்கு மக்களிடம் அமோக வரவேற்பு!

Image

‘‘ஆண்கள் செய்யும் அத்தனை வேலையும் செய்யும் திறமை படைத்தவர்கள் ஆப்கானிஸ்தானிலிருக்கும் பெண்கள் என்பதை நான் வெளிக்கொண்டு வர விரும்புகிறேன். பழமைவாதத்தில் ஊறி, தங்கள் மகளையும் மனைவியையும் வீட்டுக்குள் பூட்டி வைத்திருப்பவர்கள் என் படங்களைப் பார்க்க வேண்டும். பெண்களை வெளியே விட வேண்டும். அப்படி வெளியே வரும் பெண்கள் கல்வி பெற வேண்டும், சம்பாதித்து சுய காலில் நிற்க வேண்டும். ஆப்கானிஸ்தானை மறு சீரமைக்க அது உதவும்’’ வெகு அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் சாஹர்.

சாஹருக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ இருவரும் சமமாகத்தான் ஒரு நாட்டில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

பாதுகாப்புக்கு காவல்துறையினரை வைத்துக் கொண்டுதான் பரபரப்பான திரைப்பட வேலைகளைச் செய்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நிம்மதியாக வேலைகளைச் செய்ய முடியாத அளவுக்குத் தொல்லைகள். பழமைவாதிகளால் தொடர்ந்து மிரட்டலுக்கு ஆளானார். அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்பட்டமான கொலை மிரட்டல். ‘‘இந்தா பாரு… உனக்கு வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிடு. நீ சீக்கிரமே சாகப் போறே…’’ இந்த மிரட்டலை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், மிரட்டல் தொடர்ந்தது. உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்தார். அவருடைய செல்போன் அழைப்புக்கு வந்த மிரட்டலை ட்ரேஸ் செய்தது காவல்துறை. கந்தஹாரில் இருந்து யாரோ போன் செய்திருப்பது தெரிய வந்தது. ஆனால், ஆள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரம் மிரட்டலும் நிற்கவில்லை. மாறாக, இன்னும் அழுத்தம் பெற்றது. சினிமாவில் நடப்பது போலவே காட்சிகள் தொடர்ந்தன.

‘‘போலீஸுக்கு ஏன் சொன்னே? அவங்கட்ட சொல்லிட்டா மட்டும் உன்னை சும்மா விட்டுடுவோமா? மொத்த அரசாங்கமும் உன் பின்னால நின்னாலும் உன்னைய விட மாட்டோம். தெருவுல, எல்லாருக்கும் நடுவுல வச்சு உன்னையக் கொல்றோம் பாரு…’’

அதற்குப் பிறகு தன்னுடைய கைத்துப்பாக்கியோடும்  காவல்துறையினரின் பாதுகாப்புடனும்தான் வெளியே வர ஆரம்பித்தார் சாஹர்.

Image

சினிமா மீது ஈர்ப்பு வர அவருக்கு அழுத்தமான காரணமும் இருந்தது. அவர் சிறுமியாக இருந்த காலத்தில் காபூலில் இருந்த திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. நல்ல நல்ல திரைப்படங்கள் வெளியாயின. ஒரு கதாயகியாக வேண்டும் என்கிற கனவோடுதான் அவர் வளர்ந்தார். எட்டு வயதில் வீட்டுக்கே தெரியாமல் ஒரு நாடகத்தில் நடித்தார். யாரோ போய் வீட்டில் சொல்ல, வீட்டிலிருந்தவர்கள் கொதித்துப் போனார்கள். வீடே திரண்டு வந்தது. சாஹரின் அப்பா ஒரு நிமிடம்தான் மகள் நடிப்பதைப் பார்த்தார். ‘நம்ம வீட்ல இப்படி ஒரு பொண்ணா?’ என்று பிரமித்துப் போனார். மற்றவர்களை அமைதிப்படுத்திவிட்டு, மகளின் திறமையை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.

***

சாஹர், தன்னுடைய முதல் திரைக்கதையை எழுதியது ரொம்ப சிக்கலான காலம். 1996ம் ஆண்டு. தலிபான்கள், கோலோச்சிய காலம். சினிமாவை ஒதுக்கி வைத்து… இல்லை… நாடுகடத்தியிருந்தார்கள் தலிபான்கள். அசையும் படங்கள் எல்லாம் மதத்துக்கு எதிரானவை. இசை, நடனம், சினிமா… மூச்! இவையெல்லாம் மகா பாவம்! இதைச் சொன்னதோடு நிற்காமல் செயலிலும் காட்டியது தலிபான் ராணுவம். ஆப்கானிஸ்தான் அரசுக்கு சொந்தமான மாநில சினிமா கம்பெனி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. கையில் கிடைத்ததையெல்லாம் எரித்தார்கள், நாசமாக்கினார்கள். அந்தச் சூரையாடலில் பல அரிய பொக்கிஷங்கள் அழிந்து போயின. சாஹரின் நண்பர்கள் சிலரை தலிபான் போலீஸ் கைது செய்து கொண்டு போனது. காவல் நிலையத்தில் அடித்தே அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் செய்த குற்றம், யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் சினிமா பார்த்தது. அரண்டு போனார் சாஹர். இனியும் இந்த தேசத்தில் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். குடும்பத்தோடு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். பிறகு, ஈரானில் சில காலம் தங்கியிருந்தார்.

எத்தனைக் காலம்தான் இப்படியே ஓட்டுவது? அமெரிக்காவிடம் அடைக்கலம் கோரினார். 2001ல் அவருக்கு அமெரிக்காவுக்குச் செல்ல விசாவும் கிடைத்தது. அதே நேரம் மற்றொரு மாற்றமும் அவர் சொந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டிருந்தது. தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவா, ஆப்கானிஸ்தானா? பிறந்த பூமிதான் அவருடைய முதல் விருப்பமாக இருந்தது. காபூலுக்குத் திரும்பினார். சொந்தமாக ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.  

ஆப்கானிஸ்தானின் திரைப்படத் தொழிற்சாலையை மறு கட்டமைப்பு செய்ய முடிவெடுத்தார். தைரியமான இயக்குநர்கள் சிலரை இணைத்துக் கொண்டார். களத்தில் இறங்கினார். ஆப்கானிஸ்தானில் வந்து இறங்கியிருந்த வெளிநாட்டுப் படைகள் திரைப்படம் எடுக்க முழு சுதந்திரம் அளிப்பதாக உத்தரவாதம் அளித்திருந்தன. அந்த நம்பிக்கை அவருக்குப் போதுமானதாக இருந்தது.

அவருடைய முதல் திரைப்படம் ‘தி லா’. 2004ல் வெளியானது. அதைத் திரையிட திரைப்பட உரிமையாளர்கள் தயங்கினார்கள். ஒரு பெண் இயக்கிய திரைப்படம்… கலவரம் வந்தால் என்ன செய்வது என்று பயந்தார்கள். கடைசியாக ‘போலீஸ் பாதுகாப்புக் கிடைத்தால் திரையிடுகிறோம்’ என்றார்கள். அதற்கும் ஏற்பாடு செய்தார் சாஹா. நடந்தது வேறு. படம், திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் அமைதி நிலவியது. அதுவரை திரையரங்குகளில் வெளிநாட்டுத் திரைப்படங்களை மட்டுமே பார்த்து வந்தவர்களுக்கு சொந்த மண்ணில் எடுக்கப்பட்ட படம் மிகவும் பிடித்துப் போனது. கொண்டாடித் தீர்த்தார்கள் ரசிகர்கள். ‘தி லா’ அபார வெற்றி, வசூலில் சாதனை படைத்தது. பஜார்களில் அந்தப் படத்தின் திருட்டு டி.வி.டி. விற்பனையும் சக்கைபோடு போட்டது.

***

Image

திரைப்படத்தில் சூப்பர் கதாநாயகி, நிஜத்தில் போலீஸ். இருந்தாலும் அவருக்குத் தொல்லைகளும், மிரட்டல்களும் குறையவில்லை. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டுவிதமான சூழல் நிலவுகிறது. சுதந்திரத்தின் மீது தீராத வேட்கை கொண்டை இளைய தலைமுறை… மறுபடியும் பழமைவாதத்தை மூட்டையாகக் கட்டிக் கொண்டு அதன் மேல் ஒய்யாரமாக அமர ஆசைப்படும் பழைய தலைமுறை. வீட்டுப் பெண்களை சவுக்கால் அடிப்பது, வெளியே நடனமாடினால் சிறையில் தள்ளுவது அல்லது கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணம். ஒரு திரைப்படத்தில் நடிக்க கதாநாயகி கிடைப்பதே கடினம். சாஹர் போன்றவர்கள் கிட்டத்தட்ட ஒரு போர்க்களத்தின் மீது நின்றுகொண்டுதான் ஆப்கானிஸ்தானில் திரைப்படம் எடுக்க வேண்டியிருக்கிறது.

2012ல் ஒரு தலிபான் தளபதியிடம் இருந்து சாஹருக்கு அழைப்பு! அது காபூலில் வெளியே தெரியாத ஓர் நிழல் இடம். முழுக்கப் பாதுகாப்பு செய்யப்பட்ட பகுதி. தளபதி மிக மெதுவான குரலில்தான் பேசினார். ஆனால் வார்த்தைகளில் கடுமை. ‘‘பொழுதுபோக்கு என்கிற பெயரில் திரைப்படம் எடுப்பது நமக்கு எதிரானது. நம் சட்டத்துக்கு எதிரானவை தடை செய்யப்பட வேண்டியவை’’.

தளபதி கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தார். சாஹரின் கண்களைக் கூர்ந்து பார்த்தார். தொடர்ந்தார். ‘‘இப்படிப்பட்ட படம் எடுப்பவர்கள் அதை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் அதற்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டியிருக்கும்’’. சாஹருக்கு அது என்ன தண்டனை என்று தெரியும். மரண தண்டனை!

***

திரைப்படத்துறையில் அழுத்தமாகக் கால் பதித்துவிட்டாலும் சொந்த வாழ்க்கை அவ்வளவு சுகமானதாக இல்லை சாஹருக்கு. மனஸ்தாபம் காரணமாக கணவர் பிரிந்து போய்விட்டார். ‘என் அம்மா, சகோதரிகள், சகோதரர்கள் மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருக்கிறார்களே தவிர, மற்ற உறவினர்கள் என்னை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். என் வீட்டுக்கு வரும் உறவினர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்’’. ஒரு பத்திரிகை பேட்டியில் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார் சாஹர்.

‘‘மறுபடியும் தலிபான்கள் இங்கே தலையெடுத்தால், என்னைப் போன்ற பெண்கள் சினிமாவில் நடிக்கவோ, சினிமாவை இயக்கவோ முடியாது. நானேகூட வேறு நாட்டுக்கு இடம் பெயர வேண்டியதுதான்’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

நிறைய படங்களை இயக்கி, நடித்திருந்தாலும் சாஹரின் படைப்புகளில் முக்கியமானவை  ‘கானூன்’ மற்றும் ‘காஸம்’ (‘Quanoon’ (The Law), ‘Quasam’ (The Oath) என்ற இரு படங்கள் முக்கியமானவை. காவல்துறையின் வல்லமையைப் பேசுபவை. 2011ல் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘Kabul Dream Factoryl’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. அது சாஹரின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருந்தது.   

‘‘திரைப்படங்களை நான் விரும்புகிறேன். அதைவிட என் நாட்டை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். சண்டை போடுவதை விட, போதைப் பொருளை எடுத்துக் கொள்வதை விட, தீவிரவாதத்தைவிட ஆப்கானிஸ்தானில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இதை நான் மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என்னுடைய உரிமைகளைக் கேட்பதற்காக நான் இறந்து போனால் அது மற்ற பெண்களை பாதிக்க வேண்டும். பிறகு, அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டும்’’ என்கிற தீராத கனவு அவருக்கு இருக்கிறது.

அடுத்து அவர் எடுக்கப் போகும் திரைப்படம் தலிபான்களைப் பற்றிய படம். சாஹர் உறுதியான குரலில் இப்படிச் சொல்லியிருக்கிறார்… ‘‘இந்தத் திரைப்படத்துக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசும், ஆஸ்கர் விருதும் கிடைக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இந்தத் திரைப்படத்தை எடுத்த பிறகு நான் உயிரோடு இருப்பேனா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இறைவனின் அருளாசியுடன் நிச்சயம் இந்தப் படத்தை எடுப்பேன்’’.

– பாலு சத்யா 

Sahar Saba (* August 28 1975 in Kabul ) is an Afghan filmmaker and actress .

2011 Saba Sahar was on the ZDF documentary co-produced Kabul Dream Factory of Sebastian Heidinger portrayed in the section “Forum” of the 2011 Berlin International Film Festival premiered [2]

திரைவானின் நட்சத்திரங்கள்! – 5

ஹாலிவுட் ரொம்ப உயரம்!

Image

வெற்றியாளர்களை நினைவுகூர்வது அவசியம். அதைவிட தோல்வி அடைந்தவர்களின் வாழ்க்கையை அலசுவதும் ஆராய்வதும் மிக மிக அவசியம். அதிலிருந்துதான் எங்கே தவறு, எப்படிச் சரி செய்வது, தடைகளை எப்படித் தாண்டுவது என்பதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியும். நடிகை பெக் என்ட்விஸ்லேயின் (Peg Entwistle) வாழ்க்கை, திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமே பாடம்!

‘ஹாலிவுட்’ என்றதும் பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது எது? அங்கே இருக்கும் பிரம்மாண்டமான ஸ்டூடியோக்களோ, பிரபல நடிகர்களோ, நடிகைகளோ, இயக்குநர்களோ அல்ல. லாஸ் ஏஞ்சல்ஸில், மவுன்ட் லீ மலையின் மீது பொறிக்கப்பட்டிருக்கும் ‘HOLLYWOOD’ என்ற எழுத்துகள்தான். அந்த மலையும் எழுத்துகளும் ஹாலிவுட் என்கிற பிரம்மாண்டத்தின், கனவுத் தொழிற்சாலையின் அடையாளம்! அந்த மலையின் மீது கஷ்டப்பட்டு ஏறி, அதிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் பெக் என்ட்விஸ்லே.

Image

1908, பிப்ரவரி 5ம் தேதி இங்கிலாந்து, வேல்ஸில் இருக்கும் போர்ட் டால்பாட் (Port Talbot) நகரில் பிறந்தார் பெக். அப்பா ராபர்ட் சைம்ஸ் என்ட்விஸ்லே நாடக நடிகர். அம்மா, எமிலி என்கிற மில்லிசென்ட் லில்லியன் என்ட்விஸ்லே. சிறு வயதிலிருந்தே பெக் என்ட்விஸ்லேவுக்கு ஒரு கனவு இருந்தது. நடிகை ஆகவேண்டும் என்கிற கனவு. திரையில் தோன்றி, ஆடவும் பாடவும் வேண்டும், பாராட்டுகளையும் கைதட்டல்களையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்ற கனவு. அது வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் அவர் கூடவே வந்தது. பெக்கின் ஆரம்ப நாட்கள் லண்டனில் இருக்கும் வெஸ்ட் கென்ஸிங்டன்னில் கழிந்தது.

சின்னஞ்சிறு பெண்ணாக பெக் இருக்கும் போதே அம்மா எமிலி இறந்து போனார். அது பெக் சந்தித்த முதல் இழப்பு, பேரிழப்பு. அம்மாவின் அரவணைப்பில்லாமல் வளரும் குழந்தை சந்திக்கும் அத்தனை பிரச்னைகளையும் எதிர்கொண்டார் பெக். அப்பா ராபர்ட் எஸ். என்ட்விஸ்லே, பிழைப்புக்காக பெக்கை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குக் கிளம்பினார். சின்சினாட்டி, ஓஹியோ, நியூ யார்க் என்று எங்கெங்கேயோ வாழ்ந்தார்கள். ராபர்ட் அமெரிக்காவில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. நாடகங்களுக்குப் பிரபலமாக இருந்த பிராட்வே பகுதியில் சில நாடகங்களில் ராபர்ட் நடிக்க, அந்த வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

டிசம்பர் 1922. பெக்கின் வாழ்க்கையில் மற்றொரு இடி விழுந்தது. நியூ யார்க்கில் இருக்கும் பார்க் அவென்யூவுக்கு அருகில் நடந்த கார் விபத்தில் ராபர்ட் என்ட்விஸ்லே இறந்து போனார். பெக்கின் சித்தப்பா ஹெரால்டு, குழந்தைகளை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனார். அவர், அப்போது பிராட்வேயின் பிரபல நாடக நடிகர் வால்டர் ஹேம்டனிடம் மேனேஜராக இருந்தார். பெக்கின் வாழ்க்கையில் கலை உலகம் மெல்ல அறிமுகமானது.

Image

1925. பெக், பாஸ்டனில் இருந்த ஒரு நாடகக்குழுவில் சேர்ந்தார். ‘ஹென்றி ஜுவட்’ (Henry Jewett) என்ற அந்தக் குழு அமெரிக்க அளவில் பிரபலமாக இருந்த நேரம் அது. பெக், தீவிரமாக நடிப்புக் கற்றுக் கொண்டார். மேடையில் தோன்றினார், சின்னச் சின்ன வேடங்களில். வால்டர் ஹேம்டன், பெக்கின் திறமையைப் பார்த்து தான் நடிக்கும் ‘ஹேம்லட்’ நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். அரசருக்கு விஷத்தைக் கொண்டு வந்து தரும் கதாபாத்திரம்!

***

அமெரிக்காவில் அப்போதெல்லாம் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நாடக நடிகர்களும் புகழ் பெற்றிருந்தார்கள். பிராட்வேயில் இருந்த சிறந்த நாடக நடிகர், நடிகைகளை ஹாலிவுட் அள்ளிக் கொண்டு போனது. அப்படி ஒரு வாய்ப்பு தனக்கு வராதா என்று காத்திருந்தார் பெக்.

நியூ யார்க்கில் அப்போது பிரபலமாக இருந்த ‘தியேட்டர் கில்ட்’ நாடக நிறுவனம் பெக்கை வேலைக்குச் சேர்த்துக் கொண்டது. அங்கே சேர்ந்த பிறகு, ‘மேன் ஃப்ரம் டொரண்டோ’ நாடகத்தில் ‘மார்த்தா’ என்ற கதாபாத்திரத்தில் முதன் முறையாக நடித்தார். 28 முறை அரங்கேறியது அந்த நாடகம். 1932 வரை, ‘தியேட்டர் கில்ட்’ தயாரித்த 10 நாடகங்களில் நடித்தார். ‘டாமி’ என்கிற நாடகம்தான் அவருக்குக் கொஞ்சம் பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. 238 முறை மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தின் மூலம்தான் வெளி உலகுக்குக் கொஞ்சம் அறிமுகமானார் பெக். பத்திரிகைகள் அவரைப் பற்றியும் சிறு குறிப்பு வரைந்தன.

Image

‘தியேட்டர் கில்ட்’ குழுவினர் நடிகர்களை அடிக்கடி எங்கேயாவது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். வாரா வாரம் நடிகர்களின் கதாபாத்திரங்களை மாற்றுவார்கள். அப்பாவி, நகைச்சுவை நடிகை, குணச்சித்திர வேடம்… என்று தான் ஏற்ற எல்லா பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் பெக். நாடகங்களில் நடித்தாலும் ‘ஹாலிவுட் கனவு’ அவரை விடாமல் துரத்தியபடி இருந்தது.

1927ல் ராபர்ட் கெய்த் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரும் ஒரு நடிகர். என்ன… மேடையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் நடித்தவர். அது தெரிந்தபோது அதிர்ந்து போனார் பெக். ராபர்ட் கெய்த்துக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு மகனும் இருந்தான். இதை மறைத்துவிட்டார் கெய்த். விஷயம் கேள்விப்பட்டு துடித்துப் போனார் பெக். 1929ல் கெய்த்திடம் இருந்து விவாகரத்துப் பெற்றார். முதல் மனைவி இருப்பதை மறைப்பது சட்டப்படி குற்றம். முதல் தாரம், வழக்குப் போட்டால் கெய்த் சிறைக்குப் போக வேண்டியதுதான். பெக்கின் நல்ல மனம், கெய்த்தைக் காப்பாற்றியது. தன்னிடம் இருந்த பணத்தை முதல் தாரத்துக்கு ஜீவனாம்சமாகக் கொடுத்து, வழக்கு நடக்காமல் காப்பாற்றினார்.

1932ன் முற்பகுதி. பிராட்வேயில் பெக் நடித்த நாடகம் ‘ஆலிஸ் சிட் பை தி ஃபயர்’ அரங்கேறியது. அந்த நாடகத்தை எழுதியவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜே.எம்.பேரி. நாடகத்தில் நடித்த ‘லாரட் டெய்லர்’ பிராட்வேயில் புகழ்பெற்ற நடிகை. அவருடைய குடிப்பழக்கத்தால், இரண்டு முறை நாடகம் நின்று போனது. பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம். நாடகக்குழு நிர்வாகம், மேலும் நாடகத்தை நடத்த விருப்பமில்லாமல் நடிகர்களை வீட்டுக்கு அனுப்பியது. அதற்காக பெக்குக்கும் மற்றவர்களுக்கும் தரப்பட்டது ஒரு வாரச் சம்பளம்!

***

அது அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை (Great Depression) நிலவிய காலம். நாடகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பதே அரிதாக இருந்தது. நாடகங்கள் தொடர்ந்து நடந்தால்தானே வாய்ப்புக் கிடைக்கும்? பிராட்வேயில் அதற்கு மேலும் காலம் கழிக்க முடியாது என்று தெரிந்து போனது. பெக், லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போக முடிவு செய்தார். பக்கத்திலேயே ஹாலிவுட். நடிக்க வாய்ப்புக் கிடைக்காமலா போகும்?

Image

1932, ஏப்ரல் மாதம் ஹாலிவுட்டுக்கு வந்தார் பெக். அங்கே பெண்களுக்காகவே இருக்கும் ‘ஹாலிவுட் ஸ்டூடியோ கிளப்’பில் அறை எடுத்துத் தங்கினார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்  கேட்டு அலைந்தார். அறை வாடகையே தாறு மாறாக இருந்தது. வேளா வேளைக்கு வயிறு பசிக்காமல் விடுகிறதா? அதற்கு வேறு தீனி போட்டாக வேண்டுமே! பெக் என்ட்விஸ்லேவுக்குத் தெரிந்த ஒரே வேலை நடிப்பு. வாடகை கொடுக்க முடியாமல்,  சித்தப்பாவின் துணையுடன் ‘பீச்வுட் கேன்யான் டிரைவ்’ என்ற ஓட்டலுக்கு இடம் பெயர்ந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புத் தேடி கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கினார்.

பெக்குக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமாவில் அல்ல. நாடகத்தில். மறுபடியும் நாடகமா? அயர்ந்து போனார். ஆனால், அவருக்கு அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ‘தி மேட் ஹோப்ஸ்’ என்ற நாடகம் அது. லாஸ் ஏஞ்சல்ஸில் மேடை ஏறியது. பத்திரிகையில் விமர்சனங்கள் எல்லாம் நல்லவிதமாக வந்தாலும் 12 நாட்களுக்கு மேல் ஓடவில்லை. மறுபடி பிரச்னை. பணத் தேவை. பெக் இறுக மூடப்பட்ட ஹாலிவுட் கதவுகளை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்கிற உத்வேகத்தோடு மோதிப் பார்த்தார்.

பலன் கிடைத்தது. சினிமாவில் நடிக்க முதல் வாய்ப்பு! பெக்கின் கனவு நிறைவேறுவதற்கான முதல் படி. துள்ளிக் குதித்தார். தாரை தாரையாக கண்ணீர் வந்தது. அது ‘தேர்ட்டீன் வுமன்’ என்கிற மர்மப் படம். ‘ரேடியோ பிக்சர்ஸ்’ (RKO) என்ற தயாரிப்பு நிறுவனம், பெக்கை அந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது. மிகச் சிறிய கதாபாத்திரம்தான். ஆனால், உற்சாகமாக நடித்தார். அந்தப் படம் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பினார். இனிமேல் தடையே இல்லாமல் மளமளவென்று வெற்றிப் படிகளில் ஏறிவிடலாம் என்றுமனக் கோட்டை கட்டினார். அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பெட்டிக்குள் முடங்கியது.

Image

படத்துக்கான அடிப்படை வேலைகள் முடிந்தன. திரையுலக வழக்கப்படி ‘தேர்ட்டீன் வுமன்’ சிறப்புக் காட்சி முக்கியமானவர்களுக்காக திரையிடப்பட்டது. அதைப் பார்த்தவர்கள் சொன்ன விமர்சனம் தயாரிப்பாளர்களை முகம் சுளிக்க வைத்தது. ‘என்னாங்க… இப்பிடி எடுத்திருக்கீங்க?’ என்ற கேள்வியால் தயாரிப்பாளர்கள் திணறிப் போனார்கள். திரைப்படத்தை திரும்ப எடிட் செய்தார்கள், இசைக் கோர்ப்பை லேசாக மாற்றினார்கள். ஆனால் திருப்தியாக இல்லை. ‘தேர்ட்டீன் வுமன்’ திரைப்படம் ரிலீஸாவது தள்ளிப் போனது. நொறுங்கிப் போனார் பெக். எத்தனை வருடப் போராட்டத்துக்குப் பின் வந்த முதல் வாய்ப்பு! இனிமேல் அவ்வளவுதானா? எல்லாம் முடிந்துவிட்டதா?!

1932, செப்டம்பர் 16. இரவு சாப்பாடு முடிந்தது. பெக், தன் சித்தப்பாவிடம், ‘‘அப்பிடியே பீச்வுட் பக்கம் ஒரு வாக் போயிட்டு, அங்கே இருக்குற மருந்துக் கடையில என் ஃபிரெண்ட்ஸையும் பார்த்துட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பாதி தூரம் போனதும் அவர் பாதை மாறியது. ‘HOLLYWOOD’ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும் மவுன்ட் லீ மலையில் ஏற ஆரம்பித்தார். அந்த எழுத்துகளுக்கு அருகே வந்து நின்றார். ஒவ்வொன்றும் 45 அடி உயரம், 30 அடி அகலம் கொண்டவை. தன் மேல் கோட்டை அழகாக மடித்து கீழே வைத்தார். பக்கத்தில் தன் பர்ஸையும் வைத்தார். அந்த போர்டை பராமரிக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் ஏணியில் ஏறி ‘H’ என்ற எழுத்தின் உச்சிக்குப் போனார். காற்று சில்லென்று அடித்தது. அதிலிருந்து தரையைப் பார்த்தார். குதித்தார். தற்கொலை செய்து கொண்ட போது அவருக்கு வயது 24.

இது நடந்து இரண்டு நாள் கழித்து, ஹாலிவுட் லேண்டில்  பெண்ணின் பிணம் ஒன்று கிடப்பதாக ஒரு பெண்மணி போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸ் வந்தது. பெக் விட்டுப் போன கோட்டும் பர்ஸும் கிடைத்தன. நேர்த்தியாக உடை அணிந்த, நீலக் கண்களை உடைய, அழகான கூந்தலுடன் கூடிய பெக்கின் பிணம் கிடைத்தது. பெக்கின் சித்தப்பா கதறியபடி அடையாளம் காட்டினார். பிரேத பரிசோதனையில் இடுப்பெலும்பு முற்றிலுமாக நொறுங்கிப் போய் பெக் மரணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image

பெக், இறப்பதற்கு முன்பு தன் பர்ஸில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதை அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்தன. ‘ஒரு கோழையாக இருப்பதை நினைத்து நான் பயப்படுகிறேன். எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதை நான் வெகு காலத்துக்கு முன்பே செய்திருந்தால், நிறைய வலிகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்’.

நிறைய படங்களில் நடிக்கவில்லை, பெரும் புகழும் பணமும் சம்பாதிக்கவில்லை. ஒரே ஒரு படம்தான். ஆனால், இன்றும் ஹாலிவுட்டில் மறக்க முடியாத ஒரு பெயராக இருப்பது ‘பெக் என்ட்விஸ்லே’. எவ்வளவோ போராடிப் பார்த்தவர் இன்னும் சில காலம் காத்திருந்திருக்கலாம் என்பதுதான் காலம் அவருக்கு சொன்ன தீர்ப்பு.

அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து, ‘தி பீவர்லி ஹில்ஸ் ப்ளேஹவுஸ்’ நிறுவனத்திடம் இருந்து பெக்கின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை சித்தப்பா ஹெரால்ட் வாங்கிப் பிரித்தார்.

‘மிஸ் பெக் என்ட்விஸ்லே அறிவது. நாங்கள் அடுத்து ஒரு திரைப்படம் தயாரிக்க இருக்கிறோம். அதில் நடிப்பதற்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். கதா பாத்திரம் என்னவென்றால், மன உளைச்சலால் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்…’

இதை என்னவென்று சொல்வது? விதியா? எப்படி இருந்தாலும் பெக் இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்திருக்கலாம்.

– பாலு சத்யா  

Peg Entwistle

Born – Millicent Lilian Entwistle, 5 February 1908, Port TalbotWales

Died – 16 September 1932 (aged 24), HollywoodCalifornia, U.S.

Cause of death – Suicide

Resting place – Oak Hill Cemetery

Nationality – English

Occupation – Actress

Years active – 1925–1932

Spouse(s) – Robert Keith (m. 1927–1929)

திரைவானின் நட்சத்திரங்கள் – 4

Image

வாழ்க்கை சிலரை பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கும். வாய்ப்புகளை வாரி வழங்கும். கிடுகிடுவென்று வெற்றிப் பாதையில் ஏறி மேலே மேலே போய்விடுவார்கள்.

பலருக்கோ கரடு முரடான மலைப்பாதையாக இருக்கும். பல தடைகளைத் தாண்டித்தான் வெற்றி என்கிற கனியைப் பறிக்க முடியும்.

இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களில் ஒருவர் மார்த்தா மெஸ்ஸாரோஸ் (Marta Meszaros). ஹங்கேரியின் மிக முக்கியமான பெண் இயக்குநர்… ஹங்கேரிய சினிமா வரலாற்றில் முதல் பெண் இயக்குநர். இந்த உயரத்தை அடைய அவர் பட்ட சிரமங்கள் ஒரு தனி நூலாக எழுதப்பட வேண்டியவை.

ஹங்கேரியில் இருக்கும் புத்தாபெஸ்டில் பிறந்தார் மார்த்தா. அப்பா ஒரு சிற்பி. சரியான வருமானம் இல்லை. வறுமை தீர வேண்டுமே? 1935ல் ரஷ்யாவுக்கு இடம் பெயர்ந்தது மார்த்தாவின் குடும்பம்.

மார்த்தாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது, அவருடைய அம்மா இறந்து போனார். சோவியத் ரஷ்யாவின் அதிபராக ஸ்டாலின் இருந்த காலம் அது. அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் எதிராக இருந்தவர்கள் களையெடுக்கப்பட்ட நேரம். மார்த்தாவின் அப்பா, லாஸ்ஸியோ மெஸ்ஸாரோஸ் (Laszio Meszaros) அந்த லிஸ்டில் இருந்தார். கைது செய்யப்பட்டு, கிர்கிஸ்தான் வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிறையில் இரண்டு ஆண்டுகள் இருந்த அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் இறந்த தகவல்கூட பல ஆண்டுகள் கழிந்த பிறகுதான் மார்த்தாவுக்குத் தெரியும்.

மார்த்தா உறவினர் ஒருவரால் வளர்க்கப்பட்டார்.

மாஸ்கோவில் பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஹங்கேரிக்குத் திரும்பினார் மார்த்தா. ஆனாலும் அவர் நினைத்ததைப் படிக்க முடியாத அளவுக்குப் பல கட்டுப்பாடுகள். அப்பா ஒரு கலைஞர் என்பதாலோ என்னவோ அவருக்கு நாடகத்திலும் சினிமாவிலும் அப்படி ஓர் ஈடுபாடு இருந்தது. படிப்பதற்காக மறுபடியும் மாஸ்கோவுக்கே போனார் மார்த்தா.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் மாஸ்கோவில் இருந்த ஒரு திரைப்படப் பள்ளியில் (The Russian State Institute of Cinematography) சேர்ந்தார். ‘‘என்னால் ஹங்கேரியில் இருக்கும் திரைப்படப் பள்ளியில் சேர முடியவில்லை. அங்கே பெண்கள் இயக்குநர் படிப்புப் படிக்க முடியாது. எனக்கு ரஷ்ய மொழி நன்றாகத் தெரியும் என்பதால் மாஸ்கோவில் இருந்த திரைப்படப் பள்ளியில் சேர்ந்தேன். 50களில் ரஷ்யாவில் நிறைய படங்கள் தயாரிக்கப்படவில்லை. வெளிவந்த ஓரிரு படங்களும் அரசு சார்ந்த படங்களாக இருந்தன. நான் சேர்ந்த பள்ளியில் மிக மிகத் திறமையான, சுவாரஸ்யமான ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால், பிராக்டிக்கலாக எதுவும் கற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கான பண வசதி பள்ளியில் இல்லை. பண்பாட்டையும் இலக்கியத்தையும் கற்றுக் கொள்ளவும், நிறைய சினிமா பார்க்கவும் ஏற்ற இடம். எப்போதாவது புகைப்படம் எடுப்பதற்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். அவ்வளவுதான்’’ என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் மார்த்தா.

Image

1956ல் ஹங்கேரிக்குத் திரும்பினார். அரசுக்கு எதிராக புரட்சி நடந்து கொண்டிருந்த நேரம். ஆவணப்படங்கள் எடுக்கலாம் என்று நினைத்தார். எதைப் பற்றி எடுப்பது என்கிற கேள்வி வந்த போது வறுமையில் வாடும் மக்களைப் பற்றி எடுக்கலாம் என முடிவு செய்தார். ஆனால், சென்சார் அதிகாரிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது. ‘‘கம்யூனிச ஆட்சியில் ஏழைகளா? சான்ஸே இல்லை’’ என்று மறுத்தார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு 4 குறும்படங்களை இயக்கினார் மார்த்தா.

அப்போதெல்லாம் கேமராவைத் தூக்கிக் கொண்டு படமெடுக்க இஷ்டத்துக்கு வெளியே போக முடியாது. ஸ்டுடியோவில்தான் படம் எடுக்க வேண்டும். அதற்காகவே தனியாக ஸ்டுடியோக்கள் இயங்கின. ‘புத்தாபெஸ்ட் நியூஸ் ரீல் ஸ்டுடியோ’வில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே இருந்தபோதுதான் தன்னுடைய முதல் நான்கு ஆவணப்படங்களை எடுத்தார். பிறகு, ரோமேனியாவில் இருக்கும் ‘அலெக்ஸாண்ட்ரு சாஹியா’ (Alexandru Sahia) ஸ்டுடியோவில் இரண்டாண்டுகள் வேலை பார்த்தார். ஏனோ மனம் ஒட்டாமல் ஹங்கேரிக்கே திரும்பினார். 1968 வரை அங்கே இருந்தவர் பல குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கினார். பிறகு ‘மாஃபிலிம் 5’ என்ற நிறுவனத்துடன் இணைந்தார். தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்க அவர் 1968 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

‘‘மற்ற நாடுகளைப் போல ஹங்கேரி அவ்வளவு மோசமானதில்லை. உதாரணமாக போலந்தில் சென்சார் மிகக் கடுமையாக இருக்கும். ஹங்கேரியில் அப்படி இல்லை’’ என்று ஒரு பேட்டியில் மார்த்தா குறிப்பிட்டிருந்தாலும் தன் சொந்த நாட்டில் வேறு விதமான பிரச்னைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஸ்டுடியோவை அரசே நடத்தி வந்தது. ஒரு திரைப்படத்துக்கான கதை, வசனத்தை எழுதி முடித்தவுடன் அதை ஸ்டுடியோவுக்கு அனுப்ப வேண்டும். அங்கே அதைப் பரிசீலிப்பதற்காகவே இருக்கும் குழு முழு ஸ்க்ரிப்டை அக்குவேறு, ஆணிவேராக அலசும். அந்தக் குழுவுக்கு கதையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றினால் குறிப்பிடுவார்கள். உரிய மாற்றங்களைச் செய்த பிறகு ஸ்கிரிப்டை ஸ்டுடியோ இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். அவர்தான் இந்தக் கதையைப் படமாக எடுக்கலாமா, அதற்கு எவ்வளவு பணத்தை ஒதுக்கலாம் என்பதையெல்லாம் தீர்மானிப்பார். அத்தோடு விஷயம் முடிந்துவிடுவதில்லை.

அதற்குப் பிறகு ஸ்கிரிப்டை ஸ்டுடியோ இயக்குநர், பண்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார். அங்கே மறுபடியும் ஒரு குழு, வரி வரியாக திரைக்கதை, வசனத்தைப் படிக்கும். பல நேரங்களில் பல காட்சிகள் உருவப்படும். சில நேரங்களில் சில வசனங்கள் நீக்கப்படும். ‘‘பண்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் ஸ்க்ரிப்டுகள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் மார்த்தா. இந்த நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகு, படத்தைத் தயாரிக்க அனுமதி கிடைக்கும்.

Image

படம் தயாரித்த பிறகு உடனே ரிலீஸ் செய்துவிட முடியாது. ஸ்டுடியோவில் இருப்பவர்கள், திரைப்படத்தை பார்வையிடுவதற்காகவே இருக்கும் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகளுக்கு ப்ரிவியூ ஷோ போட்டுக் காட்ட வேண்டும். அவர்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அதை சரி செய்ய வேண்டும்.

Image

இவ்வளவு இன்னல்களுக்கு இடையில் ஹங்கேரி திரைத்துறையில் கால் பதித்த மார்த்தா மெஸ்ஸாரோஸ் செய்த சாதனை அளப்பரியது. 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், பல குறும்படங்களை இயக்கினார். பல விருதுகளை பெற்றன அவருடைய படங்கள். இத்தனைக்கும் இயக்கத்துக்காக அவர் கோடிக்கணக்கிலோ, ஏன்… லட்சக்கணக்கிலோ கூட சம்பளம் பெறவில்லை. எல்லாமே சொற்பத் தொகை. காரணம், சம்பளத்தை வழங்கியது அரசு. அவருடைய படம் நூறு நாடுகளில் விநியோகஸ்தர்களால் திரையிடப்படும். வருமானம் அரசுக்குக் கிடைக்கும். ஆனால் அவருக்கு ஒரு பைசா கிடைக்காது.

மார்த்தாவும் பல இயக்குநர்களும் இந்தப் பிரச்னைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். இறங்கி வந்த அரசு, ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஏதாவது ஒரு திரைப்படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பானால், இயக்குநருக்கு தொலைகாட்சி நிலையம் கணிசமான தொகையை வழங்க வேண்டும். இந்தத் திட்டம்கூட ஹங்கேரியில் மட்டும்தான் செல்லுபடியாகும். பக்கத்தில் இருக்கும் போலந்து நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் ஒரு பைசாகூட இயக்குநருக்குக் கிடையாது. இந்த மாதிரியான சூழலில்தான் பல சிறந்த படங்களை இயக்கினார் மார்த்தா.

மார்த்தாவின் படங்கள் அவர் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களைப் பல வழிகளில் பேசின. ஏழ்மை, குழந்தைகள், பெண்கள் என பலரை முன்னிறுத்தி அந்த அனுபவங்கள் படைப்புகளாயின. சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்தது, ஆதரவற்ற வாழ்க்கை, புரட்சிக்குப் பின்பான ஹங்கேரி சூழ்நிலை எல்லாமே அவர் படங்களில் பதிவு செய்யப்பட்டன. கிழக்கு ஐரோப்பா மறந்துவிட்ட பல யதார்த்தங்களைப் படம் பிடித்தன. பெண்கள் நிலை, கிராமத்துக்கும் நகரத்துக்கும் நடுவே நிலவும் பண்பாட்டு பிரச்னை, மதுப் பிரச்னை, தலைமுறை இடைவெளி, முதலாளி-தொழிலாளி சிக்கல்கள், குழந்தைகள் நிலை என பல களங்களைக் கொண்டவை அவர் திரைப்படங்கள்.

‘டயரி ஃபார் மை மதர் அண்ட் ஃபாதர்’ (Diary for my Mother and Father) அவர் இயக்கத்தில் 1990ல் வெளியான திரைப்படம். ஒரு மாணவியின் பார்வையில் படம் விரிகிறது. அந்த மாணவி, கம்யூனிச சூழலில் வளர்ந்தவள். ஹங்கேரிக்கு வந்தால் அது வேறு விதமாக இருக்கிறது. மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகப் போராடுகிறார்கள். வீட்டிலோ அவளுடைய சகோதரியே அவளை சேர்க்க மறுக்கிறாள். மாணவி, திருமணமான ஒருவனைக் காதலிக்க, அவனோ போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவுகிறான். கடைசியில் வேலைநிறுத்தத்தில் போராடும் தொழிலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறான்.

அரசு, அதற்கு எதிரான கிளர்ச்சி இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படம் மார்த்தாவின் உண்மை வாழ்க்கையின் அடையாளம் என்றே சொல்லலாம்.

Image

மார்த்தாவின் குடும்ப வாழ்க்கை மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலையாகத்தான் இருந்தது. 1957ல் லாஸ்லோ கார்டா (Laszlo Karda) என்ற இயக்குநரை மணந்தார். இரண்டே வருடங்கள்… இருவரும் பிரிந்தார்கள். 1960ல் மிக்லோ ஜேன்ஸ்கோ (Miklo Jansco) என்ற இயக்குநரை மணந்தார். 1973ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு மிக்லோ ஜேன்ஸ்கோ ஜூனியர், நைக்கா ஜேன்ஸ்கோ (Nyika Jansco) என இரண்டு பிள்ளைகளும், காஸியா ஜேன்ஸ்கோ (Kasia Jansco) என்ற மகளும் பிறந்தார்கள். இரு பிள்ளைகளுமே ஒளிப்பதிவாளர்கள். மார்த்தாவின் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். மார்த்தா, போலந்து நடிகர் ஜேன் நோவிக்கியை (Jan Nowicki) மணந்தார். 2008ல் அந்த மணவாழ்க்கை முறிந்தது.

கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு தேசத்தில் முதல் பெண் இயக்குநர் என்கிற முத்திரை பதித்தவர் மார்த்தா. கடந்த 2012ம் ஆண்டு வரை அவர் இயக்கிய திரைப்படங்கள் வெளி வந்திருக்கின்றன. இன்னமும் திரைப்படத்தின் மேல் தீராத காதலுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சமூகத்தையும் மனிதர்களையும் அந்த அளவுக்கு நேசித்ததுதான் அவர் திரைப்படத்துறையில் ஈடுபடக் காரணம். ஒரு பேட்டியில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்… ‘‘எனக்கு வாழ்க்கையைப் பிடிக்கும். வாழ்வது பிடிக்கும். இன்றும் உணர்சிகரமான தருணங்களை அனுபவிக்கிறேன். ஒரு நல்ல மனுஷியாக நான் வாழ வேண்டும் என விரும்புகிறேன். பேசுவது, படிப்பது, சண்டை போடுவது எல்லாம் எனக்குப் பிடிக்கும். எல்லாவற்றையும் விட மனிதர்களை எனக்குப் பிடிக்கும்’’.

– பாலு சத்யா

Márta Mészáros
Born 19 September 1931 (age 81)
BudapestHungary
Occupation Film director
Screenwriter
Years active 1954 – present

திரைவானின் நட்சத்திரங்கள் – 3

Image

இங்கே சினிமா தியேட்டர்கள் இல்லாத ஊர் இருக்கிறதா? இருக்கிறது… விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு. சரி. சினிமா தியேட்டரே இல்லாத நாடு இருக்கிறதா? இருக்கிறது. சவூதி அரேபியா!

அங்கே சினிமா பார்க்க வேண்டுமென்றால் டிவிடியில், வீடியோவில் அல்லது இணையதளத்தில்தான் பார்க்க முடியும். வேண்டுமானால் வீட்டில் ‘ஹோம் தியேட்டர்’ அமைத்துக் கொள்ளலாம். தியேட்டரில் டிக்கெட் வாங்கி, இடைவேளையில் நம் இஷ்டத்துக்கு பாப்கார்ன் கொரித்து, சமோசா, பப்ஸ் சாப்பிட்டு, கோககோலா, காபியெல்லாம் குடிக்க முடியாது. அந்தக் கொடுப்பினை சவூதி வாழ் மக்களுக்கு இல்லை. ஆனால், அங்கே சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள். சில படங்களும் கூட எடுக்கப்படுகின்றன. திரையிடத் தியேட்டர்கள்தான் இல்லை.

Imageசவூதி அரேபியாவைச் சேர்ந்த இயக்குநர் அப்துல்லா அல்-அயாஃப் (Abdullah Al-Eyaf) இயக்கிய ‘சினிமா 500 கி.மீ’ என்ற ஆவணப்படம் 2006ல் வெளியானபோது சவூதியில் பெரிய சர்ச்சையே கிளம்பியது. சர்ச்சைக்குக் காரணம் அதன் கதை. டாரிக் அல் ஹுசேனி 21 வயது இளைஞன். தனக்கு பாஸ்போர்ட் வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறான். அதற்கு அவன் குறிப்பிட்டிருக்கும் காரணம் வெகு சுவாரஸ்யம். ‘இங்கே தியேட்டர்கள் இல்லை. எனக்கு தியேட்டரில் சினிமா பார்க்க ஆசையாக இருக்கிறது. இங்கிருந்து 500 கி.மீ. தூரத்தில் இருக்கும் பஹ்ரெயினில் இருக்கும் தியேட்டரில் படம் பார்ப்பதற்காக எனக்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறது…’

அப்துல்லா அல் அயாஃப், ‘சினிமா 500 கி.மீ.’ படத்தை எடுக்க சவூதியின் பண்பாட்டு மற்றும் கலாசார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. படம் தயாரான பிறகு தன் சொந்த நாட்டிலேயே ஒன்றிரண்டு தனியார் இடங்களில்தான் அதைத் திரையிடவும் முடிந்தது. மற்றபடி சொந்த மண்ணில் பொதுமக்களுக்கு திரையிட அவருக்கு வழியே இருக்கவில்லை.

Image

இப்படி சினிமாவை ஒதுக்கி வைத்திருக்கும் சவூதியில் ஒரு பெண் திரைப்பட இயக்குநர்! நம்ப முடியாத இந்தச் செய்தியை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் ஹைஃபா அல்-மன்சூர் (Haifaa al-Mansour).  ‘வாட்ஜ்டா’ (Wadjda) என்ற அற்புதமான திரைப்படத்தை இயக்கி, ‘யார் இந்த ஹைஃபா?’ என உலகமெங்கும் இருக்கும் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் இந்தப் பெண்மணி.

Image

ஹைஃபாவின் தந்தை, அப்துல் ரஹ்மான் மன்சூர் ஒரு கவிஞர். மொத்தம் 12 குழந்தைகள். எட்டாவதாகப் பிறந்தவர் ஹைஃபா. அதென்னவோ சிறு வயதிலிருந்தே சினிமா மோகம் அவரைப் பிடித்து ஆட்டியது. தந்தை அப்துல் ரஹ்மான் மன்சூர் நல்ல திரைப்படங்களைத் தேடி எடுத்து வந்து, மகளுக்கு வீடியோவில் போட்டுக் காட்டி, சினிமா ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார். கெய்ரோவில் இருக்கும் அமெரிக்கன் யுனிவர்சிட்டியில் இலக்கியத்தில் பட்டப்படிப்புப் படித்தார் ஹைஃபா. ஆனாலும் சினிமா ஆசை உள்ளே சிறு பொறியாக கனன்று கொண்டே இருந்தது. தயங்கித் தயங்கி சினிமாவுக்கான படிப்புப் படிக்க வேண்டும் என்ற தன் ஆசையை அப்பாவிடம் சொன்னார். அப்பாவுக்கு விருப்பம்தான். ஆனால் வீட்டில் இருந்த மற்றவர்களால் பூகம்பம் வெடித்தது.

Image

சவூதி அரேபியாவில் பெண்கள் இது போன்ற பொது வெளியுடன் தொடர்புடைய வேலைகளில் ஈடுபட முடியாது. எங்கேயோ வெளிநாட்டில் அதற்கான படிப்பைப் படித்துவிட்டு வந்தாலும் உள்ளூரில் அந்தப் பட்டத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் தடுத்தார்கள். ஆனால், ஹைஃபா  பிடிவாதமாக இருக்கவே, ஆஸ்திரேலியாவில், சிட்னியில் இருக்கும் ஒரு திரைப்படப் பள்ளியில் அவரை சேர்த்துவிட்டார் அப்துல் ரஹ்மான் மன்சூர்.

திரைப்படப் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வந்தார் ஹைஃபா. அடுத்து? ஆரம்ப முயற்சியாக குறும்படங்களை இயக்கினால் என்ன? இந்த யோசனைக்கு மறுபடியும் வீட்டில் எதிர்ப்பு. வெளியூரில் இருந்த தூரத்து உறவினர்கள் எல்லாம் அவர் தந்தையை கடிதங்களில் கடுப்படித்தார்கள். ‘ஹைஃபாவை வெளிநாட்டுக்கு அனுப்பி சினிமா கத்துட்டு வரச் சொன்னீங்களாமே! அவ ஏதோ கேமராவை தூக்கிட்டு சினிமா எடுக்கப் போறாளாமே? இதெல்லாம் கொஞ்சம்கூட நல்லால்ல’.

ஹைஃபாவின் தந்தை எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. இவ்வளவு எதிர்ப்புகளையும் தாண்டி, தன் மகள் பெண்ணாகவே இருந்தாலும் அவளால் நினைத்ததை அடைய முடியும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு இருந்தது. மகளின் விருப்பத்துக்கு மானசீகமாக பச்சைக்கொடி காட்டினார். ‘ஹூ’ (Who), ‘தி பிட்டர் ஜர்னி’ (The Bitter Journey), ‘தி ஒன்லி வே அவுட்’ (The Only Way Out) என மூன்று குறும்படங்களை இயக்கினார் ஹைஃபா. மூன்றாவது குறும்படமான ‘தி ஒன்லி வே அவுட்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐக்கிய அரேபிய அமீரகமும் (United Arab Emirates), ஹாலந்தும் அந்தப் படத்துக்கு பரிசுகள் வழங்கின.

தொடர்ந்து ‘வுமன் வித்தவுட் ஷேடோஸ்’ (Women Without Shadows) என்ற ஆவணப்படத்தை இயக்கினார் ஹைஃபா. அதில் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் வாழும் பெண்களின் மறைக்கப்பட்ட பக்கங்களைப் பதிவு செய்திருந்தார். 17 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட அந்த ஆவணப்படம், ‘மஸ்கட் திரைப்பட விழா’வில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும், ராட்டர்டாமில் நடந்த ‘நான்காவது அரேபிய திரைப்பட விழா’வில் ஜூரிகளுக்கான சிறப்பு விருதையும் பெற்றது. இந்த முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற்ற பிறகுதான் முழுநீளத் திரைப்படம் எடுப்பதில் தீவிரமானா ஹைஃபா.

சவூதி அரேபியாவில் 2006ல் வெளியான ‘கெயிஃப் அல்-ஹல்’ (Keif al-Hal) மட்டும்தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம். சவூதி நடிகை நடித்து, துபாயில் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தாலுமே கூட அந்தப் படத்தை இயக்கியவர் ஒரு பாலஸ்தீன இயக்குநர். அவர் பெயர் இஸிடோர் முஸல்லாம் (Izidore Musallam). அரேபியாவில், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணால் எழுதி, இயக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் ஹைஃபாவின் ‘வாட்ஜ்டா’தான். இதயத்தில் சிறு வேதனையைக் கிளர்ந்தெழச் செய்யும் மென்மையான கதை.

சவூதியின் தலைநகரான ரியாத்தில் வாழும் 12 வயது பெண் வாட்ஜ்டா. பழமைவாதத்தைப் பிடிவாதமாகப் பற்றிக் கொண்டிருக்கும் மண்ணில் வாழ்ந்தாலும், ஜீன்ஸ், ஸ்னீக்கர்ஸ் அணிய விரும்புகிறவள். ராக் இசை கேட்பவள். அவளுக்கு இருக்கும் ஒரே ஆசை, கனவு பச்சைநிறத்தில் ஒரு சைக்கிளை வாங்கவேண்டும். அதில் ஏறி ஊர்த் தெருவில் பட்டாம்பூச்சியாகப் பறக்க வேண்டும். முக்கியமாக அவள் நண்பன் அப்துல்லாவை  சைக்கிளில் முந்த வேண்டும். ஆனால், இந்த ஆசை யார் நினைத்தாலும் நடக்காத காரியம். அங்கே ஆண்களுக்கு மட்டும்தான் சைக்கிள் ஓட்ட அனுமதி.

எங்கே மகள் சைக்கிள் வாங்கிவிடுவாளோ என்கிற பயத்திலேயே வாட்ஜ்டாவின் தாய் அவளுக்கு எந்தப் பணமும் கொடுக்க மறுக்கிறாள். அந்த சமயத்தில் அவள் படிக்கும் பள்ளியில் குரான் ஒப்பிக்கும் போட்டி ஒன்று நடக்கிறது. அதில் கலந்து கொண்டு, அதில் கிடைத்த பரிசுத் தொகையில், தான் விரும்பிய சைக்கிளை வாங்குகிறாள் வாட்ஜ்டா.

இந்தப் படத்தை இயக்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னால், தன் மகள் இயக்கிய முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்காமலேயே இறந்து போனார் ஹைஃபாவின் தந்தை அப்துல் ரஹ்மான் மன்சூர்.

‘‘அப்பா இருந்திருந்தால் என்னை நினைத்து நிச்சயம் பெருமைப்பட்டிருப்பார். அவர் எனக்கு ஆதரவாகவும், என் கனவு நிறைவேற வேண்டும் என்று விரும்பியவர். சவூதியில் இது போன்ற மனிதர்களைக் காண்பது அரிது’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஹைஃபா.

ஆனால், இந்தப் படத்தை எடுக்க அவர் பட்ட பாடு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் போன்ற திரைத் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளாத பிரச்னைகளை எல்லாம் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சவூதி அரேபியாவில் பெண்கள், ஆண்களுடன் சேர்ந்து வேலை பார்க்க அனுமதி இல்லை. ஒரு அந்நிய ஆணுடன் சேர்ந்து தெருவில் நடக்கக்கூட முடியாது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அதில் ஆண்களும் பணியாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. பிறகு எப்படித்தான் ஒரு படத்தை இயக்குவது?

பழமைவாதிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வெளிப்புறப் படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் ஒரு வேனுக்குள் ஒளிந்து கொள்வார் ஹைஃபா. அதற்குள் இருந்தபடியே நடிகர்களுக்கு போனிலோ, வாக்கி டாக்கியிலோ எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்வார். பெண்கள் நடிப்பதும் சவூதியில் இருக்கும் பல ஆண்களுக்குப் பிடிக்காத ஒன்று. ‘வாட்ஜ்டா’ பாத்திரத்துக்குப் பொருத்தமான பெண் கிடைக்காமல் திணறிப் போனார் ஹைஃபா. ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான்  ‘வாட் முகமது’ (Waad Mohammed) என்ற 12 வயதுப் பெண் அவருக்குக் கிடைத்தார். ‘ரொம்ப சாமர்த்தியமான பெண்’ என்று அந்தச் சிறுமியைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ஹைஃபா.

படத்தை எடுத்து முடித்த பிறகு மற்றொரு பிரச்னை. எங்கே திரையிடுவது? அதற்கான இடத்தைத் தானே நேரில் போய்த் தேடலாம் என்றால் அதற்கும் வழியில்லை. சவூதி அரேபியாவில் ஒரு பெண் தனியாக நடந்து போவதோ, காரை ஓட்டிச் செல்வதோ முடியாது. அதாவது, பெண்கள் சர்வசாதாரணமாக நடமாட முடியாது. அதோடு, அவரால் எது ஆபத்தான பகுதி என்பதையும் அடையாளம் காண முடியவில்லை. எப்படியோ சில இடங்களில் ‘வாட்ஜ்டா’வை திரையிட்டார். மக்கள் கரவொலி எழுப்பி வரவேற்றார்கள். 2012ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிட்டார். உலக ரசிகர்கள் அந்தப் படத்தை உச்சி மோந்து கொண்டாடினார்கள்.

விமர்சனங்கள் வந்தன. அவர் சார்ந்த மதத்துக்கு எதிராக இருந்ததாக அவரைத் திட்டி எழுதிய மெயில்களைப் புறந்தள்ளினார் ஹைஃபா. அவற்றை விட அவர் படத்தைப் பாராட்டி டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வந்த விமர்சனங்கள்தான் அதிகம். எழுதி அனுப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

அமெரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார் ஹைஃபா. இப்போது, பஹ்ரெயினில் தன் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஒரே ஒரு முழுநீளப்படம்தான் இயக்கியிருக்கிறார். ஆனால், அது கால காலத்துக்கும் பேசப்படும். ஏனென்றால், தடையை மீறி, தைரியமாக அவர் இயக்கிய ‘வாட்ஜ்டா’, சவூதியில் நிலவும் பழமைவாத நடவடிக்கைகளை நாசூக்காக, அதே நேரம் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

– பாலுசத்யா

Image

Haifaa al-Mansour

Haifaa al-Mansour (Arabic: هيفاء المنصور‎, born 10 August 1974) is a film director from Saudi Arabia. She is one of the country’s best-known and most controversial directors, and the first female Saudi filmmaker.

Films

  • Who? (من؟)
  • The Bitter Journey (الرحيل المر)
  • The Only Way Out (أنا والآخر)
  • Women Without Shadows (نساء بلا الظل)
  • Wadjda (وجدة)

திரைவானின் நட்சத்திரங்கள் – 1

‘சினிமாவில் பெண்களால் சாதிக்க முடியும்’ என்று சொன்னால் இன்றைக்கும் ஏளனமாகப் பார்க்கிறவர்கள் அனேகம் பேர். பெண்களுக்கான தொழில் இதுதான் என்று நடிப்பு, பாடல், நடனம் உள்ளிட்ட சில துறைகளை முத்திரை குத்தி வைத்திருக்கிறது திரைத்துறை. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மேலே மேலே எட்டு வைத்து ஏறி, சிகரம் தொட்ட பெண்கள் உலகில் அனேகம் பேர். உலக அளவில், திரைப்படத்துறையில் எத்தனையோ எதிர்ப்புகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டு, அழுத்தமாகக் காலூன்றி கோடிக்கணக்கானவர்களை பிரமிக்க வைத்த பெண் நட்சத்திரங்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய அரிய தகவல்கள் இந்தப் பகுதியில்…

Image

அப்பா வயதானவர். முக்கியமாக வேலையில்லாதவர். அம்மாவுக்கு பார்வையில்லை. வெளியே போனால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயத்தில் மகள்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வளர்க்கிறார் அப்பா. கிட்டத்தட்ட 12 வருடங்கள் வெளி உலகமே தெரியாமல் வளர்கிறார்கள் அந்தச் சிறுமிகள். இந்தக் கொடுமையை சகிக்க முடியாமல் அண்டை வீட்டில் இருப்பவர்கள் சமூக சேவகர்களுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். ஒரு சமூக சேவகி வந்து பார்க்கிறார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சிறுமிகளை விடுவித்து, தெருவில் சுதந்திரமாக நடமாடவும், மற்ற சிறுவர்களுடன் விளையாடவும் சொல்கிறார். வீட்டுக்குள்ளேயே பூட்டி வளர்க்கப்பட்டதால் அந்தச் சிறுமிகளுக்கு மற்றவர்களுடன் பேசத் தெரியவில்லை. அறைக்குள் நடந்து பழகியவர்களால் தெருவில் சரியாக நடக்கக்கூட முடியவில்லை…

Image

மனதை கனக்கச் செய்யும் இந்த நிகழ்வு ஓர் உண்மைச் சம்பவம். இதை அடிப்படையாக வைத்து ‘தி ஆப்பிள்’ என்கிற படத்தை இயக்கியபோது சமீரா மேக்மல்பாஃபுக்கு 17 வயது. 1998ம் வருடம் கேன் திரைப்பட விழாவில் ‘தி ஆப்பிள்’ திரையிடப்பட்டது. உலகிலேயே கேன் திரைப்பட விழாவில் பங்கேற்ற இயக்குநர்களில் மிக இளம் வயது (18) இயக்குநர் என்கிற புகழ் சமீராவுக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு 30 நாடுகளில் கிட்டத்தட்ட 100 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது அந்தப் படம்.

சமீராவின் தந்தை மோசென் மேக்மல்பாஃப் இயக்குநர், எழுத்தாளர். பிறகென்ன… மகளும் இயக்குநராவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். பெண்களுக்கான உரிமைகள் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட ஈரானில் அது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
‘‘காலம் காலமாக, ஒரு பெண்ணால் இயக்குநராக ஆகவே முடியாது என்கிற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாகப் பதிந்து போய்விட்டது. அதனால்தான் இந்தத் தொழில் பெண்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கிறது’’ என்று ஒரு பேட்டியில் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார் சமீரா.

அது மார்ச் மாதம், 27ம் தேதி, 2007ம் வருடம். நேரம் சரியாக 12:20. ஆப்கானிஸ்தானில் சர்போல் நகரத்தில் ‘டூ லெக்டு ஹார்ஸ்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் சமீரா. ‘‘சவுண்ட்… கேமரா… ஆக்ஷன்!’’ என்று சமீரா குரல் கொடுத்தபோது அந்த அசம்பாவிதம் நடந்தது. ஏற்கனவே துணை நடிகர்களின் கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்திருந்த ஒருவன், உயரமான கூரை மேலிருந்து ஒரு வெடிகுண்டை வீசினான். அதிர்ஷ்டவசமாக சமீராவும் உடனிருந்த தந்தையும் உயிர் தப்பினார்கள். ஆனால், படக்குழுவைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தார்கள், ஒரு குதிரை இறந்து போனது. இந்த அசம்பாவிதத்துக்கு தலிபான்களோ, அல்கொய்தாவோ பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், சமீரா குடும்பத்தினர் மீது நடந்த தாக்குதல் என்பது மட்டும் உறுதியானது. மோசென், ஈரானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அவருடைய ‘கந்தஹார்‘ பட ஷூட்டிங்கில் இருந்த போது இருமுறை கொலைத் தாக்குதலுக்கு ஆளாகி தப்பித்தார். சமீராவின் ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’ பட ஷூட்டிங்கின் போது அவருடைய தங்கை ஹானா மக்மல்பாஃபை இருமுறை கடத்துவதற்கான முயற்சியும் நடந்தது.
இந்தச் சூழலில்தான் சமூகம் சார்ந்த, யதார்த்தமான, இயல்பான நிகழ்வுகளை திரைப்படமாக இயக்கினார் சமீரா. ஆரம்பத்தில் சமீராவின் வெற்றிக்குப் பின்னால் இருந்து உதவியவர்கள் அவருடைய பெற்றோர். தந்தை மோசென் பல அற்புதமான படங்களை இயக்கியவர். அவருடைய ஐந்து படங்கள் ஈரானில் தடை செய்யப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் அரசியலில் ஈடுபட்ட மோசென் அதை விட்டுவிட்டு வானொலியில் வேலை பார்க்கப் போனபோது பழக்கமானார் பாத்திமா மெஷ்கினி . மோசென் நிகழ்ச்சி அமைப்பாளர். பாத்திமா அறிவிப்பாளர். இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு முதல் குழந்தையாக 1980, பிப்ரவரி 15ல் பிறந்தார் சமீரா. அடுத்தது மெய்சாம் என்கிற ஆண் குழந்தை. அதற்கடுத்துப் பிறந்தது ஹானா.

வானொலி நிலையத்துக்கு வேலைக்குச் செல்லும் போது சமீராவையும் கூடவே அழைத்துச் செல்வார்கள் பாத்திமாவும் மோசென்னும். ஊடக உலகம் மிகச் சிறு வயதிலேயே சமீராவுக்கு அறிமுகமானது இப்படித்தான். 1992ல் நடந்த ஒரு விபத்தில் பாத்திமா இறந்து போனார். மோசென், பாத்திமாவின் தங்கை மார்ஜியா மெஷ்கினியை மணந்து கொண்டார். மார்ஜியா பெண் உரிமைப் போராளி. அதற்காகவே தன் வாழ்நாளைக் கழித்தவர்.

Image

டெஹ்ரானில் வளர்ந்த போது சிறு வயதிலேயே சமீராவுக்கு சினிமாவின் பல அரிய முகங்கள் அறிமுகமாயின. அப்பா மோசென் நண்பர்களோடு பல படங்களை அக்குவேறு ஆணிவேராக விவாதிப்பார். அப்பா லொகேஷன் பார்க்கப் போகும் போது கூடப் போவது, எடிட்டிங்கை பக்கத்தில் இருந்து கவனிப்பது, ஒரு படம் உருவாகும் வித்தையை, அதன் நுணுக்கங்களை அருகில் இருந்து பார்ப்பது என சமீராவுக்கு வாழ்க்கையோடு ஓர் அங்கமாகவே ஆகிப் போனது சினிமா. எட்டு வயதில் மோசென் இயக்கிய ‘தி சைக்கிளிஸ்ட்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. பள்ளிப் படிப்பை முடித்ததும் ‘Mohhmalbaf Film House’ என்கிற திரைப்படப் பள்ளியில் சேர்ந்தார். 5 வருடம் சினிமா கற்றார். இரண்டு வீடியோ படங்களை இயக்கிய பிறகு, ‘தி ஆப்பிள்’ படத்தை இயக்கினார்.

Image
‘தி ஆப்பிள்’, ‘பிளாக்போர்ட்ஸ்’, ‘11 செப்டம்பர்’ (குறும்படம்), ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’, ‘டூ லெக்ட் ஹார்ஸ்’ என சமீரா இயக்கிய படங்கள் ஐந்தே ஐந்து. ஆனால், கேன் திரைப்பட விழாவில் ஜூரிகளின் சிறப்பு விருதை இருமுறை பெற்றவர், 22வது மாஸ்கோ திரைப்பட விழாவில் ஜூரிகளில் ஒருவராக இருந்தவர், வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர். 2004ம் ஆண்டு இங்கிலாந்து பத்திரிகையான ‘தி கார்டியன்’ உலகின் 40 சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக சமீராவையும் சேர்த்திருந்தது.

தன் படைப்புகளைப் போலவே அவருடைய பேச்சும் வெளிப்படையானது. பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘‘என் படங்களில் நான் உண்மையைத்தான் வெளிப்படுத்த விரும்புகிறேன். சில தொலைக்காட்சிகளில் புளித்துப் போன செய்திகளை சொல்வது போல, ‘அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு வந்தது. தலிபான்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்றியது, அமெரிக்கா ராம்போ போல ஒரு ஹீரோ’ என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. தலிபான்கள் போய்விட்டாலும் அவர்கள் விதைத்துவிட்டுப் போன கருத்துகள் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. மக்களின் பாரம்பரியத்தோடும் கலாசாரத்தோடும் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. அதனால்தான் இன்னும் இங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார் சமீரா.

Image

2008க்குப் பிறகு சமீராவின் திரைப்படம் எதுவும் வெளி வரவில்லை. ஆனால், அவர் இயக்கிய ஐந்து படங்களை உலக ரசிகர்கள் இன்று வரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

– பாலு சத்யா

Samira Makhmalbaf
Born February 15, 1980 (age 33)
TehranIran
Occupation Film Director, Producer, Screenwriter
Years active 1998–present
Parents Mohsen Makhmalbaf
Marzieh Meshkini