திருமதி. திவ்யா இளவரசன்

Image

அழக்கூட முடியலடி 

அடிநெஞ்சு பதறுதடி 

விழக்கூட வலுவின்றி 

விலா ரெண்டும் நோகுதடி 

 

பழக்கூடைக் குள்ளே என் 

பசி எல்லாம் மறைச்சிவச்சி 

வழக்காடும் சட்டத்தில் 

வாழ்வையே புதைச்சி வச்சி 

 

அப்பனையும் சாகவிட்டு 

அணைத்தவனைப்  போகவிட்டு 

எப்படிநான் வாழவேண்டீ?

எதற்கிந்த வாழ்வோடீ ?

 

என்குரலை நான்கேட்க 

எனக்கே தடை எதுக்கு?

வன்முறையைத் தூண்டிவிடும் 

வரலாறு இங்கெதுக்கு ?

 

ஊட்டி வளர்த்த கைகள்  

ஊட்டியைப்  பிடித்ததென 

ஒப்பாரி வைக்க எந்தன் 

உள்நெஞ்சு ஒப்பவில்லை 

 

காட்டிக்  கொடுக்கவில்லை 

கருப்பை நன்றிக்காய் 

மாட்டிக் கொண்டேனோ!

மடியில் ஏன் தவழ்ந்தேனோ!

 

பறவைக்கு சாதி இல்லை 

பாசி வச்ச நீரிலுள்ள 

குறவைக்கு சாதி இல்லை 

குளவிக்கும் சாதி இல்லை 

 

மகரந்த இணை சேரும் 

மலருக்கும்  சாதி இல்லை 

மகளுக்கு மட்டும் ஏன் 

மானுடத்தின் நீதி இல்லை 

 

கண்மீது கண்வைத்த 

காதலிலே குற்றமென்ன?

என்தாலி பறித்தபின்பு 

என்சாதி சுற்றமென்ன?

 

மனம்விரும்பும் மனுசனுடன் 

மடிகொடுக்க மறுக்குமெனில் 

இனம் என்ன இனமடியோ?

இழிந்துவிட்ட தலைமுடியோ?

 

கூலிங்க்ளாஸ் ஜீன்சுக்குக் 

கொடுப்பதற்கு இதயமென்ன 

ஆலிங்கன விலைபொருளா?

அவர்வீட்டுக் கைப்பொருளா?

 

தந்தை செய்த தவறென்ன?

தாய் செய்த தவறென்ன?

மந்தையிலே மாட்டி இந்த 

மகள் செய்த தவறென்ன?

 

என்றெல்லாம் நீ கேட்டால் 

இன்னுமொரு கண்ணகி 

இல்லையெனில் அடிமைப்பட்ட 

இந்தியாவின் பெண்ணடி!

– நா.வே.அருள்

 Painting Credit: www.himalayanacademy.com