பெண் சிசுக்கொலை… உதவும் ஸ்கேன் சென்டர்கள்!

Image

தர்மபுரி மாவட்டம்… பாப்பாரப்பட்டி… ஒரு போலி மருத்துவரைக் கைது செய்தது காவல்துறை. இது நடந்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை. அவர் பெயர் ரேணுகா. அதே பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த வனிதா ஒரு ஸ்கேன் சென்டரில், கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனப் பார்த்திருக்கிறார். பெண் குழந்தை என்று தெரிந்தது. அந்தக் கருவைக் கலைக்க வனிதா முடிவு செய்ய, கலைத்திருக்கிறார் ரேணுகா. ரேணுகா, வெறும் பத்தாம் வகுப்பு வரைதான் படித்தவர். சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்த தகவல்.

இதன் தொடர்ச்சியாக இன்னொரு நிகழ்வு நடந்திருக்கிறது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருக்கும் ஒரு ஸ்கேன் சென்டரில் ரெய்டு நடத்தியது காவல்துறையின் சிறப்புப் பிரிவு. ஸ்கேன் செய்து, கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதைச் சொன்னதாக குற்றம் சுமத்தப்பட்டு ஸ்கேன் சென்டரின் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் ஸ்கேன் சென்டருக்கும் போலி மருத்துவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, கருவில் பெண் சிசு இருப்பது தெரிந்தால் சிலர் அதைக் கலைக்க விரும்புவார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பது போலி மருத்துவர்களின் வேலை. ரேணுகா கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் திருப்பத்தூர் ஸ்கேன் சென்டரில் ரெய்டு நடந்திருக்கிறது. உரிமையாளர் சுகுமாரும், உதவியாக இருந்த மருத்துவர் உஷாவும் தலைமறைவு ஆகிவிட்டார்கள். அவர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது காவல்துறை. இன்னும் பல ஸ்கேன் சென்டர்களில் சட்டத்துக்குப் புறம்பாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைச் சொல்வதாகவும், கருக்கலைப்புக்கு மறைமுகமாக உதவுவதாகவும் விசாரணையில் சொல்லியிருக்கிறார் ரேணுகா.

இந்தக் கொடுமையான காரியம் தர்மபுரியில் மட்டும் நடக்கவில்லை. வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களிலும் நடப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது காவல்துறை.

ஸ்கேன் சென்டருக்கு வரும் தம்பதியை உற்று கவனிப்பார்கள். அவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கிறதா என்று விசாரிப்பார்கள். இன்னொரு பெண் குழந்தையை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாரா என்பதை பேசிப் பேசித் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் வேண்டாம் என்கிற மனநிலைக்கு வரும்போது, கருக்கலைப்பு செய்ய வழிகாட்டுவார்கள். இது பல ஸ்கேன் சென்டர்களில் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் செயல்.

இந்த ரெய்டு நடவடிக்கை தொடரும் என்று சொன்னதோடு நிறுத்திக் கொள்ளவில்லை காவல்துறை. ஸ்கேன் சென்டர்களை கூர்மையாக கண்காணிக்கச் சொல்லி சுகாதாரத்துறைக்கு கடிதமும் எழுதியிருக்கிறது. பெண் சிசுக்களுக்கு நீதி கிடைத்தால் சரி.

– ஆனந்த பாரதி 

தொடர்புடைய பதிவு…

பெண் சிசுக்கொலை – புதிய புள்ளிவிவரம்

பெண் சிசுக்கொலை – புதிய புள்ளிவிவரம்!

Image 

‘கடந்த 2012ம் ஆண்டு தமிழ்நாட்டில் பெண் சிசுக்கொலை நடக்கவே இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லவே இல்லை.’ இப்படி யாராவது சொன்னால் நம்புவீர்களா? வேறு வழியில்லை நம்பித்தான் ஆகவேண்டும். தரவுகளோடு அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் (Ministry of Health and Family Welfare).

அந்தப் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டு, பெண் சிசுக்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளோ, குற்றம் சாட்டப்பட்டவர்களோ, தண்டனை பெற்றவர்களோ ஒருவர் கூட தமிழ்நாட்டிலி இல்லை. அதே நேரம், மத்தியப் பிரதேசத்தில் 64, ஹரியானாவில் 28, ராஜஸ்தானில் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இந்தியா முழுக்க 210 பெண் சிசுக்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அத்தனை வழக்குகளிலும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள் வெறும் எட்டுப்பேர் மட்டுமே!

தமிழ்நாட்டைப் போலவே வேறு சில மாநிலங்களிலும் கடந்த 3 ஆண்டுகளாக (2010ம் ஆண்டிலிருந்து) பெண் சிசுக்கொலை நடக்கவில்லை என்கிறது மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம். அவை, திரிபுரா, அருணாச்சலபிரதேசம், கோவா, அஸ்ஸாம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள். பெண் சிசுக்கொலை வழக்குகளில்  மத்தியப்பிரதேசத்துக்குத்தான் முதலிடம். 64 வழக்குகள்!

சமூக சேவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்து வேறாக இருக்கிறது. ‘‘வழக்குப் பதிவு செய்யப்பட்டு, யார் மேலாவது குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால்தான் பெண் சிசுக்கொலை குறித்த விவரங்கள் வெளியே தெரியவரும். இந்தியாவில், வருடத்துக்கு 6 லட்சம் பெண் குழந்தைகள், பிறப்பதற்கு முன்பாகவே கருச்சிதைவுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். இதை இந்தப் புள்ளிவிவரம் விவரிக்கவில்லை. பல பெண் சிசுக்கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. இது போன்ற வழக்குகளுக்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதால் வெளியே வருவதில்லை. பிறகு எப்படி இந்த புள்ளிவிவரம் சரியானதாக இருக்க முடியும்?’’ என்கிறார்கள் சமூக சேவகர்கள். மேலும், குழந்தைகள் பாலின விகிதாசாரத்துக்கும் (Sex Ratio) பெண் சிசுக்கொலைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். 2011ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, ஹரியானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 819 பெண் குழந்தைகள். ஆனால், அந்த மாநிலத்தில் 2012ம் ஆண்டு பெண் சிசுக்கொலைக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வெறும் 28.

லேன்செட் மெடிக்கல் ஜர்னல் (Lancet Medical Journal) வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது… ‘இந்தியாவில் முதலாவதாகப் பிறக்கும் பெண் குழந்தையின் விகிதம் 1990ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 906 ஆக இருந்தது. 2005ல் 836 ஆகக் குறைந்திருக்கிறது’.

ஆக, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிறப்பது வரைக்கும் பலரும் காத்திருப்பதில்லை. கருவில் இருக்கும் பொழுதே பெண் சிசுவின் கதையை முடித்துவிடுகிறார்கள்! வழிமுறை ஒன்றுதான்… ஆயுதம்தான் வேறு.

பெண் சிசுக்கொலையை கருவிலேயே அழிப்பதைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஏற்கனவே, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று சொல்லக்கூடாது என்கிற விதி இருக்கிறது. இருந்தாலும், ஸ்கேன் சென்டர்களில் இதைக் கடுமையாக்க வேண்டும். அரசு தீவிரமாக இதை நடைமுறைப்படுத்தி, ஸ்கேன் சென்டர்களை கண்காணித்தால் கருவில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவது குறைய வாய்ப்பிருக்கிறது, ஒருவேளை!

– ஆனந்த பாரதி

இணைப்பு: மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் 

***