ப்ரியங்களுடன் ப்ரியா–25

th6

தைராய்டு

World Thyroid Day / May 25, 2016

உலக தைராய்டு தினம் / மே 25, 2016

th2

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல..

நான் ரொம்ப குறைவா டையட் உணவு தான் சாப்பிடறேன்.. ஆனாலும் உடம்பு வெயிட் போட்டுடுது.. யோகா வாக்கிங் எல்லாம் போறேன் ஆனாலும், உடம்பு மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம்.. அதற்கு மாற்றாக, வேறு சிலரோ ஒல்லிப் பிச்சான்களாக இருப்பார்கள். எப்போ பார்த்தாலும் எதையாவது சாப்டுட்டே இருக்கா ஆனால் பாரு எவ்வளவு சாப்பிடாலும் உடம்பு வரவே இல்ல ரொம்ப ஒல்லியா வீக்கா இருக்கான்னு  சொல்லுவாங்க..

th7

இதுக்கெல்லாம் என்னங்க காரணம் ??

தைராய்டு தான் ..

தைராய்டு என்றால் என்னங்க ?? அதை எப்படி  பிரியா தெரிஞ்சுக்கலாம்னு  நீங்க கேட்பது புரியுதுங்க … கொஞ்சம் கவனமா படிங்க இதை .

30 வயதை தாண்டும் நமது நாட்டு பெண்களுக்கு  30 முதல் 45 சதவிதம் வரை தைராய்டு பாதிப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது ..

th4

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான். இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.

நம் உடலில் உள்ள தைராய்டு (Thyroid Glands) சுரப்பிகள்தான் நம் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன..நம் அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்களால் தான் தைராய்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் கழுத்தில் உள்ள நாளமில்லாச் சுரப்பி நம் உடல் இயக்கத்திற்க்கு தேவையான பணிகளை செய்கிறது.. பொதுவாக நம் உடலில் அயோடின் குறைபாட்டினால் தான் தைராய்டு பிரச்சனை வருகிறது.. இந்த நோய் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது..

நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது.

th3

ஆரம்ப அறிகுறிகள் :

மோசமான தசை தொனி (தசைத் தளர்ச்சி)

களைப்பு

குளிர் தாங்கமுடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல்

உளச்சோர்வு

தசைப்பிடிப்புக்கள் மற்றும் மூட்டு வலி

மணிக்கட்டு குகை நோய்

முன்கழுத்துக் கழலை

மெலிதல், விரல்நகங்கள் நொறுங்குதல்

மெலிதல், முடி நொறுங்குதல்

வெளிரிய தன்மை

குறைவான வியர்வை

உலர்ந்த, அரிக்கும் தோல்

எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம்

குறை இதயத் துடிப்பு (குறைவான இதயத்துடிப்பு வீதம் – நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்)

மலச்சிக்கல்

வெகுநாளான அறிகுறிகள் :

மெதுவான பேச்சு மற்றும் தொண்டை கட்டி, குரல் உடைதல் – மெல்லிய குரலையும் கேட்க முடிதல்

வறண்ட வீங்கிய தோல், குறிப்பாக முகத்தில்

கண் புருவங்களின் வெளிப்பகுதி மெல்லியதாதல் (சைன் ஆப் ஹெர்டோக்ஹி)

இயல்பற்ற சூதகச் சுழல்கள்

குறைவான உடல் அடிப்பகுதி வெப்பநிலை

குறைந்த பொதுவான அறிகுறிகள் :

பழுதடைந்த நினைவுத்திறன்

பழுதடைந்த புலனுணர்வு செயல்பாடு (தெளிவற்ற மூளை) மற்றும் கவனமின்மை

குறைந்த மின்னழுத்த சமிக்ஞைகளிலும் ECG மாற்றங்களுடன் குறைந்த இதயத்துடிப்பு வீதம். குறைவான இதய வெளியீடு மற்றும் குறைந்த சுருங்கு திறன்.

இரத்தசை சர்க்கரைக் குறைவு எதிர்ப்பு(அல்லது இரவு உணவு)

மந்தமான அனிச்சைகள்

முடியுதிர்தல்

அனீமியா ஏற்படுத்தும் பழுதான ஹீமோகுளோபின் தொகுப்பு (குறைந்த EPO அளவுகள்), பழுதான குடல்சார்ந்த இரும்புத்தாது மற்றும் பொலிக்கமில உறிஞ்சும் தன்மை அல்லது பித்தபாண்டுலிருந்து வரும் B12 குறைபாடு

விழுங்குவதில் சிரமம்

ஆழமில்லாத மற்றும் மெதுவான சுவாச அமைப்புடன் மூச்சுவிடுதலில் சிரமம்

தூக்கம் நேரம் அதிகரிப்பு

உறுத்தும் தன்மை மற்றும் மனநிலை நிலைத்தன்மையின்மை

பீட்டா-கரோட்டின்[15] விட்டமின் A ஆக மாற்றப்படும் மோசமான செயலால் தோல் மஞ்சளாதல்

குறைவான GFR உடன் மந்தமான சிறுநீரகச் செயல்பாடு.

அதிகரித்த வடிநீர் கொழுப்பு

கடுமையான உளப்பிணி (மிக்ஸெடிமா மேட்னெஸ்) என்பது தைராய்டு சுரப்புக் குறைக்கு ஒரு அரிதான அறிகுறியாகும்.

சுவை மற்றும் மணம் உணர்திறன் குறைவு (அனோஸ்மியா)

Th1

தைராய்டு பிரச்சனையை ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டறியலாம்.. அவற்றின் அளவை பொருத்து ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என இரு வகைப் படுத்தலாம்.. பலருக்கு Goiter எனப்படும் தைராய்ட் அளவு பெரியதாகி  கட்டியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு தைராய்டு கான்சேர் அளவுக்கு வந்து இருக்கிறது. முதலில் எல்லாம் எல்லாருக்கும் பிரஷர் , சுகர் பிரச்சனைகள் மட்டுமே இருந்தன. இப்போ ஃபுல் ஹெல்த் செக்கப் செய்யப்போகும் எல்லாருக்குமே பிரஷர் ஷுகரோடு தைராய்டும் இருப்பதாக ரிசல்ட் வருகிறது. T3, T4, TSH என்ற ஹார்மோன்கள் சுரப்புத்தான் இதற்கெல்லாம் காரணம்..

ரத்தத்தில் TSH அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டு எனப்படும்..

T3,T4 ன் அளவு அதிகமாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு என்கிறார்கள்..

th9

தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும். அதேபோல், தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை ஹைப்போ தைராய்டிஸம் என்பர். எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதிப்பு அதிகம்..

iodized உப்பு சேர்த்து கொள்ளுவது  தைராய்டு குறைபாடுகள் ஒரு சிலவற்றை தவிர்க்க உதவும். 40 வயதுக்கு மேலே பெண்கள் புல் செக் அப்  செய்து கொள்ளுவது நல்லது..

th8

ஹைப்போ தைராய்டு

இரத்ததில் தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் இந்நோய் ஏற்படுகிறது.. இது பொதுவாக

வயது பெண்களையும் பாதிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கும், உடல் தளர்ச்சி,சோர்வு, அதிக தூக்கம், முடி உதிர்தல், மறதி,தலை வலி, கை,கால்கள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், குறைந்த குளிரைக்கூட தாங்க முடியாத தன்மை, முறையற்ற மாத விலக்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும்..

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், டர்னிப், போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும். தைராய்டு ஹார்மோன் சுரப்பிற்க்கு அயோடின் அவசியம். ஆனால் இவை தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்ச விடாமல் தடுக்கும்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்வி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்..

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால்,  அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்..

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை, தைராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்ட உடனேயே உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கால்சியமானது தைராய்டிற்காக எடுத்து வரும் மருந்துகளின் சக்தியைக் குறைத்துவிடும். எனவே பால் பொருட்களை மருந்து மாத்திரைகள் எடுத்த சில மணிநேரங்கள் கழித்து எடுக்க வேண்டும்.

தைராய்டு பிரச்சனை இருந்தால், அது ஹைப்போவாக இருக்கட்டும் அல்லது ஹைப்பராக இருக்கட்டும், ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

th5

ஹைப்பர் தைராய்டு

இரத்தத்த்இல் தைராக்சின் அதிக அளவில் சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு ஏற்படுகிறது.. பசி அதிகமாக இருக்கும், அடிக்கடி சாப்பிட்டாலும் உடல் மெலிந்து கொண்டே போகும், கை-கால்களில் நடுக்கம் இருக்கும்,சில சமயங்களில் உடல் முழுவதும் நடுங்கும்,காரணம் எதுவுமின்றி கோபம் வரும், அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும்,

தூக்கமின்மை,நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும்,மாதவிலக்குப் பிரச்னைகள்,கால் வீக்கம், மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் ஈடுபாடற்ற தன்மை தோன்றும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்களால் முதலில் கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு, அதில் அழற்சி ஏற்பட்டு, ஹைப்பர் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனை உள்ளவர்கள் கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகள், ஜாம், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மாவுப் பொருட்கள் போன்றவற்றை தங்களின் உணவில் சேர்ப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும், உங்களுக்கு உணவில் இனிப்புச்சுவை வேண்டுமானால், தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மாவைத் தவிர்த்து, தானியங்களை உட்கொள்ள ஆரம்பியுங்கள்.

கழுத்தில் கட்டி ஏற்பட்டால்…:

கழுத்தில் தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிய அளவில் கட்டி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலையில் வீக்கமும் விஷக் கட்டியும் ஏற்படும். இது நச்சுக் கழலை ஆகும்.

ஆரம்ப நிலையில் வலி இருக்காது. திடீரென கட்டி பெதாக வலிக்கத் தொடங்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பறி போகவும் வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.

ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், உணவில் இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை அதிகம் சேர்த்து வர, அதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதே சமயம் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பச்சை இலைக் காய்கறிகளான ப்ராக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றில் கொய்ட்ரஜன் இயற்கை வடிவில் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்கும்.

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, அதிகாலையில் சிறிது நேரம் சூரியக்கதிர்கள் சருமத்தின் மேல் படும்படி வாக்கிங் மேற்கொள்வது ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

ஒவ்வொருவரும் தினமும் முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், நல்ல பாட்டுக்களை கேட்பது, நண்பர் அல்லது குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பது என்று ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்க புரோட்டீன் மிகவும் இன்றியமையாதது. எனவே ஹைப்பர் தைராய்டு இருப்பவர்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது.

நாம எவ்வளவு தான் கோடி கோடியா சம்பாதிச்சாலும் இழந்த உடல் நலனை மட்டும் எப்போவுமே திரும்ப பெற முடியாது ,,

அதனால சரியான உணவு முறை,  உடற்பயிற்சி முறை என நம் உடம்பையும் மனசையும் நாம சரியாய் வைத்து கொண்டால் வருமுன் காத்து நம்மை நாமே பேணலாமே…

வாழ்க வளமுடன் !

  • ப்ரியா கங்காதரன்

IMG-20151106-WA0049

 

பேலியோ டயட் – உண்மையா? உதாரா?

உணவியல் நிபுணரும் மருத்துவருமான தாரிணி கிருஷ்ணனும் பேலியோ குழுவைச் சேர்ந்த சங்கரும் விவாதிப்பதன் வீடியோ வடிவம்…

(குங்குமம் டாக்டர் அக்டோபர் 1-15, 2015 இதழில் இதன் சுருக்கமான வடிவம் வெளியாகியுள்ளது)

அழகா ஆரோக்கியமா எது முக்கியம்?

health-and-beauty

6587_big

ழகா ஆரோக்கியமா? இப்படிக் கேட்பது பட்டிமன்றத் தலைப்பு மாதிரி தோன்றலாம். ஆனால், பெண்கள் கட்டாயம் யோசிக்க வேண்டிய விஷயம்.

எனக்கு உறவு முறையில் அண்ணி அவர். அடிப்படையில் பியூட்டிஷியன். மாமியார் அவர் வேலை பார்க்க ஒத்துக்கொள்ளாததால் பார்லர் எதுவும் வைக்காமல் ஹவுஸ் ஒயிஃபாக இருந்தார். ஆனால், தனக்குத்தானே ஃபேசியல், ப்ளீச்சிங் என்று செய்து கொண்டு எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருப்பார். வீட்டு விசேஷங்களின் போது அவரது டிரெஸ்ஸிங் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும்.

சமீபத்தில் ஒரு நாள் அவரை சந்தித்தேன். இடது கை முழுக்க கட்டுப்போட்டு இருந்தார். விபத்தா? என்று விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது.

மூட்டு எலும்புகள் பலவீனமாக இருக்கின்றனவாம். கையில் இப்போது மிகுந்த வலி இருப்பதால் கை முட்டியில் ஊசிபோட்டு, கட்டுப்போட்டு வைத்திருந்தார்கள். அடுத்தபடியாக பல சிகிச்சைகள் காத்திருந்தன அவருக்கு. தன் அழகின் மேல் காட்டிய அக்கறையில் ஒரு துளியைக்கூட ஆரோக்கியத்தின் மீது அவர் காட்டாததை நினைத்து வருத்தமாக இருந்தது.

பல பெண்கள் இன்று இப்படித்தான் இருக்கிறார்கள். அதுவும் கல்லூரி படிக்கும் மாணவிகள், வேலைக்கு போகும் யுவதிகள் போன்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே விஷயம் அழகுதான்.

எந்த மாதிரி ஹீல்ஸ் வாங்கலாம், என்ன மாதிரி ஹேர்கட் செய்து கொள்ளலாம் போன்றவற்றில் காட்டும் அக்கறையை சாப்பாட்டு விஷயத்திலோ, உடற்பயிற்சி செய்வதிலோ அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை.

சினிமா, செல்போன், வலைத்தளங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தன் உடல் ஆரோக்கியத்துக்கு தருவதில்லை.

உள்ளம் பெருஙகோயில் ஊனுடம்பு ஆலயமாம் என்கிறார் திருமூலர். இந்த உண்மை பலருக்கு தெரிவது இல்லை. ஏன் பெண்களை மட்டும் குறிப்பிடுகிறேன் என்றால் இளைஞர்கள் டீன் ஏஜை எட்டும் போது மைதானம், ஜிம் என்று தங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுகிறார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள் படிப்பு, வேலை என்ற விஷயத்தைத் தாண்டி பெரும்பாலும் அழகு குறித்தே யோசிக்கிறார்கள்.

அழகு என்பது லிப்ஸ்டிக்கிலோ, ஹேர் கலரிங்கிலோ இல்லை. உடற்பயிற்சி பெண்களுக்கு இயற்கையானதொரு வனப்பை அளிக்கிறது என்பது உண்மை. பயிற்சி செய்யும் போது உடல் ஓர் அழகிய கட்டமைப்புக்கு வரும். நரம்புகளும் தசைகளும் வலிமை பெறும். கண்கள் ஒளிபெறும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வராமல் காக்கும். அது மட்டுமின்றி வியர்வை வெளிப்படும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் முகப்பொலிவு கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு நல்ல விஷயங்கள் இதில் இருக்கின்றன என்று தெரிந்திருந்தும் பயிற்சி செய்ய விரும்பாத பெண்களுக்கு மேலும் ஒரு தகவல். கடுமையான மூளை உழைப்பை வலியுறுத்துகிற பணிச் சூழலால் மாரடைப்பு உள்பட பல வியாதிகள் பெண்களிடம் அதிகரித்து வருவதாக இந்தியாவின் பெருநகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ‘ஹீல் ஃபவுண்டேஷன்’ எனும் இதய நோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வுப்படி கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கான இதய நோய்கள் 20 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்க வழக்கமும் குறைந்து போன உடலுழைப்பும்தான் அதற்குக் காரணமென கண்டறியப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரண மாற்றம் இளமையிலே உடல் பருமனை ஏற்படுத்திவிடுகிறது.

சரிவிகித உணவு, தேவையான அளவு தூக்கம், முறையான உடற்பயிற்சி போன்ற மேம்பட்ட வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இவை இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அழகு தானே வரும்.

இன்றைய பெண்கள் ஆற்றலுடையவர்களாக, அறிவுடையவர்களாக வளர்கிறார்கள் என்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், அதே நேரத்தில் ஆரோக்கியமானவர்களாகவும் வளர வேண்டியது மிகவும் அவசியம்.

– ஸ்ரீதேவி மோகன்

Image courtesy:

http://healthbeauty.indothanalarea.com

நுங்கு! நன்மைகள் ஏராளம்… தாராளம்!

Young_Palmyra_Fruits

கிராமங்களில் சர்வ சாதாரணமாகக் கிடைப்பதாலும், நகரங்களில் தெருவோரத்தில் விற்கப்படுவதாலுமே பல பொருட்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. அவற்றில் முக்கியமான ஒன்று நுங்கு..!

வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் பனைமரம். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றில் நுங்கின் மகத்துவம் அளப்பரியது! அவற்றில் சில…

  • கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.
  • நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
  • நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் நுங்கை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம்! நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
  • சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
  • ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
  • நுங்கில் ‘அந்த்யூசைன்’ எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
  • வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

Image Courtesy: http://commons.wikimedia.org

– ஆர்.சம்யுக்தா, ஈரோடு

கோடை காலத்துக்கு ஏற்ற குளிர் உணவுகள்!

டாக்டர் தாரிணி கிருஷ்ணன் – டயட்டீஷியன் மற்றும் நியூட்ரீஷியனிஸ்ட் 

Image

கோடை காலம் தொடங்கிவிட்டது. பள்ளிக் குழந்தைகள் விடுமுறையைக்  கொண்டாட தயாராகி விட்டார்கள். நகரங்களை விட்டு மக்கள் கடற்கரை பிரதேசங்கள், மலைப் பகுதிகள் உள்ளிட்ட குளிரான இடங்களுக்கும் சென்று கோடை வெப்பத்தைத் தணித்துக் கொள்ள திட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள். அதே சமயம் இந்தக் கோடை கால வெப்பத்தில் மஞ்சள் காமாலை, சின்னம்மை உள்ளிட்ட தொற்று நோய்களும் பரவும் அபாயம் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது.

வெப்பத்தைத் தணித்துக் கொள்ள சில டிப்ஸ்… 

Image

* அறை தட்பவெப்ப அளவை விடக் கொஞ்சம் மாறுபாட்டோடு இருக்கிற தண்ணீர்… குறிப்பாகப் பானைத் தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை அருந்தவும். இரண்டுமே தாகத்தைத் தணிக்கும். குளிர்பதனப் பெட்டியில் உள்ள ‘ஜில்’ தண்ணீர் ஒரு சில வினாடிகளுக்கு மட்டுமே திருப்தி தரும். அது உண்மையிலேயே தாகத்தை தணிக்காது.

Image

* தர்பூஸ், அன்னாசி, கொய்யா, சாத்துக்குடி, ஆரஞ்ச், திராட்சை ஆகிய பழங்களை சாப்பிடுவது புத்துணர்ச்சியைத் தரும்.

* வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, முட்டைகோஸ் போன்றவை அடங்கிய சாலட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு ஏற்றது.

Image

* உப்புக் கலந்த எலுமிச்சை ஜூஸ், நீர்மோர், இளநீர் வெப்பத்தைத் தணிக்கும் குளிர்பானங்கள்.

* சர்க்கரையும் முட்டையும் கலந்த பால், ஜெல்லி, மில்க் ஷேக்ஸ் போன்ற இனிப்புகள் தேவையான ஊட்டச் சத்துகளை வழங்கும்.

Image

* மோர் கலந்த பழைய சாதத்தை ஊறுகாய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடலாம். உடலுக்குக் குளிர்ச்சியையும் இயற்கைச் சத்தையும் கொடுக்கும்.

* ஆரஞ்ச், தர்பூஸ், பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை ஆகிய பழங்களின் அறுசுவை பானம் உடல் நலத்துக்கு நல்லது.

கோடை காலத்தில் சூட்டைக் கிளப்பும், சாப்பிடக் கூடாது என சொல்லப்படு உணவுகள் குறித்த கட்டுக் கதைகளும் உண்மைகளும்…

* கட்டுக்கதை: பப்பாளி சூட்டைக் கிளப்பும் பழம் என்பதால் அதை இளம் பெண்களும் கருவுற்றிருக்கும் தாய்மார்களும் உண்ணக் கூடாது.

உண்மை: பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துகள் இருக்கின்றன. பப்பாளி எந்த விதத்திலும் கருவை பாதிக்காது.

* கட்டுக்கதை: மாம்பழம் உடல் சூட்டைக் கிளப்பும் என்பதால் சாப்பிடக் கூடாது.

உண்மை: உண்பதற்கு முன் மாம்பழத்தைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்ட பிறகு சாப்பிடலாம். ஏதேனும் பிரச்னை இருந்தால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம், சரியாகிவிடும்

* கட்டுக்கதை: குளிர்ந்த தண்ணீர் அல்லது ஐஸ்க்ரீம் சளியை ஏற்படுத்தும்.

உண்மை: சளிக்குக் காரணம் வைரஸ் கிருமிகள். குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளி ஏற்படாது. குளிர்ந்த உணவு அல்லது நீர் ஒவ்வாமை இருந்தால் மட்டுமே பிரச்னைகள் ஏற்படும்.

* கட்டுக்கதை: கோடை காலத்தில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

உண்மை: தண்ணீர் அருந்துவது அவரவர் இருக்கும் சூழலைப் பொறுத்தது. வெயிலிலும் சூரிய வெப்பத்திலும் அலைபவர்கள் உடலின் தேவையைக் கருத்தில் கொண்டு தேவையான 1 அல்லது 2 லிட்டர் தண்ணீரைக் குடிக்கலாம். வெப்பம் குறைந்த அல்லது குளிர்சாதன அறையில் இருப்பவர்களுக்கு மேற்கண்ட தண்ணீர் அளவு தேவைப்படாது.

***

Image courtesy:

http://fieldpoppy.files.wordpress.com/

http://www.gymra.com/

http://www.capitalfm.co.ke/

உடற்பயிற்சி… அறிவாற்றலுக்கு உதவும்!

does-exercise-really-make_1

டற்பயிற்சி நல்லதா? நல்லது. மூளைக்கு நல்லதா? ஆம். மிகவும் நல்லது! இப்படித்தான் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். உடற்பயிற்சி எப்படி மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது, எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் ‘ஐரிசின்’ (irisin) என்ற மூலக்கூறு உற்பத்தியாகிறது என்று அடையாளம் காட்டியிருக்கிறது அந்த ஆய்வு. அதோடு, அந்த மூலக்கூறு, நரம்புகளைப் பாதுகாக்கிறது என்றும் உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.

இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர் புரூஸ் ஸ்பீஜெல்மேன் (Dr.Bruce Spiegelman). அமெரிக்காவில் இருக்கும் டானா ஃபார்பர் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியர். அவர் தலைமையிலான குழு, ஒரு எலியை வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.

உடற்பயிற்சி செய்வதால், செயற்கை முறையில் ரத்தத்தில் இருக்கும் ‘ஐரிசின்’ அளவை அதிகரிக்க முடியும். அது, கற்றல் மற்றும் ஞாபகம் தொடர்பான மரபணுவை செயல்பட வைக்கும் என்றெல்லாம் பட்டியல் போடுகிறது இந்த ஆய்வு. சுருக்கமாக, ‘உடற்பயிற்சி, மூளையில் அறிவாற்றல் தரும் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புத் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதாவது, மன அழுத்தம், பக்கவாதம், அல்ஜீமெர்ஸ் நோய் (Alzheimer’s disease) போன்ற நரம்பியல் நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை உடற்பயிற்சி தடுத்துவிடும் என்கிறார்கள். இந்த ஆய்வு முடிவுகள், ‘செல் மெட்டாபோலிஸம்’ (Cell Metabolism) என்ற இதழில் வெளியாகி இருக்கின்றன.

அறிவாற்றல் கூடும்… நரம்பியல் நோய்கள் நெருங்காது என்பதே நல்ல செய்திதானே! உடற்பயிற்சியைக் கொண்டாடலாம்!

– பா. வினோதினி

இதய நோயைத் தடுக்க எளிய வழிகள்!

Image

ன்று ‘உலக இதய தினம்’. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பற்றியும், இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றைத் தவிர்க்கும் முறைகள் பற்றியும் திரும்பத் திரும்ப பேச வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. ‘2030ல் உலக அளவில் 2 கோடியே 30 லட்சம் பேர் இதய நோய் காரணமாக இறக்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட இது அதிகம்!

‘உலக இதய தினம்’, ஆண்டுதோறும் ‘உலக இதய கூட்டமைப்பால்’ (World Health Federation) அனுசரிக்கப்பட்டு வருகிறது. 1999 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பிறகு, செப்டம்பர் 29ம் தேதியாக மாறியது. இந்த ஆண்டு, ‘பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் இதய நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்காக’ இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. ஏனென்றால், ஆரோக்கியமான குழந்தையால்தான் ஆரோக்கியமான இளைஞனாக முடியும். ஆரோக்கியமான இளைய தலைமுறைதான் ஆரோக்கியமான குடும்பத்தை, சமூகத்தை உருவாக்க முடியும்.

‘புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை’ இவற்றைத் தவிர்த்தாலே போதும், இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவிகித மரணங்களைத் தவிர்த்துவிடலாம்’ என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு. நம் வாழ்வியல் முறையில் கடைப்பிடிக்கும் சில எளிய செயல்பாடுகள் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்… இதய நோய்கள் வராமல் நம்மைக் காப்பாற்றும். அவை…

சாப்பிட ஏற்றவை… 

Image

* பச்சைப் பருப்புகள், ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், ஆளி விதை (Flax seeds), அவோகாடோ பழம் (Avocados) போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.

* பசுமையான காய்கறிகளையும் பழங்களையும் ஃப்ரெஷ்ஷாகவோ அல்லது வெண்ணெய் சேர்க்காமல் சமைத்தோ சத்துணவாக எடுத்துக் கொள்ளலாம்.

* தானியம் மற்றும் பயறு வகைகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள், பிரெட், பாஸ்டா ஆகியவற்றை உண்ணலாம்.

* புரதச்சத்துக்கு மீன் மற்றும் நண்டு போன்ற அசைவ உணவுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம்.

* உடலுக்குத் தேவைப்படும் கால்சியம் சத்துக்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆடை நீக்கப்பட்ட பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கொழுப்பில்லாத சீஸ் அல்லது யோகர்ட் சாப்பிடலாம்.

சாப்பிடக் கூடாதவை… 

Image

* அதிகம் கொழுப்புள்ள, எண்ணெயில் வறுத்த இறைச்சிகள் சாப்பிடக் கூடாது.

* பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், குறிப்பாக சோடியம் அதிகமாக உள்ள உணவு வகைகளுக்கு ‘நோ’ சொல்லிவிட வேண்டும்.

* அரிசி உணவுகள், முட்டை சேர்க்கப்பட்ட உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

* வறுத்த கோழி, இறைச்சி, உப்புக்கண்டம் போட்ட பன்றி இறைச்சி, அதிகம் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்து விட வேண்டும்.

* பாலில் தயாரிக்கப்பட்ட சீஸ், யோகர்ட், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைத் தொடக் கூடாது. மிக அதிகமாக பால் சாப்பிடக் கூடாது.

இதய நோய் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க சில எளிய வழிமுறைகள்…

* காய்கறிகள் குறைவாக இருக்கும் ஃபாஸ்ட்ஃபுட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.

* சமையலுக்கு ஆலிவ், வேர்கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற விதவிதமான எண்ணெய்களைப் பயன்படுத்தவும். சோயா, அவகோடா, மீன், விதைகள், பருப்புகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

* பழங்கள், காய்கறிகள் போன்ற தாவர உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கார்போஹைட்ரேட் அதிகமுள்ள சமைத்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ளவும்.

* சோயா, பீன்ஸ், பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

* வாரத்தில் ஒருநாள் ஒரு கைப்பிடி பாதாம் கொட்டை சாப்பிடவும்.

* வாரத்துக்கு ஒருமுறை மீன் சாப்பிடலாம்.

* அதிகம் மது அருந்தக் கூடாது.

* கொழுப்பில்லாத இறைச்சி மட்டுமே சாப்பிட வேண்டும்.

* உணவில் அதிகம் உப்பு சேர்க்கக்கூடாது. வெளியில் இருந்து வாங்கி சாப்பிடும் உணவில் கூட அதிகம் உப்புச் சேர்க்காத உணவாக வாங்கி சாப்பிடவும்.

சைவ உணவுப் பழக்கம்… 

Image

சைவ உணவுப் பழக்கம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியமான எடையை உடலுக்குத் தந்து டைப் 2 நீரிழிவுப் பிரச்னையைக் குறைக்க உதவும். இவை பக்க வாதம் மற்றும் இதய நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

* தினமும் ஒரு பச்சைக் காய்கறியும் ஒரு ஆரஞ்சுப் பழமும் சாப்பிடலாம்.

* அடிக்கடி ஜூஸ் சாப்பிடுவதைவிட, காய்கறிகளும் பழங்களும் சாப்பிடலாம்.

* ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளும் பருப்பு வகைகளைப் பாதியாக குறைக்கவும்.

* தினமும் கொழுப்பு நீக்கப்பட்ட, ஆடை இல்லாத பாலை குறைவாக எடுத்துக் கொள்ளவும்.

* இறைச்சிக்கு பதிலாக பீன்ஸ், சோயா போன்ற பயறு வகைகளுக்கு மாறவும்.

* நிறைய தண்ணீர் குடிக்கவும்.

குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தேவை உடற்பயிற்சி…

எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி, வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும். பள்ளிக்குச் செல்லும் வயதுக்கு முன்பாகவே கூட சில உடல் பயிற்சிகள் குழந்தைகளின் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க உதவும். அவை…

* தரையில் பொம்மைகளை வைத்து விளையாடுவது தொப்பை விழாமல் பார்த்துக் கொள்ளும்.

* உருண்டு புரண்டு விளையாடுவது நல்லது.

* தவழ்ந்து போதல் தசைகளுக்கு நல்லது.

* படிக்கட்டில் ஏறுதல் உடலுக்கு வலு சேர்க்கும்.

* ஓடி விளையாடுவது, சிறு சைக்கிளை ஓட்டுவது எல்லாம் சிறந்த உடல்பயிற்சிகள். இவையெல்லாம் குழந்தையை மகிழ்ச்சியாக, உடல் ஆரோக்கியத்தோடு, தன்னம்பிக்கையோடு வளர உதவும். அதோடு அவர்களின் கற்றல் திறமையும் கவனித்து உள்வாங்கும் திறமையும் கூட அதிகமாகும்.

குழந்தைகளும் இளைஞர்களும் ஒருநாளைக்குக் குறைந்தது 60 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியத்துக்கு நல்லது.

* திடமான, உறுதியான உடலுக்கு வாரத்துக்கு 3 நாட்கள் உடற்பயிற்சி தேவை.

* சதைகளுக்கும் எலும்புக்கும் தேவையான பயிற்சிகளை வாரத்தில் 3 நாட்கள் மேற்கொள்ள வேண்டும்.

* உடல்ரீதியான வேலைகளை தினமும் செய்வது உடலுக்கு நல்ல பயன் தரும்.

குழதைகள் இயல்பாகவே சுறுசுறுப்பும் சக்தியும் பெற்றவர்கள். ஆனால், யாரும் அவர்களை ஊக்கப்படுத்தாத காரணத்தினாலேயே வேலைகளைச் செய்யாமல் சுறுசுறுப்பை இழந்துவிடுகிறார்கள். உடல்ரீதியான செயல்பாடுகள் அவர்களுக்கு இன்றைய தினத்தில் மிகக் குறைவு. வகுப்பறையில், பள்ளி வாகனத்தில் அமர்ந்துவிட்டு வருவது, கம்ப்யூட்டர், டி.வி., வீடியோ கேம் விளையாட்டில் மூழ்கிப் போய்விடுகிறார்கள். அவர்களை சரியான வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டியது நம் கடமை. அது அவர்களுடைய இதய ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

– மேகலா பாலசுப்ரமணியன்

   

பால் குடிங்க! – கர்ப்பிணிகளுக்கு ஓர் அறிவுரை!

Image

‘கர்ப்ப காலத்தில் பெண்கள் எது சாப்பிடுவது நல்லதோ, இல்லையோ போதுமான பால் குடிப்பது ரொம்ப நல்லது’. இதை தனி நபர்கள் சொல்லவில்லை. மருத்துவர்கள் சொல்லவில்லை. நிபுணர்கள் சொல்லவில்லை. முக்கியமான ஓர் ஆய்வு சொல்லியிருக்கிறது. கருவுற்ற காலத்தில் பெண்கள் சுத்தமான பாலை, தேவையான அளவு சாப்பிடுவதால் குழந்தையின் இளமைப் பருவம் வளமாக இருக்கும்… முக்கியமாக, பிறக்கும் குழந்தை உயரமாக வளரும்… என்கிறார்கள். ‘க்ளினிக்கல் நியூட்ரிஷன்’ என்ற ஐரோப்பியப் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்கள் 150 லிட்டருக்கும் அதிகமான பாலைக் குடித்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை வளர் இளம் பருவத்தில் (டீன் ஏஜ்), உயரமாக வளர்வார்களாம். இது, ஆண், பெண் இரு பாலினக் குழந்தைகளுக்கும் பொருந்தும். அதே நேரம், 150 லிட்டருக்குக் குறைவான பாலை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அந்த அளவுக்கு உயரமாக வளர்வதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஒருநாளைக்கு 250 மி.லி. பாலாவது குடிக்க வேண்டும்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் குழு ஒன்று ஈடுபட்டது. 1980ன் பிற்பகுதியில் பிறந்த குழந்தைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் குழந்தைகளின் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களின் உயரம் கணக்கிடப்பட்டது. அவர்கள் கருவிலிருந்த காலத்தில், அவர்களின் தாய்மார்கள் எவ்வளவு பால் அருந்தினார்கள் என்பதையும் கணக்கிட்டார்கள். டென்மார்க்கில் இருக்கும் 809 பெண்கள், 1988லும் 1989ம் ஆண்டும் பிறந்த குழந்தைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். ஆய்வின் முடிவில், குழந்தைகள் உயரமாக வளர்வார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த வருடம் இங்கிலாந்து விஞ்ஞானிகள் நடத்திய ஓர் ஆய்வில் இன்னொன்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்ப்ப காலத்தில் அதிகமாக பால் அருந்தும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் மிக அதிகமாக இருக்குமாம். அதற்குக் காரணம் பாலில் அயோடின் அதிகமாக இருப்பதுதானாம்.

***

Photo courtesy: http://admin.mommypage.com/

மேலும் பல கர்ப்ப கால செய்திகள், அரிய தகவல்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஆலோசனைகள் ‘குங்குமம் தோழி’ – செப்டம்பர் 16-31 (மகப்பேறு ஸ்பெஷல்) இதழில்…   

அமுதம் – 1

Image

உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 – 7)

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு வழங்கப்படும் ‘தேவர்களின் அமுதம்’. அது கொடுக்கும் சக்தியைப் போல, வேறு எந்தப் பாலுக்கும் சக்தியில்லை. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. பச்சிளம் குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மிக சத்தான உணவு. அதுதான் குழந்தையின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பாதுகாக்கிறது.

குழந்தைப் பருவத்தில் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள், பிற்காலத்தில் அதிக எடைப் பிரச்னைக்கோ, உடல் பருமனுக்கோ ஆளாவதில்லை. இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அவர்கள் நீரிழிவு என்று சொல்லப்படும் சர்க்கரை வியாதிக்குள் விழுவதில்லை; அதோடு அறிவுபூர்வமான பரீட்சைகளில் மிகச் சிறப்பாக தங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், உலக அளவில் 38 சதவிகிதக் குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது. அதுவும் ஆறு மாதங்களுக்கு என்பது வருத்தத்துக்குரிய செய்தி.

இந்தியாவில் 46 சதவிகிதக் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் கிடைக்கிறது. அதுகூட தாய்ப்பாலுக்கு இணையான வேறு எந்த ஆகாரமும் குழந்தைக்குக் கிடைக்காத காரணத்தால்தான். ‘‘கிட்டத்தட்ட எல்லா தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்கத் தகுதியானவர்களே! தாய்ப்பால் குறித்த மிகத் துல்லியமான தகவல்களும், ஆதாரங்களும் கிடைத்தால் அவர்களால் அது முடியும். ஆனால், பல இடங்களில் தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தாய்மார்கள் தடுக்கப்படுகிறார்கள். ‘மார்க்கெட்டில் புழக்கத்தில் இருக்கும் பல பால் பொருட்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் போதும். அதுவே குழந்தைகளின் வாழ்க்கையைத் தொடங்க மிகச் சிறந்தது’ எனத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் தாய்மார்கள்’’ என்கிறார் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சித்துறையின் நிபுணர் கேர்மென் கேஸனோவாஸ் (Carmen Casanovas).

Image

குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துணவுகளும் தாய்ப்பாலில் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள். அது பாதுகாப்பானது. அதில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருக்கிறது. அதனால் குழந்தைப்பருவத்தில், குழந்தைக்கு ஏற்படும் அடிப்படை நோய்களில் இருந்து தாய்ப்பால் குழந்தையைக் காப்பாற்றுகிறது.

தாய்ப்பால், தாய்மார்களுக்கும் நன்மை தருகிறது. மிக முக்கியமாக கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

Photo Credit: UNICEF India

– தீபா வெங்கடகிருஷ்ணன்

காலை உணவு சாப்பிடாதவர்களின் கனிவான கவனத்துக்கு…

Image

மிரட்டுகிற ட்ராஃபிக், கூடவே வேலைக்குச் செல்லும் அவசரம்! இந்தப் பிரச்னையாலேயே பலபேர் தவிர்ப்பது காலை உணவு. கிடைத்ததை இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூட நகரத்தில் இருப்பவர்களுக்கு காலை நேரங்களில் அவகாசம் இருப்பதில்லை. ‘எல்லாம் மதியம் பாத்துக்கலாம்’ என்று அரை டம்ளர் டீயையோ, காபியையோ குடித்துவிட்டு காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடுகிறவர்கள் நம் நாட்டிலேயே கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதே போல, ஆசுவாசமான நேரம், சாப்பிடுவதற்கான வசதிகள் இருந்தும்கூட ‘காலைல நான் எதுவும் சாப்பிடுறதில்லை’ என்று பெருமையாக சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தெளிவாக ஒரு விஷயத்தை அறிவுருத்தியிருக்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு. ‘காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட 27% அதிகம். ஏற்கனவே இதயக்கோளாறுகள் உள்ளவர்களாக இருந்தால் மரணம் கூட ஏற்படலாம்’.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் (1992-2008) இது தொடர்பான ஆய்வு அமெரிக்காவில் நடந்தது. 45லிருந்து 82 வயதுக்குட்பட்ட 26,902 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பிறகுதான் காலை உணவு சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகம் என்கிற முடிவுக்கு வந்தார்கள். இந்த முடிவுகள் ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ பத்திரிகையான ‘சர்க்குலர்’ (Circular)ல் விரிவாக வெளியானது.

‘காலை உணவைத் தவிர்ப்பது உடல் பருமனைக் கூட்டும். அதன் விளைவாக கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்னைகள் தோன்றும். ரத்த அழுத்தம் ஏறும். இவையெல்லாம் இறுதியில் ஹார்ட் அட்டாக்கில் கொண்டு வந்துவிட்டுவிடும்’ என்கிறது ஆய்வறிக்கை. புகைப்பிடிப்பவர்கள், சதா வேலை வேலை என்று இருப்பவர்கள், திருமணமாகாதவர்கள், குறைவான உடல் உழைப்பைத் தருபவர்கள், அதிகமாக மது அருந்துபவர்கள் காலை உணவைத் தவிர்த்தால் அவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள், அவர்களுடைய உடல் உழைப்பு, தூக்கம், செரிமானத் தன்மை, மது அருந்தும் அளவு, அவர்களின் உடல் கூறுகள், எதற்காகவெல்லாம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கில் எடுத்திருக்கிறார்கள் ஆராய்ச்சி செய்தவர்கள்.

Image

‘காலை உணவு சாப்பிடுவது ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். காலை உணவில் ஆரோக்கியமான உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. அது, போதுமான சக்தியை நம் உடலுக்குத் தரும். புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துகளை சம அளவில் வைத்துக்கொள்ள உதவும். ஆற, அமர சாப்பிட நேரமில்லையா? ஒரு கிண்ணத்தில் பழங்களைப் போட்டு அதில் வேக வைத்த பருப்புகள், தானிய வகைகளைக் கலந்து சாப்பிடுங்கள். அல்லது ஓட்ஸ் கூழ் அல்லது கஞ்சி (Oatsmeal) குடியுங்கள். இதுதான் ஒரு நாளை தொடங்குவதற்கான சிறந்த வழி’. அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்த அமெரிக்க ஆய்வு.

– ஆனந்த பாரதி