ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஏழு இயற்கை வழிகள்!

மிதமிஞ்சிய ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக், பக்க வாதம், மூளையில் ரத்தக்குழாய் வெடிப்பு, அறிவுத்திறன் குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

மருந்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்தாலும், கால் தசைப்பிடிப்பு, தலைசுற்றல், உறக்கமின்மை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலானவர்களால் தங்களுடைய ரத்த அழுத்தத்தை மருந்தில்லாமல் இயற்கையாகவே குறைக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. மருந்துகளுக்கு பதிலாக இயற்கையாக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 7 வழிமுறைகள் இங்கே…

மெதுவாக மூச்சுவிடுங்கள்!

Image

யோகா, டாய் சி (Tai Chi) போன்ற தியானப் பயிற்சிகளை செய்யலாம். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் சிறுநீரக ரெனின் (renin), அதாவது சிறுநீரக நொதியை மேன்மைப்படுத்தி, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் குறைக்க இந்தப் பயிற்சிகள் உதவும். காலையிலும் மாலையிலும் 5 நிமிடங்களுக்கு இந்தப் பயிற்சிகளை செய்து பார்க்கலாம்.

ரிலாக்ஸாக இசை கேளுங்கள்! Image

‘மிக மெதுவாக மூச்சு விட்டபடி மென்மையான பாரம்பரிய இசை அல்லது இந்திய இசையை தினமும் 30 நிமிடங்களுக்கு கேட்டால் ரத்த அழுத்தம் குறையும்’ என்கிறார்கள் இத்தாலி, ஃபுளோரன்ஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆய்வாளர்கள். அதிக ரத்தக்கொதிப்போ அதற்கான முந்தைய நிலையோ இருந்தால், ‘காஃபின்’ நீக்கப்பட்ட காபி, சோயா, கொழுப்பில்லாத பால் பொருட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

உருளைக்கிழங்கு சாப்பிடுங்கள்! Image

‘பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களையோ, காய்கறிகளையோ சாப்பிடுவது எந்தவிதமான ரத்த அழுத்தம் இருந்தாலும் அதைக் குறைக்க உதவும்’ என்கிறார் அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியில், பாதுகாப்பு மருந்துகள் பிரிவில் பணியாற்றும் பேராசிரியர் லிண்டா.

தேநீர் அருந்துங்கள்! Image

அமெரிக்காவிலிருக்கும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் (Tufts University) சேர்ந்தவர்கள் ஓர் ஆய்வு நடத்தினார்கள். அதன்படி ஒருநாளைக்கு 3 கப் செம்பருத்தி டீ (Hisbiscus tea) குடித்தவர்களுக்கு இதயத்தை பாதிக்கும் ரத்த அழுத்தம் சராசரியாக 6 வாரங்களில் 7 புள்ளிகள் வரை குறைந்திருக்கிறதாம்.

கொஞ்சம் குறைவாகப் பணிபுரியுங்கள்! Image

‘ஒரு வாரத்தில் 41 மணி நேரத்துக்கும் அதிகமாக அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 15 சதவிகிதம் அதிகம்’ என்கிறது கலிபோர்னியா யுனிவர்சிட்டியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு.

நடைப்பயிற்சியைக் கூட்டுங்கள்! Image

உடற்பயிற்சி மையங்களில், நடப்பதற்காக இருக்கும் கருவியில் எவ்வளவு வேகமாக நடக்கிறோமோ, அந்த அளவுக்கு ரத்த அழுத்தம் குறையும் (அதிகபட்சமாக 8 mmhgயிலிருந்து 6 mmhg வரை). உடற்பயிற்சி, ஆக்ஸிஜனை அதிகத் திறனோடு பயன்படுத்த இதயத்துக்கு உதவுகிறது. எனவே, இதயம் ரத்தத்தை விசையோடு (Pump) அனுப்புவது கடினமாக இருக்காது.

உப்பைக் குறையுங்கள்! Image 

‘ஒரு நாளைக்கு 1,500 மில்லி கிராம் உப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது முக்கால் டீஸ்பூன் உப்பை மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் அமெரிக்காவின் நேஷனல் ஹார்ட், லங் அண்ட் பிளட் இன்ஸ்டிடியூட்டில் டாக்டராக இருக்கும் ஈவா ஓபார்ஸானெக்.

தொகுப்பு: பாலு சத்யா

குழந்தையின்மைக்குக் காரணமாகும் கருக்குழாய் அடைப்பு

குழந்தையின்மைக்கான காரணங்களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமான பிரச்னை இது. கருக்குழாய் அடைப்பு பற்றிய விழிப்புணர்வோ, அதைக் கவனிக்க வேண்டிய அவசரமோ, அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகளோ பலருக்கும் இல்லை.

Image

கருக்குழாயின் மிக முக்கிய செயல் என்ன தெரியுமா?
கருத்தரித்தலுக்கு உதவுவதுதான்.இந்தக் கருக்குழாய்கள் சிலருக்கு இயற்கையிலேயே, அதாவது பிறவியிலேயே அரிதாக இல்லாமல் இருக்கலாம். அதாவது 10 ஆயிரத்தில் 5 பெண்கள் இப்படி இயற்கையிலேயே சினைக்குழாய் இல்லாமல் பிறக்கலாம். ஆணின் அணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து ஒரு சிசுவை உண்டாக்கும் முக்கிய பாலம்தான் கருக்குழாய் எனப்படுகிற 2 சினைக்குழாய்களும். இது கர்ப்பப்பையின் இடது பக்கம், வலது பக்கம் என இரண்டு பக்கங்களிலும் 8 முதல் 10 செ.மீ. நீளமுள்ள மெல்லிய குழாய்களாக இருக்கும். சினைக்குழாயின் ஒரு பக்கம், கர்ப்பப்பையினுள் திறந்த நிலையில் இருக்கும். மறு பக்கம் கருமுட்டைப்பையின் அருகில் இருக்கும். இவற்றில் கர்ப்பப்பையின் வாயில் உள்ள பகுதி குறுகலாகவும், கருமுட்டைப்பையின் அருகில் உள்ளது அகலமாக, கைவிரல் போன்ற திசுக்கள் கொண்ட, உறிஞ்சும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். கர்ப்பப்பையிலிருந்து உள்வரும் ஆண் அணுக்களை சினைக்குழாய் வழியாக கொண்டு சென்று, மாதாமாதம் வெடிக்கும் கருமுட்டையை கைவிரல் போன்ற மென்மையான ஃபிம்பிரியா (fimbriya) உறிஞ்சி, சினைக்குழாய்க்குள் எடுத்துக் கொள்கிறது. சிலியா போன்ற மென்மையான, மிக சன்னமான மயிரிழைகள் இந்தச் செயலைச் செய்கின்றன. அப்படி உண்டாகும் சிசுவை 48 மணி நேரத்துக்குள் சினைக்குழாயிலிருந்து கர்ப்பப்பை அறைக்குள் சேர்த்து விடுகிறது. கரு, கர்ப்பப் பையில் ஒன்றி, குழந்தையாக வளர ஆரம்பிக்கிறது.

அது சரி… இந்தக் கருக்குழாய் அடைப்பு அப்படி என்னதான் செய்யும்?
குழந்தையின்மைக்கான பிரதான காரணம் இந்தக் கருக்குழாய் அடைப்பு என ஏற்கனவே பார்த்தோம். அடுத்து கருக்குழாயில் கருத்தரிக்கும் சிசு, கருக்குழாயினுள் செல்ல இயலாமல், கருக்குழாயிலேயே தங்கி வளர்ச்சியடையவும் இது காரணமாகலாம். இது பெண்ணின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.
குழந்தை இல்லாத பிரச்னைக்கு இந்த சினைக்குழாய்கள் வேலை செய்யாததுதான் முக்கிய காரணம்.

அது அப்படி வேலை செய்யாமைக்கு என்னவெல்லாம் காரணங்கள்?
* கர்ப்பப்பைக்கும் கருமுட்டைக்கும் தொடர்பே இல்லாமல், இயற்கையிலேயே அடைப்பு இருக்கலாம்.
* சிறு வயதில் பிரைமரி காம்ப்ளக்ஸ் எனப்படுகிற டிபி கிருமிகள் அதிகம் தாக்கிய பெண்களுக்கு, தொற்று ஏற்பட்டு, புண்ணாகி கருக்குழாய்கள் அடைத்திருக்கலாம்.
* சுத்தமான பழக்க, வழக்கங்கள் இல்லாத பெண்களுக்கு, தொற்றுக்கிருமிகள் தாக்கி, வெள்ளைப்படுதல் அதிகமாகி, குழாய்களுக்குள் கிருமிகள் சேர்ந்தும் அடைப்பை உண்டாக்கலாம்.
* எஸ்.டி.டி. போன்ற நோய்களால் கிருமிகள் தாக்கி, குழாயின் தோல் பழுதடைந்து, புண்ணாகி, தழும்பாகி, அதன் விளைவான பாதிப்பாகவும் இருக்கலாம்.
* அப்பென்டிக்ஸ் அறுவைக்குப் பிறகான தொற்று, அடிவயிற்றில் டிபி தொற்று, சீழ் பிடித்தல் போன்று வயிற்றுக்குள் வரும் பொதுவான பிரச்னைகளின் பாதிப்பாகவும் அடைப்பு உண்டாகலாம்.
* குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை ரிங் மூலமோ அல்லது வெட்டி, தையல் போடும் முறை மூலமோ செய்யப் படுகிற போதும், குழாய்களில் அடைப்பு உண்டாகலாம்.

ஒரு மென்மையான உயிரையே உண்டாக்கும் முக்கியமான இந்தக் கருக்குழாய் நன்றாக வேலை செய்வதை எப்படிக் கண்டுபிடிப்பது?
குழந்தையில்லாத தம்பதிக்குப் பரிந்துரைக்கப் படுகிற மிக முக்கியமான சோதனைகளில் ஒன்று, கருக்குழாய் அடைப்புக்கான சோதனை. ஸ்கேன், எக்ஸ் ரே, லேப்ராஸ்கோப்பி மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் அடைப்பின்றி இருந்தாலும், சினைக்குழாய் செயல்திறன் இன்றி இருக்கலாம். சினைக்குழாயின் செயல்திறனைக் கண்டுபிடிக்கும் நவீன பரிசோதனை இப்போது பரவலாக வந்துள்ளது. லேப்ராஸ்கோப்பி மூலம் மிகத் துல்லியமாக குழாயின் வெளிப்புறத் தோலையும், அதன் நிலையையும் (கருப்பையின் அருகில் உள்ளதா) , கருப்பை, குடல் அல்லது மூத்திரப் பையில் ஒட்டியிருக்கிறதா என நேரடியாக லேப்ராஸ்கோப்பி மூலம் கண்டறியலாம். அப்படி ஒட்டியிருந்தால் லேப்ராஸ்கோப்பி மூலம் (adhesiolysis) அகற்றவும் செய்யலாம்.

சினைக்குழாய் சம்பந்தப்பட்ட நவீன சிகிச்சைககளுக்கு டியூபோபிளாஸ்டி (tuboplasty) எனப் பெயர்.
இப்போது ஃபாலோஸ்கோப்பி (falloscopy) என்று குழாய்க்குள் செலுத்திச் செய்யப்படுகிற என்டோஸ்கோப்பி முறை மூலம் சினைக்குழாயின் உண்மையான செயல்திறனையும், அதன் உள்பாகத்தில் உள்ள சிலியா (cilia) இயக்கத்தையும் (மைக்ரோ மயிரிழைகள்) கண்டறியலாம்.

Image

இந்தப் பிரச்னையை எப்படி சரி செய்யலாம்?
* ஆரம்ப காலத்தில் கிருமியால் உண்டாகும் மிகக் குறைந்த அடைப்பு மற்றும் சினைக்குழாய் புண்களை (salphingtis) கிருமிகளுக்கு உண்டான மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.
* ஹைட்ரோ சால்பிங்ஸ் (Hydro Salpinx) எனப்படும் பழுதடைந்த சினைக்குழாய்கள் மருந்து மூலமும், Salphingostomy எனப்படுகிற லேசர் மைக்ரோ என்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறையிலும் குணப்படுத்தி, இயற்கையாகக் கருத்தரிக்கச் செய்யலாம்.
* கார்னுவல் பிளாக் (Carnual Block) எனப்படும் கருப்பையின் ஆரம்ப இடத்திலுள்ள சினைக்குழாய் அடைப்பை நவீனமான ஹிஸ்டெரோஸ்கோப்பி (hysteroscopy) எனப்படும் என்டோஸ்கோப்பி வழியாக கருப்பையின் உள் செலுத்தி சரியாக்கலாம் (hysteroscopic cannulation).
* சிகிச்சை எதுவும் பலனளிக்காமல், பல ஆண்டுகளாகியும், குழந்தையில்லாத நிலையில், சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை உண்டாக்கலாம். உலகில் முதன்முறையாக சோதனைக்குழாய் சிகிச்சை முறை, சினைக்குழாய் அடைப்புள்ள பெண்களுக்கு கண்டுபிடிக்கப் பட்ட அற்புதமான சிகிச்சை. கணவன்-மனைவி இருவரது அணுக்களையும் உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் பொருத்தி, சிசு உண்டாக்கி, 2 முதல் 5 நாட்களுக்குள் கருவறைக்குள் நேரடியாக செலுத்தி, இயற்கையான குழந்தை போல வளர்த்து, பிரசவம் நிகழச் செய்கிற நிகழச்சியாகும். எனவே ஆரம்ப காலத்திலேயே தக்க பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சைகள் மேற்கொண்டால், பெரும்பாலும் சினைக்குழாய் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்த்து, குழந்தைச் செல்வம் பெறலாம்.

– ஆர்.வைதேகி

இனிப்பானவர்களுக்கு!

டயாபடீஸ் என்பது நோயல்ல…  அது ஒரு குறைபாடுதான் (டிஸ் ஆர்டர்) என்பது தெரியும்தானே!

Image

என் அனுபவப் பகிர்வுகள் உங்களுக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்…
எனக்கும் உங்களைப்போலவே அலுவலகத்தில்தான் நீரிழிவு அறியப்பட்டது. மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே ஜி.டீ.டீ. என்ற குளுக்கோஸ் தாங்கு சோதனை எடுத்துக்கொண்டேன். அதுதான் ‘நாம் இனிப்பானவர்கள்’ என்பதை உறுதியாக உலகுக்கு அறிவிக்கும் சோதனை!

டயாபடீஸுடன் வாழ்வது சோகமே அல்ல… நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று நினைக்கக்கூடாது… அவ்வளவுதான்!

பாக் கிரிக்கெட்டர் – வாசிம் அக்ரமுக்கு டைப் – 1 டயாபடீஸ். (பிறப்பிலேயே வருவது). இறுதி வரை இன்சுலின் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். அப்படியொரு சூழலில் அவர் பிரமாதமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். கிரிக்இன்ஃபோ பாருங்கள்!

நீரிழிவைப் பற்றி வருந்தாமல், ஆனால், அதற்குரிய கட்டுப்பாடுகளை மதித்து சாதித்தவர்கள் பல பேர். நீங்களும் அப்படி வருவீர்கள் என எனக்குத் தெரியும்.

அப்புறம் சில குறிப்புகள்…

* விருந்தும் விரதமும் நமக்கு (அதாவது நீரிழிவுகாரர்களுக்கு) ஆகாது. ஆகவே செவ்வாய்-வெள்ளிதோறும் சாமிக்கு விரதம், மனைவியுடன் சண்டை போட்டு பட்டினிப்போர், அரசியல் உண்ணாவிரதங்கள் இதற்கெல்லாம் உடனடி தடா.
எப்பாவது ஒருமுறைதானே என்று கல்யாண வீட்டிலோ, பார்ட்டிகளிலோ, ஸ்பெஷல் விருந்துகளிலோ புகுந்துவிளையாடி விடாதீர்கள். ரத்த சர்க்கரை அளவு தறிகெட்டுப்போய் பிரச்னைகள் தொடங்கும்.
பி.கு.: வடையும் அடையும் உங்களுக்குப் பிடிக்கும்தான். ஆனால், ஸ்வீட்டுக்குப் பதிலாக எக்ஸ்ட்ரா வடை சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. ஜாக்கிரதை… சர்க்கரை குறைபாடுக்கு கொலாஸ்ட்ராலும், உயர் ரத்த அழுத்தமும் நெருங்கிய உறவினர்கள்!

* ரொம்பப் பயமுறுத்த வில்லை… நீங்கள் தாரளமாக நிறையச் சாப்பிடலாம். ஆனால், இடைவெளி விட்டு சாப்பிடுங்கள். தினமும் 5 முறை கூட சாப்பிடலாம்… கொஞ்சம் கொஞ்சமாக!

* காலை உணவு என்கிற வளர்சிதைமாற்றத்துக்கு (மெட்டபாலிசம்) அவசியமான விஷயத்தை பல பேர் கண்டுகொள்வதே இல்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் 12 ஆண்டுகளாக ‘டிஃபன்’ சாப்பிட்டதே இல்லை என்று பெருமையாகச் சொல்கிறார். டயாபடீஸ்காரர்கள் அப்படியெல்லாம் இருக்கவே கூடாது. இது ரொம்ப முக்கியம்.

* காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் சுண்டல்/வெள்ளரிக்காய்/சாலட்/ஓட்ஸ் – இப்படி ஏதாவது எண்ணெய் குறைவான ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். மதிய உணவோடு வாரம் இருமுறை கீரை மஸ்ட் கண்ணா மஸ்ட்!

* டால்டா, நெய், கெட்டித்தயிர், வெண்ணெய், பனீர், சீஸ் ஆகியவற்றை கிருஷ்ண பாலனுக்கே அர்ப்பணித்துவிட்டு கொழுப்பு நீக்கிய -நீர்மோரே சிலாக்கியம். கொழுப்பே இல்லாத தயிர் கிட்டினாலும் ஓ.கே.

* மாலை 5 அல்லது 6 மணிவாக்கில் சர்க்கரை, வெண்ணெய் இல்லாத பிரெட்/சாண்ட்விச் அல்லது ஜீரோ அல்லது 2 இட்லி (குஷ்பு இட்லி அல்ல!) அல்லது ஒரு சப்பாத்தி (மைதா ஆகாது… கோதுமையே சிறப்பு) சாப்பிடலாம்.

நேரடி இனிப்புகளும், தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள பழங்களையும் தவிர்த்து விடுங்கள். லெமன் சால்ட் / சர்க்கரை இல்லாத தக்காளி ஜுஸ் சாப்பிடலாம். வேறு ஜுஸ் வேண்டாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது சில பழங்கள் சாப்பிடலாம்.

வாக்கிங்… இதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். வாரத்தில் 5 நாட்களாவது கட்டாயம் வாக்கிங் போகவேண்டும். தலா 45 நிமிடங்கள். மொத்தமாக நேரம் ஒதுக்கமுடியவில்லை என்றால் காலை-மாலை என்று பிரித்துப் பிரித்தும் போகலாம். லிஃப்ட் பயன்படுத்தாதீர்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் உயர வேண்டியவர்கள் மாடிப்படிகளைப் பயன்படுத்துவதே நல்லது!

மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாக்கவே மாத்திரை மாற்றி மாற்றி சுயமருத்துவம் செய்வது மிகமிகத் தவறானது. ஒவ்வொருவரின் உடல்நிலை, எடை, உணவுப்பழக்கம், வயது என பல காரணிகளுக்குத் தகுந்தாற்போலத்தான் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மற்ற பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் கூட அதை குறித்துவையுங்கள்.

3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறும் முன் HBA1C என்ற சோதனை எடுத்துக்கொள்ளுங்கள். இது நாம் அந்தக் காலகட்டத்தில் எந்த லட்சணத்தில் உடலை பராமரித்தோம் என்பதை புட்டுப்புட்டு வைத்துவிடும்.
இது சாதாரண ரத்தப் பரிசோதனைதான். 300- 400 ரூபாய் கட்டணம்.

Image

(பேசுவோம்!)

– ஷாம்