பயணங்கள் மறப்பதில்லை !

ப்ரியங்களுடன் ப்ரியா–15

செப்டம்பர் 27

உலக சுற்றுலா தினம்

tour101

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு .. .

எடுத்துவை  பகிர்ந்து கொள்வோம்…
சிறகுகள் விரித்துப் பறக்க
அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம்…
பாதையில் தெளித்துச் செல்ல
அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு…

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 

நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …
உன்முகம் துடைக்க 
அதோ அந்த
புல்லின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம்..
பயணங்கள்
மறப்பதில்லை…
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
tour7

நம்மோட  மனசு  ஒரு ஓயாத பயணி. தான் சென்று வந்த இடங்களை மட்டுமல்ல… செல்லாத இடங்களுக்குக் கூட பயணிக்கும் வல்லமை கொண்டது. பார்த்த இடங்களைக் குறித்து நாலு பேரிடம் சொன்ன பிறகே சிலரது மனசு அமைதியாகும். இன்னும் சிலருக்கு அதைப் பத்தி எதாவது குறித்து வைத்தால்தான் தூக்கமே வரும்!

நானும் அப்படிதான்… பார்த்ததை பகிர்வதில் உள்ள பரவசம் மிக மிக இனிமையானது…

24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வேறொரு இடத்தில் ஓய்வாக மன மகிழ்ச்சிக்காக தங்குபவர்களே சுற்றுலா பயணிகள்.சுற்றுலாவின் அடிப்படையே ‘பயணங்கள்’தான்.

tour10

1814ல் தாமஸ் குக் இங்கிலாந்தின் லாபரோ என்ற நகரில் இருந்து லீசெஸ்டர் வரை 570 நபர்களுடன் ரயில் பயணம் சென்றார். இதுவே உலகின் முதல் விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்முறை சுற்றுலா. இப்பயணம் வெற்றிகரமாக இருந்ததால் பல சுற்றுலா பயணங்களை தாமஸ்குக் ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பயணிகளை இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றதால் தாமஸ் குக் ‘சுற்றுலாவின் தந்தை’ என்றும் ‘உலகின் முதல் பயண முகவர்’ என்றும் கருதப்படுகிறார்.
இப்போது உலக நாடுகள் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அன்னிய செலாவணியை குவிக்கிறது. இதுவரை போர் சத்தங்களை கேட்டிராத சுவிட்சர்லாந்தின் (ராணுவமே இல்லாத நாடும் கூட!) முதன்மை வருவாயே சுற்றுலாதான்.
tour4
சுற்றுலா…
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான ‘ரீ சார்ஜ்’ செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர்.
மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களைக் காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவேதான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, ‘ஆணையிடும் மனிதர்’ இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர்
கிணற்றுத் தவளையாக வாழும் மனிதர்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துவிடுகின்றனர். ஆனால், சுதந்திரத்தோடு தேடல் மனம்கொண்ட மனிதர்கள் உலகத்தை அறியத் துடிக்கிறார்கள். அதற்கு, பயணப்படுதல் அவசியமானது. பயணம் எல்லோருக்கும் வாய்த்தாலும், ரசிப்புத்தன்மையும் கூர்ந்த பார்வையும் இருந்தால் மட்டுமே இயற்கையைக் கற்க முடியும்.
tour1
அன்றாட நிகழ்வுகளில் கரைந்துபோகும் வாழ்வை ஒருசில கணங்களே உயிர்ப்பிக்கின்றன. மழலையின் சிரிப்பு, மகிழ்வூட்டும் திருவிழா, பிடித்த புத்தகம், மலைக்க வைக்கும் மலைகள், கலையின் உச்சமான சிலைகள், உற்சாகமூட்டும் வீதிகள் என இப்படிப் பல விஷயங்கள் நம் வாழ்வைப் புதுப்பிக்கின்றன. மனம் ஓரிடத்தில் நில்லாமல் கவலைகளில் உழன்று, இன்பங்களில் திளைத்து தொடர்ந்து சஞ்சாரம் செய்து கொண்டே இருக்கிறது. அதனூடாகத்தான் இந்த பயணங்களும் பயணம் சார்ந்த  வாசிப்பும்.
tour8
இன்னைக்கு எவ்வளவோ சுற்றுலா  பயணங்கள் சென்றாலும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்தது ஐந்தாவது படிக்கும் போது பள்ளியில் போன   என் முதல் சுற்றுலா பயணம்தான்.

மருதமலை… சின்ன வயதிலே வீட்டில் எல்லோருடன் பல முறை சென்று இருந்தாலும் முதல் முதலாக தனியாக சென்றது…

‘பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதணும்‘ என்று டீச்சர் சொன்னதும் பார்க்கும் இடத்தை எல்லாம் வார்த்தையாக வருடி வந்தது…

அதிகாலையிலேயே  எழுந்து அம்மா எங்க எல்லோருக்கும் மதியம் சாப்பிட புளி சாதமும், பருப்பு சட்னியும்  அம்மா கட்டி தந்தது…

25 பேருடன் போன என்னை வழியனுப்ப எங்கள் வீட்டில் இருந்து வந்த 35 பேர் … இன்னும் மனசை விட்டு மறையாத நினைவுகள்!

தொடர்ந்து எத்தனையோ நாடுகள், மாநிலங்கள், ஊர்கள் சென்றாலும் முதல் பயணம் என்னால் என்றுமே மறக்க முடியாது.

நான் ஈடுபட்டுள்ள விற்பனை துறையில் சிறந்த முறையில் செயல்பட்டதால் இரண்டு முறை மலேசியா சுற்றுலா.

என்னை நானே புரிந்துகொள்ள  வருடம் இருமுறை திருப்பதி…

இயற்கையுடன் பேச வருடம் இரு முறை கொடைக்கானல், ஊட்டி,

கடவுளின் தேசமும் எனக்கு சொந்த தேசம் ஆனதால் மனது வலிக்கும் போதெல்லாம் கேரளா பாட்டி வீடு…

இப்படி தமிழகத்தின் தென்கோடி முதல் வடக்கு வரை பயணம் செஞ்சாச்சு.

ஆனாலும் இன்னும் தேடல் குறையவில்லை … மனசு இன்னும் தேடுது. எதையுமே தொலைக்காமல் தேடுவதும் சுகம்தான்!

விமானம்… ரயில்… பஸ் என ஒவ்வொன்றிலும் வித விதமான ஆசான்கள் சக பயணியாக…

tour3

பரந்த பாலைவனமும், அழகு நீலக்கடல்களும், வானுயர்ந்த பனி மலைகளும் பசுமை மாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், பக்தி மணம் பரப்பும் ஆன்மிக தலங்களும்… ஏன் பல இனக்குழுக்களும் கொண்ட நாடு நமது இந்தியா. ‘உலக புவியியலாளர்களின் சொர்க்கம்’ என வர்ணிக்கப்படும் மன்னார் வளைகுடா, பசுமையான இமயமலை சிகரங்கள், இயற்கை ஆர்வலர்களையும் பல்லுயிரின ஆராய்ச்சியாளர்களையும் பெருமளவில் ஈர்க்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாரம்பரிய கட்டிடங்களும், கலாசாரத்தின் அடையாளங்களை காட்டும் இசையும் நடனமும், கண்ணாடியாக மிளிரும் ஓவியங்களும், நவீன பொறியாளர்கள் வியக்கும் சிற்பங்களும் நமது நாட்டில் உண்டு. நாம் நமது நாட்டிலே ரசிக்க உணர நெறைய இருக்கு…

tour2

ஒரு முறை சென்னை விமான நிலையத்தில் கண்ட காட்சிகள் வாழ்வியலை அழகாக ரசிக்க வைத்தது ..

ஒரு புறம் வாழ்வை தேடி அயல்நாடு பயணிக்கும் சகோதர்களின் கண்ணீர்… ஒரு புறம் வாழ்வை வென்று தாயகம் திரும்பும் சகோதர்களின் சிரிப்பு…

இப்படி இரண்டு துருவங்களை சந்தித்தாலும் அந்த இரு துருவங்களும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் சந்தித்து கண்ணீர் சிரிப்பாகவும், சிரிப்பு கண்ணீராகவும் மாறும் என்ற நிலையை உணரும் போது பயணங்கள் என்றுமே முடிவதில்லை என்பது கண் முன்னே வந்து போனது…

tour6

என் ஒவ்வொரு சுற்றுலாவும் எனக்கு வாழ்வியல் பாடங்கள்தான்…

கலாசாரம், உணவு முறைகள்,  உழைக்கும் முறைகள், அப்பப்பா .. எல்லாமே பாடம்தான் …

‘பொங்கிவரும் கடல் அலைகளும், மலை முகடுகளின் ஊடே வந்து நம்மை தழுவி செல்லும் மேகக் கூட்டமும் இதமான தென்றல் காற்றும், மனிதனின் கோபம், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தன்னுள் இழுத்து செல்லும் ஆற்றல் கொண்டவை’ என கூறுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். எனவேதான் சோர்வுற்ற மனித மனங்கள் அந்த இடம் நோக்கி பயணிக்கின்றன. புத்தகப்புழுவாய் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட சுற்றுலா பயணங்களே நடைமுறை அறிவை தரும். ‘அறிவை விரிவு செய்… அகண்டமாக்கு…’ என்றார் பாரதிதாசன். அத்தகைய விசாலமான அறிவை பெற ஒரே வழி, அர்த்தமுள்ள சுற்றுலா பயணங்களே!
tour5

இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். அப்படித்தான் பயணங்களை பார்க்க வேண்டும்.

எதிர்பாராத கணங்களில் ஒளிந்திருக்கும் அழகை தரிசிக்கத் தொடங்கும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிவிடுகிறது.

ஏதோ  ஒரு வகையில் பயணங்கள்  ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா? இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடையதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத் தொட்டுத் தொட்டு நாம் பயண பட்டுத்தான்   போகிறோம்?

tourm
மலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் எனக்கு தோன்றிவிடும்.

மலைமுகட்டில் நின்று நீங்களே பேசி பாருங்களேன்… நம் மனதில் தோன்றும் எல்லா வினாக்களுக்கும் கடவுளே பதில் சொல்வது போல இருக்கும்.

அதான் நிஜமும் கூட … ஒருவனை உருவாக்குவதில் இயற்கைக்கு முக்கிய பங்கு உண்டு.

மனித வாழ்க்கையே ஒரே ஒரு வினாடிதான் என்ற புத்தர், அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார், ‘வாழ்வு ஒரே ஒரு நொடி என்று அர்த்தமில்லை. ஆனால், ஒவ்வொரு நொடியாக வாழ வேண்டும்; ஒவ்வொரு நொடியிலும் முழுமையாக வாழ வேண்டும்’ என்பதுதான் அது.

இனி, இதுமாதிரியான அனுபவத்திற்காகவாவது, சின்ன சின்ன சுற்றுலாக்களை அமைத்துக் கொள்வோம்!

tour9

இருவரும் பகிர அதோ மற்றொரு நிலவு . . 

எடுத்துவை , பகிர்ந்து கொள்வோம் …

சிறகுகள் விரித்துப் பறக்க

அதோ அந்த பறவையை 
துணை சேர்த்து கொள்வோம் …

பாதையில் தெளித்துச் செல்ல

அதோ அந்த வாடா மலர் வாசனையை 
பறித்துவிடு …

நல்ல கவிதை தெரிகிறது 

மடித்துவை 
நேரம் போக உதவும். . . 

நம் கண்களில் அணிய 

அதோ அந்த வானவில்லை 
சுருட்டிவை …

உன்முகம் துடைக்க 

அதோ அந்த
புல்களின் பனித் துளியை 
அள்ளியெடுத்துவிடு  …

காதலாகக் கைகோர்த்து 

உலகை பவனி வருவோம் ..
பயணங்கள்
மறப்பதில்லை …
முடிவற்ற அன்பில்
தொடர்கிறது நமக்கான  பயணம்!
– ப்ரியா கங்காதரன்
IMG_20150721_070238

அதிகம் படித்தால் குறைந்த சம்பளம்!

Image

‘‘அதிகம் படித்த பெண்களா நீங்கள்? அப்படியானால் நீங்கள் வாங்கும் சம்பளத்துக்கும் ஆண்கள் வாங்குவதற்கும் நிச்சயம் அதிக வேறுபாடு இருக்கும். அதை நீங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ இப்படிச் சொல்லியிருப்பது யாரோ அல்ல… அகமதாபாத் ஐ.ஐ.எம். (Indian Institute of Management – Ahmedabad) கல்வி நிறுவனத்தில், இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட உறுப்பினர்கள் சொல்கிறார்கள்!

பெண் கல்வி வெகு அழுத்தமாக வலியுறுத்தப்படும் இந்தக் காலத்தில் இந்த ஆய்வு சொல்லியிருக்கும் கருத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. அதிகம் படித்திருந்தாலும், பெண் என்கிற காரணத்துக்காகவே சம்பளம் குறைத்துக் கொடுக்கப்படுவதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் அதிகம் படிக்காத பெண்கள் கூட, ஆண்களுக்கு சமமாகவோ, சில நேரங்களில் அவர்களை விட அதிகமாகவோ சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், படித்திருந்தாலோ நிலைமை தலைகீழ்!

அடிப்படைக் கல்வியோடு கொஞ்சம் கூடுதல் தகுதியோ, டிப்ளமோ படிப்போ படித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு சமமான கல்வித்தகுதி உடைய ஆண்களைவிட 10 சதவிகிதம் குறைவாகத்தான் சம்பளம் வாங்குகிறார்கள். முதுகலைப் பட்டம் பெற்ற பெண்கள் நிலைமை இவர்களை விட மோசம். தங்களுக்கு சமமான தகுதியுடைய ஆண்களைவிட 40 சதவிகிதம் குறைந்த சம்பளம் வாங்குகிறார்கள். இந்த நிலைமை இந்தியாவில்தான் அதிகம். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலை செய்வது, வீட்டைப் பராமரிப்பது, சமைத்துப் போடுவது போன்றவை இந்தியப் பெண்கள் எந்தச் சம்பளமும் பெற்றுக் கொள்ளாமல் செய்யும் மகத்தான வேலைகள். உண்மையில் இவையெல்லாம் விலை மதிப்பிட முடியாத பணிகள். அதுவும் ஒவ்வொருவருக்கும் தெரிந்தேதான் இருக்கிறது. இந்த உணர்வுபூர்வமான வேலைகள் பெண்களைப் பெரும்பாலும் கட்டிப் போட்டே வைத்திருக்கின்றன. இந்த வேலைகளின் அடிப்படையில் பார்க்கப்படுவதால்தான் பெண்கள் பணிக்குச் செல்லும் இடங்களிலும் அவர்களுக்கான நியாயமான சம்பளம் மறுக்கப்படுகிறது. ஆனால், அடிமட்டக் கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஆண்களைவிட அதிகம் வருமானம் ஈட்டுகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. உதாரணமாக, அடிப்படை கல்விகூட பெறாத பெண்கள் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அதே தகுதியுடைய ஆண்கள் சம்பாதிப்பது வருடத்துக்கு சராசரியாக 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்தான்.

ஒரு பெரிய நிறுவனம்… அங்கே முக்கியமான பதவிக்குப் போட்டி. ஆண், பெண் இருவருமே விண்ணப்பம் செய்கிறார்கள். இது போன்ற நேரங்களில் நிறுவனத்தின் உரிமையாளர் பெண்களைவிட ஆண்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார். வேலை கிடைப்பதற்கு முன்பாகவே பெண்கள் வடிகட்டப்படுவதும் இப்படி நடக்கிறது.

முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பெண்ணின் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய். அதே முதுகலைப் பட்டம் பெற்ற ஆணாக இருந்தால், வருமானம் சராசரியாக ஆண்டுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய். அதாவது சதவிகிதக் கணக்கில் ஆண், பெண்ணை விட 40.76% அதிகமாகப் பெறுகிறார்.

Image

இந்த ஆய்வு வேறொரு கோணத்திலும் பெண்களை அணுகியிருக்கிறது. பொதுவாக, பெண்கள் பயிற்சிகள் அதிகம் தேவைப்படும், நீண்ட நேரம் பணியாற்றும் வேலைகளை விரும்புவதில்லையாம். அந்த மாதிரியான பணிகளில் இருப்பவர்கள், திருமணம், தாய்மையடைதல் போன்ற காரணங்களால் சீக்கிரத்திலேயே வேலையை விட்டுவிடுகிறார்களாம். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக, வேலைகளுக்கு இடைவெளி விடுகிறார்கள் அல்லது பகுதி நேர வேலைகளில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இது போன்ற காரணங்களால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநேரமாக வேலைக்கு வரும் பெண்களுக்குக் கிடைப்பது ஆண்களைவிட குறைந்த சம்பளமே!

சரி… தாய்மையடையாத பெண்கள்? அவர்களுக்கும் இதே நிலைமைதான். குழந்தை இல்லை என்பதற்காக அவர்களுக்கு சிறப்பாக எந்த முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை. அவர்களை, ‘சீக்கிரமே அம்மாவாகப் போகிறவர்கள்’ என்று முத்திரை குத்தி அடையாளப்படுத்தியிருக்கிறது சமூகம்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மின் ’பேசெக் இந்தியா’ (Paycheck India) என்கிற ஆய்வுப் பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு தன்னார்வத் தொண்டு அமைப்பான ‘வேஜ் இண்டிகேட்டர் ஃபவுண்டேஷன் அண்ட் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ம்ஸ்டர்டாம்’ (Wage Indicator Foundation and University of Armsterdam) உதவியிருக்கிறது. இந்தியா முழுக்க இந்த ஆய்வு 21,552 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது… அதுவும் கிட்டத்தட்ட ஏழரை ஆண்டுகள்!

ஆய்வு கிடக்கட்டும்… ஆண்களைவிட பெண்கள் எவ்வளவு குறைவாக வருமானம் பெறுகிறார்கள் என்பது நம் மனசாட்சிக்குத் தெரியாதா?

 

Photo Courtesy: http://freeimagescollection.com

http://www.employeerightspost.com/

– பாலு சத்யா