ஜூஸா… பழமா? எது நல்லது?

ImageImage 

பாட்டில் டிரிங்க்கா? வேண்டவே வேண்டாம். அதுக்கு ஜூஸா குடிக்கலாம்என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். இன்றைக்கு அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல பெருகி வருகின்றன ஜூஸ் கடைகள். சிறு நகரங்கள் தொடங்கி, மாநகரம் வரை ஜூஸ் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. ஜூஸ் நல்லதா? நல்லது. அதைவிடப் பழம் நல்லது!   

‘எந்தப் பழமாக இருந்தாலும் ஃப்ரெஷ்ஷாக, அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். குறிப்பாக, ப்ளூபெர்ரி, திராட்சை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை அப்படியே சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புக் குறையும். ஆனால் அதையே நீங்கள் ஜூஸாகக் குடித்தால் எதிர்மறையான விளைவுகள் வந்து சேரும் என்கிறது ஒரு புதிய ஆய்வு முடிவு.

இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அமெரிக்காவில் இதற்கான ஆய்வை நடத்தினார்கள். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பலரிடம் நடந்தது ஆய்வு. இந்த ஆய்வில் 1,87,000 பேர் கலந்து கொண்டார்கள். டாக்டர்கள், நர்ஸ், பிற துறைகளில் பணிபுரிவோர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அவர்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் கண்காணிக்கப்பட்டது. அவர்களுடைய உணவுப் பழக்கம், உடல் எடை, புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் உழைப்பு, வாழ்வியல் முறை சார்ந்த நடவடிக்கைகள் உள்பட அனைத்தும் கேள்விகளாகக் கேட்கப்பட்டன. அதற்கு ஆய்வில் கலந்து கொண்டவர்கள் சொன்ன பதில்களின் அடிப்படையில் குறிப்புகள் தயாராயின. விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த ஆய்வின்போது, 6.5 சதவிகிதம் தன்னார்வலர்கள், நீரிழிவு நோய்த் தாக்குதலில் இருந்து தப்பித்தார்கள். அவர்களுக்கு வாரத்துக்கு இருமுறை ஆப்பிள், ப்ளூபெர்ரி, திராட்சை உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்பட்டன. மாதத்துக்கு ஒருமுறைக்கும் குறைவாக பழங்களை சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைந்த அளவில் (23%) இருந்தது.

‘‘சில பழங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. இதை எங்கள் ஆய்வு நிரூபித்திருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ‘ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்நிறுவனத்தில் நியூட்ரிஷியன் துறை பேராசிரியராகப் பணியாற்றும் குய் சன் (Qi Sun). அதே நேரம், பழங்களை ஜூஸாக தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை குடித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

‘பழங்களை சாப்பிடுவதற்கும் ஜூஸ் ஆக குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்று திரவம் மற்றொன்று திடப் பொருள். அவ்வளவுதான். திடப் பொருளை விட, திரவம் வெகு வேகமாக வயிற்றுக்குள் சென்றுவிடும்.  அதாவது, அந்த வேகம் குளுகோஸையும் இன்சுலினையும் ரத்தத்தில் உடனே கலக்கச் செய்து, பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். பழங்களை அப்படியே சாப்பிடும் போது, மெதுவாக வயிற்றுக்குள் செல்வதால் அந்த பிரச்னை இல்லை. சத்தும் முழுமையாகக் கிடைக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

– சாருலதா