கவிதையும் கவிதையும் – 8

கமலா தாஸ் கவிதை

Image

கற்காலம்

 

பிரியமுள்ள கணவன், பழமையில் குடியேறியவனின் மனதில்

வயதான பருத்த சிலந்தி, வலைகளைப் பின்னுகிறது குழப்பத்துடன்

அனுதாபம் காட்டு!

நீ என்னைக் கற்பறவையாக மாற்றினாய்,

கருங்கல் பறவையாய்

என்னைச் சுற்றி வெறுக்கத்தக்க அறையைக் கட்டினாய்.

நீ வாசிக்கையில்

கவனமின்றி அம்மைத்தழும்பு நிறைந்த முகத்தில் அடித்தாய்

உரத்த பேச்சுடன் நீ

எனது அதிகாலை உறக்கத்தைக் கலைத்தாய்

எனது கனவுகாணும் கண்களில் உன் விரலைக் குத்தினாய்

இருந்தும் பகல் கனவுகளில் பலவான்கள் நிழல்களைப் பதித்தனர்

மூழ்கினர் வெண்சூரியன்களாக பெருகும் எனது திராவிட குருதியில்

ரகசியமாய் வடிகால்களைப் பாயச் செய்தனர் புனித நகரங்களின் அடியில்

நீ பிரிந்தபோது நான் எனது நீலநிற பலமுறை அடிவாங்கிய வாகனத்தை

நீலக்கடல் நெடுக ஓட்டினேன்

நான் நாற்பது பலத்த ஓசை எழுப்பும் காலடிகளுடன்

இன்னொருவரின் கதவைத் தட்ட ஓடினேன்

அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்க்கும் துவாரத்தின் வழியே பார்த்தனர்

அவர்கள் கவனித்தனர் என்னை

நான் மழையைப் போல வந்துசென்றதை

கேள் என்னை

அனைவரும் கேளுங்கள் என்னை

அவன் என்னில் என்ன பார்த்தான்

கேள் என்னை ஏன் அவன் சிங்கம் எனப்பட்டான்

ஒழுக்கமில்லாதவன் எனப்பட்டான்

கேள் என்னை ஏன் அவனது கை படம்விரித்தாடும் பாம்பைப்போல அசைந்து

எனது இடையின் பின்பக்கம் அடித்தது

கேள் என்னை ஏன் அவன் பெரும் மரம் வீழ்ந்ததுபோல

எனது மார்பகங்களில் விழுந்து உறங்கினான்

கேள் என்னை ஏன் வாழ்க்கை குறைவாய் உள்ளது

மேலும் காதல் இன்னும் குறைவாய்

கேள் என்னை எது பேரின்பம் மேலும் அதற்கான விலை என்ன…

 தமிழாக்கம்: மதுமிதா

Image

 

painting: suzichua.com

 

மதுமிதா கவிதை

Image

 

உனக்கான பாடலைப் புனைய…

 

ஏதோ ஒரு பேச்சு ஏதோ ஒரு நிகழ்வு

எப்படியோ நினைவுபடுத்திவிடுகிறது

இன்னுமொரு நினைவினை  மற்றுமொரு நிகழ்வினை

 

இந்த சிறுதூறலும் இழுத்து வந்து சேர்க்கிறது

அந்த மழைச்சாரலை

அந்த மரத்தினடியில் நடுங்கியபடி ஒதுங்கியதை

அந்தக் கிளையின் இலைகளசைந்து

அட்சதையாய் பொழிந்து தூவிய

இன்னொரு மழையை

இதழ்கள் ஒற்றிக்கொள்ள இணைந்ததும் விலகிய குளிரை

குபீரெனப் பறந்து சென்ற வெட்கம் பூசிய பறவையை

அந்த நீண்ட பயணத்தை

.

அந்த மிக நீண்டதொரு பயணம் மீண்டும் வாய்க்கவேயில்லை

 

கதகதப்பான உன் ஸ்பரிசம்

அழைக்கிறது உன் வாசம்

 

அடவியின் இருள்

ஆனந்த கீதமிசைத்த புள்ளினங்கள்

ஆடிக்களித்த மான்கள்

அருகில் வந்து பயந்து விலகிய முயல்கள்

இரவா பகலா தெரியா பொழுதில்

இயைந்த பத்து விரல்களின்

இசைவாய் ஒன்றிணைந்த தாபங்கள்

சுவைத்து மகிழ்ந்த இவ்வினிப்பின் சுவை

இனியெங்கே கிடைக்குமென

இங்குமங்கும் தேடியலைந்த அணில்குஞ்சு

 

வீசியெறியப்படுகிறேன் நினைவின் சுழலுக்குள்

விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

வேட்கையும் உயிரும் மீட்பாரின்றி

மூழ்கிக் கிடந்த பெருங்கடலினுள் தத்தளித்தபடி

மேல்நோக்கிப் பாய்ந்து வருகிறேன்

உன் நினைவினைப் பற்றிக்கொண்டு

வெளிவந்து மூச்சடைப்பை நீக்கி மூச்சு எடுத்துவிடும் தீவிரத்துடன்

உயிர் காத்திடும் ஆவேசத்துடன்

 

வற்றாது சுரக்கும் தீராத சொற்களின் குவியலிலிருந்து

எதை விடுத்து எதை எடுத்து

எப்படி பொறுக்கி அடுக்கிக் கோர்க்கப்போகிறேன்

முற்றாத உனக்கான பாடலைப் புனைய.

Image

Painting Credit: Leonid Afremov MAGIC RAIN

 

கவிதையும் கவிதையும் – 7

கமலா தாஸ் கவிதை

Image

கண்ணாடியின் உள்பிரதிபலிப்பு

 

வெளியே மழை வலுத்தது

வராந்தாவின் கதவுகளை அடைத்தோம்

அனைத்து நீலநிற விளக்குகளும் ஏற்றப்பட்டன

முதல் அணைப்பை எவ்விதம் விவரிப்பேன்

நீங்கள் பார்த்திருக்க முடியாது

அவனுடைய அறையில் இருந்த பல கண்ணாடிகளை

நாங்கள் அணைத்துக்கொண்டபோது

நாங்கள் அவற்றின் வெளிர் நீலக்குளத்தில்

விழுந்தோம் திரும்பத் திரும்ப

இறப்பில்லாத திரும்பத்திரும்ப பிரதிபலிக்கும் சித்திரங்கள் போல்

பிரதிபலிப்பு மீண்டும் பிரதிபலிப்பு

நிழலின் நிழல்

கனவின் கனவு

அவனை அறிந்துகொண்டேன்

என்னை அறிந்துகொண்டபிறகு

அவனை யாரென அறிந்துகொண்டபிறகு

என்னை இன்னும் அறிந்துகொண்டேன்

ஆனால் அவன் சொன்னான்

என் பக்கத்திலிருந்து எழுந்து

‘எட்டு மணியாகிறது. எழுந்திரு

என் இனிய மனைவியே

நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.

தமிழாக்கம்: மதுமிதா

Image

Painting Credit: Mohuya Rout

 

மதுமிதா கவிதை

Image

உதறிச் சென்றாய்

 

மீண்டும் வருவேன் உறுதி என்றாய்

கையசைத்துச் சென்றாய்

விரல் நகங்களை வெட்டிவிடுவதாய்

குளவி கூட்டைத் துறந்து செல்வதாய்

வண்ணத்துப்பூச்சி கூட்டை மறந்துவிடுவதாய்

பாம்பு சட்டையைக் கழட்டிவிட்டுத்

திரும்பிப்பார்க்காமல் செல்வதாய்

நடந்து விட்டுத் திரும்புகையில்

கடற்கரை மணலை ஆடையிலிருந்து தட்டிவிடுவதாய்

உதறிச் சென்றுவிட்டாய்

 

அலைகடலென சீறும் உணர்வுகளின் அழுத்தம்

அமைதியை வாள்போல் கீறி 

சித்தத்தை சில்லுச்சில்லாய் சிதறச் செய்கிறது

 

மேகத்தை எவ்விதம் கட்டி வைப்பேன்

நிலவின் கற்றையை எவ்விதம் கைகளில் பிடிப்பேன்

காற்றினை எவ்விதம் சொந்தமென்பேன்…

Image

Painting  Credit:Patricia Velasquez de Mera

 

கவிதையும் கவிதையும் – 6

கமலா தாஸ் கவிதை

kamala-das1

குளிர்காலம்

புதுமழையின் வாசனை

மெல்லிய தாவரத் தண்டுகளின் வாசனை

அதன் வெம்மை

வேர்களைத் தீண்டும் பூமியின் வெம்மை

எனது ஆன்மா தனது வேர்களை

எங்கேனும் நிறுத்தவேண்டுமென நினைக்கிறேன்.

அவனது உடலை நேசிக்கிறேன் வெட்கமேயின்றி

குளிர்கால மாலைகளில்

குளிர்காற்று

ஜன்னலின் கதவுகளில் மோதும்போது…

தமிழாக்கம்: மதுமிதா

set-fire-to-the-rain-painting

Painting credit: nikhelbig.com

மதுமிதா கவிதை

857357_10200849761474153_1034327492_o

காலம் வரையும் ஓவியம்

வண்ணம் புதிதாய் அளித்தாய்
கண்டுகொண்டது
கானகக் குயில்

வண்ணங்களை வாரி வாரி தெளித்தாய்
கானகக் குயில் கானமிசைத்தது

வண்ணங்கள் மறைய
அதிர்ந்த குயில்
கானம் மறந்து
வண்ணம் தேடித்தேடி
அலைந்து ஓய்ந்தது

வானவில்லாய் ஒளிர்ந்தாய்
கானம் பிறந்தது
இசைத்த கணம் மறைந்தாய்

மஹாமௌனம் நிலவ
மறுபடி ஒளிர்ந்தாய்
நிறம் பிரியும் வண்ணங்களுடன்
குயிலும் இசைத்தது
இனித்தும்
சோககீதம் சுமந்தும்

வண்ணமும் இசையும்
இணைந்தும் நீங்கியும்
நீங்கியும் இணைந்தும்
இழையும் ஓவியத்தை
வேதனையோ வேட்கையோ அறியா
காலம் வரைந்து கொண்டிருக்கிறது
இன்னும் இன்னும் இயல்பாய்

pajaro-bobo-mayor-puerto-rican-lizard-cuckoo-yiries-saad

Painting Credit: Yiries Saad

 

கவிதையும் கவிதையும் – 5

கமலா தாஸ் கவிதை

Image

சிறைக்கைதி

கைதி

அவனுடைய சிறையின்

புவியியலைப் படிப்பதைப்போல்

நான் படிக்கிறேன்

உனது தேகத்தின் ஆபரணங்களை என் அன்பே

ஒருநாள் எப்படியும் கண்டுபிடிப்பேன்

அதன் பொறியிலிருந்து தப்பிக்க

தமிழாக்கம்: மதுமிதா

Image

மதுமிதா கவிதை

Image

ஒற்றைச் சாளரமும் மூடிக்கொண்ட பொழுது

எல்லா கதவுகளும்
அடைக்கப்பட்டு மூச்சுமுட்ட
அடைபட்டுக் கிடந்த பொழுது

திறந்த ஒற்றைச் சாளரமும்
திறந்தது மூடிக்கொள்ளவே என
சாத்திக்கொண்ட  பொழுது

சாளரம் வழி கண்ட
புது உலகின்
காட்சியும் கானமும்
நினைந்து நினைந்து
கடைசி மூச்சாய்
பிடித்துக் கொண்டு
கரைசேர்ந்திடும் துடிப்பில்
உயிர் துடிதுடித்துக் கிடக்கும்

தப்பித்துவிடும் துடிப்பில்
கதவின் இடுக்கில் அகப்பட்டு
நைந்து போன
கரப்பான் பூச்சியின் தவிப்பாய்

Image

கவிதையும் கவிதையும் – 4

கமலா தாஸ் கவிதை

Image

காதல்

உன்னைக் காணும்வரை

நான் கவிதை எழுதினேன்

படங்கள் வரைந்தேன்

தோழிகளுடன் வெளியே நடக்கச் சென்றேன்

இப்போது உன்னை நேசிப்பதால்

சாமான்ய நாயைப்போல்

சுற்றிச் சுற்றிக் கிடப்பதால்

என் வாழ்க்கை கிடக்கிறது

உன்னுள் திருப்தியுடன்

தமிழாக்கம்: மதுமிதா

Image

painting credit: Ruth Batke Art Abstract art Emotions: Love

மதுமிதா கவிதை

Image

ஆதிமனுஷ வேட்கை

எதனாலும் நிறுத்த இயலாது

சுழலாய்ச் சுழித்துக் கொண்டு

பொங்கிப் பெருகி ஓடியது ஆறு.

எங்கும் பரவியது நீரின் குளுமை

மணலில் பதிந்த தொடர் பாதச் சுவடுகள்

கரையில் சற்றே தள்ளியிருக்கும்

மறைவிடம் நோக்கி நகர்ந்தன.

கானமிசைக்க மறந்து

கண்பொத்தி மறைந்தன ககனப்பறவைகள்.

வானமே கூரை

மேகமே ஆடை

காற்றே அரண்

இணைபிரியவியலா ஆதிமனுஷ வேட்கை.

மண் வாசனை எழ மழை பொழிய

நீரில் இறங்கி ஆடின

இன்னுமொருமுறை

இரு இணை மீன்கள்.

எதனாலும் நிறுத்த இயலாது

சுழலாய்ச் சுழித்துக் கொண்டு

பொங்கிப் பெருகி ஓடுகிறது ஆறு.

Image

photo credit: firewaterphotography

கவிதையும் கவிதையும் – 3

கமலா தாஸ் கவிதை

Image

புழுக்கள்

அந்திப்பொழுதில்

ஏரிக்கரையில்

காதல் புரிந்த கண்ணன்

அவளைக் கடைசியாய்ப் பிரிந்து சென்றான்.

 செத்தவள் போல் கிடந்தாள் ராதா

அன்றைய இரவு கணவனின் கரங்களில்.

அவன் கேட்டான்

என்ன தவறானது

எனது முத்தத்தில் மனம் இல்லையா அன்பே?

 அவள் சொன்னாள்

இல்லை. அப்படி எதுவும் இல்லை.

ஒரு எண்ணத்தைத் தவிர

புழுக்கள் கடித்தால்

பிணத்துக்கு என்ன?

தமிழாக்கம்: மதுமிதா

Image

மதுமிதா கவிதை

Image

இலக்கு நோக்கி

இந்தப் பிணைப்பு வேண்டாம்

இனியும் பாதுகாப்பு வேண்டாம்

அகண்ட வானில்

அந்தப் பறவை போல் மிதந்து

இறகசைத்து

லட்சியத்திற்காக பறக்க வேண்டும்

காற்றுப் பெருவெளியில்

இலக்கு நோக்கி

Image

கவிதையும் கவிதையும் – 2

கமலா தாஸ் கவிதை

Image

கிருஷ்ணா

உன்னுடைய உடல்
என்னுடைய சிறை கிருஷ்ணா
அதைக் கடந்து என்னால் பார்க்க முடியவில்லை
உன்னுடைய கருமை
எனது பார்வையை
இழக்கச் செய்கிறது
உன்னுடைய அன்பான வார்த்தைகள்
அறிவுலகத்தின் இரைச்சலை
நிறுத்தச் செய்கிறது

Image

painting credit: vishalmisra

தமிழாக்கம்: மதுமிதா

மதுமிதா கவிதை 
Image

விதியின் கைகளின் வழியே

ஒரே மேடை
ஒளியாகவும் இருளாகவும்

உன்னை என்னில் விதைத்து
என்னை உன்னில் விலக்கி வைத்து
என்னில் உன்னை பிணைத்து
உன்னில் என்னை பிணங்கச் செய்து

ஆட்டுவிக்கும்
விதியின் கைகளின் வழியே
வழியும் நூலில்
கட்டுண்டிருக்கிறோம்
விளையாட்டு பொம்மைகளாய்

Image

 

மேலும் படிக்க…

கவிதையும் கவிதையும் – 1

கவிதையும் கவிதையும் – 1

கமலா தாஸ் கவிதை

Image

ராதா

நீண்ட காத்திருப்பு

அவர்களின் பந்தத்தை பவித்ரமாக்குகிறது

அனைத்து ஐயங்களையும்

அனைத்து காரணங்களையும் கடந்து

அதனாலேயே

அவனின் உண்மையான முதல் அணைப்பில் அவள் சிறுமி

கன்னியாய் அழுதுகொண்டிருந்தாள்

எனக்குள் இருக்கும் அனைத்தும்

உருகிக் கொண்டிருக்கிறது

கடினமான இதயப்பகுதியும்

ஓ கிருஷ்ணா

நான்

உருகிக் கொண்டிருக்கிறேன்

உருகிக் கொண்டிருக்கிறேன்

உருகிக் கொண்டிருக்கிறேன்

எதுவும் மீதமில்லை

உன்னைத் தவிர

(தமிழாக்கம்: மதுமிதா)

Image

மதுமிதா கவிதை
Image

மௌனத்தின் சுவை…

மௌனத்தின் மோனநிலையில்
மயங்கிக் கிடந்த பொழுது

மௌனம் கலைத்து
மனம் திறக்கச் செய்தாய்

மௌனம் கலைக்க
சற்றே பிரயத்தனிக்க

மௌனத்தின் சுவை அறிய
மௌனம் பழகுகிறாய்

மௌனத்தின் பேரொலியில்
மனம் அதிர
மதி மயங்கி
மூழ்கிக் கிடக்கிறேன்
மகுடிக்கு இசைவதாய்

Image

Art: Jason Thielke