வீடு

Image

 கனவுகளின் சுயராஜ்யம் 

கற்பனையின் புனைபெயர் 

உறவுகளின் சரணாலயம் 

மனிதர்களின் வேடந்தாங்கல் 

கண் காணும்  சொர்க்கம் 

பண்பாட்டுப் பணிமனை 

சதுர செவ்வக ஜட ஜீவன் 

வெவ்வேறு வடிவ விடலை வாலிபம்

 

வீட்டுக்கு –

முற்றமே முகம் 

வாசல் பின்வாசல் நாசித்துவாரங்கள் 

சாளர  செவிகள் 

பட்டாசல் வயிறு

மொத்தத்தில் … 

வடிவம் மாறிய இதயமாக 

வாய்பபதுதான் வீடு 

 

சுவர்கள் பேசினால் 

அவரவர்களின் அந்தரங்கங்கள் 

ஒரு குற்ற நதியாகப் பெருகியோடும் 

 

குளியல்  அறைக்குத் தெரியும் 

குற்றங்கள்

 

குற்றவாளி 

மனம்விட்டு மன்னிப்புக் கோரும் 

மாதா கோவிலின் 

பாவ சங்கீர்த்தனப் பெட்டி 

 

சிறைச்சாலைகள் பெருகிவிட்டதாய் 

விசனப்பட்டு என்ன பயன்?

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் 

முன் ஜாமீன் முறையீடற்று

ஒரு சிறைச்சாலை வேண்டும் 

அதனுள் 

புத்தக அலமாரிகளுடன் நம்மை நாமே 

அடைத்துக்கொள்ள வேண்டும் 

 

கட்டப் போகும் வீட்டுக்குக் 

கண்டிப்பாக வேண்டும் 

கலைமகள் வசிக்க ஒரு கான்க்ரீட் வீணை 

 

கிராமத்து வீட்டுச் சாக்கடை கூட 

அழகாக இருக்கும்…

வெட்கத்தில் அசையும் 

துணி கிழிந்த வாழை மரங்கள்!

 

உலகமே நம்மைத் 

தோற்கடித்து விடுகிற போது கூட 

அந்தரங்க அறையில் ஆதுரமாகக் கோதிவிட 

கைகளுடன் வரவேற்கிறது 

வெகுநேரம் காத்திருந்த காதலியைப் போல…

 

சிலருக்கு வீடு என்றால் 

ஒரே அறை…

 

பலருக்கு 

ரயிலடி, மரத்தடி, அகதி முகாம், .அதுவுமற்று…

 

வெகு வெகு சிலருக்கே 

ஆயிரம் அறைகள் கொண்ட அபூர்வ வீடு!

 

என்னுடைய கனவோ எளிமையானது 

எல்லோருடையதைப் போல எனக்கொன்றும் 

என்னுடையதைப்போல எல்லோருக்கும் 

வாய்க்க வேண்டும் ஒரு வாழ்க்கை கோயில்!

– நா.வே.அருள் 

 Photo courtesy: www.tamilnaduhotel.net

ஒரு வாய் கடல்

Image(உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1-7)

உலக விஞ்ஞானத்தின்

மொத்த சூட்சுமத்தையும்

கருப்பைக்குள் அடைகாக்கிறாள் தாய்

 

தாய்

குழந்தையைப் பெற்றெடுத்தாலும்

குழந்தைதான் தாயை வளர்த்தெடுக்கிறது

 

தாய்க்கு

மொத்தம் மூன்று இதயங்கள்

இரண்டில் பால் கசிகின்றன

ஒன்றில் அன்பு…

Image

மண்ணுக்கு மழைநீர்

மழலைக்குத்  தாய்ப்பால்

 

தாய்ப்பால்…

கடலில் அல்ல

உடலில் கடைந்த உயிரமுதம்

 

யாருக்கு வாய்க்கும் இலவச சத்துணவு

குழந்தைக்குத்தான்

மடியில் படுத்துண்ணும்

மாபெரும் பாக்கியம்

 

அறுநூறு வகை உயிரிகள்

இருநூறு வகை இனிப்புப் புரதங்கள்

உண்டால் உறக்கம்

மச  மச  கிறக்கம்

ஆயுள் முழுக்க நோய்கள் மரிக்கும்

போஸான் அணுத்துகளே … புரியவில்லையே

தரணியே அதிசயிக்கும்

இந்த தசை “பாட்டில்” தயாரிப்பு

மார்பகமா…மருந்தகமா ….

சமூக மனசாட்சியின் மீது சந்தேகம் கொண்டு

இயற்கை தந்த சீதனம்தான்

அன்னைக்கு இரண்டு அமுதசுரபிகள்!

 

தாய்ப்பாலுக்கு

மனிதர்கள் கொண்டாடுவது

வார விழா

குழந்தைகளுக்கு

தாய்ப்பால் கொண்டாடுவதோ…

ஆயுள்விழா!

– நா.வே.அருள் 

அமுதம் – 3

Photo Courtesy:  Mr. & Mrs. J. William Meek III. ©2006 Will Barne

வாலி

Image

இன்றொருநாள்-

அரைக்கம்பத்தில் பறக்கட்டும் 

அன்னைத் தமிழ்க்கொடி 

 

ஓய்வு கொள்கிறது 

தமிழின் சுவாசம் 

வெறிச்சோடிக் கிடக்கிறது வெள்ளித்திரை 

 

எதிரியின் பலத்தில் பாதி மட்டுமல்ல 

வாலிபம் என்கிற வார்த்தையிலும் பாதி 

வாலிதான்!

 

வாலியே 

கருப்பும் வெளுப்பும் கலந்து நெய்த 

கவிதைத் தாடியே 

வெள்ளித்திரையின் வியாசனே 

திசையெல்லாம் ஒலிக்கிற திரைக்கம்பனே 

சுய விமர்சனத்தில் நீ 

கறாரான கம்யூனிஸ்ட் போல…

அதனால்தான் சொன்னாய்:

“மெட்டுக்குத் தாலாட்டும் தாய் 

துட்டுக்கு வாலாட்டும் நாய்”

 

பலநேரம் 

உன் வாய் சிவந்திருந்தது 

சிலநேரம் 

உன் வார்த்தை மஞ்சளாயிருந்தது

கவிதைப்பயிரோ…

எப்போதும் 

பச்சைப் பசேல் என்றிருந்தது 

 

உன்னை எதிர்கொண்டதால் 

எமனின் பலம் இருமடங்கானது 

ஸ்ரீராமன் 

வாலியை மறைந்திருந்து கொன்றதாய் 

வழங்கும் புராணம் 

வாலியே… நீ  மறைந்து…

எங்களைக் கொன்றாய்

இது என்ன நியாயம்?

– நா.வே.அருள் 

 

திருமதி. திவ்யா இளவரசன்

Image

அழக்கூட முடியலடி 

அடிநெஞ்சு பதறுதடி 

விழக்கூட வலுவின்றி 

விலா ரெண்டும் நோகுதடி 

 

பழக்கூடைக் குள்ளே என் 

பசி எல்லாம் மறைச்சிவச்சி 

வழக்காடும் சட்டத்தில் 

வாழ்வையே புதைச்சி வச்சி 

 

அப்பனையும் சாகவிட்டு 

அணைத்தவனைப்  போகவிட்டு 

எப்படிநான் வாழவேண்டீ?

எதற்கிந்த வாழ்வோடீ ?

 

என்குரலை நான்கேட்க 

எனக்கே தடை எதுக்கு?

வன்முறையைத் தூண்டிவிடும் 

வரலாறு இங்கெதுக்கு ?

 

ஊட்டி வளர்த்த கைகள்  

ஊட்டியைப்  பிடித்ததென 

ஒப்பாரி வைக்க எந்தன் 

உள்நெஞ்சு ஒப்பவில்லை 

 

காட்டிக்  கொடுக்கவில்லை 

கருப்பை நன்றிக்காய் 

மாட்டிக் கொண்டேனோ!

மடியில் ஏன் தவழ்ந்தேனோ!

 

பறவைக்கு சாதி இல்லை 

பாசி வச்ச நீரிலுள்ள 

குறவைக்கு சாதி இல்லை 

குளவிக்கும் சாதி இல்லை 

 

மகரந்த இணை சேரும் 

மலருக்கும்  சாதி இல்லை 

மகளுக்கு மட்டும் ஏன் 

மானுடத்தின் நீதி இல்லை 

 

கண்மீது கண்வைத்த 

காதலிலே குற்றமென்ன?

என்தாலி பறித்தபின்பு 

என்சாதி சுற்றமென்ன?

 

மனம்விரும்பும் மனுசனுடன் 

மடிகொடுக்க மறுக்குமெனில் 

இனம் என்ன இனமடியோ?

இழிந்துவிட்ட தலைமுடியோ?

 

கூலிங்க்ளாஸ் ஜீன்சுக்குக் 

கொடுப்பதற்கு இதயமென்ன 

ஆலிங்கன விலைபொருளா?

அவர்வீட்டுக் கைப்பொருளா?

 

தந்தை செய்த தவறென்ன?

தாய் செய்த தவறென்ன?

மந்தையிலே மாட்டி இந்த 

மகள் செய்த தவறென்ன?

 

என்றெல்லாம் நீ கேட்டால் 

இன்னுமொரு கண்ணகி 

இல்லையெனில் அடிமைப்பட்ட 

இந்தியாவின் பெண்ணடி!

– நா.வே.அருள்

 Painting Credit: www.himalayanacademy.com

 

குகைவாசிகள்!

ilavarasan divya

வயிறு எரியுதடா

வாசப்படி இடிஞ்சதடா

காதல் தாஜுமஹால்

கட்டடமே விழுந்ததடா

 

சாதி மிருகமெல்லாம்

சந்திக்கு வந்ததனால்

நீதி மிரளுதடா

நெஞ்சே வறளுதடா

 

இளவரசன் திவ்யாவின்

இதயமொழி கேட்காத

கொலைகாரன் நீதியடா

கொலைக் களமோ  சாதியடா

 

ஆதிக் கட்டளையால்

அன்புமொழி படிச்சாளோ

சாதிக் கட்டளையால்

சாவுமணி அடிச்சாளோ

 

அடையாளம் தெரியாத

அக்கினியால் சாகவில்லை

கடைவாயில் ஒழுகிவந்த

காதலால் சாகவில்லை

 

இடியால் சாகவில்லை

இறப்பால் சாகவில்லை

மடிமேல் தலைவைத்த

மரணத்தால் சாகவில்லை

 

உடைவாள் உறையினுள்ளே

உறைந்திருக்கும் சாதிவெறிப்

படையால் மடிந்தானே

பகையால் முடிந்தானே

 

வாரிக் கொடுத்த பின்னும்

வஞ்சாதி  சிரிக்குதடா

சேரிக் குலக்கொழிந்தின்

சிறகை நறுக்குதடா

 

காதலித்த ஜோடிகளைக்

களப்பலியாய்த்  தந்து தந்து

நீதிமன்றக் கட்டடத்தின்

நிறம் சிவந்து போனதடா

 

சாதிவிட்டு சாதிவந்த

சாதனையைச் சாகடிச்சு

நீதிமன்றப் போர்வைக்குள்ளே

நெருங்கி வந்த மரணமடா

 

நாறும் சாதிக்குள்ளே

நச்சரவம்  வசிக்குதடா

ஓடும் ரயில் கொண்டு

உயிரைக் குடிக்குதடா

 

முத்துப் பட்டனோட

மூச்சறுத்தக் கூட்டமடா

மதுரை வீரனோட

மாறு காலைக் காட்டுமடா

 

கண்ணகி முருகேசன்

அபிராமி மாரிமுத்து

காதல்ஜோடி கதை

கல்மனசை உருக்குமடா

 

பசியாற பிணம்தின்ற

நரவேட்டை வேடர்களே

சேரி சம்பந்தம்

சிதைக்கின்ற மூடர்களே

 

ஆதிமனு மரத்து

நாற்காலி மேலமரும்

சாதித் தலையர்களே

சதிகாரக் கொலையர்களே

 

ஊரும் சேரியும்

ஒன்றாகவில்லைஎனில்

இந்தியா ஒன்றில்லை

இரண்டாகிப் போகுமடா!

– நா.வே.அருள்

 

அறைகள் நிறைந்த வீடு

Image

கொடுமைக்குள்ளாவது 

சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் போவதில் 

ஆச்சரியம் ஒன்றுமில்லை. 

 

மேலும் 

ஐயோ பாவம் என்று முணு முணுத்தபடியே 

அடுத்த செய்தியைப் புரட்ட  ஆரம்பிக்கிற பொதுஜனம் 

புரிந்துகொள்ள புதிய செய்தி ஒன்றுண்டு. 

 

‘‘ஏழாண்டுகளாக

அறைக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்ட 

பட்டதாரிப் பெண் 

பிரக்ஞையற்று 

சித்தப்பிரமை பிடித்திருப்பதாகக் கருதப்படுகிறது’’.

 

இன்னொன்றும்…

செய்தியைப் படித்தோ, பார்த்தோதான் 

கொடுமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுமில்லை. 

 

அனுபவிப்பவர்களே புரிந்துகொள்ளாத போது 

ஆச்சரியப்படவும் ஒன்றுமில்லை. 

 

அடுத்தபடியாக…

அறையைப் பூட்டிவைக்கும் 

அவசியமே இல்லாமல் 

தப்பிக்க எவ்விதத் திமிறலும் அற்று 

தண்டனை ஏற்கும் லாவகம் 

கைகூடி இருக்கிறது பலரிடம்.

 

அடைபட 

ஒரே அறை என்றில்லாமல் 

இரு அறைகளாகவும் 

பூட்டுக்கு அவசியமற்றும் இருக்கலாம். 

 

ஒரு அறையின் பெயர் படுக்கையறை 

மற்றொரு அறையின் பெயர் சமையலறை. 

 

இதைவிட ஆச்சரியம் –

ஆண்டுக்கணக்கில் 

அவளைப் போலவே 

அடுத்த அறையில் அடைந்து கிடக்கிற 

ஆண்டவனின் 

பூஜையறையிலிருந்து  புகார் ஏதுமில்லை!

 

எவ்வளவு பாவம் என்றாலும் 

கங்கா ஜலம் விட்டுக் கழுவுவதற்கு 

வீட்டின் ஆண்களுக்கு இருக்கிறது 

ஒரு குளியலறை.

 

கொடுமைக்குள்ளாவது 

சம்பந்தப் பட்டவருக்கே தெரியாமல் போவதில் 

ஆச்சரியம் ஒன்றுமில்லை 

 

மேலும் 

‘ஐயோ பாவம்’ என்று முணுமுணுத்தபடியே 

அடுத்த செய்தியைப் புரட்ட  ஆரம்பிக்கிற பொதுஜனம் 

புரிந்துகொள்ள புதிய செய்தி ஒன்றுண்டு.

– உண்ணாமலை

 Painting credit: William DOBELL

முகம்

Image

அதிகாலை துயில் பிரிந்து

இரு கை தேய்த்து

கண்களில் ஒற்றி
கன்னங்கள் தடவி எழுந்திருப்பேன்.
எழுந்தவுடன் கண்ணாடி பார்த்து
முன்விழுந்த முடி ஒதுக்கி
ஸ்டிக்கர் பொட்டினைச் சுவற்றில் ஒட்டி
சோம்பல் முறிப்பேன்.
குளிக்கையில்நெற்றி தொடங்கி
மோவாய் வரை வழியும்
வெள்ளி இழை நுரைப்பூ வாசத்தில்
திரும்பத் திரும்பத் தேய்த்து மகிழ்வேன்.
“மறக்காம மஞ்ச பூசுடி”ன்னு
வெள்ளிதோறும் அம்மாவின் குரலையும்
அரைத்துப் பூசுவேன்.
முதலில் கல்லூரி, பிறகு வேலைக்கு…
கிளம்பும் முன்
“கண்ணாடி முன்னால என்னதாம் பண்றடீ”ன்னு
அக்காவின் அதட்டலை அலட்சியம் செய்து
பவுடர் பூசி பார்த்து ரசிப்பேன்.
உறவு சொல்லியும் உதவி சொல்லியும்
காதல் சொன்னவரைக் கைப்பிடிக்க ஒண்ணாமல்
மறுத்த மரண நொடிகளில்தான்
திராவக விசிறலில்
கழுத்துக்கு மேலே கருகிப் போயினேன்….
எந்தக் கண்ணாடியில் எனக்குத் தெரியும்
பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்ட
என் பழைய முகம்?
– ஹேமா அருள்