அது உரையாடலோ, எழுத்தோ… சுற்றி வளைத்து, நீட்டி முழக்கிச் சொல்லாமல் நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்வதில் முக்கியமான சிரமம் ஒன்று இருக்கிறது. கேட்பவருக்கோ, படிப்பவருக்கோ அந்த நேரடித் தன்மை அல்லது எளிமை சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவை கவனிக்கப்படாமல் கடந்து போய்விடும் அபாயம் இருக்கிறது. எந்த மொழியாக இருந்தாலும், இலக்கியத்தின் எந்த வடிவமாக இருந்தாலும் ஒரு படைப்பு எளிமையாக, அதி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் போதுதான் மக்களைச் சென்றடைகிறது… எழுதிய படைப்பாளனும் மக்களால் கொண்டாடப்படுகிறான். அந்தக் கலை இந்நூலாசிரியர் எஸ்.கே.பி. கருணாவுக்கு இயல்பாகக் கை வந்திருக்கிறது.
‘ஒரு கர்பிணிக்கு பேருந்தில் தன் இருக்கையை விட்டுக் கொடுத்தது’, ‘விவசாயியின் விளைந்த நிலத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான பிரம்மாண்ட பைப் விழுந்தது’, ‘படிக்கிற காலத்தில் சைக்கிள் தொலைந்து போனது’, ‘ஆஸ்திரேலியாவுக்குப் போய் திமிங்கிலத்தைக் கடலில் பார்த்தது’… இப்படி இந்நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா கட்டுரைகளையுமே ஒற்றை வரி கருக்களுக்குள் சுருக்கிவிடலாம். அதையும் தாண்டி அந்தச் சம்பவங்கள் தரும் தரிசனம், நாம் அருகில் இருந்து பார்ப்பது போல, நமக்கே நடந்தது போல உணர வைக்கும் சொல்லாடல் தன்மை, நிகழ்வுகள் ஆகியவையே இத் தொகுப்பை மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கின்றன.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா கட்டுரைகளும் கடினமான கட்டுரைத்தன்மையைக் கொண்டிராமல், புனைவுக்கான வடிவத்தைக் கொண்டிருப்பது இதன் மற்றொரு சிறப்பு. உண்மைச் சம்பவங்களை அவற்றுக்கான அழுத்தம் குறையாமல் ஆசிரியர் தன் மனவோட்டத்தோடு கூடிய அழகு தமிழில், வாசகனை வெகு எளிதாக ஈர்த்துவிடும் மொழியில் முன் வைக்கிறார். படிக்கப் படிக்க பக்கங்கள் வேக வேகமாகப் புரள்கின்றன. சிலோனிலிருந்து (இலங்கை) திருவண்ணாமலைக்கு வந்த ‘சண்டைக்காரர்கள்’, ‘சைக்கிள் டாக்டர்’, ‘பிரியாணிக்காக பின்னால் சுற்றும் ஹெட்கான்ஸ்டபிள்’, ‘எழுத்தாளர் சுஜாதா’, ‘கவர்னரின் பைலட்’, ‘புரொபசர் பசவராஜ்’, ‘கையில் கசங்கிய பத்து ரூபாய் நோட்டை அழுத்திவிட்டுப் போன மூதாட்டி’… என நூலைப் படித்து முடித்த பிறகும் ஒவ்வொரு பாத்திரமும் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். உச்சக்கட்டமாக ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்று இரு அத்தியாயங்களாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள்… ஒரு சாமானியனுக்கும் அரசு இயந்திரத்துக்கும் இடையிலான இடைவெளியை அப்பட்டமாகாச் சொல்லிச் செல்கின்றன.
எளிமைதான் தன் எழுத்தின் அடிநாதம் என்றாலும், எஸ்.கே.பி.கருணா, வாழ்க்கையின் யதார்த்தமான பக்கங்களைச் சொல்லும் போது வெகு அநாயசமாக சில வரிகளைக் கையாள்கிறார். உதாரணமாக, ‘ஆகிஸிடெண்ட் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், எனக்கு நெஞ்சமெல்லாம் பரவசம் வந்து நிறைத்தது’. இந்த வரியைப் படிக்கும் போது அதிர்வைக் கொடுத்தாலும், ‘மதுரை வீரன்’ என்கிற ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ளும்போது அதற்கான நிறைவு நமக்குக் கிடைத்து விடுகிறது. ‘அது எப்படி மனைவியும், மகனும் வெளியூர் சென்றிருக்கும் சில நாட்களிலேயே நம்முடைய வீடுகள் வாழுமிடம் என்பதிலிருந்து வெறுமனே வசிப்பிடமாக மாறி விடுகிறது?’ என்ற வரி குடும்பஸ்தர்கள் அனைவருக்குமாக எழுதப்பட்ட பொது வரியாக உருக்கொள்கிறது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் நம்மை நாமே சுயமாக சில கேள்விகளைக் கேட்டுக் கொள்ள, அவற்றுக்கான விடைகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அலசி ஆராய, ஒரு புதிய யதார்த்தத்தை அறிந்துகொள்ளத் தூண்டுபவை. யாரோ ஒருவர், தன் மன ஓட்டத்தை தன் பார்வையில் முன் வைத்த கட்டுரைகள் என ஒதுக்கித் தள்ள முடியாதவை. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு புதிய படிப்பினை, அனுபவம் வாசகருக்குக் கிடைக்கும் என்று உத்தரவாதமளிக்கும் தொகுப்பு இந்நூல். சரளமான, சுவாரஸ்யமான வாசிப்பனுபவத்தைத் தரும் ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்ற இந்நூல் எஸ்.கே.பி. கருணாவுக்கு பரந்த இலக்கியப் பரப்பில் அவர் எடுத்து வைத்த முதல் அடி என்றே தோன்றுகிறது. அவர் புனைவும் கட்டுரைகளுமாக நிறைய எழுத வேண்டும்… அவற்றை எதிர்பார்த்து, வாசித்துத் தீர்க்கும் பேரார்வத்துடன் நிறைய வாசகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத நிஜம்.
- பாலு சத்யா
நூல்: கவர்னரின் ஹெலிகாப்டர்
ஆசிரியர்: எஸ்.கே.பி.கருணா
வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை – 606 601.
தொலைபேசி: 9445870995, 04175-251468.
விலை: ரூ.200/-.
பிற நூல்கள்…