அடுப்புகள்… சில நினைவுகள்!

சில நாட்களுக்கு முன் ‘குங்குமம் தோழி’ இதழில் தீபா நாகராணி சமையல் செய்யும் அடுப்பு, ஸ்டவ் பற்றி விரிவாக எழுதி இருந்தார். மிக அருமையான பதிவு அது. பல மலரும் நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டது அந்தக் கட்டுரை. இத்தனை வருட வாழ்வனுபவத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் அடுப்புடனான உறவு தொடர்ந்து வந்திருக்கிறது என்று நினைப்பதே சுகமாக இருக்கிறது. சமையலறையில் புழங்கிய ஒவ்வொரு அடுப்பும் கண்முன் நிழலாடுகிறது.

விறகு அடுப்போடு ‘டாலி’ எனும் அடுப்பையும் உபயோகிப்பார் எனது அம்மா. தங்க வேலை செய்யும் ஆச்சாரிகள் இது போன்ற அடுப்பைத்தான் பயன்படுத்துவார்கள். அது, மூன்று குமிழ் வைத்த சட்டி போலிருக்கும். அதன் அடியில் ஜன்னல் போல மூன்று கண் ஓட்டை இருக்கும். அட்டாச்மென்ட்டாக அடியில் ஒரு சட்டி மாதிரி இருக்கும். நெருப்பு சாம்பல் பூத்தால், தட்டினால் அது அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்து விடும். விறகை எரிக்கும்போது நெருப்பை எடுத்து நீர் ஊற்றி வைப்பார்கள். அந்த கரி டாலி அடுப்புக்கு உபயோகமாகும். மெலிதான தீயில் பருப்பு வேக வைக்கலாம்… பால் காய்ச்சலாம். இப்படி நம் தலைமுறையிலேயே எத்தனையோ விதமான அடுப்புகளை நாம் உபயோகித்திருக்கிறோம்.

சமீபத்தில் அமெரிக்காவிலுள்ள என் மகள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஒருநாள் கொழுக்கட்டை செய்யலாமே என்ற எண்ணம் வந்தது. எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை + வெல்லம் கலந்த பூரணம் வைத்துக் கொழுக்கட்டை செய்தால்தான் பிடிக்கும்.

Microwave oven

அங்குள்ள காயில் மின் அடுப்பில் சமைப்பது சற்று சிரமம். என் மகள், ‘ஒரு பீங்கான் தட்டில் வேர்க்கடலையை வைத்து, மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு வெளியே எடுத்து, திருப்பிவிட்டு மேலும் 3 நிமிடங்கள் வைத்தால் போதும். கடலை நன்கு வறுபட்டிருக்கும்’ என்றாள். ‘பழைய வழக்கங்களிலிருந்து புதுசுக்கு ஏன்தான் மாற மாட்டேன் என்கிறீர்களோ!’ என்று என் பெண்கள் அடிக்கடி சொல்வார்கள். அன்றைக்கும் வேர்க்கடலையை மின் அடுப்பில் வறுப்பதுதான் சரி என்று எனக்குத் தோன்றியது. என் மகள் அலுவலகத்துக்குச் செல்வதற்கு முன் அதை அவளிடமும் சொன்னேன். சிரித்தபடியே போய்விட்டாள்.

‘வேர்க்கடலை வறுப்பதில் நிறைய டெக்னிக்ஸ் இருக்கிறது’ என்பார் என் அம்மா. சிறிது சிறிதாக போட்டுத்தான் வறுக்க வேண்டும்… தீ நடுநிலையில் (medium fire) தான் இருக்க வேண்டும்… வாயில் போட்டுப் பார்க்கும் போது சரியாக இருக்கிறதே என்று நினைத்தால் தீய்ந்து போயிருக்கும், அதனால் சற்று முன்பே இறக்கிவிட வேண்டும்… போன்ற டெக்னிக்ஸ்! வேர்க்கடலையை வறுத்தெடுக்க குறைந்தது 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும்.

எனக்கென்னவோ அன்றைக்கு மகள் சொன்னபடியே மைக்ரோவேவ் அவனில் முயற்சி செய்யலாமே என்று தோன்றியது. அவள் சொன்னபடியே மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தேன். வேர்க்கடலை சூப்பராக வறுபட்டிருந்தது. கை வலிக்க வறுக்க வேண்டிய சிரம்ம் இல்லை. அதற்கடுத்து உளுத்தம் பருப்பை வறுக்க வேண்டி இருந்தது. அதையும் வேர்க்கடலைக்கு செய்த்தைப் போலவே தட்டில் வைத்து, 4 நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து புரட்டிப் போட்டு வைத்ததில் நன்கு வறுபட்டிருந்தது.

என் மகள் வந்ததும் உளுத்தம் பருப்பையும் அவனில் வறுத்ததைச் சொன்னேன். ‘பரவாயில்லையே! மைக்ரோவேன் அவனில் சமைக்கிற அளவுக்கு specialist ஆகிடுவீங்க போல இருக்கே… சபாஷ்!’ என்றாள். அந்தக் கணத்தில் என் மனம் பின்னோக்கி அசை போட ஆரம்பித்தது.

Trad Stove 4

என் தாயார் எந்தெந்த அடுப்புகளிலோ சமைத்திருக்கிறார். அவற்றை என் மகள்களிடம் காட்ட ஒரு மாடல் கூட இப்போது இல்லையே என்கிற வருத்தம் பிறந்தது. எனக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து என் பள்ளிப் பருவம் வரை வீட்டில் விறகு அடுப்புதான். அப்போதெல்லாம் விறகுகளை வெட்டி, கட்டுகளாக்கி விற்பார்கள். விறகுகளில் சவுக்கு மரம்தான் நிதானமாக எரியும். அதனால் மரத்தொட்டிக்குச் (விறகுக் கடை) சென்று அதை வாங்கி வந்து, காய வைத்து, அடுக்கி வைத்துக் கொள்வோம்.

அப்போது நாங்கள் இருந்தது ஓட்டு வீடு. சமைப்பதற்காக விறகு எடுக்கச் சென்ற சமயங்களில் அம்மாவின் கையை, விறகுக்குள் மறைந்திருக்கும் தேள் பதம் பார்த்திருக்கிறது. அம்மா வலியால் துடிப்பார். என்ன மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டாலும் 24 மணி நேரத்துக்குப் பிறகுதான் தேள்கடி குணமாகும். விறகு அடுப்பைப் பற்ற வைக்க ‘வரட்டி’ அல்லது ‘எருமுட்டி’ என்றழைக்கப்படும் ஒன்று தேவைப்படும். சாணியை உருட்டி, வைக்கோல் தூள் கலந்து, பின் சுவற்றில் தட்டி காய்ந்தபின் எடுத்து உலர்த்தி விற்பனை செய்வார்கள். ஒவ்வொரு வரட்டியும் இரு கை அளவுக்கு இருக்கும். அதை உடைத்து, அதில் சிறிது கெராசினை ஊற்றி பற்ற வைப்பார் அம்மா. அதற்குப் பிறகு அதில் இரு விறகுக் கட்டையை வைப்பார். நன்கு பற்றிக் கொண்ட பின் விறகு எரிய ஆரம்பிக்கும். அம்மா வெளியே சென்றிருக்கும் நேரத்தில் விறகை சற்று உள்ளேத் தள்ளி வைப்பது எங்கள் வேலையாக இருக்கும்.

viragu aduppu

விறகு அடுப்பில் சில நுணுக்கங்கள் உண்டு. ஈர விறகாக இருந்தால் எரியாது. சாதமோ, பாலோ பொங்கி வழிந்து விறகில் பட்டு விட்டாலும் எரியாது. அது போன்ற நேரங்களில் ஒரு பேப்பரை எடுத்து அடுப்புக்குள் விறகின் மேல் வைத்து, ஊதுகுழலால் விறகு பற்றிக் கொள்ளும் வரை ஊத வேண்டும். புகை கிளம்பி, நம் கண்களில் எரிச்சலெல்லாம் ஏற்படும். இது ஒரு கஷ்டமான, சிக்கலான வேலை.

சமையல் முடிந்ததும் அடுப்புக்குள் இருந்து விறகுக் கட்டையை எடுப்பார் அம்மா. விறகின் எரிந்த பகுதியில் நீரை ஊற்றுவார். எரிந்த பகுதி கரியாகி இருக்கும். அந்த கரித்துண்டுகளை உலர்த்தி வைத்துக் கொள்வார். அவை தண்ணீர் காயவைக்கும் பாய்லரில் உபயோகிக்கப் பயன்படும்! விறகு அடுப்பின் கீழே சாம்பல் மேடிட்டிருக்கும். அதற்கு மேல் விறகை வைத்து எரித்தால்தான் ஜ்வாலை எளிதில் மேலெழும்பி வைத்திருக்கும் பாத்திரம் சூடாக உதவும். அடுப்பின் அடியில் சாம்பல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் விறகு எரிய அதிக நேரம் பிடிக்கும். ஒருநாள் அம்மா இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில், சமையல் முடிந்ததும் நான் அடுப்பை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அதாவது, கீழ்ப் பகுதியில் தேங்கியிருந்த சாம்பல் மொத்தத்தையும் வழித்து எடுத்துவிட்டேன். விளைவு, விறகு அதிகம் செலவானது.  ஊரிலிருந்து வந்த அம்மா சொன்னார்… ‘சாம்பலை எடுத்ததால நான் ஒரு மாசம் வச்சு எரிக்கிற விறகை பத்து நாள்ல காலி பண்ணிட்டியேம்மா!’

விறகு வைத்து சமைப்பதால் எழும் புகை சமைப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கு இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளைத் தந்ததால் அரசு விறகு அடுப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அடுப்பில் ஒரு நீண்ட குழாயைப் பொருத்தினால் புகை அதன் வழியே வெளியே சென்று விடும். மிகச் சில கிராமங்களில் இந்த அடுப்பு பயன்பாட்டுக்கு வந்தது.

விறகு அடுப்புக்கு அடுத்ததாக மரத்தூள் அடுப்பை அம்மா பயன்படுத்தினார். அது நிறைய பேருக்கு அறிமுகமில்லாத ஒரு வகை அடுப்பு. இதில் பயன்படுத்த ‘ரம்பத்தூள்’ எனப்படும் மரத்தூைள மரம் அறுக்கும் கடையில் மூட்டையாக வாங்கி வருவார்கள். இது மண்ணால் ஆன அடுப்புதான். ஆனால், வாய்ப்புறத்தில் ஒரே ஒரு விறகு கட்டையைத்தான் வைக்க முடியும். அதைப் பயன்படுத்துவது ஒரு வகையான டெக்னிக். பழகினால்தான் அதில் சமையல் செய்ய முடியும்.

Marathool aduppu

இந்த அடுப்பைப் பயன்படுத்தும் போது, அம்மா கீழே அமர்ந்து கொள்வார். அடுப்பில் விறகுக்கட்டையை வைக்கும் இடத்தை ஒரு சிறு துணியால் அடைப்பார். பிறகு அரை சாண் அகலமுள்ள ஓர் ஊதுகுழலை நடுவில் வைத்து, அதை ஒரு கையால் பிடித்துக் கொள்வார். அதைச் சுற்றி மரத்தூளை சிறிது சிறிதாக கொட்டுவார். மரத்தூளை மத்து போன்ற ஒன்றைக் கொண்டு லேசாக அழுத்துவார். பார்பதற்கு ஏதோ ஒரு மாஜிக் நிகழ்த்துவது போலத் தெரியும். பின்னாளில் இதை எப்படி நாம் செய்யப் போகிறோம் என்கிற கவலை வரும். (கேஸ் அடுப்பில்தான் சமைக்கப் போகிறோம் என்று ஜோசியமா தெரியும்?) அடுப்பில் மரத்தூள் நிரம்பியதும் உள்ளே இருக்கும் குழலை மெதுவாகத் தூக்குவார் அம்மா. இப்போது நடுவில் ஓட்டை ஒன்று நீளமாக ஏற்பட்டிருக்கும். கீழே வைத்திருந்த துணியை மெதுவாக வெளியே இழுப்பார். ஒரே ஒரு விறகின் நுனியில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து உள்ளே வைத்தால், அந்த்த் தீயில் மெதுவாக தூள் சேர்ந்து எரிய ஆரம்பிக்கும். இதில் விறகு செலவு குறைவு. ஊத்த் தேவையில்லை. அடுப்பு எரிவதே பார்க்க அழகாக இருக்கும். அக்காலத்தில் எரிபொருள், நேரம் சேமிப்பு தந்த அற்புதம் அது! மரத்தூள் அடுப்பைப் பற்ற வைத்துவிட்டால் ‘கண கண’ என்று எரிந்து கொண்டே இருக்கும். நடுவில் நிறுத்த முடியாது. முழுச் சமையலையும் செய்து முடிப்பதுதான் உசிதம்.

stove 3

அடுத்ததாக வீக்கோ அடுப்பு வந்தது. இது ‘டாலி’ என்கிற மண் அடுப்பு மாதிரி இரும்பு அடுப்பாலானது. இதைப் பற்ற வைப்பது சற்று கடினம். பற்றிவிட்டால் ‘கண கண’ என நெருப்பு ஒளிர எரியும். பார்ப்பதற்கு சூரிய உதயத்திலும், அந்தியிலும் ஒரு நிறம் தெரியுமே, அப்படி இருக்கும்.

gummitti aduppu

பற்ற வைப்பது பிரம்மப் பிரயத்தனமே! முதலில் தேங்காய் நார்களை பிரித்து, அடுப்பில் போடுவார் அம்மா. அதில் சிறிது கெரசின் விட்டு பற்ற வைப்பார். பிறகு அதில் நாட்டுக்கரியைப் (விறகு எரிந்தால் கிடைப்பது) போட்டு அடுக்குவார். உள்ளே காற்றுப் புகும்படி crosswiseஆக அடுக்க வேண்டும். பற்ற ஆரம்பித்த்தும் அதன் மேலே வீக்கோ கரியை (ெநய்வேலியின் உபயம்) அடக்குவார். கனமாக இருக்கும். கரி பற்ற 10 முதல் 15 நிமிடம் ஆகும். அம்மா ஒரு விசிறி எடுத்து பற்றிக் கொள்ளும் வரை விசுறுவார். பற்றிக் கொண்டால் வேகமாக நடக்கும் சமையல்.

வீக்கோ கரியை பாய்லரில் வெந்நீர் போடவும் உபயோகித்துக் கொள்வோம். சமையல் முடிந்ததும் கரியை வெளிேய எடுத்து, அதன் மேல் ஒரு பாத்திரத்தைப் போட்டு கவிழ்த்து விடுவார். நாங்கள் பள்ளி முடிந்து வந்து மாலையில் திறந்து பார்த்தால், கறுப்புத் தங்கமான நிலக்கரி வெந்நிற திருநீறு போல மாறி இருக்கும். இதை அடுத்த நாளும் உபயோகிக்கலாம்.

thiri stove thiri stove 2

பிறகு மண்ணெண்ணெய் ஸ்டவ் புழக்கத்துக்கு வந்தது. இதில், திரி மாற்றுவது கடினமான வேலை. திரிகளை ஒரே அளவாக, சீராக வெட்டி வைக்க வேண்டும். திரிகளைத் துடைத்து எடுக்கும் போது கையெல்லாம் கெரசின் நாற்றம் அடிக்கும். வார விடுமுறை நாளில் அம்மா ஸ்டவ்வை சுத்தம் செய்து வைப்பார். அடுத்துதான் கேஸ் ஸ்டவ் புழக்கத்தில் வந்தது. அதன் பிறகு பம்ப் ஸ்டவ், சைடில் சிலிண்டர் வைத்த ஸ்டவ்வெல்லாம் பயன்பாட்டுக்கு வந்தன.

pump stove

stove 2

அதிகமாகக் காற்றடித்தால் பம்ப் ஸ்டவ் வெடித்துவிடும். அந்தக் காலத்தில் வீட்டில் ஸ்டவ் வெடித்து பெண் இறந்து போனால், மாமியார்-மருமகள் சண்டை என்பார்கள். சினிமாக்களிலேயே கூட ஸ்டவ் வெடிப்புச் சம்பவங்கள் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன. அதன் பின் கேஸ் ஸ்டவ், இண்டக்‌ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் அவன் என்று நீண்டு கொண்டிருக்கிறது அடுப்புகளின் பட்டியல்! அடுப்புகள் மாறினாலும் அம்மாக்கள் சமைப்பது மட்டும் நின்ற பாடாக இல்லை.

gas stove

மகளும், அக்கா மகளும் விடுமுறைக்கு என் அம்மா வீட்டுக்குச் செல்வது வழக்கம். வரும் போது அங்கிருக்கும் பிடித்த பாத்திரங்கள், பொருட்களை அள்ளிக் கொண்டு வருவார்கள். ஊருக்குக் கிளம்பும் நாள் வந்த போது, என் 4 வயது மகள் ‘பாட்டி, இந்த ஸ்டவ் பார்க்க புதுசா இருக்கு. எடுத்து வைங்க. நான் அம்மாவோட வர்றப்போ எடுத்துட்டுப் போறேன். எங்க வீட்டுல இந்த மாதிரி ஸ்டவ்வே இல்லை’ என்று சொல்லியிருக்கிறாள். அம்மாவோ, ‘அப்படியா! அது என்ன அப்படிப்பட்ட அருமையான ஸ்டவ்? காட்டு’ என்று சொல்லியிருக்கிறார். என் மகள் காட்டியது வீட்டின் மூலையில் இருந்த பழைய கெரசின் ஸ்டவ்!

அ.ப.மலர்க்கொடி பலராமன் 

Malarkodi balaraman

Image courtesy:

http://www.hedon.info/

http://cdn.indiabizclub.com

http://www.immt.res.in/i

http://pimg.tradeindia.com

http://foodslice.blogspot.in

upload.wikimedia.org

https://vegetarianirvana.files.wordpress.com

http://www.parasptk.com/

http://www.electricstoveheater.net/