மும்பையைக் கலக்கும் இட்லி, வடை!

Image

மும்பை… தமிழர்கள் வாழும் பகுதி அது… காலை ஏழுமணி… ரப்பர் பந்து பொருத்திய குழல் ஒன்றிலிருந்து ‘பீப்… பீப்’ என்கிற சத்தம் ஒலிக்கிறது. இந்த ஒலிதான் அந்த மக்களுக்கு அன்றாட தேவ கானம்… அந்த ஒலி அன்றையபிழைப்பு தொடங்கிவிட்டதற்கான அடையாளம்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் வயதில் சிறுவன்… அவன் தலையில் ஒரு பெரிய அலுமினிய அண்டா! அது முழுக்க இட்லிகளும் வடைகளும்! அதைச் சுற்றி சைக்கிள் டியூபினால் இறுக்கிக் கட்டப்பட்ட சில்வர் டப்பாக்களில் சட்னி, சாம்பார் மற்றும் பேப்பர் பிளேட்டுகள்! அந்தச் சிறுவன், அவனைப் போலவே உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள பாத யாத்திரை தொடங்குகிறது. கால் நடையாகவே வீடு விடாகச் சென்று இட்லி, வடை விற்கிறார்கள் இந்த ‘தலையேந்தி பவன்’ வியாபாரிகள்!

இவர்களுடைய இட்லி,வடையின் சுவை மும்பையில் வசிக்கும் மற்றமாநில மக்களையும் கவர்ந்திருப்பதுதான் ஆச்சரியம். நடுத்தர மக்கள் மட்டுமில்லாமல் சில மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்கூட இவர்களின் இட்லி, வடைக்கு பரம ரசிகர்களாகியிருக்கிறார்கள். 

Image

இந்த வியாபாரிகள் ஒருவர், இருவரல்ல… சுமார் ஆயிரம் பேர்! வியர்வை சிந்தி உழைக்கும், தினம் தினம் சாதனைபடைக்கும் ஒரு மனிதப் படையே இருக்கிறது. அதிகாலையில், மும்பையின் சென்ட்ரல்வெஸ்டர்ன் மற்றும் ஹார்பர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். பிறகு, பல இடங்களுக்கு நடந்து சென்று எத்தனையோ பேரின் காலைப் பசிக்கு குறைந்த விலையில் உணவு தருகிறார்கள்.

அதிகாலை 3:30…  பேயும்உறங்கும்,திருடர்களுக்கு வசதியான நேரம்… அது இந்த சிறு வியாபாரிகளின் தொழில் தொடங்கும் நேரம். மும்பை தாராவியில் 90 அடி ரோட்டில், சாந்தி டவுனில் இருக்கும் இவர்களுடைய பதினைந்துக்குப் பதினைந்து அளவிலான  குடிசைகளில் டியூப் லைட்டுகள் எரிய ஆரம்பிக்கின்றன.பெரிய அலுமினிய அண்டாக்களை வணங்கி, அடுப்பிலேற்றி, அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். (தொழிலுக்கு மரியாதை!) குடிசைக்கு வெளியே சாக்கடை ஓடுகிறது… வீட்டின்உள்ளேயோ கண்ணாடி போலப் பளபளக்கும் ‘பளிச்’ சுத்தம்.

சுமார் 500லிருந்து 700 குடும்பங்கள் இட்லி, வடை தயாரிக்கும்பணியில் ஈடுபட்டிருக்கின்றன. ஒரு வீட்டில், ஒருநாளைக்கு சராசரியாக 400 இட்லிகள் வார்க்கப்படுகின்றன. உதவிக்குபெண்களோ, ஓரிருவரோ கூட இருந்தால் அந்த எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும். மலைக்க வைக்கும் எண்ணிக்கை..! ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட மூன்றுலட்சம் இட்லிகள் இங்கிருந்து தயாராகின்றன. ஏழு மணிக்குள்அவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டும்விடுகிறார்கள் இவர்கள்.  

இந்தத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மதுரை மாவட்டத்தில்இருந்து வந்தவர்கள் என்பது முக்கியமான செய்தி. ‘ஒருநாளைக்கு 400  ரூபாய் சம்பாதிக்கலாம்’ என்கிறார் மும்பையில் இப்படி இட்லி, வடை விற்கும் இளைஞர் ஒருவர். வியர்வைசிந்தி உழைக்கும் இவர்களுக்கு மற்ற சமுதாயத்தினரிடம் அதற்கான மரியாதையும்கிடைக்கிறது. இவர்களை ‘அண்ணாச்சி’ அல்லது ‘தம்பி’ என்றுதான் அழைக்கிறார்கள். 

இன்றைக்கு மும்பையின் புறநகர்களில் தெருவுக்குத் தெரு மண்டிக்கிடக்கும் ‘கை ஏந்தி பவன்’களின் ரிஷி மூலம் இந்த ‘தலை ஏந்தி’ பவன்களே! 

மதியம் 2 மணிக்கு வீடு திரும்புகிறார்கள் இந்த தலையேந்தி பவன் வியாபாரிகள். சிறிது நேரம் ஓய்வு… 5 மணிக்கு எழுந்து அரிசியையும் உளுந்தையும் ஊறப் போடுகிறார்கள். அடுத்த நாள் பிழைப்பு ஓட வேண்டுமே!

– உஷா ராமானுஜம்

Image courtesy:

http://jalebiink.com/