எந்திர வாசல்

Image

ஒரு பெண்தான்  

வேட்டையைத் தொடங்கிவைத்தவள் 

தன் பிள்ளைகளுக்காக. 

 

குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய காலத்தை 

எட்டிப்பார்க்கட்டும் இதயம் உள்ள எல்லோரும் 

தெறிக்கும் உண்மை. 

 

இது பட்டாக்கத்தியுடன் அலையும் 

ரவுடி அறியாத ராகுல ரகசியம்*

அதனால்தான் இன்றும்…

தாய்க்கோழி தன்  சிறகுகளைப்  

பட்டாக் கத்திகளாய்ப் படபடத்து விரிக்க   

குஞ்சுகளைக் கொத்தவரும் பருந்து

பயந்து திரும்பும். 

 

கல்வியும் கருணையும் கவிதையும் 

கைவிடப்பட்ட உலகில் 

துயரங்கள் பெருக அலைகின்றன துன்மார்கங்கள். 

 

இதயங்கள் புறக்கணித்து 

எந்திரங்களில் வழியும் பணத்தாள்களில் 

சமூகத்தின் சவக் களை. 

 

இதயம் பொருத்தப்படாத ஏடிஎம் எந்திரம் 

நிகழ்ந்ததைப் பார்த்து  நினைவிழக்க…

சுயபார்வையற்ற கேமரா 

தன் ஒற்றைக் கண்ணால் 

உதிரம் அதிரும் காட்சிகளை 

உள்விழுங்கத் திணற…

கத்தி பார்த்து உயிர் உறைய 

சரிந்து சாய்கிறாள் பெண் ஒருத்தி. 

 

வழியும் குருதி வழித்தெறிந்து 

சாவகாசமாய்த் துணியில் துடைத்து 

கத்தியைப் பையில் திணித்து 

குற்ற உணர்ச்சியற்று வெளியேறுகிறான் 

கொலையாளி. 

 

பிள்ளைகளின் பசித்தீ தணிக்க 

ஆயுதக் கல்லோடு புறப்பட்ட 

நம் அன்னையின் சொரூபத்தை அறிவதில்லை 

போக்கிரி ஒருத்தனின் 

விலங்கறுக்கும் வேட்டைக்கத்தி. 

 

மரத்துப்போன பிழைமனிதன் பார்த்து 

எழுந்தோட நினைக்கும் ஏடிஎம் எந்திரம்…

ஷட்டரை சாத்தி விட்டுப்போனான் 

சாகசப் போக்கிரி! 

– நா.வே.அருள் 

 

*ராகுல ரகசியம் – ஆதியில்  ஒரு  பெண்தான் சமூகத்தை வழி நடத்தியவள் என்றும், வேட்டைச் சமூகத்தில் பெண்தான் தலைவியாய்த் திகழ்ந்திருக்கிறாள் என்பதை ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய “வால்காவிலிருந்து கங்கை வரை” நூல் மூலம் அறிகிறோம்.

Image Courtesy: http://www.kvartha.com/

குழந்தை

Image

குழந்தையின் தளர் நடையை இறைஞ்சிப்பெறவே 

நடன தேவதை தவங்கிடக்கிறாள்.

 

குழந்தையின் மழலை மொழியின்முன் 

இசையின் சாம்ராஜ்யமே மண்டியிடுகிறது.

 

குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது 

பந்தினைப் பூமியுருண்டையாக்கவும் 

பூமியுருண்டையைப் பந்தாக்கவும்.

 

நிலாவைக் காட்டிச் சோறூட்டிவிட்டதாக 

சாமர்த்தியம் பேசுகிறோம் 

குழந்தை 

நிலாவை உண்டுவிட்டதை 

அறியாத நாம்.

 

விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாகிப்போன 

வனதேவதையும் கடல் கன்னியும் ஆகாய ராஜனும் 

குழந்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் 

குழந்தைகள் கட்டிய மணல்வீடு முகாம்களில் 

குடியிருக்க.

 

பெரியவர்கள் 

இதயத்தைப் பொம்மையாய் வைத்திருக்கிறார்கள் 

குழந்தைகளோ 

பொம்மைக்கும் இதயத்தைப் பொருத்திவிடுகிறார்கள்.

 

பெரியவர்களிடம் 

அடம்பிடித்து அழுதுவாங்க 

குழந்தைகளுக்கு ஏராளமானவை இருக்கின்றன 

பலூன்கள்…சாக்லேட்டுகள்…

ஐஸ் கிரீம்…பொம்மைகள்…

குழந்தைகளிடம் யாசிக்க 

பெரியவர்களுக்கு 

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது…

“மனசு”

– நா.வே.அருள்

Image Courtesy: http://edfromct.files.wordpress.com

சின்னச் சின்ன கவிதைகள்!

Image

நம்பிக்கை 

செடி முழுக்க 

சிலுத்துக்கிட்டு குத்தும் முட்கள் 

உச்சாங்கொண்டையில் 

ஒற்றைப் பூ 

 யாரும் 

முள் செடின்னு சொல்லுறதில்ல 

ரோஜா செடின்னு சொல்லுறோம்.

Image

முதுமை 

ஒரு விதையாக இருந்த மரணம் 

செடியாகி 

மரமாகி 

தோப்பாகி 

காடாகி 

கவிந்துவிடுகிறது 

Image

எத்தனையோ கவிதைகளை எழுதியிருந்தாலும் 

எனக்காக எழுதப்பட்ட ஒரே கவிதை 

நீ!

Image

ஒரு ஜன்னல் போதும் 

எவர் தடுக்க முடியும் 

எனக்கான பிரபஞ்சம். 

Image

குங்குமம் உசத்திதான் 

நெற்றிதான் மலிவாக இருக்கிறது 

விலைவாசி

Image

அனுப்பியவற்றையெல்லாம் 

கிழித்தெறிந்து விடுகிறாய் 

சிறகுகளையும்தான்….

Image

வெளிச்சத்தைவிட 

இருட்டுக்கு வலிமை அதிகம் 

உன் நிழலையே விழுங்கிவிடுகிறது..!

Image

எனது இறப்பு எவ்வளவு நிச்சயமானதோ 

அவ்வளவு நிச்சயம் 

எனது இறப்பின்மையும்!

Image

காண விருப்பம் 

அதிகாலைச் செய்தியில் 

காயம் படாத இரவுகள்…

– நா.வே.அருள்

Image Courtesy:

http://www.thegardencentral.com

http://www.theatlantic.com

http://www.inspirefirst.com

http://homeguides.sfgate.com

http://bakingwithdynamite.blogspot.in/

http://mysteriousuniverse.org

http://www.zmescience.com

http://thenextweb.com/

அம்முக்குட்டியின் தீபாவளி!

Image

அம்முக்குட்டியின் உள்ளங்கையைவிட 

அழகான மலரொன்றைக் கண்டதேயில்லை இந்தக் 

கவினுலகில்…

அவள் விரல்நகங்களில் அழுக்காய்க் கிடந்திடும் 

ஆசைக்கனவில் 

ஆலயத்தில் தவங்கிடப்பான் ஆண்டவன். 

அம்முக்குட்டியின் ஒற்றைச் சிரிப்புக்கு ஈடாவதில்லை 

சரவெடிகளின் தொணதொணக்கும் தொடர் ஒலிகள். 

பம்பரமாய்ச் சுற்றும் அம்முக்குட்டியின் 

குவிந்த குடைக் குட்டைப்பாவாடைக்கு ஈடாகுமா 

கவிழ்ந்த மலையென 

கலர்க்கலராய் ஊற்றெடுக்கும் பூச்சாடியின்  ஒளியருவி! 

ஒருவிரல் நீட்டி உத்தரவு போடும் அம்முக்குட்டியின்

சுட்டுவிரலில் சூடுபட்டு உடல் தளர்ந்து தொங்கும் 

சடபடவென சரசரக்கும் சாட்டை. 

கம்பிமத்தாப்பைக் கையில் பிடித்தபடி 

அகன்றும் சுருங்கியும் ஆர்ப்பரிக்கின்ற  அவளது 

விழிமத்தாப்புகளை விட ஒளிசிந்த 

வேறேது உலகத்தில்?

சிவகாசியில்

தன் கையில் திணிக்கப்பட்ட உளுந்து வடையின்  

வெண்மருந்தீயத்தை 

ஊதி விலக்கும் உத்தியறியாமல் விழித்துக்கொண்டிருப்பாள் 

சுட்டவடை தின்னும் சுடர்க்கொடி அம்முக்குட்டி. 

ஆனாலும்…

ஒவ்வொரு ஊரிலும் ஒளி விழா நிகழ்த்தி 

தன் திண்ணைக்கு வந்த தீபாவளிக்கு 

ஓர் அகல்விளக்கேற்றி அமுது படைத்துவிடுகிறாள் 

அழகிய நம் அம்முக்குட்டி. 

– நா.வே.அருள்

உண்மை கசக்கும்

Image

ஆம்

அது இப்படித்தான் இருக்கிறது

இறந்து விடுவதை விட

வாழ்ந்து விடலாம் போல

பாடை, மூங்கில்

பூக்கள், விறகு

பானை, புதுத்துணி

சுடுகாட்டுக் கட்டணம்

இத்யாதி, இத்யாதி

இதுவெல்லாம் முடிந்தாலும்

அடுத்தநாள் பாலுக்கு…

பதினாறாம் நாள்

காசு, பணம்,  துட்டு, மணி

இறந்துபோகவில்லையே என்று

நினைக்கவைக்கும்

ஏராளமான செலவுகள்

ஒரு வகையில் –

உயிரோடு இருப்பதைவிட

செத்துப்போனால்தான்

செலவுகள் அதிகம்!

இறந்தவன் தப்பித்துக்கொள்ள

இருக்கிறவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்

ஆம்

அது அப்படித்தான் இருக்கிறது!

– நா.வே.அருள்

இரு கவிதைகள்

Image

நல்வரவு 

இப்போதெல்லாம்

வீட்டுக்கு வருபவர்களிடம்

அன்யோன்யமும்  சகஜமும் காட்டிட

அநேகமாய் ஒன்றுமில்லை

ஒவ்வொரு வீட்டின் முகப்புச் சுவரிலோ

வாசல் இரும்புக் கிராதியிலோ

தொங்கும்

“நாய்கள் ஜாக்கிரதை”

***

 Image

 கூடைச்சிம்மாசனம்

குருத்தோலை மணிமகுடம்

பானைக்குள் பவனிவரும்

பதநீர் இளவரசி !

அதுசரி …..

கள்ளில் சுண்ணாம்பு கலந்து

பதநீரானது

மனதில் எதைக் கலந்து

மனிதனாவது..?

– நா.வே.அருள் 

Photo Credit: http://chittarkottai.com and http://commons.wikimedia.org/

வெள்ளி ஓவியங்கள்

Image

தூரிகையோடு சம்பந்தப்படாததால்

கோலம் ஓவியமில்லையா?

 

ஒவ்வொரு வீட்டிலும்

ஓவியக்காரியாய்

ஒவ்வொரு பெண்ணும்

 

எந்த வண்ணத்துக்குமில்லாச் சிறப்பு

கோலமாவில்…

எறும்புக்குத் தீனி!

 

கோலம் வரைவதாய்க்கூட

சொல்வதில்லை

கோலம் ‘போடப்’படுகிறது!

 

விரல்களின் குரல்கள்

அதிகாலை அவசரத்தில்

வாசலில் அநாதையாய்…

 

வாகனங்கள் ஏறிச்சென்ற பிறகு

பிய்ந்துபோன சதைத் துண்டங்களாய்

எஞ்சும் கோலப்பிசுறுகள்!

கைகளில் பிறந்து

கால்களில் வதைபடவா?

 

மார்கழி தொடங்க

மரியாதை கோலங்களுக்கு..!

 

எல்லோரும் அசூயையாய் ஒதுக்கும்

சாணியுருண்டையில்

யாரும் தலையில் சூடாத

பூசணிப்பூ வைத்து!

 

தண்ணீர் தெளித்து

தரை மெழுகி

வரையும் கோலத்தை

மிதியடிகளால்

அரைத்துச் செல்பவர்களை

என்னவென்று அழைப்பது?

 

காதலியின் வார்த்தையாய்

மனைவியின் இயலாமையாய்

மகளின் கோபமாய்

விருந்தின் வரவேற்பாய்

தெய்வீகத்தின் உச்சமாய்

 

எப்படிப் பார்க்கினும்

ஒரு பெண்ணின் பிரபஞ்சமாய்…

 

கோலங்கள் –

தரையில் கிடக்கும் மின்கம்பிகள்!

 

மிதித்தால் அதிர்கிறது

என் இதயம்!

– நா.வே.அருள் 

Picture Courtesy: http://alagukolangal.blogspot.in

Image

இரண்டு கவிதைகள்

Image

மணிக்குரல் 

ஒவ்வொரு அலைபேசிக்குள்ளும்

உறைந்து கிடக்கும் இதயம்

தொடர்பு எல்லைக்கப்பால்…

long-distance-relationship

உனக்குத் தெரியாது 

நீ விலகிப்போன

எந்த தூரமும்

என் அருகில்தான் இருக்கிறது

– நா.வே.அருள் 

Picture Credit: http://blog.pure-gear.com

http://for-long-distance-relationship-tips.blogspot.in/

அவள் = ?

Image

அலறியடித்து இரவில் எழுந்து

அவசர அவசரமாய்த் தண்ணீர் பிடிக்கும்

அவளின் அவஸ்தை

 

காய்கறி நறுக்கும் அவசரத்தில்

கத்தி பட்டு அவளின் விரலில் கசியும் குருதி

 

ஏழு மணிக்கே சமையல்முடித்து

எல்லோருக்கும் கட்டிக்கொடுத்து

தனக்கு மறந்துபோகும் மறதி

 

அழுகிற பிள்ளையைக் கொஞ்சியும்

ரெண்டு கொடுத்தும்

பள்ளிக்குக் கிளப்பிவிடும் பரபரப்பு

 

இதற்கிடையிலும்

மாமியாருக்கு மருந்து எடுத்து வைக்கும்

மரத்துப்போன அக்கறை

 

இவை எவையுமே என் கவிதைகளில்

தென்படவில்லையெனில்

எப்படி நம்புகிறீர்கள்

நான் அன்பானவன் என்று?

– நா.வே.அருள் 

Picture Courtesy: http://wallpapers-mobilewallpapers.blogspot.in/ 

சும்மா

Image

ஒவ்வொரு நாளும்
அம்மா பெருக்கிச் சுத்தம் செய்த இடங்களை
அடுக்கி இருந்தால்
நகரில் பாதி இருக்கலாம்

வாசற்ப் பெருக்கித் தெளித்த நீரைச்
சேமித்திருந்தால்
ஒரு சின்ன அருவியேனும் சித்தித்திருக்கலாம்

வரைந்த கோலங்களை
வரிசையாய்க்  கிடத்தி இருந்தால்
ஓவிய ஊர்கள் உருவாகி இருக்கலாம்

வீட்டிற்குச் சமைத்துப் போட்டதைப்
பந்தி வைத்திருந்தால்
பல ஊர்கள் பசியாறி இருக்கலாம்
ஆனாலும்…
அப்பாவிடம் அம்மா அடி வாங்கும்போதெல்லாம்
அடிக்கடி காதில் விழுந்த வார்த்தைகள்:
“பொட்டக்  கழுத
என்னாடி கிழிச்சே!’’
– நா.வே.அருள்

Photo Credit: http://aphs.worldnomads.com/