நிர்பயா – ஓவியக் கண்காட்சி

ஓவியர் என்.ஸ்வர்ணலதாவின் ஓவியக் கண்காட்சி இப்போது சென்னையில்… அத்தனையும் பெண்கள் அனுபவிக்கும் வலி, பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை தொடர்பானவை!

நாள்: செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை.

நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

இடம்: 48, இரண்டாவது பிரதான சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028.

தொடர்புக்கு: 9003168626 மற்றும் 9382344123.

art176

நிஜம் நாடகமாகிறது!

Image

யேல் ஃபார்பர் (Yael Farber). தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நாடக இயக்குநர். நாடக ஆசிரியர். தன் படைப்புகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றவர். இவருடைய சமீபத்திய நாடகம், பார்த்தவர்களை உலுக்கிப் போட்டிருக்கிறது. கதற வைத்திருக்கிறது. கலங்கடித்திருக்கிறது. நாடகத்தின் பெயர், ‘நிர்பயா’. கடந்த டிசம்பரில், டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி அநியாயமாக உயிரை இழந்த அதே மாணவியின் கதைதான் நாடகத்தின் கருப்பொருள்.

ஸ்காட்லாந்தில் நடக்கும் ‘எடிபர்க் ஃபெஸ்டிவல் ஃபிரின்ச்’ (Edinburg Festival Fringe) கலைவிழா உலகப் புகழ் பெற்றது. உலகின் சிறந்த கலைஞர்களும் நாடக விற்பன்னர்களும் பங்கேற்கும் முக்கியமான ஒரு விழா. அதே போல உலகின் பல பகுதிகளில் இருந்து இந்த விழாவைக் காண்பதற்காகவே வரும் பார்வையாளர்களும் அதிகம். கடந்த வாரக் கடைசியில், அந்த விழாவில் ‘நிர்பயா’ நாடகத்தை மேடை ஏற்றினார் ஃபிரிஞ்ச். பலத்த வரவேற்பைப் பெற்றதோடு பார்த்தவர்களை அதிர வைத்திருக்கிறது ‘நிர்பயா’.

‘‘பாலியல் பலாத்காரம் என்பது இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் இருக்கும் ஒரு பொது வியாதி. ஆனால், நிர்ப்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை நம் ஒவ்வொருவரையும் துளைத்தெடுக்கும் சக்தி படைத்தது. இது போன்ற பாலியல் வன்முறைகள் குறித்தான மௌனத்தை உடைக்க, இந்த நிகழ்வை முன் வைத்து இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள்’’ என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஃபார்பர்.

Image

‘நிர்ப்பயா’ நாடகத்தின் கருப்பொருள் மிகச் சிறியது. மேடையில் ஐந்து பெண்கள் தோன்றுகிறார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் வன்முறைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அதே நேரம், நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை தங்கள் மௌனத்தை எப்படி உடைத்தது என்பதையும் விவரிக்கிறார்கள். இந்திய மாணவி ‘நிர்பயா’ (கற்பனைப் பெயர்) பஸ்ஸில் ஏறியது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, வன்முறைக்கு ஆளானது, இறந்தது ஆகிய நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இந்நாடகம். நிர்பயாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் இந்தியாவில் இந்நாடகத்தை அரங்கேற்றவும் முடிவு செய்திருக்கிறார் ஃபார்பர்.

மாணவி நிர்பயா, உலகெங்கும் அன்றாடம் பெண்களுக்கெதிராக  நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு உதாரணம். ‘நிர்பயா’ நாடகம், இனிமேலாவது இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக மக்களை உணர வைத்திருக்கும் ஆவணம்!

– பாலு சத்யா