இலைகள் பழுக்காத உலகம்
ராமலக்ஷ்மி
வளைத்தளத்தில் பிரபலமான கவிஞர் ராமலக்ஷ்மி 1987ல் இருந்து தொடர்ந்து எழுத்துலகில் இயங்கி வருபவர். ‘முத்துச்சரம்’ என்ற வலைப்பூவை உருவாக்கி, தொடர்ந்து பதிவுகள் இடுபவர். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளியானவை.
‘‘அன்பையும், பாசத்தையும், கவலைகளையும் வெளிப்படுத்துகிற எந்தக் கவிதையிலும் வலிந்து திணிக்கப்பட்ட பாசாங்கோ, வார்த்தைகளின் ஆர்ப்பாட்டமோ இல்லை. இயல்பாக, உண்மையின் மையப் புள்ளியிலிருந்து இதைப் பதிவு செய்கிறார். அதனால்தான் இந்தக் கவிதைகள் மென்மையையும் முரண்பாட்டையும் ஒருங்கிணைத்துச் செல்கின்றன.
கவிதையை உச்சநிலைக்கு எடுத்துச் செல்வதில் முதன்மையானது ரசனை சார்ந்த அனுபவம். ரசனைக்குக் கூர்மையான கவனிப்பு அவசியம். யாரும் நுழையாத கவிதைப் பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிற போது, வாசகன் காணும் உலகம் ஆச்சரியங்கள் விரியும் வண்ண உலகமாகிறது. ‘அரும்புகள்’ கவிதையில் ராமலக்ஷ்மியின் கவிதைப் பார்வை நேர்த்தியும் அழகும் மிக்கதாக இருக்கிறது. நாம் கவனிக்கத் தவறி விட்டோமே என்று வியக்கத் தோன்றுகிறது…’’ என்று இந்நூல் மதிப்புரையில் குறிப்பிடுகிறார் கவிஞர் க. அம்சப்ரியா. ராமலக்ஷ்மியின் ‘அரும்புகள்’ கவிதை மட்டுமல்ல… பல கவிதைகள் ரசனை சார்ந்த அனுபவத்துக்கு நம்மை உட்படுத்துபவை.
எளிமையான வரிகளில், மிரட்டாத சொல்லாட்சியில் மிளிர்கின்றன இத் தொகுப்பில் உள்ள கவிதைகள். உதாரணத்துக்கு சில கவிதைகள்…
அரும்புகள்
என்றைக்கு
எப்போது வருமென
எப்படியோ தெரிந்து
வைத்திருக்கின்றன
அத்தனைக் குஞ்சு மீன்களும்
அன்னையருக்குத் தெரியாமல்
நடுநிசியில் நழுவிக்
குளம் நடுவே குழுமிக் காத்திருக்க
தொட்டுப் பிடித்து விளையாட
மெல்ல மிதந்து
உள்ளே வருகிறது
பிள்ளைப் பிறை நிலா.
***
எல்லாம் புரிந்தவள்
மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி
அர்த்தங்கள் பல
முயன்று தோற்று
‘அப்பா அம்மாவாகவே முடியாதோ…’
திகைத்து வருந்தி நிற்கையில்
புரிந்தவளைப் போல்
அருகே வந்தணைத்து
ஆறுதலாய் முத்தமிட்டு
எனக்கு
அம்மாவாகி விடுகிறாள்
அன்பு மகள்.
***
கடன் அன்பை வளர்க்கும்
‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை’
புதுக்கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இட்த்தில்
வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான்
முந்தைய கடன்களை
காலத்தே அடைத்த்தற்கான
நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன்வைத்தான்.
சிணுங்கியது அலைபேசி
‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’
அறிவித்தாள் அன்பு மகள்
முன் தினம் கடற்கரையில் கடலை வாங்க
சில்லறை இல்லாதபோது
தன்குட்டிப் பையைக் குலுக்கித் தேடி
எடுத்துத் தந்த இரு ஐந்து ரூபாய்
நாணயங்களை நினைவூட்டி.
***
நூல்: இலைகள் பழுக்காத உலகம்
ஆசிரியர்: ராமலக்ஷ்மி
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம், எண் 33, மண்டபம் தெரு, மதுராந்தகம் – 603 306.
தொலைபேசி: 9994541010.
விலை: ரூ.80/-
பிற நூல்கள்…
Image courtesy:
ww.chinese.cn