வை.மு.கோதைநாயகி அம்மாள்

‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி’ என்பது முழுப் பெயர். தமிழில் முதலில் துப்பறியும் புதினம் எழுதிய பெண் எழுத்தாளர். இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், சமூக சேவகி என பன்முகத் தன்மையோடு செயல்பட்டவர். விறுவிறுப்புக் குறையாத எழுத்துக்குச் சொந்தக்காரர். 115 புதினங்களை எழுதியிருக்கிறார். இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்களும் வெளி வந்திருக்கின்றன. ‘நாவல்ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் போற்றப்பட்டவர். செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூரில் 1901, டிசம்பர் 1ம் தேதி பிறந்தார். ஒரு வயதில் தாயை இழந்தார். சித்தப்பா ராகவாச்சாரியிடம் தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைக் கற்றார். 1907ல் ஐந்தரை வயதில் திருமணம். கணவர் வை.மு.பார்த்தசாரதி, சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். கோதை நாயகி அம்மாளுக்கும் திருமணத்துக்குப் பிறகு ‘வை.மு.’ என்ற அவர்களின் குடும்பப் பெயர் சேர்ந்து கொண்டது. அவருடைய செயல்பாடுகளுக்கும் வெற்றிகளுக்கும் பார்த்தசாரதி துணையாக இருந்தார். பள்ளிக்குச் சென்று படித்திராதவர் கோதைநாயகி. மாமியாரிடம் தெலுங்கு மொழியை கற்றுத் தேர்ந்தார். கணவர் அழைத்துச் சென்ற நாடகங்களைப் பார்த்து நாடகங்களின் மேல் ஈடுபாடு கொண்டார். சரியாக எழுதத் தெரியாத நிலையில், ‘இந்திரமோகனா’ என்ற நாடகத்தை உருவாக்கினார். இவர் சொல்லச் சொல்ல, அவருடைய தோழி பட்டம்மாள் அதை எழுதினார். அது நூலாகவும் வெளியானது. அதற்குக் கிடைத்த பாராட்டு மற்றும் வரவேற்பினால், தானே எழுதக் கற்றுக்கொண்டு வேறு சில நாடகங்களை எழுதினார்.
‘ஜகன்மோகினி’ என்ற இதழ் நின்று போயிருந்த சமயம் அது. அதை விலை கொடுத்து வாங்கி, வெளியிடத் தொடங்கினார். 35 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகை வந்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசப்பற்று, விதவைத் திருமணம், மதுவிலக்கு ஆகியவற்றைத் தன் எழுத்துகளில் வலியுறுத்தினார். 1937ல் சொந்தமாக ஓர் அச்சகத்தையும் நிறுவி நடத்தி வந்தார். கர்நாடக இசைப்பாடல்களைப் பாடுவதிலும் வல்லவர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். 6 மாத சிறைத்தண்டனை. அபராதம் கட்டத் தவறியதால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1932ல் அந்நியத்துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தபடியே இரு புதினங்களை எழுதினார். திரைப்படத் தணிக்கைக்குழு பிரிவில் உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவருடைய புதினங்கள் ‘அனாதைப்பெண்’, ‘சித்தி’, ‘ராஜமோகன்’, ‘தியாகக்கொடி’, ‘நளினசேகரன்’ என்ற திரைப்படங்களாக மலர்ந்தன. இறுதிக் காலத்தில் காசநோய்க்கு ஆளாகி துன்பப்பட்டார். 1960, பிப்ரவரி 20ம் தேதி மறைந்தார்.
****
வை.மு.கோதநாயகி அம்மாளின் ‘தபால் விநோதம்’ மிக முக்கியமான ஒரு நாவல். குங்குமம் தோழி Web Exclusiveல் மூன்று பகுதிகளாக வெளிவர இருக்கிறது. முதல் பகுதி இங்கே…
தபால் விநோதம்! (பகுதி-1)

‘‘உலக விநோதங்களைப் பற்றி என் தகப்பனார் ஆதிகாலத்திலெல்லாம் பிரமாதமாகச் சொல்லுவார். அப்போது நான் ‘இளங்கன்று பயமறியாது’ என்கிற பழமொழிப்படிக்கு எதையும் உணராதிருந்தேன். ”பட்டால் தெரியும் ப்ரக்ருதிகளுக்கு” என்று என் பாட்டி அடிக்கடி சொல்லுகிற பழமொழியின் உண்மை இப்போதுதான் தெரிகிறது. எந்த வரனைக் கொண்டு வந்தாலும் இப்படி ‘வேண்டாம், வேண்டாம்’ என்றால் வேறு எந்த லோகத்தில்தான் இந்தப் பெண்ணுக்கு வரன் தேட முடியும்? சதா சர்வ காலமும் இதே நினைவாகவே என்னை வாட்டி மெலியச் செய்கிறது. இப்போது வந்துள்ள வரனையாவது நிச்சயம் செய்யப் போகிறாயா இல்லையா?” என்று சுமார் 40 வயதுடைய ஒரு கம்பீரமான புருஷர் தன் மனைவி மங்களம்மாளை நோக்கிக் கேட்டார்.
அந்தம்மாள் கர்நாடகக் கட்டுப்பெட்டியுமில்லை. தற்கால நாகரீகக் சிகரத்தில் நிர்த்தனம் செய்பவளுமில்லை. குலத்திற்கேற்ற முறையில் காலத்திற்கு ஒத்து வாழ்க்கை நடத்தும் அந்தம்மாள் மிக்க வணக்கத்துடன் ”என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்? நானும் எத்தனை விதத்தில் சொல்லிப் பார்க்கலாமோ, அத்தனையும் சொல்லியாகிவிட்டது. முன்பு என் பாட்டி கல்யாணக் கும்மி ஒன்று பாடுவாள். அதில் வரும் வேடிக்கைகளை இன்று நேரில் பார்க்கிறேன். பெண்ணுக்கென்ன வயதாகவில்லையா? பாப்பாவா? தான் படித்துவிட்ட பெருமையில் கிராமத்துப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட மாட்டாளாம், படித்த வனாகவும் பட்டினவாஸத்தில் உத்தியோகம் பார்க்கிற கட்டழகனாகவும் இருக்க வேண்டுமென்று சொல்கிறாள். இந்தக் காலத்து பெண்களுக்கு வெட்கமா? மானமா? எங்க காலத்துப் போன்ற காலமே தேவலையென்று தோன்றுகிறது”.
என்று பேசும் போது ”சார்! கபால்!” என்ற குரலைக் கேட்டதும் மங்களம்மாள் ஓடிப்போய் கவரை வாங்கிக் கொண்டு வரும்போதே சிரித்த முகத்துடன் ”மஞ்சள் தடவியிருப்பதால் விஷயம் பழம் என்று தோன்றுகிறது. இந்தாருங்கள், படியுங்கள்!” என்று கூறியவாறு கொடுத்தாள். உடனே அவர் கவரைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார்.
”ஸ்ரீமான் ராமநாதன் அவர்களுக்கு, உபய க்ஷேமங்கள். இரண்டு ஜாதகங்களின் பொருத்தமும் பிரமாதமாக இருப்பதாயும் இந்த விவாகம் கண்டிப்பாய் நடந்தே தீரவேண்டும் என்றும் ஜோஸியர் சொன்னார். ஆகையால் எவ்விதமான ஆக்ஷேபமும் இன்றி மேற்கொண்டு நடத்தலாம். புகைப்படத்தைப் பார்த்து எங்கள் பையன் சம்மதப்பட்டுவிட்டான். மற்ற விவரங்களையெல்லாம் உங்களுக்கு ஏற்கெனவே எழுதி விட்டேன். பையனுக்கு பெற்றோரில்லாததால் மாமனாகிய என் பொறுப்பில்தான் இருக்கிறான். விக்ரமபுரம் ஜில்லாவைச் சேர்ந்த புண்டரீகபுரம் என்னும் பெரிய கிராமத் தபாலாபீஸில் அவன் நிரந்தரமான உத்தியோகத்திலிருக்கிறான். சாப்பாட்டுக்குப் பஞ்சமின்றி நிலன் புலன் இருக்கிறது. உங்கள் பெண் சந்தோஷமாயும் மன திருப்தியாயும் வாழ்க்கை நடத்தலாம். அனுபவப்பட்ட பெரிய வனாகையால் இப்படி எழுதியிருக்கிறேன். என்றைக்கு நிச்சயதார்த்தம் செய்வது என்பதைத் தெரிவித்தால் வருகிறோம்…
எங்கள் பையனுக்கு இதுவரையில் வந்த இடம் கணக்கு வழக்கு இல்லை. நல்ல அழகாயும் படித்த பெண்ணாயும் சங்கீதம் தெரிந்தவளாயும் வந்தால்தான் மணக்க முடியும் என்று ஒரே பிடிவாதமாகச் சொல்லிவந்தான். உங்கள் குமாரத்தி சௌபாக்யவதி சித்ராவுக்குச் சகல அம்சங்களும் நிறைந்திருப்பதால் உடனே இசைந்து விட்டான். ஆகையால் தாமதமன்னியில் முடித்துவிடவும்.
உங்கள் பதிலை எதிர்பார்க்கும் சதாசிவம்.
கடிதத்தை உரக்கவே படித்து மங்களமும் கேட்டாள். விஷயம் பழமாக இருப்பினும் இருவருக்கும் முகம் சுருங்கியது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ”எல்லாம் சரியாகவிருந்தும் கிராமத்துத் தபாலபீஸில் உத்தியோகமாமே… இந்த கிரகசாரத்திற்கு, என்ன செய்வது? எதை நம் சித்ரா வேண்டாம் என்று சொல்லுகிறாளோ அதுவேதானே வந்திருக்கிறது” என்று சற்று குறையுடன் சொன்னாள் மங்களம்.
ராமநாதன்: மங்களம்! இதோ பாரு; இதே மாதிரி குழம்பிக் கொண்டிருந்தால் காரியம் நடத்தவே முடியாது. நமக்கென்ன அவள் ஒரே மகளா! அவள் இஷ்டப்படி தேடி அலைவதற்கு? இன்னும் நாலைந்து பசங்கள் இருப்பது நினைவிருக்கட்டும். ஆகையால் எனக்கொன்று தோன்றுகிறது. அதாவது இந்தப் பையனுக்கு கிராமத்துத் தபாலாபீஸில் உத்தியோகம் என்பதையே நாம் கூற வேண்டாம். வேலையாகவில்லை; வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறான்: நானே வேலை செய்து வைத்துவிடுகிறேன்… என்று சொல்லிக் காரியத்தை முடித்து விடுவோம். எல்லாம் பின்னால் சரியாகிப் போய்விடும். ஒரு வாரத்திற்குள் சகலத்தையும் அவசரமாக முடித்து முகூர்த்தமும் வைத்து விடலாம். அப்படிச் செய்தால்தான் நல்லது. மற்ற சகல அம்சங்களிலும் முதல்தரமாயிருக்கிற இடத்தை விடவே கூடாது. இதை எப்படியும் முடித்தே தீரவேண்டும்” என்றார். மங்களமும் இதை ஆமோதித்தாள். உடனே மறு தபாலில் சம்மந்திகளுக்குப் பதில் பறந்தது.
2

கல்யாணம் விமரிசையாக நடந்து தம்பதிகள் ஊருக்குக் கிளம்பினார்கள். சித்ராவுக்குத் தன் கணவரின் அழகைப் பார்த்ததும் அப்படியே மயங்கி விட்டதால் அவளுக்குப் பூர்ண சம்மதம் ஏற்பட்டுவிட்டது. உத்யோகமே ஆகவில்லை என்பது மட்டும் தெரிந்த விஷயமாதலால் ஆக்ஷேபணை இன்றி விவாகமானதும் ஊருக்குச் சென்றாள்.
புண்டரீகபுரிக்கு வந்ததும் அந்த கிராமத்தையும் அதன் மனிதர்களையும் பார்த்த சித்ராவுக்கு மிக்க வெறுப்பாகவே இருந்தது. ஒரு வீட்டு வாசலில் மாட்டு வண்டி வந்து நின்றதும் இறங்கினார்கள். வாசலில் ‘புண்டரீகபுரம் தபாலாபீஸ்’ என்று போர்டு போட்டிருந்ததைப் பார்த்ததும் தபாலாபீஸிலா தன் கணவர் குடியிருக்கிறார் என்று எண்ணியபடி உள்ளே வந்தாள். மாமாவும் மாமாவின் மனைவியும் தம்பதிகளை வரவேற்று உபசரித்துப்பின், ”சித்ரா! உன் வீட்டை இனி நீ ஒப்பித்துக் கொள்ளம்மா… நான் சீக்கிரத்தில் என் ஊருக்குப் போகிறேன்; உன் மாமியார் வெகு நல்ல பெயரெடுத்து ஊரெல்லாம் கொண்டாடும் படி வாழ்க்கை நடத்தினார். அதேபோல் நீயும் நல்ல பெயரெடுத்து நன்றாக மகாராஜியாயிருக்க வேண்டும். இந்த ஊர் மிகவும் ஆரோக்கியமானது; நல்ல காற்று, நல்ல மனிதர்கள்;’’ என்று அடுக்கிக் கொண்டே போவதைக் கேட்ட சித்ராவுக்கு முகம் சுருங்கியது. ”இந்தப் பட்டிக்காட்டில் எனக்கென்ன வேலை? எங்கப்பாவே உத்யோகம் பண்ணி வைத்துவிடப் போகிறார்; நான் ஜம்மென்று பட்டினவாஸத்துக் கடற்கரையின் ஜிலுஜிலுப்பான காற்று வாங்கிக் கொண்டு, சினிமா ட்ராமா… சங்கீதக் கச்சேரிகள் முதலிய பலவித கேளிக்கைகளை அனுபவிக்கப் போகிறேன். என்னிடம் எதற்காக இந்தப் பட்டிக்காட்டு விமர்சனம் செய்ய வேண்டும்?” என்று தனக்குள்ளேயே எண்ணினாளேயன்றி வெளியில் சொல்லாது மரியாதையாக நின்றாள்.
நேரம் செல்லச் செல்ல, சித்ராவின் சந்தேகம் அதிகரித்தது. தன் கணவனே வாசல்புறத்திலுள்ள தனியறையில் வேலை செய்வதும், தபால் கட்டுகள் வருவதும்…
”சாமி… கவுரு குடுங்க… கார்டு குடுங்க… தபால்தலே குடுங்க… சாமி!.. எனக்கு தபால் வந்திருக்குதுங்களா, ரவெ பாருங்க… மணியார்டர் செய்யணும். ரவெ பாரம் எழுதுங்க சாமி… எனக்கு மணியார்டர் வந்திருக்கிறதா பாருங்க… ரிஜிஸ்தர் பார்சல் இந்தாங்க சார்!.. சாமி! ரிஜிஸ்தர் கவரு ஒண்ணு எடுங்க” என்று பலபேர் பலவிதமாகப் பேசிக் கேட்பதும் அதற்கெல்லாம் அவன் பதில் சொல்வதும் தபால்காரர்களுக்குக் கட்டுகள் பிரித்துக் கொடுத்து சுற்றுப்புறத்து கிராமங்களுக்கு அனுப்புவதும் பார்த்துச் சந்தேகம் பின்னும் வலுத்தது. ஒருகால் தனக்கு உத்யோகம் ஆகும் வரையில் இதை யாருக்காவது ஒத்தாசையாகச் செய்கிறாரோ என்னவோ…! என்று கூட நினைத்தாள்.
தனக்குப் புதிய ஊர்; புதிய மனிதர்கள்; ஆகையால் ஒன்றும் கேட்கமுடியாது போயிற்று. சாவதானமாக அன்றிரவு தன் கணவனின் மூலமே அவன் கிராமத் தபாலாபீஸ் போஸ்ட்மாஸ்டர் என்பதை அறிந்ததும் சித்ராவுக்குக் கோபமாக வருகிறது. அழுகை நெஞ்சையடைத்ததுக் கொண்டு போகிறது. பொய் சொல்லி இப்படி ஏமாற்றியதற்காக ஆத்திரம் பீறிக் கொண்டுவந்து வெகுவாய் முறைத்துக் கொண்டாள். ”இந்தப் பட்டிக்காட்டு வாழ்க்கையை நான் விரும்பவே மாட்டேன். கட்டாயம் இதை ராஜினாமா செய்துவிட்டுப் பட்டணத்தில் எங்கப்பா வேலை செய்து வைப்பதைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லோரும் சேர்ந்து என்னை இப்படி மோசம் செய்ததை நான் சகிக்கவே முடியாது.” என்று பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாள். கணவன் சிரித்தவாறு மவுனமே சாதித்தான். அந்த மவுனப் பார்வையிலும் அன்பு ததும்பிப் பொங்கியது.
3

இடையில் எப்படியோ ஒரு வாரகாலம் ஓடி மறைந்தது. மாமாவும் மாமியும் சித்ராவுக்குப் புத்திமதிகள் சொல்லிவிட்டுத் தம் ஊருக்குப் போய்விட்டார்கள். அதுவரையில் பெரியவர்கள் இருக்கிறார்களே என்ற மரியாதையுடன் பேசாமலிருந்தாள். அவர்கள் சென்ற உடனே தடதடவென்று ஒரு நீண்ட கடிதத்தைத் தன் பெற்றோருக்கு எழுதிவிட்டு, கிண்டலாயும், இளப்பமாயும் ”சார்! ஒரு போஸ்ட்டு கவர் வேணும்” என்று முறைத்தவாறு நின்றாள்.
உத்தமனுக்கு மனைவியின் மீதுள்ள அடங்கா ப்ரேமையினால் எதையும் எதிர்த்துப் பதில் பேசிக் கோபிக்காமல் அவள் போகிற வழியே விட்டுப்பிடிக்க எண்ணி, சிரித்தபடியே, ”தேவி! சாதாரண கவர் வேணுமா? தலை ஒட்டிய கவர் வேண்டுமா? ரிஜிஸ்தர் கவர் வேண்டுமா? சமூகத்திற்கு எது தேவையோ?… என்று கூறியபடியே மூன்று தினுசுக் கவர்களையும் நீட்டினான்.
சித்ரா கோபத்துடன் தலை ஒட்டிய கவரை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, அதில் தான் எழுதிய கடிதத்தை வைத்து ஒட்டி விலாஸம் எழுதி எடுத்துக் கொண்டுவந்து… ”போஸ்ட்டுமாஸ்டர் அவர்களே! தயவு செய்து இதை அனுப்பிவிடுங்கள்..” என்று பரிகாஸமாகக் கூறி, மேஜைமீது வைத்துவிட்டு விர்ரென்று சென்றாள். உத்தமன் கடகடவென்று சிரித்துக் கொண்டே ‘சித்தம் தேவீ!’ என்றான்.
சித்திராவின் முகத்தில் சிரிப்பு என்பதே மறைந்து, வெறுப்பும் கோபத்தின் படபடப்பும் தாண்டவமாடின. தனக்கு ஏதோ போதாக்காலத்தின் பொருட்டுதான் இப்படி ஒரு பட்டிக்காட்டில் வேண்டுமென்று தள்ளி தன் பெற்றோர் வேடிக்கை பார்ப்பதாக அவள் குமுறினாளேயன்றி தான் புதிய வாழ்க்கை ஆரம்பித்திருப்பதையும், தன்னிடம் தன் கணவன் நிகரற்ற இன்பத்தை… ப்ரேமையின் நிதியை எதிர்பார்க்கிறான் என்பதையும் அறவே மறந்தாள். சிடுசிடுப்பும், வெறித்த பார்வையும், கரம்பேறிய குரலும் உத்தமனுக்கு முதலில் சற்று கோபந்தான் வந்தது. எனினும் அதையடக்கிக் கொண்டு சிறுமியை விட்டுத்தான் பிடிக்க வேண்டும்; ஒரேயடியாய் இருவரும் முரண்டிக் கொண்டால் எலியும் பூனையும் போலத்தான் வாழ்க்கை கடைசிவரையில் ஆகிவிடும் என்று முன் யோசனையுடன் பேசாது சாந்தமாகவே சிரித்துக் கொண்டு தன் வேலையை நடத்தி வந்தான்.
பெரிய உத்யோகஸ்தன் மனைவியாக வாழ்க்கையை அப்படி நடத்த வேண்டும், இப்படி நடத்த வேண்டும் என்று மனக்கோட்டை கட்டியதெல்லாம் இடிந்துபோய் தான் ஒரு பட்டிக்காட்டின் போஸ்ட் மாஸ்டர் மனைவியா! கிராமத் தபாலாபீஸில் உத்யோகஸ்தரின் மனைவியா?… என்று எண்ணி எண்ணி அழவும் தொடங்கிவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று தினங்கள் சென்று மறைந்தன.
சித்திராவின் விலாஸத்திற்கு வந்த தபால்கவரை உத்தமனே வெகு குஷியுடன் கொண்டுவந்து, ”அம்மா! போஸ்ட்டு… சித்திரா தேவிக்குத் தபால்!” என்று கூறியவாறு கவரை நீட்டினான்.
சித்திராவின் கோபம் உச்சத்தைடைந்தது. பல்லைக்கடித்தவாறு… ”இந்த அழகான உத்யோகத்திற்கு ஒத்திகை வேறு செய்து பார்க்க வேண்டுமாக்கும். ஆயுசுக்கும் இந்த நாடகம் நடிக்கத்தான் வரம் வாங்கியாகி விட்டதே, விளையாட்டு வேறேயா?” என்று கூறியபடியே அவன் கையிலிருந்து கவரை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு தன்னறைக்குச் சென்று படிக்க ஆரம்பித்தாள்.
”கண்மணி சித்ராவுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும். உபயக்ஷேமம்.
வெகுவெகு ஆத்திரத்துடன் நீ எழுதிய கடிதம் கிடைத்தது. நாங்கள் அதிகம் எழுத விரும்பவில்லை. எங்களைப் போன்று நீயும் அரைடஜன் மக்களுக்குத் தாயாகியப் பிறகு உனக்கு அந்த உணர்ச்சி தெரியவரும். மக்களை எப்படியெல்லாம் வளர்க்க முடியும் என்பதை உணர்வாய். இதைவிட உயர்ந்த இடம் உனக்குக் கிடைக்கவே கிடைக்காது. உன் கணவன் உட்கார்ந்த இடத்திலேயே தண்டச் சோறு தின்னும் தடிராமனல்ல. உட்கார்ந் த இடத்திலேயே அதிகாரத்துடன் கவுரவமாக உத்யோகம் செய்யும் பெருமை படைத்தவரேயாகும். பட்டணத்தில் இத்தகைய கம்பீரமான உத்யோகம் இருந்தவிடத்தில் கிடைப்பதரிது. எந்த வேலை கிடைத்தாலும் பஸ்ஸிலும், ட்ராமிலும், கால்நடையாகவும் அலைந்து திரிந்து ஓடி ஆடி இளைத்துச் சளைத்து…’’
இதற்குமேல் படிப்பதற்கு அவளால் முடியவில்லை. கடிதத்தை ஆக்ரோஷத்துடன் ‘டர்ர்ர்’ என்று கழித்து எறிந்தாள். எல்லோரும் சேர்ந்து பொய்யைச் சொல்லி என்னைக் கட்டி வைத்ததுமின்றி கடிதத்தில் வர்ணனை வேறு வேண்டிக் கிடக்கிறது!”… என்று முணுமுணுத்துக் கொண்டே படுத்து விட்டாள்.
பின்னும் சில தினங்கள் இதே நிலைமையில் ஸாரமற்ற சப்பிட்ட வாழ்க்கையுடன் காலச்சக்கரம் உருண்டது. ஒரு நாள் ”சித்ரா!.. உன் கோபம், தாபம் ஒருபுறமிருக்கட்டும். இன்று தபால் இன்ஸ்பெக்டர் பார்வையிட வரப்போகிறார். அவருக்கு டிபன் காபி தயார் செய்து வை” என்று உத்தமன் சாப்பிடும்போதே சொன்னான்.
சித்திராவின் ஆத்திரத்தில் முதலில் ஒன்றுமே செய்ய வேண்டாம் என்றுகூடத் தோன்றியது. பிறகு ஏதோ ஒரு குணமடைந்து, உப்பு, தித்திப்பு இரண்டு வகைப் பலகாரங்களைத் தயார் செய்து காத்திருந்தாள். சரியாக 12 மணிக்கு படைபடைக்கும் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க, பாவம்! 45 வயதான ஒருவர், ”உஸ்ஸு!… அப்பாடா…’’ என்று சங்கீதத்துடன் வந்து உட்கார்ந்தார்.
வந்தவர் சும்மாயிருக்கக் கூடாதா? ”சீச்சீ..! இதென்ன பிழைப்பு? என்ன உத்யோகம் சார்? காலை ஏழு மணிக்குக் கிளம்பினவன், நாய் மாதிரி வெயிலில் அலைந்து சாகிறேன். ஒரு கிராமத்திற்கு ஒரு கிராமம் கிட்டவா இருக்கிறது? இந்த வெயிலில் போய் உத்யோகம் பார்ப்பதைவிட எங்காவது மாடுமேய்த்து வயிறு வளர்க்கலாம். என்ன பெருமைப்பட்டமும் உத்யோகமும் வேண்டியிருக்கிறது? நீங்கள் புண்ணியம் செய்த மகாராஜர்; உட்கார்ந்த இடத்திலேயே ராஜதர்பார் நடத்துகிறீர்கள். எனக்கு உங்களைப் பார்த்தால் பொறாமையாகவே இருக்கிறது” என்று பேசுவதைக் கேட்ட உத்தமனுக்கு உள்ளுக்குள் பூரித்தது. ”இதைச் சித்ரா கேட்கிறாளோ இல்லையோ… அவள் காதில் விழுந்தாள் தேவலையே” என்று நினைத்தான்.
சித்ராவுக்குள்ள ஆத்திரத்தில் அவள் டிபன், காப்பியை எடுத்துக் கொண்டு கதவுக்கடுத்த கூடத்தில் பலகை மீது வைக்கும்போது இந்த இன்ஸ்பெக்டரின் வார்த்தைகள் காதில் பட்டதும் ஒரு க்ஷணம் அப்படியே நின்றாள். தன் பிதாவின் கடிதத்தைப் படிக்கையில் வந்த ஆத்திரமே இப்போதும் அவள் உள்ளத்தில் உண்டாகியது. ”பொழுது போக்கத்தவன் காரியத்தைப் பார்த்துக் கொண்டு போகாமல் இந்த விமர்சனத்தை யார் கேட்டார்கள்?” என்று ஒரு முறைப்புத்தான் முறைத்தாள். மனம் மாறவில்லை.
அதே சமயம் வெகு குதூகலத்துடன் சிரித்துக் கொண்டே உத்தமன் கதவைத் திறந்து கொண்டு வந்தான். டிபனும், காப்பியும் தயாராயிருப்பதைக் கண்டு… ”ஓ!… கொண்டு வந்து தயாராய் வைத்திருக்கிறாயா?… என்று கூறியவாறு தட்டுடன் கொண்டுபோய் இன்ஸ்பெக்டருக்குக் கொடுத்தான். தன் உத்தியோகத்திலுள்ள பலவித கஷ்டங்களையும், சில தபாலாபீஸ்களில் நடக்கும் ஊழல்களையும், பலகாரத்திற்குத் தொட்டுக் கொள்ளும் உப பலகாரங்களைப்போல் எண்ணி அவர் சாப்பிட்டவாறே பேசித் தள்ளினார். ஆனால் சித்ராதான் அங்கில்லையே; எழுந்து போய்விட்டாள் என்பது உத்தமனுக்குத் தெரியுமே. அதனால் அவன் ப்ரத்யேகமான உணர்ச்சி ஏதும் கொள்ளவில்லை. காரியம் மட்டும் நடந்து வந்தது.
4

பின்னும் சில தினங்களாயின. ஜில்லா போஸ்டாபீஸில் மீட்டிங்கு அடிக்கடி நடக்கும். சில சமயம் கிராமத்து போஸ்ட்மாஸ்டர்கள் செல்ல வேண்டியது கடமை. அது போல் அன்று உத்தமன் விக்கிரமஸிங்கபுரத்திற்குப் போக வேண்டும். சித்ராவிடம் சொல்லிவிட்டு நன்றாக உடையணிந்து கொண்டு கிளம்பினான்.
”இந்த அழகான குப்பைக்காட்டு உத்யோகஸ்தருக்கு மீட்டிங்கு வேறையா?’’ என்று ஏளனமாகக் கூறி பரிகஸித்தாள். அதையும் அவன் பொருட்படுத்தவில்லை. போய் விட்டான். சித்ரா வீதிக் கதவை தாளிட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் யாரோ கதவைத் தடதடவென்று இடித்தார்கள். சிடுசிடுத்தவாறு எழுந்து கதவைத் திறந்தாள்.
”சாமி! தபால் தலை ஓணுங்க… கார்டு ஒணுங்க…’’ என்று சிலர் கேட்டார்கள். அதைக் கண்டாலே சித்ராவுக்கு எரிச்சலாக வந்தது. ”ஐயாவும் இல்லே, அம்மாவும் இல்லே சாயங்காலம்தான் வருவார்; போங்கள்” என்று கடுமையான த்வனியில் கூறினாள்.
சிலர் கார்டுகள் எழுதிக் கொண்டு வந்ததை தபால் பெட்டியில் போடுவார்கள். சிலர் நேரேயே கொடுத்து விட்டுப் போவார்கள். வழக்கம். அதேபோல் ஒருவர் பின்னால் ஒருவர் வந்து கார்டுகளைக் காட்டி, ”யம்மா… இது அவசரமாகப் போகணும். ஐயா வந்ததும் அனுப்பிடச் சொல்லுங்கோ” என்று கூறி மேஜை மீது வைத்து விட்டுச் சென்றார்கள். சில சிறுவர் சிறுமியர்கள் கார்டுகளைக் கொண்டு வந்து ”தபால்காரய்யா இல்லீங்களா?” எங்கப்பா குடுக்கச் சொன்னாங்க… அம்மா குடுக்கச் சொன்னாங்க…” என்று கூறி மேஜைமீது போட்டுவிட்டுச் சென்றார்கள். முகத்தைச் சுளித்தவாறே விழித்துப் பார்த்தாள். கதவை தாளிட்டுவிட்டுக் கொண்டு வரும்போது மேஜை மீது கிடந்த கடிதங்களில் ஒன்று இவள் கண்ணில் பட்டது. தாறுமாறுமான எழுத்து இவள் கவனத்தைக் கவர்ந்ததும் அதைச் சற்று பொறுமையுடன் நின்று பார்த்தாள். பட்டிக்காட்டான் ஏதோ அரைகுறையாய்த் தெரிந்த எழுத்தைக் கொண்டு எழுதியதென்பது எழுத்தின் உருவத்தையும் உச்சரிப்பையும் பார்க்கும் போதே தெரிந்ததால் அதைப் படிக்கவாரம்பித்தாள்.
”நமஷ்காறம். தேவரீராகிய ஐயா, மவாராஜராஜ ச்ரீ… எஜமானராகிய எசமானுக்கு யானாகிய அண்ணாஷாமி தெரிவிப்பது யாதென்றால் நான் போனேன்… கேட்டேன்… அவராகிய மேஷ்திரி ஷொன்னார். என்ன வெண்றால்… செங்கள் சூளைபோட்டுக் குடுக்கிறேன்; உன் எசமானாகிய ஐயாவுக்கு சொல்ரது இன்னு சொன்னார். ஏரிகரெ கயிணி நேத்து வெரப்பாடு சேஞ்சாச்சு…
இப்படிக்கு
யானாகிய ஊழியன்
அண்ணாஷாமி கையொப்பம்
இதைப் படித்த சித்ராவுக்கு அவளையறியாத சிரிப்பு வந்ததோடு இம்மாதிரி கடிதங்களைக் கண்டதேயில்லையாதலால் வியப்பாகவும் தோன்றியது. அதோடு, மற்றோடு கடிதத்தையும் படிக்க ஆசை தூண்டியதால் உடனே மற்றொரு கார்டை எடுத்துப் படிக்கவாரம்பித்தாள்.
17-10 -.. ”அண்ணாத்தேக்கி… நமஷ்காரம்… இப்பவும், மினியம்மா சொன்னா… இன்னா சொண்ணா என்றால், பெரியப்பாவுக்கு… நமஷ்காரம்னா… சொல்லச் சொன்னா… மினியம்மாவுக்கு… நாலுமாசம் ஆவுதுன்னு… அக்காவாகிய கங்கம்மா எயுதச் சொல்லித்து; இன்னும் என்ன எயுதச்சொன்னா என்ன, செலவுக்கு கொஞ்சம் ரூபா அனுப்பச் சொன்னா… அங்கே… திரு.ஸெற… கன்னியம்மாளெ பாக்கணுமுன்னு சொல்லச் சொன்னா…
இப்படிக்கு
வெங்காயம்மா
இதையும் படித்த பிறகு வியப்பு கரைகடந்தது. உலகத்தின் விரிவுகளிலுள்ள விசித்திர வாழ்க்கையின் சாயலும் ஒரு துளி தெரிந்தது. படிக்காத மக்களின் கடிதங்களிலுள்ள இத்தனை வேடிக்கையும், சிரிப்பு இதயத்தில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியதால் அங்கு வந்துள்ள எல்லா கடிதங்களையும் படிக்க வேண்டும் என்கிற ஒரு ஆவல் உண்டாகியது. அப்படிப் படிப்பது சரியா? தப்பா? என்கிற எண்ணத்தை அவள் நினைக்கவே இல்லை. மற்றொன்றை எடுத்துப் படிக்க வாரம்பித்தாள்.
”ஸௌபாக்யவதி மங்களத்திற்கு சர்வ மங்களமும் உண்டாவதாக.
உபயக்ஷேமம், நானும் உன்னைப் போல் ஒரு பெண்தான். உன் வயதில் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உன் பாட்டியிடமும் உன் அப்பாவிடமும் படாத பாடுதான் பட்டேன். புக்ககத்தில் நீ சமத்தாயும் பொறுமையாவும்தான் இருக்க வேண்டும்; சதா நீ தொந்தரவு செய்து கெட்ட பெயர் வாங்காதே. மாமியாரைத் தாயாராக நினைத்துக் கொண்டு நடந்ததால் உன்னிடம் அவர்களுக்கு ஆசை இல்லாது போகாது. நீ இப்படி அடுத்த வீட்டுக்காரப் பெண்ணின் உதவியால் எனக்குக் கடிதம் எழுதியது மகா தவறு. அதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். இனி இம்மாதிரி அசட்டுக்காரியம் செய்யாதே. எல்லோரிடமும் நல்ல மதிப்பும் அன்பும் பெறுவதற்கு முதலில் நீ அன்பைச் சொரிய வேண்டும். அன்பினால்தான் அன்பைப் பெறலாம். கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியாராகிய உங்கப்பாவுக்கு நீ வீண் கவலையையும் வீணான செலவையும் வைக்காதே. உன்னை காரணமில்லாது அழைத்து வரமாட்டேன். சமத்தாக இரு; இனி கடிதமே எழுதாதே. பெண்களுக்கு கணவன் வீடுதான் சாச்வதமான இடம். அந்த இடத்தில் நன்மதிப்புப் பெறாத எவரும் வேறு எந்த இடத்திலும் சரியானபடி மதிப்பு பெற முடியாது என்பதை நினைவில் வைத்து உன் கடமையை வழுவாது செய்துவா. நானும் அப்பாவும் அடுத்த மாதம் வருகிறோம்.
உன் தாயார் லக்ஷ்மி
பெற்ற தாயாரின் அருமையான புத்திமதி நிறைந்த கடிதம் சித்ராவின் கவனத்தைக் கவர்ந்தது. நான் முன்பு எழுதிய கடிதத்தைக் கூட, தன் தாயார் இப்படித்தான் எண்ணி இருப்பாளா என்கிற எண்ணம் ஒரு மின்வெட்டுப்போல் தோன்றியது. ஒரு க்ஷணம் ஒன்றும் தோன்றாது அப்படியே திகைத்ததுபோல் வானவெளியை நோக்கினாள். பிறகு அக்கடிதத்தை மேஜைமீது வைத்தாள். மற்றொரு கடிதம் தானாகக் கையில் ஏறிக் கண்களை உறுத்தியது.
‘‘சிரஞ்சீவி ராகவனுக்கு, உபயக்ஷேமம்.
பட்டணவாஸத்தின் புதிய மோகத்தில் நீ ஏதேதோ முறையில் நடப்பதாகக் கண்ணன் எழுதியிருக்கிறான். அனாவச்யமாகக் கெட்ட மார்க்கத்தில் ப்ரவேசிக்காதே. இளமையில் உண்டாகும் பழக்க வழக்கங்கள்தான் நன்மையானாலும் தீமையானாலும் பதிந்துவிடும். வீண் ஆடம்பர வாழ்க்கை வாழாதே. மைனர்போல் துள்ளாதே. நீ பெரிய பணக்காரனில்லை. உன் தகப்பனார் வைத்துவிட்டுப் போயிருக்கும் சொத்து உன் ஒருவன் வயிறு வளர்க்கக் கூடப் போதாது என்பது நினைவிருக்கட்டும். பிறகு என் மீது குறை கூறவேண்டாம். அதிகப்ரஸங்கியாய் ஆடினால் உன் பொறுப்பையே நான் இழக்க நேரிடும்.
உன் மாமன் சங்கரன்’’.
”அன்புமிக்க பாதங்களுக்கு வந்தனம்.
உபயக்ஷேமங்கள். உங்கள் கடிதம் கண்டு நான் மிக்க வருத்தப்படுகிறேன். இந்நிலையில் நான் ப்ரஸவமாகி அங்கு வருவதற்கும் இன்னும் மூன்று மாதகாலத்தை எப்படிக் கடத்துவது என்று வேதனையாயிருக்கிறது. எப்படியோ கஷ்டப்பட்டுக் கொண்டு அங்கேயே நான் இருந்துவிடுவதாகச் சொன்னேன். நீங்கள்தான் கேட்காது அனுப்பி விட்டீர்கள். பாழும் பட்டினத்தில் ரேஷன் தேவதையின் ஆட்சியில் ஹோட்டலில் அளந்துபோடும் சாப்பாடு போதாமல் தின்றுவிட்டு, லொங்கு லொங்கு என்று நடந்து ஓடி, பஸ்ஸில் ஏறுவதற்குக் குஸ்தி போட்டுக் கொண்டும், ட்ராமில் ஏறுவதற்கு சர்க்கஸ் செய்து கொண்டும் ஓடிச்சென்று, உழைத்துவிட்டு மீண்டும் இதே குஸ்தியுடன் வீட்டிற்கு வருவதால்தான் உங்களுக்கு இப்படி உடம்பு கெட்டுப் போகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. எங்காவது ஒரு கிராமத்தில் ஏதாவதொரு வேலை செய்துகொண்டு நிழலோடு இருந்தால் உடம்புக்கு ஒன்றுமே வராது. சுவர் நன்றாக இருந்தால்தானே சித்திரமெழுத முடியும்? இந்த ஊர் பள்ளிக் கூடத்தில் வாத்தியார் வேலை காலியிருப்பதாக கேள்விப்படுகிறேன். அந்த வேலையை விட்டுவிட்டு இதற்கு வந்துவிட்டால் போதும். உடம்பை ஜாக்ரதையாகப் பார்த்துக் கொள்ளவும். அடிக்கடிக் கடிதமெழுதவும்.
இங்ஙனம் தங்களடிமை
கோமதி’’
இத்தனை கடிதங்களைப் படித்த சித்ராவுக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வியப்பை உண்டாக்கி உலகானுபவத்தின் சிறுசிறு திவலைகளை உணரச் செய்தது. ஆனால் இக்கடிதத்தைப் படித்ததும் அவளுடைய இதயத்தில் ஒர் மகத்தான அதிர்ச்சியை… பெரும்புயலைக் கிளப்பிவிட்டது. பட்டணவாஸத்தில் வேலையிலிருக்கும் கணவனைப் பட்டிக்காட்டிற்கு வரும்படி… அதிலும் ஒரு கிராமத்துப் பள்ளிக்கூட வாத்தியார் வேலைக்கு வரும்படிக்குப் பரிந்து எழுதியிருப்பதை… சித்ரா படிக்கப் படிக்க வியப்பும் திகைப்பும் கூறத்தரமே இல்லாது பொங்கியது.
”என் கணவன் பட்டிக்காட்டு வேலையிலிருப்பதை வெறுத்துக் கோபித்து வாழ்க்கையே கசந்த நிலையில் நான் தவிக்கையில் என்னைப் போன்ற ஒரு பெண் இப்படி எழுதியிருக்கிறாளா… என்ன உலக விசித்ரம்! ஒரே காரியம் ஒருவருக்கு இன்பமாகவும் ஒருவருக்கு துன்பமாயும் தோன்றுகிறதே” என்று அதே நினைவுடன் சற்று யோசனையுடன் இருந்தாள். மற்றொரு கடிதம் கவனத்தை இழுத்தது.
”சம்மந்தியவர்களுக்கு, உபயக்ஷேமங்கள்.
என் மகன் ஒரே பிடிவாதமாயிருக்கிறான். அவன் கேட்டதுபோல் ஆயிரம் ரூபாயுடன் உங்கள் மகளையும் குழந்தையையும் அனுப்பினால் அழைத்துக் கொள்கிறோம். இல்லாவிட்டால் எங்கள் மீது குறை சொல்ல வேண்டாம்.
இங்ஙனம் கோவிந்தன்.’’
”சுந்தரிக்கு ஆசீர்வாதம்.
‘‘கிராமத்தில் வந்திருக்க முடியாது” என்று நீ அத்தனை துணிச்சலுடன் எழுதியபிறகு உன்னிஷ்டப்படியே நீ பட்டணவாஸத்திலேயே சுகமாயிருக்கலாம். இனி உன்னை வாவென்று அழைக்க யாரும் தயாராக இல்லை. இனிமேல் கடிதம் என்னிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இங்ஙனம்
கோபு’’.
5

இக்கடிதத்தைப் படித்ததும் சித்திராவுக்கு ஏதோ வேதனை செய்தது; ”இதென்ன இறுதிக் கடிதம்; இவன் இப்படி முரண்டிக் கொண்டு எழுதியிருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறதே! ஒரு பெண்ணின் வாழ்க்கையே பாழாகிவிடும் போலல்லவா இருக்கிறது? ஐயோ! இதென்ன வாழ்க்கை பாவம்!” என்ற யோசனையிலே லயித்தது அவள் மனது.
வெளியே சென்ற உத்தமன், வேலை சடுதியில் முடிந்து விட்டதால் உடனே திரும்பிவிட்டான். மண்டை வெடிக்கும் வெய்யிலின் கொதிப்பும், அதில் வந்த அலுப்பும், களைப்பும் ஒன்றுகூடி அவன் முகமெல்லாம் வியர்வை வெள்ளம்போல் உஸ்ஸென்று பெருமூச்சுடன் வீட்டிற்கு வந்தான். சித்ரா தூங்குகிறாளோ என்னவோ என்கிற எண்ணத்துடன் வாசல் பக்கத்து ஜன்னலால் பார்த்தான். அவள் திடீர் மாறுதலுடன் தன் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து கடிதங்களைப் படிப்பதைப் பார்த்ததும் தன் கண்களையே அவன் நம்பவில்லை. உண்மையில் சித்ராவா… என்று பிரமிப்புடன் சந்தடி செய்யாமல் பார்த்தான். தான் வீதியில் நின்று இப்படி எட்டிப் பார்ப்பதை பிறர் கவனித்தால் ஏதாவது நினைக்கப் போகிறார்களே என்கிற யோசனையினால் மெல்லக் கதவைத் தட்டி ”சித்ரா! சித்ரா” என்று இனிமையான குரலில் அன்பொழுக அழைத்தான்.
கடிதம் படிக்கும் ஸ்வாரஸ்யத்தில் மெய்மறந்திருந்த சித்ரா இக்குரலைக் கேட்டதும் திடுக்கிட்டாள். தான் இக்கடிதங்களைப் படித்தது குற்றமென்று எங்கே நினைத்துக் கோபிப்பானோ என்கிற பயத்துடன், படித்த ஜோடு தெரியாமல் அவைகளை வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தாள்.
வெயிலில் வந்த களைப்பு முகத்தில் நன்றாகத் தெரிவதையும் வியர்வை கொட்டுவதையும் கண்ட சித்ராவுக்கு இத்தனை நாட்கள் இருந்த உணர்ச்சியை விட இன்று ஏதோ ஒரு விதமான புதியமுறையில் இதயத்தைத் தாக்கியது. ”அப்பா! வெயிலில் மண்டை வெடிக்கிறதே… குடைகூடக் கொண்டு போகவில்லையா?” என்று பரிவுடன் கேட்பதை அறிந்த உத்தமனின் உள்ளம் மகிழ்ந்து வியப்புற்றது.
ஆனால் அதை மேலுக்குக் காட்டிக் கொள்ளாமல் ”நாட்டுப்புறந்தானே சித்ரா! இந்த அநாகரீக மனுஷ்யனுக்கு குடைவேறு, சாமரம் வேறா?” என்று கண்களைச் சிமிட்டியபடியே கூறினான்.
தனக்காகவே பரிகாஸமாகவும், குத்தலாகவும் கூறும் வார்த்தைதான் இது என்பதையறிந்து சற்று வெட்கமும் துக்கமும் கூட பாதித்தன. கைகால்களைச் சுத்தி செய்து கொள்ள குளிர்ந்த ஜலத்தை அன்று தானே கொண்டுவந்து கொடுத்தாள். இந்தப் புதிய மாறுதலுக்குக் காரணம் ஏதோ தெரியவில்லையே… என்று யோசித்தவாறு களைப்புத்தீர கைகால்களை அலம்பிக் கொண்டு ஈஸிச்சேரில் ‘அப்பாடா…’ என்று ஆயாஸத்துடன் சாய்ந்தான்.
இதற்குள் சித்ரா காப்பியும், டிபனும் கொண்டு வந்துவிட்டு வழக்கம் போல் தன் முகத்தைத் தூக்கியபடியே உட்கார்ந்தாள். இவன் சாப்பிடுவதற்குள் ”சாமீ! தபால் தலை ஓணுங்க…” என்கிற தினசரி சம்பிரதாயப்படி கேட்க வந்தார்கள். சிலர் தபால்களை எழுதிக் கொண்டு வந்து தபால்தலை கேட்டார்கள்.
அவசரமாக சாப்பிட்டுவிட்டு உத்தமன் எழுந்து வந்தான். அங்குக் கூடியிருப்பவர்களில் ஒரு கிழவன்… ”இன்ன சாமீ! மத்யானம் ஒரு தபா வந்தேனுங்க, அம்மா சிள்ளுபுள்ளுன்னு சீறி வியுந்தாங்க. ஓடியே பூட்டேன். இன்னிக்கு அவசரமா ஒரு காயிதம் எயுதணுங்க. தபால்கார ஐயாவே கூட காணங்க சாமி! தயவு செய்யணும்” என்றான்.
தினம் இம்மாதிரி எத்தனையோ கிராமவாஸிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் வந்து தினந்தோறும் எழுதி வாங்கிச் செல்வது வழக்கந்தான்; ஆனால், சித்ரா இத்தனை நாள் வரையில் தன் விடுதியைவிட்டு வந்து இவைகளைப் பார்த்திருந்தால்தானே தெரியும். இவைகளைவிடக் கேவலமான வாழ்க்கை என்றும் நாட்டுப் புறத்து விஷயம் கசப்பானது என்றும் எண்ணி இருந்ததால்தான் இதைப்பற்றி எதுவுமே தெரியாதிருந்தது.
இன்றுதான் அவள் இங்கு உட்கார்ந்திருப்பதால் இதுவும் வியப்பாகவே தோன்றியது. உத்தமன் வெகு சாந்தத்துடனும் சிரித்த முகத்துடனும்… ”கிழவா! இதோ எழுதித் தருகிறேன். சற்று இரு; அவசரமாகக் கேட்பவர்களுக்குக் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு தபால்கார்டுகள், தலைகள், கவர்கள், மணியார்டர் பாரங்கள் யார் யாருக்கு எதுவேண்டுமோ அவைகளைக் கொடுத்துவிட்டுக் கிழவனிடம் வந்து… ”உம்… சொல்லு. கார்டா? கவரா? எது எழுதவேணும்?” என்றான்.
கிழவன், ஏதாச்சும் எழுதுங்க சாமி! நம்ம ராசாப்பயல் மில்டேரிலே இருக்கரான் பாருங்க. அவனுக்குத்தானுங்க எழுதணும்.
உத்தமன்: சரி! கார்டு போதும்! என்ன விஷயம் சொல்லிவிடு.
கிழவன்: அதானுங்க… ராசாப்பயலுக்கு யானாகிய…
உத்தமன்: அடேடே… அதெல்லாம் கிடக்கட்டும். நீயாகிய கிழவன் சொல்வதை நானாகிய குமரன் எழுதிவிடுவேன். நீ என்ன எழுத நினைத்தாயோ, அந்த விஷயத்தைச் சொல்லப்பா.
கிழவன்: அதுங்களா – கீழ்க்கோடித் தெரு ஐயுருக்கு 50 ரூபா கடன் குடுக்கணுமில்லே – அதெ அவரு சும்மா கேக்கராரு. அடே ராசாப்பயலே! ஒன்னெ மில்டெரிக்கு அனுப்பறதுக்குத்தானேடா கடன் வாங்கியாந்தேன். இத்தினீ மாசமா சம்பளத்துலே காலணாகூட ஒங்கப்பன் ஆத்தாளுக்கு அனுப்பிச்சயாடா… அவங்க கடன எப்படிடா திரும்பி குடுக்கறது?…
உத்தமன்: கிழவா! சரி! எனக்கு விஷயம் புரிந்து விட்டது. அதாவது – ஒன் மகன் ஒனக்கு பணம் அனுப்பவில்லை. அதையணுப்பச் சொல்லணும். அவ்வளவுதானே. சரி! அதை நானே எழுதிவிடுகிறேன்.
கிழவன்: சாமி! ஒங்களுக்குத் தெரியாதுங்களா? நம்ப எல்லாத்தா… மீனாச்சி… அல்லாரும் அண்ணாத்தெயே கேட்டுச்சுன்னு ரவே எயுதுங்க… அதான் சமாசாரங்க…
இதை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சித்ராவுக்கு இது ஒரு ஆச்சரியமாகவே தோன்றியது. ”நாட்டுப்புறத்துத் தபாலாபீஸில் இத்தனை விசித்திரங்கள் இருக்கிறதா!” என்று மனதிற்குள் நினைத்தாள். இத்தனை நாளாக வெறுத்த இதே விஷயம் இன்று சற்று புதுமையாகத் தோன்றியது.
(வளரும்)
காலத்தை வென்ற கதைகள் மற்றவை…
ஆண்டாள் பிரியதர்ஷினி
ஹெப்சிபா ஜேசுதாசன்
ஜோதிர்லதா கிரிஜா
சிவசங்கரி
வாஸந்தி
வத்ஸலா
பா.விசாலம்
பூரணி
திலகவதி
அனுராதா ரமணன்
லட்சுமி
அம்பை
அநுத்தமா
ராஜம் கிருஷ்ணன்
ஆர்.சூடாமணி