கமலா தாஸ் கவிதை
கற்காலம்
பிரியமுள்ள கணவன், பழமையில் குடியேறியவனின் மனதில்
வயதான பருத்த சிலந்தி, வலைகளைப் பின்னுகிறது குழப்பத்துடன்
அனுதாபம் காட்டு!
நீ என்னைக் கற்பறவையாக மாற்றினாய்,
கருங்கல் பறவையாய்
என்னைச் சுற்றி வெறுக்கத்தக்க அறையைக் கட்டினாய்.
நீ வாசிக்கையில்
கவனமின்றி அம்மைத்தழும்பு நிறைந்த முகத்தில் அடித்தாய்
உரத்த பேச்சுடன் நீ
எனது அதிகாலை உறக்கத்தைக் கலைத்தாய்
எனது கனவுகாணும் கண்களில் உன் விரலைக் குத்தினாய்
இருந்தும் பகல் கனவுகளில் பலவான்கள் நிழல்களைப் பதித்தனர்
மூழ்கினர் வெண்சூரியன்களாக பெருகும் எனது திராவிட குருதியில்
ரகசியமாய் வடிகால்களைப் பாயச் செய்தனர் புனித நகரங்களின் அடியில்
நீ பிரிந்தபோது நான் எனது நீலநிற பலமுறை அடிவாங்கிய வாகனத்தை
நீலக்கடல் நெடுக ஓட்டினேன்
நான் நாற்பது பலத்த ஓசை எழுப்பும் காலடிகளுடன்
இன்னொருவரின் கதவைத் தட்ட ஓடினேன்
அக்கம்பக்கத்தினர் எட்டிப்பார்க்கும் துவாரத்தின் வழியே பார்த்தனர்
அவர்கள் கவனித்தனர் என்னை
நான் மழையைப் போல வந்துசென்றதை
கேள் என்னை
அனைவரும் கேளுங்கள் என்னை
அவன் என்னில் என்ன பார்த்தான்
கேள் என்னை ஏன் அவன் சிங்கம் எனப்பட்டான்
ஒழுக்கமில்லாதவன் எனப்பட்டான்
கேள் என்னை ஏன் அவனது கை படம்விரித்தாடும் பாம்பைப்போல அசைந்து
எனது இடையின் பின்பக்கம் அடித்தது
கேள் என்னை ஏன் அவன் பெரும் மரம் வீழ்ந்ததுபோல
எனது மார்பகங்களில் விழுந்து உறங்கினான்
கேள் என்னை ஏன் வாழ்க்கை குறைவாய் உள்ளது
மேலும் காதல் இன்னும் குறைவாய்
கேள் என்னை எது பேரின்பம் மேலும் அதற்கான விலை என்ன…
தமிழாக்கம்: மதுமிதா
painting: suzichua.com
மதுமிதா கவிதை
உனக்கான பாடலைப் புனைய…
ஏதோ ஒரு பேச்சு ஏதோ ஒரு நிகழ்வு
எப்படியோ நினைவுபடுத்திவிடுகிறது
இன்னுமொரு நினைவினை மற்றுமொரு நிகழ்வினை
இந்த சிறுதூறலும் இழுத்து வந்து சேர்க்கிறது
அந்த மழைச்சாரலை
அந்த மரத்தினடியில் நடுங்கியபடி ஒதுங்கியதை
அந்தக் கிளையின் இலைகளசைந்து
அட்சதையாய் பொழிந்து தூவிய
இன்னொரு மழையை
இதழ்கள் ஒற்றிக்கொள்ள இணைந்ததும் விலகிய குளிரை
குபீரெனப் பறந்து சென்ற வெட்கம் பூசிய பறவையை
அந்த நீண்ட பயணத்தை
.
அந்த மிக நீண்டதொரு பயணம் மீண்டும் வாய்க்கவேயில்லை
கதகதப்பான உன் ஸ்பரிசம்
அழைக்கிறது உன் வாசம்
அடவியின் இருள்
ஆனந்த கீதமிசைத்த புள்ளினங்கள்
ஆடிக்களித்த மான்கள்
அருகில் வந்து பயந்து விலகிய முயல்கள்
இரவா பகலா தெரியா பொழுதில்
இயைந்த பத்து விரல்களின்
இசைவாய் ஒன்றிணைந்த தாபங்கள்
சுவைத்து மகிழ்ந்த இவ்வினிப்பின் சுவை
இனியெங்கே கிடைக்குமென
இங்குமங்கும் தேடியலைந்த அணில்குஞ்சு
வீசியெறியப்படுகிறேன் நினைவின் சுழலுக்குள்
விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
வேட்கையும் உயிரும் மீட்பாரின்றி
மூழ்கிக் கிடந்த பெருங்கடலினுள் தத்தளித்தபடி
மேல்நோக்கிப் பாய்ந்து வருகிறேன்
உன் நினைவினைப் பற்றிக்கொண்டு
வெளிவந்து மூச்சடைப்பை நீக்கி மூச்சு எடுத்துவிடும் தீவிரத்துடன்
உயிர் காத்திடும் ஆவேசத்துடன்
வற்றாது சுரக்கும் தீராத சொற்களின் குவியலிலிருந்து
எதை விடுத்து எதை எடுத்து
எப்படி பொறுக்கி அடுக்கிக் கோர்க்கப்போகிறேன்
முற்றாத உனக்கான பாடலைப் புனைய.
Painting Credit: Leonid Afremov MAGIC RAIN